திருப்பம்-55

 திருப்பம்-55



நாட்கள் சில ஓடி மாதங்களுக்கு வழிவகை செய்திருக்க, இரண்டரை மாத காலம் ஓடியிருந்தது.

இரவின் அந்தகாரத்தை உடைத்துக் கொண்டு ஆங்காங்கே சில இரவு விளக்குகள் ஒளிர்ந்து கொண்டிருக்க, புத்தேரி பாலத்தில் தன் கரங்களைக் கட்டிக் கொண்டு நின்றபடி, கீழே ஓடும் புத்தேரி ஆறை கண்ணீர் கண்களோடு வெறித்துக் கொண்டிருந்தாள், சங்கமித்ரா.


அவளுக்குப் பின்னே வண்டியில் சாய்ந்து அமர்ந்துகொண்டிருந்த வளவனுக்கு மனதில் பெரும் கணம் ஏறியிருந்தது.


இரவு வீட்டில் நடந்த சண்டையின் தாக்கம் அவர்கள் மனதில் பெரும் ஆதிக்கம் செழுத்தியிருந்தது.


மாலை வேலை முடித்து தனது பெற்றோரைப் பார்த்துவிட்டு வர சங்கமித்ரா செல்ல, அரிசி மாவையும் கடலை மாவையும் பிசைந்து பொறித்து வெல்லப்பாகில் போட்டு எடுத்துக் கொண்டிருந்தார் தாட்சாயணி.


“சங்கு.. வாடி” என்று தாட்சாயணி பாசமாய் அழைக்க,


“ஐ.. மனோரமா அம்மா?” என்று கேட்டபடி ஒன்றை எடுத்து வாயில் போட்டுக்கொண்டாள்.


மகள் சுவைப்பதை புன்னகையுடன் கண்ட தாட்சா தயாரித்தப் பண்டத்தையும் தேநீரையும் தயார் செய்து வைத்தார்.


தேநீரோடு கூடிய பேச்சுவார்த்தைகளுமாய் பெற்றோருடன் நேரம் செலவழித்துத் திரும்பியவளிடம் ஒரு சின்ன டப்பாவில் அவர் கொஞ்சம் மனோரம் கொடுத்துவிட்டிருக்க, அன்னை கொடுத்துவிட்டதைத் தான் மட்டுமாக உண்ண விரும்பாது, அனைவருக்கும் பகிர்துகொடுத்தாள்.


 அப்போதென்று பார்த்து, தீபிகாவின் பிள்ளைகளோடு திரிபுரா வந்திருந்தாள்.


ஆகவே குழத்தைகளுக்கும் ஆளுக்குக் கொஞ்சம் சங்கமித்ரா கொடுத்திருக்க, பலகாரத்தின் ருசியில் பிள்ளைகள் மீண்டும் கேட்டன.


“அச்சுச்சோ.. பாட்டி கொஞ்சம் தான் குடுத்துருந்தாங்கடா குட்டி. அடுத்தமுறை நிறைய செஞ்சு வாங்கிட்டு வரேன்” என்று சங்கமித்ரா கூற,


திரிபுராவிற்குக் கோபம் வந்துவிட்டது.


“எம்புள்ளைய கேட்டு இந்தூட்டுலருந்து எங்கம்மா இல்லனு ஒரு பண்டம் சொன்னதில்ல. கொடுத்துடுறவிய கையும் கணக்குமா ஒனக்கு மட்டுமினு கொடுத்துருக்காவதான? பொறவு என்னத்துக்கு பிள்ளையளுக்குக் கொடுத்து ராப்பொழுதும் நேரமுமா ஏங்க விடுத?” என்று திரிபுரா கேட்க,


குழந்தைகளுக்கு அது நல்லதொரு உதாரணமாக அமைந்திடுதல் நன்றன்று எனப் புரிந்துகொண்டவளாய், “கொஞ்சமாருந்தாலும் எல்லாருக்கும் பகிர்ந்து கொடுக்குற பண்பு குழந்தைகளுக்கும் நாமதான மைணி சொல்லித்தரனும்?” என்று கேட்டாள்.


அவள் எண்ணங்களை திரிபுராவும் தெய்வநாயகியும் என்று தான் சரியாகப் புரிந்துகொண்டுள்ளனர்?


“எம்பேரப்புள்ளையளுக்கு பண்பில்லங்கியாக்கும்?” என்று கேட்டு அவளைப் பதற வைத்தத் தெய்வா, “ஒனக்கென்னட்டி பண்பிருக்கு எம்மூட்டு பிள்ளையல சொல்ல? ராவும் பொழுதுமா புள்ளைய கேட்டு இல்லனு சொல்லுறவ. நீயு அதுகள சொல்லுறியாக்கும்? ஓங்கிட்ட ஏந்தி நிக்க எம்பேரப்புள்ளைய ஒன்னும் வக்கத்துப் போயிடலை” எனத் துவங்கி அவர் போக்கிற்குத் திட்டித் தீர்த்திருந்தார்.


சரியாக அந்நேரம் பார்த்து தீபிகா வந்திருக்க, திரிபுரா சென்று சங்கமித்ராவைத் தவறாக சித்தரித்து கதை கட்டினாள்.


அதில் மேலும் பதறிய சங்கமித்ரா, “இல்ல அண்ணி. நான் பிள்ளைகள சத்தியமா கொறை சொல்லலை” என்க, அவளுக்கு வெடித்து அழவேண்டும் போல் தொண்டை அடைத்தது.


அவளைப் பரிதாபமாக பார்த்த கார்த்திகா தீபிகாவை நோக்க, தீபிகாவிற்கு நிலைமை புரிந்துபோனது.


அன்னைத் தங்களைத் திட்டப் போகின்றாரோ என்று அதிர்ந்து நிற்கும் பிள்ளைகளை அழைத்து, “சங்கு அத்தை சொல்றதுதேம் சரிடா கண்ணுகளா. எதுவாருந்தாலும் ஷேர் பண்ணி உங்கனும்” என்று தீபிகா பணிவாய் கூற,


“சாரி ம்மா. சாரி அத்தை” என்று குழந்தைகள் கூறின.


குழந்தைகளுக்காக கண்ணீரைக் கட்டுப்படுத்திக் கொண்டு அவர்கள் கன்னம் தட்டியவள், “ச்சூ.. சாரிலாம் எதுக்குடா குட்டி” என்று தட்டுத்தடுமாறி உரைக்க,


தீபிகா குழத்தைகளை வெளியே விளையாட அனுப்பிவிட்டு அன்னையையும் அக்காவையும் உரித்துவிட்டாள்.


கண்ணீர் கரைபுரண்டு ஓட, நடுநடுங்கி நின்ற சங்கமித்ராவை அழைத்துச் சென்ற கார்த்திகா, “சும்மா அவிய பேசுறதுக்குலாம் அழுதுட்டு இருக்காத சங்கு. நாலு வார்த்த நீயும் நறுக்குனு பேசத்தான?” என்று கேட்க,


“குழந்தைகளுக்கு தப்பான உதாரணமா போயிடக்கூடாதுனு நான் சொன்ன ஒரு வரியவே இப்புடி மாத்திச் சொல்றாங்க க்கா. என்னால வேற என்ன பேசிட முடியும் சொல்லுங்க?” என்று அழுதாள்.


அவளுக்கு இப்படியான பேச்சுக்களே பழக்கமில்லாத போதும், பதில் பேசமட்டும் எப்படி அறிந்திருப்பாள்? வந்த நான்கு மாதங்களில் ஓரளவு புரிந்து ஏற்று நடந்துகொள்ளவே இப்போதுதான் பழகியிருக்கின்றாள் எனும்போது அவளால் தான் என்ன செய்திட இயலும்?


அவள் தலையை பரிவாய் கோதிய கார்த்திகா, “விடு சங்கு அழுவாத” என்று கண்ணீர் துடைக்க, “எனக்கு அழுவனும் க்கா” என்று பரிதாபமாய் கூறினாள்.


அவளைப் பற்றி இந்த நான்கு மாதங்களில் கார்த்திகா புரிந்துகொண்டதில் ஒன்று, எப்பேர்ப்பட்ட சண்டையாக இருந்தாலும் சில நிமிடங்கள் வெடித்து அழுது முடித்தால், அதுபற்றி பின்பு யோசிக்காமல் அவள் மீண்டு விடுவாள் என்பதே.


அறைக்கு அழைத்துச் சென்று கார்த்திகா அவளை மடியில் சாய்த்துக் கொள்ள, “அம்மா ஆசையாதான் க்கா குடுத்தாங்க. கொ.. கொஞ்சம் தான்டி பண்ணேன். எல்லாருக்கும் கொ.. கொஞ்சம் குடுத்து சாப்பிடு. இ..இன்னொரு முறை பண்றப்ப நிறையா தரேன்னு சொல்லிதான் தந்தாங்க. அ..அத்தை இ..இப்படி சொல்லிருக்க வேணாம்” என்று அழுதபடியே கூறினாள்.


அவளிடம் பதிலேதும் கூறாது அவளுக்குத் தட்டிக் கொடுத்து ஆறுதலாய் கார்த்திகா அமர்ந்திருக்க, சிலநிமிடங்களில் அழுகை ஓய்ந்து எழுந்தவள் கார்த்திகாவை இறுக அணைத்துக் கொண்டாள்.


“தேங்ஸ் க்கா” என்று உளமாற சங்கமித்ரா கூற,


“அடிபோடி.. உனக்காக அவியட்ட ஒன்னும் எடுத்து சண்ட போட முடியலையேனு ஏற்கனமே எனக்கு வெசனமாருக்கு” என்றாள்.


“திட்டும்போது முன்ன நின்னு சண்டை போடுறது மட்டும் சப்போர்ட் பண்றதில்ல அக்கா. எனக்கு சோகமாருக்கும்போது அவங்களுக்கு அடுத்து நான் புலம்ப எனக்கு ஒரு துணையா நீங்க இருக்கீங்களே. அது போதாதா எனக்கு?” என்று சங்கமித்ரா கேட்க,


“ம்ம்.. அப்ப நான்லாம் யாரோதான் போல” என்றபடி சூடான தேநீரோடு தனலட்சுமி அவ்விடம் வந்தாள்.


அவளைக் கண்டு புன்னகைத்த சங்கமித்ரா, “நீயும் தான் தனம். நம்ம வீட்ல எல்லாருமே எனக்கு துணையாதான் இருக்கீங்க. அந்த வகையில் நான் லக்கிதானே” என்று கூற,


அவளை பரிதாபமாய் பார்த்த தனம் தேநீரைக் கொடுத்து குடிக்க வைத்து அனுப்பினாள்.


கீழே பேரப்பிள்ளைகளுக்காக உடனே வீம்பாக வீட்டிலேயே கடலை மீட்டாய் செய்து டப்பாவில் அடைத்து தெய்வா கொடுத்துவிட, தீபிகா அதற்கும் ஒருமூச்சு திட்டிவிட்டுச் சென்றாள்.


திரிபுராவும் தனது இல்லம் திரும்பிவிட, தெய்வாவிற்குத்தான் நடந்த நிகழ்வில் மனம் ஆறாது தவித்தது. ஆடவர்கள் மூவரும் இரவு, வேலை முடிந்து தாமதாகவே வந்திருக்க, உணவு வேளை அமைதியாகக் கழிந்தது.


மறுநாள் விடுமுறை தினம்தான் என்பதால் பதினோரு மணியானபின்பும் அனைவருமாக கூடத்தில் அமர்ந்திருக்க, பேரப் பிள்ளைகளுக்குக் கொடுத்தது போக மீதமிருக்கும் மிட்டாய்களைக் கொண்டு வந்த தெய்வா ஒவ்வொருவருக்காய் கொடுத்துக் கொண்டிருந்தார்.


“ஐ கடலைமிட்டாய்” என்று தனம் உற்சாகமாய் எடுத்துக்கொள்ள, அதில் கார்த்திகாவுடன் பேசிக்கொண்டிருந்த சங்கமித்ராவும் உற்சாகமாய் திரும்பினாள்.


“கடலைமிட்டா பிடிக்குமாக்கும்?” என்று கார்த்திகா கேட்க,


“ரொம்ப க்கா” என்று கூறினாள்.


“சரிதேம். எனக்கு புடிக்காதுத்தா. என்னோடதையும் நீயே சாப்புடு” என்று கார்த்திகா கூற, கரும்புத்தின்னக் கூலியா என்று மகிழ்ந்தாள்.


ஆனால் தெய்வா மாலை நடந்த பிரச்சினையை மனதில் வைத்துக் கொண்டு, கார்த்திகாவிற்கு மட்டும் கொடுக்கவேண்டி அவர்கள் அருகே வரை சென்றவர், அவளுக்குக் கடலை மிட்டாய் பிடிக்காதென்று நினைவு பெற்றவராய் அப்படியே திரும்பிவிட்டார்.


அதில் சங்கமித்ராவிற்கு முகத்தில் அறைந்ததைப் போலாகிட, அவள் முகம் கன்றி சிவந்துபோனது.


இவையாவும் தவறாமல் வளவன் பார்வையில் பட்டுவிட்டதுதான் தெய்வாவின் கெட்டநேரமானது.


தன் கணவர் மற்றும் மூத்த மகனுக்குக் கொடுத்த தெய்வா வளவனிடம் தட்டை நீட்டி, “வளவா அம்மா ஒனக்கு புடிச்ச கடலமிட்டா பண்ணிருக்கேம்யா” என்று கூற,


சற்றும் யோசிக்காது, “எனக்கு வேணாம்மா” என்றிருந்தான்.


“ஏன்டாப்பா? ஒனக்குத்தேம் ரொம்ப பிடிக்குமே” என்று அவர் கூற,


முகம் கன்றி சிவக்க இதழ் கடித்து அமர்ந்திருக்கும் தன்னவளை ஒரு பார்வைப் பார்த்துக் கொண்டு, “வேணாம்மா” என்றான்.


“சங்கு..” என்று பரிவாய் அவள் தோள் தொட்டு, “நாங்கேக்கேம் இரு” என்று திரும்பிய கார்த்திகாவின் கரத்தை இறுகப் பற்றிக் கொண்டு, ‘வேண்டாம்’ என இடவலமாய் தலையசைத்தாள். சாதாரண உணவு விடயத்திற்காக சண்டையிடுவதா? என்று எண்ணி சங்கமித்ராவிற்கு அசிங்கமாக இருக்க, அவள் நிலையைப் புரிந்துகொண்ட கார்த்திகாவிற்கும் பாவமாக இருந்தது.


மீண்டும் ஏதோ கூறவந்த தெய்வா, மகன் பார்வை போகும் திசையையும், அங்கே மருமகள் அமர்ந்திருக்கும் நிலையையும் கண்டு ஓரளவு புரிந்துகொண்டார்.


போனால் போகட்டும் என்ற வகையில் அவர் அவளிடம் சென்று தட்டை நீட்ட, அவளுக்கு அப்படியொரு அழுகை முட்டிக் கொண்டு வந்தது.


பெயருக்கு எடுத்துக்கொள்ள கைகள் உயர்த்தியவள், அவர் உதாசீனத்திற்கு பின் எடுக்க மனம் வராது இறக்கிக் கொண்டாள். உள்ளுணர்வு உந்த, வளவனை அவள் திரும்பிப் பார்க்க, அவளையே வைத்த விழி எடுக்காது பார்த்துக் கொண்டிருந்தான்.


எச்சிலைக் கூட்டி விழுங்கியவள், “வேணாம் அத்தை” என்று கூறிட,


பெயருக்குக்கூட இன்னொரு முறை கேட்காது, நகர்ந்தவர் மகனைக் கண்டார்.


“வளவா உள்ள வெக்கேம் நாளைக்கு எடுத்துக்கயா” என்று தெய்வா கூற,


“எம்பொண்டாட்டிக்கு இல்லனு ஆனதுலருந்து எனக்கும் வேணாம்மா” என்று அமைதியான குரலில் மிக அழுத்தமாய் கூறினான்.


மீண்டும் சண்டையா? என்ற ஆயாச நிலையில் தன்னிலை அடக்க இயலாது சங்கமித்ரா சட்டென எழுந்து மேலே சென்றுவிட, சுயம்புலிங்கமும் விக்ரமும் புரியாத அதிர்வோடு சூழலை நோக்கினர்.


தெய்வாவுக்கு மகனின் கூற்றில் உள்ளம் பதற, அப்போதுதான் தனது அற்ப செயலின் தவறை உணர்ந்தார்.


“இ..இல்லப்பா..” என்று அவர் தடுமாற, 


‘போதும்’ என்பதாய் கைகாட்டிவிட்டு “ரொம்ப வெசனப்படுத்துறீயம்மா என்னைய” என்றுவிட்டு மேலே சென்றுவிட்டான்.


விக்ரமும் சுயம்புலிங்கமும், கார்த்திகாவை நோக்க, அவள் மாமியாருக்கு பயந்து விழித்தாள்.


“ஆனாலும் ஒங்களுக்கு இப்புடியொரு கொணம் ஆவுதில்லம்மா. எப்போருந்து அவிய வைத்துக்கு வஞ்சகம் பாக்க ஆரமிச்சீய?” என்று தனலட்சுமி சத்தமிட,


“தனம் என்னாச்சு?” என்று விக்ரம் கேட்டான்.


மாலை நடந்த சண்டையையும் தற்போது அன்னை செய்த காரியத்தையும் கூறியவள் தான் ஆசையாய் எடுத்த மிட்டாயை மீண்டும் தட்டில் வைத்துவிட்டுச் செல்ல, சுயம்புலிங்கம் மனைவியை அப்பட்டமான அதிருப்தியோடு ஏறிட்டார்.


“இல்லிங்க அந்த புள்ளதான்” என்று தெய்வா ஏதோ பேசவர, அருகே கிடந்த சொம்பை தூக்கி எறிந்துவிட்டு அறைக்குள் சென்றார்.


கூடத்தில் உறங்கிக் கொண்டிருந்த ஒளிசுடர் அச்சத்த்தில் விழித்துக் கொண்டு அழ, கார்த்திகா மகளைத் தூக்கிக் கொண்டு அறைக்கு சென்றுவிட்டாள்.


அன்னையைத் தீயாய் முறைத்துவிட்டு விக்ரமனும் செல்ல, “இம்புட்டு அகம் ஆவாதும்மா” என்றுவிட்டு தனமும் சென்றாள்.


தான் செய்தது தவறு என்று புரிந்திருந்தபோதும்கூட அனைவரும் தன்னை குற்றவாளியைப்போல் நிறுத்திவிட்டுச் சென்ற ஆத்திரம் சங்கமித்ராவின் புறமே சென்றது அவருக்கு. சிலரை இன்னதென்று காரணமே இல்லாமல் பிடிக்காது போவதும் நிகழ்வில் நடப்பதுதான் என்பதற்கு சான்றாய் விளங்கியவர், அவளால் தான் அனைவருமே மிட்டாயை உண்ணாது சென்றுவிட்டதாய் அப்போதும் அவளையே மனதோடு குறைபடித்துக் கொண்டு சென்றார்.


அங்கு அறையில் கட்டிலில் தலை வரை போர்த்திக் கொண்டு படுத்துக்கிடந்த சங்கமித்ராவை வலுவான ஒரு கரம் அணைத்துக் கொண்டது. போர்வையை விலக்கிவிட்டு அவனை இறுக அணைத்துக் கொண்டவள் வெதும்பி அழ தானும் அவளை இறுக அணைத்துக் கொண்டான்.


“நா..நான்..” என்று ஏதோ பேசவந்தவள் இதழில் விரல் வைத்தவன், “ஓம்பக்கம் எந்த தப்புமிருக்காதுனு எனக்குத் தெரியும். நீயு ஒன்னியும் எனக்கு வெளக்க வேணாம்” என்றான்.


அதில் இன்னும் கண்ணீர் வரப்பெற்றவள் மனம் வெகுவாக சோர்ந்து போனது.


எப்போதும் அவன் செய்யும் செயலில் இன்று தான் இறங்கினாள்.


அவன் கன்னங்களைத் தன் கரங்களில் பொத்திக்கொண்டவள் அவன் இதழில் புதைய, கண்களில் கண்ணீர் வழிய அவள் முத்தம் ஏற்று நின்றான்.


நிமிடங்கள் நீள, அவளிடமிருந்து விலகியவன் அவளைக் கரம் பற்றித் தூக்கி, அழைத்துக் கொண்டு கீழே வர, “என்ன பண்றீங்க?” என்று பதறினாள்.


“அவிய என்ன பேசினாலும் நான் ஒன்னுங்கேக்க கூடாதுதான ஒனக்கு?” எனக் கோபம் கொண்டவன், “வெளிய போவம் வா” என்று கூறி அவளோட வண்டியில் புறப்பட்டு இதோ இங்கு வந்துவிட்டான்.


ஏரியின் ஒளி பிரதிபலிப்புகளையே பார்த்து நின்றவள் பின்னே வந்து நின்றவன், அவள் தோளில் கரம் வைக்க, தன் கண்ணீரை அழுந்தத் துடைத்துக் கொண்டு திரும்பினாள்.


அவளைப் பாவமாய் பார்த்தவன், “சாரிடி” என்க,


“என்னை சங்..” என்று ஏதோ பேச வந்தவள் வாய் பொத்தி, “என்னைய நீ சங்கடப்படுத்தாதடி. மனசு கெடந்து தவிக்கி. ஒவ்வொரு மொறயும் அம்மா என்னமாது பேச நீ அழ, நான் ஒன்னய சமாதானம் செய்யனு போவுது. என்னால அவியள ஒன்னும் பேச முடியுதில்லையில?” என்று ஆற்றாமையாய் கேட்டான்.


அவனைக் கண்களில் நீருடன் பார்த்தவள், “அப்படிலாம் இல்லைங்க” என்று கூற,


“எல்லாத்தையும் நீயு தாங்கிக்குறதுதேம் புள்ள இன்னும் வலிக்கி. வேணுமின்னா என்னைய நாலு அறகூட அறைஞ்சுபுடுடி. எம்மனசாது ஆறுமின்ன?” என்று கேட்டான்.


“என்னங்க பேசுறீங்க?” என்று வருத்தமாய் அவள் கேட்க,


“எம்புட்டுடி தாங்குவ? என்னத்துக்குத் தாங்கனும்?” என்று அவன் முடிக்கும் முன், “நம்ம காதலுக்காக” என்றாள்.


அவன் அவளை விழிநீர் கோர்த்த விழிகளோடு நோக்க, 


“என்னத்துக்குத் தாங்கனும்னா? நம்ம காதலுக்காகத்தான். எதுக்குத் தாங்கனும்னா? நம்ம காதலுக்காகத்தான். காதல்னா கல்யாணத்துலயே வெற்றி பெற்றிடுமா? அதுக்கு அப்றம் வாழ்ற வாழ்க்கைலதான இருக்கு? கஷ்டமாதான் இருக்கு. இல்லைனு சொல்றேன்னா? வலிக்கத்தான் செய்யுது. உங்கக்கிட்ட மறைக்குறேனா? அழுவேந்தாங்க. எதிர்த்துப்பேச வரவுமில்லை தோனவுமில்லை. சுத்தப் பைத்தியக்காரத்தனமா கூட இருந்துட்டு போவட்டும். எனக்குக் கவலையில்லை. நான் உங்கள விரும்புறேன். நான் உங்கள சந்தோஷமா தான வச்சுக்குறேன். அதேபோல நீங்களும் என்னை சந்தோஷமாதான் வச்சுக்குறீங்க. மத்தவங்க கஷ்டப்படுத்துறதுல நீங்க பங்கு எடுத்துக்காதீங்கங்க” என்று அவன் விழிகளில் தன் விழிகளால் ஊடுருவியபடி கூறினாள்.


“ஏன்டி..” என்று அவன் ஏதோ பேச விளைய, அவன் வாய் பொத்தியவள், இடவலமாய் தலையசைத்து, “உங்களை, என்னை சமாதானம் செய்யத்தான் கூட்டிட்டு வந்தது. நான் உங்கள சமாதானம் செய்றதுக்கில்ல. அவங்க உங்க அம்மாதான் அப்படிங்குறதுக்காக அவங்க பேசுறதுக்கெல்லாம் நீங்க பொருப்பாயிட முடியாது. அவங்க சாப்டா உங்க பசி தீருமா? ஆகாதுதான? அதுபோல அவங்க பேசினாலும் நீங்க மன்னிப்பு வேண்ட வேண்டிய அவசியமில்லை” என்றாள்.


அவளையே வருத்தமாய் பார்த்திருந்தவனுக்கும் அவள் கூற்றின் உண்மை புரியத்தான் செய்தது. இருந்தும் தன் தாயே தன் மனதிற்கினையவளை வார்த்தைகளால் வதம் செய்கின்றாரே என்ற வேதனை அவனை வருத்தியது.


“என்ன முழிக்குறீங்க? சமாதானம் செய்ங்க” என்று அவள் கூற,


சுற்றிமுற்றி அந்த ஆள் அரவமற்ற சாலையைப் பார்த்துக் கொண்டு அவள் கன்னங்களைப் பற்றினான்.


சட்டென அதைத் தட்டிவிட்டு அவனை முறைத்தவள், “இது நம்ம பெட்ரூமில்ல. சமாதானம் செய்ய வேற வழியே தெரியாதாக்கும்?” என்க,


லேசாய் சிரித்தவன், “மசாலா டீ வாங்கித்தரவா?” என்றான்.


அவர்களது நான்கு மாத கல்யாண வாழ்வில் இது நான்காம் இரவு பயணம். அதில் வாடிக்கையான ஒன்று ‘மசால் டீ’.


அவன் கேட்டதும் திருமணத்திற்கு முன்பான பயணத்தின் நினைவுகள் தோன்றி அவள் இதழ்களைப் பூவாய் மலரச் செய்ய, அவனது சின்ன புன்னகை, பெரிய புன்னகையானது.


அவள் மூக்கைப் பிடித்து ஆட்டியவன் அவளோடு மீண்டும் இருசக்கர வாகனத்தில் ஏறி, அவர்கள் எப்போதும் வாடிக்கையாய் செல்லும் தேநீர் கடைக்குச் சென்றான்.


அவர்களைப் பார்த்ததுமே அவரே மசாலா தேநீர் தயாரித்துக் கொடுக்க, அதை வாங்கி இருவரும் முதல் பாதியை அமைதியாகவும், இரண்டாம் பாதியை அரட்டைகளோடும் குடித்து முடித்தனர்.


“வீட்டுக்குப் போலாமா?” என்று வளவன் கேட்க,


“ஏன் சாருக்கு வேற ஏதும் ப்ளான் இருக்கா?” என்றாள்.


“ப்ளான்லாம் எதுவும் இல்ல. வீட்டுக்கு போயிட்டு வேணுமின்னா என்னமாது ப்ளான் செய்யலாம்” என்று நக்கலாய் அவன் கூற,


“கொழுப்பு கொழுப்பு” என்று அவன் முடியைப் பிடித்திழுத்தாள்.


“ஆ..” என்றபடி அவள் பின்னலைப் பிடித்து இழுத்தவன், “பாருடி.. நீ இழுத்து இழுத்து வெளையாடுத. என்னிக்காது மொட்டைய போட்டுகிட்டு வரப்போறேம்” என்று கூற,


“அதுக்கென்ன? முடி வளராமயா போகப் போகுது? அதுவரை வெயிட் பண்ணி வளர்ந்ததும் இழுப்பேன்” என்றபடி அவன் கையில் ரெண்டு போட்டுத் தன் கூந்தலை விடுவித்துக் கொண்டாள்.


Comments

Popular posts from this blog

திருப்பம் -01

திருப்பம்-03

திருப்பம் -02