திருப்பம்-60

 திருப்பம்-60



அங்கு வீட்டுப் பின்புறத்தில் வடிவேலை அணைத்துக் கொண்டு விசும்பி விசும்பி அழுத தனலட்சுமி, “ஒன்னய யாருயா அவேம் இடிக்க பாத்து வண்டிய வுட சொன்னது?” என்க,


“ஆமா நாந்தேம் வாடா வந்து இடிச்சுக்கனு போயி நின்னேம் பாரு” என்று கூறினான்.


அவனை நிமிர்ந்து பார்த்து முறைத்தவள், அவன் கரத்தை எடுத்துப் பார்த்தாள்.


அவள் பார்வைத் தழுவி, குணமடையும் காயமாக அது மாறும் விந்தையை உணர்வதாய் தோன்றவே, ‘காதல் எத்தனைப் பைத்தியக்காரத்தனமான அழகு?’ என நினைத்துச் சிரித்துக் கொண்டான்.


“நிஜமாவே சிராய்ப்பு மட்டுந்தானா? எலும்புலலேம் ஏதுமில்லதான?” என்று மிரட்டலாய் தனம் கேட்க,


“ஒனக்குப் போயி தங்கபுள்ள அய்யோ பாவும் தனம் அழுவுது அண்ணேனு வெசனபட்டுச்சுப் பாரு. நீயு என்னய இந்த மெரட்டு மெரட்டிகிட்டு அலையுத” என்றான்.


“ஆமா ஒன்னும் கேக்கமுடிலயேனு கரிச்சுட்டுதேம் நின்னேம். இந்தா வந்துட்டீயதான? வந்த அழுவய வீனாக்காம கட்டிபுடிச்சு கரிச்சு ஓஞ்சுபுட்டேம். இப்பத நாந்தான ஒங்கள கவணிக்கனும்?” என்று விழிகள் உருட்டிக் கேட்டவள், “கேட்டதுக்கு பதிலச் சொல்லுவ” என்க,


“நெசத்துக்குமே காயந்தாம்த்தா. கொஞ்சம் பெரிய காயமாருக்கேனு இம்புட்டு பெருசா கட்ட போட்டிருக்காவ” என்றான்.


“காலையிலருந்து ஒத்த சேதியகாணுமேனு எனக்குதேம் மண்டயிடியாருந்துச்சு. நேருல பாத்தாக்க நுள்ளியே சதய எடுப்பமானுதேம் இருந்தேம். நீயளே விழுந்து வாரிகொடுத்துட்டு வந்துட்டீய” என்று அவள் கூற,


“ஏ ஆத்தே” என்று வாயில் கைவைத்துக் கொண்டவன், “ஓம்பேச்சுக்கு எவேனும் தெரிச்சுதேம் ஓடுவாந்த்தா..” என்றான்.


“ஓடத்தான? எதுக்கு மலத்தி (கவிழ்ந்து) விழுந்தீய?” என்று தனம் கேட்க,


“எங்கன ஓட? ஒன்னயவுட்டுபுட்டு ஓட எனக்கு ஏதுத்தா திராணி?” என்று சிரித்தான். 


“பேச்சுக்கொன்னும் கொறச்சலுயில்ல” என்று முகவாயைத் தோளில் இடித்துக் கொண்டாள்.


அவள் முகவாயைப் பற்றி ஆட்டியவன், ஏதோ பேச வர,


“ஏம்லே கொல்லையில தனியா என்னப்பண்ணுற?” என்று தெய்வாவின் குரல் கேட்டது.


அன்னையின் குரலுக்கு அவள்கூட அத்தனை அரண்டிருக்க மாட்டாள். ஆடவனவன் பயந்து விலக,


தெய்வா வருவதன் நிழல் தெரிந்தது.


“நானே பயப்படல. ஒனக்கேம்யா இம்புட்டு பயம்?” என்று அவள் கூற,


“ஏட்டி அனக்கத்தக்காட்டாது அங்கோடிக்குப் போ” என்று அவளைத் துறத்தியபடி முன் சென்றான்.


பின்கட்டிற்கு வந்த தெய்வா, “என்னம்லே?” என்க,


“ஒன்னுமில்லத்தே.. செத்த காத்தாட நிப்பம்னு. உள்ளக்க அம்மா வேற கரிச்சுட்டுருக்கு. மனசுக்கு ஒருமாணிக்காருக்கேனு இங்கன நிக்கேம்” என்றான்.


“அவ பெத்தவலே. பெத்த வவுறு பதறத்தேம் செய்யும். அதுலாம் கண்டுக்காதய்யா ராசா. மைணி காலையில சரியாயிடுவாவ. நீயு ராவும் பொழுதுமா இப்புடி இருட்டுலலாம் நிக்காத” என்று தெய்வா அக்கறையாய் கூற,


“சரித்தே. நீங்க போவ. செத்த நேரத்துல வந்துபுடுதேம்” என்று கூறி அவரை அனுப்பியவன், “ஏத்தா.. மொத நாம்போறேம். நீயு சமயக்கட்டுக்குப்போ” என்று தனத்திடம் கூறினான்.


“ம்ம் ம்ம்.. அதுலலாம் நாங்க பக்காவாதேம் இருப்போம். நீங்க கூடத்துக்குப் போவ” என்று கூறியவள் சமையல்கூடம் செல்ல,


“வெவரந்தேம்” என்றுவிட்டு கூடத்திற்குச் சென்றான்.


“என்னம்லே இம்புட்டு நேரம்? இருட்டுல தொலாவிட்டிருந்தீயளோ?” என்று விக்ரமன் கேட்ட கேள்வியில், அதிர்ந்து விழித்த வேலு, “என்னம்லே?” என்க,


“ஸுச்சு போடுறத சொன்னேம்லே. நீயேம் பதறுற?” என்று கூறி உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான்.


'இவேனுவ தங்கச்சிய லவ்வு பண்ணுறதுக்கு என்னலாம் பாடுபட வேண்டியிருக்கு. அங்க போனா அழுது முடிச்சுட்டு அவோ தெம்பா மெரட்டுரா.‌ இவனுவ ஓட்டுறானுவ. ஆண்டவா' என்று மனதோடு புலம்பியவன், “ஒங்கட்ட பேச திராணியில்லலே. தூக்கமா வருது எனக்கு” என்று கூற,


“அண்ணே அந்தா ரூம்ல தலையாணிலாம் வச்சுட்டேம். போயி படுங்க. அம்மா நீங்களும் போயி படுங்க” என்று கார்த்திகா கூறினாள்.


தண்ணீர் போத்தலுடன் வந்த தனலட்சுமி, “அத்தே இந்தாங்க” என்று சுந்தராம்பாளிடம் கொடுக்க, அவள் தலையை பரிவாய் வருடிக் கொடுத்தவர் அதனை வாங்கிக்கொண்டு சென்றார்.


“ஸ்கோர் பண்றீயளாக்கும்?” என்று சங்கமித்ரா அவளிடம் கேலியாய் கிசுகிசுக்க,


“மாமியாவ கரெக்ட் பண்ண ஐடியா கேட்டவியளாம் என்னய ஓட்டக்கூடாது” என்று அவளுக்கு மூக்கொடை கொடுத்துவிட்டுச் சென்றாள்.


“சரிய்யா.. இப்பதே மணி ரெண்டாவப்போவுது. எல்லாம் போயி படுங்க” என்று கூறிய சுயம்புலிங்கம் எழ,


அனைவரும் அவரவர் அறைக்குச் சென்றனர்.


அறைக்குள் நுழைந்ததுமே தன்னவனை இறுக்கமாய் அணைத்துக் கொண்ட சங்கமித்ரா, “வலி இருக்கா இன்னும்?” என்க,


“இப்புடி புடிச்சுகிட்டு கேட்டா என்னனு நெனவுவருமாம்?” என்று நக்கல் சிரிப்போடு கூறினான்.


“ப்ச்” என்றபடி அவனை அவள் நிமிர்ந்து பார்க்க,


“என்னடி நீயு? முத்தத்தால ஒத்தடம் கொடுப்பனு பாத்தாக்கா, கல்லு உப்ப எடுத்துட்டு வந்து நச்சு நச்சுனு வச்சுட்ட” என்று கேட்டான்.


“ஆசதான்..” என்று இதழ் சுளித்தவள், அவன் கன்னத்தை பட்டும் படாமல் வருடிக் கொடுத்து, “பாத்து இருந்துக்கோங்கங்க. உங்கள இப்படி பார்த்ததும் ரொம்ப பயமா போச்சு” என்க,


லேசான புன்னகையுடன் அவளை அணைத்துக் கொண்டு, “சரிங்க மவாராணி” என்றான்.


“ரொம்ப நேரமாச்சு. படுங்க. கண்ணெல்லாம் சிவந்து இருக்கு” என்று அக்கறையாய் கூறியவள் கூற்றில் இன்னும் புன்னகைத்துக் கொண்டவன் சென்று படுக்க, தானும் அவனோடு படுத்துக்கொண்டாள்.


மறுநாள் காலை அனைவருமே நல்ல உறக்கத்தில் தான் இருந்தனர், அவள் ஒருத்தியைத் தவிர.


முந்தைய நாள் பிறந்தநாள் விழாவிற்காக விடுப்பு எடுத்தாயிற்று. அவள் குழுவில் ஏற்கனவே இன்று இரண்டு நபர்கள் விடுப்பு எடுப்பதால், வீட்டிலிருந்து வேலை பார்க்கும்படியான வாய்ப்பும் இல்லாதுபோக, தூக்கத்தோடு தூக்கமாய் எழுந்து அவசர அவசரமாய் தயாராகினாள், சங்கமித்ரா.


ஆனால் அந்த அவசரத்திலும் கூட, 


‘அன்புள்ள திருமாலுக்கு,


நல்லா சாப்டு நல்லா ரெஸ்ட் எடுங்க. எனக்கு லீவு கிடைக்கலை. அல்ரெடி விசேஷம் அது இதுனு நிறைய எடுத்தாச்சு. இன்னிக்கு ஆபிஸ்ல ரெண்டுபேரு லீவ் வேற. அதனால கண்டிப்பா போயாகனும். நான் கிளம்புறேன். நீங்க எங்கயும் இன்னிக்கு வேலைக்குலாம் அலையாம ரெஸ்ட் எடுங்க. அக்காட்ட சொல்லிட்டுப் போறேன் இன்னொரு முறை ஒத்தடம் வேணும்னா தர சொல்லி. அண்ணாவையும் எங்கயும் அலையாம ரெஸ்ட் எடுக்க சொல்லுங்க. அண்ணாவ மாத்திரைலாம் கரெக்டா எடுக்க சொல்லுங்க. நான் போயிட்டு வரேன்.. ரொம்ப மிஸ் பண்ணுறேன் இன்னிக்கு உங்கள விட்டுட்டுக் கெளம்ப. டாட்டா' என்று எழுதி வைத்துவிட்டு அவன் அருகே சென்றவள், அவன் கன்னத்தில் பட்டும் படாமல் இதழ் ஒற்றிவிட்டுச் சென்றாள்.


கீழே யாரேனும் இருந்தால் சொல்லிவிட்டுச் செல்வோமா? என்று யோசித்தபடி சமையலறைக்குள் சென்றவள், காலை சிற்றுண்டி ஏதும் செய்து உண்டுவிட்டு செல்வோமா என்று துளாவிக் கெண்டிருக்க,


“என்ன பண்ணுத?” என்று அதட்டலாய் அவள் பின்னே தெய்வாவின் குரல் கேட்டது.


அதில் திடுக்கிட்டுத் திரும்பியவள் அவரைக் கண்டு ஆசுவாசப் பெருமூச்சை வெளியிட்டு, “சா..சாப்பாடு” என்று இழுத்தாள்.


அவளை மேலிருந்துக் கீழ் ஒரு பார்வை பார்த்தவர், “லீவு போடத்தான?” என்று கேட்க,


“ஏற்கனவே லீவு போட்டாச்சு அத்தை. இன்னிக்குக் கூட வேலைப்பாக்குறவங்க ரெண்டு பேர் வேற வரலை. வேலையிருக்கும்” என்று கூறினாள்.


சிறு தலையசைப்புடன் சென்றவர் இரண்டு தக்காளியை அவள் கையில் கொடுத்து, “அறிஞ்சு ஒனக்கு மட்டும் சட்னி வச்சுக்க” என்று கூற,


பூம் பூம் மாடுபோல் தலையாட்டிவிட்டுச் சென்றாள்.


வேகமாய் அவள் சட்னியை அரைக்க,


தோசையைச் சுட்டபடியே நான்கு காய்கறிகளை வெட்டியவர் அவலை நீரில் அலசியெடுத்தார்.


காய்கறிகளும், பிரியாணிக்குப் போடும் மசாலாக்கலும் கொஞ்சம் கொஞ்சம் போட்டவர், அதில் அலசி வடிகட்டிய அவலைக் கொட்டி அவல் உப்புமாவிற்கு ஆயத்தம் செய்தார்.


வார்த்தெடுத்த தோசையை போட்டு அவளிடம் கொடுத்தவர் வேலையைத் தொடர, அரைத்தச் சட்டினியுடன் சேர்த்து அவசர அவசரமாய் உண்டு முடித்தாள்.


உப்புமாவை டப்பாவில் அடைத்தவர் அவளிடம் நீட்டி, “வெஞ்சினம் என்னமாது வாங்கிக்கிடு” என்க,


புன்னகையுடன் தலையசைத்தாள்.


“எம்புள்ள உங்கினியானு கேட்டா சொல்லு. அப்புறம் எம்பொஞ்சாதிய பட்டினியா அனுப்பிட்டீயளோனு விறைச்சுகிட்டு நிப்பியான்” என்று அவர் கூற,


புன்னகை மங்கத் தலையசைத்தாள்.


அத்தோடு தன் பணி முடிந்ததென அவர் சென்றுவிட அவளும் புறப்பட்டு வேலைக்குச் சென்றாள்.


சூரியன் பிரகாசமாய் ஒளி வீசி வெம்மை பரப்பியப் பின்புதான் அவ்வீட்டார் யாவருமே தூக்கம் கலையத் துவங்கினர்.


இரவு வெகு தாமதமாய் உறங்கியதால் அனைவருமே தாமதமாய் எழுந்துவர,


அனைவருக்குமான தேநீரைத் தயாரித்துக் கொண்டிருந்த கார்த்திகா குவளைகளை அடுக்கினாள்.


ஒரு குவளையை எடுத்து மீண்டும் அலமாரியில் தெய்வா வைத்திட, “உங்களுக்கு டீ வேணாமாத்தே?” என்று கேட்டாள்.


“எனக்கு ஊத்து. ஓன் ஓரகத்திக்குதேம் வேணாம்” என்றவர், “ஒடனே அவோ வவுத்துலே அடிச்சேங்காதட்டியம்மா. அவோ வேலைக்கு போயிட்டா” என்று கூற, ஏதும் பேசாது தலையை மட்டும் ஆட்டிக்கொண்டாள்.


அறையில் உறக்கம் கலைந்து எழுந்த வளவன் சென்று குளித்துமுடித்து வந்து ரெடியோவின் அடியிலிருந்த தாளையும் சங்குப்பூவையும் கண்டு அதனருகே சென்றான்.


தாளை எடுத்துப் பார்த்து படித்தவன் உடனே அவளுக்கு அழைத்துவிட, சில நிமிடங்களில் அழைப்பு ஏற்கப்பட்டது.


“ஏட்டி ராவுக்கு நீயு தூங்கின நேரமென்ன கெளம்பி போன அழகென்ன? உங்கினியாடி மொத?” என்க,


“அத்தை தோசை சுட்டுக்கொடுத்து மதியத்துக்கும் அவல் உப்புமா கட்டித்தந்திருக்காங்கங்க. அதான் லெட்டர்ல தெளிவா சொல்லிருக்கேன்ல?” என்று கேட்டவள், “தொரசார் ராவுக்கு லேட்டா தூங்கவிட்ட நாளுல கூடத்தான் மறுநாள் கிளம்பி வேலைக்கு வந்திருக்கேன்” என்று முனகினாள்.


அதில் அவன் இதழ்கள் பூவாய் மலர, “கொழுப்புதேம்டி ஒனக்கு” என்று கூறிக்கொண்டான்.


“போயி சாப்டு ரெஸ்ட் எடுங்க. வேலைக்குலாம் நாளைக்கு போயிக்கலாம்” என்று அவள் கூற,


“இத நாஞ்சொல்லனும்டி” என்றான்.


“நான் ஒன்னும் யார்டையும் போய் அறை வாங்கிட்டு வரலைங்க மிஸ்டர் திருமால். நீங்கதான் வாங்கிட்டு வந்திருக்கீங்க” என்று அவள் கூற,


“ஏத்தம்டி ஒனக்கு. வவுறு கூவுது. உன்னய பொறவு வச்சுகிடுதேம்” என்று கூறினான்.


“போயி சாப்பிடுங்க. நான் வைக்குறேன்” என்று அவள் கூற,


“சரிமா” என்றபடி கீழே சென்றான்.


கூடத்தில் அனைவரும் கூடியிருக்க, கூடுதலாய் அவனது இரண்டு அக்கா, அக்காவின் கணவன்மார்கள், மற்றும் அவிநாஷ் வேறு கூடியிருந்தனர்.


“ஏடே மாப்ள.. யாரும்லே அது? நம்மூட்டு புள்ளைய மேல கைய வச்சுருக்காம்?” என்று சிவபாதசேகரன் கேட்க,


அறைக்குள்ளிருந்து வந்த வடிவேல் கூட்டத்தைப் பார்த்து ஒருநொடி திடுக்கிட்டுத்தான் போனான்.


“யாரும்லே ஆல்-இன்டியா ரேடியோக்கு சேதி சொன்னது?” என்று வடிவேல் கிசுகிசுப்பாய் நண்பனிடம் கேட்க,


கூட்டத்தைக் கண்டு அரண்டு ஆயாசமடைந்திருந்த அவனும் “ஆரு கண்டா?” என்றபடி வந்தான்.


“யாரும்லே அது? கேசு போட்டியளா இல்லயா? அவேன உள்ள போட்டானுவளா? இல்லினா சொல்லு. நமக்கு தெரிஞ்சவருதேம் கமிஷினரு. போன போட்டு பேசிபுடுவம்” என்று மகாதேவன் கூற,


“அய்யோ அத்தான். செத்த சும்மா கெடங்க” என்று கூறினான்.


“என்னடா சும்மாருக்குறது? அவிய பேசட்டும். மொகத்தப் பாரு” என்று அவன் தாடை பற்றி ஆட்டியபடி திரிபுரா கூற,


“அதானக்கா.. இந்தா வேலு கையப்பாருவ” என்று தீபிகா வருத்தமாய் கூறினாள்.


“ஆத்தே.. என்னம்லே இம்மாம்பெரிய கட்டு” என்று திரிபுரா கூற,


“ஏன்டா கண்ணு செவந்துருக்கு. நைட்டு தூங்கலையா?” என்று அவிநாஷ் வடிவேலுவிடம் கேட்டான்.


நண்பன் முகம் கண்ட வளவன், “என்னம்லே ரொம்ப வலிக்கா? ஒறங்கலையாக்கும்?” என்று அக்கறையாய் கேட்க,


“அண்ணே இருங்க நாங்கொஞ்சம் காபி தண்ணி ஏதும் கெண்டாரேம்” என்று கார்த்திகா உள்ளே சென்றாள்.


“ஏட்டி அதெல்லாம் வேணாம். ரெண்டு சொம்பு பழஞ்ஞியும் ரெண்டு காச்சின கரண்டியும் கொண்டா. சுத்தி கொலு மோரா கொடுத்தா கண்ணும் விட்டுப்போவும்” என்று திரிபுரா கூற,


“ஏட்டி தனம்.. நீயும் போ. போயி ஆளுக்கொரு சொம்பு மோரும், கரண்டியும் கொண்டாங்க” என்று தீபிகா கூறினாள்.


“எங்க இந்தூட்டு ரெண்டாது மவாராணிய ஆளயே காணும்? இன்னும் முழிக்கலியாக்கும்?” என்று திரிபுரா நீட்டி முழக்க,


அனைவரும் அவிநாஷை அதிர்வாய் பார்த்தனர்.


அவன் உள்ளுக்குள் தோன்றிய அதிருப்தியையும் வருத்தத்தையும் முகத்தில் காட்டாது அவர்களை நோக்க,


திரிபுராவுமே அப்போதுதான் அவனை கவனித்தாள்.


சிவபாதசேகரன் மனைவியை முறைக்க, “ஆள காணலியேனு கேட்டேம்” என்று சமாளிப்பாய் கூறினாள்.


“அவோ வேலைக்குப் போயிருக்கா” என்று தெய்வா கூற,


அக்காவை முறைத்துவிட்டு அவிநாஷ் மற்றும் மகாதேவனுக்கு இடையே வளவன் அமர்ந்துகொண்டான்.


அவிநாஷ் கரத்தை அழுத்திப் பிடித்துக்கொண்ட வளவன் மன்னிப்பாய் ஒரு பார்வை பார்க்க, அவன் கரத்தைத் தட்டிக் கொடுத்துக் கண்கள் மூடித் திறந்துகொண்டான்.


சிவபாதசேகரன் அருகே சென்று வடிவேலு அமர, பெண்கள் இருவரும் நெருப்பில் காட்டிய கரண்டியையும் ஒரு சொம்பு மோர் அதிகம் ஊற்றிய பழைய சாதமும் கொண்டு வந்தனர்.


கார்த்திகா வளவனிடம் வந்து மோரைக் கொடுக்க, தனம் வடிவேலுவிடம் கொடுத்தாள்.


அத்தனைபேர் இருக்கவும் அவன் பயத்தில் அவளை நிமிர்ந்து பார்க்காது வாங்கிக்கொள்ள,


“செத்த நிமுந்து பாத்தீயனா சுத்தி வச்சுபுடுவேம்” என்றாள்.


‘அகம்பாதம் புடிச்சவ’ என்று எண்ணியபடி அவன் நிமிர,


கரண்டியை சுற்றி அவன் சொம்பினுள் நுழைத்து எடுத்தாள்.


கார்த்திகாவும் அதேபோல் செய்ய, இருவரும் அம்மோரைக் குடித்து முடித்தனர்.


“என்னடா ஆச்சு?” என்று அவிநாஷ் கேட்க,


“சோலியில ஒரு ஒடக்குண்ணே. பெருசா ஒன்னுமில்ல. நம்ம பூமூட்டய திருடி வித்திருக்கியான். கேக்க போன எடுத்தல இவேன வண்டி வச்சு அடிச்சு பிரச்சனயா போச்சுது. போலீஸுல சொல்லிட்டுதேம் வந்தோம்” என்று வளவன் கூறினான்.


“ஒங்களுக்குலாம் யாருண்ணே சொன்னது?” என்று வடிவேல் கேட்க,


“அம்மாதேம் சொன்னுச்சு” என்று திரிபுராவும் தீபிகாவும் ஒன்றுபோல கூறினர்.


அவிநாஷை அனைவரும் பார்க்க, “ஒங்களுக்குலாம் கேள்வியே வேணாமுங்கத்தான்” என்று கார்த்திகா கூறினாள்.


“மாமியாவும் மருமவுளும் சேதி பரப்புறதுல ஒட்டுக்காருக்கீயதேம்” என்று வடிவேல் கூற,


வளவன் தன் அன்னை முகத்தைப் பார்த்து வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டான்.


“டேய் வேலு.. பெருசா எதுவுமில்லத்தான?” என்று மகா கேட்க,


“ஒன்னுமில்லண்ணே. ஆஸ்பத்ரி போயிட்டு ஊசியெல்லாம் போட்டுகிட்டுதேம் வந்தேம்” என்று கூறினான்.


“சரிடே.. ரெண்டேரும் சூதானமாருந்துக்கோவ” என்று மகா கூற,


“ஆமாலே. பூமூட்டைக்கு இம்புட்டுக்கு எறங்கிருக்காவ. பாத்து சூதானமாருந்துக்கோவ” என்று சிவபாதசேகரனும் கூறினான்.


ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட வடிவேலும் வளவனும், “சரிங்கத்தான்” “சரிங்கண்ணே” என்று கூற,


“பாப்பா சொல்லவும் ரொம்ப பயமா போச்சுடா வளவா. அதான் ஓரெட்டு நேருல பார்த்துட்டு போயிடலாமேனு வந்தேன். வேலைக்கு நேரமாச்சு. நாங்கெளம்புறேன்” என்று அவிநாஷ் கூறினான்.


“தம்பி நம்மூட்டுக்கு வந்துட்டு உங்காம போனா எப்புடி?” என்று தெய்வா கேட்க,


“ஆமா தம்பி. வந்தது வந்தாச்சு. சாப்டு போங்க” என்று தீபிகா கூறினாள்.


“இல்லக்கா. சாப்டுதான் வந்தேன். நம்ம வீடுதானே? கண்டிப்பா இன்னொரு நாள் வரேன்” என்றவன் வளவள் மற்றும் வடிவேலுவுக்கு அறிவுரை வழங்கிவிட்டுப் புறப்பட்டான்.




Comments

Popular posts from this blog

திருப்பம் -01

திருப்பம்-03

திருப்பம் -02