2. சாரதாவின் ஜீபூம்பா
அத்தியாயம்-02
பள்ளியில் நுழைந்த சாராவின் தோளில் கரம் போட்ட ஜீபூம்பா, "என்ன சாரா.. காலைலயே பெரிய சம்பவம் போல?" என்க,
அதைத் திரும்பிப் பார்த்து முறைத்தவள் தன் சுற்றம் உணர்ந்து மீண்டும் முகத்தை இயல்பாய் வைத்துக் கொண்டாள்.
அதில் ஜீபூம்பா வாய்விட்டு சிரிக்க, 'ஸ்கூலுக்கு வராதனு சொல்லிருக்கேன்ல?' என்று மனதோடு கேட்டுக் கொண்டாள்.
"உன்னைவிட்டா எனக்கு யாரு சாரா? அதான் உன்கூடயே வரேன்" என்று ஜீபூம்பா கூற,
"நல்லா வந்த. உன்னால அந்த மேக்ஸ் மிஸ் காலைலயே லக்கி கிட்ட என்னைப் போட்டுக் கொடுத்துடுச்சு" என்று முனங்கினாள்.
"சரி சரி விடு.. இந்த வருஷம் ஆரம்பிச்சு ஒருவாரம் ஆகியும் நீ யாருகிட்டயும் வாங்கிக்கட்டிக்கலைனு பார்த்தேன். என் ரூபத்துல தான் வாங்கனும்னு இருந்திருக்கு" என்று ஜீபூம்பா கூற, 'ம்க்கும்' என்று நொடித்துக் கொண்டாள்.
சென்று அனைவரும் வகுப்பறையில் பைகளை வைத்துவிட்டு மைதானத்திற்கு வர, இறை வணக்கம் நடந்து முடிந்தது.
மீண்டும் சென்று அனைவரும் அவரவர் இடத்தில் அமர, முதல் வகுப்பும் துவங்கியது.
வகுப்பு துவங்கிய சில நிமிடங்களில் "எக்ஸ்கியூஸ்மி மேம்" என்று ஒரு ஆசிரியர் அழைக்க,
வகுப்பிலிருந்த ஆசிரியர் தொடக்கம் மாணவர்கள் வரை யாவரும் திரும்பிப் பார்த்தனர்.
"எஸ் மேம்" என்று வகுப்பாசிரியர் கூற, அப்பள்ளி சீருடையணிந்த மாணவி ஒருத்தியோடு உள்ளே வந்த ஆசிரியர், "லேட் அட்மிஷன் மேம்" என்றார்.
"ஓ.. ஓகே மேம்" என்று அந்த ஆசிரியரை அனுப்பியவர், "உன் பெயர் என்னடா?" என்று வினவ,
"மதியழகி" என்று அச்சிறுமி கூறினாள்.
"நைஸ் நேம்" என்ற ஆசிரியர்,
"ஸ்டூடென்ட்ஸ் இவங்க நேம் மதியழகி. நம்ம கிளாஸோட புது ஸ்டூடென்ட்" என்று அறிமுகம் செய்து வைக்க, அனைவரும் கைதட்டி வரவேற்றனர்.
சிரித்த முகமாக நன்றி கூறிய மதியை சாராவின் அருகே உள்ள இடத்தைக் காட்டி ஆசிரியர் அமரச் சொல்ல, சரியென்று தலையாட்டிய மதி சென்று சாராவுடன் அமர்ந்துக் கொண்டாள்.
வகுப்பு நேரம் பேசி மேலும் அந்த ஆசிரியரிடம் கொட்டு வாங்க வேண்டாம் என சாரா ஒரு சிரிப்புடன் அமைதியாகி விட, அவளை இரண்டு முறை கலாய்த்த ஜீபூம்பாவும், "சரி நீ உனக்கு ரொம்ப பிடிச்ச மேக்ஸ் கிளாஸ ஒழுங்கா கவனி. நான் பிரேக்ல வரேன்" என்றுவிட்டுச் சென்றது.
'ஹப்பா.. போய்ட்டான்டா. இவன் பண்ற காமெடிக்கு சிரிக்காம இருக்கவே எனக்கு ஆஸ்கார் தரலாம்’ என்று சாரா எண்ணிக் கொள்ள, நேரத்தின் ஓட்டத்தோடு அந்த வகுப்பு முடிந்தது.
ஆசிரியர் வெளியே சென்றதும் ஒரு பெருமூச்சுவிட்ட சாரா, மதியின் புறம் திரும்பி கை நீட்டி, "நான் சாரா" என்க,
சிரித்தபடி அவள் கைபற்றி குலுக்கியவள், "மதியழகி" என்றாள்.
"நைஸ் நேம்" என்று சாரா கூற,
"என் சித்தி வச்ச நேம்" என்று கூறி சிரித்தாள்.
"சித்தியா?" என்று சாரா வினவ,
"ஆமா.. எனக்கு என் சித்தினா ரொம்ப பிடிக்கும். எனக்கு மட்டுமில்ல எங்க அம்மா அப்பா அம்மம்மா அப்பத்தா எல்லாருக்கும் சித்தினா ரொம்ப பிடிக்கும்" என்று கூறினாள்.
"ஓ.. அவ்ளோ பேர் இருக்காங்களா உங்க வீட்ல" என்ற சாரா,
"ஏன் ஒரு வாரம் வரலை?" என்று வினவ,
"எங்க அப்பாக்கு கடைசி நேரம் டிரான்ஸ்பர் வந்துடுச்சு. இதுதான் அப்பா அம்மாக்கு சொந்த ஊர். இங்கதான் சித்தி, அம்மம்மா, அப்பத்தாலாம் இருக்காங்க. இந்த ஊருக்கு டிரான்ஸ்பர் வரவும் நாங்களாம் ரொம்ப ஹேப்பி ஆனோம். எல்லாம் முடிஞ்சு இங்க வர லேட் ஆயிடுச்சு. சித்தி தான் அட்மிஷன் வாங்கி எனக்கு யுனிபார்ம்லாம் முதல்லயே தச்சு வச்சுருந்தாங்க" என்று விளக்கம் கொடுத்தாள்.
"ஓ.. சூப்பர். டாடி என்ன பண்றாங்க?" என்று சாரா வினவ,
"டாடி பேங்க்ல வர்க் பண்றாங்க. மம்மி ஐடில (IT) வேலை பார்க்குறாங்க. இப்ப இங்க வந்ததால இங்க உள்ள பிரான்சுல வேலை கேட்டு வாங்கிட்டாங்க" என்று விவரமாய் பதில் கூறினாள்.
"ம்ம்.." என்று சாரா புன்னகைக்க,
"உங்க டாடி என்ன பண்றாங்க?" என்று மதி வினவினாள்.
அப்போது அங்கு வந்த மற்ற குழந்தைகள் தங்களை அவளிடம் அறிமுகம் செய்ய, சாரா மதி கேட்ட கேள்விக்கு பதில் கூற முடியாது தடுமாறிய தன்னை மீட்டிருந்தாள்.
அங்கு வந்த ஜீபூம்பா, "என்ன சாரா புது ஃபிரண்ட் நல்லா பேசுறாளா?" என்க,
'ம்ம்.. சூப்பரா பேசுறா' என்று மனதோடு நினைத்துக் கொண்டாள்.
பதில் கூற முடியாத தருணங்களில் அவள் மனதில் கூறிக்கொள்ளும் பதிலை ஜீபூம்பாவால் கேட்க இயலுமே! அவள் நினைத்துக்கொண்ட பதிலில் புன்னகைத்த ஜீபூம்பா, "சூப்பர். உங்க இங்கிலிஷ் மிஸ் வந்துட்டாங்க. டாட்டா" என்றுவிட்டு சென்றது.
அன்றைய நாள் புது தோழியுடனான கலகலப்போடே முடிவடைய, பள்ளிநேரம் முடிந்து வெளியே வந்த மாணவிகளில் சாரா, வெளியே எப்போதும் போல் தனது வண்டி மீது காக்கி உடையில் தோரணையாக அமர்ந்தபடி அலைப்பேசியில் யாருடனோ பேசிக்கொண்டிருந்த இலக்கியனைக் கண்டாள்.
"அதோ.. லக்கி.. என்னை கூட்டிட்டு போக லக்கி வந்தாச்சு" என்று சாரா கைகாட்டவும்,
"ஏ உங்கப்பா போலீஸா?" என்று மதி வினவ, "இல்ல.." என்று கூறவந்தாள்.
அதற்குள் "என் சித்தி வந்துட்டாங்க பை" என்று அவள் ஓடிவிட, அவளையே பார்த்தவள் தன் பார்வையை அவன்புறம் திருப்பினாள்.
மெல்ல அடிவைத்த சாரா இலக்கியன் முன் வந்து நிற்க, கண்களை சுருக்கி ஒருநிமிடம் என்பதுபோல் சைகை செய்தவன், அலைபேசியில் பேசி முடித்து அழைப்பை வைத்தான்.
தன்னையே பார்த்திருக்கும் குட்டிப்பெண்ணைப் பார்த்து சிரித்தவன் அவள் மூக்கை பிடித்து ஆட்டி, "போலாமா?" என்க,
"ம்ம்.." என்றாள்.
அவளைத் தூக்கி வண்டியில் அமர்த்தியவன், அதை உதைத்துக் கிளப்ப, குழந்தையிடம் அசாத்திய அமைதி.
"என்ன சாரா அமைதியாவே இருக்க?" என்று ஜீபூம்பா கேட்க, 'ஒன்னுமில்ல' என்று மனதோடு பதில் கூறினாள்.
"இல்லயே நீ சரியில்லையே" என்று ஜீபூம்பா கூறுகையில், "என்ன குட்டி இன்னைக்கு பயங்கர சைலென்ட்? இன்னைக்கும் மேக்ஸ் மேம் கிட்ட திட்டு வாங்கினியா?" என்று இலக்கியன் கேட்டான்.
"இல்ல லக்கி.. நான் இவள திட்டு வாங்க வைக்கவே இல்ல. ஏ சொல்லு சாரா" என்று சாராவுக்கு மட்டுமே தான் பேசுவது கேட்கும் என தெரிந்தும் ஜீபூம்பா பேச,
"இல்ல லக்கி" என்றாள்.
மீண்டும் அமைதியோடு பயணம் முடிய ஆசிரமத்தில் அவளை இறக்கிவிட்டவன், "என்னாச்சு பேபிடால்?" என்றான்.
அவனையே ஒரு நிமிடம் பார்த்தவள், "நீ எனக்கு யாரு லக்கி?" என்று வினவ,
ஆடவன் அக்கேள்வியில் ஸ்தம்பித்து தான் போனான்.
"எ..என்னாச்சுடா? யாரும் பாப்பாவ எதும் கேட்டாங்களா?" என்று இலக்கியன் வினவ,
"புதுசா ஒரு பொண்ணு இன்னிக்கு வந்தா. அவளுக்கு அம்மா அப்பா சித்தி அம்மம்மா அப்பத்தா எல்லாரும் இருக்காங்களாம். என் அப்பா என்ன பண்றாங்க கேட்டா. எனக்கு தான் அப்பாவே கிடையாதே லக்கி. என்னை யாரு கூட்டிட்டு போவாங்கனு கேட்டா. நீதான்னு சொன்னேன் உங்கப்பா போலீஸானு கேட்டுட்டு அவங்க சித்தி வந்துட்டாங்கனு போயிட்டா" என்று சாரா கூறி முடித்தாள்.
அவள் குரலில் அத்தனை ஏக்கம் வழிந்தது.. அவளையும் அறியாமல்..
இலக்கியனுக்கு கண்கள் சிவந்தே விட இறங்கி சாராவின் உயரத்திற்கு மண்டியிட்டு அமர்ந்தவன், அவளை அணைத்துக் கொண்டு,
"யார் கேட்டாலும் உன் லக்கி தான் உனக்கு எல்லாமேனு சொல்லனும். லக்கி தான் உனக்கு அப்பா.. அம்மா.. எல்லாம்.." என்றான்.
"அப்ப எனக்கு தனித்தனியா யாரும் கிடையாதா?" என்று அவள் வினவ,
"ஏன் இல்ல? உனக்கு சக்கரவர்த்தி தாத்தாவும் ராதா பாட்டியும் இருக்காங்க. இங்க பிரபா அம்மா இருக்காங்க நிறையா அக்கா, ஃபிரண்ட்ஸ்லாம் இருக்காங்க. எல்லாருக்கும் மேல உன் லக்கி.. உனக்கே உனக்கு எல்லாமுமா இருக்கேன்" என்று கூறினான்.
அதில் முகம் மலர அவன் கன்னத்தில் முத்தமிட்டவள், "லவ் யூ லக்கி" என்க,
தானும் குழந்தைக்கு முத்தமிட்டவன், "லவ் யூடா பேபிடால்" என்றான்.
"இதுக்குத்தான் இம்புட்டு நேரம் மூஞ்சிய உம்முனு வச்சுட்டு வந்தியா? இதை நீ என்கிட்டயே கேட்டிருக்கலாம்" என்று ஜீபூம்பா கூற,
"சரிடா பேபிடால்.. லக்கிக்கு வர்க் இருக்கு. போயிட்டு வரேன்" என்று கூறிய இலக்கியன் அவளை முத்தமிட்டுவிட்டுச் சென்றான்.
"உன்கிட்டயே கேட்டிருந்தா பதில் சொல்லிருப்பியா?" என்று சாரா வினவ,
"ஆமா.. இந்த ஜீபூம்பாவை கடவுள் உனக்கு அனுப்பி வச்சதோட நோக்கமே உன் கேள்வில தான் இருக்கு" என்று ஜீபூம்பா கூறியது.
அதேநேரம் அங்கு வீட்டிற்கு வந்த மதியை தூக்கிக் கொண்டு, "தங்கபட்டு.. இன்னிக்கு ஸ்கூல் எப்படி போச்சு?" என்று அவளது அம்மம்மா சுந்தரி வினவ,
"சூப்பரா போச்சு அம்மம்மா" என்று கூறினாள்.
அவளிடம் வந்த அவளது அப்பத்தா லட்சுமி, "எங்கடி உன் சித்திகாரி" என்க,
"வண்டி நிறுத்திட்டு வருவாங்க அப்பத்தா" என்றாள்.
பேத்தியின் முகம் கண்டு புன்னகை பூத்த வயோதிகர்கள் அவளை உடை மாற்ற அனுப்பிவிட்டு உணவு பண்டங்களை எடுத்து வைக்க, உள்ளே நுழைந்தாள், ஆரண்ய நிலா.
"மதிகுட்டி குளிக்க போயாச்சா?" என்றபடி வந்தவள் தனது ஸ்டெதஸ்கோப் மற்றும் வெள்ளை அங்கியை மேஜையில் வைக்க, "ஆமா நிலா" என்று லட்சுமி கூறினார்.
"நிலா கண்ணு.. இதெல்லாம் ரூமுக்குள்ள வச்சுக்க. பாப்பா வந்தா எடுத்து விளையாடுவா" என்று சுந்தரி கூற,
"சரிமா" என்றபடி அதை எடுத்துக் கொண்டு தன்னறைக்குச் சென்றாள்.
லட்சுமி மற்றும் ஈஸ்வரன் தம்பதியரின் ஒரே மகனே கார்த்திகேயன். பெண் கொடுத்து பெண் எடுக்கும் முறையில், ஈஸ்வரனின் தங்கை சுந்தரியும் லட்சுமியின் அண்ணன் மதிவேலனும் திருமணம் செய்துகொண்டு இல்வாழ்க்கையின் பரிசாக பெற்ற தேவதைகளே, ஆதிசந்திரா மற்றும் ஆரண்ய நிலா.
இரு குடும்பமும் அருகருகே வீடு கொண்டு அத்தனை அன்போடு வாழ்ந்து வந்த குடும்பம். கார்த்திகேயனுக்கு தன் அத்தை மகள் ஆதிசந்திரா மீது அழகாய் காதல் பூ பூக்க, பெற்றோரும் விரும்பியே அவர்களுக்கு மணம் முடித்து வைத்தனர். முதல் மகளை கரைசேர்த்த கையோடு மதிவேலன் இறைவனடி சேர்ந்திருக்க, அடுத்த சில வருடங்களிலேயே ஈஸ்வரும் ஒரு விபத்தால் இறையடி சேர்ந்திருந்தார்.
ஆதிக்கு அடுத்து ஐந்து வருடம் கழித்து பிறந்த நிலா அந்த மொத்த குடும்பத்திற்குமே செல்லம் தான். கார்த்திக்கும் நிலாவும் ஒருவர் மீது ஒருவர் அத்தனை அத்தனை பாசம் கொண்டவர்கள்.
"சந்திராவை எவ்வளவு காதலிச்சேனோ அதைவிட அதிக அளவு நிலா மேல தான் எனக்கு பாசம். அவ எனக்கு குழந்தை மாதிரி" என்று கணவன் அடிக்கடிக் கூறும் வார்த்தைகளில் ஆதி இன்னுமின்னும் அவன் மீது காதல்வயப் பட்டு சாய்வதெல்லாம் வேறு கதை..
நிலாமீதான பாசத்தில் தங்களுக்கே தங்களுக்கென்று உதித்த குழந்தைக்குக் கூட அவளைத்தான் பெயரிடச் சொல்லி கேட்டனர். அவர்களுக்கென்று தனிப்பட்ட ஆசைகள் இருக்கலாம் என்று நிலா மறுத்தபோதும், ‘எங்களுக்கு எந்த பெயரும் எண்ணத்தில் இல்லை’ என்று கூறி அவளையே வைக்கச் சொல்லினர்.
நாலைந்து பெயர்கள் தேர்வு செய்து அதில் ஒன்றை பெற்றோராக அவர்களை முடிவெடுக்க வைத்தே மதியழகி என்ற பெயரை சூட்டியிருந்தனர், அந்த வாண்டுக்கு. வேலையாக வேறு ஊரில் இருந்த இருவரும் தற்போது சொந்த ஊருக்கே மாற்றலாகி வந்திருக்க, நிலாவுக்குத்தான் அதில் அத்தனை சந்தோஷம்.
ஆரண்ய நிலா, மருத்துவத்தில் இளநிலை முடித்து குழந்தைகள் நல மருத்துவருக்கான முதுகலை பட்டப்படிப்பில் தனது கடைசி வருடத்தைத் துவங்கி இருக்கின்றாள்.
மருத்துவம் படித்து முடித்தவுடன் திருமணம் செய்ய வரன் பார்க்கத் துவங்கிய தாயை தனது மேல் படிப்பைக் காட்டி அடக்கி இருந்தாள். மேல் படிப்பு முடிந்து நிலையாக வேலையில் அமர்ந்த பிறகு தாராளமாக திருமணம் செய்து கொள்வதாகவும் திருமணம் என்று ஒன்று செய்தால், இதே ஊரில் தான் என்றும் கூறியிருந்தது, அந்த இருபத்தி ஐந்து வயது வளர்ந்த குழந்தை.
Comments
Post a Comment