திருப்பம்-51

 திருப்பம்-51



“சங்கு அந்த பூந்தட்ட கொண்டுவந்து வையு”


“அம்மாடி கார்த்தி அந்த வளையல் தட்ட எடுத்துட்டு வாடா” என்று தாட்சாயணி அவர்களுக்கு ஆளுக்கொரு வேலையாய் கொடுத்துக் கொண்டிருக்க,


“மாமா வாங்க. சித்தப்பா வாங்க” என்று அவிநாஷ் அனைவரையும் ஓடி ஓடி கவனித்துக் கொண்டிருந்தான்.


அவன் அருகே வந்து அவனைப் பிடித்து நிறுத்திய வளவன், “அண்ணே விசேஷம் ஒங்க பொண்டாட்டிக்குத்தான?” என்று கேட்க,


“ஏன்டா? என்னாச்சு?” என்று கேட்டான்.


“பொறவு அவியளோட போயி நிக்காம வந்தவியளுக்கெல்லாம் வணக்கம் வச்சுட்டுருக்கீய? மைணி தனியா உக்காந்து ஒங்களத்தேம் பாத்துட்டுருக்காவ” என்று வளவன் கூற,


அவிநாஷ் தன்னவளைத் திரும்பிப் பார்த்தான்.


அத்தனை நேரம் அவனைப் பார்த்துக் கொண்டிருத்தவள் சட்டென வேறுபுறம் திரும்பிக் கொள்ள, அவிநாஷ் இதழ்கள் பூவாய் மலர்ந்தது.


“ஆஹாம்..” என்று வளவன் கேலியில் இறங்க,


“சும்மாருடா” என்று வெட்கம் மறைத்து புன்னகைத்தான்.


“இருக்கோம் இருக்கோம். போயி உங்காளுகூட ஒக்காருவ” என்று கூறியவன், வந்தவர்களை தான் கவனிக்கத் துவங்க,


“என்ன கீதா.. பார்வையெல்லாம் பலமாருக்கு?” என்றபடி அவள் அருகே சென்று அவிநாஷ் அமர்ந்தான்.


“ம்க்கும்.. பாத்துட்டாலும் அய்யா அப்படியே வந்து தாங்கிடுவீங்க” என்று அவள் நொடித்துக் கொள்ள,


“எப்புடி தாங்கனுமாம் என் கீதாவ? மணையில வந்து உட்காரச்சொல்லும்போது தூக்கிட்டுப் போகட்டுமா?” என்று கேட்டான்.


அதில் கொள்ளெனச் சிரித்தவள், “முன்னவே நான் செவன்டி ஃபைவ் கேஜி தாஜ் மஹால். இப்ப உங்க புள்ள உபயத்துல நல்லா ஏறிட்டேன். இதோட நீங்க தூக்கிட்டு அப்படியே உக்காந்துட வேண்டியதுதான்” என்க,


“மாமன் புதுசா வர்க்கௌட்லாம் எதுக்கு பண்றேன்னு நினைக்குற? எல்லாம் உன்னையும் நம்ம புள்ளையவும் சுமக்கத்தான்” என்று அவனும் கேலி செய்தான்.


அவனோட பேசி சிரித்தபோதும் அவள் கண்களுக்குள் மறைக்கப்பட்ட ஒரு படபடப்பு இருந்தது. அதை கண்டுகொண்ட அவிநாஷ், “என்னாச்சு கீதா? ஏன் படபடப்பாருக்க?” என்று கேட்க,


“தெரியலங்க. என்னமோ பயமாவே இருக்கு எனக்கு” என்றவள், “வளைகாப்பு முடிஞ்சதும் அம்மா அப்பா கூட்டிட்டுப் போயிடுவாங்கள்ல? என்னைப் பார்க்க டெய்லி வருவீங்களா?” என்று கேட்டாள்.


“உன்னை யாரு அனுப்பப் போறதா சொன்னது?” என்று அவிநாஷ் கேட்க,


அவனைப் புரியாது பார்த்தவள், “என்ன பேசுறீங்க? வளைகாப்பு முடிஞ்சா அம்மா வீட்டுக்குத்தான போகனும்?” என்று கேட்டாள்.


“ஆமா தான். இல்லைனு சொல்லலையே” என்று மேலும் அவளைக் குழப்பியவன், “சாஸ்திரத்துக்கு இன்னிக்கு ஒருநாள் போயிட்டு நாளைக்கு வந்துடுவ. அப்றம் ஒன்பதாம் மாசம் கூட்டிட்டு வந்து விடுறேன், பாப்பா பிறந்தப்பறம் மூனு நாலு மாசம் கூட வச்சுப் பார்த்துக்கோங்க சொல்லிருக்கேன் மாமாட்ட” என்றான்.


“இது எப்பங்க?” என்று சங்கீதா விழி விரிக்க,


அவள் மூக்கைப் பிடித்து ஆட்டியவன், “ஆமா என் பொண்டாட்டி வளைகாப்புக்கு பத்திரிகை வைக்கப் போனதுக்கே புருஷன் வராம படுக்கலை. மனசு கெடந்து என்னைத்தான் தேடுது. அதான் ஒன்பாதவது மாசம் கூட்டிட்டு வந்து விடுறேன்னு என் மாமனார கன்வின்ஸ் பண்ணிட்டேன். எப்புடி நம்ம சர்பிரைஸ்?” என்று கண்ணடித்தான்.


அவனை ‘ஆ’ என்ற ஆச்சரியமாய் அவள் நோக்க, “ஓய்.. எல்லாரும் இருக்காங்க கீதுமா.. மாமன டெம்ட் பண்ணாத” என்று கிசுகிசுப்பாய் கூறிவிட்டு அவன் எழுந்து சென்றான்.


அவன் சென்ற இடத்தை நிறப்பிக் கொண்டு அமர்ந்த வளவன், “என்ன மைணி? ஒரே வெக்கம்ஸா போறாவ எங்கண்ணே” என்று கூற,


நாணம் கொண்டு சிரம் தாழ்த்தி புன்னகைத்தவள், “அதெல்லாம் உங்களுக்கு நான் சொன்னா புரியாது” என்று நக்கல் செய்தாள்.


“இஞ்சார்ரா.. பொறவு யாரு சொன்னா புரியுமாம்” என்று அவனும் கேலி செய்ய,


“ம்ம்.. என் தங்கச்சி சொல்லுவா. கூப்பிட்டுச் சொல்லச் சொல்லுறேன்” என்று கூறினாள்.


அதில் சிரித்தவன், மற்ற வேலைகளைப் பார்க்க எழுந்து செல்ல, சங்கீதாவும் புன்னகைத்துக் கொண்டாள்.


அனைத்து பரபரப்போடும் விழா இனிதே துவங்க, சங்கீதாவை அமர்த்தி வளைபூட்டத் துவக்கினர்.


வளவனை நெருங்கிய அவிநாஷ், “அக்கா வரலையாடா?” என்று கேட்க,


வருத்தமான பார்வையோடு அவள் கொடுத்துவிட்ட மொய்யை அவன் கையில் வைத்தவன், “அவங்க ஆசிர்வாதம் எப்பவும் புள்ளைக்கு இருக்கும்னு சொன்னாங்கத்தான்” என்றான்.


தானும் வருத்தமாய் நோக்கிய அவிநாஷ், கூப்பிட்டதற்கு மேல் வற்புறுத்தி வரவைத்தல் நன்றன்று என்ற எண்ணத்துடன் பெருமூச்சு விட்டு, “சரிடா” என்றான்.


“சாரிண்ணே. நீய விழாவ பாருவண்ணே. வெசனப்படாதீய” என்று வளவன் கூற,


“ச்ச எதுக்குடா சாரிலாம். விடு” என்று அவிநாஷ் கூறினான்.


ஒருவர் மாற்றி ஒருவர் வந்து சங்கீதாவிற்கு வளையல் பூட்ட, “என்ன அத்தான்.. சங்கிக்கு என்ன கொடுக்கப் போறீய?” என்று கார்த்திகா கேட்க,


“அதான? என்ன அண்ணே ஸ்பெஷலு அக்காவுக்கு? எங்க முன்னுக்க கொடுக்கலாமுல்ல?” என்று துள்ளலுடன் தனம் கேலியாகக் கேட்டாள்.


அவளது விளையாட்டில் தெய்வா, “தனம்” என்று கண்டிக்க,


“விடுங்க பெரிமா. சின்ன பொண்ணுதான” என்று சிரித்தான்.


“சமாளிப்புலாம் இருக்கட்டுண்ணே. என்ன கிப்டுனு சொல்லுவ” என்று விக்ரம் கேட்க,


“நானே பெரிய கிப்டுனு சொல்லப்போறாவளோ?” என்று வடிவேலு கேட்டான்.


“என்னலே லந்து பண்றீய அவேன?” என்று மகா கூற,


“அதான அண்ணா. எல்லாரும் என் அத்தானை வம்பிழுக்குறாங்க” என்று வழக்கம் போல் தன் அத்தானுக்கே கொடிபிடித்தாள் சங்கமித்ரா.


அதில் அவிநாஷ் சிரிக்க, “அம்மாடி நீ எப்பவும் உங்கத்தானுக்குதேம் கொடிபுடிப்ப. இப்ப இம்புட்டு பேரு கேக்கோமுல்ல? என்ன கிப்டாம்?” என்று தீபிகா கேட்டாள்.


“எங்க அத்தான் அதுலாம் சூப்பரா ப்ளான் பண்ணிருப்பாங்க” என்று சங்கமித்ரா கூற,


“அண்ணே.. ஆனாலும் எம்பொண்டாட்டி ஒங்களுக்கு பலமாதேம் கொடிபுடிக்கா. நானு காக்கா கருப்பாருக்குமுனு சொல்லி நீங்க இல்ல காக்கா வெள்ளையாதேம் இருக்குமுனு சொன்னாகூட எங்கத்தான் சொல்றதுதேம் சரினுடுவா போங்க” என்று வளவன் பலமாய் சிரித்தான்.


அதில் அவனை செல்லமாய் முறைத்தவள், “அய்யோ பெரிய காமடிதான்” என்று பழிப்புக் காட்ட, அனைவரும் கலகலவென்று சிரித்தனர்.


“ஏம்பா இம்புட்டு பேரும் கேட்குறாங்க. நீ அமைதியா வேடிக்கை பாக்குறியே? என்ன வாங்கிருக்க எம்மருமவ பொண்ணுக்கு?” என்று அவிநாஷின் அம்மா பாமா கேட்க,


“வாங்கிருக்கேன் வாங்கிருக்கேன்” என்றவன் சென்று ஒரு பரிசை எடுத்து வந்தான்.


கண்கள் விரிய தன்னவனைப் பார்த்த சங்கீதா, பார்வையிலேயே ‘இது எப்ப?’ என்று கேட்க, சிரிப்போடு வந்த அவள் கையில் பரிசை கொடுத்தான்.


“சத்தியமா ஐடியா என்னோடதில்ல” என்று அவிநாஷ் சொல்லிவிட, 


“ம்ம்.. தெரியுமே.. ஐடியா உங்களோடதா இருக்காதுனும் தெரியும், அது யாரோடதா இருக்கும்னும் எனக்குத் தெரியும்” என்று கூறி சங்கீதா சங்கமித்ராவைப் பார்க்க,


“ஐடியா என்னோடதா இருந்தாலும் எஃபோர்ட் அத்தானோடதுதான்” என்று சங்கமித்ரா கூறினாள்.


“அடிப்பாவி.. ஐடியாவையும் குடுத்துட்டுத்தேம் வக்காளத்து வாங்கிட்டிருந்தீயாக்கும்?” என்று வளவன் வாயில் கை வைக்க,


“இல்லனாலும் இவ அவருக்குதான் சப்போர்ட் பண்ணுவா” என்று சங்கீதா கூறினாள்.


“வவ்வவ” என்று சங்கமித்ரா அக்காவிற்கு அலகு காட்ட,


“சின்னப் புள்ள மாதிரி பண்ணாத சங்கு. உம்மாமியார் உன்னத்தான் பாக்குறாங்க” என்று அவள் அருகிருந்து தாட்சாயணி அமைதியாய் கடிந்தார்.


அதில் தன் அத்தையைத் திரும்பிப் பார்த்தவள், அவரது உணர்வற்ற பார்வையைப் பார்த்து பயம் கொண்டு அவர் அருகிருக்கும் மாமனாரைப் பார்க்க, கண்கள் மூடித் திறந்து இடவலமாய் தலையாட்டி சிரித்தார்.


அதில் மெல்ல புன்னகைத்தவள் தன்னவனை நோக்க, அவன் தன் தந்தையை நன்றியாய் பார்த்து புன்னகைத்துக் கொண்டிருந்தான்.


இந்த இடைவெளியில் பரிசைப் பிரித்துப் பார்த்த சங்கீதா, “ஏ.. அழகாருக்குப்பா” என்று கூற,


“என்னது மைணி?” என்று கார்த்திகாவும்,


“வாவ் செயினா?” என்று தனமும்,


“அடடே அழகாருக்கே” என்று தீபிகாவும்,


“பாருடா ஹார்டெல்லாம் பலமாருக்கு” என்று வடிவேலும்,


“எங்கய்யா வாங்கின? இப்புடிலாம் நம்மூரு பக்கட்டு எங்கன கெடைக்கு?” என்று மகாதேவனும்,


“ஏந்த்தான் அக்காவுக்கு வாங்கியாரப்போறீயளாக்கும்?” என்று விக்ரமனும்,


“தங்கமா வெள்ளியாடா?” என்று உறவுக்கார பாட்டியும் என்று வரிசையாய் பல கேள்விகள் எழுந்தன.


எந்த கேள்வியையும் கண்டுகொள்ளாமல் அதை சங்கீதாவின் கழுத்தில் அணிவித்தவன், “உனக்கே தெரியும் எனக்கு இந்த கிஃப்ட் செலெக்ஷன்லாம் வராதுனு. ஆனா கொடுக்குற பரிசுல என் உழைப்பு இருக்கனும்னு பாப்பாட்ட தான் வழக்கம் போல ஐடியா கேட்டேன். பாப்பா இந்த ஐடியா கொடுத்தா. நமக்கு புடிச்சமான ஷேப் ஆர் டிசைன்ல நாமலே டாலர்ஸ் செஞ்சு நமக்கு பிடிச்சவங்களுக்கு கிப்ட் பண்ணலாம். நம்ம பாப்பாவோட முதல் ஸ்கேன் ஃபோட்டோ என்கிட்டருந்தது. அதை ஹார்டின் டாலர்ல இம்பிரின்ட் பண்ணி அதை செயின்ல போட்டு ரெடி பண்ணிட்டேன்” என்று கூற,


“நீங்களே செஞ்சீங்களா?” என்று சங்கீதா ஆச்சரியமாய் கேட்டபடி அந்த இதயவடிவ டாலரில் இருக்கும் அவர்கள் கருவின் அச்சை வருடினாள்.


புன்னகையுடன் அவிநாஷ் தலையசைக்க, சங்கமித்ரா தோளிடித்த வளவன், “நாளபின்ன உனக்கு கிஃப்ட் கொடுக்க நீயே பேசாம ஐடியா தந்துபுடு மித்ரா. இம்புட்டுக்கு யோசிக்குற அளவு ஓம் புருஷன் வர்த்தில்ல” என்று கூறினான்.


“வர்த்தில்லாத புருஷன் தான் ரெசின் கிளாக் வாங்கித்தந்தீங்களாக்கும்?” என்று புன்னகையாய் சங்கமித்ரா கேட்க,


சிரித்தபடியே கண்ணடித்தான்.


“அங்க ஏதோ தனிப்படம் ஓடுற மாதிரி இருக்குது” என்று அவிநாஷ் கூற,


சட்டென தன்னவனிடமிருந்து பார்வையை விளக்கி மற்றவர்களைப் பார்த்த சங்கமித்ராவிற்கு நாணம் தலைதூக்க, வெட்கப் புன்னகையுடன் தலைகுனிந்தவளை, “ஓஹோ” என்ற கேலி கரகோஷம் தொடர்ந்தது.


“என்னம்லே எல்லாம் எம்பொஞ்சாதிய நளியடிக்கீய? விழா அவியளுக்கு. அவியள ஓட்டுக்கங்கலே” என்ற தன்னவள் தோள் சுற்றி கரம்போட்ட வளவன் கூற,


'அச்சோ..’ என்று சங்கமித்ரா இன்னும் வெட்கம் கொண்டாள்.


சிரிப்பும் கலகலப்புமாய் பொழுது கழிய, உணவு வேளை முடிந்ததும் சங்கீதாவை சச்சிதானந்தமும் தாட்சாயணியும் அவர்கள் வீட்டிற்கு அழைத்துச் செல்ல ஆயத்தம் செய்தனர்.


“ஆனாலும் தம்பி நீங்க ரொம்ப மோசம். மூனு மாசம் கூட உங்க பொண்டாட்டிய விட்டு இருக்க மாட்டேன்னு சொல்லிட்டீயலே” என்று தீபிகா கேலி செய்ய,


“பிரச்சினை அவளவிட்டுட்டு இருக்குறதில்ல க்கா. இந்த நேரத்துல அவகூட நான் இல்லாமருக்குறதுலதான். மாமாக்காகதான் ஒன்பதாவது மாசம் அனுப்பவே யோசிச்சேன். இல்லனா பிரசவம் முடிஞ்சதும்தான் அனுப்பிருப்பேன்” என்று சங்கீதாவைப் பார்த்தபடியே கூறினான்.


அவன் கூற்றில் கண்கள் கலங்கப் பெற்றவள், அவன் பார்வையில் உணர்ந்ததெல்லாம் தன்மீதான அவனது நேசம் மட்டுமே! 


அவள் தழும்பி நின்ற விழிகளைப் பார்த்து அவிநாஷ் இடவலமாய் தலையசைக்க, அதில் மெல்ல புன்னகைத்தவள் தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.


மகள் மற்றும் மறுமகனின் உள்ளார்ந்த அன்பை கண்டு மனம் நெகிழ்ந்த சச்சிதானந்தம், மகளின் தலைகோதி அழைக்க, புன்சிரிப்புடன் தந்தையோடு சென்றாள்.


வெளியே சென்று நின்றவள் அவனிடம் விடைபெற வேண்டி திரும்ப, “கெளம்பும்போது மாப்பிள்ளை வரக்கூடாதுடா” என்று தாட்சாயணி கூறினாள்.


அதில் அவள் முகம் முற்றுமாய் வாடிவிட, அவளுக்கு அலைபேசியில் தொடர்புகொண்ட அவிநாஷ், “நாளைக்குக் காலையில என்கூடத்தான் இருப்பா. பத்திரமா போயிட்டுவா” என்று கூறினான்.


“ம்ம்” என்று அவனுக்கு பதில் கொடுத்தவள் முகம், அவன் கொடுத்த பறக்கும் முத்தங்களில் சிவந்து போக, புன்சிரிப்போடு பெற்றோருடன் புறப்பட்டாள்.


விழா இனிதே முடிந்த மகிழ்வுடன் அனைவரும் வீடு திரும்ப வேண்டி விடைபெற, “அடுத்து உன் விசேஷம்தான். சீக்கிரம் நல்ல செய்தி சொல்லு” என்று அவிநாஷின் அம்மா பாமா சங்கமித்ராவிடம் கூறினார்.


அதில் புன்னகைத்தவள் தன்னவனைப் பார்த்துக் கொண்டு தலைக்கு நோகாமல் அவரிடம் தலையசைத்தாள்.


“தெய்வாக்கா மருமவ புள்ளையளுக்கு சுத்திப் போடுவ. வந்தவியலெல்லாம் ஒன்னா புடவை கட்டி ஒத்துமையாருக்காங்ஙளேனு கண்ணு போட்டுட்டாங்க” என்று பாமா கூற,


பெயருக்கொரு புன்னகை பூத்தபடி தலையசைத்தார்.


ஆனந்த உணர்வுடன் அனைவரும் வீட்டை வந்தடைய, சோர்வின் மிகுதியில் அனைவரும் அவரவர் அறைக்குச் சென்று படுத்துக் கொண்டனர்.


அவனிடம் நிறைய கதைபேச வேண்டுமென வந்தவள், இருந்த களைப்பிற்கு அப்படியே உறங்கிப் போனாள்.



Comments

Popular posts from this blog

திருப்பம் -01

திருப்பம்-03

திருப்பம் -02