திருப்பம்-57
திருப்பம்-57
அவ்வீடே பெரும் கலகலப்போடு காணப்பெற்றது. கூடியிருந்ததென்னவோ சொற்ப மனிதர்கள் தான் என்றாலும், மகிழ்விற்கும் மனநிறைவிற்கும் பஞ்சமிருக்கவில்லை.
“பச்ச உடம்புக்காரி அவ. அவளுக்கு எதாது குடுத்தீங்களா சம்மந்தி?” என்று தெய்வநாயகி தாட்சாயணியிடம் கேட்க,
சமையலறைக்குள் நீர் போத்தல் எடுக்க நுழைந்த சங்கமித்ரா மனம் குளிர்ந்து போனாள்.
முந்தைய நாள் கூட, வீட்டில் அவர்களுக்குள் மனஸ்தாபம் ஒன்று உருவாகி மறைந்திருந்தது. ஆனால் வளவன் எப்போதும் போல் அமைதியாக இல்லாது சற்றே கோபமாய், ‘சும்மா அவள என்னமாது சொன்னீயனா சும்மாருக்க மாட்டேம்மா' என்று ஆரம்பித்து மனைவிக்கு ஆதரவாய் பேசி சண்டையிட்டிருந்தான்.
அதற்கும் கூட அவள் எதிர்ப்பார்த்ததைப் போல், ‘எம்மகன என்டருந்து பிரிச்சுடுவா போலயே’ என்று அழுதுவிட்டே ஓய்ந்தார்.
‘பேசி சண்டைபோட்டு நியாயம் வாங்க முடியாம இல்லைங்க. ஆனா என்ன பேசினாலும் அடுத்து ஒரு காரணம் என்னைக் குத்தம் சொல்ல வச்சிருப்பாங்க. ஒரு விஷயத்துக்கு சண்டை போட்டு ஒன்பது பிரச்சினையை இழுக்க விரும்பாமதான் அமைதியாருக்கேன்' என்று கணவனிடம் அமைதியாய் எடுத்துக்கூறியவளை ஆயாசமாய் பார்த்துவிட்டு நகர்ந்தான்.
தன்னிடம் எப்படி நடந்துகொண்டாலும் தெய்வநாயகி, அக்குடும்பத்தின் மூத்தப் பெண்மணியாய் முன்னிருந்து செய்ய வேண்டியவற்றை, அது தன்வீட்டாருக்கானதாக இருந்தாலும் கூட முகம் சுளிக்காமல் செய்வதில் அவளுக்கு மகிழ்ச்சியே.
அவள் அன்னையிடம், ஒட்டி உறவாடா விட்டாலும், புன்னகையாய் பேசுவது, நலம் விசாரிப்பதென்று நல்விதமாகவே நடந்துகொள்வார். அதேபோல் சங்கீதாவிடமும் நல்லவிதமாக என்பதையும் விட ஒரு அக்கறை இருக்கும். காரணம் வேறொன்றுமில்லை. மகள் கருத்தரிக்காது பட்ட கஷ்டங்களைக் கண்கூடாக பார்த்திருந்தமையால், இரு வருடம் கஷ்டங்கள் பல பட்டு கரு தரித்து பிள்ளையும் பெற்றிருக்கின்றாள் என்ற பட்சாதாபத்தால் உருவான அக்கறையே அது.
அவர் அக்கறையில் புன்னகைத்துக் கொண்ட சங்கமித்ரா, “இப்பதான் குடுத்துட்டு வந்தேன் அத்தை” என்று கூற,
“ம்ம்” என்று தலையசைத்துக் கொண்டார்.
“சம்மந்தி இந்தாங்க பூ. நீங்களும் வச்சுகிட்டு சங்குக்கும் வச்சுடுங்க” என்று இருவருக்குமான பூவை கத்தரித்துக் கொடுத்த தாட்சாயணி அடுத்த வேலையைக் கவனிக்க, அவர் என்ன செய்யப் போகின்றாரோ என்று ஆர்வமாய் பார்த்தாள்.
தனக்கான பூவை வைத்துக் கொண்டு அவளுடையதை அவர் நீட்ட, சிறு சிரிப்போடு வாங்கி வைத்துக் கொண்டாள். அவள் புன்னகையில் விசித்திரமான உணர்வை உணர்த்தவரும் வெளியே சென்றுவிட, அங்குவந்த கார்த்திகா, ‘’என்னட்டி நடக்குதிங்க?” என்று அவள் தோளிடித்தபடி கேட்டாள்.
“நம்ம மாமியாவ கரெக்ட் பண்ண ஒரு ஐடியா குடுக்குறதுதான?” என்று சங்கமித்ரா கூற,
“அடியேய்” என்று வாய்விட்டு சிரித்தவள், “எங்கொழுந்தர கரெக்ட் பண்ண ஐடியா கேட்டாலும் தகும். மாமியாக்கு போயி கேக்குதியே” என்று கூறி மேலும் சிரித்தாள்.
“உங்கக் கொழுந்தர புதுசா வேற கரெக்ட் பண்ணனுமாக்கும்?” என்று அவள் கேட்கும் நேரம் சரியாய் வளவன் உள் நுழைந்திட,
“இந்தா சரீயா என்ட்ரி தராப்புடி” என்றவள், “என்ன கொழுந்தரே.. சங்கு ஒங்கள கரெக்ட் பண்ணிடுச்சாம்.. எப்புடி பண்ணிச்சுனு சொல்லத்தான?” என்று கேட்டாள்.
அவன் வரவை எதிர்பாராது கூறிய சங்கமித்ரா, அவனைக் கண்டு திருதிருவென விழிக்க,
அவளை நக்கலாய் பார்த்தவன், “அவதான? ரொம்ப நல்லா கரெக்ட் பண்ணிப்டா மைணி” என்று நக்கல் போல் கூறினான்.
“ப்ச்.. வளவளனு பேசாம எல்லாரும் போயி வேலையப் பாருங்க. நாம்போய் எம்புள்ளைய ரெடி பண்றேன்” என்றவள் நாசூக்காய் அவ்விடம் விட்டு நகர முற்பட, அவள் பின்னலைப் பிடித்து நிறுத்தித் தன்னோடு இழுத்திருந்தான்.
பழக்கதோஷத்தில், “ஸ்ஸ் ஆ..” என்றவள் சட்டென அவன் புதர் முடியைப் பிடித்துவிட, “அடிப்பாவி” என்று சிரித்தபடி கார்த்திகா தன் வாயில் கைவைத்துக் கொண்டு வேடிக்கைப் பார்த்தாள்.
“மைணி.. எப்புடி கரெக்ட் பண்ணானு கேட்டீயத்தான? இந்தா இப்புடித்தேம்” என்று அவளது கோபம் கொதிக்கும் விழிகளை ரசனையோடு பார்த்தபடி அவன் கூறிய பின்புதான் அவ்விடமே அவளுக்கு உரைத்தது.
சட்டென அவன் தலையிலிருந்து கரம் எடுத்தவள் தன் அன்னையோ மாமியாரோ உள்ளனரா என்று சுற்றிமுற்றிப் பார்த்துக் கொண்டு, அவர்கள் இல்லையென்று புரியவும் பெருமூச்சு விட்டுக்கொள்ள, கார்த்திகாவும் வளவனும் கலகலவென்று சிரித்தனர்.
“என்ன அண்ணியும் கொழுந்தரும் சேந்து என்னை வச்சு செய்யப் ப்ளான் போட்டுட்டீங்களா?” என்று கோபம் போல் சங்கமித்ரா கேட்க,
“ப்ளான் வேற தனியா போடனுமா உன்னய செய்ய?” என்று கேட்டு சிரித்தபடி தன் அண்ணியுடன் ‘ஹை-ஃபை’ தட்டிக் கொண்டான்.
“அக்கா யூ டூ?” என்று ஆச்சரியம் போல் பார்த்தவள், “உங்களுக்கு அப்றம் இருக்கு” என்றபடி தன் அக்காவின் அறைக்குச் சென்றாள்.
சங்கமித்ரா கதவைத் தட்ட, அவிநாஷ் வந்து திறந்துவிட்டான்.
அவன் கையில் அவர்களது பத்து நாள் பெண் குழந்தை மிக சொகுசாய் உறங்கிக் கொண்டிருந்தது.
“பாப்புமா முழிக்கலையா?” என்று கேட்டபடி உள்ளே வந்தவள், தயார் நிலையிலிருக்கும் அக்காவைப் பார்த்து, “அம்சமா இருக்கடி சங்கி” என்க,
சற்றுமுன் அவிநாஷ் இதே வரியை வேறு விதங்களில் கூறியதை எண்ணி நாணப்பூப் பூக்க புன்னகைத்துக் கொண்டாள்.
“பாப்பாவை ரெடி பண்ண வேணாமா அத்தான்?” என்று சங்கமித்ரா கேட்க,
“பண்ணனும்டா. அந்தோ அதுல துணி இருக்கு. நீங்க ரெடி பண்ணிடுங்க. நான் போய் வேட்டி மாத்திட்டு வந்துடுறேன்” என்றவன் மெல்ல, பாதுகாப்பாய் குழந்தையைக் கட்டிலில் கிடத்தினான்.
அதை ரசனையோடு பார்த்த சங்கமித்ரா அவன் சென்றதும், “அத்தான் பாப்பாவ புடிச்சுக்குறதே ரொம்ப அழகாருக்குல சங்கி?” என்க,
“நம்ம அம்மா சொல்லுவாங்க நினைவிருக்கா? அம்மாவும் பாட்டியும் நம்மல ரொம்ப ஈசியா ஹான்டில் பண்ணுவாங்க, ஆனா அப்பா தூக்கி வைக்கும்போதுலாம் பயத்தோடு எக்ஸ்ட்ரா பாதுகாப்பா செய்வாங்க, பார்க்க ரொம்ப அழகாருக்கும்னு. இவர் பிள்ளையத் தூக்கும்போதுலாம் எனக்கு அதுதான் நினைவு வரும்” என்றபடி உறங்கும் குழந்தையின் கன்னம் வருடினாள்.
“தூங்குற பிள்ளைய ரசிக்காத சங்கி. கண்ணு பட்டுடப்போகுது” என்று குழந்தை கன்னம் வழித்து திருஷ்டி எடுத்த சங்கமித்ரா சிரிக்க,
“சரிடியம்மா” என்றபடி குழந்தையின் துணிகளை எடுத்தாள்.
பல்லில்லா பொக்கை வாயை சற்று முன் பாலுண்ட நினைவோடே சப்புக் கொட்டும் குழந்தையின் அழகு, உறக்கத்தில் கொடுக்கும் சின்னச் சின்ன அசைவுகள், அருகே சென்று தூக்கம் பொழுது எழும் பால் மணம் என்று ஒவ்வொன்றையும் ரசித்து ரசித்து குழத்தைக்கானதை சங்கீதா செய்து கொண்டிருந்தாள்.
அவளுக்கு உதவிக் கொண்டிருந்த சங்கமித்ரா, அக்காவின் ரசனை மிகுந்த விழிகளையும், முக பாவத்தையும் ரசித்துக் கொண்டிருந்தாள்.
குழந்தையை இருவரும் தயார் செய்து முடிக்க, அவிநாஷும் தயாராகி வந்தான்.
“அத்தான் பாப்பாக்கு என்ன பெயர்? நீங்க சூஸ் பண்ணதா இல்ல சங்கி செலெக்ஷனா?” என்று சங்கமித்ரா ஆர்வமாய் கேட்க,
“ரெண்டு பேருமா சேர்ந்துதான் யோசிச்சோம்டா பாப்பா” என்றவன், ‘சொல்லவா?’ என்று அனுமதி வேண்டி தன்னவளைப் பார்த்தான்.
சின்ன சிரிப்போடு அவள் தலையசைக்க, “ஹ்ம்.. அங்கருந்து பர்மிஷன் கிரான்ட் ஆனாதான் எனக்கு சொல்லுவீங்களோ?” என்று செல்லச் சண்டை ஒன்றுக்கு பெண் ஆயத்தமானாள்.
“அப்படிலாம் இல்லடா பாப்பா” என்று சிரித்தவன்,
“நீயே கெஸ் பண்ணு. எங்க ரெண்டு பேரோட பெயரையும் மெர்ஜ் பண்ணிதான் பாப்பாக்கு வச்சிருக்கோம்” என்று கூற,
“உங்க பெயரா? சங்கீதா அவிநாஷ்.. சங்கி, அவி அத்தான்..” என்று சற்றே யோசித்தவள், “அத்தான்.. சங்கவியா?” என்றதும் அத்தம்பதியர் அவளை ஆச்சரியமாய் பார்த்தனர்.
அவர்களது ஆச்சரிய பாவத்திலேயே அவளது விடை சரியான விடையென்று புரிந்துகொண்டவள், “ஐ கரெக்டா.. சூப்பரா இருக்கு பெயர்” என்று உற்சாகமாய் கூற,
“உனக்கு புடிச்சுருக்காடா?” என்று கேட்டான்.
தன்னவன் தன் தங்கையின்மீது இத்தனைப் பாசத்தோடு இருப்பதில் எப்போதும் போல் சங்கீதா மனம் நெகிழ்ந்து புன்னகைக்க,
“ரொம்ப பிடிச்சிருக்கு அத்தான். சூப்பர் நேம்” என்று உற்சாகமாய் கூறினாள்.
இவர்கள் மூவரும் சிரித்து பேசிக் கொண்டிருக்க, கதவைத் தட்டிவிட்டு உள்ளே வந்த வளவன், “வேலையிருக்கு வெட்டியிருக்குனுட்டு வந்துட்டு என்னத்தடி வம்பளக்க?” என்று கேட்டான்.
“ஹலோ.. நாங்க குட்டிபாப்பாவை ரெடி பண்ணிட்டுதான் இருந்தோம்” என்று மித்ரா கூற,
அதில் சிரித்துக் கொண்டவன் குழந்தையைக் கண்டு, லாவகமாய் தூக்கிக் கொண்டான்.
“என்னங்க பட்டுனு ஈசியா தூக்கிட்டீங்க?” என்று சங்கமித்ரா ஆச்சரியமாய் கேட்க,
“அக்கம் பக்கத்து புள்ளைய நம்மூட்டு புள்ளையனு அம்புட்டு புள்ளையல வளத்துருக்கேம்டி. புள்ள தூக்கக்கூடவா பழகிருக்க மாட்டேம்?” என்று கூறினான்.
“அப்ப என் பாப்பாக்கு அவ பாப்பாவ பாத்துக்கக் கஷ்டமேயிருக்காதுனு சொல்லு” என்று அவிநாஷ் கூற,
தன்னவளைப் பார்த்தபடி, “ஆமா.. நானே பாத்துக்கேம். பெத்து மட்டும் தரச்சொல்லுவ” என்றான்.
'அச்சோ.. இவர் இருக்காரே’ என்று நாணம் கொண்ட சங்கமித்ரா, “எங்க போனாலும் எல்லாரும் என்னையே ஓட்டுறீங்க. லேட்டாச்சு புள்ளைய குடுங்க” என்று கைநீட்ட,
“அத்தே கூப்டாவ ஒன்னய. நீயு போ” என்று சிரித்தபடி கூறி அவளை அனுப்பினான்.
நேரமும் காலமும் பொன்போல் நகர, தம்பதியர் இருவரும் குழந்தையோடு கீழே வந்தனர்.
நெல் பரப்பி, குழந்தையின் பெயரை அதில் எழுதி, தொட்டிலில் போடப்பட்ட குழந்தையைத் தூக்கி, அவள் காதில், “சங்கவி சங்கவி சங்கவி” என்று பெற்றோர் மூன்று முறைக் கூற, அவர்களைத் தொடர்ந்து மற்றோரும் கூறினர்.
குழந்தையைத் தூக்கிக் கொண்ட சங்கமித்ரா, “சங்கவி பாப்பா” என்று அழைக்க,
குழந்தைக்காக வாங்கிவந்த தங்கச் சங்கிலியை வளவன் அணிவித்தான்.
அவனைத் தன் சொந்தத் தம்பியாகவே பாவிக்கும் அவிநாஷ் ‘எதுக்குடா இதெல்லாம்' என்ற சம்பிரதாயக் கேள்விகள் ஏதும் கேட்காது, சந்தோஷத்துடனே அவன் பரிசை ஏற்றுக் கொண்டான்.
வந்திருந்த உறவினர்கள் அனைவரும் உண்டு முடித்து புறப்படத் துவங்க, சிலர் “அடுத்து நீதான?” என்று வெளிப்படையாகவும், “மூனு நாலு மாசம் ஆச்சுல கல்யாணமாயி? நீ எப்ப நல்லசேதி சொல்லப்போற?” என்று குதர்க்கமாகவும் கேட்டுவிட்டேச் சென்றனர்.
சிலர் வேண்டாத அறிவுரைகள் வேறு கொடுத்துவிட்டுச் செல்ல, மருண்டு விழித்தவள் முகபாவம் கண்டு, அவளிடம் வந்த வளவன், “விசேஷத்துக்கு வந்தமா சந்தோஷமா கொண்டாடினமா புள்ளைய தூக்கி வச்சு சிரிச்சமானு இருக்கனும். கண்டதயும் போட்டு ஒலட்டக்கூடாது” என்று கூறி அவளை உணவு உண்ண அழைத்துச் சென்றான்.
பெயர் சூட்டு விழாவிற்கு திரிபுராவும் சிவபாதசேகரனும் கூட வந்திருந்தனர். குழந்தைக்கு பொம்மை, உடை, கிலுகிலுப்பென்று சிவபாதசேகரன் அனைத்தையும் பார்த்துப் பார்த்து வாங்கிவந்து பரிசாய் கொடுக்க, அதனை மனநிறைவோடு வாங்கிக் கொண்டனர்.
“என்ன சங்கு அட்வைஸ் பலம் போல?” என்று கார்த்திகா கேட்க,
அவளை ஆச்சரியமாய் திரும்பிப் பார்த்தாள்.
“நான்லாம் கட்டிகிட்ட மூனாது மாசம் உண்டாயிட்டேம். அதுக்கு முன்னயே இப்புடி ஏதோ வலகாப்பு வைபவத்துக்கு போனதுக்கு இந்த கெழவியளாம் வந்து அட்வைஸு பண்றேம்னு உசுர எடுத்துப்புட்டாவ” என்று கார்த்திகா கூற,
“ரெண்டு மாசத்துக்கேவா?” என்று ஆச்சரியமாய் கேட்டாள்.
“அட ஆமா சங்கு. எனக்கே பக்குனு ஆச்சுது. இன்னுங்கொஞ்ச நேரம் கேட்டிருந்தா பயத்துல அழுதே வச்சுருப்பேம் போல. இவிய தூரத்துலருந்தே பாத்து இழுத்துட்டு வந்துட்டாவ. வயசாயிட்டு, ஆனாலும் சிலவியளுக்கு இங்கீதமே இருக்காது புள்ள. ஒன்னு ரெண்டு பேரு நெசமான அக்கறையோட சொல்லுவாவதேம். ஆனா இதுலலாம் நீயா போயி கேக்காம யாரு என்ன வந்து சொன்னாலும் காதுல வாங்கிக்கிடாத. வேண்டாத நொச்சு. அது அது நடக்கனுங்குறப்ப நடக்கும்” என்று கார்த்திகா கூற,
கொஞ்சம் சங்கோஜம், கொஞ்சம் நிம்மதியோடு தலையசைத்தாள்.
Comments
Post a Comment