3.சாராவின் ஜீபூம்பா
அத்தியாயம்-03
மறுநாள் காலை எப்போதும் போல் பள்ளியை அடைந்த சாரா தன் அருகே வந்து அமர்ந்த மதியைப் பார்த்து புன்னகைக்க,
"நேத்து உன்னை பத்தி வீட்டில் நிறையா பேசினேன் சாரா. சித்தி உன்னை இன்டர்டியூஸ் பண்ணவே இல்லைனு கேட்டாங்க. நேத்து சித்தி வரவும் உங்க டாடிய கூட பார்க்காம போயிட்டேன். உங்க டாடி நேம் என்ன?" என்று நீளமாகப் பேசினாள்.
"ஏ சாரா.. இந்த பொண்ணு உன்னைவிட வாயாடியா இருப்பா போலயே" என்று ஜீபூம்பா அவளது மேஜையில் அமர்ந்து காலாட்டியபடி கூற,
'ஜீபூம்பாஆஆஆ' என்று பல்லைக் கடித்துக் கொண்டவள், இவளுக்குச் சின்ன சிரிப்பை வழங்கியபடி, "அது லக்கி" என்றாள்.
"அதுவா?" என்று மதி முகம் சுருக்கி வினவ,
அதில் சிரித்துக் கொண்டவள், "என்னைக் கூப்பிட வந்தது லக்கி. எனக்கு எல்லாமே லக்கி தான். அப்படிதான் லக்கி எல்லார் கிட்டயும் சொல்ல சொல்லிருக்காங்க" என்று சாரா கூறினாள்.
அவளை புரியாத பார்வை பார்த்தவள், "உங்க மம்மி?" என்று கேட்க,
"பிரபா அம்மா.. எனக்கு பிரபா ம்மா, சக்கரவர்த்தி தாத்தா, ராதா பாட்டி, நிறையா அக்கா தங்கச்சி அப்றம் லக்கினு நிறையா பேர் இருக்காங்க" என்றாள்.
குழந்தைகளுக்கே உள்ள இயல்பு... தன்னிடம் ஏதுமே இல்லையோ என்று எண்ணும் நேரம் உன்னிடம் இத்தனை நிறைய உள்ளது என்று யாரும் காட்டிக் கொடுத்தால் அதை யாரிடமேனும் கூறி பெருமை கொள்ள வேண்டும் என்ற அவா எழும். அதற்கு நம் சாராவும் விதிவிலக்கு அல்லவே?!
"அம்மாடி.. உங்க வீட்ல இத்தனை பேர் இருக்காங்களா?" என்று மதி வினவ,
"லக்கி, தாத்தா, பாட்டி வேற வீட்ல இருக்காங்க. நான் அக்காங்க தங்கச்சீங்க அப்றம் அம்மா தான் எங்க வீட்ல இருக்கோம்" என்று கூறினாள்.
அவள் கூறியது புரியாத மொழி படம் போல தோன்றவே வேறு ஏதும் கேட்டு மேலும் குழம்ப விரும்பாது மதி சின்ன சிரிப்போடு தலையசைத்துக் கொண்டாள்.
அதில் மேஜையில் உருண்டு உருண்டு சிரித்த ஜீபூம்பா, "சரியான லூசு சாரா நீ" என்று கூற,
சாரா அவனிடம் கோபம் கொள்ளும் முன் ஆசிரியர் உள்ளே வந்த சாக்கைக் கொண்டு ஜீபூம்பா பறந்திருந்தது.
அங்கு தனது கல்லூரியில் தோழி ராகவியுடன் அமர்ந்து படிப்பு சம்மந்தமாகப் பேசிக் கொண்டிருந்த ஆரண்ய நிலாவின் முகத்தில் அத்தனை அத்தனை ஆர்வம்.
நிலாவுக்குக் குழந்தைகள் என்றால் கொள்ளை பிரியம். மருத்துவம் பயில அவள் ஆசைபட்டபோதே குழந்தைகள் நல மருத்துவராகத் தான் ஆக வேண்டும் என்ற முடிவோடு படிக்க வந்தாள்.
எடுத்துக்கொண்ட படிப்பைப் போல் அவளும் குழந்தை மனம் கொண்டவள் தான். யார் உதவி என்று கேட்டாலும் தன்னால் முடிந்த மட்டில் செய்து கொடுத்திடுவாள். வெகுளியும் பகுத்தறிவும் கலந்த பெண்தான். சுட்டித்தனமாகவும் பேசுவாள், தேவையான நேரங்களில் கடுமையாகவும் பேசுவாள்.
அங்குள்ள அத்தனை பேருக்கும் ஆரண்ய நிலாவைப் பிடிக்கும் என்றாலும் ராகவி தான் நிலாவுக்கு மிகவும் நெருக்கமானவள்.
ஏனெனில் ராகவி பள்ளிகாலம் தொட்டு அவளுடன் பயிலும் தோழி. தோழி என்பதையெல்லாம் தாண்டி அவள் வீட்டில் ராகவியும் ஒரு அங்கமாகவே மாறிவிட்டாள் என்று கூட கூறலாம்.
"ஏ ஃபாரெஸ்ட் மூன் (forest moon) போதும் போதும் உன் சொற்பொழிவ நிறுத்து. உன்கிட்ட சொல்ல வந்த நல்ல செய்தியவே மறந்துட்டேன்" என்று ராகவி கூற,
"என்னடா?" என்றாள்.
"அது.." என்று இரண்டு கரங்களையும் முட்டி நகத்தைப் பிய்த்துக்கொண்டே, "எனக்கு பொண்ணு பாக்குறாங்க.." என்றுவிட்டு தலையில் அடித்தபடி, "ச்சீ.. மாப்பிள்ள பார்த்துருக்காங்க" என்றாள்.
அவள் கூறியதில் முதலில் முட்டிக் கொண்டு வந்த சிரிப்பை மொத்தமும் கொட்டி காலி செய்துவிட்டு, "வெக்கம்லாம் படாத தாயே.. என்னால சிரிப்ப தாங்க முடியலை" என்றாள்.
"ஏ மூனு (moon)… ரொம்ப பேசாத. உன்னால முடிஞ்சா கல்யாணத்துக்கு சரி சொல்லி இப்படி வெக்கபட்டு காட்டு பார்க்கலாம்" என்று ராகவி கூற,
"என்னடா.. எங்க அம்மா எதுவும் உனக்குக் கொம்பு சீவி விட்டாங்களா?" என்று கேட்டாள்.
"ம்க்கும்.. உங்கம்மா சீவி விட்டாலும் உங்க அத்தை அப்படிலாம் ஒன்னும் நீ கேட்காத, அவ படிச்சு முடிக்கட்டும், உன் ஆசை தோசை தான் முக்கியம்னு ஆரம்பிப்பாங்க. அப்றம் உன் ஆசை மாமா எனக்கு ஃபோன் அடிச்சு பாப்பாட்ட ஒன்னும் கேட்காதடா வருத்தப்பட போறானு பத்தி பத்தியா பாச பாயசத்தை கொட்டுவாரு. தேவையா எனக்கு?" என்று கேட்டாள்.
அவள் கூற்றில் தன் குடும்பத்தார் தன்மீது கொண்டுள்ள பாசத்தை எண்ணிப் புன்னகைத்தவள்,
"அப்ப உண்மைலயே மாப்பிள்ளை பார்த்துட்டாங்களா?" என்று கேட்க,
"அதைதான சொல்றேன் என் ஃபாரஸ்டு" என்றாள்.
"பாரேன்.. சூப்பர் ராகி. மாப்பிள்ளை யாரு?" என்று நிலா வினவ,
"அதெல்லாம் இன்னும் கேட்கலைடா. என் ஒசரத்துக்கு ஆறடிக்கும் மேல உள்ள ஹைட்ல மாப்ள பாருங்க, ஐடி வேலை பாக்குறவன் வேணாம்னு மட்டும் தான் கேட்டிருந்தேன். ஐடினா லீவே தரமாட்டானுங்க. லீவு நாள்லயும் வர்க் ப்ரம் ஹோம் கொடுத்துடுவானுங்க. நமக்கு அப்படி வேலை பாக்குறவன் செட் ஆக மாட்டான். அதனால என் டிமான்ட் இது ரெண்டு தான். பார்த்துருக்குற மாப்பிள்ளை ஆறரையடில நல்லா அர்னால்டு மாதிரி தான் இருக்காரு. காலேஜ் ப்ரொபசர்னு மட்டும் சொன்னாங்க காலைல. நான் வேற காலைல நல்லா தூங்கி லேட்டா எழுந்துட்டேனா அதனால வேற விவரம் ஏதும் கேட்கலை" என்றாள்.
"செம்ம ராகி.. அப்றம் என்ன? இனிமே ஸ்வீட் நத்திங்ஸ் தான்" என்று நிலா கூற,
"அடபோடி. எப்படினாலும் கல்யாணம் இந்த வருஷம் படிப்பு முடிஞ்சதும் தான்னு எங்க நைனா ஸ்டிரிக்டா சொல்லிட்டாரு. இப்போதிருந்தே எல்லாம் பேசி முடிச்சா தான் நான் படிச்சு முடிச்சதும் அலேக்கா அங்க அனுப்பி வைக்கலாமாம். இந்த பாடத்தோட குதிரை ஓட்டிகிட்டு நான் சாப்பிட்டு தூங்கவே போராட்டமா இருக்கு. இதுல ஸ்வீட் நத்திங்ஸு பிட்டர் திங்ஸுக்குலாம் எங்க போக" என்று பெருமூச்சுவிட்டாள்.
"ரொம்ப வருத்தம் தான்" என்று நிலா சிரிக்க,
"உனக்கு மாப்பிள்ளை பார்க்குறாங்கனா என்ன டிமான்ட் வைப்ப? டிமான்ட்லாம் எதுவும் இல்லைனு படம் ஓட்டிடாத" என்று ராகி கூறினாள்.
"டிமான்ட் எதுவும் கிடையாதுனுலாம் சொல்லமாட்டேன். இருபத்தி அஞ்சு இருபத்தி ஆறு வருஷம் வாழ்ந்த வாழ்க்கைல இருந்து நிறையா விஷயத்தை இழந்தும் மாத்திகிட்டும் தான் ஒரு கல்யாண பந்தத்துக்குள்ள போறோம். ஆண் பெண் ரெண்டு பேருமே திருமணத்துக்குப் பிறகு ரெஸ்பான்ஸ்பிலிடீஸ்ல முன்ன இருந்த வாழ்வில் எதையோ இழக்கதான் செய்றாங்கனாலும் பெண்கள் நம்ம மொத்தமா வாழந்த ஒரு சூழலையே விட்டுட்டு புதுசா ஒருத்தன நம்பி போறோம். உயிரும் உயிருக்கும் மேலான கற்பும் உனக்கே உனக்குனு சொல்லும் ஒருத்தனை தேர்ந்தெடுக்கும்போது அதுக்கு தகுந்த ஒரு ஆளை எடுக்கனும் இல்லையா? அதனால கண்டிப்பா டிமான்ட் வைப்பேன்" என்று நிலா கூற,
"சரி டிமான்ட சொல்லு" என்று ராகி கேட்டாள்.
"ம்ம்.. வெளித்தோற்றம்னு பார்த்தா என்னைவிட கொஞ்சம் உயரமா மீசைலாம் வச்சுட்டு மாநிறமா இருந்தா ஓகே. அதுக்குனு இப்படி தான் வேணும்னு கேட்கலை. இப்படி இருந்தா நல்லாருக்கும்னு ஒரு எண்ணம். முக்கியமா என்னோட குடும்பத்தைத் தன்னோடு குடும்பமா நினைக்கும் ஒருத்தனா இருக்கனும். நான் எப்படி அவருக்கு மனைவியா மட்டுமில்லாம அவர் குடும்பத்துக்கு ஒரு அங்கமா போறேனோ அதேபோல எனக்கு கணவனா மட்டுமில்லாம என் குடும்பத்துல ஒரு அங்கமா உரிமையோட அவரும் இருக்கனும்" என்று நிலா தனது ஆசைகளைக் கண்கள் பளபளக்கக் கூறினாள்.
கடிகாரத்தில் பெரிய முள்ளைத் துறத்தித் துறத்தி மணிக்கு ஒருமுறை சந்தித்து நிமிடமேனும் உறவாடி நகரும் சிறிய முள்ளின் ஓட்டத்தில் நேரமும் கடந்திட்டது.
பள்ளி முடிந்து வீடு வந்த மதி, "ஏம்மா சித்தி கூப்பிட வரலை?" என்று வினவ,
"சித்தி காலேஜ்ல இருக்கா பட்டுமா" என்று ஆதி கூறினாள்.
பேத்திக்குப் பண்டங்களுடன் வந்த பாட்டிகள் இருவரும், "இன்னிக்கு உன் ஃபிரண்டு என்ன சொன்னா?" என்று வினவ,
"நிறையா சொன்னா பாட்டி. எனக்குத் தான் புரியலை" என்றாள்.
அதில் சிரித்த ஆதி, "அப்படி என்ன பட்டு அவ சென்னா?" என்று வினவ,
"அவளோட டாடி பேரு லக்கியாம். லக்கி தான் அவளுக்கு எல்லாமேவாம். மம்மி பிரபா அப்றம் நிறையா அக்கா தங்கச்சி இருக்காங்களாம். அவ டாடி, தாத்தா, பாட்டி வேற வீட்ல இருப்பாங்களாம் மம்மி அக்கா தங்கச்சி இவ வேற வீட்ல இருப்பாங்களாம்" என்று கூறினாள்.
கேட்டவர்கள் மூவரின் முகமும் நொடிப்பொழுது வருத்தத்தில் சுருங்கி மீண்டது. மதி கூறியதை வைத்து அந்த மூன்று பெண்மணிகளும் புரிந்து கொண்டது, 'சாராவின் தாயும் தந்தையும் விவாகரத்து செய்து கொண்டனர் போலும்' என்பது தான்.
"சரி சரி நீ போய் டிரஸ் மாத்திட்டுவா. அப்பத்தாவும் அம்மம்மாவும் உனக்கு ஸ்னாக்ஸ் எடுத்து வச்சுருக்காங்கள்ல?" என்று ஆதி கூற,
"சரிம்மா" என்று உள்ளே ஓடினாள்.
"பாவம் அந்த பொண்ணு" என்று லட்சுமி கூற,
"அப்பா அம்மா பிரிஞ்சிருக்காங்கனே தெரியாம இருக்கா போல" என்று வருத்தத்தோடு சுந்தரி கூறினார்.
அங்கு வண்டியில் அமர்ந்து கொண்டு "லக்கி இன்னிக்கு மதி அவங்க சித்திய இன்டர்டியூஸ் பண்றதா சொன்னா. ஆனா அவங்க சித்தி வரலை. அம்மா தான் வந்தாங்க. அவங்க கியூட்டா பேசினாங்க" என்று கூற,
சிரித்தபடி அவள் பேச்சிற்கு 'உம்' கொட்டிக் கேட்டான்.
"லக்கி.. நான் இன்னிக்கு நீ சொன்னதை சொன்னேன் அவகிட்ட. எனக்கு அம்மா, அக்காங்க, தங்கச்சீங்க, ஃபிரண்ட்ஸ், தாத்தா, பாட்டி, லக்கினு இவ்ளோ பேர் இருக்காங்கனு சொன்னேன்" என்று அவள் கூற,
"சூப்பர் பேபிடால். எப்பவும் நம்மகிட்ட எதுவும் இல்லை அடுத்தவங்க கிட்ட இருக்குனு நினைக்கவே கூடாது. நம்மகிட்ட இருக்குறதுதான் நமக்கு பெருசுனு நினைக்கனும்" என்று லக்கி கூறினான்.
"ஓகே லக்கி" என்றவளை ஆசிரமத்தில் இறக்கி விட்டவன், "பைடா குட்டிமா" என்க அங்கு பிரபா வந்தார்.
அவர் மீது அதிகம் மரியாதை கொண்டவன் வண்டியை விட்டு இறங்கி, "மேம்" என்க,
"எப்படி இருக்கப்பா?" என்று வினவினார்.
"எனக்கென்ன மேம்? நல்லா இருக்கேன்" என்று அவன் கூற,
அவனுடன் நிற்கும் சாராவைப் பார்த்து புன்னகைத்த பிரபா, "உள்ள போய் ரெபரெஷ் ஆகுங்கடா" என்றார்.
"ஓகே ம்மா" என்றவள் உள்ளே ஓட, அதில் புன்னகைத்துக் கொண்டவர் அவனிடம் பேசினார்.
சாதாரண நலவிசாரிப்புப் பேச்சுக்களின் போது தோட்டத்தில் தோழிகளுடன் சேர்ந்து பாடும் சாராவின் சத்தம் இருவரையும் எட்டியது. திருத்தமாய் ஒலிக்கும் அவளது மழலைக் குரலில் மேலும் புன்னகைத்தவர், "உன் பேபிடால் சூப்பரா பாட்டு பாடுறாப்பா. என்ன குரல்!" என்க
"நானே முதல் முறை கேட்குறேன் மேம். பாட்டெல்லாம் பாடுவாளா?" என்று வினவினான்.
"அட நல்லா பாடுவாப்பா. ஸ்கூல்ல வாரம் ஒருநாள் சொல்லி தருவாங்க போல. கத்துக்கிட்டா இன்னும் நல்லா பாடுவா" என்று பேச்சோடு கூற, 'கத்துகிட்டா' என்ற வார்த்தை அவன் மனதில் ஆழப் பதிந்தது.
"வேற பிள்ளைகள் யாருக்கும் பாட்டு இல்ல வேற எதும் கத்துக்க விருப்பம் இருக்கானு கேளுங்க மேம். நம்ம ஆசிரமத்துக்கே வந்து சொல்லி கொடுக்க யாரும் இருக்காங்களானு கேட்டு பார்க்குறேன்" என்று உடனே அவன் கூறிவிட, மென்மையாய் ஒரு நன்றி புன்னகையுடன் தலையசைத்தார்.
Comments
Post a Comment