திருப்பம்-61

 திருப்பம்-61



நாட்கள் சில கடந்திருந்தது…


சுயம்புலிங்கம், விக்ரமன், வடிவேலு, திருமாவளவன், மகாதேவன், மற்றும் கார்த்திகா ஆகியோர் கூடத்தில் அமர்ந்திருக்க, சங்கமித்ரா மற்றும் தனம் கூடத்திலேயே கீழே அமர்ந்து ஒளிசுடரை மடியில் போட்டுக்கொண்டு பூக்கட்டிக் கொண்டிருந்தனர்.


தெய்வா சமையலறையை சுத்தம் செய்துகொண்டிருக்க,


“என்னம்லே என்னதாம் செய்யனுருக்க?” என்று மகாதேவன் கேட்டான்.


“தெரிலயே அத்தான். நியூஸுல மழைக்கு வாய்ப்பிருக்குனு சொன்னதால எல்லாம் கதிரறுத்துடுவோமுங்காவ. இன்னும் ரெண்டு நா போனா பொங்கலு. பொறுத்து பொங்கலுக்கே அறுத்துபுடுவமானு யோசனையாருக்கு” என்று விக்ரம் கூற,


“நடுவுல மழ காட்டிபுட்டா அம்புட்டும் வீனா போவுமேலே… வருசா வருசம் பொங்கலுக்கு மட்டுந்தேம்லே நெல்லு போடுதோம். அத உருப்படியா எடுக்கவேணாமா?” என்று வடிவேலு கேட்டான்.


“அதேம் நானும் சொல்லுதேம் அண்ணே. இவியதேம் பொங்கலுக்கு அறுத்து பழகியாச்சேனு யோசிக்காவ” என்று கார்த்திகா கூற,


“நீய என்னம்லே பண்ண போதீய?” என்று சுயம்புலிங்கம் இளைய மகன் மற்றும் அவன் தோழனிடம் கேட்டார்.


“எங்களுக்கென்ன மாமா. ரப்பரு தோட்டத்துக்கு வம்பேயில்ல. தென்னந்தோப்பு பக்கட்டு பெருசா வேலையில்ல. அங்கனதேம் பொங்க வக்கப்போறோம்ன? அதனால மஞ்ச கொழாவும் காப்பும் கட்டுற சோலிதேம்” என்று வடிவேல் கூற,


“நீயு பொங்கலுக்கு ஏதும் எடுக்கனுமுனு ரோசிக்கிலியாலே?” என்று மகா கேட்டான்.


“நான் நெல்லா அத்தான் போட்டிருக்கேம்? ரப்பருதான? தென்னையிலயும் தேங்க பறிக்க வேலையில்ல இப்ப” என்று வளவன் கூற,


“நீங்க என்ன யோசிக்கீய?” என்று கார்த்திகா தன்னவனிடம் கேட்டாள்.


“நல்லா ரோசிச்சு முடிவெடுலே. பொறவு வம்பா போச்சுன்னா மில்லுகாரி பத்து பைசா நவட்ட மாட்டா ஆமா” என்று மகாதேவன் கூறி சிரிக்க,


“ஆமா ஆமா. நான் ரொம்ப கராரான ஆளாக்கும்” என்று கார்த்திகாவும் கேலியில் இறங்கினாள்.


சரியாய் அவ்விடம் வந்த தெய்வா, “இஞ்சாருடி.. ஆருக்கு ஆரு படியளக்குறது? கணக்கு பாத்துபுட்டா நீயுதேம் அவேனுக்கு படியளப்பேம்பியோ?” என்று கத்த,


“தெய்வா அனக்கத்தக் கூட்டாம போயிடு. வரவர வார்த்த அம்பூட்டும் தேளாதேம் வருது ஒனக்கு” என்று சுயம்புலிங்கம் கூறினார்.


முகம் வாடி அமர்ந்த தன் மனையாளைப் பார்த்த விக்ரம், “மில்ல தொவங்க மொதலு போட்டதும் அவதேம், மில்லு இருக்குறதும் அவோ பேருலதேம், மில்லுக்கு ஓனரும் அவோதேம். அவ படியளந்து கஞ்சி குடிச்சா நாவொன்னும் கொறஞ்சுட மாட்டேம்” என்று கூறிவிட,


கார்த்திகா அவனை விழிகள் விரிய பார்த்தாள். 


'தேரிட்டய்யா புருசா’ என்ற கூற்று அவள் பார்வையில் இருக்க மனதிற்குள் லேசாய் சிரித்துக் கொண்டவன் அன்னையை அழுத்தமாய் பார்த்தான்.


“ஆருக்கு ஆரு சொல்லித்தந்தாவனுதேம் தெரியில. எல்லாம் எங்கிட்ட ஒடக்கிழுக்கத்தேம் வாரீய” என்ற தெய்வா சங்கமித்ராவை முறைத்துவிட்டுச் செல்ல,


'நாம்பாட்டுக்கு சிவனேனுதானம்மா இருந்தேன்’ என்பதாய் அவரைப் பார்த்துக் கொண்டு தன் வேலையைத் தொடர்ந்தாள்.


ஒரு பெருமூச்சுடன் அனைவரும் மீண்டும் பேச்சில் இணைய, “சரி பாக்கேம் ஐயா. ஆளுவளுக்கு சொல்லி வைக்கேம். சரினுபட்டா பொங்கலன்னிக்கு அறுக்க கொஞ்சத்த விட்டுபோட்டு மித்தத நாளைக்கு அறுத்துபுடுவோம்” என்று விக்ரமன் கூறினான்.


“ஏங்க சுடர கூட்டிகிட்டு போயி அறுப்பம்முங்க. போன பொங்கலுக்கு பச்ச புள்ளனு அத கூட்டிகிட்டு போவ முடியல” என்று கார்த்திகா ஆசையாய் கேட்க,


“அதுக்கென்னத்தா? புள்ளயவே மொத கதிர அறுக்க வச்சுபுடுவோம். என்னய்யா?” என்று சுயம்புலிங்கம் கேட்டார்.


“சரிங்கய்யா” என்ற விக்ரமன், “அத்தான் நீங்களும் புள்ளையல இட்டுவாங்க. எல்லாஞ் சேந்து அறுக்கட்டும்” என்று கூற,


“சரிலே பெரிய மனுசா” என்று கூறினான்.


“நீங்க தாம்லே அனக்கத்தயே கூட்டாம உக்காந்தருக்கீய” என்று மகா, வடிவேலு மற்றும் வளவனைப் பார்த்துக் கூற,


ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டவர்களில் வளவன், “எங்க பொழப்பு அப்புடி. ரப்பரு தோட்டதுல மரத்துக்கெல்லாம் மஞ்ச பூச ஆளு விட்டிருக்கோம். நாள போயி நான் மரத்த வெட்டி பெட்டிய வச்சுடுதேம். மறுநாளுக்கு பூசைக்கு முன்னுக்கு போயி தூக்கிட்டு வாரம். பூந்தோட்டத்துல இப்பதேம் ஒரு செட்டு எடுத்து அனுப்பினது. சும்மா நாலு பூவு பறிச்சுகிட்டு கொண்டாந்துடுரோம்” எனக் கூறினான்.


“சரிலே. நானே அந்த ரப்பர பூசய முடிச்சுட்டு எடுத்துக்கேம்” என்று மகா கூற,


“எப்பவும் அது ஒங்களுக்குதேம் அத்தான்” என்று கூறினான்.


அன்றைய நாளே வேலையின் பரபரப்போடு செல்ல பெரும் அலைச்சலுக்குப் பின் தூங்கியிருந்த திருமாவளவன், மாலை பொழுதில் கண் விழித்தான். அவனுக்கான தேநீருடன் அவனை எழுப்ப வேண்டி அறைக்குள் நுழைந்தாள் சங்கமித்ரா.


தேநீர் கோப்பையை நீட்டிக் கொண்டு நின்றவளது முகத்தில் இருந்த மறைக்க இயலாத சோகத்தைக் கண்டு, கோப்பையை வாங்கி மேஜையில் வைத்தவன், அவள் விரல் சுண்டி இழுக்க, நிலை தடுமாறி அவன்மீது சாய்ந்தாள்.


அவள் வெற்றிடையை வாகாய் பற்றிக் கொண்டு, அள்ளிக்கொடியாய் சுருட்டித் தன் மார்பில் போட்டுக்கொண்டவன், "என்னமா மொகம் வாட்டமாருக்கு?" என்று கேட்டான்.


அமைதியாய் அவன் நெஞ்சில் தலைசாய்த்து, விரல்களை ரோமம் படர்ந்த அவன் மார்பில் வைத்து கிறுக்கலிட்டவள் கண்கள் கலங்கிவிட்டது.


அதை மறைக்கும் பொருட்டு முகத்தை தாழ்த்தி அவன் மார்ப்புக்குள் அவள் புதைய, அவள் நாடி பற்றி வலுக்கட்டாயமாய் அவள் முகம் நிமிர்த்தினான்.


"என்னனு கேட்டேம்ல?" என்று அழுத்தமாய் திருமாவளவன் வினவ,


"ம்..ம..மண்ணாந்தனா என்னங்க?" என்று கேட்டாள்.


அவளை புருவம் சுருங்க பார்த்தவன், "யாரு சொன்னா அப்புடி?" என்று கேட்க,


"அப்படினா என்ன?" என்று உடையக்காத்திருக்கும் குரலில் கேட்டாள்.


"யாரு சொன்னாவனு கேட்டேம்" என்று மீண்டும் அவன் கேட்க,


"அ..அத்தை" என்று கூறினாள்‌.


மேலும் ஏதோ பேச வந்து அவள் மென்று விழுங்குவதைக் கண்டவன், "மித்ரா.." என்று அழைக்க,


"பெரியண்ணியும் அண்ணாவும் வந்திருக்காங்க. அண்ணி என்னமோ எடுத்துட்டுவரச் சொல்ல எனக்கு அது என்னதுனு புரியல. என்னதுனு கேட்டதுக்கு அ..அத்தை இ..இ..இது ஒரு ம..மண்ணாந்த ஒன்னும் தெரியாதுனு சொல்றாங்க. அ..அண்ணியும் ஒருமாதிரி சிரிக்குறாங்க" எனக் கூறி முடிப்பதற்குள் அவள் தொண்டைக்குழி ஏகத்துக்கும் ஏறி இறங்கியது.


கண்களைக் கரித்துக் கொண்டு அப்படியொரு கண்ணீர் பீறிட்டது.


"அ..அப்படினா என்ன?" என்று மீண்டும் அவள் கேட்க, தன் கரங்களுக்குள் அவள் கன்னம் பொத்தியவன் அவள் இதழில் ஆழப்புதைந்தான்.


கண்களில் கண்ணீர் பெருகியோட தானும் அவனுள் புதைந்தவள் அவன் சட்டையை இறுக்கமாய் பற்றிக் கொள்ள, அவளிடமிருந்து விலகியவன், அவள் கரம் பற்றி எழுப்பினான்‌.


பயந்துபோனவள், "ம்ஹும்.. அண்ணா வீட்டாளுங்க எல்லாம் இருங்காங்க" என்று கூற,


"உன்னய பேசும்போதும் இருந்தாவ தான?" என்று பற்களில் வார்த்தைகளைக் கடித்துத் துப்பியவன் அவளை இழுக்காத குறையாய் அழைத்து வந்தான்‌.


தெய்வநாயகி தன் மகளுக்கென்று போட்டக் கருப்பட்டிக் காப்பியை ஆற்றிக் கொண்டு வர,


அவளிடம் கொடுக்கும் முன் அதை வாங்கி சுவரில் ஓங்கி வீசியிருந்தான்.


மொத்த வீடுமே அதன் சப்தத்தில் அரண்டு போனதென்றால், சங்கமித்ரா பயந்து அவன் முதுகோடு ஒன்றி, "வேண்டாங்க" என்று ஈன சுவரத்தில் கெஞ்சினாள்.


அவளைத் திரும்பிப் பார்த்துத் தீயாய் முறைத்தவன், அன்னையின் புறம் திரும்ப,


பொங்கல் விழாவிற்காக துணி கொடுத்துவிட்டு, அவர்களுக்கான சீர் துணிகளை வாங்க வந்த சிவபாதசேகரனும் அவனது பெற்றோரும் திருமாவளவனின் ரௌத்திரக் கோலத்தில் அரண்டு எழுந்தனர்.


"என்னம்லே இது? அம்மா முன்னுக்க இப்படியொரு கோபம் ஒனக்கு?" என்று கத்தியபடி திரிபுரா எழுந்து நிற்க,


அக்காவைப் பார்த்தானே ஒரு பார்வை. தான் பார்த்திடாத ஒரு திருமாவளவன் இவன் என்று அப்பார்வை ஒன்று உணர்த்திட, அதன்பின் பேசுவாளா அவள்?


"ஏம்மா.. பட்டம் ரெண்டு படிச்சு கைநெறக்க இந்த வீட்டுக்கு சம்பாதிச்சும், பொங்கியும் போடுற எம்பொண்டாட்டி ஒனக்கு மண்ணாந்தையா போயிட்டாளா?" என்று திருமாவளவன் கேட்க,


தெய்வா கோபமாய் சங்கமித்ராவைப் பார்த்தார்.


"அதுசரி.. சும்மா நளி அடிச்சதுக்கு உம்பொண்டாட்டி கரச்சிட்டாளாக்கும்? கடலத்தான் கண்ணுல வச்சுருக்காம்லே" என்று திரிபுரா கூற,


"அக்கா.. உங்கிட்ட பேசலை. உன் வீட்டு ஆளுவ முன்னுக்க உம்மரியாதைய கெடுத்துகிடாத" என்றவன் அன்னையைப் பார்த்து, "தனியாருக்கும்போது இப்படியொருவார்த்தய அவளச் சொல்லிருந்தாளே பொறுத்திருக்க மாட்டேம். நாலு பேரு முன்னுக்க எம்பொண்டாட்டிய முட்டாளுங்குற அளவுக்கு அவ என்னம்மா கொறஞ்சு போயிட்டா?" என்றான்.


"ஆமா.. படிச்சு பட்டம் வாங்கிட்டா ஆச்சாடா? சிப்பல கொண்டா வட்டில கொண்டானா ஆ ஆனு முழிக்குறா. இவள மண்ணாந்தங்காம என்னனு சொல்ல?" என்று தெய்வாவும் வார்த்தையை விட்டுவிட,


அதிகபடியான கோபத்தில் எங்கே பெரியவர்கள் முன்னிலையில் அன்னையை ஏதும் சொல்லிவிடுவோமோ என்ற ஆத்திரத்தோடு அருகே கிடக்கும் பானையைத் தூக்கி வீசினான்.


சரியாக அப்போதே வேலை முடித்து சுயம்புலிங்கம், கார்த்திகா மற்றும் திருவிக்ரமன் வர, இக்காட்சியைக் கண்டு அதிர்ந்தே விட்டனர்.


"அம்புட்டுக்கு ஒன்னும் அவ வெவரங்கெட்டு போயிடல. நான் அவள நாலு வார்த்த இங்கிலிஷ்ல பேசச் சொல்றேனே. ஒங்களுக்கு புரியுதானு பாப்பமா?" என்று கேட்டானே ஒரு கேள்வி.


தெய்வநாயகி அவமானத்தில் அதிர்ந்து நிற்க,


"வளவா.. என்னதிது? என்ன சலம்பலு?" என்று சுயம்புலிங்கம் கேட்டார்.


"வாங்க ஐயா.. எம்பொண்டாட்டிட்டுக்கு சிப்பலு வட்டலு என்னனு தெரியலையாம். அதாம் ஒங்க மவளும் பொண்டாட்டியும் அவள மண்ணாந்தனு வைதாவ.. ச்ச.. இல்ல இல்ல. நளி (கேலி) பேசுதாவ" என்றவன்,


"நல்லா பாத்துக்கங்கம்மா. இவ எம்பொண்ணாட்டி. என்னுல பாதிலாம் இல்ல. நானும் அவளும் ஒன்னுதேம். நளி பேசுறதுக்கும் நாலு பேரு முன்னுக்க அசிங்கப்படுத்துறதுக்கும் வித்தியாசம் இருக்கும்ல? இவள பேசுறது அம்புட்டும் என்னையும் சேரும்" என்று உறுமினான்.


சுயம்புலிங்கம் சங்கமித்ராவைப் பார்க்க, கண்ணீருடன் தன்னவன் பின் நின்றுகொண்டு அவரிடம் கையெடுத்து கும்பிட்டாள்.


மன்னிப்பை இறைஞ்சியபோதும் 'என்னாலதான் சண்டைனு நீங்களும் சொல்லிடாதீங்க மாமா' என்ற வேண்டுதல் அவள் விழிகளில் இருந்தது.


அதை கண்டு வேதனையுற்றவர், "லே.. அவோள உள்ளார கூட்டிட்டுப். போ" என்று கூற,


தந்தையைப் பார்த்தான்.


"நான் பேசிகிடுறேம்லே. நீ போ" என்று அவர் கூற,


மனையாளைத் திரும்பிப் பார்த்தான்.


கண்களில் நீர் வழிய மருண்டு நின்றுகொண்டிருந்தவளைக் கண்டு ஆத்திரம் கொண்டவன், "பேசித்தான் தொலையேம்டி.. ஒனக்கென்ன தியாகி பட்டமா தரப்போறாவ? கேலி பேசினா புரிஞ்சுக்கத் தெரியாதா? என்ன பேசினீங்க ஏன் பேசினீங்கனு வாயத்தொறந்து கேக்கத்தான? ஒனக்கு ஒன்னுனா நீதேம் கேட்கனும்" என்று கத்தினான்.


அவன் அதட்டலில் திடுக்கிட்டுப்போனவளை ஆதராவய் சென்று பிடித்துக் கொண்ட கார்த்திகா, "கொழுந்தரே அதட்டாதீய" என்று கூற,


"பின்ன என்ன மைணி?" என்றான்.


"ஏம்லே நாமலாம் இல்லியா? இந்தா நீ இப்பம் வந்து கேக்கலையா? அந்த புள்ளையே பயந்துருக்கு" என்று விக்ரமன் உடன் பிறந்தவனை அதட்ட,


"நானும் போய் சேந்தபொறவாட்டி என்னத்தக் கிழிப்பா? நான் தான் வந்து கேக்கனுமா? வாய தொறந்து பேசினாதேம் தோ இப்புடியெல்லாம் அவமானப்படாதபடிக்கு இருக்க முடியும்" என்று கத்தினான்.


அவன் பேச்சில் அதிர்ந்து போன சங்கமித்ர கார்த்திகாவின் கரத்தைப் பயத்தில் இறுக பற்ற, அவள் உடல் வெளிப்படையாய் நடுங்கியது.


"ஏம்லே.. செவுல்லயே விட்டேன்னா புரியும்லே. என்ன பேச்சிது?" என்று சுயம்புலிங்கம் அதட்ட,


"பொறத்தால நாலு போட்டா புரியம்லே.. என்னத்தயாது பேசி அத சங்கடபடுத்தாம போ" என்று விக்ரமனும் கோபமாய் கத்தினான்.


தன்னையே அதிர்ந்த பார்வை பார்த்து நிற்பவள் கரம் பற்றியவன் இழுத்துக் கொண்டு செல்ல,


மகன் ஆடிய ஆட்டத்தில் உண்மையில் ஆடிதான் போனார் தெய்வநாயகி. 


அவன் கோபமும் செயலும் எத்தனை ஆழமாய் சங்கமித்ரா அவனுள் பதிந்திருக்கின்றாள் என்பதை உணர்த்திய அதேநேரம், தன்னை தன் சம்மந்தி வீட்டார் முன்பு அவமானப்படுத்திவிட்டானே என்று ஆத்திரமும் எழுந்தது.



Comments

Popular posts from this blog

திருப்பம் -01

திருப்பம்-03

திருப்பம் -02