திருப்பம்-58
திருப்பம்-58
இனிதே விழா முடிந்து வீட்டு ஆட்களின் பேச்சு மட்டுமே சில நிமிடங்கள் ஓட, சுயம்புலிங்கம் தன் குடும்பத்துடன் விடைபெற எழுந்தார்.
அக்காவை அணைத்துக் கொண்டு, குழந்தைக்குப் பட்டும் படாமல் முத்தம் வைத்த சங்கமித்ரா, “அத்தான் இந்த பாப்பாவ என்னை எப்படி கூப்பிட வைப்பீங்க?” என்று கேட்க,
அழகாய் தன் பச்சரிப்பற்கள் தெரிய புன்னகைத்த சங்கீதா, “இதயேதான் நான் நேத்து கேட்டேன்” என்றாள்.
“பாரேன்.. வேவ்லென்த் சங்கி” என்றவள், “என்ன அத்தான் சொன்னீங்க?” என்று கேட்க,
“பாப்புமானு கூப்பிட வைப்பேன்” என்று கூறினான்.
“பாப்புமாவா?” என்று வளவன் கேட்க,
“ஆமா.. எனக்கு இவ பாப்பா. என் பொண்டாட்டிக்குத் தங்கச்சி. பாப்பா சின்ன வயசுல அடிக்கடி உன் பாப்பாவை என்னை அம்மானு கூப்பிட வைப்பியா சங்கினு கேட்பாலாம். அதான் பாப்புமானு கூப்பிட வைப்பேன்னு சொன்னேன்” என்று விளக்கம் கொடுத்தான்.
வெளியிருந்து கேட்போருக்கு சிறுபிள்ளைத்தனமாகத் தோன்றலாம் என்றாலும், அவன் அவள்மீது கொண்ட பாசத்தை அறிந்தவர்களுக்கே அந்த உணர்வு புரியும்.
“இப்படியொரு விளக்கத்தை நான் எதிர்ப்பார்க்கவே இல்ல அத்தான்.. தேங்க் யூ” என்று கூறியவள், “குட்டிபாப்பு.. பாப்புமானு நீங்க கூப்பிட நான் வெயிட்டிங்” என்று கூறவும்,
அனைவரும் அத்தருணத்தை ரசித்துப் புன்னகைத்துக் கொள்ள, வந்தோர் யாவரும் விடைபெற்றனர்.
பெயர்சூட்டு விழா முடிந்து மதியம் போல் அவர்கள் வீட்டை அடைய, இருந்த களைப்பிற்கு அனைவரும் அவரவர் அறைக்குச் சென்று படுத்துக் கொண்டனர்.
“ஷ்ஷ்.. எப்படா வந்து இதெல்லாம் கழட்டிட்டு கொண்டை போடுவோம்னு ஆகிடுச்சு” என்றபடி தன் முடியைத் தளர்த்திக் கொண்டை போட்டுக்கொண்டவள், அணிகலன்களையும் கலைந்து வைத்தாள்.
தானும் சென்று புத்துணர்ச்சிப் பெற்று தளர்வான உடைக்கு மாறி வந்தவன், கட்டிலில் சாய்ந்தமர, தானும் வந்து அவன் அருகே அமர்ந்துக் கொண்டவள், சிலநிமிட மௌனத்திற்குப் பின் அவன் கழுத்தடியில் முகர்ந்து பார்த்தாள்.
“என்னடி நாய் மாறி மோப்பம் பிடிக்க?” என்று அவள் செயலில் எழுந்த கூச்சத்தில் நெளிந்தபடி அவன் கேட்க,
“உங்க மேல பாப்பா ஸ்மெல் வருதுங்க” என்று சிரித்தபடியே கூறினாள்.
தன் உள் சட்டையை முகர்ந்து பார்த்தவன், சின்ன சிரிப்போடு, “புள்ள நெஞ்சுலயே கொஞ்ச நேரம் படுத்துருந்தால்ல? அதேம் வாசம் ஒட்டிகிச்சு போல” என்று கூற,
அவன் முகம் காட்டிய ரசனைகளைக் கண்டு ரசித்தவள், “அங்க ஒரு பாட்டி நாலு மாசமாச்சே மாசம் மாசம் தலைக்கூத்துறியா என்னனு கேட்குறாங்க. எனக்கு ஒருமாதிரி ரொம்ப சங்கடமா போச்சு எல்லார் முன்னவும் அவங்கக் கேட்டது” என்று கூறினாள்.
அவள் தோள் சுற்றிக் கரமிட்டவன், “எம்பொண்டாட்டி எங்கிட்டயே ரொம்ப கூச்சப்படுவானு அவியளுக்குத் தெரியலடி மித்ரா” என்று சிரிக்க,
அவனை முறைத்துப் பார்த்தவள், “கொழுப்பா?” என்றாள்.
அவளை ஏற இறங்கப் பார்த்தவன், ‘’அப்படித்தான் நினைக்குறேன்” என்றபடி அவள் கன்னத்தைக் கிள்ள,
அவன் கரத்தைத் தட்டிவிட்டு இரண்டடி தள்ளி அமர்ந்து கொண்டாள்.
“அம்புட்டு தூரத்துலயே உன்னய சட்டுனு ஒரு பார்வையில பக்கம் இழுத்துகிடுவேம். இந்தா ரெண்டடி தூரம் சுண்டு வெரல புடிச்சு உசுப்புனா வந்து விழுந்துபுட மாட்டியா?” என்றவன், சொன்னபடி செய்து அவளைத் தன்மீது சாய்த்துக் கொண்டான்.
அவனைப் பாவம் போல் பார்த்தவள் மூக்கைப் பிடித்து ஆட்டியவன், “பேசி முடி” என்க,
“இன்னும் ரெண்டு மாசம் போயும் புள்ள தங்கலைனா உடனே ஆஸ்பத்ரி போய் பாத்துடுனு ஒருத்தங்க சொல்றாங்க. ஆஸ்பத்ரிலாம் வேணாம் கண்ட மாத்திரையத்தருவாங்க நீ நாவல் கொட்டைய அரைச்சு குடினு ஓரம்மா சொல்லுறாங்க. குளிச்சுட்டு அரச மரத்து புள்ளையார சுத்துனு ஒரு பாட்டி சொல்றாங்க, எனக்கு ஒரு நல்ல கைனோ தெரியும், உனக்கு ரெண்டு மூனு மாசத்துல புள்ள தங்கலைனா போய் பாத்துட்டு வந்துக்கோனு ஒரு அத்தை சொல்றாங்க” என்று மெல்லிய குரலில் சோகமாய் கூறியவள், “பயமாருக்குங்க” என்று அவனைப் பார்த்தாள்.
“மொத ஒன்னு புரிஞ்சுக்க மித்ரா.. இது நம்ம அந்தரங்கம். அவிய பேச ஆரமிக்கயிலேயே நீயு எம்பாடு எம்புருஷம்பாடுனு வந்துருக்கனும். முழுசுக்கும் கேட்டுக்கனுமுனு நிக்கனா, இந்த செவுல்ல வாங்கிட்டு அந்த பக்கட்டு விட்டுடனும். இதெல்லாம் மூளைக்குள்ள ஏத்திகிட கூடாதுமா. அது அது நடக்க வேண்டியதெப்பனு அந்த ஆண்டவனுக்குத் தெரியாதத்தத்தேம் இவிய சொல்லப் போறாவளாக்கும்? இதெல்லாம் நீயு கடந்துவரத்தேன் ஆவும் மித்ரா. போன ஜெனரேஷன நாமலாம் நெனச்சாலும் மாத்த முடியாது. இனி வாரவியட்டதேம் அத எதிர்ப்பார்க்கலாம். அதனால இதுக்கெல்லாம் நீயு முக்கியம் கொடுக்காம விடு” என்று பனிவாய் அவன் எடுத்துக்கூற,
சிலநிமிடம் மௌனமே அவ்வறையில் நிலவியது.
ஒருக்களித்துப் படுத்துக் கொண்டு அவன் வயிற்றில் முகம் புதைத்தபடி “நான் ரொம்ப புலம்புறேன்ல?” என்று அவள் கேட்க,
அவள் தலையைக் கோதியபடி, “கேக்கத்தேம் நாயிருக்கேம்ல” என்றான்.
அவனை நிமிர்ந்து பார்த்தவள் அவன் மீசையை முறுக்கி விட்டு, “லவ் யூ” என்க,
அவள் கன்னங்களைப் பிடிக்க வந்தவன், “எழுந்துக்கடி.. எசவாவே இல்ல” என்றான்.
அதில் பக்கென்று சிரித்தவள், “போயா யோ” என்று எழுந்து நகர்ந்து படுத்துக் கொள்ள,
“ஏய்.. அவிய அப்புடி பேசினாவ இவிய இப்புடி பேசுனாவனு மட்டும் சொல்றியே பகவத் கீதைல என்ன சொல்லிருக்குனு கேட்டுக்கலியாடி நீயு? வாரந்தவராம அவரு கோயிலுக்குப் போயி போயி கும்பிடுமட்டும் போட்டுட்டு வாரத்தான?” என்று கேட்டான்.
புரியாத பார்வையோடு அவனைத் திரும்பிப் பார்த்தவள், “என்ன சொல்றீங்க?” என்று கேட்க,
“கடமையைச் செய், பலனை எதிர்ப்பார்க்காதே நீ கேள்விபட்டதில்ல?” என்றான்.
முதலில் புரியாது விழித்தவள், அதுபுரியவும் எழுந்து அவன் புஜங்களில் மாறி மாறி அடித்தபடி, “அவ்வா.. பேச்சப்பாரு.. பகவத் கீதைய எதுக்கு உதாரணமா சொல்லனு ஒரு வெவஸ்த இல்ல” என்று கூற,
சிரித்தபடியே அவள் அடிகளை வாங்கியவன், “வாழ்க்கைய நல்ல மொறையில வாழத்தான்டி சொல்லிருக்காவ. நானும் நீயு நல்லபடியா வாழத்தான சொல்லுதேம்” என்றான்.
“நல்லா சொன்னீங்க போங்க” என்று அவள் நகர எத்தனிக்க,
“ஐ லவ் யூ சொல்லி உசுப்பிவிட்டுட்டு எங்கடி ஓடுத?” என்றான்.
“பட்ட பகலு.. என்ன வெளையாட்டா உங்களுக்கு?” என்று கோபம் போல் அவள் கேட்க,
“இஞ்சார்ரா.. ஆச ஒனக்குதாம்டி.. நான் ஒத்த கிஸ் மட்டுந்தேம் ப்ளான் பண்ணிருந்தேம். நீயுதாம் வேறென்னமோலாம் நெனச்சுருக்க போலாட்ருக்கு?” என்று குறும்பு கொப்பளிக்க அவன் கேட்ட கேள்வியில் அதிர்ந்து விழித்தவள் முகம் செஞ்சாந்தாய் சிவந்து போனது.
“ச்ச ச்ச.. நான்லாம் எதும் நினைக்கலை” என்று அவள் தடுமாற,
அவள் முகம் பற்றியவன், “எதும் நெனக்கல?” என்று ஒற்றைப் புருவம் உயர்த்திக் கேட்டான்.
விழிகள் உருள அவனைக் கண்டு விழித்தவள், “பயங்காட்டுறீங்க” என்று கூற,
வாய்விட்டு சிரித்தவன் அவளை நெஞ்சோடு அனைத்துக் கொண்டு, கொடுக்க வந்ததையும் கொடுத்துவிட்டே விட்டான்.
மாலை நேரம் அனைவரும் கூடத்தில் கூடியிருக்க, வெளியே சென்றிருந்த சுயம்புலிங்கமும் விக்ரமனும் பேசியபடி உள்ளே வந்தனர்.
நீள்விருக்கையில் அலைபேசியைப் பார்ப்பதும் வைப்பதுமாய் ஒளிசுடரை நெஞ்சில் போட்டுத் தட்டிக் கொண்டிருந்தவன் அருகே வந்தமர்ந்த விக்ரமன், “என்னம்லே ஃபோன பாக்கவும் வைக்கவுமா இருக்க?” என்று கேட்க,
“இந்த வேலு பய ஒரு சோலியா காலையில நெல்ல வார போயிருந்தியாம். இன்னும் ஆளயே காங்கல. அதாம் யோசிக்கேம்” என்றான்.
“அவேம் என்ன கொழந்தையாலே? வருவியாம்” என்று ஆறுதல் கூறிய விக்ரமன், “கார்த்தி” என்று அழைக்க,
சமையலறையிலிருந்து, “வரேம்” என்று குரல் கொடுத்தபடியே வந்தாள்.
தனது அறையிலிருந்து குழப்பமான முகத்தோடு வந்த தனம் வளவன் அருகே சென்று அமர்ந்துகொள்ள,
ஒரு பையை நீட்டி, “பழம்பொறிச்சி வாங்கிட்டு வந்தேம். எல்லாருக்குமா பிரிச்சுக்கொடு” என்றான்.
கண்கள் விரிய அவனைப் பார்த்தவள், “சரிங்க” என்று துள்ளலோடு உள்ளே செல்ல,
“ம்ம்.. மைணிக்கு புடிச்சுபோச்சுனு அடிக்கடி பழம்பஜ்ஜிய வாங்கிட்டு வாரியளோ?” என்று தனம் கேலியாய் கேட்டாள்.
சின்ன சிரிப்போடு, எழுந்தவன், “ஏட்டி” என்று அவளை நிறுத்தி, அதிலிருந்த இன்னொரு பையை எடுத்துத் தனியே கொடுத்து, “ரூமுல வச்சுடு” என்றான்.
“என்னதுங்க?” என்று ஆர்வமாய் அவள் கேட்க,
“மைணி அண்ணே உங்களுக்குத்தேம் என்னமோ வாங்கிருக்கு போல?” என்று தனம் கூறினாள்.
“அப்படியாங்க?” என்று ஆர்வமாய் கேட்டவள் அந்த பையிலிருந்த காகிதக் கவரை பிரித்துப் பார்க்க, உள்ளே ஐந்து டஜன் கண்ணாடி வளையல்கள் இருந்தன.
அதை விழிகள் விரிய பார்த்தவள், சுற்றியுள்ளோரைப் பார்த்துவிட்டு அவனை நோக்கினாள்.
அலைபேசியைப் பார்த்துக் கொண்டிருந்த விக்ரமன், அவள் பார்வை உணர்ந்து அவளை நிமிர்ந்து, ‘என்னடி?’ என்பதாய் புருவம் உயர்த்திப் பார்க்க,
“என்ன இது புதுசா?” என்று கேட்டாள்.
அவள் கண்ணாடி வளையலெல்லாம் வளைகாப்பு சமையத்தில் அணிந்தது தான். அதையடுத்து கைக்கிரண்டு தங்க வளைகள் மட்டுமே எப்போதும் அணிந்திருப்பாள்.
விசேஷ நேரங்களில் அவற்றுக்கிடையே பட்டையான தங்க வளை ஒன்று பூட்டிக்கொள்வாள்.
அவளுக்குக் கண்ணாடி வளைகள் பிடிக்காதென்று இல்லை. அதே நேரம் வாங்கி அணிந்துகொள்ள வேண்டும் என்று ஆசைகொண்டதுமில்லை.
“சும்மாதேம்” என்று தோள்களைக் உலுக்கிக் கொண்டவன் மேலே சென்றுவிட, செல்பவனையே மகிழ்வோடு பார்த்து நின்றவள் அருகே வந்த சங்கமித்ரா, “அக்கா எதுவாருந்தாலும் அந்த பஜ்ஜிய என்கிட்ட குடுத்துட்டு ஃபீல் பண்றீங்களா?” என்று கேட்டாள்.
அதை கேட்டபடி வந்த சுயம்புலிங்கம் சிரித்துவிட,
“சூடு ஆரிடும்ல மாமா? அக்கா பொருமையா ஃபீல் பண்ணிட்டு வரட்டும். நாம நம்ம பங்கை சாப்பிடுவோமே” என்றாள்.
“சரிதேம் தாயி” என்று அவர் கூற,
பஜ்ஜியை அவள் கையில் கொடுத்துவிட்டு மேலே அறைக்கு ஓடினாள்.
உப்பரிகையிலேயே அலைபேசியை நோண்டிக்கொண்டே நடந்துகொண்டிருந்த விக்ரமன் அருகே வந்த கார்த்திகா, “என்னங்க புதுசா இவ்ளோ கண்ணாடி வளையலு?” என்று கேட்க,
“சும்மாதாம்டி.. ஏன் நான் வாங்கியாரக்கூடாதா?” என்றான்.
“அப்படிலாம் இல்ல. ஆனா என்ன புதுசானுதான்..” என்று அவள் இழுக்க,
“விசேஷத்துல வந்த புள்ளைய நெறையாபேரு இந்த கண்ணாடி வள போட்டிருந்தாவடி. நம்ம சங்குகூட போட்டிருந்துச்சுல்ல? நீயும் அழகாருக்குனு சொன்ன. வேல முடிச்சுட்டு வாரயில ஒரு தாத்தா தள்ளுவண்டில வளையகட போட்டிருந்தாரு. அதேம் வாங்கினேம். பக்கத்துல பஜ்ஜி கட இருந்துச்சு. ஒனக்கு புடிக்குமேனு எல்லாருக்குமா சேத்து வாங்கினேம்” என்று கூறினான்.
தன்னவன் தனக்குப் பிடித்ததையும், தான் ரசித்ததையும் குறித்து வைத்துக் கொண்டு இயல்பாய் வாங்கித்தருவதில் தான் பெண்களுக்கு எத்தனை மகிழ்ச்சி?
அவன் செயலில் ஊரியிருந்த அவள்மீதான அவன் நேசத்தில் இனிப்பாய் உணர்ந்தவள், “நல்லாருங்குங்க” என்று மகிழ்வோடு கூறினாள்.
எட்டி படிகளை ஒரு பார்வை பார்த்துக் கொண்டவன், அவளை அணைத்துக் கொண்டு நெற்றிமுட்டிவிட்டு விலக, வெட்கச் சிரிப்போடு அவன் கரம் பற்றி நிறுத்தியவள் அவன் முன்னே வந்து கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு அறைக்குள் ஓடிமறைந்தாள்.
கீழே அனைவருக்குமான தேநீர் மற்றும் பஜ்ஜியை அடுக்கி வந்து சங்கமித்ரா வைக்க,
'அண்ணே அவிய காலையிலருந்து ஃபோனே அடிக்கல. நாம்போட்டாலும் எடுக்க மாட்றாவளே என்னனு பாக்கீயளா?’ என்று அருகே அமர்ந்துகொண்டே தனம் வளவனுக்கு குறுஞ்செய்தி அனுப்பினாள்.
அதைப் பார்த்தவன் தனத்தை நிமிர்ந்து பார்க்க, ‘ப்ளீஸ்’ என்று இதழசைத்து கெஞ்சுதலாய் பார்த்தாள்.
சிறு தலையசைப்போடு தான் வேலுக்கு அழைத்துப் பார்த்தவன் அவன் எடுக்காததால், “இந்த வேலு என்னப்பா எடுக்கவே மாட்றான்” என்க,
“அம்மாக்குனா கூப்பிட்டு பாருங்களேங்க” என்று மித்ரா கூறினாள்.
சரியென்று கூறியவன் வேலுவின் தாய்க்கு அழைக்க, அவர் கூறிய அதிர்ச்சி செய்தியில், “ஏதே? எப்பத்தே?” என்று அதிர்வோடு எழுந்து விட்டான்.
Comments
Post a Comment