6.சாராவின் ஜீபூம்பா
அத்தியாயம்-06
அந்த ஞாயிற்றுக்கிழமை எப்போதும் போல் அழகுபட பாவாடை சட்டை உடுத்தி வந்தவளை அழைத்துச் செல்ல சக்கரவர்த்தி வந்திருந்தார்.
"தாத்தா" என்று அவள் அவரிடம் ஓடிவர,
"தங்கபட்டு" என்று அவளைத் தூக்கிக் கொண்டார்.
மற்ற பிள்ளைகளும் சக்கரவர்த்தியிடம் வர, அனைவரையும் முகம் மலர கண்டு நலம் விசாரித்து பேசினார்.
"தௌசன்ட் வாட்ஸ் பல்ப் மாதிரி ஏன் இப்படி ஈஈஈனு முகத்தை வச்சிருக்க?" என்று ஜீபூம்பா வினவ,
"ஆமா பாட்டு கிளாஸ் போயிட்டு அப்படியே மதி வீட்டுக்குப் போகப் போறேன்ல" என்று கிசுகிசுத்தாள்.
அனைவரிடமும் விடைபெற்ற சக்கரவர்த்தி, குழந்தையைத் தூக்கிக் கொண்டு வண்டியில் புறப்பட்டார். பாட்டு வகுப்பில் அவளை இறக்கிவிட்டு முத்தமிட்டவர், "ஒருமணி நேரம் தானேடா" என்க, "அப்பா.." என்ற குரல் கேட்டது.
அவர் திரும்பிப் பார்க்க தனது குழந்தை மதியுடன் ஆதி நின்றிருந்தாள். அவர் அவர்களை யாரென்று அறியாத போதும் புன்னகையுடன் பார்க்க,
"தாத்தா.. இவதான் மதி. இவங்க மதி அம்மா" என்று சாரா அறிமுகம் செய்தாள்.
"வணக்கம் ம்மா" என்று அவர் கூற,
"வணக்கம் ப்பா. பாட்டு கிளாஸ் முடிஞ்சதும் நானே பாப்பாவைக் கூட்டிட்டுப் போறேன் ப்பா. திரும்ப வேணும்னா நீங்க கூப்பிட வாங்களேன்" என்று ஆதி கேட்டாள்.
அவள் அப்படி கேட்க மறுக்க முடியாத போதும் இலக்கியன் கண்டிப்பாக தான்தான் கூட்டிச் சென்று விட்டுவரும்படி கூறியிருந்ததால், "இருக்கட்டும் ம்மா. நீங்க முன்னாடி வண்டில போங்க நான் பின்னாடியே பாப்பாவைக் கூட்டிட்டு வரேன். திரும்ப கூப்பிட வர வழி தெரியனுமே" என்றார்.
"சரிங்க ப்பா" என்று ஆதியும் அவரை மேலும் கேட்டு சங்கடப்படுத்தாது ஒப்புக்கொள்ள, இரு பிள்ளைகளும் பேசியபடி உள்ளே சென்றனர்.
பாட்டு வகுப்பு முடிந்தவுடன் பெரியவர் கூறியபடி சாராவைக் கூட்டிக் கொண்டு அவள் வீட்டில் விட்டவர் ஒருமணி நேரம் கழித்து வந்து கூட்டிச் செல்வேன் என்றும் கூறிவிட்டுச் சென்றார்.
உள்ளே நுழைந்த சாராவின் கரங்களைப் பிடித்துக் கொண்ட மதி, "அப்பா.. அப்பத்தா சாரா வந்துட்டா" என்று கத்த,
சமையலறையிலிருந்து அவளது அப்பத்தாவும் அறையிலிருந்து அவளது அப்பாவும் வந்தனர்.
புது நபர்கள், புது இடம் கொடுத்த மிரட்சியுடன் அவள் விழிக்க, அதில் புன்னகைத்த லட்சுமி, சாராவின் கொழுகொழு கன்னம் வருடி, "பாப்பா பேரென்ன?" என்றார்.
அவர் ஸ்பரிசத்தில் இருந்த அன்பும் கனிவும் அவளுக்கு ஒருவித சிலிர்ப்பைக் கொடுக்க, அதையெல்லாம் புரிந்துக்கொள்ளும் பக்குவமும் வயதும் தான் அவளுக்கில்லாமல் போனது.
"ஏ சாரா.. வாய திறந்து பேசு" என்ற ஜீபூம்பாவின் குரல் கேட்டவுடன் தான் அவளுக்குத் தன்னுடன் ஜீபூம்பா துணைக்கு உள்ளது என்ற ஆசுவாசம் எழுந்தது.
"சாரா, பாட்டி" என்று அவள் கூற,
"நல்ல பெயர்" என்றார்.
"என் லக்கி வச்ச பேரு" என்று அவள் கூடுதல் தகவல் கொடுக்க,
"யாரு உங்க லக்கி?" என்று கார்த்தி வினவியபடி அவளருகே வந்து அமர்ந்தான்.
சாரா மதியைத் திரும்பிப் பார்க்க, "எங்க டாடி" என்று கார்த்தியை கழுத்தோடு கட்டிக் கொண்டாள்.
அதில் புன்னகையாய் தன் மகள் தலைகோதிய கார்த்தி சாராவை நோக்க,
"லக்கி ஊர்ல இல்லை. அதான் தாத்தா கூட்டிட்டு வந்து விட்டாங்க" என்று கார்த்தி கேட்ட கேள்வியை விடுத்து அவளாக ஒரு தகவலைக் கொடுத்தாள்.
அதில் புன்னகைத்த கார்த்தி மதியை நோக்க, "சித்திய பார்க்க போவோமா?" என்று கேட்டாள்.
"உங்க சித்தி இங்க இல்லையா?" என்று சாரா வினவ,
ஒரே காம்பௌண்டிற்குள் இருக்கும் இன்னொரு வீட்டை குறிப்பிட்டுக் கூறியவள், "சித்தியும் அம்மம்மாவும் அங்க இருக்காங்க" என்று கூறினாள்.
அனைவரும் ஆரண்ய நிலாவைக் காண அங்கு வர, தன் அம்மம்மாவிடம் ஓடிய மதி, "அம்மம்மா.. இவ தான் சாரா" என்று அறிமுகம் செய்தாள்.
"அட நீங்க தான் அந்த சாரா குட்டியா. வாங்க தங்கம்" என்று சுந்தரி சின்னவளை வரவேற்க,
'என்ன ஜீபூம்பா இங்க எல்லாமே வித்தியாசமா இருக்கு' என்று மனதோடு கூறிக் கொண்டாள்.
"என்ன வித்தியாசம்?" என்று ஜீபூம்பா கேட்க,
சிறியவளுக்கு அதை சொல்லத் தெரியவில்லை.
ஆசிரமத்தில் எல்லோரம் ஒரே வீட்டில் இருப்பது, அதிக குளியலறை வசதிகள் இருந்தாலும் அங்குள்ள பிள்ளைகளின் எண்ணிக்கைக்கு காலை வேகமே எழுந்தால் தான் குளியலறை பிடிக்க வசதிப்படும் என்று சண்டையிடுவது, சில பெரிய பெண்களுக்குள் எழும் மனஸ்தாபம், பிறந்தது முதல் அங்கேயே இருந்தாலும் அந்த இடம் அவர்களுக்கான நிரந்தர இடம் இல்லை என்ற உணர்வு என அனைத்தையும் பார்த்து வளர்ந்தவளுக்கு நிலையான வீடு, சொந்தம் என்று இருப்பவர்களைப் பார்க்க வித்தியாசமாகவே இருந்தது.
சாராவின் அமைதியைக் கண்ட பெரியவர்கள் மதியைப் பார்த்து, "சித்தி ரூம்ல தான் இருக்கா. கூட்டிட்டு போ. நான் உங்களுக்கு சாப்பிட எதும் கொண்டு வரேன்" என்று கூற,
"ஓகே அம்மம்மா" என்றவள் சாராவை இழுத்துக் கொண்டு "சித்தி.." எனக் கதவை தட்டினாள்.
"வாங்க குட்டிமா" என்று ஆரண்யாவின் குரல் கேட்க, சாராவிற்கு அந்த குரல் மீண்டும் ஒரு சிலிர்ப்பைக் கொடுத்த நொடி "ஜீ..பூம்..பா.." என்று ஜீபூம்பா மந்திரமிட்டது.
மூவரும் உள்ளே செல்ல, ஸ்லீவ் டீ ஷர்ட் மற்றும் காட்டன் பாவாடை அணிந்து கட்டிலில் சாய்ந்தமர்ந்து கையில் புத்தகத்துடன் புன்னகையாய் அவர்களை நோக்கினாள் ஆரண்ய நிலா.
சாராவைக் கண்டு மேலும் புன்னகைத்த நிலா, "ஏ தங்கபட்டு.. இவங்க தான் உன் ஃபிரண்டா" என்று வினவ,
"ஆமா சித்தி. இவ தான் சாரா. நான் சொன்னேன்ல உங்கள பார்க்க வருவானு" என்று கூறினாள். இருவரும் அவளருகே அமரவும், "ஹாய் சாரா" என்று நிலாவே பேச்சைக் கொடுக்க,
"ஹாய்.." என்ற சாரா "உங்க பேர் என்ன?" என்று வினவினாள்.
"என் பெயர் ஆரண்ய நிலா" என்று அவள் புன்னகையுடன் கூற,
"சூப்பரா இருக்கு. நான் உங்கள எப்படிக் கூப்பிட?" என்று கேட்டாள்.
அத்தனை நேரம் அனைவரிடமும் பேசாமல் திருதிருத்த தோழி தன் சித்தியிடம் மட்டும் சிரித்து பேசுவதில், "சித்தி இவ்வளவு நேரம் சாரா பேசவே இல்லை. நீங்க ஏதோ மேஜிக் பண்ணிட்டீங்கனு நினைக்குறேன். உங்ககிட்ட சூப்பரா பேசுறா" என்று கூற,
ஜீபூம்பா சிரித்துக் கொண்டது.
தானும் சிரித்துக் கொண்ட நிலா, "உனக்கு எப்படி கூப்பிட தோனுது?" என்று வினவ,
தன் நாடியில் விரல் தட்டி யோசித்தவள், "ஆரூனு கூப்பிடவா?" என்றாள்.
தாராளமாய் புன்னகைத்த நிலா, "அடடே.. இதுவர யாருமே என்னை இப்படிக் கூப்பிட்டதே இல்லை. நீ என்னை ஆருனே கூப்பிடு" என்று கூறி தன் கரம் நீட்டி, "ஃபிரெண்ட்ஸ்" என்க,
தன் கரம் நீட்டிய சாரா அவள் கரத்தில் உள்ள காயங்களைப் பார்த்து, "அச்சோ ஆரு கையெல்லாம் காயம்" என்றாள்.
அதில் லேசான புன்னகையுடன் "ஆமாடா" என்று அவள் கூற,
"சித்தி சோ ஸ்டிராங்" என்று மதி கூறினாள்.
அப்போது அங்கு உள்ளே வந்த சுந்தரி மற்றும் லட்சுமி அவர்களுக்கு திண்பண்டங்களைக் கொடுக்க அதையே பார்த்துக் கொண்டிருந்தாள் சாரா.
"என்னடா பாக்குற? உனக்கு சிப்ஸ் பிடிக்காதா?" என்று சுந்தரி கேட்க,
"பிடிக்கும் பாட்டி. ஆனா சாப்பிட்டதில்ல" என்று சாரா கூறினாள்.
"ஏன்? ஒத்துக்காதா?" என்று நிலா கேட்க,
"இல்ல இதெல்லாம் ஹோம்ல வாங்கி வைக்க மாட்டாங்க. எல்லாருக்கும் கொடுக்க முடியாதுல" என்று கூறினாள்.
அப்போதே ஆதியும் கார்த்திக்கும் உள்ளே வர, "ஹோமா?" என்று லட்சுமி கேட்டார்.
"ஆமா" என்று சாரா கூற,
"அப்ப லக்கி யாரு?" என்று கார்த்திக் கேட்டான்.
"லக்கி தான் எனக்கு எல்லாமே" என்று அவள், அவன் சொல்லிக் கொடுத்ததையே கூற, அனைவரும் அவளைக் குழப்பமாய் பார்த்தனர்.
"உனக்கு மம்மி டாடி கிடையாதா?" என்று மதி வினவ,
"மதி என்னதிது? இப்படிலாம் கேட்கக் கூடாது" என்று நிலா கடிந்தாள்.
அனைவரும் சாராவைப் பார்க்க, "நீ எந்த ஹோம்ல இருக்கடா?" என்று சுந்தரி பரிவாய் கேட்டார்.
"இங்க பக்கத்துல ஸ்வீட் ப்ரின்ஸஸ் ஹோம் இருக்குல்ல? அங்க தான் இருக்கேன். லக்கி எங்க ஹோம்கு நிறையா ஹெல்ப் பண்ணுவாங்க. என்னை லக்கிக்கு ரொம்ப பிடிக்கும். லக்கி தான் எனக்கு நேம் கூட வச்சாங்க" என்று சாரா கூற,
"அப்ப பிரபா ம்மா?" என்று மதி கேட்டாள்.
"எங்க ஹோம் பிரபா அம்மாவோடது தான்" என்று சாரா கூற,
"அப்ப தாத்தா பாட்டி?" என்று அடுத்த கேள்வியை மதி கேட்டாள்.
"அச்சோ.. பிரபா ம்மா ஹோம் வச்சிருக்குறவங்க. அக்கா தங்கச்சிலாம் ஹோம்ல கூட இருக்குறவங்க. லக்கியோட மாமா அத்தை தான் என் தாத்தா பாட்டி. லக்கி தான் எனக்கு எல்லாமே" என்று சாரா கூற,
பின்பே அவளுக்கு யாருமில்லை அவள் ஆசிரமத்தில் வளரும் பெண் என்றும் அவளது லக்கி அந்த ஆசிரமத்திற்கு உதவுபவன் என்றும் புரிந்தது.
ஒரு கனமான அமைதி. அந்த அமைதியான நிலையில் அனைவரையும் பார்த்த ஜீபூம்பா களுக்கிச் சிரித்துக் கொள்ள, ஜீபூம்பாவை பார்த்த சாரா 'எதுக்கு லூசு மாதிரி சிரிக்குற?' என்று கேட்டாள்.
'ஒன்னுமில்ல' என்று அது கூற, மற்றவர்களைத் திரும்பிப் பார்த்தாள்.
அனைவரும் தங்களை சமன் செய்துக் கொண்டு, "சாப்பிடுடா" என்க,
அவளும் புன்னகைத்துக் கொண்டு "ஆரூக்கு?" என்று நிலாவைக் காட்டி கேட்டாள்.
அதில் சிரித்த நிலா, "நான் அப்பறம் சாப்பிட்டுக்குறேன்டா. நீ சாப்பிடு" என்று கூற, சிரித்தபடி தலையாட்டினாள்.
சில நிமிடங்களில் சக்கரவர்த்தி வந்திட அவரையும் உள்ளே அழைத்து பேசிவிட்டு சாராவை அனுப்பி வைத்தனர்.
தங்கள் வீட்டுக்குக் கூட்டி வந்த சக்கரவர்த்தி மனைவி சாராவுடன் சிரித்து பேசி விளையாடுவதைப் புன்னகையுடன் பார்க்க இரவு இலக்கியன் வந்து சேர்ந்தான்.
விளையாடி முடித்து உண்ட களைப்பில் சாரா தூங்கியிருக்க, பிரபாவிடமிருந்து அழைப்பு வந்திருந்தது.
அழைப்பை ஏற்றவன், "மேம் சாரி. ஒரு வேலையா பக்கத்தூர் போயிருந்தேன் மேம். இப்பதான் வந்தேன்" என்க,
"இருக்கட்டும் ப்பா. சாரா இன்னும் வரலையேனு ஃபோன் பண்ணேன்" என்று கூறினார்.
"மேம்.." என்று தயங்கியபடி ராதாவின் மடியில் உறங்கும் மழலையைப் பார்த்தவன், "அவ தூங்கிட்டா. நாளைக்கு காலைல கூட்டிட்டு வந்திடவா?" என்று கேட்க,
சன்னமான சிரிப்போடு "சரிப்பா கண்ணா. பார்த்துக்கோ" என்றார்.
சரியென அழைப்பை வைத்தவனுக்கு சக்கரவர்த்தி உணவிட, உண்டு முடித்தவன் வந்து சாராவைத் தூக்கிக் கொண்டான்.
"எங்கப்பா கொண்டு போற?" என்று ராதா வினவ,
"என் ரூமுக்கு அத்தை" என்றான்.
"நாங்களே படுக்க வச்சுக்குறோமேப்பா" என்று சக்கரவர்த்தி கூற,
"ம்ஹும்.. காலைல இருந்து பாப்பா கூட இல்லவே இல்லை. நான் தான் வச்சுப்பேன்" என்றான்.
'லக்கி தான் எனக்கு எல்லாமே' என தூக்கத்தில் பிதற்றியபடி சாரா அவன் கழுத்தில் முகம் புதைக்கவும் சிலிர்த்துப் போனவன் முகத்தில் கர்வமாய் ஒரு புன்னகை.
தந்தைகளுக்கேயான கர்வம் அதில் தென்பட்டது…
"பார்த்தீங்களா என் பேபிடால?" எனப் பெருமையாக் கூறிக் கொண்டு அவன் செல்ல, புன்னகையுடன் அவனைப் பார்த்த ராதா,
"கண்டிப்பா அந்தக் குழந்தைய அவன் தத்தெடுத்துடுவான்" என்று கூறியதும்,
"ம்ஹீம்.. அவ தான் அவனை தத்தெடுத்துட்டா" என்றார்.
Comments
Post a Comment