திருப்பம்-52
திருப்பம்-52
மாலை எழுந்து அனைவரும் கூடத்தில் கூடிவிட, பெண்கள் தேநீரைத் தயாரித்துக் கொண்டிருந்தனர்.
“மித்ரா” என்று கூடத்திலிருந்து வளவன் உரக்க அழைக்க, தேநீரை வடிகட்டிக் கொண்டிருந்தவள் உள்ளிருந்தபடியே, “ஆங்” என்று குரல் கொடுத்தாள்.
“என்ன அவசரமோ கூப்பிடுறான். இங்கனயே இருந்துட்டு என்னத்த கொரல் குடுக்குறவ?” என்று தெய்வா அதட்ட, பால் பாத்திரத்தைப் பிடித்திருந்த துணி விலகி கைகளை உஷ்ணம் தீண்டியது.
“ஸ்ஸ்” என்று பாத்திரத்தை வைத்தவள், “டீ வடிச்சுட்டுருந்தேன் அத்தை. அதான்” என்க,
“எதாது சாட்டு சொல்லிட்டே நில்லு” என்று அவர் கூறும்போது, “மித்ரா” என்று மீண்டும் அழைத்திருந்தான்.
தெய்வா முறைக்கவும் சற்றே பெண்ணவளுக்குக் கோபம் வந்துவிட, விறுவிறுவென கூடத்திற்கு வந்தாள்.
“காலையில எக்ஸ்போர்ட் டீடைல்ஸ் பேப்பர் ஒன்னு கொடுத்தேம்ல? எங்கடி?” என்று கேட்டபடி அவன் கூடத்திலுள்ள மேஜையில் ஆராய, “அதுல இல்லங்க” என்றாள்.
“இங்க தானடி வச்ச?” என்றவன் தேடுதல் வேலையைத் தொடர்ந்தபடியே கேட்க,
“இதுல வைக்கலங்க” என்றவளுக்கு சட்டென அதை ‘எங்கு வைத்தோம்?’ என்பது நினைவில் இல்லை.
“இங்கல்லன்னா பொறவு எங்கன இருக்கு மித்ரா?” என்று அவனும் சற்றே எரிச்சலாகக் கேட்க,
“எனக்கு நினைவு வரமாட்டேங்குதுங்க” என்றாள்.
“ப்ச்… என்ன மித்ரா முக்கியமான பேப்பர்” என்று கோபத்துடன் முனகியவன் அந்த மேஜையிலேயே தேடிக் கொண்டுருந்தான்.
“அதுலதான் இல்லனு சொல்றேன்ல? அப்றமும் அதுலயே தேடினா எங்கருந்து கிடைக்கும்?” என்று மித்ராவும் கோபமாகக் கேட்க,
“ஏ அப்றம் எதுலதான்டி இருக்கு?” என்று கத்திவிட்டான்.
சின்ன விடயம் தான் என்றாலும் இருவரும் இருந்த எரிச்சலான மனநிலை அவர்களை கோபம் கொள்ளவே வைத்தது. சட்டென அவன் அதட்டவும், முதலில் விக்கித்து விழித்தவளுக்கு பிறவி குணத்தில் கண் கலங்கி போனது. பின்பு அவளுக்கும் கோபம் வந்துவிட, “அதான் நெனவில்லனு சொல்றேன்லங்க? பக்கத்துலயே நின்னுட்டு எங்க எங்கனு கேட்டா மட்டும் நினைவு வந்துடுமா? கொஞ்சம் யோசிக்க விடனும்ல?” என்று தானும் கத்தினாள்.
குழத்தைக்கு நடை பயிற்றுவிக்க விக்ரமனும் தனமும் தோட்டத்தில் இருக்க, சுயம்புலிங்கம் மட்டுமே கூடத்திலிருந்தார்.
இவர்கள் சண்டை காதில் விழுந்தபோதும்கூட பெரியவர் அதை கண்டுகொள்ளாது செய்தித்தாளையே பிரட்டிக் கொண்டிருக்க, சமையலறையிலிருந்து இவர்கள் குரல் கேட்டு வந்த தெய்வா, “ஏட்டி என்னத்துக்குடி இந்த கத்து கத்துறவ?” என்று கேட்டார்.
தான் சொல்லச் சொல்ல அந்த மேஜையின் டிராயர்களிலேயே தேடிக் கொண்டிருக்கும் கணவனை முறைத்துப் பார்த்தவள், “காலைல ஒரு பேப்பர் குடுத்தாருத்த. எங்க வச்சேன்னு தெரியலை. இங்க இல்லனு..” என்று முடிக்கும் முன், “கூரிருக்கா ஒனக்கு? முக்கியமா எதயாது குடுத்தா ஒழுங்க வைக்கத்தெரியாதா?” என்று அவளைக் கத்தினார்.
“பாதுகாப்பாதான் வச்சேன் அத்தை. எங்க வச்சேன்னு சரியா நெனவில்ல” என்று அவள் கூற, கார்த்திகா அவ்விடம் வந்தாள்.
“கொழுந்தரே கொஞ்சம் பொருங்க அந்த புள்ள யோசிச்சு எடுக்கும்” என்று சங்கமித்ராவிற்கு சாதகமாய் கார்த்திகா கூற,
“இப்ப வேணும் மைணி. அவரு ஏற்கனவே நாலு தடவ ஃபோன் போட்டுட்டாரு பங்ஷன்ல இருந்தப்பவே. வந்ததும் எடுக்க நினைச்சு களப்புல மறந்துட்டேம்” என்றான்.
“ஏங்க இங்க இல்ல. நான் யோசிச்சு எடுத்துத் தரேன் இருங்க” என்று மித்ரா கூற,
“ப்ச்.. எங்கிட்ட பேசுற நேரத்துக்கு அத ரோசிச்சு எடுக்கலாம் தான? முக்கியமான பேப்பர். உங்கிட்ட குடுக்காம நானே உள்ள கொண்டுபோய் வச்சிருக்கனும். போடி” என்றுவிட்டான்.
“இதான் பேச்சு. நீ போய் உட்காரு. நான் தேடி எடுக்கேம்” என்று தெய்வாவும் மருமகளை மகன் சாடுவதற்கு சாதகமாய் பேச, அவளுக்குக் கண்ணை முட்டிக் கொண்டு கண்ணீர் வந்தது.
அவள் தோள் தொட்ட கார்த்திகா, “சங்கு..” என்று பரிவாய் அழைக்க,
கன்னம் தாண்டிய கண்ணீரைத் துடைத்துக் கொண்டு விறுவிறுவென்று மேலே சென்றாள்.
அப்போதே ஒளிசுடருடன் உள்ளே வந்த விக்ரம் மற்றும் தனம் சூழலைக் கண்டு ஏதோ பிரச்சினை என்பதைப் புரிந்துக் கொள்ள, அலைபேசி ஒலி எழுப்பவும் எரிச்சலுடன் அதை ஏற்ற வளவன், “சார் ஒரு அரைமணி நேரம் சார். எடுத்து அனுப்பிவிடுறேன்” என்று கூறினான்.
எதிர்புரம் உள்ளவரும் அவரது அவசரத்தை அவனிடம் இறக்க, “இந்த பொண்ணுட்ட என்னத்துக்குக் குடுத்த நீயு? ஒரு பொருள ஒழுங்கா வச்சுக்கத்தெரியுதா பாரு?” என்று தெய்வாவும் திட்டியபடியே எதை தேடுகின்றோம் என்றே தெரியாமல் அந்த மேஜையை ஆராய்ந்துக் கொண்டிருந்தார்.
விறுவிறுவென்று கீழே வந்த சங்கமித்ரா, எரிச்சலையும் கோபத்தையும் உள்ளடக்கி நின்றுகொண்டிருந்த வளவனிடம் வந்து அந்தத் தாளை நீட்ட, சட்டென அதை வாங்கிப் பிரித்துப் பார்த்தான்.
“இத எடுத்தார இம்புட்டு நேரமாட்டி ஒனக்கு? எம்புள்ளயோட அழுத்தத்த ஏத்திட்டுதேம் தருவியோ?” என்று தெய்வா திட்ட, “நாயகி” என்று சுயம்புலிங்கத்தின் குரல் ஓங்கி ஒலித்தது.
அந்தத் தாள்தான் என்பதை உறுதி செய்தவுடன் அதை புகைப்படம் எடுத்து அனுப்ப வேண்டியவருக்கு அனுப்பிவிட்டு வளவன் பெருமூச்சுவிட, “அனுப்பிட்டியாப்பா?” என்று சுயம்புலிங்கம் கேட்டார்.
“அனுப்பிட்டேம் ஐயா. ஒரு நிமிஷத்துல பதட்டமாபோச்சுது” என்று பெருமூச்சுவிட,
“ஒனக்கு வேண்டியத அந்த புள்ள எடுத்தாந்து தந்து பதட்டத்த போக்கிடுச்சு. இப்ப நீ கத்தினதுக்கும் உங்கம்மா கத்தினதுக்கும் அந்த புள்ள அடஞ்ச வெசனத்த எப்புடி போக்க போறீய?” என்று அமைதியான குரலில் கேட்டார்.
அப்போதே நிதானம் பெற்றிருந்த வளவன் செய்த பிழையை உணர்ந்து சங்கமித்ராவை நோக்க, கண்கள் சிவக்க கண்ணீரும் கோபமுமாய் பார்த்து நின்றிருந்தாள்.
“ஆமா இதுலென்ன வெசனமாச்சாம் அம்மணிக்கு? அவேம் வெளிய வாசலுல வேலைக்கு அலையுறவன். அவனுக்குத்தான் தெரியும் அவனோட பதட்டம். அவசரத்துக்கு நாலு வார்த்த போசினா அதுக்கு கோவம் வந்துடுமாக்கும்?” என்று தெய்வா கூற,
எப்போதும் அவர் பேச்சுக்கு வருத்தம் மட்டுமே கொள்பவள் இன்று பெரும் கோபத்துடன் அவரைப் பார்த்தாள்.
எதையாவது பேசி பிரச்சினை செய்துவிட வேண்டாம் என்ற மனவோட்டத்துடன் பெருமூச்சுவிட்டவள், “மித்..” என்று அவன் அழைப்பை முடிக்கும் முன் விறுவிறுவென்று மேலே சென்றாள்.
“இஞ்சாருடி.. என்ன அகமா(திமிரா?)? அவேம் கூப்பிடுதாம்ல?” என்று தெய்வா கத்த,
“கூரிருக்காட்டி ஒனக்கு?” என்று சுயம்புலிங்கம் அதட்டினார்.
“என்னத்துக்கு என்னைய திட்டுறீய?” என்று மகன்கள் மற்றும் மகமருகள் முன் திட்டும் கோபத்தில் தெய்வா கொதிக்க,
“ஓம் புள்ளைய முன்னுக்க ஒத்த வார்த்த நான் கேக்கேம்னு ஒனக்கு வந்தா கோவம். அந்த புள்ளைக்கு வந்தா அகமா?” என்று அதே அமைதியானக் குரலில் கேட்டார்.
“ஐயா..” என்று வளவன் பேச வர,
“புருஷம் பொஞ்சாதி சண்டைய அறக்குள்ளக்கயே வச்சுகிடனும்யா. வெளியகொண்டுவந்தா எல்லாரும் வந்து பங்கு போட்டுப்போம்” என்று மகனைப் பார்த்துக் கூறி, “ஒனக்கும் எனக்கும் சண்டவந்தா நம்ம மவேனுவள பேச விடுவியா தெய்வா?” என்று மனைவியிடம் கேட்டார்.
“நேத்து வளந்த புள்ளைய என்ன நம்ம ஒடக்கக் கேக்குறது?” என்று தெய்வா சீற,
“அப்பத நீயும் அவிய ஒடக்குல பூறாம இங்கீதமா இருந்துகிடு” எனக் கூறித் தன் துண்டை உதறிக் கொண்டு சென்றார்.
விக்ரமன் தனத்தை நோக்க, அவள் குழந்தையைத் தூக்கிக் கொண்டு அறைக்குள் சென்றாள்.
கார்த்திகாவும் கணவன் பார்வை புரிந்து, தேநீரை மீண்டும் சுடுபடுத்திக் கொண்டுவர சமையலறைக்குள் செல்ல, அன்னையை பார்த்து ஒரு பெருமூச்சு விட்டுக் கொண்டு மேலே சென்றான்.
முதன்முறை இப்படி சண்டை போட்டதால் வளவன் அறைக்குள் சென்று எப்படி சங்கமித்ராவை சமாதானம் செய்திட என்ற யோசனையோடு உப்பரிகையிலேயே தவிப்பாய் நடந்து கொண்டிருந்தான்.
மேலே படியேறி வந்த விக்ரமன் உடன் பிறந்தவனின் பதட்ட நிலையைக் கண்டு, அடக்கமுடியாது பக்கென சிரித்துவிட, அவன் ஒலியில் திரும்பிப் பார்த்த வளவன், “போயிடுலே. காந்தலடிக்காத” என்று கூறினான்.
“ஆடுற வார ஆடிபுட்டு இப்பத கைய பெணஞ்சா ஆச்சாக்கும்?” என்று கேட்ட விக்ரமனுக்கு சிரிப்பை மட்டும் நிறுத்த முடியவில்லை.
அவனை முறைக்க முயன்ற வளவன் பாவம் போல் விழிக்க, “போயி பேசு போ” என்று கூறினான்.
சுற்றி முற்றிப் பார்த்துக் கொண்டவன் தன் கைச் சட்டையை மடித்துவிட்டுக் கொண்டே, “பயமாருக்குலே” என்க, விக்ரமன் சிரிப்பு இன்னும் அதிகரித்தது.
“சிரிக்காதலே” என்று வளவன் கடுப்பாகக் கூற,
“இப்பத என்னைய என்னலே பண்ண சொல்லுத? அட்வைஸ் பண்ணனுமா?” என்று கேட்டான்.
“ஐடியா குடு” என்று வளவன் கூற,
“பேசாம போயி காலுல விழுந்துபுடு” என்றான்.
அவனை ஏற இறங்கப் பார்த்த வளவன், “எத்தன மொறலே மைணி காலுல விழுந்துருக்க?” என்று கேட்க,
“புருஷம் பொஞ்சாதி ஒடக்குல கால புடிக்குறதும், கால வாருரதும் சகஜம்லே” என்றபடி தன் அறைக்குச் சென்றான்.
ஒரு பெருமூச்சு விட்ட வளவன் அறைக்குள் நுழைய, வழியும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டே அழுதபடி கடிதம் எழுதிக் கொண்டிருந்தாள், சங்கமித்ரா.
அவன் வந்ததைக் கூட உணராது, மெல்லிய ஒலியில் விக்கி விக்கி அவள் அழ, அவனுக்கு வருத்தமாகிப் போனது.
கோபமும் கண்ணீருமென வேக வேகமாய் கடிதம் எழுதியவள், “பேசவே கூடாது இவர்கூட. ரொம்பதான் கோவப்படுறாரு. இனி வெறும் பருப்பத்தான் கடைஞ்சு ஊத்தப்போறேன். காரமா சாப்டு சாப்டுதானே இந்தக் கோபம் வருது” என்று முனுமுனுக்க, அவனுக்கு லேசாய் சிரிப்பும் வந்தது.
கடிதத்தை எழுதி முடித்தவள் எழ, அவள் பின்னே அமைதியாய் நின்றுகொண்டிருந்தான்.
அவனைக் கண்டு முதலில் திகைத்து நின்றவள், பின் கோபத்துடன் நகர எத்தனிக்க, அவள் கரம் பிடித்துத் தன்முன் நிறுத்தினான்.
அவன் முகம் நோக்காது தரை நோக்கியவள், மூக்கை உரிந்துக்கொண்டே கண்ணீரைத் துடைத்துக் கொள்ள,
“மித்தூ..” என்று பரிவாய் அழைத்தான்.
ம்ஹும்.. அத்தனை சீக்கிரம் நிமிர்ந்து பார்த்திடும் எண்ணத்தில் அவளில்லை.
“ஏட்டி.. சாரிடி” என்று அவன் கூற,
கரத்தை பட்டென உறுவிக் கொண்டவள் கடிதத்தை எடுத்து வந்து நீட்டினாள்.
அதை வாங்கித் தன் சட்டைப் பைக்குள் வைத்துக் கொண்டவன், “என்னைய பாரேம்” என்க,
அவள் நிமிர்ந்தாளில்லை.
ஒரு பெருமூச்சு விட்டவன், கடிதத்தை எடுக்க, அவள் நகர எத்தனித்தாள்.
“ஏட்டி” என்று அவசரமாய் கதவை மறைத்துக் கொண்டு நின்றவன், “படிக்குற வர நவரக்கூடாது” என்று கடிதத்தைப் பிரித்தான்.
'அன்புள்ள கோபமுள்ள திருமாலுக்கு,
எப்பா! எவ்ளோ கோவம். உங்களுக்கு வேலை இருக்குதான் அவசரம் தான். இல்லைனுலாம் சொல்லவேயில்லை. என்னைத்திட்ட உங்களுக்கு உரிமைகூட நிறையாவே இருக்கு. திட்டுறதென்ன? நாலு அடிக்கூட அடிச்சுக்கோங்க. ஆனா அது எல்லாம் நம்ம ரூமுக்குள்ள இருக்குறவர நமக்குள்ளயே முடிஞ்சுடும். கூடத்துல வச்சு அந்த கத்து கத்துறீங்க? நீங்க கத்தினதும் எப்புடி பயந்துட்டேன் தெரியுமா?’ என்று வாசிக்கும்பொழுதே அவனுக்கு வருத்தமாகிப் போனது.
அதிர்ந்து பேசினால் அவளுக்கு பயத்தில் கண்ணீர் வந்துவிடும் என்பது அவன் அறிந்த ஒன்றுதானே?
'எனக்கு அதிர்ந்து பேசினா பயமாருக்கும் அழுகவரும்னு நீங்க அப்படி பேசக்கூடாதுனு நான் எதிர்ப்பார்த்ததே இல்லைங்க. ஆனா நீங்க கூப்பிட்டதும் நான் போகலைனே அத்தை என்னை சத்தம்போட்டுதான் அனுப்பினாங்க. பால் பாத்திரம் கைய சுட்டது வேற இன்னும் கடுப்பா போச்சு. அதோட வந்தா நீங்களும் கத்துறீங்க. பொறுமையா கேட்டிருந்தா நானே ரெண்டு நிமிஷம் யோசிச்சு எடுத்துக்குடுத்துருப்பேன். நீங்க கத்தவும் அத்தையும் வந்தாச்சு. சும்மாவே என்னைத் திட்ட அவங்களே காரணம் உருவாக்குவாங்க. இப்ப நீங்களே எடுத்து குடுத்துட்டு வரீங்க. என்கிட்ட இனிமே நீங்க ஒன்னும் குடுத்து வைக்க வேணாம். நீங்களே பாத்துக்கோங்க. போங்க’ என்பதோடு கடிதம் முடிந்திருக்க,
“மன்னிச்சுடு மித்ரா” என்றான்.
அவளுக்கு என்ன பதில் கொடுப்பதென்று தெரியாமல் போனது. கோபமும் சரிக்கு சமமாய் இருக்க, சட்டென மன்னித்திடவும் வரவில்லை. ஆனால் மன்னித்துவிடு என்று வந்து நிற்பவனிடம் சட்டென முடியாதென்றும் கூற இயலவில்லை.
அவள் முகம் கண்டே அகம் புரிந்துகொண்டவன், அவளை இறுக அணைத்துக் கொண்டு, “மன்னிச்சுடு. எம்மேலதேம் தப்பு. சாரி. இதுக்குமேல என்ன சொல்லி சமாதானம் செய்யனும்னு சத்தியமா வெளங்கலடி. கோவம் கொறஞ்சு பொறவு வா. இப்பத திட்டனும்முனாலும் திட்டிக்கோ. சாரி” என்றுவிட்டு விலகினான்.
அத்தனை நேரம் அவனை முறைத்துக் கொண்டிருந்தவள் முகம் ‘மியாவ்’ என்றானது. ஆனாலும் அவன் முகம் நோக்காமல் கீழே சென்றுவிட்டவள், இரவு உணவெல்லாம் முடிந்து மீண்டும் மேலே வந்ததும், “எனக்குக் கோவம் போச்சு. மன்னிச்சுட்டேன். நானும் சாரி. கோவம் பட்டு நானுமே கீழ கொஞ்சம் கத்திட்டேன்” என்றாள்.
அவள் பேசியதில் வந்த சிரிப்பை சிரமப்பட்டு அடக்கியவன், அவளிடம் வந்து நிற்க,
அவனை நிமிர்ந்து பார்த்தவள், “போனா போகுதுனு உங்களை மன்னிக்குறேன்” என்றாள்.
“இஞ்சார்ரா!” என்று அவளை ஒற்றைப் புருவம் உயர்த்திப் பார்த்தவன் எப்போதும்போல், அவள் முகத்தைத் தன் கரங்களில் பொத்திக் கொள்ள, அவனது அடுத்த செயல் புரிந்து நாணம் கொண்டு சிரம் தாழ்த்தினாள்.
அவள் சிவந்த முகம் ரசித்தபடியே அவள் மூக்கில் முத்தமிட்டவன், “சீனிப்பட்டாசு” என்க,
அவன் மூக்கைப்பிடித்து ஆட்டி, “பச்சமொளகா” என்றுவிட்டு சிரித்தாள்.
Comments
Post a Comment