திருப்பம்-59

 திருப்பம்-59



வீட்டிற்குள் கையில் கட்டுடன் நுழையும் வடிவேலையும், அவனோடு கன்னம் வீங்க வந்து சேர்ந்திருக்கும் வளவனையும் கண்டு அனைவருமே அதிர்ந்து போக,


“அய்யா மக்கா.. என்னம்லே கோலமிது?” என்று அதிர்ந்து எழுந்த தெய்வா பின்னோடே வந்தத் தன் கணவரைப் பார்த்து, “என்னங்க இது? ஏன் ரெண்டேரும் இப்புடி வந்திருக்கானுவ?” என்று கேட்டார்.


அதிர்ச்சி விலகாத பாவத்துடன் நின்றிருக்கும் அனைவரையும் பார்த்தவர், “ஆத்தா கார்த்தி.. உப்புகல்லு கொண்டாந்து ரெண்டேருக்கும் சுத்துத்தா” என்று கூற,


“ஆங் மாமா..” என்று வருத்தமாய் அவர்களைப் பார்த்திருந்தவளும் விறுவிறுவென உள்ளேச் சென்றாள்.


“நீயு உள்ளார போ தாயி” என்று வடிவேலுவின் தாய் சுந்தராம்பாளிடம் கூறிய சுயம்புலிங்கம், தானும் உள்ளே செல்ல, கல்லுப்புடன் வந்த கார்த்திகா ஆண்கள் இருவருக்கும் சுற்றி, பின்கட்டிற்கு சென்று வாலி நிறைய நீர் பிடித்து அதில் உப்பைக் கரைத்துவிட்டு வந்தாள்.


கண்ணீரும் வருத்தமுமாய் அமர்ந்திருந்த சுந்தராம்பாலுக்கு நீர் கொண்டு வந்துத் தந்த தெய்வா, “மைணி என்னாச்சுது? புள்ளையலுக்கென்ன காயம்? ஏம்லே வளவா அப்பத என்னமோ பிரச்சனையினு உங்கய்யாவ கூட்டிகிட்டு ஓடுனியே இப்பத என்னடா கன்னம் வீங்கிபோயி வந்திருக்க? ஏ மக்கா நீயாது சொல்லுயா வேலா” என்று கேட்டார்.


சிலமணி நேரம் முன்பு சுந்தராம்பாளின் அழைப்பில் பதறிய வளவன், “ஐயா கொஞ்சம் ஒடக்கா போச்சுது. கூட வாரியளா? நெல்ல வார போயி வருவம்?” என்று கேட்க,


“என்னம்லே ஆச்சுது?” என்று தெய்வா பதறினார்.


“வந்து சொல்லுதேம்மா” என்றவன் தந்தையை நோக்க, “வண்டிய எடும்லே வாரம்” என்றார்.


“மித்ரா காரு சாவிய எடுத்தாமா” என்றவன் சுந்தராம்பாளையும் அழைத்துச் செல்ல வேண்டி தொடர்புகொள்ள, படபடப்பாய் சாவியை எடுத்து வந்து தந்தவள், “ஏங்க பாத்து பத்திரமா போயிட்டு வாங்க” என்று கூறினாள்.


“சரிடா” என்றவன் அவசரமாய் தந்தையை அழைத்துக் கொண்டு, சுந்தராம்பாளையும் ஏற்றிக்கொண்டு திருநெல்வேலி காவல் நிலையத்திற்குச் சென்றான்.


“என்னத்தே ஒடக்கு? ஒங்களுக்கு ஆரு சொன்னது?” என்று வளவன் கேட்க,


“தெரியிலியே சாமி. அங்க எங்கொழுந்தரு ஒருத்தரு இருக்காவ. பேச்சு வார்த்த ஏதும் கெடயாது. திடீருனு போன போட்டு என்ன ஓம்மவேன் டேசனுல இருக்கியான்னு கேக்கவும் எனக்கு நெஞ்சே அடச்சு போச்சுது. என்ன ஏதுனு கேட்டா என்ன வம்புனு தெரியிலங்குறாவ. அவேனுக்குக் கூப்பிட்டாலும் எடுக்க மாட்டுறியான். ஏ மக்கா எம்மவேனுக்கு என்னாச்சுனு தெரியிலயே” என்று அழுதார்.


“ஆத்தா வேலுக்கு ஒன்னுமிருக்காதுத்தா. நீயு வெசனப்படாத” என்று கூறிய சுயம்புலிங்கம், “நம்ம வக்கீலுக்கு போட்டு நானு எதுக்கும் பேசி வக்கட்டாயா?” என்று கேட்க,


“என்ன வம்புனு தெரியாது என்னத்த ஐயா பேசுறது?” என்று கேட்டான்.


“ஏதோ வம்பா படுதுனு சேதி மட்டும் சொல்லிவப்போம். அவசரமின்னா வார வைக்க சரியாருக்குமில்ல?” என்று அவர் கூற,


“சரிங்கய்யா” என்றான்.


ஒன்றரை மணிநேர பயணத்தில் அக்காவல் நிலையத்தை அடைந்தவன், அவசரமாய் உள்ளே ஓட, அங்கு காவலதிகாரி முன்பு யாரோ ஒருவருடன் பலத்த வாக்குவாதத்தில் இருந்தான் வடிவேலு.


கையில் கட்டுவேறு போட்டுக்கொண்டு நிற்பவனைக் கண்டு பதறியபடி வந்த வளவன், அந்நபர் அவனை ஓங்கி அறைய வருவதைக் கண்டான்.


“ஏலே” என்று விரைந்து வந்தவன், வடிவேலு முன்பு வந்து நிற்க, சரியாக ஓங்கியவன் கை பளாரென்று வளவன் கன்னத்தில் இடியென இறங்கியது.


அடித்த அடிக்கு ஒருநிமிடம் அவனுக்கு கண்கலங்கி பார்வை திரும்ப, “ஏ மக்கா” என்று சுயம்புலிங்கமும் சுந்தராம்பாளும் பதறிக் கொண்டு வந்தனர்.


“ஏலே வளவா..” என்று நண்பனைத் தாங்கிய வடிவேலு, “யாருமேலலே கைய வைக்குத?” என்று சீற,


தன்முன் நிற்பவனை அப்போதுதான் தெளிவாக வளவன் நோக்கினான்.


வடிவேலுவைக் கூர்மையாகப் பார்த்தவன், “என்னம்லே ஒடக்கு?” என்க,


“நாம சென்டு கம்பெனிக்கு அனுப்புன பூவு கொரவா போவுதுனு சேதி வந்துது வளவா. சரினுட்டு போன மொற கொண்டோன டிரைவர விசாரிக்கத்தேம் வந்தேம். இவேம் பாத்தா நம்மட்ட அடிச்ச மூட்டைய சந்தைக்கு வித்திபோட்டிருக்கியாம். சரியா நாம்போன நேரமா பாத்து வித்த மூட்டைக்கான காசு வந்துருக்குது. புடிச்சு என்னம்லேனு கேட்டாக்க அசராம பேசுதியான். அதேம் ஒடனே போலீஸுட சொல்லுவோமுன்னு வந்து புகாரு கொடுத்தேம். சரினு எழுதி வாங்கினாவ. கெளம்பத்தானனு பாத்தா பய ஆள வுட்டு வண்டில இடிக்குறானுவ” என்றான்.


அவன் கையிலுள்ள கட்டை வருத்தமாய் பார்த்த வளவன், “கையிக்கென்னம்லே?” என்று அடுத்த நொடியே அவன் நலன் குறித்த செய்திக்குத் தாவியிருக்க, 


“அடிலாம் பலமில்லலே. நல்லா சராச்சு காயமாபோச்சுது. மருந்து வச்சுக் கட்டிருக்காவ. உச்சிக்கி (மதியம்) உங்காததுக்கு அடிபடவும் கெரக்கமா போச்சுது. ஆஸ்பத்ரி போயி ஒடம்ப கவனிச்சுகிட்டு நேரா வந்துப்டேம். ஆமா ஒங்களுக்கு எப்புடி தெரியும்?” என்றான்.


“எல்லாம் பொறவு பேசிகிடலாம்யா” என்ற சுயம்புலிங்கம், “ஐயா, என்ன கேசு புக் பண்ணிட்டீயளா?” என்று கேட்க,


“இவரு சொன்னாங்கனு விசாரிக்கக் கூட்டிகிட்டு வந்துருக்கோம்யா இவங்கள. எங்க ஆளுங்க சீசீடீவி கேமரா செக் பண்ணிட்டு இருக்காங்க. பூ மூட்ட தூக்கினதுக்கு ஆதாரமில்ல. ஆனா வண்டில இடிச்சதுக்கு இருக்கும். அதவச்சு போட்டுடலாம்யா” என்று காவலர் கூறினார்.


“நல்லதுங்க. எங்க பக்கட்டுருந்து வக்கீலு வாராவ. நாங்களும் மொறயா செய்யுறத செஞ்சு தாரோம். இப்பத ஒங்கக் கண்ணு முன்னுக்க எங்க புள்ளய வேற அடிச்சுருக்காவ. என்ன செய்யனு பாத்து பண்ணுங்க” என்று சுயம்புலிங்கம் கூற,


அவரது தோற்றமும், பணிவும், பக்குவமும் தன்னைப்போல் அக்காவலரை மரியாதையாக நடக்க வைத்தது.


சில நிமிடங்களில் அவர்களது வக்கீலும் வந்துவிட, மேற்கொண்டு என்ன செய்யலாம் என்பதுபற்றி ஆலோசித்து, புகாரும் கொடுத்துவிட்டு வந்தனர்.


சிவந்து சற்றே வீங்கியிருந்த வளவன் கன்னத்தை வடிவேல் தொட, “ஸ்ஸ்..” என் முகம் சுருக்கியவன், “விடுலே” என்றான்.


“எதுக்குலே குறுக்கால வார?” என்று கரகரத்தக் குரலில் வடிவேல் கேட்க,


“வேண்டுதலு. போலே அங்கிட்டு. அவேம் அடிக்க வாராம் கன்னத்தக் காட்டிகிட்டு நிக்க நீயு. காலையில இப்படிங்குமோதே எனக்குச் சேதி சொல்ல என்னம்லே நோவுது ஒனக்கு?” என்று கோபமாய் வளவன் கேட்டான்.


“சொல்லத்தாம்லே இருந்தேம். அதுக்குள்ள கீழ விழுந்து ஆஸ்பத்ரி போவச் செய்யனு ஆச்சுது. போனு வேற ஒடஞ்சு போச்சுது” என்ற வடிவேல், “ஒங்களுக்கு எப்படிலே தெரியும்?” என்க,


“ஓன் ராசு சித்தப்பாதேம் போட்டாவலே. ஒருவார்த்த ஓங்கூட இருக்கலியே.. என்ன மக்க மனுஷவளோ” என்று கூறிய சுந்தராம்பாள், அவன் கட்டை வருடி, “அடி பலமில்லியே சாமி?” என்று பயந்தக் குரலில் கேட்டார்.


“ஒன்னுமில்லம்மா. சின்ன செராப்புதேம்” என்று கூறியவன், “ஏம்லே மாமா அம்மாவெல்லாம் கூட்டிகிட்டு வந்த?” என்க,


“ஐயாதாம்லே சூழல புரிஞ்சு செய்வாவ. அம்மாவும் பயந்துட்டு இருந்தாவ. கூடருந்தா பயமில்லாதுருப்பாவனு கூட்டிகிட்டு வந்தேம்” எனக்கூறி அனைவரையும் மீண்டும் வீட்டிற்குக் கூட்டிவந்தான்.


நடந்ததை சுறுக்கமாய் கூறிய சுயம்புலிங்கம், “ஆத்தா சங்கு” என்று அழைக்க,


கண்கள் முட்டும் கண்ணீரோடு அச்சமாய் கார்த்திகாவுடன் நின்றுகொண்டிருந்த சங்கமித்ரா மாமனாரைப் பார்த்தாள்.


“கல்லுப்ப வருத்து துணில கட்டிக் கொண்டாந்து அவேம் கன்னத்துல வையுத்தா. வீக்கம் பலமாருக்கு” என்று பெரியவர் கூற, தன்னவனை வேதனையோடு பார்த்தவள் தன் கண்ணீர் துடைத்துக் கொண்டு உள்ளே சென்றாள்.


இத்தனையில் தன் கவலையைக்கூட வெளிகாட்டித் தன்னவனுக்கு ஆறுதல் கூறி, ஆறுதல் பெற இயலாத தவிப்பில் பல்லைக் கடித்துக் கொண்டு பாவாடையை இறுக்கிப் பிடித்துக் கொண்டு தனலட்சுமி நின்றிருந்தாள்.


அவள் உணர்வுகளை உணரப்பெற்று வதைகொண்ட வடிவேலு அவளை நோக்க,


கண்களை முட்டி நின்ற கண்ணீர் விழுக்கென்று வழிந்தது.


அதை மறைக்க முடியாது சமையலறைக்குள் சென்றவள், சங்கமித்ராவை கட்டிக்கொள்ள, “தனம்” என்று அவளை அணைத்துக் கொண்டு சங்கமித்ரா, “ஒன்னுமில்லடி” என்று தன் சோகம் விழுங்கி அவளுக்கு ஆறுதல் கூறினாள்.


“மைணி.. அ..அவிய கையில..” என்று விக்கி விசும்பி அவள் கூற,


அவள் முதுகை தட்டிக் கொடுத்தவள், “ஒன்னுமில்ல தனம். சரியா போயிடும். ஆஸ்பிடல் போய் மாத்திரை மருந்தெல்லாம் வாங்கிட்டு வந்துட்டாங்களாம்டா. அழாதமா” என்று சங்கமித்ரா ஆறுதல் கூற,


“அ..அவியட்ட போயி பேசனும்போல இருக்குது மைணி” என்று கரைந்தாள்.


அவள் நிலையை மித்ராவாள் நன்கு உணர முடிந்தது. இருந்தும் அவளிடம் செய்வதற்கென்று ஏதுமில்லயே.


“புரியுதுடி.. ஆனா இப்ப எதும் பண்ண முடியாதே” என்று வருத்தமாய் கூறிய சங்கமித்ரா, “பின்னாடி போச்சொல்லி அனுப்பிவிடவா? போய் பேசுறியா?” என்று கேட்க,


“மைணி.. ப்ளீஸ் மைணி.. அனுப்பிவிடுங்க” என்று அடக்க முடியாது அழுதபடி கூறினாள்.


“அழாத தனம். நான் வரச்சொல்லுறேன். நீ அழாத” என்ற சங்கமித்ரா, வறுத்த கல்லுப்பை துணியில் கட்டிக்கொண்டு கூடம் வந்தாள்.


நீள்விருக்கையில் வளவன் அருகே சென்று அமர்ந்தவள் அவனது வீங்கிய கன்னம் கண்டு மீண்டும் கலங்கிவிட,


“ஒன்னுமில்லடி” என்றான்.


“ஒன்னுமில்லாமதான் வீங்கிருக்காக்கும்?” என்றபடி அவன் தாடை பற்றியவள் மூட்டையைக் கன்னத்தில் வைக்க,


“ஸ்ஸ் ஆ..” என்றான்.


“ஆத்தீ எம்புள்ளைய கொல்லப்பாக்காளே” என்று நெஞ்சில் கைவைத்துக் கொண்ட தெய்வா வர,


“தெய்வா” என்று சுயம்புலிங்கம் அதட்டினார்.


அவரை முறைக்கக் கூட முடியாத நிலையில் வருந்தியிருந்தவள், “சாரி” என்று காற்றாய் உரைத்து மீண்டும் மெல்ல ஒத்தடம் கொடுத்தாள்.


வடிவேலு இதை வருத்தமாய் பார்க்க, “அண்ணா தனம் பின்னாடி இருக்கா” என்று மெல்லிய குரலில் மித்ரா கூறினாள்.


சட்டென வடிவேலு அவளை கவனிக்க,


“ரொம்ப அழுறா. ப்ளீஸ் போங்க” என்று மீண்டும் மெல்ல உரைத்தாள்.


வடிவேலு சங்கோஜமாய் வளவனை நோக்க, அவன் கண்கள் மூடித் திறந்து சம்மதம் கூறினான்.


“நாங்கொல்லைக்கு போய் வாரேம்” என்று எழுந்த வடிவேலு செல்ல,


வழியும் கண்ணீரைத் துடைத்தபடியே தன்னவனுக்கு மித்ரா ஒத்தடம் கொடுத்தாள்.


“சங்கு.. நீ இம்புட்டுக் கரிக்கலாம் அவேனுக்கு ஒன்னுமில்ல. அதெல்லாம் காலையில சரியாயிடுவாம்மா” என்று விக்ரமன் கூற,


“பாவம்னா. ரொம்ப வீங்கிருக்கே” என்று வருத்தமாய் கூறினாள்.


“நீயெல்லாம் அவேன ஒழுங்கா அடிச்சு வளக்கல. அதேம் ஒத்த அடிக்கே அவேனுக்கு வீங்கி போச்சுது. எம்பொண்டாட்டிகிட்டக் கத்துகிட்டு ஒழுங்கா அவேன ட்ரெயின் பண்ணினா எம்புட்டு வாங்கினாலும் கல்லு போல வருவியான்” என்று அவளுக்குத் தேறுதல் கூறுகிறேன் என்ற பெயரில் கார்த்திகாவிடம் தனக்கு சன்மானம் வாங்கிக் கெண்ட விக்ரமன், கார்த்திகாவின் கொதிக்கும் பார்வையில், ‘ஆத்தீ’ என்று மானசீகமாய் நெஞ்சில் கைவைத்துக் கொண்டான்.


“என்னம்லே.. ரொம்ப பேசிட்டு இப்ப நெஞ்ச பிடிக்கீயோ?” என்ற வளவன் பேச இயலாது தன் தாடையைப் பிடித்துக் கொள்ள,


“இப்ப இந்த கேலி கிண்டல் ரொம்ப முக்கியமா? ஆட்டாம காட்டுங்க” என்ற மித்ரா தன் பணி தொடர்ந்தாள்.


“நடு கூடத்துல வச்சுட்டு எப்புடி அதட்டுறா பாரு அவேன” என்று தெய்வா கோபமாய் முனுமுனுக்க,


“அம்மா மணி ஒன்னாகப்போகுது. போயி படுக்கத்தான நீங்க?” என்று கார்த்திகா சுந்தராம்பாளிடம் கேட்டாள்.


“வேலு வரட்டும்த்தா” என்று அவர் கூற,


“ஆத்தா.. இங்கனயே தூங்கு. பொழுது விடிஞ்சு பொறவு போயிக்கலாம். எதும் யோசிக்காத தாயி. வேல சோலினா நாலு ஒடக்கு வாரதுத்தேம். அதுலாம் புள்ளைய தலையெடுத்துட்டா நாம இதுக்குலாம் அச்சப்படாது கடந்துதேம் வாரனும்” என்று சுயம்புலிங்கம் ஆறுதல் கூறினார்.


“சரிண்ணே.. ஏதோ நீங்க இருக்கப்போயி எங்க பொழப்பு ஓடுது” என்று அவர் கூற,


“மைணி சும்மா அப்புடிலாம் சொல்லாதீய. வேலு கூட சேந்துட்டு சும்மா ஒன்னும் கல்லாகட்டல. நாங்க அவேனுக்குக் கூலியுங்குடுக்கல. அவேம் ஒழைக்கான், அதுக்கு சம்பாதிக்கான். வீடு காடுனு கட்டி பதவிசா வச்சுகிடலயா? அவேன ஏத்தி சொல்லுவ. நாங்க இல்ல அவேந்தேம் ஒங்களுக்குக் கஞ்சி ஊத்தி காப்பாத்துராம்” என்று தெய்வநாயகிக் கூறினார்.


“அப்புடிச் சொல்லுடி நாயகி. சும்மா என்னமாது பேசுறது” என்ற சுயம்புலிங்கம், “ஆத்தா கார்த்தி போயி அந்த படி படக்கட்டுருக்க ரூம ஒரு பார்வ பாத்துகிட்டு போர்வ தலையாணி கொண்டாந்து போடுத்தா” என்று கூற,


“சரிங்க மாமா” எனச் சென்றாள்.


“ஏட்டி.. இன்னும் என்னத்த அதயே அமிக்கிட்டு கெடக்க? சூடு ஆரி போயிருக்கும். கொண்டா நான் வருத்துட்டு வாரேம்” என்று தெய்வா பொட்டலத்தைப் பிடுங்க,


பதட்டமாய் அவர் கரம் பற்றியவள், “நீங்க இருங்கத்த நானே போறேன்” என்றாள்.


“ஆமா நீயு போவ வாரனு அரமணிய ஓட்டிபுடுவ” என்று அவர் கூற,


“அம்மா..” என்று பல்லைக் கடித்த வளவன், “எனக்கு ஒன்னும் வேணாம்” என்று எழுந்துவிட்டான்.


“ஏங்க உக்காருங்க. நாம்போயி வருத்துட்டு வரேன். இன்னும் ஒருமுறை வச்சா வலி விட்டு வீக்கம் வத்தும்” என்று கெஞ்சுதலாய் கூறியவள் பொட்டலத்தை வாங்கிக்கொண்டு சென்றாள்.



Comments

Popular posts from this blog

திருப்பம் -01

திருப்பம்-03

திருப்பம் -02