திருப்பம்-62

 திருப்பம்-62



நடந்தவை இதுதான்… தனது மகள் வந்தாலே சங்கமித்ராவை எதிரிபோல் பாவித்து நடந்துகொள்பவர் இன்று என்ன மனநிலையில் இருந்தாரோ? மகளோடு சேர்ந்துகொண்டு அவளைப் பற்றி அமைதியாய் குறைபேசிக் கொண்டே இருந்தார்.


ஒரு பாத்திரத்தில் சோற்றைக் கொண்டு வந்து ஆரவைத்துக் கொண்டிருந்த தெய்வா அருகே வந்த திரிபுரா, “என்னத்துக்குமா சோறு இப்பத?” என்க,


“ராவுக்கு கலவயா கலந்து உங்கத்தாம்டி” என்றார்.


“இப்பவே ஆக்க ஆறமிச்சுட்டியாக்கும்?” என்று அவள் கேட்க,


“ஒன்னய வாரச்சொன்னேம்ல? பெரியவளயும் வரச்சொல்லிட்டேம். அதாம் இப்பதருந்தே ஆரமிச்சுடுவம்னு” என்று கூறியவர், “ஆத்தா.. சிப்பல எடுத்தார மறந்தேனே” என்று எழ முற்பட்டார்.


“நீ இரும்மா” என்று கூறிய திரிபுரா, “சங்கு” என்று உரக்க அழைக்க,


சமையலறையிலிருந்து ஓடி வந்தாள்.


“போயி சிப்பலெடுத்தா” என்று அவள் கூற,


“எ..என்னது மைணி?” என்று புரியாது விழித்தாள்.


“சிப்பலெடுத்தாம்லே” என்று மீண்டும் அவள் கூற,


பெரும் தயக்கத்துடன் விழித்தாள்.


சிவபாதசேகரன் வெளியே அலைபேசியில் பேசிக் கொண்டிருக்க, அவனது பெற்றோர் கொண்டுவந்த துணிகளை தாம்பாலத்தில் அடுக்கியபடி நடப்பதை அவ்வப்போது வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.


“ஏ மக்கா.. இந்தூட்டுக்கு நீயு வாழ வந்து எம்புட்டு மாசம்லே ஆவுது?” என்று திரிபுரா கேட்க,


“அ..அஞ்சு மாசம் ஆகப்போகுது மைணி” என்றாள்.


“பரிகேடுத்தா.. அஞ்சு மாசத்துல சமய பண்டத்துக்குக்கூடவா பேரு கேட்டு வச்சுகிட மாட்ட?” என்று அவர் கூற,


'அதற்கு முதலில் தெய்வா சமைக்க அனுமதிக்க வேண்டுமே?’ என்று தான் அவளுக்குத் தோன்றியது.


“என்னம்மா இது? இப்புடியா இருப்பாவ?” என்று மேலும் அவள் தாயிடம் கேட்க,


“எல்லாம் நேரம்டி. எம்மூட்டு புள்ளைக்கு அமஞ்ச வாழ்க்க அந்த லட்சனம்” என்று அவர் கூற, திரிபுராவின் மாமனார் மாமியார் அவளை நிமிர்ந்து பார்த்தனர்.


தெய்வாவின் வார்த்தையிலும் பேச்சிலும் மனம் நொந்து நின்றவளுக்கு அவர்களின் பார்வை வேறு அவமானமாய் உணர வைத்தது.


“சரியான மண்ணாந்த (முட்டாள்)” என்று தெய்வா கூற,


சங்கமித்ராவைப் பார்த்து திரிபுரா ஒரு ஏளனச் சிரிப்பை சிந்தினாள். 'இதுக்கு உனக்கு எப்படியும் அர்த்தம் தெரியாது தானே?’ என்று சொல்லாமல் சொன்னது அச்சிரிப்பு.


அமைதியாய் நின்றுகொண்டிருந்தவள் சமையலறைக்குள் சென்றுவிட, சில நிமிடங்களில் தன்னவனுக்காக தேநீர் எடுத்துக் கொண்டு மேலே சென்றவள் அனைத்தையும் கொட்டித் தீர்த்து, அவன் ஆடித் தீர்த்திருந்தான்.


தற்போது சண்டை முடித்து அறைக்குள் வந்தவன் அவளை உதரவிட்டுவிட்டு பால்கனிக்குச் செல்ல,


அவளுக்கு அப்படி அழுகை வந்தது.


வேகமாய் அவனிடம் சென்று நின்றவளுக்கு முகம் திருப்பி அவன் கோபத்தை வெளிப்படுத்த, “எனக்கும் கூட உ..உங்க மேல ரொம்ப கோவமா இருக்கு” என்றவள் அவன் முகத்தை வலுக்கட்டாயமாக தன் புறம் திருப்பி, “சத்தமா அழனும் எனக்கு” என்று கூறினாள்.


அடுத்த நொடி அவளை இழுத்துத் தன் மாரோடு அவன் அணைத்துக் கொள்ள, வெடித்து அழத்துவங்கினாள்.


“உ..உங்கம்மா ரொம்ப பண்றாங்க” என்று அவள் கூற,


'அத்தை' என்ற சொல், ‘உங்கம்மா’ என்று மாரியதை மனம் வலிக்க உணர்ந்து கொண்டான்.


“அ..அவ..அவங்க..அவங்கலாம் பாக்குறாங்க.. எ..எ.. எனக்கு அசிங்கமா போச்சு தெரியுமா?” என்று அவள் கூற,


அவன் கண்களிலிருந்து கண்ணீர் ஊற்றாய் வழிந்தது.


“நா.. நான் அப்படி என்னப் பண்ணேன் அவங்களுக்கு? அவங்க தான பொண்ணு பார்த்து என்னை பிக்ஸ் பண்ணது? அ.. அவங்க பொண்ணுக்கு புடிக்கலைங்கவும் எ..என்னை இப்படிலாம் பேசுறாங்க” என்று கேட்டு அழுதவள் அழுகை சப்தம் இன்னும் அதிகரிக்க, அவன் அணைப்பின் இறுக்கமும் அதிகரித்தது.


“வலிக்குதுங்க.. எ..என்னால சத்தியமா தாங்க முடியல” என்று அவள் கூற,


“சாரிடி” என்றான்.


இம்முறை அவன் மன்னிப்பைக்கூட அவள் தடுக்கவில்லை. அவனைக் குற்றம் சுமத்தி அவ்வாறு அவள் அமைதியாக வில்லை. ஆனால் அவன் மன்னிப்பைப் புறக்கணிக்க வேண்டும் என்றும் தோன்றவில்லை.


அவள் அழுகையின் சப்தம் கொஞ்சம் கொஞ்சமாய் அதிகரித்து, கொஞ்சம் கொஞ்சமாய் தணிந்து வர, அவள் முதுகை வருடிக் கொடுத்துக்கொண்டே இருந்தான்.


அவன் அணைப்பும் வருடலும் ஒரு நிமிடம் கூட நிற்கவில்லை.


அழுது ஓய்ந்துபோன நிலையில் அவளிடமிருந்து பெருமூச்சுகள் மட்டுமே வெளியாக, அவள் உடல் வெகுவாய் சோர்ந்து போனது.


“மித்ரா” என்று அவன் அழைக்க,


“என்னலாம் பேசுறீங்க நீங்க?” என்று கண்களில் கண்ணீர் மின்ன அவனைப் பார்த்துக் கேட்டவள் வெடுக்கென நகர்ந்தாள்.


“நீயு பேசாம இருக்கியே? அதேம் நானு நெறயா பேச வேண்டிபடுது” என்று அவன் கோபம் மாறாதக் குரலில் கூற,


“நாம்பேசிட்டா மட்டும்? அய்யோ அம்மா மன்னிச்சுடு தாயினா சொல்லப்போறாங்க? அப்பவும் எம்புள்ள வாழ்க்கைல வந்து அவன் வாழ்க்கைய கெடுத்துட்டா, எம்புள்ளைய எங்கிட்டருந்து பிரிச்சுட்டானு தான சொல்லப்போறாங்க?” என்று கத்தினாள்.


“அதுக்காவ பேசுறதயெல்லாம் சூடு சொரன இல்லாம கேட்டுகிட்டு இருப்பம்னு நிப்பியாடி?” என்று அவனும் கத்த,


“சூடு சொரன இருந்துட்டாப்ல? எங்கிட்ட வாயகாட்டாம உங்கம்மா அமைதியாகிடுவாங்களா? எப்பப்பாரு எம்புள்ள வாழ்க்கைய கெடுத்துட்டா வாழ்க்கைய கெடுத்துட்டா வாழ்க்கைய கெடுத்துட்டா. ச்சை” என்று கத்தினாள்.


மாறி மாறி ஐந்து நிமிடத்திற்குத் தொடர்ந்து இருவருக்கும் அதுகுறித்தே பெரும் வாக்குவாதம் ஓடியது.


“சும்மா ஏதாது பேசாதீங்க. நான் வாயத்தொறந்தா உங்கம்மா பொட்டிய கட்டி அனுப்பிடுவாங்க. போக வேண்டியதுதான் நானு” என்று அவள் கத்த,


“தனியா போகச் சொன்னா எம்புருஷன கூட்டிகிட்டுத்தேம் போவேம்னு சொல்லத்தான? சொல்லிப்பாரு. பொறவு வாய தொறக்கவே மாட்டாவ” என்றான்.


அவனை ஆயாசமாய் பார்த்தவள், “நானே கூப்டாகூட தனியா வந்துடாதீங்க. சத்தியமா அத்தைக்காக சொல்லலை. விக்ரமத்தான் நொந்தே போயிடுவாங்க” என்றுவிட்டு உள்ளே செல்ல,


பால்கனி கம்பிகளை இறுக பிடித்துக் கொண்டு திரும்பி நின்றான்.


உள்ளே சென்றவளுக்கும் கண்களில் கண்ணீர் பொழிந்தது, பால்கனியில் நின்றவன் கண்களிலும் நீர் நிற்கவில்லை.


'கூப்பிட்டா வருவேன்னு தயாரா சொல்றாங்க. அப்படி நான் என்ன செஞ்சேன் இவங்களுக்கு? பிறந்து வளந்த குடும்பத்த விட்டுட்டு வர்றதுக்கு?’ என்று அவள் எண்ணி அவன் காதலில் உருக,


'இம்புட்டுக்கு பொறவுங்கூட கூப்பிட்டா வராதீயனு எப்புடித்தேம் சொல்றாளோ? அம்புட்டுக்கு நான் என்ன செஞ்சேம்?’ என்று அவள் காதலில் அவன் கரைந்தான்.


வானத்தை வெறித்துக் கொண்டு நின்றிருந்தவன் மனம் நடந்ததைக் கடந்துவர இயலாது தவித்து நிற்க,


உள்ளே அறையிலிருந்து எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்களின் குரல் ஒலித்தது…


‘ஆ…..


நிலாவே வா செல்லாதே வா...


என்னாளும் உன்...


பொன்வானம் நா..ன்


எனை நீதா..ன் பிரிந்தாலும்..


நினைவாலே.. அணைப்பே..னே


நிலாவே வா...


செல்லாதே வா…’ என்று ஒலிக்க மெல்ல அறைக்குள் எட்டிப் பார்த்தான்.


அவர்களது டேப் ரெக்கார்டர் முன் அமர்ந்துகொண்டு அவள் கடிதம் எழுதிக் கொண்டிருக்க, சுவரில் சாய்ந்து நின்று கரங்களை மார்பிற்குக் குறுக்கே கட்டிக் கொண்டு அவளைப் பார்த்து நின்றான்.


கடிதத்தை எழுதி முடித்தவள் நிமிர, அவள் பார்வையின் பாஷை புரிந்து வந்தவன் தாளை எடுத்துப் பார்த்தான்.


'அன்புள்ள திருமாலுக்கு,


வருத்தமா தான் இருக்கு. கஷ்டமாகத்தான் இருக்கு. ஆனா என் சுயமரியாதை பாதிக்கப்படுடுச்சோனு தோன்றலை. என்னால எதிர்த்து பேச முடியலைதான். ஆனா நீங்க பேசிட்டீங்க தானே? அதுபோதும் எனக்கு. இப்படி வாய் திறக்காம இருக்காளேனு உங்களுக்கு கோவமா இருக்குல? என்ன செய்யங்க? எனக்கு வரலை. எனக்கு அவங்கக்கிட்ட அப்படி எதுர்த்து பேச வரலை. அவங்க எதாவது சொன்னா முதல்ல அழுகதான் வருது. அழுறதால நான் கோலைனு தோனுதா உங்களுக்கு? எல்லாரும் அப்படித்தான் என்னை சொல்வாங்க. எதுக்கெடுத்தாலும் அழுதுடுற கவர்ட் கேர்ள்னு. ஆனா என் நேச்சரே இதுதாங்க. எனக்கு வேண்டிய இடத்துல நான் பேசுவேன்தான். ஆனா என்னால அவங்ககிட்ட எதிர்த்து பேச முடியலை. பயமா? தயக்கமா? மரியாதையா? எதுமே தெரியலை. பேசினதும் வருத்தமா இருக்கும். அழுக வரும். ரொம்ப வலிக்கும். கத்தி அழதோனும். ஆனா எதிர்த்துப் பேச வரலைங்க. சாரி. ஒவ்வொரு முறையும் அழுது நான் உங்கள வருத்தப்பட வைக்குறேன்ல? இந்த விஷயத்த என்னால மாத்திக்க முடியலைங்க. முயற்சி பண்ணாம எல்லாம் இல்லை. அவங்க பேசிக்கும் போது எனக்கு புரியும்படி சொல்லுங்கனு கேட்கனும்போலதான் இருந்துச்சு. என்ன பயன்? என்னைக் கேலி பேசனும்னு மோட்டிவோடதான் அவங்க பேசுறாங்க. அப்ப நான் என்ன சொன்னாலும் என்னை சொல்லத்தான போறாங்க? பேசுறதால எம்மனசுக்கு நிம்மதி எதும் கிடைச்சுடுமானு யோசிச்சா இல்லைனுதான் தோன்றுது. அதனாலதான் பேசத்தோன்றலையோ என்னமோ? ஆனா உங்கக்கிட்ட என் வலிகள மறைக்க முடியாதுல்ல? அதான் வந்து கொட்டிடுறேன். எனக்கு என்ன சொல்லனு தெரியலைங்க..’ என்று அவன் படித்து முடிக்க,


அவனையே பார்த்தபடி நின்றுகொண்டிருந்தாள்.


“எனக்குங்கூட என்ன சொல்லனு தெரியலைடி. அம்மா பேசுறாவனு அவியட்ட போயி சண்ட போட்டாலும் அவிய அனக்கத்தக்கூட்டாதிருக்க மாட்றாவ. ஒன்னயும் வெசனப்படாதபடிக்கு வச்சுகிட முடியல” எனக் கூறியவன் காகிதத்தை மேஜையில் வைத்துவிட்டுத் தன் நெஞ்சை தேய்த்துக் கொண்டு, “வலிக்கிடி” என்க,


அவனை இறுக அணைத்துக் கொண்டாள்.


அவள் கழுத்தடியில் முகம் புகைத்தவன், “ஒன்னய நல்லா பாத்துகிடலையோ மித்ரா?” என்க,


அடுத்த வார்த்தை பேச அவன் இதழ்களுக்கு அனுமதியில்லாது பூட்டிக்கொண்டாள்.


சின்னத் தீண்டல், வேதனையின் சுவடுகளைக் கலைக்கும் நோக்கத்தில் இறங்க,


மென் உரசல்களில் மோதிக்கொண்டு திடுமென்ற இசையோடு காதல் துளிகளைப் பொழியும் பெரும்மழையாய், மோகம் ஊற்றெடுத்து இருவரையும் அரவணைத்துக் கொண்டது.


சிப்பியென இருக்கும் அவளது விழிகளை ஆடவன் சிற்பியாய் மாறி தன் இதழ் கொண்டு செதுக்க, அதனில் உரு பெற்ற விழிகளில் காதல் கசிந்துருகியது.


மஞ்சத்தை விடுத்து, கட்டிலருகே கீழே அவளோடு சரிந்தவன், அமைதியாய் அவளில் கரைய, தன் நேசம் பூசிய மொழிகளில் அவனை பாவை ஆராதித்துக் கொண்டிருந்தாள்.


‘பொன்மணி மேகலை ஆடுதே உன் விழி தான் இடம் தேடுதே 

பெண் உடல் பார்த்ததும் நாணுதே இன்பத்தில் வேதனை ஆனதே 

என் அத்தான்....

என் அத்தான் உன்னை எண்ணித்தான் உடல் மின்னத்தான் வேதனை பின்னத்தான் 

சொல்லித்தான் நெஞ்சை கிள்ளித்தான் என்னை சொர்கத்தில் தேவனும் சோதித்தான் 

மோகந்தான் சிந்தும் தேகந்தான் தாகத்தில் நான் நிற்க ஆனந்தம் தான்’ என்று பாடல் பின்னணியில் ஒலிக்க,


அந்த இசையில், திசைமறந்து பயணித்துக் கொண்டிருந்தவள், நாணம் கொண்டு அவன் மார்பில் முகம் புதைத்தாள்.


அதில் மந்தகாசப் புன்னகை சிந்தியவன், “வெளக்க அணைக்கவேயில்லியே மவாராணி?” என்க,


பதில் கூற இயலாது அவன் மேல்கரத்தை பற்றிக் கொண்டு இன்னும் குழைந்தாள்‌. அதில் சிரித்துக் கொண்டவன் அவள் முகம் நிமிர்த்தி, “எப்பவுமே ஒன்னய சமாதானப்படுத்த வேண்டியவன், அந்த வேலைய ஒனக்கு வச்சுடுதேம்ல?” என்க,


கண்கள் மூடி மெல்ல இதழ் பிரியாது சிரித்தாள்.


“பரவால இதுவும் நல்லாத்தேம் இருக்கு” என்று அவன் கூற,


“ச்சு.. அமைதியாருங்களேன்.. ப்ளீஸ்” என்று நாணத்துடன் கூறி அவன் சிரிப்பில் இன்னும் இன்னும் சிணுங்கி இன்பமாய் சிதைந்தாள்.




Comments

Popular posts from this blog

திருப்பம் -01

திருப்பம்-03

திருப்பம் -02