திருப்பம்-64

 திருப்பம்-64



மௌனமாய் நொடிகள் கடக்க, “இன்னிக்கு அண்ணி குடும்பத்து முன்ன பேசினவங்க நாளைக்கு வெளி மனுஷங்க முன்ன பேசிட்டா? அவி அ..அத்தான் முன்ன? அத்தான் ஒடஞ்சு போயிடுவாங்கங்க. எ..என்னால தான் தாங்க முடியுமா? அ.. அன்னிக்கே அவ்ளோ வருத்தமா இருந்துச்சு.. அ..அப்ப கூட பெருசா தெரியல. அ..அண்ணியோட மாமா அத்தை வந்தா, அவங்கள பேஸ் பண்ண ரொம்ப கூச்சமாருக்கு” என்று அவள் கூறவும்,


அவள் தலையை பரிவாய் கோதிக் கொடுத்தான்.


“அ..அத யோசிச்சு யோசிச்சு, இப்பப் போய் பேசனும்னே தோனலை எனக்கு. இனிபோய் நான் அவங்கட்ட பேசனும்னா ஒன்னு அவங்கக்கிட்டருந்து ஒரு உந்துதல் வரனும், இல்லை, நீங்களோ மத்தவங்களோ என்னை அதுக்கு உந்தித்தள்ளனும். அப்படி ஒரு உந்துதல் இருந்தாதான் பேசுவோமோனு பயமாருக்கு” என்று அவள் கூற,


“ஒன்னய ஒருத்தவ உள்ளார புடிச்சு தள்ளிதேம் நீயு பேசனுமுனு இல்ல மித்ரா. அத புரிஞ்சுக்க. ஒனக்கா தோனினா பேசு. அவிய பேசி நீயொன்னும் மூஞ்ச வெட்டிகிட்டு போவல. அவியளும் நீயா எப்பமும் வந்து பேசுறனுதான அகம் காட்டுறாவ. நீயா போயி போசாம இருந்துதாம் பாப்பமே.‌ மத்ததெல்லாம் விடு மித்து.. வீடு ரெண்டு நா அமைதியாருக்கு ஒங்க ஒடுக்கில்லாம” என்று கூறினான்.


அவனை முறைத்துப் பார்த்தவள், “டெய்லி பிரச்சினை பண்றேன்னு சொல்றீங்களா?” என்க,


“சத்தியத்துக்குமில்ல. ரெண்டு நாளா அவிய திட்டாததுக்கு நீயும் இப்படி ஒத்த செகேன்ட் கூட நெனக்கலனுதேம் சொல்லேம் பாக்கேம்” என்றான்.


அதில் பாவம் போல் அவள் சிரம் தாழ்த்த, “ஒன்னய இந்தூட்டுக்கு நிம்மதியா, சந்தோஷமா வாழதேம் கூட்டிட்டு வந்தேம் மித்ரா. என்னோட சந்தோஷத்துக்கு நிம்மதிக்குனு நீயு நாலு விட்டு கொடுக்குறாப்ல, நானும் ஒனக்காவ என்னமாது விட்டுக்கொடுக்குறதுக்கென்ன? நெசத்துக்குமே சொல்லுறேம்.. நீயும் அம்மாவும் வெட்டிகிட்டு நிக்குறது வெசனமாதேம் இருக்கு. ஆனா அதுக்காவ நீயு போயி பேசனும்முனு எனக்கு தோனல மித்ரா. ஒன்னய வருத்திட்டுலாம் நீயு ஒன்னுஞ்செய்ய வேணாம். நீ போடுற எஃபோர்டுல அவிய ஓங்கூட ராசியாவாவனு ஒன்னு இருந்தாகூட கொஞ்சம் சுயநலமாதேம் ரோசிச்சு போயி போசேன்டினு சொல்லிருப்பேம். அதுவும் இல்லங்கையில திட்டு வாங்கனு என்னத்துக்கு போயி நீயு பேசனுமுனுதேம் விட்டுபுட்டேம்” என்று கூறினான்.


சிலநிமிடம் அறையில் பெரும் மௌனம் நிலவ, அவனிடமிருந்து எழுந்து குளியலறைக்குள் சென்றாள்.


சென்ற ஐந்துநிமிடத்தில் புத்துணர்ச்சி பெற்று வந்தவள், அவனை இறுக கட்டிக் கொண்டு அவன் நெற்றியில் எம்பி முத்தம் பதித்தாள்.


“வேற ஒன்னும் வேணாம். இப்படியே இதேபோல பேசிட்டு எங்கூட இருங்க. என் புலம்பல கேட்டுட்டு, முடிஞ்சா நாலு வார்த்த சமாதானம் செஞ்சுட்டு இருந்தா போதும். வேற ஒன்னுமே கேக்க மாட்டேன்” என்று குரல் கமர அவள் கூற,


“நெத்தில ஒத்த முத்தம் கொடுக்கத்தேம் போயி பல்லு வெளக்கிட்டு வாந்தியாக்கும்?’ என்றான்.


“ப்ச்.. போங்கங்க” என்றவள், “நீங்க எனக்காக இவ்ளோ பண்றீங்க. ஆனா யோசிச்சுப் பார்த்தா உங்களுக்காக நான் எதுமே பண்ணாத மாதிரி இருக்குங்க” என்று கூற,


“எங்கூட நீயிருக்குறத தவிர வேறென்னடி பெருசா பண்ணிடப் போற?” என்று ஒரே வார்க்தையில் முடித்தான்.


“உசுரா நெனக்குறவோள விட்டுட்டு எங்காதலுக்குனு வந்துருக்க. எங்கம்மா பேசின அம்புட்டு பேச்சுக்குப் போறவுங்கூட ஒருநா, ஒருத்தவோளகூட கொற சொல்லாதபடிக்கு, இருக்க. இம்புட்டுக்கு போறவுங்கூட நீயு எப்புடி கூட இருக்கனு நானே ஆச்சரியபட்டுகிட்டு இருக்கேம். நீயு என்னடானா கோம்பத்தனமா கேக்க” என்று அவன் கூற,


புன்னகையாய் அவன் தலைகோதி, “இல்லாம எங்க போக?” என்றாள்.


காதலாய் கசியம் அத்தருணம் கொடுத்திடும் இதம், நூறு வருடம் கூட இவனு(ளு)னுடன் சேர்ந்து வாழ தவம் பெற்று வாங்கினால் தகுமென்றே உணர்த்தியது.


தன்னையே காதலாய் பார்த்து நிற்பவள் கண்டு சிரித்தவன், “இப்பத லேட்டாவலையாங்க மவாராணி? எங்கம்மா வைய மாட்டவளா?” என்க,


விழிகள் விரிய அவனைப் பார்த்தவள், “போயா யோ” என உள்ளே சென்றாள்.


“யோவா? சரிதேம்டி” என்று அவன் கூற,


“சரியேதான். போங்க போங்க” எனக் குளிக்கச் சென்றாள்.


இருவரும் குளித்துத் தயாராகி புத்தாடையுடுத்திக் கீழே வர,


“ஏட்டி ஒழுங்கா நிக்கத்தான? ஏஞ்ஜீவன வாங்குதியே” என்று ஒளிசுடருடன் தனலட்சுமி போராடிக் கொண்டிருந்தாள்.


சிரித்தபடியே அங்கு வந்த மித்ரா, “என்ன தனம் ஆட்டம் காட்டுறா போல?” என்க,


“அய்யோ மைணி.. முடில.. எப்புடித்தேம் புள்ளையலாம் பெத்து வளங்காவளோ?” என்று பெருமூச்சு விட்டாள்.


“நேத்து கட்டினதும் புள்ளனு பெருசா சபதமெல்லாம் போட்டியாக்கும்?” என்று கேட்டபடி தெய்வா வர,


“ஆமா இப்பவும் அதேம் சொல்லுதேம். கட்டின மறு வருஷம் கையில புள்ளயோடதேம் வருவேம்” என்றாள்.


“யாரு புள்ளையோட தனம்?” என்று கேட்டபடி கார்த்திகா வர,


நெஞ்சில் கைவைத்தவள், “என்ன மைணி இப்புடி கேட்டுபுட்டீய? எங்க புள்ளையோடதேம்” என்றவள், “அதேம் வளக்க இம்புட்டு பேரு இருக்கீயளே.. பொறவென்ன கவல” என்றாள்.


அதில் அங்குள்ளோரெல்லாம் கலகலவென்று சிரிக்க,


இந்த இடைவெளியில் குழத்தையைப் பிடித்துக் கொண்டு சங்கமித்ரா உடை உடுத்தி முடித்தாள்.


“எய்யா மறக்கரியெல்லாம் வண்டில ஏத்துவோ. வெரசா போயி பானைய ஏத்தனும்ல?” என்று சுயம்புலிங்கம் கூற,


“சரிங்க மாமா” என்று மருமகள்கள் இருவரும் ஒன்றுபோல் கூறினர்.


பொங்கல் வைக்க நேற்று திரிபுரா அலங்கரித்துவைத்த மண் பானை, நாட்டு காய்கறிகள், தங்கள் வயலில் விளைந்த நெல் மணிகள், தென்னையிலிருந்து கொண்டுவரப்பட்ட இளநீர் மற்றும் தேங்காய்கள், ரப்பர் தோட்டத்திலிருந்து கொண்டுவந்த பிசின், ஒரு மூங்கில் தட்டு நிறைய பூந்தோட்டத்திலிருந்து பறித்துவந்த பூக்கள் என அனைத்தையும் வாகனத்தில் அவர்கள் ஏற்றி முடிக்க,


“பொங்கலுக்கு வேண்டியது எல்லாம் எடுத்தாச்சா?” என்று கார்த்திகா கேட்டாள்.


“எல்லாம் இருக்கு மைணி. அண்ணே இப்பதேம் சரிபாத்தாவ” என்று தனம் கூற,


“லே வளவா.. நானு எல்லாத்தையும் காருல கூட்டிட்டுப் போயிடுதேம். நீயு சங்கக் கூட்டிகிட்டு வந்துபுடு. இந்த வேலுக்கு ஒருவார்த்த சொல்லிபுடு. அவேனாட்டுக்கு கனா கண்டுகிட்டு மல்லாந்துகெடக்கப் போறியாம்?” என்று விக்ரமன் கூறினான்.


“மைணி உங்க அவியட்ட சொல்லி வைங்க. அதெல்லாம் அவிய மூனு மணிக்கே எழுந்து வீட்டுச் சோலியலாம் பாத்துபோட்டு குளிச்சு புதுத்துணி உடுத்திட்டாவ” என்று கார்த்திகாவிடம் தனம் கோபம் போல் கூற,


“ஆத்தே.. சரிடியம்மா. ஒங்காள ஒன்னும் சொல்லல” என்று கன்னத்தில் கைவைத்தபடி ராகமிழுத்தாள்.


“மசமசனு நிக்காது எல்லாஞ்சரியாருக்கானு பாத்துபோட்டு வண்டில ஏறுங்கடி” என்று கூறிய தெய்வா, “ஏங்க திரிபுராக்குக் கூப்பிடுங்க” என்க,


“போட்டுட்டேம்மா. வந்துடுறேனுட்டா” என்று கூறினார்.


அனைவருமாய் புறப்பட்டு அருகிருக்கும் அவர்களது வயலுக்குச் செல்ல, பத்து நிமிட நடைதான் என்றாலும் இருட்டாக இருப்பதால் தன்னவளோடு வண்டியில் சென்றடைந்தான் வளவன்.


நெல் பரப்பிவைக்க இருக்கும் வெற்றிடத்தில் நேற்றே மூன்று அடுப்புகள் அமைக்கப்பட்டிருக்க, அவற்றுக்கு ஆளுக்கொருவராய் இளம் பெண்கள் மஞ்சள் குங்குமம் வைத்தனர்.


ஆண்கள் கொண்டுவந்த கட்டைகளை அடுக்கி நெருப்பை மூட்டத் துவங்க, வடிவேலு, சுந்தராம்பாள், திரிபுரா மற்றும் சிவபாதசேகரன் வந்து சேர்ந்தனர்.


ஆளுக்கொரு அடுப்பில் தங்கள் வீட்டிலிருந்து எடுத்துவந்த பானையை வைத்து பொங்கல் வைக்கும் பணியில் இறங்கினர்.


“ஏத்தா சங்கு.. ஒனக்குதேம் தல பொங்கலு. நீயே பொங்க வைத்தா” என்று சுயம்புலிங்கம் கூற,


அவள் கார்த்திகாவைப் பார்த்தாள்.


அவள் பார்வைக்கான அர்த்தம் மற்றவர்களுக்கு புரியவில்லை என்றாலும் கார்த்திகாவிற்கு புரிந்தது. மனம் நிறைந்த புன்னகையுடன் “சேந்தே வப்போம். நாங்கூடருந்து சொல்லுதேம்” என்று கார்த்திகா கூற,


மருமகள்களின் ஒற்றுமையில் பெரியவரும் மகிழ்ந்து போனார்.


சங்கமித்ரா மற்றும் கார்த்திகா ஒரு பானையிலும், திரிபுரா ஒரு பானையிலும், சுந்தராம்பாள், அவருக்குத் துணையாய் தனலட்சுமி ஒரு பானையிலும் என்று பொங்கல் வைக்க, ஆண்கள் கருப்பட்டியை தட்டிக் கொடுப்பது, கரும்பை வெட்டி வைப்பதென்று உதவிகள் செய்துக் கெண்டிருந்தனர்.


இதற்கு நடுவில், கரும்பை ஆண்கள் தொடையில் தட்டி உடைத்து வீர சாகம் எல்லாம் செய்துகொண்டிருக்க, இளம் வயது நினைவுகளோடு துள்ளி எழுந்த சுயம்புலிங்கம், தனது வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு கரும்பை கையிலெடுத்தார்.


“ஐயா!” என்று மகன்கள் ஆச்சரியமாய் நோக்க,


தன் மீசையை முறுக்கிக் கொண்டு சிரித்தவர், கரும்பை தட்டி உடைத்துவிடவும், “அப்புடி போடு அருவாள.. அசத்தலுதேம் மாமா” என்று வடிவேலு விசிலடித்தான்.


“இஞ்சார்ரா.. ஐயா சொல்லிட்டு ஒடைக்கத்தான? நானு வீடியோ புடிச்சு இளமை திரும்புதேனு பாட்டு வச்சுருப்பேம்ல?” என்று தனம் கூற,


“ஏன்டி என்னத்த எளம திரும்புதுனு பாட்டு வெக்கனும்? ஒங்கைய்யாக்கு அப்புடிக்கு ஒன்னு வயசான கணக்கா இல்ல. அந்தாரு.. ஒங்கண்ணேனுக்கே அண்ணேம்போலத்தாம் இருக்காவ” என்று தெய்வா கூறினார்.


“ஏ அம்மோ.. ம்ம் ம்ம்” என்று திரிபுரா கேலியாய் கூற,


“அத்தேக்குதேம் அந்த பாட்டு போடனும் போலாருக்கு தனம்? மொகமெல்லாஞ் செவக்குபோல? எதுக்கும் இதயும் போட்டோ புடிச்சு வச்சுகிடு” என்று சிவபாதசேகரன் கூறினான்.


“அதான அத்தான்” என்று பிள்ளைகள் கோரசாய் சொல்ல, உண்மையில் வந்த வெட்கத்தை மறைத்துக் கொண்டு, “ஆமா இப்பதேம் வருது. போங்கடி சோலியபாத்துட்டு” என்று முகவாயைத் தோளில் இடித்துக் கொண்டார்.


மனைவி எண்ணம் புரிந்த சுயம்புலிங்கம் கர்வமாய் சிரித்துக் கொள்ள, அவரைக் கண்டு தெய்வாவும் புன்னகைத்தார். இத்தனைக் குறைகளுடனும் காதலிக்க இயலுமா என்றால் நிச்சயம் இயலும் என்பதற்கு சுயம்புலிங்கத்தின் காதலே சாட்சியெனலாம். காதலுக்கென்று என்று அகராதிகள் இருந்தன? சரி தவறென்று பிரித்திட?


பானையில் பால் பொங்கி வரும் நேரம், தெய்வாவும் திரிபுராவும் கொளவை போட, ஒவ்வொருவராய் வந்து ஒருபிடி சம்பா அரிசியைப் போட்டனர்.


பின் இடித்துவைத்த கருப்பட்டியையும் சேர்த்து பொங்கல் கிண்டி முடிக்கப்பட, பரப்பிவைத்த காய்களோடு சேர்த்து அதனையும் வைத்தனர்.


சரியாய் அப்போதே வெளிச்சம் வரத்துவங்க, சூரிய ஒளியும் வைத்த படையல்களில் பட்டு எழுந்தது!


மனநிறைவோடு அனைவரும் சூரியனை தொழுது முடிக்க, அங்கேயே இலைபோட்டு சக்கரைப் பொங்கலும், கட்டிக் கொண்டுவந்த வென்பொங்கலும் பரிமாறப்பட்டன.


சிரித்து பேசி மகிழ்ந்து அனைவருமாக உண்டு முடிக்க, அனைத்தையும் ஏற்றிக் கொண்டு அவரவர் இல்லம் சென்று இறைவனை வணங்கினர்.


அத்தோடு மதிய உணவுக்கான பணிகள் துவங்கிட, அனைத்து வகையான தமிழ் காய்கறிளையும் வெட்டிப் போட்டு கலவைக் குழம்பு வைத்தனர்.


“என்னக்கா எல்லா காயும் போடுறோம்?” என்று சங்கமித்ரா கேட்க,


“இத கலவ கொழம்பு, இல்லாட்டி கதம்ப கொழம்புனு சொல்வாவ சங்கு. அம்புட்டு நாட்டுக் காயும் போட்டு, பயறு வக, வடையெல்லாம் கொழம்புல மொத்தமா போட்டு செய்வாவ. சூடா சோத்துல ஊத்தி இம்புட்டு நெய் ஊத்திகிட்டு சாப்டா அம்சமா இருக்கும்” என்று கார்த்திகா சிலகாதித்துக் கூறினாள்.


“நீங்க சொல்லும்போதே சாப்பிடுற ஆச வந்துடுது க்கா” என்று அவள் கூற,


“சாப்பிட்டுட்டா மறுக்கா மறுக்கா சாப்ட தோனும் சங்கு” என்றாள்.


அதன்படியே உணவு தயாரிக்கப்பட்டு அனைவருமாய் சேர்ந்து சந்தோஷமாக உண்டு முடித்தனர்.


“எய்யா வளவா.. மோந்திக்குப் போயி பெயின்டு வாங்கியா. மறந்துபுடாத” என்று தெய்வா கூற,


“சரிம்மா.‌.. செவப்பா பச்சையா?” என்றான்.


“நீலம் வாங்குயா இந்த மொற. நம்ம லச்சு நெறத்துக்கு எடுப்பாருக்கும்ன? நம்ம நந்திக்கு எப்பவும் போல செவப்பே வாங்கிடு” என்று அவர் கூற,


“சரிங்க ம்மா” என்றான்.


அன்னை சொல்படி மாலை சாயம் வாங்க புறப்பட்டவன், “சங்கு ரெடியா?” என்க,


“நாயெங்க?” என்று கேட்டாள்.


“ஏதே?” என்று திரும்பியவன், “நேத்து படுக்கும்முன்ன சொன்னேம்தான?” என்க,


“என்ன சொன்னீங்க? தூக்கத்துல எதும் கவனிக்கல” என்றாள்.


“ரைட்டு. அப்பத கெளம்பிவா. சர்பிரைஸா இருக்கட்டும்” என்று அவன் கூற,


“அதெல்லாம் எதுக்குங்க. ஆர்வந்தாங்காது எனக்கு மண்ட வெடிக்கும். எங்கனு சொல்லிடுங்க டான்னு ரெடியாகிடுறேன்” என்றாள்.


“கோம்ப” என்று அவள் முடியைப் பிடித்து அவன் இழுக்க, அவன் சிகையை கொத்தாய் பற்றி அவள் இழுக்க என செல்ல சண்டைகளோடு இருவருமாய் புறப்பட்டுச் சென்றது அவிநாஷின் வீட்டிற்குத் தான்.


“ஏ பாப்பா.. வா வா.. தம்பி வாடா” என்று இன்முகமாய் வரவேற்ற அவிநாஷ், “நானே வர இருந்தேன். வளவனே வரேன்னு சொல்லிட்டான்” என்று கூற,


தன்னவனைத் திரும்பி காதலாய் பார்த்தாள்.


“ஏ சங்கு” என்று குழந்தையுடன் வந்த அக்காவை அணைத்துக் கொண்டவள், “குட்டி பாப்பு” என்று குழந்தையைத் தூக்கிக் கொள்ள,

புன்னகையாய் அமர்ந்தாள். பொங்கல் கொண்டாடுவதற்காக, சங்கீதாவும் குழந்தையுடன் மாமியார் வீடு வந்திருந்தாள்.


“என்னண்ணே ஸ்பெஷலு பொங்கலுக்கு?” என்று வளவன் கேட்க,


“நீங்க வந்ததுதான்” என்று உளமாற அவிநாஷ் கூறினான்.


அதில் புன்னகைத்துக் கொண்ட வளவன், “உங்கினதுல கேட்டேம்” என்க,


“எல்லாம் அத்தை ஸ்பெஷல். ஃபுல் மீல்ஸ் வித் நொங்கு சர்பத்” என்று சப்புகொட்டியபடி சங்கீதா கூறும்போதே பாமா சர்பத்தோடு வந்துவிட்டார்.


“ஆஹா நொங்கு சர்பத்தா அம்மா?” என்று ருசித்தவன், “ம்ம்.. மைணி சப்பு கொட்டி சொன்னதுக்கு வர்த்துதேம். ஜோராருக்கும்மா” என்று கூற,


பாமா நிறைவாய் புன்னகைத்தார்.


தன் அத்தானுடன் பேசிக் கொண்டிருந்தவள் தற்செயலாய் குழந்தையை மடியில் போட்டு தட்டிக் கொண்டே தனது அக்காவுடன் பேசிக் கொண்டிருக்கும் தன்னவனைப் பார்த்து ரசனையோடு உறைய,


அதை கண்டு சிரித்துக் கொண்ட அவிநாஷ், “ஹாப்பியாருக்கியா பாப்பா?” என்றான்.


“அவங்க இருக்காங்களே அத்தான்.. அதவிட நான் சந்தோஷமாருக்க வேறென்ன வேணும்” என்று அவிநாஷை அவள் நோக்க,


மனம் நிறைந்த புன்னகையுடன், “இப்படியே சந்தோஷமாருடா” என்றான், அதன் ஆயுள் உடையப்போவதறியாமல்….




Comments

Popular posts from this blog

திருப்பம் -01

திருப்பம்-03

திருப்பம் -02