திருப்பம்-54

 திருப்பம்-54



நிமிடங்கள் பொன்னாய் கழிய, தனக்கு சமையலில் உதவும் மகளிடம் “இதெல்லாம் நான் பாத்துக்குறேன். நீ போய் மாப்பிள்ளை கூட கொஞ்சம் நேரம் இரு” என்று தாட்சாயணி கூற,


“சரிமா” எனச் சென்றாள்.


சச்சிதானந்தம் சிறு வேலையாக வெளியே சென்றிருக்க, கூடத்தில் அமர்ந்து தனது அலைபேசியில் வேலை விடயமாக வடிவேலுவிடம் பேசிக் கொண்டிருந்தான்.


அவன் அருகே அவள் வந்து நிற்கவும் நிமிர்ந்து பார்த்து, ‘இரு நிமிடம்’ என விரல் அபிநயம் பிடித்து அவகாசம் வேண்டியவன் பேசி முடித்துவிட்டு அழைப்பைத் துண்டிக்க,


“வாங்க நம்ம ரூம் காட்டுறேன்” என்று அழைத்தாள்.


'நம்ம ரூம்' என்ற அவளது விழிப்பின் தித்திப்பே அவனுக்கு அத்தனை இனித்தது.


அந்த இனிப்பின் இன்பத்துடன் அவன் எழ, அவர்களது அறையாக மாறிய அவளது அறைக்கு அழைத்துச் சென்றாள்.


அவளில்லாதபோதும் கூட அறையை தாட்சாயணி அழகாகவே பராமரித்து வந்திருப்பது அதன் சுத்தத்திலேயே தெரிந்தது.


“நாங்கூட இவ்ளோ க்ளீனா வச்சுக்க மாட்டேன்” என்று அவள் கூற,


“அதாம் தெரியுமே” என்று சிரித்தான்.


அவனை முறைத்துப் பார்த்தவள் “என்ன தெரியுமே? அப்ப நம்ம ரூம நான் நீட்டா வச்சுக்கலைனு சொல்றீங்களா?” என்று கேட்க,


“இப்பத நீதானடி சொன்ன? அதயே நாஞ்சொன்னா நோவுதா?” என்று சிரித்தபடி கேட்டான்.


“நான் சொன்னாகூட நீங்க என்ன சொல்லனும்? அப்படிலாம் இல்லடா. நீ நம்ம ரூம நீட்டாதான வச்சுக்குறனு சொல்லனும்” என்று அவள் கூற,


“நீட்டா வச்சுகிடலனு சொல்ல மாட்டேம் மித்ரா. ஆனா இந்தளவெல்லாம் நீ..” என்று இழுத்தவன் அவளது முறைப்பைக் கண்டு வாயை மூடிக் கொண்டான்.


அறையை சுத்தமாக வைத்துக் கொள்வதையெல்லாம் மித்ரா செய்வாள் தான். ஆனால் அவளாக பார்த்து செய்வது குறைவு. வளவன் நீ செய் நான் செய்கின்றேன் என்று போட்டியெல்லாம் போட மாட்டான். பெரிதும் வீட்டில் சமையல் வேலைகளைப் பெண்கள் தான் அங்கு செய்கின்றனர் என்பதால் அறையில் உள்ள வேலைகளை அவனே பார்த்துக் கொள்ளவே நினைப்பான்.


அவளை வேலையே வாங்க மாட்டான் என்றும் இல்லை. சமயங்களில் அவளிடம் இதை செய், அதை செய் என்பதையும் உரிமையாகக் கூறவே செய்வான். அவளும் அவன் ஏவல்களில் குறைகூறி சண்டையெல்லாம் பிடிக்காது அவன் சொற்படி செய்திடுவாள். அவர்களிடையே இருக்கும் புரிதலே அதற்கான சான்று. வளவன் செய்திடுவான் என்பதால் அறையை சுத்தமாக வைத்துக் கொள்வதில் மித்ரா சிரத்தை எடுத்துக்கொள்ள மாட்டாள் என்பதையே அவன் கூற விழைந்திருக்க, அவனை தீர்ப்பார்வை பார்த்திருந்தாள்.


இருகரம் கொண்டு தன் வாயை மூடிக் கொண்டவன் பனிவாய் தலையசைக்க, அதைகண்டு பக்கென சிரித்தவள், “ஒத்துக்குறேன் ஒத்துக்குறேன். நான் ரூம் க்ளீனிங்ல கொஞ்சம் லேசி (சோம்பேறி) தான். ஆனா நீங்க சொன்னா செய்யத்தான செய்றேன்” என்றாள்.


“இப்பத இல்லனு நாஞ்சொல்லவே இல்லயேடி” என்றவன், “வீட்டுல வெளிய வேலையெல்லாம் நீ நல்லா பாத்துகிட்டாலும், ரூமுக்குள்ளார பாக்குற அம்புட்டு வேலையிலயும் நீக்கொஞ்சம் மந்தந்தேம்” என்று நக்கலாய் கூற,


அவனது இருபொருள் பேச்சில் விழிகள் விரித்தவள், கட்டிலில் கிடக்கும் தலையணையை எடுத்து அவனை அடித்தாள்.


அதில் வாய்விட்டு சிரித்தவன், “பரவாலயே.. எம்பொண்டாட்டிக்கு சட்டுனு புரிஞ்சுடுச்சு. தேரிட்டா போல” என்று கூற,


“ச்ச.. வரவர தப்புத்தப்பாவே பேசுறீங்க. பேட் பாய்” என்றாள்.


“குட்டாவும் பேடாவும் உங்கிட்டத்தான இருக்க முடியும்?” என்று சிரித்தவன், அங்குள்ள சில புகைப்படங்களைச் சுற்றிப் பார்த்தான்.


அதைக் கண்டதும் ஏதோ நினைவு பெற்றதாய் குதூகலித்தவள், சென்று பரணிலுள்ள பெட்டியிலிருந்து ஒரு பெரிய புகைப்படத் தொகுப்பை எடுத்து வந்தாள்.


“என்னது மித்ரா?” என்று அவன் கேட்க,


அவனை அமர்த்தித் தானும் அமர்ந்தவள், “என் சின்ன வயசு ஃபோட்டோஸ் எல்லாம் சங்கி ஆல்பமா போட்டு ஒருமுறை கிப்ட் பண்ணினாங்க” என்று கூறினாள்.


“இஞ்சார்ரா.. கொண்டா பாப்பம்” என்று வாங்கிக் கொண்டவன் அவளுடன் அமர்ந்து புகைப்படங்களைப் பார்த்தான்.


முதன்முறை குப்புற விழுந்தபோது எடுத்தப் படங்களில் துவங்கி, முதல் பள்ளி சீருடையில், பள்ளி விழாக்களின் போது போட்ட வேடங்களில், பரிசு வாங்கும்போதென்று என்னற்றப் படங்களைக் கொண்டிருந்தது அத்தொகுப்பு.


“இது நீயாடி?” என்று உருண்டு திரண்ட உடலுடன் புசுபுசுவென்று இருந்த குழந்தையைப் பார்த்து வியப்பாய் அவன் கேட்க,


“ஆமாங்க. நான் பிறக்கும்போதே நல்லா புசுபுசுனு இருந்தேனாம். மூனேமுக்கா கீலோவாம். வெயிட் தாங்காமதான் அம்மாக்கு டெலிவரியே ஆச்சுனு அடிக்கடி சொல்லுவாங்க” என்று அவள் கூற,


அடுத்தப்படத்தில் வாய் கன்னமெல்லாம் பருப்பு சாதம் பூசிக் கொண்டு உணவு கின்னத்துடன் நிற்கும் அன்னையை ‘இன்னும் கொஞ்சம் உணவு தா’ என்பதைப் போல் அவள் பார்த்திருக்கும் புகைப்படத்தை பார்த்தவன், “ஏட்டி மித்ரா.. கியூட்டாருக்கடி” என்றான்.


நிஜத்திலும் அத்தனை அழகாக இருந்தது அப்படம். சின்ன வயதிலிருந்து தற்போதுவரை அக்கம் பக்கத்துப் பிள்ளைகள், அக்கா பிள்ளைகள், அண்ணன் மகள் என்று வளர்ந்து வந்தவனுக்கு இயல்பிலேயே குழந்தைகள் மீதான பிடித்தமும் அதிகம் இருந்தது. மேலும் அவன் தலைமுடியில் விளையாடி, அவன் சிரிப்பில் மயங்குவதற்கென்றே குழந்தைகள் எளிதில் அவனுடன் ஒட்டிக் கொள்ள, இன்னும் தான் அதன்மீதான ஆர்வம் அவனுக்குக் கூடியது.


தற்போது தன்னவளின் குழந்தைக் கால படங்களைப் பார்த்து, அவளது அழகில் பூரித்தவன் முகம் அதனை வெளிப்படுத்த, மகிழ்வும் நாணமுமாய் பாவை புன்னகைத்தாள்.


சிறு வயது குழந்தையாய் உணவின் பாதியிலேயே தந்தைமடியில் கட்டைவிரலைச் சப்பிக் கொண்டே அவள் உறங்கியதாய் ஒரு படம் இருக்க, அதைப் பார்த்துவிட்டு, “ஏய்” என்று அவன் கூறவும் சட்டென அதை மறைத்தாள்.


“ஏட்டி வெரல் சப்புவியாக்கும்?” என்று கேலி நிறைந்தக் குரலில் வளவன் கேட்க,


“அ..அது ஏதோ தூக்கத்துல.. அதுலாம் எதுக்கு பாக்குறீங்க?” என்றாள்.


அதில் அட்டகாசமாய் சிரித்தவன், “ஏ சீனிப்பட்டாசு. சொல்லுட்டி. எத்தன வயசுவர போட்ட? உண்மையச் சொல்லு” என்று கேட்க,


“சொன்னா சிரிக்கக்கூடாது” என்றவள் மெல்ல தன் விரல்களில் ஆறு விரல்களைத் தூக்கிக் காட்டினாள்.


“ஆறு வயசு வரைக்கா?” என்று அவன் சிரிக்க,


மெல்ல இல்லையென தலையாட்டினாள்.


“பொறவு?” என்று அவன் புரியாமல் கேட்க,


“ஆறாங்கிளாஸ் வரை” என்று வெகு சங்கோஜமாய் கூறினாள்.


“ஏதே?” என்றவனுக்கு சிரிப்பை சுத்தமாகக் கட்டுப்படுத்த இயலவில்லை.


சிரமப்பட்டு இதழ் மடித்து, கட்டுப்படுத்தியவன், “பொறவு எப்புட்ரி விட்ட?” என்க,


“எங்க பாட்டிதான் என்ன என்னமோ ட்ரை பண்ணாங்க. வேப்பெண்ணை தேய்க்குறது, மிளகாதூள் வைக்குறது, சூடு வைப்பேன்னு மிரட்டுறதுனு என்ன என்னமோ பண்ணாங்க. நான் எதுக்குமே மசியலை. ஒரு நாள் தீக்குச்சி கொழுத்தி விரல்ல வச்சு விட்டுட்டாங்க” என்றாள்.


அத்தனை நேரம் சிரித்துக் கொண்டிருந்தவன், சூடு வைத்ததாய் கூறியதும், “ஏதே? சூடு வச்சாங்களா?” என்க,


“ம்ம்..” என்று தலையாட்டியவள், “எங்கப்பா சும்மாருப்பாங்களா? போய் சண்டை போட்டுட்டு வந்துட்டாங்க நல்லா. அதுலருந்து பாட்டி என் பக்கமே வரமாட்டாங்க. ஆனா சிக்ஸ்த் போனதுக்கு அப்றம் ஸ்கூல்ல தெரிஞ்சா ஃபிரென்ஸ் கேலி பேசுவாங்கனு அம்மா பயமுறுத்திட்டே இருந்தாங்க. அதுக்கு பயந்துதான் விட்டேன்” என்று கூறினாள்.


அவள் குழத்தைத் தனத்தில் முறுவலித்தவன், அவள் மூக்கைப் பிடித்திழுத்து, “சரியான வாலுடி நீயு. ஆனா எங்கட்டலாந்தேம் வாயு. வேற எங்கனயாது போயி காட்டுனா காட்டிபுடாத” என்று கூற,


“மனசு விட்டு வெளிப்படுத்த முடியுறவங்கக்கிட்டதான வாய் காட்ட முடியும்?” என்றாள்.


அதில் இதழ்பிரியாது புன்னகைத்தவன் அடுத்தடுத்த படங்களைக் காண, நேரம் ரம்மியமாய் ஓடியது.


வெளியே சத்தம் கேட்கவும் இருவரும் எழுந்து செல்ல, அவிநாஷ் மற்றும் சங்கீதா வந்திருந்தனர்.


“ஏ சங்கி” என்று அக்காவை அணைத்துக் கொண்டு அமர வைத்தவள், ஆசையாய் அவள் வயிற்றில் கரம் வைத்துப் பார்த்து, “குட்டி சங்கி என்ன பண்றீங்க?” என்று கேட்க,


அவள் காதைப் பிடித்துத் திருகிய சங்கீதா, “ஏன்டி குட்டி சங்கி சொல்ற? உள்ள குட்டி அவி இருக்க மாட்டானா?” என்றாள்.


“அதெல்லாம் இல்ல. என் அத்தான் கேட்ட மாதிரி குட்டி சங்கிதான் வருவா” என்று திடமாய் இவள் கூற,


“அதெல்லாம் இல்ல. எனக்கு பாய் பேபி தான் வேணும்” என்று சங்கீதா கூறினாள்.


அடுத்து சங்கமித்ரா ஏதோ கூறவர, “கீதா.. மூத்தப் பிள்ளை என்னக் குழந்தை பிறக்கும்னு சொல்லுதோ அந்த பேபிதான் செகென்ட் பேபியா இருக்கும். நீ வேணும்னா பாரு நமக்கு கேர்ள் பேபிதான் பிறக்கும்” என்று அவிநாஷ் கூறினான்.


அவனை உருக்கமாய் நிமிர்ந்து பார்த்த சங்கமித்ரா, கண்கள் மூடித் திறந்து அவன் தலையசைத்த பாவத்தில் நெகிழ்வாய் புன்னகைத்துக் கொண்டு, “பாத்தியா? அத்தான் சொன்னத கேட்ட தான? கேர்ள் பேபிதான்” என்று சங்கமித்ரா உற்சாகமாய் கூறினாள்.


“உங்கத்தான் ஒன்னு சொல்லிட்டா போதுமே உனக்கு. வானமே தலைகீழாருக்குனாலும் ஆமானு சொல்லிடுவ” என்று சங்கீதா கூற,


திருமாவளவன் இவர்கள் பேச்சு வார்த்தையை ரசனையாய் பார்த்துக் கொண்டிருந்தான்.


அவன் தோளில் கரம் போட்ட அவிநாஷ், நெகிழிப் பை ஒன்றை கொடுக்க, அதனுள் கனகாம்பரப்பூ இருந்தது.


அதை கண்டு சிரித்தவன், “தேங்ஸ் அண்ணே” எனக் கூறி, சங்கமித்ராவிடம் கொடுக்க, அத்தானின் நக்கல் பார்வை கண்டு வெட்கம் கொண்டவளாய் வாங்கிச் சென்றாள்.


அனைவருக்குமாய் பூவைப் பகிர்ந்து கொண்டு வந்தவள் வைத்துக் கொண்டு தன்னவனைப் பார்க்க, விழிகளாலேயே அவளுக்கான பதில் மொழியைக் கொடுத்தான்.


மதிய உணவு சமையலும் தடபுடலாய் நடந்துகொண்டிருக்க, அனைத்திற்கும் உதவிய சங்கமித்ரா, இறுதியாக சமைத்து முடித்த பண்டங்களில் எல்லாம் அவளவன் சாப்பிடும் அளவு உணவைத் தனியாக எடுத்து வேறு பாத்திரங்களில் மாற்றினாள்.


“என்ன பண்ற சங்கு?” என்று சங்கீதா கேட்டதில் தாட்சாவும் திரும்பிப் பார்க்க,


அவற்றில் எல்லாம் இரண்டு தேயிலைக்கரண்டி அளவு வத்தல் பொடியை அள்ளி அள்ளிப் போட்டுக் கலந்துக் கொண்டிருந்தாள்.


அதில் பதறிப்போன தாட்சாயணி, “ஏய் என்னடி பண்ற? லூசா உனக்கு?” என்று அதட்ட,


“பதறாதம்மா. இதுல எடுத்து வச்சிருக்குறத உன் சின்ன மாப்பிள்ளைக்குப் போடு” என்றாள்.


அவளைத் தீயாய் முறைத்த தாட்சாயணி, “என்ன விளையாட்டு இது சங்கு? சாப்பாட்டுல போய் யாரும் இப்புடி பண்ணுவாங்களா? இம்புட்டு வத்தபொடிய அள்ளி போட்டா அவங்க எப்படி சாப்பிடுவாங்க?” என்று கேட்க,


“நீ போட்டுதான் பாரேன்” என்றாள்.


அவள் விளையாடுவதாய் நினைத்துக் கொண்ட தாட்சாயணிக்கு இன்னும் கோபம் வர, “அம்மா கோவப்படாத. நான் விளையாட்டுக்குலாம் பண்ணலை. நெஜமாவே அவங்க நிறைய காரம் சாப்பிடுற ஆளு. வீட்ல எல்லா சாப்பாட்டுலயும் காரம் தூக்கலாதான் இருக்கும். அதுவும் அசைவத்துல கண்ணுமண்ணு தெரியாதளவு காரம் மிதக்கும்” என்று கூறினாள்.


அதில் பதறிய தாட்சாயணிக்கு மகளை நினைத்து நெஞ்சம் அதிர்ந்தது. கொஞ்சம் கூட காரம் சாப்பிட்டுப் பழகிடாத தன் மகள் எப்படி அங்கு இதை உண்டு வாழ்கிறாள்? என்று அவர் பதறிவிட,


“அம்மா அம்மா.. ஷாக்கக் குறை. நான்லாம் அங்க அதை சாப்பிடலை. உன் பொண்ணு அந்தளவு காரம் சாப்பிட்டா ஒரேடியா அம்புட்டுதான்” என்றவள், அவரது குழப்பமான முகத்தைக் கண்டு, “சுடர் பாப்பாக்கு காரம் போடும்முன்ன சாப்பாடு தனியா எடுத்து வைப்பாங்க. அதுலயே எனக்கும் சேர்த்து அத்தை எடுத்து வச்சுட்டு, காரம் சேத்துப்பாங்க” என்று கூறினாள்.


“அதான? இவளாது காரம் சாப்பிடுறதாது” என்று சங்கீதா கூற,


“சங்கீ.. சத்தியமா உன்னாலகூட இவிங்க சாப்பிடுற காரத்த சாப்பிட முடியாதுடி. அம்புட்டுக்காரம். யப்பா” என்று கூறி உடலை உதறிக்கொண்டாள்.


அதில் சிரித்த தாட்சா, “எல்லாத்தையும் எடுத்து வையு வா” என்க,


சிரித்தபடி சென்றாள்.


அனைவரும் அமர, உணவும் பரிமாறப்பட்டது. வளவனுக்கு மட்டும் தனி உணவு பரிமாறினாள், பார்ப்போருக்கு சங்கடத்தை ஏற்படுத்துமென்று, உணவை எடுத்து வருதைப் போல் சென்று அவனுக்கானதை கொண்டு வந்து பரிமாறினார் தாட்சாயணி.


பேச்சும் சிரிப்புமாய் உணவை எடுத்து வாயில் வைத்த வளவன், அதன் காரம் உணர்ந்து அதிர்வாய் தன்னவள் நோக்க, அவள் உணவை ரசித்து உண்டு, “ம்மா.. சூப்பராருக்குமா” என்றாள்.


“மாப்ளா நல்லாருக்கா?” என்று தாட்சாயணி கேட்க,


சட்டெனப் பார்வையை அவர் புறம் திருப்பினான்.


“காரெமெல்லாம் சரியாருக்கா?” என்று அவர் கேட்க,


'இந்த சீனிப்பட்டாசு வேலைதான் போல' என்று எண்ணியவன், “நல்லாருக்குத்தே” என்றான்.


தன்னவன் தன்னைப் பார்ப்பது புரிந்தும் நிமிராது தனது அத்தான் புறம் திரும்பி அவள் பேசி சிரிக்க, ‘இருட்டி ஒன்னய அப்பறம் வச்சுகிடுதேம்' என்று நினைத்துக் கொண்டு உணவை ரசித்து உண்டான்.


உணவுவேளை இனிமையாகக் கடந்து செல்ல, கைகள் கழுவிவந்தவன் அவளைப் பிடித்துக் கொண்டு, “என்னடி சொன்ன?” என்றான்.


“நான் ஒன்னுமே சொல்லலை. அவங்க செஞ்சதுல உங்களுக்கு மட்டும் கொஞ்சம் எடுத்து காரம் எக்ஸ்ட்ரா சேர்த்தேன். அவ்ளோதான்” என்று சங்கமித்ரா கூற,


“எதுக்குடி இந்த வேலையெல்லாம் பாக்க?” என்று கேட்டான்.


“அங்க எனக்கு ஆகாதுனு தனியா காரமில்லாம எடுத்து வைக்குறீங்க தானே? அப்ப இங்க நானும் உங்களுக்குப் பிடிச்ச போல நடந்துக்கனும்ல? நீங்க செஞ்சதுக்கு பதிலா செய்யுறேனானு உடனே கேட்காதீங்க. என்னால முடியாத ஒரு விஷயம் சாப்பாடு சாக்ரிபைஸ் பண்றது. அப்ப மத்தவங்களும் எனக்காக அதை செய்யனும்னு நான் எதிர்ப்பார்க்கக்கூடாது தானே? உங்களுக்குத் தனியா எடுத்து ரெண்டு ஸ்பூன் வத்தபொடி சேக்குறதால ஒன்னும் ஆகிடலை” என்று சங்கமித்ரா கூற, அவளைக் காதலாய் பார்த்தான்.


“ஸ்ஸ்.. ஜில்லடிக்குது” என்று காலையில் அவன் கூறியதைப்போல் கூறி, சூடுபறக்க அவள் கைகளைத் தேய்த்துக் கொள்ள, “ரொம்ப குளிருதோ?” புருவம் உயர்த்திக் கேட்டான்.


அதில் சிரித்துக் கொண்டு அவள் தலையசைக்கவும், அவள் மூக்கைப் பிடித்து ஆட்டி நெற்றியில் முட்டிவிட்டு அவன் செல்ல, அவனை அகம் மகிழ்ந்து பூரிக்கக் காதலாய் பார்த்து நின்றாள்.




Comments

Popular posts from this blog

திருப்பம் -01

திருப்பம்-03

திருப்பம் -02