திருப்பம்-63

 திருப்பம்-63



அந்த இரவு வேளையிலும் வீடே கலைகட்டிக் கொண்டிருந்தது. எங்கும் குழந்தைகளின் சப்தம் கேட்டுக் கொண்டிருக்க, “மைணி அங்க நம்ம வீட்டுல கோலம் போட்டாச்சா?” என்று கார்த்திகா திரிபுராவிடம் கேட்க,


“ம்ம்.. இவரு தங்கச்சி ஊருலருந்து வந்தாவ. அவியளோடத்தேம் போட்டேம்” என்று திரிபுரா கூறினாள்.


“ஓ.. அவியள கூட்டிகிட்டு வரலியே” என்று கார்த்திகா கேட்க,


“அவோ ஆச்சி வீட்டுக்குப் போயிட்டாவ” என்றாள்.


“சரிசரி மைணி” என்று அவள் கூற,


“என்னத்தடி ரெண்டேரும் வம்பளக்கீய? அனக்கத்தக் கூட்டாம போயி கோலத்தப் போடத்தான? எல்லு நோவுது கல்லு நோவுதுனு குட்டியாப்போட்டுப்புடாதீயட்டி. நல்லா வாசல நெறக்க போடனும்” என்று கூறிய தெய்வா, “தீபி எங்க வரக்காணும்? புள்ளையலயும் காணலயே” என்று கேட்டார்.


ஆம்! பொங்கல் வேலைகள் தான் அவ்வீட்டில் நடந்துகொண்டிருந்தது.


“ஹப்பா.. கொஞ்சம் மூச்சுவிட்டுத்தான் பேசேம்மா” என்று திரிபுரா கூற,


“சங்கு வாசல்ல கோலம் போடுது அத்த. தீபி அக்கா அவோ ஓரகத்தி வீட்டுல இல்ல இருக்காவ? இந்த பொங்கலுக்கு இல்ல.. மாட்டுப் பொங்கலுக்குத்தேம் வருவாவ” என்று கார்த்தி வருத்தமாய் கூறினாள்.


“அட ஆமன்ன?” என்று தானும் சோகமாய் அவர் முகம் சுறுக்க,


“அதுசரி.. எம்பொண்டாட்டி முந்தின பொங்கல அவோ வூட்டுல கொண்டாட கேட்டதுக்கு அப்புடி குதிச்சீய? மகா அத்தானாருக்க போயி அம்புட்டு பொங்கலயும் நம்மூட்டுலயே கொண்டாடுறாவ” என்று விக்ரமன் வந்து கூறினான்.


தெய்வா மகனை முறைத்துவிட்டு மருமகளை நோக்க, “ஆத்தே! அத்த சத்தியமா இதுக்கும் எனக்குஞ் சம்மந்தமே இல்ல. இவராதேம் வந்து பேசுறாவ” என்று கூறியவள்,


“நாம்போயி சங்குக்கூட கோலம்போடப் போறேம்” என்று வெளியே ஓடிவிட, அனைவரும் கலகலவென்று சிரித்துக் கொண்டனர்.


பெரிய வாசலை நிறைக்கும்படியான ரங்கோலியைப் போட்ட சங்கமித்ரா அதற்கு வண்ணம் தீட்டத் துவங்கியிருக்க, மாவிலை தோரணங்களையும், இன்னபிற பைகளையும் சுமந்துக் கொண்டு வடிவேலுவுடன் வந்திறங்கினான் வளவன்.


வடிவேலுவுடன் பேசியபடியே வந்தவன் கோலத்தை மிதிக்க முற்பட, “ஏங்க..” என்று அவன் கவனம் கலையும் வண்ணம் கத்தி அழைத்தாள் பெண்.


“கொழுந்தரே.. அந்த புள்ள எல்லு நோவ கோலத்த போட்டுகிட்டு இருக்கு. இப்புடி மிதிச்சுப்பத்த பாத்தீயளே” என்று கார்த்திகா கூற,


கோபப் பார்வை வீசும் மனைவியைப் பார்த்து, “கவனிக்கலட்டி” என்றான்.


“கவனிக்கனும்” என்று அழுத்திக் கூறியவள் வேலையைத் தொடர, “இஞ்சார்ரா கோலம் நல்லா பெருசாருக்கே” என்ற வடிவேல், சுற்றி முற்றிப் பார்த்தபடி, “நீ மட்டுமாத்தா போட்ட?” என்று கேட்டான்.


“அண்ணே… கேள்வி எனக்கானது போல தெரியலையே” என்று வண்ணப்பொடி தூவிக் கொண்டே கூறியவள், அவனைப் போல் சுற்றி முற்றிப் பார்த்துக் கொண்டு, “உங்காளு பின்கொள்ளையில இருக்காப்டி” என்று கூற,


“ஏ சங்கு.. தேரிட்ட புள்ள” என்று கன்னத்தில் கைவைத்தபடி கார்த்திகா கூறினாள்.


அதில் அவள் சிரித்துக் கொள்ள, தன்னவள் கோலத்தையும், கோலம் போடும் அழகையும் ரசித்துப் பார்த்துக் கொண்டே நின்றான் வளவன்.


“ஏம்லே வேல சோலி இருக்குனு நெனவிருக்கா இல்லியா? ஆச்சுனு காரியங்கண்ண முடிச்சுட்டுப்போய் படுத்தாதேம் பொழுதுக்கு எழ முடியும்” என்றபடி விக்ரமன் வர, ஆடவர்கள் இருவரும் கொண்டுவந்த பொருளோடு உள்ளே சென்றனர்.


“நானுங்குடுக்கேம் சங்கு. உள்ள வேல பாக்கத்தான் அம்புட்டு பேர் இருக்காவளே” என்று கார்த்திகா கூற,


“அந்த வட்டத்துல சிகப்புப்பொடி கொடுங்க க்கா” என்றவள், “எனக்கு இந்த மாதிரி சூழல்ல இதுதான் முதல் பொங்கல் க்கா” என்றாள்.


“அங்க நம்மூட்டுல எப்புடி வைப்பாவ சங்கு?” என்று கார்த்திகா கேட்க,


“அம்மா அப்பாகூட பெருசா கொண்டாட்டம் பலமில்ல க்கா. காலைல நல்ல நேரம் பார்த்து ஆர அமரதான் பொங்கல் வைப்போம். மதியம் எல்லா வகையும் சாப்பாடு பலமா இருக்கும். சூரியப்பொங்கல் மட்டும்தான். இங்கபோல மாட்டு பொங்கல் எல்லாம் கொண்டாடினதில்ல” என்று கூறினாள்.


“ஆஹாங்.. இங்கன சூரியப்பொங்கலு சுசுபி சங்கு. மாட்டு பொங்கலுதேம் அம்சமா இருக்கும். நம்ம நந்நியையும் லச்சுவயும் அவோ குடும்பத்தையும் கூட்டி நாள காலயிலருந்து ரகலதேம் பாரு” என்று கார்த்திகா கூற,


“அவங்க சொன்னாங்க க்கா. சங்கிக்கு கல்யாணம் ஆயி முதல் பொங்கல் மட்டும் நாங்க தனித்தனியா செலிபிரேட் பண்ணோம். அடுத்தப் பொங்கல் அத்தான் வந்து என்னைக் கூப்பிட்டாங்க. சரினு போனேன். அதுக்கு அடுத்துலருந்து எல்லாப் பொங்கலும் அத்தான் கூடதான். அம்மா அப்பாவைப் பாக்கவே சாயிந்தரம் தான் போவேன்” என்று சங்கமித்ரா கூறி சிரித்தாள்.


“அத்தாங்கூட நல்லா ஒட்டிகிட்டன்ன?” என்று கார்த்திகா கேட்க,


“ரொம்ம்ம்ம்ப க்கா. நாளைக்கு ஈவ்னிங்காது பாக்க போனும்னு யோசிச்சேன். இவங்கட்ட இன்னும் கேட்கலை. மிந்தாநேத்து முட்டிகிட்டதுலருந்தே நானும் அத்தையும் பேசிக்கவுமில்லை. இன்னும் சொல்லப்போனா.. எனக்கு பேச மனசும் வரலை. மறுபடி என்னமாது வந்தா நல்ல நாளும் பொழுதுமா பிரச்சனையாகுமேனு விட்டுட்டேன். அத்தான் ஆச்சும் பாக்க வந்தா நல்லாருக்கும். ஆனா அக்கா பாப்பா வரமுடியாது” என்று வருத்தமாய் கூறினாள்.


அவளைப் பார்க்கவே கார்த்திகாவிற்கு பாவமாய் இருந்தது. இரண்டு நாட்கள் முன்பு நடந்த சண்டைக்குப் பின் தெய்வாவும் சங்கமித்ராவும் பெயரளவில் கூட பேசிக்கொள்ளவில்லை. இதில் வியக்கத்தக்க விஷயம், எப்போதும் சண்டைக்குப் பின் சிறுபிள்ளைபோல் அவரிடம் பேச முயற்சி எடுக்கும் சங்கமித்ராவும் இம்முறை பேச விளையவில்லை. அதுவே அவள் மனம் பட்ட பாடை எடுத்துக் கூறியிருந்தது. அவளாக பேசுவாள் என்ற இறுமாப்பில் இருந்த தெய்வாகூட, அவள் பேசாததில் முதலில் அதிர்ந்து பின், அதற்கும் கோபம் கொண்டு விலகிக் கொண்டார்.


“ஒன்னய நெனச்சா பாவமாத்தேம் இருக்கு சங்கு” என்று கார்த்திகா கூற,


“அட போங்கக்கா.. ‘ரெண்டு நாளா எங்கம்மா ஒடக்கிழுக்காம இருக்காவடி. பேசாம பேசிகிடாமலே இருந்துடுவ’ அப்படினு அவர் கேலி பேசுறாரு” என்று அவனைப்போலவே பேசிக் காட்டினாள்.


அதில் கிளுக்கிச் சிரித்த கார்த்திகா, ‘’விடு புள்ள‌. நீ கோச்சுகிடாத. எனக்குமே கூட அதுதேம் பட்டுது. நீயும் நிம்மதியாருக்க, அவியளும் அனக்கத்தக்கூட்டாதுருக்காவல்ல?” என்று கூற,


“ஹ்ம்..” என்று பெருமூச்சு விட்டாள்.


உள்ளே திரிபுரா பொங்கல் பானையை அலங்கரித்துக் கொண்டிருக்க, சுயம்புலிங்கம் வயலில் காலை பொங்கல் வைப்பதற்கான ஆயத்தங்களைப் பார்க்கச் சென்றார்.


விக்ரமன் காய்கறிகளை அடுக்கிக் கொண்டிருக்க, தெய்வா பூஜையறையைச் சுத்தம் செய்துக் கொண்டிருந்தார். கொண்டுவந்த மாங்குலைகளை வளவன் கட்டிக் கொண்டிருக்க, பின்பக்கம் கோலம் போட்டுக்கொண்டிருந்த மங்கையின் கரத்தோடு கண் பயணிக்க வடிவேல் ரசித்துக் கொண்டிருந்தான்.


“பாத்துட்டே இருந்தா எப்புடி?” என்று தனம் கேட்க,


அவளை அதிர்ந்து பார்த்தவன், “என்னடி சொல்லுத?” என்றான்.


எதற்காக இந்த அதிர்ச்சியென்று புரியாத பாவத்தில், “கோலம்போட ஹெல்ப் பண்ணத்தானன்னு கேக்க வந்தேம்?” என்று கூற,


நெஞ்சில் கைவைத்து பெருமூச்சு விட்டுக் கொண்டான்.


“யோ என்னம்யா? என்னத்து நெனச்சீய நீங்க?” என்று அவள் அவசரமாய் கேட்க,


திணறலாய் விழித்தவன், “ஒன்னுமில்லடி. எனக்கு இந்த பொடிலாம் கொட்ட வராது. அம்மா போட கேக்கும். நான் மொந்து மொந்துனு கொட்டிவச்சுபுடுவேம்னு வைவாவ” என்றான்.


“வேணாம் சாமி. எங்கோலத்த அலங்கோலமாக்கிடாதீய” என்று அவள் கூற,


“என்னடி அவேம்ட வம்பளக்க?” என்றபடி தெய்வா வந்தார்.


வடிவேலு அரண்டுபோய் விழிக்க,


தனம் இலகுவாய், “கொல கட்ட வந்தாவ. கோலம்போட்டதானனு கேட்டேம்மா” என்று கூறினாள்.


“இஞ்சாரேம்.. ஏம் மருமவேம் ஒனக்கு சோலி பாக்கத்தேம் வந்தானாக்கும்?” என்று தெய்வா கூற,


“ஏன் ஒனக்கு சோலி பாக்குறாவ. எனக்கு பாக்கக்கூடாதாக்கும்?” என்று கேட்டாள்.


“வம்பளக்காது கோலத்தப் போடு. வாயிக்கு வாயி பேசமட்டுங்கத்துகிட்டா. கட்டிகிட்டு போற வீட்டுல என்னத்தக் குப்பக் கொட்டப்போறியோ?” என்று தெய்வா கூற,


“குப்ப என்னத்துக்குக் கொட்டுறேம்? குடும்பந்தான நடத்தப்போறேம்?” என்று கூறினாள்.


“அந்த லச்சனத்தத்தேம் சொல்லுறேம்டி” என்று தெய்வா கூற,


“சொல்லுக்கென்ன? பாக்கத்தானப் போற? என்ன அழகுல குடும்பம் நடத்துறேம்னு பாரு. கட்டின மறு வருஷம் கையில ஒன்னுத்தோட வந்து இதே வூட்டுல எம்புருஷனோடத்தேம் கொண்டாடுவேனாக்கும்” என்றாள்.


இவர்கள் பேச்சுவார்த்தைக்கு நடுவில் நிற்க வடிவேலுவிற்குத்தான் வெட்கமாக இருந்தது. ஆனால் தனலட்சுமிக்கு அப்படியெல்லாம் இல்லவே இல்லை போலும்.


“பேச்சப்பாரு பேச்ச” என்று மகளைக் கடிந்தவர், “நீ வாய்யா. செத்த காபி தண்ணி குடி” என்று கூறி வடிவேலை அழைத்துச் செல்ல,


பிடிமாடுபோல் பின்னோடே சென்றவனைக் கண்டு இதழ் பிரிய புன்னகைத்துக் கொண்டாள்.


அனைத்து வேலைகளும் முடியவே, அனைவரும் சிரித்து பேசியபடி இரவு உணவு உண்டுவிட்டு உறங்கச் சென்றனர்.


மறுநாள் அதிகாலையே வைத்த அலாரத்தின் உபயத்தில் எழுந்தவள், “ஏங்க.. எழுந்திரிங்க” என்று அவனை எழுப்ப,


அவளை இழுத்து அணைத்துக் கொண்டு, “அஞ்சு நிமிஷோம்டி” என்றான்.


அவன் கன்னத்தில் வலிக்காது ஒரு அடி போட்டவள், “ஒங்கம்மா பத்து நிமிஷம் லேட்டானாகூட ஸ்டிரிக்ட் ஆபிஸர் மாதிரி என்னை ஆஞ்சுடுவாங்க. என்னையாது விடுங்க” என்று பயம் போல் அவள் கூற,


“எங்கம்மா மேல ஒனக்கு ரொம்பத்தேம் லவ்ஸு போல. அவிய பேசலனா கூட நீயு ஜாட மாடயா அவியள பத்திதேம் பேசுற” என்றான்.


அவள் முகமே அதில் மாறிப்போக, அவள் முகவாயைப் பற்றிக் கொண்டு, “என்னடி?” என்றான்.


“ப்ச்.. ஒன்னுமில்ல விடுங்க..” என்று அவள் எழ முற்பட,


“சொல்லிட்டுப்போ. அப்புடிலாம் எம்பொஞ்சாதி மூஞ்சி வாடிபோனபடிக்கு அனுப்ப முடியாது” என்று மேலும் இறுக்கிக் கொண்டான்.


“நீங்க ஏன் என்னை அவங்கட்டப் போய் பேசச் சொல்லிச் சொல்ல மாட்றீங்க?” என்று அவள் கேட்க,


“ஏன் சொல்லனும்?” என்றான்.


அவன் கேள்விக்கு என்ன பதில் கூறவென்று தெரியாது சில நொடிகள் மௌனம் காத்தவள், “நீங்க சொல்லிருந்தா பேச முயற்சி பண்ணிருப்பேன்” என்க,


“அதேம் சொல்லல” என்றான்.


எங்கோ பார்த்துக் கொண்டிருந்தவள் அவன் விழிகளை நோக்க,


அவள் நெஞ்சில் விரல் வைத்துக் குத்திக் காட்டியவன், “இங்கன தோனனும்டி. அவிய அம்புட்டு பேசுறாவ. நாலு அஞ்சு மாசத்துல ஒன்னய சிரிச்சாமேனிக்கு பாத்ததவிடவும் அழுதாப்ல பாத்ததுதேம் அதிகம் போலன்னு தோனுது. பொறவு எப்புட்ரி போயி பேசும்பேம்?” என்று கேட்டான்.


“உங்களுக்கு வருத்தமா இல்லையா?” என்று கேட்டவள், அவன் மார்பு ரோமங்களில் விரல் கொண்டு கோலம் கிறுக்கியபடி, “பேசக்கூடாதுனுலாம் இல்லைங்க. என்னமோ பேச தோனலை. முன்னலாம் சண்ட நடந்ததுக்கு அப்றம் நானா போய், இத பண்ணவாத்த அத பண்ணவாத்தனு கேட்டு அவங்கள சமாதானம் ஆக்குறபோல எதாது செய்ய ட்ரை பண்ணுவேன். ஆ..ஆனா இ..இப்..இப்ப அப்படி பண்ணத் தோனலை” என்று வெகு தயக்கமாய் கூற,


மௌனமாய் அவளைப் பார்த்தான்.


அவனது அமைதியில் நிமிர்ந்து பார்த்தவள், “நீங்க சொன்னா போய் பேசிடுவேன். நானா போய் பேசனும்னா.. எ..எப்பனு தெரில.. எ..எனக்கு பயமாருக்கு..இப்ப இப்படி..” என்று பேச வெகுவாய் அவள் தயங்க,


“தெய்வநாயகி புள்ளையாவோ ஒம் புருஷனாவோ இல்லாம கூட்டுக்காரனா நெனச்சுகிட்டு சொல்லு மித்ரா. நான் ஒன்னய சாமி சத்தியமா தப்பா எடுத்துகிட மாட்டேம்” என்று அமைதியாய் கூறினான்.


அவன் கூற்றில் அவளுக்குக் கண்கள் கலங்கியது. அவன் பாசம் மிகுந்த அன்னையைப் பற்றியக் குற்றத்தையும், அதனால் தான் பாதிக்கப்பட்டதையும் அவனிடமே மனம் விட்டுப்பேசச்சொல்லிக் கேட்கின்றான்.. அதுவும் தன் உணர்வுகளை பாதிக்காத வகையில்! இப்படியொருவன் தன் வாழ்வில் கிடைத்திட தான் என்ன செய்திட்டோம்? என்ற உவகையில் கலங்கிய விழிகளை சிமிட்டிக் கொண்டு அவன் மார்பில் தலை சாய்த்தாள்.


Comments

Popular posts from this blog

திருப்பம் -01

திருப்பம்-03

திருப்பம் -02