4. சாராவின் ஜீபூம்பா
அத்தியாயம்-04
அன்று ஆர்வத்துடன் தன்னிடம் உள்ள அழகிய பாவாடை சட்டையை அணிந்து கொண்டு வெளியே காத்திருந்த லக்கியிடம் ஓடி வந்தாள், சாரா.
"ஏ பேபிடால்" என்று அவளைத் தூக்கிக் கொண்டு முத்தமிட்டவன், "தாத்தா பாட்டியைப் பார்க்க குட்டிக்கு எவ்வளவு ஆர்வம்?" என்க,
"ஆமா லக்கி. பாட்டி எனக்காக சூப்பரா பாதாம் முந்திரி போட்டு பாயாசம் தருவாங்க. தாத்தா டென் கிஸ் குடுப்பாங்க. என் கூட ஓடிப்பிடிச்சு விளையாடுவாங்க. ஜாலியா இருக்கும்" என்று கூறினாள்.
"ஆஹாங்.. நாங்க டெய்லி கிஸ் தரோம். வாரம் ஒருமுறை உங்க தாத்தா கொடுக்கும் கிஸ் உனக்கு பெருசா இருக்கா?" என்று அவன் வினவ,
குழந்தைக்கு பதில் சொல்லத் தெரியவில்லை பாவம்.
அதில் புன்னகைத்துக் கொண்டவன், "பிரபாம்மா கிட்ட சொல்லியாச்சா?" என்று வினவ,
"சொல்லிட்டேன் லக்கி" என்றாள்.
"ம்ம்.. இன்னிக்கு தாத்தா பாட்டிய பார்க்கப் போகும் முன்ன உனக்கு ஒரு குட்டி சர்ப்பிரைஸ் இருக்கு" என்று அவன் கூற,
"சர்ப்பிரைஸா? என்னது லக்கி?" என்றாள்.
"அங்க போய் நீயே தெரிஞ்சுக்கோ" என்றவன் அவளைக் கூட்டிக் கொண்டு ஒரு வீட்டை அடைந்தான்.
அந்த வீட்டைப் புரியாது பார்த்த சாராவின் அருகே நின்ற ஜீபூம்பா, "என்ன சாரா இடம் புதுசா இருக்கு?" என்று வினவ,
'எனக்கும் தெர்ல ஜீபூம்பா' என்று மனதோடு பதில் கூறினாள்.
அவளிடம் குனிந்து அமர்ந்தவன், "இது தான் உன் சர்ப்பிரைஸ். இது ஒரு பாட்டு கிளாஸ்" என்க,
அவள் விழிகள் வட்டமாய் விரிந்தன.
"லக்கி.. நிஜமாவா?" என்று அவள் வினவ,
"ம்ம்.. பேபிடால் தான் சூப்பரா பாடுறீங்களே. மத்த பசங்க யாரும் கத்துக்க விருப்பப்படுறாங்களான்னு கேட்டேன். கொஞ்சம் பசங்க விருப்பப்பட்டாங்க. அடுத்த வாரம் இருந்து கிளாஸ். அதுக்கு முன்ன உன்னைக் கூட்டிட்டு வந்து இன்டர்டியூஸ் பண்ணி வைக்கலாம்னு வந்தேன்" என்றான்.
"நிஜமாவா லக்கி.. சூப்பர்.. ஜாலி ஜாலி" என்று அவள் குதிக்க,
ஜீபூம்பாவும் அவர்களைப் புன்னகையுடன் பார்த்தது.
அவளைக் கூட்டிக் கொண்டு உள்ளே சென்றவன் பாட்டு சொல்லிக் கொடுக்கும் பெண்ணிடம் அவளை அறிமுகம் செய்து வைத்து பேச, அவரும் தான் சொல்லிக் கொடுப்பதாக நம்பிக்கை வார்த்தைகள் பேசினார்.
அப்போது அங்கு வந்த மதி, "ஏ சாரா" என்க,
மதியைத் திரும்பிப் பார்த்தவள், "மதி" என்று குதூகலத்தோடு அழைத்தாள்.
"லக்கி.. இவ தான் நான் சொன்னேன்ல என் ஃபிரண்ட் மதி" என்கையிலேயே அங்கு ஆதி வந்திருந்தாள்.
"லக்கி இவங்க மதி அம்மா" என்றவள், "ஹாய் ம்மா" என்க,
"ஹாய்டா குட்டி. பாட்டு கிளாஸ் சேர வந்தீங்களா?" என்று கேட்டாள்.
"ஆமா ம்மா. லக்கி என்னை சர்ப்பிரைஸ் பண்ணக் கூட்டி வந்திருக்காங்க" என்று சாரா கூற, இலக்கியனை நிமிர்ந்து பார்த்தாள்.
அவனது தோற்றம் வைத்தே அவனது வயது எப்படியும் இருபத்தி ஐந்திலிருந்து முப்பதுக்குள் இருக்கும் என்பது புரிய, இவனுக்கு ஏழெட்டு வயதில் குழந்தையா? என்று ஆச்சரியம் தான் முதலில் எழுந்தது.
சிறு வயதிலேயே திருமணம் செய்து வைக்குமளவு அது கிராமப்புறமும் கிடையாதே! ஆதலால் அவ்வாறு ஒருநொடி எழுந்த எண்ணத்தை உடனே புறக்கணித்தவள், "வணக்கங்க" என்க,
தானும் பதில் வணக்கம் கூறினான்.
"மதி நான் எங்க தாத்தா பாட்டி பார்க்கப் போறேன்" என்று சாரா கூற,
"சூப்பர் சாரா" என்றாள்.
பெரியோர் இருவரும் சிறு தலையசைப்புடன் பிள்ளைகளைக் கூட்டிச் சென்றிட,
"என்ன சாரா பேபி.. உன் ஃபிரண்டு பாட்டு கிளாஸ்கும் உன் கூட வருவாபோல" என்று ஜீபூம்பா கேட்டது.
'ஆமா ஜீபூ.. ஜாலில' என்று அவள் உள்ளத்தால் குதூகலிக்க, சக்கரவர்த்தியின் இல்லத்தை அடைந்தனர்.
உள்ளே வேகமாக ஓடிய சாரா, "தாத்தா" என்று சக்கரவர்த்தியை அணைத்துக் கொள்ள,
"அடடே குட்டிமா.. வாங்க வாங்க" என்று அவளைத் தூக்கிக் கொண்டார்.
"தங்கபட்டு வந்தாச்சா?" என்று சமையலறையிலிருந்து ராதா வர,
"ஆமா பாட்டி" என்று பாட்டியிடம் தாவினாள்.
இவர்கள் மூவரையும் புன்னகையுடன் பார்த்த இலக்கியன், "பேத்தி வந்துட்டா போதுமே ரெண்டு பேருக்கும்" என்க,
அதில் பெரியோர் இருவரும் சிரித்துக் கொண்டனர்.
ராதா அவனுக்கு தேநீர் எடுத்து வந்து தர, அதைக் குடித்து முடித்து வேலைக்குப் புறப்பட்டுச் சென்றான்.
வண்டியில் பயணித்துக் கொண்டருந்தவனது பாதி எண்ணம் தன் வழக்குகள் சார்ந்ததாக இருக்க, கவனம் சாலையில் இருந்தது. அவன் எதிரே அதிவேகத்தில் ஒரு இருசக்கர வாகனம் சீறிக் கொண்டு வருவதைக் கண்டவன் கண்கள் இடுங்க, அந்த வாகனத்தின் பின்னே காவலர்களின் வண்டியும் வருவதைக் கண்டான்.
வருபவன் ஏதோ ஒரு குற்றவாளி என்பது அவனுக்கு சடுதியில் புரிந்திட, தன் வண்டியை வளைத்து, வந்துகொண்டிருந்தவன் மீது மோதும்படி கொண்டு சென்று அவனை நிறுத்த முயற்சித்தான்.
இலக்கியனின் செயலில் தடுமாறிப்போன அந்த குற்றவாளி, தப்பிக்கும் முனைப்பில் சட்டென தனது வண்டியை ஒடித்துத் திருப்பிட, அவன் திருப்பிய திசையில் வந்து கொண்டிருந்த ஸ்கூட்டியின் மீது இடித்து நிலைதடுமாறி கீழே விழுந்தான். அவன் இடித்த ஸ்கூட்டியும் தரையோடு சரிந்துகொண்டே சாலையின் ஓரம் வரை சென்றிட, ஒருநொடியில் அந்த இடமே களேபரம் ஆனது.
சட்டெனத் தன் வண்டியை நிறுத்திவிட்டு இறங்கிய இலக்கியனிடம் வந்த காவலர் ஒருவர் "சார்…நீங்க?" என்க, அவருடன் வந்த மற்ற காவலர்கள் அந்த குற்றவாளியைப் பிடித்து அவன் கையில் விலங்கிட்டனர்.
தன்னிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு வெறும் தலையசைப்பைப் பதிலாகக் கொடுத்தவன், சரிந்து விழுந்த ஸ்கூட்டரை நோக்கி ஓட, அதிலிருந்த கடினப்பட்டு எழுந்த பெண்ணொருத்தி பின்னே அமர்ந்து வந்த தன் தோழியைத் தூக்க முயல, தான் முன் வந்து அவர்கள் வண்டியைத் தூக்கி நிறுத்திவிட்டு ஒற்றைக் காலை குற்றி அமர்ந்து அப்பெண்ணைத் தூக்கினான்.
இரு பெண்களும் தலைகவசம் அணிந்திருந்த காரணத்தால் பெரிய அடிகள் இல்லாது தப்பினர் என்றாலும் பின்னே அமர்ந்திருந்த பெண்ணின் முழுக்கை சுடிதாரின் வலது கைப்பகுதி மற்றும் கால்சாராயின் வலது கால் பகுதி கிழிந்து கைகால் சிராய்த்து ரத்தம் வடிந்தது. சட்டென நேர்ந்த விபத்தின் அதிர்ச்சியில் அப்பெண் மூர்ச்சை அடைந்திருக்க, அவளது தலைகவசத்தைக் கழற்றினான்.
கண்ணீரோடு தோழியை உலுக்கிய ராகவி, "ஏ நிலா.." என்க,
அப்பெண்ணை திமிர்ந்து பார்த்தவன் அவளிடம் சின்னச் சின்னக் காயங்கள் மட்டும் உள்ளதை உறுதி செய்து கொண்டு, நிலாவைத் தன் கையில் ஏந்தினான்.
அந்தப் பகுதியின் கடைகளின் வாயிலில் நின்றிருந்த ஆட்டோக்களில் ஒன்று அவன் அருகே வந்து நிற்க, நிலாவோடு உள்ளே அமர்த்தவன் தன்னிடம் கேள்வி எழுப்பிய காவலரிடம் திரும்பி, "என்னோட பைக்கை எடுத்துட்டு உங்க ஸ்டேஷன் போயிடுங்க. பப்ளிக் பிளேஸ்ல பிரச்சினையாயிருக்கு, இவங்க மெடிகல் எக்ஸ்பென்ஸஸ் ஸ்டேஷன் பொறுப்பு" என்றுவிட்டு ராகவியிடம் திரும்பி, "வண்டிய ஓரமா நிறுத்திட்டு வாங்கம்மா" என்றான்.
அவளும் அவனுடன் வர, விரைந்து அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்றனர். அப்போதே நிலாவின் முகம் பார்த்தவன், அவள் கன்னம் தட்டி மயக்கத்திலிருந்து எழுப்ப முயன்றான்.
மருத்துவமனையை அடைந்ததும் அவளைத் தூக்கிக் கொண்டு வந்தவன் மருத்துவரிடம் அவளை ஒப்படைத்து, விபரங்களைக் கூறிவிட்டு வர, ராகவி கலக்கத்தோடு நின்றிருந்தாள்.
அவளைக் கண்டு தன் ஆள் காட்டி விரல் மற்றும் நடுவிரலால் தன் புருவத்தைத் தேய்த்துக் கொண்டவன், "சாரிமா. எதிர்பாராம நடந்த விபத்து. அவங்களுக்கு ஒன்னுமில்லை. அதிர்ச்சில மயங்கிட்டாங்க. கைகால்ல சிராய்ப்பு ஏற்பட்டிருக்கு. நடந்த விபத்துக்கு காவல்துறை சார்பா நான் மன்னிப்பு கேட்டுக்குறேன்" என்று கூற, அதே கலக்கத்தோடு தலையசைத்தாள்.
அங்குவந்த செவிலி இலக்கியனிடம் பெண்ணவளின் விபரம் கேட்க, அவன் ராகவியைப் பார்த்தான்.
"அ..ஆரண்ய நிலா. இருபத்தி ஐந்து வயது" என்று அவளது விபரங்களைக் கூறினாள்.
செவிலி சென்றவுடன் ராகவியைப் பார்த்தவன் அவளது காயங்களுக்கு மருந்திட செவிலியை அழைத்தான்.
வந்தவர் ராகவியை அழைத்துச் சென்று அவள் காயங்களைத் துடைத்து மருந்திட்டு வேறு ஏதும் வலிகள் உள்ளனவா என்று கேட்டுத் தெரிந்துக் கொண்டு அழைத்துவர, அதற்குள் இருவருக்குமான மருத்துவச் செலவுகளைக் கேட்டுத் தெரிந்துகொண்டவன் தானே அத்தொகையைக் கட்டிவிட்டு வந்தான்.
ராகவியிடம் வந்தவன், "அவங்க பேரென்ட்ஸ்?" என்று வினவ,
"அவ மாமாக்கு சொல்லிருக்கேன் சார். வந்துடுவாங்க" என்கையிலேயே பதறியடித்துக் கொண்டு அங்கு வந்தான் கார்த்திக்.
ராகவியை கண்டுகொண்டு அங்கு வந்தவன் கண்கள் சிவந்து அப்படியொரு பதற்றத்தில் துடிக்க,
அவனைக் கண்ட ராகவி "மா..மாமா" என்றாள்.
"ராகிமா.. பாப்பா எங்க?" என்று அவன் வினவ, அவள் இலக்கியனைப் பார்த்தாள்.
கார்த்திக்கிடம் வந்தவன், "சார் நான் எஸ்.ஐ. இலக்கியன். குற்றவாளி ஒருவன் தப்பிச்சுப் போகும்போது அவனை பிடிக்கும் முயற்சில சின்ன விபத்து நடந்துடுச்சு" என்று நடந்தவற்றைக் கூறி,
"நடந்த விபத்தின் அதிர்ச்சியில் மயங்கிட்டாங்க. கைகாலில் சிராய்ப்பு ஏற்பட்டிருக்கு. பிரச்சினை ஏதுமில்லை. ஆஸ்பிடல் எக்ஸ்பென்ஸ் எங்க பொறுப்பு அண்ட் நடந்த விபத்துக்கு காவல்துறை சார்பா நாங்க மன்னிப்பு கேட்டுக்குறோம்" என்று பணிவாகப் பேசினான்.
நிலாவுக்கு ஒன்றென்றால் அந்த வீட்டில் ஒவ்வொருவரின் ஆர்ப்பாட்டமும் விண்னை முட்டி இடிக்கும். அப்படியிருக்க சண்டையிட வேண்டும் என்றே வந்த கார்த்திக் இலக்கியனின் பணிவான விளக்கம் மற்றும் மன்னிப்பில் சற்றே அமைதியாகிவிட, உள்ளிருந்து வந்த மருத்துவரும் இலக்கியன் கூறியதையே கூறி அவளுக்கு ஒன்றுமில்லை என்றும் இன்னும் சில நிமிடங்களில் கண் முழித்த பின் வீட்டிற்கே அழைத்துச் செல்லலாம் என்றும் கூறியிருந்தார்.
ஒரு பெருமூச்சுடன் இருக்கையில் அமர்ந்து தன் முகத்தை மூடிக் கொண்ட கார்த்திக் தன்னை சமநிலைப்படுத்த, இலக்கியன் அமைதியாக நின்றான்.
தன் முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டு எழுந்தவன், கைநீட்டி, "ஓகே சார். ரெண்டுபேரையும் மருத்துவமனை கூட்டி வந்ததுக்கு ரொம்ப நன்றி" என்க,
சன்னமான புன்னகையுடன், "இட்ஸ் மை டியூட்டி" என்றுவிட்டு, "டேக் கேர் சார்" என்று புறப்பட்டான்.
Comments
Post a Comment