5.சாராவின் ஜீபூம்பா

 அத்தியாயம்-05



வீட்டில் தன் கட்டிலில் சாய்ந்து அமர்ந்திருந்த ஆரண்ய நிலாவைச் சுற்றிதான் அவள் வீட்டார் யாவரும் இருந்தனர். சோர்வாய் அவர்களைப் பார்த்தவள், "எனக்கு ஒன்னுமில்லை. ஒருவாரம் போனா இந்த காயமெல்லாம் ஆறிப்போயிடும்" என்க, 


அவளின் அன்னை கண்கள் கலங்க அவளைப் பார்த்தார்.


"ம்மா.." என்று அவள் சத்தம் போட, 


"சித்தி கத்தகூடாது வலிக்கும்" என்று மதி கூறினாள். 


"குட்டிமா நீயாவது இந்த பாட்டிக்கு சொல்லுடா பட்டு. சித்திக்கு ஒன்னுமில்லை" என்று அவள் கூற, 


"கையெல்லாம் புண்ணு சித்தி" என்றாள்.


அவள் கார்த்திக்கைப் பார்த்து முறைக்க, அதில் லேசாய் சிரித்தவன், "அவளுக்கு ஒன்னுமில்லை எல்லாரும் சும்மா சுத்தி சுத்தி நின்னு அவளை நோயாளியா ஃபீல் பண்ண வைக்காதீங்க" என்று கூறினான். 


சரியென அனைவரும் வெளியேற அவர்கள் வெளியேறியதை உறுதி செய்தவன் அவள் அருகே அமர்ந்து "பாப்பா ரியலி ஒன்னுமில்லை தானே? வலிக்குதுனா மாமாட்ட சொல்லனும்டா" என்க, 


"மாமா.. எனக்கு மதியவிட குட்டிபிள்ளை போல ஃபீல் ஆகுது" என்றாள். 


அதில் அவள் மூக்கைப் பிடித்து ஆட்டியவன், "நீ தான் என் முதல் பேபிடா" என்க, 


"எல்லாரையும் வெளிய அனுப்பிட்டு நீங்க மட்டும் இங்க என்ன பண்றீங்களாம்?" என்று தலையை மட்டும் உள்ளே நீட்டி ஆதி அவனை வம்பிழுத்தாள்.


அதில் அசடு வழிந்தவன் "உன்ன.." என்று எழுந்து வர, "எஸ்கேப்" என ஓடியிருந்தாள். 


மறுநாள் காலை பள்ளிக்கு வந்ததும் மதி சாராவிடம் தன் சித்திக்கு நடந்தவற்றை ஒப்பிக்க, 


"அச்சுச்சோ.. இப்ப எப்படி இருக்காங்க உங்க சித்தி?" என்று சாரா வினவினாள். 


"நல்லாயிருக்காங்க. ஆனா கை காலெல்லாம் காயமா இருக்கு" என்று மதி சோகமாக கூற, 


"நான் உங்க சித்தியைப் பார்க்க வரட்டுமா?" என்று சாரா கேட்டாள். 


அதில் ஆச்சரியமான புன்னகையுடன் நிமிர்ந்த மதி, "நிஜமாவா? நீ வரியா?" என்று வினவ, 


"லக்கி கிட்ட கேட்டுட்டு சொல்றேன்" என்றாள்.


"கேட்டுட்டு சொல்லு எங்க அம்மாவே உன்னையும் எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போவாங்க. நம்ம வண்டில ஒன்னா போலாம்" என்று மதி மொத்தமும் கற்பனை செய்து கூற, சாராவுக்கும் அதில் ஆசை பிறப்பெடுத்தது.


"சாரா.. லக்கி விடுவாங்களா? புது ஃபிரண்ட் வேற. இதுவரை நீ எந்த ஃபிரண்ட் வீட்டுக்கும் போனதே இல்லையே" என்று ஜீபூம்பா வினவ, 


'விடுவாங்க நினைக்குறேன். ஜீபூம்பா நீயும் எனக்கு எதாச்சும் ஹெல்ப் பண்ணு லக்கிய ஓகே சொல்ல வைக்க' என்று மனதோடு அவனுக்கு கோரிக்கை விடுத்தாள்.


அதேபோல் பள்ளி முடிந்து கிளம்புகையில் இலக்கியனைப் பார்த்ததும் சாரா, "பை மதி" என்க, 


"சாரா கேட்டுட்டு வந்துடு. மறந்துடாத. நானும் எங்க வீட்ல எல்லார் கிட்டயும் சொல்லிடுறேன்" என்றுவிட்டு ஓடினாள்.


இலக்கியனிடம் வந்தவள் 'ஜீபூம்பா..' என்க, 


"நீ முதல்ல பேசு சாரா. பார்ப்போம்" என்று ஜீபூம்பா கூறியது. 


"ஏ பேபிடால் வாங்க" என்று அவளைத் தூக்கி அவன் வண்டியில் அமர்த்திக் கொள்ள, அமைதியாய் அமர்ந்து கொண்டாள்.


வண்டியை அவன் உயிர்ப்பித்ததும், "லக்கி மதி இருக்காள்ல.. அவளோட சித்திக்கு அடிபட்டுடுச்சாம்" என்று பாவம் போல் சாரா கூற, 


"அச்சுச்சோ.." என்றவனுக்கு அழையா விருந்தாளியாய் நிலாவின் முகம் மனதில் வந்து போனது.


'கியூராயிருக்குமா? ம்ஹும்.. வாய்ப்பில்லை. இன்னும் டைம் எடுக்கும்' என்று அவன் நினைத்துக் கொள்ள மூன்றாவது முறையாக, "லக்கீ.." என குழந்தை கத்தியிருந்தாள்.


"ஆங் சொல்லுடா குட்டி" என்று அவன் கூற, 


"நான் மதி வீட்டிக்கு இந்த வீக் போயிட்டு வரட்டா? பாவமில்ல அவங்க சித்தி" என்று கேட்டாள். 


"அதுக்கு எதுக்கு நீ போகனும்?" என்று அவன் கேட்க, 


"நான் போய் பார்த்துட்டு வருவேன்" என்று மழலை மாறாத குரலில் பெரிய மனுஷி போல் கூறினாள்.


"வேணாம் குட்டிமா.. நான் இந்த வீக் பக்கத்து ஊர் வரை போறேன். உன்னைக் கூட்டிட்டுப் போக வர ஆள் கிடையாது" என்று அவன் கூற, 


"அவங்க மம்மியே என்னையும் கூட்டிட்டுப் போவாங்க லக்கி" என்றாள்.


அப்படியெல்லாம் அவளைத் தெரியாது ஒருவருடன் அனுப்ப அவனுக்கு மனம் வருமா? 


"வேணாம் பாப்பா. லக்கி சொன்னா கேட்கனும். நான் ஊர்லருந்து வந்த பிறகு வேணும்னா போலாம்" என்று அவன் கூற, 


"அதுக்குள்ள அவங்களுக்கு கியூரே ஆயிடும்" என்றாள்.


"அப்ப போகவே வேணாம்" என்று அவன் கூற, 


"லக்கி ப்ளீஸ்.. நான் மதிகிட்ட வரேன்னு சொல்லிட்டேன்" என்றாள். 


"உன்ன யாரு என்னைக் கேட்காம அப்படிலாம் சொல்ல சொன்னது? என்னதிது புது பழக்கம்?" என்று அவன் அதட்ட, 


"லக்கி ப்ளீஸ்" என்றாள்.


“நோ மீன்ஸ் நோ. அடம்பிடிக்காத பாப்பா. அப்றம் லக்கிக்கு கோவம் வந்துடும்" என்று அவன் கண்டிப்பாய் கூற, 


"லக்கி ப்ளீஸ் லக்கி. சீக்கிரம் போயிட்டு வந்துடலாம்" என்றாள். 


"அதான் சொல்றேனே சாரா நான் ஊருக்கு போறேன்னு. என்னதிது இப்படி அடம் பண்றது. பேட் ஹேபிட். சாரா எப்போ பேட் கேர்ளானா?" என்று அவன் கேட்க, 


கோபத்தோடு "சாரா ஒன்னும் பேட் கேர்ள் இல்லை" என்று செப்பினாள்.


"அப்ப அடம் பண்ணக் கூடாது" என்று அவன் கூற, 


"ப்ளீஸ் லக்கி. ஒரே ஒரு முறை போயிட்டு வந்துடலாம்" என்று அப்போதும் விடாது கேட்டாள். 


ஆசிரமமும் வரவும் அவளை இறக்கி விட்டவன், "நான் சொல்லிட்டேன் பாப்பா. அடம் பண்ணாத. நோ மீன்ஸ் நோ தான். போக வேண்டாம். இதென்ன உனக்கு புது பழக்கம்? வெரி பேட்" என்று சற்றுக் காட்டமாக அவன் கூற குழந்தைக்குக் கண்கள் கலங்கிவிட்டன.


எப்போதும் கொடுக்கும் முத்தத்தைக் கொடுக்காமல் அவனை கண்ணீரோடு பார்த்தவள், "போ போ உன்பேச்சு க்கா" என்றுவிட்டு விறுவிறுவென உள்ளே செல்ல, இவனுக்கு என்னவோ போலானது.


'சின்ன பிள்ளை உடனே ஏற்றுக் கொள்ளமாட்டாள். சிறிது நேரம் போனால் சரியாகிவிடுவாள்' என்று தனக்குத்தானே கூறிக் கொண்டு அவன் செல்ல, "போ ஜீபூம்பா. நீ ஏன் எந்த மேஜிக்கும் பண்ணலை" என கண்ணீரோடு அதனிடம் சண்டையிட்டாள்.


"தேவையில்லாம சும்மா சும்மாலாம் என் மேஜிக்க யூஸ் பண்ண முடியாது சாரா" என்று அது கூற, 


"போ நீயும் எனக்காக எதும் செய்ய மாட்ற. உன் பேச்சும் க்கா" என்றுவிட்டு அவள் செல்ல, ஜீபூம்பா அவள் கோபத்தில் சோகமாய் நின்றது.


ஒரு பெருமூச்சு விட்ட ஜீபூம்பா சிலமணி நேரம் யோசித்து இலக்கியனிடம் சென்றது. வேலை முடித்து வந்தவன் குளித்து முடித்து உணவருந்தி மாடியில் உள்ள தன்னறைக்குள் நுழைய, 'இப்ப என்ன பண்ணி இவர சம்மதிக்க வைக்க?' என்று ஜீபூம்பா யோசித்தது.


ஆடவன் தனது அலைபேசியை எடுத்து நோண்ட, தனது கரங்களை நீட்டி, "ஜீ…பூம்…பா.." என்று மந்திரம் போட்டது. 


அவன் அலைப்பேசி தன்னிலை இழந்து அவன் பார்த்துக்கொண்டிருந்த செயலியிலிருந்து வெளிவந்து புகைப்படங்கள் உள்ள செயலிக்குள் சென்று, சிறுவயதில் கீழே விழுந்து அழும் சாராவைத் தான் பதைபதைப்போடு தூக்கி தட்டிக் கொடுத்து சமாதானம் செய்த காணொலி ஓடியது.


அதை பார்த்ததும் அவனுக்கு சாராவின் அழுத முகம் நினைவிலாட, உடனே பிரபாவுக்கு அழைத்தான். 


அழைப்பை ஏற்ற பிரபா, "சொல்லுப்பா" என்க, 


"மேம் பிஸியா? டிஸ்டர்ப் பண்ணிடேனா?" என்றான்.


"அப்படிலாம் இல்லைப்பா. சொல்லு" என்று அவர் கூற, 


"சாரா என்ன பண்றா? சாப்டாளா?" என்று கேட்டான்‌. 


"அட ஆமா உனக்கும் உன் பேபிடாலுக்கும் என்ன சண்டை? எனக்கு அதிசயமா போச்சு. சாப்பிடவே மாட்டேன்னு அழுதுட்டே சொன்னா. ரெண்டு அதட்டலைப் போட்டு உருட்டி மிரட்டி ஊட்டிவிட்டுப் படுக்க வெச்சேன்" என்றார்.


'அச்சோ.. என்ன இவ்வளவு ஆர்ப்பாட்டம்? எப்படியோ சாப்பிட்டுட்டா' என்று எண்ணியவன், 


"சாரி மேம். சின்ன சண்டை. நாளைக்கு நான் பேசிக்குறேன்" என்று அவன் கூற, 


சிரித்தபடி "ஓகேப்பா" என்றார்.


மறுநாள் காலை எப்போதும் போல் தயாராகி வெளியே வந்த சாராவைப் பின்னிலிருந்தே தூக்கிக் கொண்ட இலக்கியன், அவளது கொழுகொழு கன்னத்தில் முத்தமிட, அவள் கோபத்துடன் முகம் திருப்பிக் கொண்டாள்.


"சாரா பேபி" என்று அவன் அழுத்தமாய் அழைக்க, பாவம் போல் முகத்தை வைத்துக் கொண்டு அவனைப் பார்த்தாள். இப்பவோ அப்பவோ என கண்கள் கலங்க தயாராக இருந்தது.


அவளை வண்டியில் அமர்த்தியவன், "ஏன் பாப்பா இவ்வளவு அடம்?" என்க, 


"நான் எப்போவாச்சும் உன்கிட்ட அடம் பண்ணிருக்கேனா லக்கி? இப்ப தானே முதல் முறை கேக்குறேன். நீ என்னை திட்டுற. போ, பேசமாட்டேன்" என்று தன் கண்ணீரைத் துடைத்தாள்.


அவள் அழுகை அந்த ஆறடி ஆண்மகனை என்னவோ செய்தது. இருவரின் பின்னே அமர்ந்திருந்த ஜீபூம்பா சன்னமான சிரிப்போடு, "ஜீ..பூம்..பா" என்க, அவன் அலைபேசி ஒலித்தது.


வண்டியை ஓரம் நிறுத்தியவன், காவல் நிலையத்திலிருந்து வந்த அழைப்பு என்பதனால் இறங்கி சென்று பேசிவிட்டு வைக்க, மீண்டும் அலைபேசி தடுமாறி அந்த காணொளி இயக்கப்பட்டது. கண்களில் பதைபதைப்போடு அவளைத் தன் மார்போடு அணைத்துக் கொண்டு அவன் சமாதானம் செய்யும் காட்சி.


அதை அணைத்துவிட்டு அவன் சாராவைப் பார்க்க, அழுது முடித்தபின்பும் விசும்பிக் கொண்டே இருந்தாள். 


அலைபேசியைச் சட்டைபையில் போட்டவன் அவளிடம் வந்து "பாப்பா.." என்க, 


அவனை ஏறிட்டுப் பார்த்தவள், "சாரி லக்கி. இனிமே அடம்பிடிக்க மாட்டேன். நான் எங்கயும் போகலை" என்று அழுதுகொண்டே அவனைக் கட்டியணைக்க, அவன் தான் அதிர்ந்து போனான். குழந்தைகள் மனதில் தான் எத்தனை மாற்றங்கள்?


அந்த சுட்டி வாண்டின் கண்ணீர் அந்த காவலனின் சட்டையைத் தாண்டி மனதை நனைக்க, "பாப்பா அழாதடா" என்றான். 


"சாரி லக்கி" என்று அவள் கூற, 


"ஓகே லக்கியும் சாரி. இனி லக்கி பாப்பாகிட்ட கோவம்பட மாட்டேன்" என்றான்.


விசும்பிக் கொண்டிருந்தவளின் முகம் நிமிர்த்தி கண்களை துடைத்தவன், "ச்சூ.. காலைல ஸ்கூலுக்கு அழகா கிளம்பி போகனும். இப்படியா அழுத முகமா போறது?" என்று கூற, 


விசும்பியபடி அவனை நிமிர்ந்து பார்த்தாள். 


அவள் தண்ணீர் புட்டியை எடுத்துக் கொடுத்தவன் அவள் முகத்தை நன்கு துடைத்துவிட்டு,


"ஓகே பாப்பா போயிட்டு வாங்க. தாத்தாவை கூட்டிட்டு போக சொல்றேன்" என்க, 


அவனை விழிகள் விரிய பார்த்தவள் "நிஜமாவா லக்கி?" என்றாள்.


அதில் சிரித்துக் கொண்டவன், "நிஜமா தான். இப்ப ஹேப்பியா?" என்று வினவ, 


"ஐ.. சோ ஹேப்பி.. லவ் யூ லக்கி" என்று அவனுக்கு முத்தமிட்டாள். இருவரையும் புன்னகையுடன் பார்த்த ஜீபூம்பா தனது மாயத்தை துவங்கிவிட்ட துள்ளலில் கண்ணடித்துக் கொண்டது.



Comments

Popular posts from this blog

திருப்பம் -01

திருப்பம்-03

திருப்பம் -02