திருப்பம்-65
திருப்பம்-65
தோளில் குழாய்களைத் தொங்கப்போட்டுக் கொண்டு பம்புசெட் மோட்டாரின் அறையை வளவன் திறந்துகொண்டிருக்க,
துடைப்பம், தேங்காய் நார், வாலி போன்றவற்றை அடுக்கி வைத்துக் கொண்டிருந்தாள் சங்கமித்ரா.
சுற்றிலும் நெல்லறுப்பு முடிந்த காலியான இடங்களும், ஒன்றிரண்டு இடங்களில் சாமை பயிர்களின் விளைச்சலும் எனக் கண்களுக்குக் குளிர்ச்சியாக இருந்த இடத்தை அவள் ரசித்துக் கொண்டிருக்க,
“மித்ரா” என்ற அழைப்போடு வந்தவன், “மாட்ட ஓட்டிகிட்டு வருவமா?” என்றான்.
உற்சாகமாய் தலையசைத்தவள், “அந்த கூட்டத்தை நாம மட்டும் ஓட்டிட்டு வந்துடுவோமா?” என்று கேட்க,
“அதெல்லாம் கூப்பிட்டுவிட்டா அவனுவளாவே வருவானுவ மித்ரா. நாம தேவையேயில்ல” என்று கூறினான்.
“உங்களுக்கு மாடு பாஷை எதும் தெரியுமா?” என்று அவள் கேட்க, பக்கென்று சிரித்தவன், “ஒருத்தவகூட பேசிகிட பாஷ வேணுமின்னு இல்ல மித்ரா… மனசு புரிஞ்சுகிட்ட பொறவு பாஷைக்கு என்ன தேவை இருக்கு சொல்லு” என்றான்.
“அட அட அட.. மொழி படம் நிறையதடவ பாத்திருக்கீங்க போலயே” என்று அவள் சிரிக்க,
“அகம்புடிச்சவடி நீயு” என்றான்.
பேசி சிரித்தபடி கொட்டகைக்கு இருவரும் வர,
“லே நந்தி” என்று அவன் அழைத்ததும் உள்ளிருந்து துள்ளிக் கொண்டு நந்தி வந்தான்.
அதில் அரண்டு போன சங்கமித்ரா வளவன் பின்னே பதுங்கிக் கொள்ள,
“ஒன்னும் பண்ண மாட்டியான்டி” என்று கூறியவன், நந்தியை அணைத்துக் கொண்டு தட்டிக் கொடுத்தான்.
அதனை மிரட்சியோடு பார்த்தவள், “மித்தவங்கள கூப்பிடுங்க. கொஞ்சினது போதும்” என்க,
“ஓம் மைணி போறாமபடுதாடா” என்று வளவன் சிரிப்பாய் கூறினான்.
அதில் மாடு கோபம் போல் மூச்சை இழுத்துவிட, “ஆத்தாடி” என்று நெஞ்சைப் பிடித்தவள், “மிரட்டுறீங்களா என்னை” என்று குற்றப்பத்திரிக்கை வாசிக்க, வாய்விட்டுச் சிரித்தபடி, “வா மத்தவங்கள கூட்டிட்டு வருவோம்” என உள்ளே சென்றான்.
மற்ற மாடுகளையும் அவிழ்த்துக் கொண்டு இருவரும் வெளியே வர, அனைத்து மாடுகளையும் கைகளால் வட்டம் சுற்றி திருஷ்டி எடுத்துக் கொண்டாள் சங்கமித்ரா.
அவர்கள் திருமணத்தின் சமயம் பிறந்து தற்போது ஐந்து மாதப்பிள்ளையாய் வளர்ந்திருந்த கன்றுக்குட்டியை தடவிக் கொடுத்தவள் இதழ்கள் தன்னைப் போல் விரிந்தது.
“மருது குட்டி” என்று அவள் அழைக்க,
“ம்ம்.. பேரு வச்சுட்டீய.. கூப்பிட்டுக் கூப்பிட்டுப் பாக்குறீயளோ?” என்று வளவன் கேட்டான்.
ஆம்! அந்த குட்டிக்குப் பெயர் வைக்கும் பொறுப்பை சுயம்புலிங்கம் மனம் விரும்பி சங்கமித்ராவிடமே ஒப்படைக்க, அவளும் ஒருநாள் முழுக்க இணையத்தில் எல்லாம் தேடி மருது என்று பெயர் வைத்திருந்தாள்.
அந்த மாடும்கூட அவளிடம் நன்றாகவே ஒட்டிக்கொண்டு சுற்ற, “பாருங்க.. விக்ரம் அத்தானுக்கு முனியன், உங்களுக்கு நந்தி மாதிரி, எனக்கு இந்த மருது” என்று மாட்டைச் செல்லம் கொஞ்சிக் கொண்டே கூறினாள்.
“வச்சுக்க.. ஆரு வேணாமுங்காவ” என்ற வளவன், “ஆயிரம்பேறு வந்தாலும் எனக்கு ஏன் நந்திதேம்” என்று கூற,
“வச்சுக்கோங்க வச்சுக்கோங்க” என்றாள்.
இருவருமாய் சேர்ந்து மாடுகளை ஓட்டிக் கொண்டு பம்புசெட் அருகே வந்து சேர, “நாம ஒவ்வொருத்தனயா குளிப்பாட்ட ஆரமிச்சுடுவோம் மித்ரா. எல்லாம் உச்சிக்குள்ள வரோம்முனுதேம் சொல்லிருக்காவ. வீட்டு சோலிய முடிச்சுட்டுத்தேம் வருவாவ” என்று வளவன் கூறினான்.
“சரிங்க. பம்புசெட்ட ஆன் பண்ணுங்க” என்று அவள் கூற,
“ஏட்டி ஆன் பண்ணதும் போயி நீயு வெளாண்டுகிட்டு இருந்துடாத. மொத சோலிய முடிச்சுடுவோம்” என்று கூறினான்.
முகவாயைத் தோளில் இடித்துக் கொண்டு, “சரிசரி” என்றவள் தேங்காய் நாரை எடுத்துக் கொண்டு சாம்பல் மற்றும் செம்மண் கலந்த கலவையை தூவி, மாட்டைத் தேய்த்துக் குளிப்பாட்ட ஆயத்தமானாள்.
மோட்டாரைப் போட்டுவிட்டுவந்த வளவனும், அம்சாவைக் குளிப்பாட்ட, இருவரும் மாடுகளைப் பற்றிப் பேசிக் கொண்டே வேலையைப் பார்த்தனர்.
கட்டிய புடவையை ஏற்றி சொருகிக் கொண்டு மாட்டைத் தேய்த்து அவள் குளிக்க வைக்கும் அழகைக் கண்டவன், “பட்டணத்துக்காரன கட்டிருந்தா ஏசி ரூமுல ஜம்முனு உக்காந்துட்டு ஜாலியிருந்துருப்பன்ன?” என்று கேட்க,
அவனை ஏறெடுத்தும் பாராதபடி மாட்டைத் தேய்த்துக் கொண்டே, “அப்ப நான் இதெல்லாம் மிஸ் பண்ணிருப்பேன்ல?” என்றாள்.
அவன் இதழ்கள் அழகாய் விரிய, புருவம் உயர்த்தி அவனை முறைப்பாய் நிமிர்ந்து பார்த்தவள், “இப்புடி பேசக்கூடாதுனு முன்னமே சொல்லிருக்கேன் தான?” என்றாள்.
“ஆத்தா பேசலடியம்மா” என்றவன், “பாரு அம்சாக்கா.. என்னய மெரட்டுதா” என்க,
“அவங்க பேசினது மட்டும் சரியா அண்ணி?” என்று இவளும் மாடிடம் கேட்டாள்.
“நீங்க வேணாம்.. எங்க அந்த நந்தி. அவன வரச்சொல்லுங்க. உங்கண்ணே பேசுற பேச்சப் பாருடாங்குறேன்” என்று வீரமாய் அவள் கூற,
தோள்களைக் குலுக்கியபடி, “லே நந்தி” என்று அழைத்து விட்டான் வளவன்.
நந்தியும் அவர்கள் அருகே வந்துவிட, “அம்மாடி” என்று லச்சுவிற்குப் பின் சென்றவள், “ஏங்க?” என்க,
“நீதான கூப்ட?” என்றவன், “ஓம்மைணி கூப்டாவடா” என்று அவளைக் கண்காட்டிக் கூற, அமைதியாய் அவள் அருகே சென்று நின்றான்.
இவளுக்குத்தான் கால்கள் கதகலி ஆடத்துவங்கியது.
“ஏங்க சத்தியமா பயமாருக்கு” என்று மித்ரா பீதியோடு கூற,
“ஏட்டி அவேம் தங்கம்டி. சும்மா அச்சப்படாம அவேன குளிப்பாட்டு” என்றான்.
“ஆள விடுங்க. நான் வரவேயில்ல இந்த ஆட்டத்துக்கு” என்று அவள் கூற,
“போடி கோம்ப” என்றவன், “நீ வாம்லே” என்று அழைத்துத் தான் குளிக்க வைத்தான்.
தேவிகாவையும் மகிழையும் அழைத்துக் கொண்டு கார்த்திகா மற்றும் விக்ரமனும் வந்து சேர, “மாமா எனக்கு கருப்பன்” “மாமா எனக்கு சடையன்” என்று பிள்ளைகளும் குதித்தனர்.
“ஏட்டாது கண்ணு. நீயு வா நாம மருத குளிக்க வப்போம்” என்று கார்த்திகா தேவிகாவை அழைக்க,
குழந்தைகளுடன் சேர்ந்து மேலும் நேரம் அழகாய் கடந்தது.
ஓடி ஓடி விளையாடியக் குழந்தைகளின் சப்தமே அங்கு நிறைந்திருக்க, அவர்களது இடம் தான் என்பதால் பெரிதாக பயமும் இருக்கவில்லை.
தம்பதியர் இருவருமாய் மாடுகளை குளிக்க வைத்துக் கூட்டிவந்து, கயறுகளை புதுப்பித்துக் கொண்டிருக்க, மோட்டார் அறையிலிருந்து ஆளுக்கிரண்டு சிலம்பு கம்புகளைத் தூக்கிவந்த குழந்தைகள் வளவனிடம் நீட்டி, “மாமா கம்பு சுத்து” என்று கேட்டனர்.
“பொறவு சுத்துறேம்லே. இந்தா நம்ம கருப்பன் கொம்புக்கு சாந்து பூசனும்ன?” என்று வளவன் கூற,
“லே சும்மா ரெண்டு சுத்து சுத்தத்தான? போடா. ரொம்ப நா ஆச்சுது நீயு கம்பு சுத்தி பாத்தே” என்று விக்ரமன் கூறினான்.
“உங்களுக்கு சிலம்பு சுத்தத் தெரியுமா?” என்று சங்கமித்ரா கேட்க,
“நல்லா சுத்துவாவ சங்கு. நீ பாத்ததில்லயா? கொழுந்தரே பெர்பாமென்ஸ காட்டுங்க” என்று மித்ராவிடம் துவங்கிய கார்த்திகா, வளவனிடம் முடித்தாள்.
அதில் சிரித்துக் கொண்டவன், ஒரு கம்பை எடுத்து சுற்றத் துவங்க, அவன் துவங்கிய சில நிமிடங்களில் மற்றொரு கம்பு அவன் கம்பைத் தட்டி மேலே பறக்கவிட்டது.
மேலே பறந்த கம்பு கீழிறங்கும் திசைக்கு அனைவரின் பார்வையும் மேலிருந்து கீழாய் செல்ல, கம்பத்தைத் தட்டிவிட்டுப் பறித்துக் கொண்ட சங்கமித்ரா, தன்னவனைப் பார்த்து புருவம் ஏற்றி இறக்கினாள்.
அனைவருமே அவள் செயலை ஆச்சரியமாய் பார்த்துக் கொண்டிருக்க, கைக்கொரு சிலம்பம் வைத்துக் கொண்டு அவற்றை விரல்களின் அசைவில் மிக லாவகமாய் சுழற்றிக் கொண்டிருந்தாள்.
அதில் மற்றவர்கள் விழிகள் ஆச்சரியமாய் விரிய, அமர்ந்து எழுந்து, ஆடி அசைந்து இரண்டு கம்புகளையும் அழகாய் சுற்றியவள் ஒன்றை வளவனுக்குத் தூக்கிப் போட, அதை பிடித்துக் கொண்டவன், “ஏட்டி!” என்று ஆச்சரியமாய் அழைத்தான்.
“ம்ம்.. ம்ம்” என்று சிலம்பத்தைக் கண்காட்டிக் கூறியவள் அவனோட சிலம்பம் சண்டையிலும் இறங்க, ஒருகட்டத்தில் அவள் பக்கம் ஓங்கி மீண்டும் கம்பு அவளால் தட்டிப் பறிக்கப் பட்டது.
“அப்புடி போடு” என்று உற்சாகமாய் கத்திய விக்ரமன் விசிலடிக்க, “ஏ… அத்ததேம் வின்” என்று குழந்தைகள் இருவரும் பலமாய் கைகள் தட்டினார்.
“ஏ சங்கு.. செம்மயா சுத்துற. செலம்பு சுத்தத்தெரியுமாக்கும்?” என்று கார்த்திகா வியப்பும் மகிழ்ச்சியுமாய் கேட்க,
“தெரியும் க்கா. சின்ன வயசுல கிளாஸ் போனேன். டிஸ்டிரிக்ட் லெவல்ல நடந்த நிறைய போட்டிக்குலாம் போயிருக்கேன். அப்றம் படிப்பு ஏறுதுனு அப்பா வேணாம் சொல்லிட்டாங்க” என்று கூறினாள்.
“ஏத்தா இம்புட்டு நல்லா சுத்துறியே எல்லா பாடமும் கத்துகிட்டயோ?” என்று விக்ரமன் கேட்க,
“ரெண்டு மூனு வருசம் கத்துகிட்டேன் அத்தான். அடுத்த அடுத்த மொறையெல்லாம் கத்துக்க முடியல” என்றாள்.
“ரொம்ப நல்லா சுத்துற மித்ரா. நெசத்துக்கு ஊங்கூட போட்டி போட்டா அம்புட்டுதேம் போல” என்று வளவன் கூற,
அதில் சிரித்துக் கொண்டவள், “நீங்க பூரம் கத்துகுட்டீங்களா?” என்று கேட்டாள்.
“ம்ம் கொஞ்சம் கத்துக்கிட்டேம். எங்க தாத்தா ஒருத்தவ இருந்தாவ. எனக்கு அவோ செலம்பம் சுத்துறத பாத்து ரொம்ப ஆசயாருந்துச்சுனு கத்துக்கிட்டேம். பொறவு அவிய எறந்து போனவாட்டிக்கி வேற யாருட்டயும் பழகிக்கனு ஐயா சொன்னாவ. தாத்தவ வச்சுதேம் ஆச வந்துச்சு. அதேம் வேற ஆருட்டயும் கத்துகிட தோனலனு விட்டுட்டேம்” என்று அவன் கூற,
“சரிதான்.. வழியிருந்த உங்களுக்கு கத்துக்க விருப்பமில்லை. விருப்பமிருந்த எனக்கு அப்ப கத்துக்க வழியில்ல” என்று சிரித்தாள்.
அங்கே வேலை எப்படி நடக்கின்றதென்று விசாரிக்க சுயம்புலிங்கம் அழைக்க, மீண்டும் அனைவரும் வேலையில் இறங்கினர்.
மாடுகளுக்குப் புது கயிறுகள் கட்டி, கொம்புகளுக்கு வண்ண சாயங்கள் பூசி அலங்கரித்த அனைவரும் அங்கேயே கட்டிவைக்க,
“நாங்க கொட்டாவ தூத்துட்டு தொட்டி கட்டுறோம். நீங்க போயி வயலுக்கு தோப்புக்குலாம் காப்பு கட்டிபோட்டு மாட்டு தீவனமெல்லாம் கரச்சுக் கொண்டாங்க” என்று கார்த்திகா கூற,
“சரி மைணி” என்று வளவன் கூறினான்.
சங்கமித்ராவும் கார்த்திகாவும் கொட்டகைக்கு சென்று பெருக்கி சுத்தம் செய்ய, “இங்க என்ன பண்ணப்போறோம் அக்கா?” என்று சங்கமித்ரா கேட்டாள்.
“எடத்தக் கூட்டி பெருக்கிட்டு சாணங்கில (சாணத்தில்) நாலு தொட்டி கட்டிவக்கப்போறோம் சங்கு. மாட்டுப் பொங்கலுக்கு மோந்திக்கு மேலதேம் பண்டிகயே. தொட்டில மாட்டுத்தீவனமெல்லாம் நெறச்சு, அத மாட்ட உண்க வச்சு மாடவிட்டே தொட்டிய மிதிக்க விடுவாவ. மாட்டுக்கெல்லாம் கற்பூரம் சாம்பிராணிலாம் காட்டி விபூதியடிச்சுவிட்டு கும்பிட்டு வீட்டுல கறிவிருந்து உண்கனும். அம்புட்டுதேம். நல்லா ஜோரா போவும்” என்று கார்த்திகா கூற, “நீங்க சொல்றதுலயே தெரியுது க்கா” என்றாள்.
இருவரும் பேசியபடி சுத்தம் செய்து முடித்திட, கார்த்திகா சாணம் மூட்டையைத் தூக்கி வந்தாள். பட்டனத்தில் பிறந்து வளர்ந்தவள் என்பதால் அவள் சுத்தம் செய்ய ஒத்துழைத்ததே கார்த்திகாவிற்கு பெரிதாகத்தான் பட்டது. சாணமெல்லாம் அவள் தொட்டுக்கொள்ள விரும்ப மாட்டாளோ என்று நினைத்த கார்த்திகா, “நீயு அவோ வராவளா என்னனு பாரு சங்கு. நாங்கட்டி முடிச்சுடுதேம்” என்க,
“நானும் கட்டுறேன் க்கா” என்று ஆர்வமாய் கேட்டாள்.
“சாணங்கில கட்டனும்டி” என்று அவள் கூற,
“சரிக்கா கட்டுறேன்” என்றாள்.
சரியென்று கார்த்திகாவும் அவளுக்குச் சொல்லிக் கொடுக்க, அவளும் ஆர்வமாய் கேட்டுக்கொண்டு அதுபடியே கட்டினாள்.
“இந்தூருக்கு நீயு வந்தே ஒரு வருஷங்கூட இருக்காது. சிங்கார சென்னையில இருந்துபோட்டு இங்கன, இந்த கிராம சூழலுக்கும் இந்தூட்டு சூழலுக்கும் எப்புடி சங்கு இம்புட்டு சீக்கிரம் பழகிக்கிட்ட?” என்று கார்த்திகா கேட்க,
லேசாய் சிரித்தவள், “நான் காலேஜ் அஞ்சு வருஷமும் ஆஸ்டல்லதான் தங்கி படிச்சேன் அக்கா. முதல் மூனு வருஷம் கூட அம்மா அப்பா சென்னைலதான் இருந்தாங்க. இருந்தாலும் காலேஜ் ரொம்ப தூரம்னு ஆஸ்டல்லதான் படிச்சேன். அப்ப அப்பாக்கு அவ்ளோ வசதிலாம் இல்ல. ஆஸ்டல் பெரிய இட வசதிலாம் இருக்குற போல காலேஜ் கிடைக்கலை. ஒரு ரூமுக்கே ஆறு பேர் எட்டு பேர் தங்குறபோல இருக்கும். முதல்ல எல்லாரையும் அனுசரிச்சு இருக்க ரொம்ப கஷ்டப்பட்டேன். அழுவேன். என்னைய கூட்டிட்டுப் போயிடுங்க நான் படிக்கவே இல்லைனுலாம் அழுதுருக்கேன்” என்றாள்.
“அடியாத்தீ..” என்று கார்த்திகா கூற,
“அப்ப அப்பா சொன்ன விஷயம் இதுதான். பழகிக்க. வாழ்க்கைல உனக்கு கம்ஃபோர்டா இருக்குற போலயே எல்லா எடத்துலயும் கிடைச்சுடாது. முன்னும் பின்னும் முரணாதான் அமையும். அப்ப புதுசா போய் கஷ்டப்படுறதுக்கு இப்பவே பழகினா, எப்புடி அனுசரிச்சு வாழலாம்னு கத்துப்ப. ஒரு பத்துபேர் கூட இருந்தா எல்லாரையும் அனுசரிச்சுப்போகுற பக்குவம் வரும். யார் யார் எப்படினு தெரிஞ்சுக்குற அனலைஸிஸ் டெக்னிக் புரியும். யார்கிட்ட எப்படி நடந்துக்கனும், ஒரு பிரச்சினை வந்தா எப்படி சமாளிக்கனும், பிரச்சினையே வராமருக்க என்ன பண்ணனும்னு அப்பதான் கத்துப்பனு அப்பா சொன்னாங்க. பத்து பதினஞ்சு நாளுக்கு யாருட்டயும் ஒட்டிக்காத. யார் யார் எப்படினு அனலைஸ் பண்ணு. உனக்கு ஒத்துவருவாங்கனு தெரியுரவங்கட்ட பேச்சு வச்சுக்கோ. மித்தவங்கட்ட என்னனா என்னனு இருந்துக்கோனு சொன்னாங்க. அதுல பழகினதுதான் இந்த அடாப்டபிலிடி. சுத்தமா பிடிக்காத அந்த காலேஜுக்கே பொருத்திப் போக நான் முயற்சி பண்ணப்ப, என் நேசம்மிகுந்தவளுக்காக அடாப்ட் பண்றது எனக்கு அவ்ளோ ஒன்னும் கஷ்டமா படலை க்கா” என்றாள்.
அவள் பேச்சை ரசித்துக் கேட்ட கார்த்திகா, “ஒன்னய எந்த ரகத்துல சேக்கனே தெரிலடி. ஆனா நீயு ரொம்ப நல்ல மனசுக்காரி” என்று கூற,
அதில் கிளுக்கிச் சிரித்துக் கொண்டு வேலையைத் தொடர்ந்தாள்.
Comments
Post a Comment