திருப்பம்-53

 திருப்பம்-53



‘அசைத்து இசைத்தது வளைக்கரம் தான் 

இசைந்து இசைத்தது புது ஸ்வரம் தான் 

சிரித்த சிரிப்பொலி சிலம்பொலி தான்

கழுத்தில் இருப்பது வலம்புரிதான் 


இருக்கும் வரைக்கும் எடுத்துக் கொடுக்கும் 

மனதை மயிலிடம் இழந்தேனே 

மயங்கி தினம் தினம் விழுந்தேனே 

மறந்து இருந்து பறந்து தினம் மகிழ 


உன் பார்வையில் ஓராயிரம் கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே

நிதமும் உன்னை நினைக்கிறேன் நினைவினாலே அணைக்கிறேன்’ என்ற பாடல் அவ்வரையில் மெல்லிய ஒலியில், டேப் ரெக்கார்டர் உபயத்தில் ஒலித்துக் கொண்டிருந்தது.


“இந்த புறா கூடுக்கு இவ்ளோ நேரமா? தள்ளி நில்லுங்க நான் தலைப்பின்னனும்?” என்று சங்கமித்ரா கூற,


“ஒனக்கு ஏத்தம்தான்டி” என்று கூறியபடி அவள் கண்ணாடி பார்க்கக் கொஞ்சம் இடைவெளி கொடுத்தான்.


“இருக்காதா பின்ன? நம்ம வீட்டுக்குப் போறோம்ல” என்று அவள் முறுக்கிக் கொள்ள,


“அதுசரி.. அப்ப இது?” என்று ஒற்றைப் புருவம் உயர்த்தி சின்ன சிரிப்போடு கேட்டான்.


“இதுவும் நம்ம வீடுதான். இங்க நான் வந்ததால இது நம்ம வீடாகுதுனா, அங்க நீங்க வர்றதால அதுவும் நம்ம வீடுதான?” என்று அவள் வியாக்கியானம் பேச,


“எப்புட்ரி இப்புடி தினுசு தினுசா ரோசிக்குறவ?” என்று கேட்டபோதும் அவள் பேச்சை உளமாற ரசித்தான்.


“அதுலாம் அப்படித்தான்” என்று தனது சிகையை அவள் பின்னி முடிக்க, 


அவள் பின்னலைப் பிடித்துத் தன்னை நோக்கி அவளை இழுத்தான்.


“ஆ முடி” என்று அவன் மீது மோதி நின்றவள் அவன் முடியை இறுக்கிப் பிடிக்க,


“ஏய் முடிய வுடுடி” என்றான்.


“என் பின்னலவிட்டாதான் உங்க புறாக்கூடுலருந்து கைய எடுப்பேன்” என்று அவள் மிரட்டலாய் கூற,


“அகம்புடிச்சவடி நீயு” என்று அவள் பின்னலைவிட்டவன் அவள் இடை சுற்றிக் கரமிட்டு அவளைத் தன்னை நோக்கி இழுத்துக் கொண்டான்.


அதில் பட்டென அவன் சிகையிலிருந்து கரமெடுத்தவள் அவன் புஜங்களைப் பற்றிக்கொள்ள, “ஒன்னய எப்புடி ஆஃப் பண்ணனுமுனு எனக்குத் தெரியாதாக்கும்?” என்றபடி அவள் கன்னங்களைத் தன் கரங்களுக்குள் பொத்திக் கொண்டான்.


அவன் இடையைப் பிடித்துக் கொண்ட போதுகூட எழாத ஒரு நாணம் கன்னம் பற்றியதும் அவளை சூழ்ந்துக் கொண்டது.


“கெ..கெளம்பனும்” என்று மெல்லிய குரலில் அவள் சிணுங்கலாய் கூற,


“கெளம்பிடலாம்” என்று கூறி, அவள் இதழ் வியர்வையைத் தன் இதழ்கொண்டு துடைத்து, அவளோட வேறொரு உலகம் புறப்பட்டான்.


தன்னை மறந்து அவன் அணைப்பில் கட்டுண்டவளும் அவன் விலகிய நொடி, அவன் மாரோடு தன் முகம் புதைத்துக் கொள்ள, அதை ஒருவித மந்தகாசப் புன்னகையோடு பார்த்தவன், “அகம்பாதம்புடிச்சவளே. இப்பத புடிடி எம்முடிய” என்றான்.


“சும்மாருங்க” என்று அவன் கரத்தினில் அவள் கிள்ளிவைக்க, 


“ஸ்ஸ் ஆ.. ஏட்டி” என்று துள்ளியவன், “இன்னுமொன்னு போட்டுத்தேம் திருத்தனும்போல?” என்றான்.


“அய்யா சாமி கெளம்பனும்” என்று துள்ளி நகர்ந்தவள் மடமடவென தயாராக, இருவருமாய் வீட்டாரிடம் கூறிக்கொண்டு சச்சிதானந்தம் மற்றும் தாட்சாயணி இல்லம் சென்றனர்.


இருவரும் வீட்டை அடைய, தடபுடலான மரியாதையுடன் அவர்களை சச்சிதானந்தம் மற்றும் தாட்சாயணி வரவேற்றனர்.


“வாங்க வாங்க மாப்ள” என்று சச்சிதானந்தம் அவனை அழைத்து வரவேற்க,


“மாமா, அண்ணே இன்னும் வரலியா?” என்று சுற்றி முற்றிப் பார்த்தபடிக் கேட்டான்.


அவிநாஷையும் கூட அவர்கள் அழைப்பதாகவே இருந்தது. ஆனால் ஏற்கனவே அவனது அன்னைக்கு அவிநாஷிடம் மட்டுமே தாங்கள் மரியாதை காட்டுவதாய் ஒரு எண்ணம் இருந்தமையால், இது வளவனுக்கான விருந்து தானே என்று அவிநாஷை அழைக்கும் முடிவை கைவிட்டிருத்தனர்.


“மாப்பிள்ளைக்கு வேலை நாளேனு அழைக்கலை மாப்ள” என்று பனிவாய் அவர் கூற,


இளம் தம்பதியர் இருவருக்குமே காரணம் தெளிவாக பிடிபட்டது.


“நீங்க கேட்டீங்களா மாமா? அண்ணேனுக்கும் விடுப்புருக்க நாளா பாத்து கேட்டிருக்கலாமுல? நாங்க மட்டும் வந்து என்னத்தச் செய்யப்போறோம்? அவியளும் வந்தா எனக்கும் பேச்சு தொணைக்கு ஆவுமின்ன?” என்று வளவன் கேட்க,


சச்சிதானந்தத்திற்கு என்ன பதில் கூறுவதென்றே தெரியாது விழித்தார்.


“சமையலெல்லாம் ஆச்சுதா மாமா?” என்று அவன் கேட்க,


“காலைலைக்கு ஆச்சுங்க மாப்ள. மதியத்துக்கு இனிதான்” என்று தாட்சாயணி கூறினாள்.


சுருங்கியிருக்கும் தன்னவள் முகத்தை ஓரவிழியால் பார்த்துக் கொண்டவன், “மதியத்துக்கு அண்ணேனுக்கும் மைணிக்கும் சேத்தே ஆக்குங்க. நான் வரச்சொல்லுதேம்” என்க,


“மாப்ள..” என்று சச்சிதானந்தம் தயங்கினார்.


“நான் கூப்டா அண்ணே வரும். அண்ணே வாரதுல எனக்கும் சங்கடமில்ல, அண்ணேக்கும் இருக்காது. ஒங்களுக்கு எதும் பிரச்சினைனா சொல்லுவ நாங்கூப்பிடல” என்று வளவன் கூற,


“ச்ச ச்ச. எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்ல மாப்ள” என்று அவசரமாய் கூறினார்.



“ம்ம். அப்பத நான் அண்ணேக்கு சொல்லிடுறேம். நீங்க அண்ணே மைணிக்கு சேத்து செஞ்சுடுங்க” என்று வளவன் கூற, பெரியவர்களுக்கு பயத்தைத் தாண்டிய ஒரு மகிழ்வு குடிகொண்டது.


சங்கமித்ரா முகம் நிறைந்த புன்னகையுடன் வளவனை நோக்க, அவள் கரத்தை அழுத்திக் கொடுத்துவிட்டு எழுந்தவன், அலைபேசியில் அவிநாஷுக்கு அழைத்தபடி நகர்ந்தான்.


தன் வீட்டில் மனைவி மற்றும் பெற்றோருடன் அமர்ந்து காலை உணவு உண்டுகொண்டிருந்த அவிநாஷ், அழைப்பது வளவன் என்பது தெரியவும் உடனே ஏற்றுவிட்டான்.


“என்னடா மாமனார் வீட்டுக்கு விருந்துக்குப் போயாச்சா? எப்புடி நம்ம மாமனார் கவணிப்பு?” என்று உற்றாகமாய் அவிநாஷ் கேட்க


“அதுசரி.. நம்ம மாமனார் கவனிப்புக்கு கொறனு சொல்லிட முடியுமாண்ணே?” என்று வளவன் கூறினான்.


அதில் மேலும் அழகாய் புன்னகைத்தவன், “சாப்டீங்களா வளவா?” என்று கேட்க,


“இல்லண்ணே. ஒரு சின்ன கொற தென்பட்டுச்சு. எம்மாமனார் விருந்துல கொறையேதும் இருந்துகிட வேணாமேனு தான் உங்களுக்குக் கூப்பிட்டேன்” என்று கூறினான்.


“என்னாச்சு வளவா? எதும் வாங்கிட்டு வரனுமா? அதெல்லாம் ரெடியா கறியெடுத்துட்டாரே?” என்று அவிநாஷ் யோசனையாய் கேட்க,


“அதெல்லாம் இல்லண்ணே. எம்மாமனாருக்கு மொத்தம் ரெண்டு மோளே. ரெண்டாது மோளேயோட புருஷன கூப்பிட்டாச்சு. மூத்த மோளேவயும் அவிய புருஷனயும் கூப்பிடக்காணுமாக்கும். அதேம் நானே கூப்பிட்டுட்டேம்” என்று கூறினான்.


புன்னகையாய் உணவு உண்டு கொண்டிருந்தவன் அப்படியே உறைந்து நின்றிட, “அண்ணே” என்று வளவன் அழைத்தான்.


“டேய்.. இது ஒங்க மறுவீட்டு விசேஷம்” என்று அவிநாஷ் கூற,


“ஒங்களுக்கும் மைணிக்கும் விருந்து வச்சப்ப எம்பொண்டாட்டி மண்ணயா தின்னா?” என்று கேட்டான்.


“வளவா..” என்று அவிநாஷ் புரியா அதிர்வில் அழைக்க,


“ஒங்க விருந்து சாப்பாட அவ சாப்பிடக்கூடாதுனு மறுக்க தானண்ணே? ஒங்க விருந்துல நாங்கருந்து மரியாத செஞ்சாப்ல எங்க விருந்துல நீங்க மரியாத செய்ய வேணாமா? அவதானலே சாப்டா நீயெங்கன சாப்டனு கேக்காதீய. அப்றம் அவளும் நானும் வேறயானு பழைய டயலாக்கெல்லாம் அடிக்க வேண்டி வரும்” என்று சிரித்தான்.


அவிநாஷிற்கு என்ன பதிலாற்றவென்றே புரியாத நிலை. மனம் அத்தனை நெகிழ்வாய் உணர்ந்தது.


மாமனார் அழைக்க வேண்டும் என்றெல்லாம் அவன் நினைக்கவேயில்லை. இது அவர்களுக்கான விருந்தென்ற எண்ணமே அவனிடம். ஆனால் ஆசை இருந்தும்கூட மாமனார், அவரது இரண்டாம் சம்மந்திக்குப் பயந்து அழைக்காததில் தான் அவனது வருத்தமே.


இருந்தும் கூட தான் வரவேண்டும் என்று மனமார ஆசைகொள்ளும் திருமாவளவனின் நேசத்தை என்னவென்று சொல்லிடுவது? சில உறவுகள் ரத்த சொந்தங்கள் கேட்பதில்லை. சோகத்தில் சாய்த்துக் கொள்ள ஒரு தோள், அனுசரனையாய் ஒரு அரவணைப்பு, ஆறுதலாய் நான்கு வார்த்தைகள்.. அவ்வளவு தான் உறவின் மகிமை!


அதை இருவரும் உளமாற உணர்ந்ததன் வெளிப்பாடே இந்த அழகிய நேசம்.


லேசாய் கலங்கத் துண்டித்தக் கண்களை சிமிட்டி சீர் செய்த அவிநாஷ், “என்னடா வேணும் உனக்கு?” என்க,


“நீங்களும் மைணியும் மதியத்துக்கு உங்(ண்)க இங்கன வரனும்” என்றான்.


முகம் மலர புன்னகைத்தவன், “வரோம்டா ராசா. வரோம்” என்று கூறி, “மாமா பொருள் எல்லாம் வாங்கிட்டாவளானு விசாரிச்சியா?” என்று கேட்க,


“அதெல்லாம் நான் கேட்டு வாங்கியாந்து தருவேம். நீங்க மைணிய கூட்டிட்டு கெளம்பி வர்ற வேலையை மட்டும் பாருங்க” என்று கூறினான்.


இன்னும் கொஞ்சம் கூடுதலாய் சிரித்தவன், “தேங்ஸ் வளவா” என்க,


“இஞ்சார்ரா.. எனக்கு இதெல்லாம் வேணாம்ணே. முடிஞ்சா ஒங்க நன்றிய வர்றச்ச ரெண்டு மொழம் கனகாம்பரம் வாங்கியாந்துத் தந்துக் காட்டுங்க. எம்பொஞ்சாதிக்கு வாங்கி வெக்க நெனச்சு மறந்துட்டேம். கனகாம்பரத்துலயே பாத்துபோட்டு மல்லில பாத்தா ஒப்பாதுருக்கு” என்று கூறினான்.


அதில் அட்டகாசமாய் சிரித்த அவிநாஷ், “ஒனக்கு இருந்தாலும் குசும்பு அதிகம் தான்டா. எப்புடித்தான் என் பாப்பா உன்ன சமாளிக்குறாளோ போ” என்றுவிட்டு, “கொஞ்சம் வேலை இருக்கு. முடிச்சு சீக்கிரம் வரப்பாக்குறேன். அப்ப வாங்கிட்டு வரேன்” என்றான்.


“ரொம்ப சந்தோஷம்ணே. வாங்க. வச்சுடுதேம்” என்ற வளவன் அழைப்பைத் துண்டித்துவிட்டுத் திரும்ப,


சுவரில் சாய்ந்து கைகளைக் கட்டிக் கொண்டு நின்றிருந்த சங்கமித்ரா அவனைக் காதல் ததும்பும் பார்வையால் மூழ்கடித்தாள். 


“என்னடி சீனிப்பட்டாசு.. திடீர்னு ஜில்லடிக்குறவ?” என்று சூடுபறக்கக் கைகளைத் தேய்த்துக் கொண்டே அவன் கேட்க,


“ரொம்ப புடிக்குது” என்று கூறி பெருமூச்சு விட்டு உள்ளே ஓடினாள்.


அவள் கூற்றில் நல்லதொரு கணவனாய் உணர்ந்து கர்வம் கொண்டு புன்னகைத்தவன், தன் நுனி மீசையை முறுக்கிக் கொண்டு உள்ளே சென்றான்.


தாட்சாயணி காலை உணவு வகைகளை எடுத்து வைக்க, சங்கமித்ரா வீட்டிற்கு பின்புறமுள்ள வாழை மரத்திலிருந்து இலைகள் பறித்து வந்தாள்.


“வாங்க மாப்பிள்ளை சாப்பிடலாம்” என்று சச்சிதானந்தம் அழைக்க, 


சிறு தலையசைப்புடன் அமர்ந்தான்.


மகள், மருமகன் மற்றும் கணவரையும் அமர்த்தி மூவருக்கும் தாட்சாயணியே உணவு பரிமாற, உணவை வாயில் வைத்த சங்கமித்ராவிற்கு தாய் கையால் பல நாட்கள் கழித்து உண்ணுவது அத்தனை ருசித்தது.


“நல்லாருக்காமா?” என்று மகளின் முகம் கண்டே புன்னகையாய் கேட்ட தாட்சாயணி, அவள் சந்தோஷமாய் தலையசைப்பதைக் கண்டு சிரித்தபடி மாப்பிள்ளையைப் பார்த்து, “உங்களுக்கு புடிச்சுருக்கா மாப்ள?” என்று கேட்டார்.


சின்ன புன்னகையுடன், “ரொம்ப நல்லாருக்கு அத்தை” என்று அவன் கூறவும் தான், உணவின் காரம் அவளுக்கு பிடிபட்டது.


என்றோ ஒருநாள் தான் மிச்சம் வைத்த உணவையே காரம் இல்லையென முகத்தை சுழித்துக் கொண்டு அவன் உண்டது நினைவு வர, தற்போது காரமில்லா இவ்வுணவை அவன் எந்தவித முகபாவமும் காட்டாது சந்தோஷமாய் உண்ணுவதை விழியெடுக்காது பார்த்திருந்தாள்.


'அம்மா சாப்பாடு அப்படியே எனக்கேத்த மாதிரி தான் இருக்கும். இவருக்கு இது உள்ளயே எறங்காதே' என்று நினைக்கையில் தனக்காகவும் தன் பெற்றோருக்காவும் அவன் உண்ணுவது மகிழ்வைக் கொடுத்த அதேநேரம் வருத்தமாகவும் இருந்தது.


மகள் உண்ணாது அவள் கணவனையே பார்த்திருப்பதைக் கண்ட தாட்சாயணிக்கே வெட்கம் வந்துவிட, ‘கூடத்துல உக்காந்துட்டு என்ன பண்றா இவ?’ என்று மனதோடு நினைத்துக் கொண்டவராய், “தோசை வைக்கவாடி?” என்று அவள் கவணம் கலைத்தார்.


“ஆங்..” என்று கனவிலிருந்து விடுபட்டவளாய் விழித்தவள் மீண்டும் அன்னை கேட்ட கேள்விக்குத் தலையசைத்துவிட்டு, உணவை உண்டாள்.


அவள் பார்வையை உணர்ந்திருந்த வளவனுக்கு வந்த சிரிப்பை கட்டுப்படுத்திக் கொண்டு உண்ணுவதுதான் பெரும் சிரமமாக இருந்தது. 


உணவு வேளை சின்னச் சின்னப் பேச்சு வார்த்தைகளோடு முடிய,


கை கழுவ வேண்டி சென்ற கணவன் பின்னோடே ஓடினாள்.


“ஏட்டி ஒங்கம்மா பாத்துட்டே இருக்காவ உன்னைய. என்ன நெனப்பாவ? காலைலயே ஒன்னு குடுத்துத்தான கூட்டிட்டு வந்தேம். இப்புடி பட்டிக்காட்டான் பஞ்சுமிட்டாய பாத்த கணக்கா பாக்கியே?” என்று கேலி நிறைந்தக் குரலில் வளவன் கேட்க,


“எப்புடி சாப்டீங்க?” என்று கேட்டாள்.


“எல்லாம் எப்புடி சாப்பிடுவாகலோ அப்படித்தேம் சாப்டேம்” என்று அவன் கூற,


“ப்ச்.. கொழுப்பா?” என்றவள், “எனக்கு சரியாத்தான் இருந்துச்சு. ஆனா உங்களுக்கு அதுல சுத்தமா காரமே இருந்திருக்காதே” என்று பெரும் வருத்தத்துடன் கேட்டாள்.


“அதுக்கென்னடா? அத்த ஆசையா பண்ணிருக்காவ. சொன்னா சங்கடமாவாதா? இன்னொன்னு, சாப்பாடுல எப்போவும் என்ன கெடைக்குதோ அத ஏத்து சாப்பிடனும். நம்ம தட்டுக்கு இதாது வருது. இதுகூட இல்லாம எம்புட்டு பேரு தவிக்காவனு ஐயா அடிக்கடி சொல்லுவாவ. சாப்பாடு என் சுவைக்கு இல்லங்குறதுக்காக அது சுவையாயில்லனு இல்லியே” என்று வளவன் கூற,


அவனை வியப்பாய் பார்த்தாள்.


அவள் மூக்கை பிடித்து ஆட்டியவன், “அவியட்ட என்னமாது சொல்லிட்டு இருக்காத. நான் புடிச்சுதேம் உங்கினேம்” என்றபடி அவள் முந்தியில் கைகள் துடைத்தான்.


என்ன பதில்கூறவென்றே புரியாது அவள் பாவம் போல் விழிக்க, “சீனிப்பட்டாசு.. வந்ததுலருந்து நீ என்னைய ரொம்ப சோதிக்கடி. மனுஷன பாடா படுத்துற. போடி அங்கிட்டு” என்று புன்னகையாய் கூறியபடி சென்றான்.


சிலநிமிடம் சச்சிதானந்தம் மற்றும் திருமாவளவன் பேசிக் கொண்டிருக்க, உள்ளே சமையலறையில் அன்னைக்கு உதவிக் கொண்டிருந்த சங்கமித்ராவிடம் தாட்சாயணி, “அங்க உனக்கு எப்புடிமா இருக்கு? எல்லாம் ஓகேவா?” என்றார்.


“அங்கென்னமா குறை? எல்லாமே ஓகேதான்” என்று புன்னகையாய் அவள் கூற,


“சந்தோஷமா இருக்கியாடா?” என்று கேட்டார்.


அந்த வார்த்தையே அவளுக்குப் பெரும் சந்தோஷத்தைக் கொடுத்து அவன் நினைவுகளால் ஆக்கிரமிக்கச் செய்தது.


உண்மை தான்.. தெய்வாவின் வசைபாடுகளோடு நாட்கள் செல்வதும், அழுகையோடு கரைவதும் உண்மை தான். ஆனால் அவர் ஒருவரின் செயலை மட்டுமே நினைத்துக் கொண்டு, அவ்வீட்டில் மற்ற அனைவரும் காட்டும் அலாதியான நேசத்தை புறக்கணிப்பது முட்டாள்தனம் ஆகிவிடாதா?


அதை நன்கு உணரப் பெற்றவளாய் மந்தகாசப் புன்னகையுடன், “ரொம்ப சந்தோஷமா இருக்கேன் ம்மா” என்று அவள் கூற,


தாட்சாயணிக்கு மனம் குளிர்ந்து போனது.


மகள் சந்தோஷமான வாழ்வை வாழ்கின்றாள் என்பதைத் தவிர தாயாய் அவர் வேறு என்ன எதிர்ப்பார்த்திடப் போகின்றார்?



Comments

Popular posts from this blog

திருப்பம் -01

திருப்பம்-03

திருப்பம் -02