திருப்பம்-56
திருப்பம்-56
அழகான செல்ல சண்டைகளுடன் இருவரும் வீட்டை அடைய, “மணி ரெண்டாகப்போகுது” என்று கிசுகிசுப்பான குரலில் கூறினாள்.
“அதுக்கென்ன?” என்று கேட்டபடி வண்டி சாவியை எடுத்துக் கொண்டு அவன் இறங்க,
“கதவைத் திறக்குற சத்தம் கேட்டு யாரும் முழிச்சு வந்துட்டா?” என்று அதே குரலில் கேட்டாள்.
“வந்தா வரட்டும். என்ன சொல்லிடப்போறாவ?” என்று அவன் கேட்க,
“ஸ்ஸ்.. கத்தி நீங்களே கூப்பிட்டுடுவீங்க போல” என்றாள்.
அதில் மெல்ல சிரித்துக் கொண்டவன் அவளோடு உள்ளே செல்ல, அவள் பயந்ததைப் போலவே தெய்வநாயகி கூடத்திற்கு வந்தார்.
அவர்கள் சென்றதையெல்லாம் அவர் கண்டிருக்கவில்லை. தற்செயலாக நீர் அருந்தவேண்டியே அவர் விழித்து வந்தார். சரியாக அவர் விளக்கை போடும் நேரம் இவர்களும் வந்துவிட, “ஏன்டா அத்த ராத்திரீல எங்கிருந்து வாரிய?” என்று கேட்டார்.
அவர் அதட்டலான குரலில் பயந்த சங்கமித்ரா அணிச்சையாய் வளவன் பின்னே பதுங்க, அவள் கரம் பற்றித் தன் அருகே இழுத்துக் கொண்டவன், “காத்தாட போயிட்டு வாரம்” என்றான்.
“காத்தாடப்போவ நல்ல நேரம்பாத்தீய. அதும் மார்கழி மாசம். ராப்பொழுத்துக்குத்தேம் போவனுமா?” என்று கோபமாய் அவர் கேட்க,
“தூக்கம் வரல எனக்கு. அதேம் அவோளயும் கூட்டிகிட்டு போனேம்” என்றான்.
அவர்களை நம்பாத பார்வை பார்த்தவர், “போயி படுங்க” என்க,
“எதாவது கேக்கனும்மின்னாலோ, வையனுமின்னாலோ எங்கிட்டயே கேட்டுபுடுங்க. நாள நாம்போன பொறவாட்டிக்கு அவட்ட ஒடக்கிழுக்காதீய ம்மா” என்றுவிட்டான்.
அவன் சட்டையை பற்றிக் கொண்டு, “ஏங்க?” என்று மெல்லிய குரலில் அவள் கேட்க,
அவளைத் தீயாய் முறைத்துப் பார்த்தவன், “ஆனா நீங்க இம்புட்டு வஞ்சுங்கூட உங்களுக்குதேம்மா ஒங்க மருமவ கொடிபிடிக்கா” என்றுகூறி அவளையும் இழுத்துக் கொண்டு மேலே சென்றான்.
அவன் கூற்றில் சிலநொடிகள் அப்படியே நின்றுவிட்டவர், ஒரு பெருமூச்சு விட்டு நகர்ந்தார்.
அன்றைய இரவு பொழுது சண்டையின் பரபரப்புகளோடே முடிவடைந்திருக்க, மறுநாள் காலையும் அழகாய் விடிந்தது.
சூரியன் சுள்ளென்று முகத்தில் அடித்தும் கூட, இரவு தாமதமாய் வந்து உறங்கியதால் கணவன் மனைவி இருவருக்கும் எழ மனமேயில்லை.
ஒருவரை ஒருவர் அணைத்துக் கொண்டு ஆழ்ந்த நித்திரையிலேயே இருந்தனர். எட்டு மணியான நிலையில் கீழே அனைவரும் காலை உணவுக்குக் கூடிவிட, கார்த்திகா, சங்கமித்ராவின் வருகையை எதிர்நோக்கிக் காத்திருந்தாள்.
“என்னத்தடி எட்டி எட்டிப் பாக்கவ?” என்று தெய்வா கேட்க,
சட்டெனத் திரும்பிய கார்த்திகா, மெல்ல, “சங்கக் காணும்” என்றாள்.
“அவோலாம் ஆடி அசஞ்சுதேம் வருவாவ. ராவுக்கு ஊரசுத்திபோயிட்டு படுத்திருக்காவ. வந்தவியளுக்கு எலைய போடு போ” என்று தெய்வா கூற,
'ஆத்தீ.. நைட் ரைட் போயி அத்தைட்ட மாட்டிக்கிட்டாங்க போலயே’ என்று நினைத்தவளாய் சென்றாள்.
இரவு பயணமெல்லாம் கார்த்திகாவுமே விக்ரமனுடன் சிலமுறை சென்றதுண்டு. ஆனால் அதெல்லாம் தெய்வா காதிற்கு வந்துவிட்டால் அவர் மகனைத் தான் கெடுப்பதாய் குற்றப்பத்திரிக்கை வாசித்திடுவார் என்றே கமுக்கமாய் இருப்பாள். மனம் விட்டுப் பேசுகையில் பெண்கள் இருவரும் இப்பழக்கத்தைப் பற்றிப் பகிர்ந்திருக்க, கார்த்திகாவிற்கும் இவர்களது இரவுப்பயணம் பற்றித் தெரிய வந்திருந்தது.
காலை உணவுக்கு வந்தவர்களை மட்டும் அமர்த்தி அவள் உணவிட, சிலநிமிடங்களில் சங்கமித்ரிவும் திருமாவளவனும் பரபரப்பாய் கீழே வந்தனர்.
“ஏங்க வண்டி சாவி எடுத்தாச்சா?” என்று தனது கைப்பையை ஆராய்ந்தபடியே அவள் கேட்க,
“எடுத்தாச்சு மித்ரா” என்று பதில் கூறினான்.
“என்னய்யா என்ன பரபரப்பாருக்காப்லருக்து?” என்று சுயம்புலிங்கம் கேட்க,
“எங்க ஊர சுத்தனு கேளுங்க?” என்று தெய்வா எடுத்துக் கொடுப்பதைப் போல் கூறினார்.
அத்தோ பரிதாபம் அவர் பேச்சைக் கேட்கத்தான் அங்கு ஆளில்லை.
“அக்காக்கு வலி வந்துடுச்சு மாமா. ஆஸ்பிடல்ல அட்மிட் பண்ணிட்டாங்க” என்று சங்கமித்ரா உற்சாகமாய் கூற, அந்த உற்சாகம் அனைவரையும் தொற்றிக் கொண்டது.
“அடடே.. ரொம்ப சந்தோஷம்மா” என்று கூறியபடி எழுந்த சுயம்புலிங்கம் பூஜையறை சென்று இறைவனை வணங்கிவிட்டு, வீபூதி கொண்டு வந்து ஒரு சிறு தாளில் மடித்துக் கொடுத்தார்.
அதை இன்முகத்துடன் வாங்கிக் கொண்டவள், “நாங்க இப்பவே கிளம்புறோம் மாமா. குழந்தை பிறந்து வார்டுக்கெல்லாம் மாத்தின பிறகு சொல்றோம்” என்று கூற,
“சரித்தா. நீங்க எல்லாம் சுமுகமா முடிஞ்ச பொறவாட்டி சொல்லுவ. நாங்க வந்து பாக்கோம். ஆஸ்பத்ரில அம்புட்டு ஆளுவள விடுவாவளானு தெரியில. அதையும் கேட்டுக்க. இல்லனா வீட்டுக்கு வந்ததும் எல்லாமா போவோம்” என்று சுயம்புலிங்கம் கூறினார்.
“நானும் அதான் யோசிச்சேன் ஐயா” என்று வளவன் கூற,
“சரிப்பு நீங்கக் கெளம்புங்க” என்று கூறினார்.
“அக்கா, அத்தான், தனம், அத்தை.. போயிட்டு வரோம்” என்று அனைவரிடமும் அவள் விடைபெற்று உற்சாகமாய் செல்ல,
புன்னகையாய் அவளுக்குக் கையசைத்த கார்த்திகா, “அவ முகத்த பாரு தனம். எம்புட்டு துள்ளுது. கண்ணு படாதிருக்கனும் இந்த புள்ளைக்கு. சீக்கிரம் அடுத்து இவ உண்டாயி வரனும்” என்று கூறினாள்.
சங்கமித்ராவும் வளவனும் மருத்துவமனையை அடைய, விரைந்து உள்ளே சென்றாள்.
அங்கு சச்சிதானந்தம் தாட்சாயணி மற்றும் அவிநாஷின் பெற்றோர் பாமா மற்றும் சிவனேசன் இருக்க, பிரசவ அறையிலிருந்து பதட்டமான முகத்துடன் வெளியே வந்தமர்ந்தான் அவிநாஷ்.
வேகமாய் அவன் அருகே சென்ற மித்ரா, “அத்தான்..” என்க,
“பாப்பா” என்று அவள் கரம் பற்றிக் கொண்டு அவளைக் கண்டான்.
தானும் அங்கே வந்த வளவன், அவிநாஷின் மறுபக்கம் வந்து நின்று, “அண்ணே.. மைணி எப்புடியிருக்காவ? நார்மல் தான?” என்று கேட்க,
“நார்மலே பண்ணிடலாம் சொல்றாங்கடா. அ..ஆனா அவ ரொம்ப பயப்படுறா” என்று கலக்கமாய் கூறினான்.
“மொத பிரசவம், அதும் மூனு வருஷம் தவங்கெடந்தாச்சுல? அதான் பயப்படுறாடா. நீ பயப்படாம இரு” என்று பாமா ஆறுதல் கூற,
“ஒன்னுமில்ல மாப்பிள்ளை. நீங்க பதட்டபடாம இருங்க” என்று தாட்சாயணி கூறினார்.
“அத்தான்.. யுவர் பேபி கேர்ள் இஸ் ஆன் தீ வே” என்று மித்ரா கூற,
அவன் உடல் சிலிர்த்து அடங்கியது.
அவனைப் பற்றியிருந்த இருவருக்கும் அச்சிலிர்ப்பை உணர இயல, ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்துக் கொண்டனர்.
“அண்ணே.. ஒன்னுமில்லண்ணே. இப்பதேம் நீங்க மைணிகூட இருக்கனும்” என்று வளவன் கூற,
“அய்யோ எனக்கு அதுதான்டா இன்னும் பயமாருக்கு. அவ அந்தக் கத்துக் கத்துறா பாரு. சத்தியமா கொலை நடுங்குது” என்று கூறினான்.
அவன் கரத்தைத் தட்டிக்கொடுத்த சங்கமித்ரா “ஏழு மாசத்துலருந்தே அக்கா பயப்பட ஆரம்பிச்சுட்டா. இந்தா பெறக்கப்போகுது குழந்தை. பயப்படாம இருப்பாளா அவ? இத்தனை நாள் அவகூட நீங்க இருந்ததைவிட இந்த நிமிஷம் தான் அவளுக்கு நீங்கத் தேவை அத்தான். ஒன்னும் பயப்படாதீங்க. உங்க லிட்டில் பேபிடால் வரப்போறா. நாளைக்கு நினைச்சுப் பார்க்கும்போதும், அவகிட்ட கதையா சொல்லும்போதும், இப்படிலாம் நடந்துச்சு, நான் இப்படிலாம் பயந்தேன்டா பாப்பானு சொல்ல உங்களுக்கும் கதை வேணும் தானே? பயமோ? தயக்கமோ? சந்தோஷமோ? எதுவாருந்தாலும் அதை மனசார உணர்ந்து அனுபவிச்சுட்டு வாங்கத்தான். இதெல்லாம் நீங்க ரீகைன் பண்ண முடியாத தருணங்கள்” என்று கூற,
எப்போதும் தனக்கு சேயாய் தெரியும் பெண்ணவள் இன்று தாயாய் அவன் கண்களுக்குத் தெரிந்தாள்.
கண்கள் லேசாய் கலங்க, அவள் கன்னம் தட்டிக் கொடுத்தவன், ஒரு பெருமூச்சை இழுத்துவிட்டு உள்ளே செல்ல, சிலநிமிட போராட்டங்களுக்குப் பின், கையில் ஒரு பெண் குழந்தையோடு வெளியே வந்தான்.
“ஐ.. என் அத்தான் அப்பாவாகிட்டாரு” என்று சங்கமித்ரா உற்சாகமாய் குதிக்க,
“வாழ்த்துக்கள் அண்ணே. மைணி எப்புடியிருக்காவ” என்று வளவன் கேட்டான்.
கைகளில் மெல்லிய நடக்கமும், கண்களில் நீர்மணிகளின் ஊற்றும், இதழில் நடுநடுங்கும் புன்னகையுமென உணர்ச்சிக் குவியலில் இருந்தவன், “நல்லாருக்காடா” என்க,
“பிள்ளையா பொண்ணாடா?” என்று சிவனேசன் ஆர்வமாய் கேட்டார்.
“என் ராஜாத்திப்பா” என்று மனம் நெகிழக் கூறியவன், “பாப்பா” என்று சங்கமித்ராவை அருகே அழைத்தான்.
சங்கமித்ரா அவன் அருகே சென்று நிற்க, குழந்தையை அவளிடம் நீட்டினான்.
“அப்பாட்ட குடுங்கத்தான்” என்று அவள் கூற,
இடவலமாய் தலையசைத்து, “எம்மூத்தப்பொண்ணுதான் வாங்கனும்” என்று உளமாரக் கூறினான்.
அதில் சங்கமித்ராவின் கண்களும் கலங்கிவிட, தன்னவனைத் திரும்பிப் பார்த்தாள்.
அவர்களது பந்தத்தை ரசனை மிகுந்த விழிகளோடு ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்த வளவன், தலையசைத்து அவளை வாங்கிக்கொள்ளக் கூற, பொழியும் கண்ணீரை அழுந்தத் துடைத்துக் கொண்டு, குழந்தையைத் தன் கையில் ஏந்திக் கொண்டாள்.
அவள் பின்னோடே வந்து நின்ற வளவன், தானும் கரம் கொடுத்துக் குழந்தையைத் தாங்க, குழந்தையை அவள் பார்த்தபடியும், அவளையும் குழந்தையையும் சேர்த்து அவன் பார்த்தபடியும் நின்றிருக்கும் கோலத்தை அப்படியே புகைப்படமாய் எடுத்திருந்தார் சிவநேசன்.
அதில் புன்னகைத்துக் கொண்ட சங்கமித்ரா, “ஏ குட்டிப்பாப்பா.. நீ ரொம்ப லக்கி” எனக்கூறி அவிநாஷைப் பார்த்து, “தி பெஸ்ட் டாடி உனக்குக் கிடைச்சிருக்காங்க” என்று கூற,
அவிநாஷ் அவள் தலைகோதி மனமார புன்னகைத்தான்.
பெரியோர் குழந்தையை ஆளுக்கொருமுறை தூக்கி மகிழ்ந்துவிட்டுக் கொடுக்க, சில நிமிடங்களில் சங்கீதாவைப் பார்க்கும் அனுமதி கிடைத்தது.
உள்ளே சென்று அனைவரும் அவள் நலன்களை விசாரிக்க, “அப்பாவும் புள்ளையும் சேந்து பொண்ணு பொண்ணுனு சொல்லி பொண்ணே பிறக்க வச்சுட்டீங்கள்ல?” என்று சிரித்துக்கொண்டே, கோபம் போல் கேட்டாள்.
அதில் அவிநாஷுடன் ஹை-ஃபை கொடுத்துக் கொண்ட மித்ரா சிரிக்க, பெரியோரும் கலகலவென்று சிரித்தனர்.
மருத்துவர்களும் செவிலியர்களும், அத்தனை நபர்களுக்கு அனுமதியில்லையென புறப்படும்படிக் கூற,
அவிநாஷும், தாட்சாயணியும் மட்டும் இருப்பதாக முடிவாயினர்.
“வீட்டுக்கு மாத்திட்டு உங்களுக்கு தோதான பொறவு சொல்லுங்கண்ணே. அப்பா அம்மா எல்லாம் கூட்டிகிட்டு வாரேம்” என வளவன் கூற,
“சரிடா” என்று கூறினான்.
அங்கே உறங்கும் குழந்தையை தன்மேலிட்டுக் கொண்டு படுத்திருக்கும் சங்கீதா அருகே, உற்சாகமாய் பேசிக்கொண்டிருந்த சங்கமித்ராவை வளவன் நோக்க, அவளது முக பாவங்களும் உற்சாகமும், அவனுள் அவர்களது வாழ்வின் அத்தருணத்திற்கான கற்பனைகளை வளரச்செய்து, பூரிக்கச் செய்தது.
அவளது கற்பகாலங்களுக்கான கனவுகளோடு அவன் காத்திருக்க, விதி வேறு சில திட்டங்களோடு அவன் வாழ்வில் விளையாட அமைதியாய் காத்திருந்தது…
Comments
Post a Comment