திருப்பம்-66

 திருப்பம்-66



வேலையை முடித்து மதிய உணவு உண்டு இளைப்பாறிவிட்டு மாலைநேரம் மீண்டும் நால்வரும் வந்து சேர்ந்தனர்.


மாட்டுக்கான தவிடு, கஞ்சி, களநீரென ஒவ்வொரு தொட்டியிலும் ஒரு பண்டம் நிறைக்கப்பட, “பொங்க எங்கன வெக்கலாம் மைணி?” என்று வளவன் கேட்டான்.


“கொட்டாக்கு வெளியிலயே வச்சுபுடுவம் கொழுந்தரே” என்று அவள் கூற,


சரியென்று வெளியே அடுப்பமைத்தான்.


“பொங்க வைக்க தீபியக்கா வரேன்னாவ” என்று விக்ரமன் கூற,


“வந்தாச்சு வந்தாச்சு” என்றபடி அவ்விடம் வந்தாள் தீபிகா.


“அண்ணி வாங்க வாங்க. நீங்க தான் மிஸ்ஸிங்” என்று சங்கமித்ரா கூற,


“இந்தா வந்துட்டேம்ல?” என்று தீபிகாவும் உற்சாகமாய் கூறினாள்.


“அத்தான் எங்கக்கா?” என்று இரட்டையர்கள் இருவரும் ஒன்றுபோல் கேட்க,


“புள்ளைய கரும்பு கேட்டாவனு வெட்டிகிட்டு இருக்காருடா. நாந்தேம் சோலியாவனுமே மாட்டுக்கு பொங்கல வச்சுபுடுவம்னு வெரசா வந்தேம். அவியல்லாம் பொங்குறதுக்குள்ள வந்துடுவாவ. அடுப்ப மூட்டுவம்” என்று தீபிகா கூறினாள்.


அதன்படி அடுப்பை மூட்டி வென்பொங்கல் வைப்பதற்கான ஆயத்தங்களைப் பெண்கள் துவங்க, வீட்டு ஆட்கள் வரிசையாக வந்து சேர்ந்தனர்.


“இந்தா வந்துட்டாவடா ஒங்க அத்தான்..” என்று நீட்டி முழக்கி தீபிகா கூற,


மகாதேவன் சிரித்துக் கொண்டான்.


“அக்காவுக்கு பொறாமத்தான்” என்று வளவன் கூற,


“ஆமாலே. நீங்க வாங்க மாட்ட ஓட்டிகிட்டு வருவம்” என்று மகா அழைத்தான்.


மாடுகளை அனைவரும் ஓட்டி வந்திட, உள்ளே பொங்கலும் நல்லபடியாக வைக்கப்பட்டது.


“மாமா மாமா.. நானு கருப்பன் மேல” என்று தேவிகா குதித்தபடியே கேட்க,


அவளைத் தூக்கிக் கொண்டு முத்தம் வைத்த வளவன், “கருப்பனெல்லாம் இல்ல. நந்திதேம் வா” என்று நந்தியின் மீது அமர்த்திவிடவும்,


“மாமா நந்தி வேணாம்…நந்தி மொறைக்கும். மாமா எறக்கிவிடுவ. மாமா பயமாருக்கு” என்று பயத்தில் கெஞ்ச ஆரம்பித்தாள்.


“ஏம்லே எம்புள்ளைய அச்சப்படுத்துற?” என்று தீபிகா கேட்க,


“ஏலே புள்ள பயப்படுது எறக்குலே” என்று சிவபாதசேகரன் கூறினான்.


“இந்தா என்ன? எல்லாம் என் நந்திய பேய பாத்தபடிக்கு சொல்லுறீய? அவேம் பாட்டுக்குத்தான இருக்கியாம்” என்று வளவன் நந்தியைத் தடவிக் கொடுக்க, நந்தி அவன் இடையோடு தலையை உரசிக்கொண்டது.


அதன் அசைவில் இன்னும் மிரண்ட தேவிகா, “மாமா..” என்று கத்த,


“மாமாக்கு ஒத்த முத்தங்குடு எறக்கிவிடுதேம்” என்று கன்னத்தைக் காட்டினான்.


அவன் தலையிலேயே ஒன்று போட்ட சிவபாதசேகரன், “முத்தங்கேக்க ஆளு வந்தபிடிக்கு எம்புள்ளைய ஏம்லே பயங்காட்டுத? சவட்டிபுடுவேம் ஆமா” என்று மிரட்டி விட்டு, “நீயு வா கண்ணு” என்று தூக்கிச் செல்ல,


“அப்பா மாமா பேட் பாய்” என்று அவர் கழுத்தைக் கட்டிக் கொண்டு தஞ்சமடைந்தாள்.


இவற்றை சின்ன சிரிப்போடு பார்த்த வளவன், “ஆளு வந்துட்டா ஒங்க புள்ளைட்ட அப்பத முத்தங்கேக்க கூடாதாக்கும்?” என்க,


“மெரட்டில்ல வாங்குத நீயு?” என்று கேட்டார்.


“எம்பொஞ்சாதியபோல கேட்டதும் கொடுத்துபுட்டா ஏம்மெரட்டுதேம்?” என்று அவன் கூற,


“ஏலே கோட்டி.. புள்ளையல வச்சுட்டு என்னம்லே?” என்று விக்ரமன் சத்தம் போட்டான்.


வளவன் பேச்சில் வெட்கம் கொண்டு தலையைக்கூட நிமிர்த்தாமல் பொங்கலைக் கிண்டும் சங்கமித்ராவை இடித்த தனம், “ஏன்டி மைணி.. எங்கண்ணேன கெஞ்சவிட மாட்டியாம்ல? அப்படியாக்கும்?” என்று கேலி செய்தாள்.


“ச்சூ.. தனம் சும்மாரு” என்று சங்கமித்ரா கோபம் போல் கூற முயற்சிக்க,


“என்னத்த மைணி? அண்ணேந்தேம் என்னய உசுப்பிவிட்டாவ. சான்ஸு கெடச்சும் நளியடிக்காதுருந்தா என்னய ஊரு என்ன பேசும்?” என்று கேட்டவள், “இப்புடிலாம் கேட்டதும் கொடுக்கப்டாது மைணி. கொஞ்சம் கெஞ்சவிட்டுதேம் கொடுக்கனும். இல்லாட்டி மிஞ்சிபுடுவாவ” என்று அட்வைஸ் வேறு வழங்கினாள்.


“அச்சோ தனம்.. சும்மாயிரேன்” என்று நாணத்தில்‌ நெழிந்தபடி சங்கமித்ரா கூற,


“ஓன் ஆளுகூட பேசுறதெல்லாம் இவோளோட பேசுதியாக்கும்? அவோளே தலைய நிமிந்தா முத்துகித்து வுளுந்துடுமோனு தவிக்கா பாவம்” என்று காப்பாற்றுவதைப்போல் வந்த தீபிகாவும் கேலியில் இறங்கினாள்.


“அச்சோ அண்ணி நீங்களுமா?” என்று சங்கமித்ரா சிணுங்க, பெண்கள் மூவரும் கலகலத்து சிரித்தனர்.


பொங்கல் வைத்து முடியவும் அதை உருண்டைகளாய் உருட்டி மாடுகளுக்கு உன்னக் கொடுத்து, கொட்டாவிற்குள் அழைத்துச் சென்றனர்.


அங்கு சாணத்தால் கட்டப்பட்ட தொட்டிகளில் இருந்த தீவனங்களை உண்ண வைத்துவிட்டு, நந்தியைக் கொண்டே அந்த தொட்டிகளை உதைத்து உடைக்க வைத்தனர்.


கொண்டாட்டங்கள் யாவும் சிறப்பாய் முடிவடைய, மாடுகளை கொட்டகைக்குள் அனுப்பிவிட்டு அனைவருமாய் வீடு திரும்பினர்.


“மாமா காலு வலிக்கி. தூக்கிக்கோவ” என்று தேவிகா கைகளைத் தூக்கிக் கொண்டு வளவனிடம் வந்து நிற்க, 


“மாமேன் பேட் பாயின்ன? ஏங்கிட்ட ஏம்லே வார இப்ப?” என்று கேட்டான்.


“பேட் பாயோ குட் பாயோ. நீதான எம்மாமா” என்று அவள் வசனம் பேச,


“ஏக்கா.. ஓம்புள்ள ஒன்னய கணக்கா நல்லா வாயடிக்கி. நல்லா பொழச்சுகிடும்” என்று கூறியபடியே தூக்கிக் கொண்டான்.


“இப்பத சொன்னியே.. அது நூத்துல ஒன்னுலே” என்று மகா கூற,


“ம்ம்?” என்ற முறைப்போடு கணவனை தீபிகா ஏறிட்டாள்.


“ஏம்லே எம்பொஞ்சாதிய பாத்தா வாயடிக்கவ போலயாருக்குது? சவட்டிபுடுவேம் பாத்துகிடு” என்று அப்படியே மகா பேச்சை மாற்றிக் கூற,


“அய்யோ பாவம் அத்தான்” என்ற விக்ரமைத் தொடர்ந்து அனைவரும் சிரித்தனர்.


“ஏம்லே வேலுவ காணல” என்று சிவபாதசேகரன் கேட்க,


“அத்த ஏதோ வேண்டுதலு வச்சுருக்குது. அதேம் கருப்பு கோயிலுக்கு போயிருக்காவ” என்று வளவன் கூறினான்.


அனைவரும் வீட்டை வந்தடைய, கறிவிருந்துக்கான ஆயத்தங்கள் துவங்கியது.


எங்கே தன்மீது இருக்கும் சுனக்கத்தில் தன் அத்தை தனக்குத் தனியே எடுத்து வைக்க மறந்திடுவாரோ என்ற பயம் வேறு சங்கமித்ராவுக்கு தோன்றியது.


“அக்கா.. எனக்கு தனியா எடுத்து வச்சுட்டாங்களானு பாத்து சொல்லுங்க க்கா. கருவாட்டுக் குழம்புலாம் சாப்பிட்டே ரொம்ப மாசமாச்சு” என்று பயத்தோடும் ஏக்கத்தோடும் கூற,


“நாம்போயி பாக்கேம் இரு” என்று கார்த்தி உள்ளே சென்றாள்.


குழம்பு மணக்க மணக்க கொதித்துக் கொண்டிருக்க, 


“ஆச்சா அத்த?” என்று கேட்டபடி குழம்பை கலக்கினாள்.


ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் கொஞ்சம் குழம்பை தனியே எடுத்துக் கொண்டிருந்தார்.


“சங்குக்கா அத்த?” என்று கார்த்திகா கேட்க,


“இந்தூட்டுல ஒரப்பில்லாம உங்குறது அவதான?” என்றபடி அதை ஓரம் வைத்தவர் வத்தல் போடியை சேர்த்து, “மத்ததுலயும் கொஞ்சத்த போயி எடுத்து வையு. வத்த பொடி தீந்துபோச்சுது. எடுத்துட்டு வாரேம்” என்று சென்றார்.


ரத்தப் பொறியல், இறால் தொக்கு, நண்டு தொக்கு, கோழி மிளகு பிரட்டல், ஆட்டு மூளை வறுவல், கருவாட்டுக்குழம்பு, நண்டு கார மசால், நல்லி எலும்பு ரசம் என்று முழு அசைவ உணவின் ரகங்களே அங்கு குவிந்திருந்தது.


பொறிக்கும் உணவுகள் எல்லாம் காரம் குறைவாக போட்டு பொறித்து அவளுக்குத் தனியே வைக்கப்பட்டு மற்றவை காரம் அதிகம் போட்டு பொறித்து வைக்கப்பட்டிருந்தது.


தொக்கும் சுக்காவும் மட்டும் அடுப்பில் காரத்திற்காக காத்திருக்க, அவற்றிலிருந்து சங்கமித்ராவிற்கு தனியாக கார்த்திகா ஒதுக்கி வைத்துக் கொண்டிருந்தாள்.


மீதியுள்ள உணவிற்கு காரப்பொடியை தனியே எண்ணையில் பொறித்து தெய்வா சேர்க்க, உணவின் மணம் வீட்டையே நிறைத்தது.


அனைத்தையும் அவர்கள் கொண்டு வந்து வைக்க, சங்கமித்ரா வாழை இலைகளை வெட்டி போட்டுக் கெண்டிருந்தாள்.


“அம்மா நீயுங்கூட போயி ஒக்காரு. நானும் தீபியும் போடுதோம்” என்று திரிபுரா கூற,


“அதுலாம் இல்ல. போயி மாப்பிள்ளையோட உக்காருவ. விருந்துக்கு வந்துட்டு இதென்ன இது?” என்றார்.


சங்கமித்ரா பரிமாறுவதற்காக நிற்க, அவளையும் சென்று உக்காரென்றெல்லாம் அவர் கூறவில்லை. அவளும் அதை எதிர்ப்பார்க்கவில்லை என்பது வேறு‌. அத்தனை நபர்களுக்கு அவர் ஒருவராய் உணவிடுவது சிரமம் என்பதால் அவளாகவே பரிமாற வந்துவிட்டாள்.


கார்த்திகா சுடர் பசியில் அழுவதால் குழந்தைக்கான உணவை ஊட்ட சென்றுவிட,


“நானுங்கூட பரிமாறிட்டே உண்குறேம்” என்று வளவனும் எழுந்து கொண்டான்.


அவ்வீட்டில் ஆண்கள் உணவு பரிமாறுவது ஒன்றும் புதிது கிடையாது. விசேஷ நேரங்களில் சமைப்பது, பரிமாறுவதெல்லாம் பெரும்பாலும் ஆண்களே பார்த்துக் கொள்வர் என்பதால் யாரும் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.


மூவருமாக அனைவருக்கும் உணவை பறிமாற, பேச்சும் கலகலப்புமாய் சென்றது.


உணவு பரிமாறும் போதே வளவனை கூப்பிட்டு மகாதேவன் ஊட்டிவிட, “ஏம்புருஷன் எனக்குக்கூட இப்புடிலாம் ஊட்ட மாட்டாவலே” என்று தீபிகா கூறினாள்.


“அதுக்கென்ன ஊட்டிப்புடுவம்” என்று மகா தீபிக்கு ஊட்டவரவும், அவள் வெட்கம் கொண்டு, “என்னங்க போங்க” என்க,


“ஆசனு ஆவிபோச்சு. கேட்டுட்டத்தான? வாங்கு வாங்கு” என்று விக்ரமன் கேலி செய்தான்.


அனைவரும் உண்டு முடிய, தீபிகா திரிபுரா மற்றும் விக்ரமன் சேர்ந்து தெய்வா, கார்த்திகா, வளவன் மற்றும் சங்கமித்ராவிற்கு உணவிட்டனர்.


“எங்களமட்டும் ஊட்டு ஊட்டுனு நளியடிச்சீய? நீங்க ஊட்டிக்கத்தான?” என்று தீபிகா கேட்க,


“ஏம் எலையில இருக்குறத ஊட்டினாக்கா அவோ ஒரே ஓட்டமா பின்னுக்கு ஓடிபுடுவா. அவோ எலையிலருக்குறது ஏந்தொண்டைக்குக்கீழ எறங்காது. ஏங்க்கா ஒனக்கு?” என்று வளவன் கூறினான்.


“சுத்தத்துக்கு காரமே பழகிக்கலயாத்தா நீயு?” என்று திரிபுரா கேட்க,


“இல்ல மைணி. எனக்கு காரம் ஆகாது. சின்னவயசுலருந்தே சாப்பிட்டுப் பழக்கமில்ல” என்றாள்.


உணவு பொழுதும் இனிதே முடிவடைய, அனைவருமாய் திண்ணையில் அமர்ந்துகொண்டு பேசி மகிழ்ந்தனர்.


“நம்ம தனத்துக்கு ஏஞ்சித்தப்பா சொந்தத்துல ஒரு பையன் இருக்கான்னு பேசினாவய்யா. நல்ல பையன்தானாம். மருதைல இருக்காவ. தோப்பு தோரவுனு பதவீசாதேம் வாழுறாவ. ஆளு கொணமும் நல்ல கொணமுனு செல்லுறாவ. ஒருக்கா நேருல பேசி பாப்பமா?” என்று சுயம்புலிங்கம் சபையில் வைத்தே விஷயத்தைக் கூற,


கார்த்திகாவும் சங்கமித்ராவும் தனத்தைப் பார்த்தனர்.


அவள் முகத்தில் எந்தவித பதட்டமும் இல்லாதிருக்க, “என்னடி கல்லு முழுங்கினவ கணக்கா ஒக்காந்துருக்க?” என்று கார்த்திகா கேட்டாள்.


“மாப்பிள்ள பாத்துட்டா கட்டிகிடுவனாக்கும்?” என்று அவள் கேட்க,


வடிவேல் வந்து சேர்ந்தான்.


“வாய்யா.. படையலு ஆச்சா அங்கன?” என்று திரிபுரா கேட்க,


“ஆச்சு மைணி” என்றபடி அமர்ந்தான்.


“உண்கினியாலே?” என்று சுயம்புலிங்கம் கேட்க,


“அங்கனே ஆடு வெட்டினோம் மாமா. வச்சு சாப்டாச்சு” என்று கூறினான்.


“என்ன வேண்டுதலுய்யா?” என்று தெய்வா கேட்க,


“வேற என்னத்துக்கு எங்கம்மா வேண்ட போவுது? கண்ணாலங்கட்டிக்கனுமுனுதேம்” என்றான்.


“அது ஆசையில என்னம்லே கொற? ஓங்கூட சுத்தின பயலுவதேம். ஒருத்தேம் புள்ள பெத்துட்டியாம். இன்னொருத்தேம் கல்யாணம் கட்டிகிட்டியாம். நீயு ஏம்லே ஒண்டியா திரியுற?” என்று சிவபாதசேகரன் கேட்க,


“நல்லா கேளுங்க” என்று தனம் முனுமுனுத்துக் கொண்டாள்.


“கட்டுவம்ணே கட்டுவம்” என்று வடிவேல் பேச்சை முடித்துவைக்க,


“சரிலே.. அவோளுக்கு என்னத்தச் சொல்ல? நல்ல எடமாதேம் தெரியுது. தனத்துக்கும் முடிச்சுவச்சு நாலு நல்லது பாத்துபோட்டா எனக்கும் நிம்மதியாருக்கும்ன?” என்று சுயம்புலிங்கம் கூறினார்.


வடிவேல் அதிர்ந்துபோய் தனத்தை நோக்க, அவள் அமைதியாய் அமர்ந்திருந்தாள்.


“நல்ல சம்மந்தமுனா ஒருக்கா நேருல பாத்துபோட்டு பேசி முடிங்க மாமா. நம்ம புள்ளைக்கும் வயசு வந்துட்டுத்தான? அது படிக்குது வேற. அதுக்குலாம் அவோ வீட்டாளுவ ஏதும் சொல்லாதபடிக்கு இருக்கானும் விசாரிச்சோங்க” என்று சிவபாதசேகரன் கூற,


“அதேம் கேட்டிருக்கேம் மாப்பிள்ள” என்று கூறினார்.


“ஏம்மாமா அதுட்ட ஒரு வார்த்த கேக்கத்தான?” என்று மகா கேட்க,


“ஆளு நல்லபடிக்காருந்தா போட்டோ காட்டி கேட்டுப்பம்னு யோசன மாப்பிள்ள. புடிச்சுப்போன பொறவு நல்லாயில்லனு ஆவிப்போவ கூடாதுல?” என்றார்.


“இல்ல கல்யாணத்துக்கு சரியானு கேட்டுப்பம்ன?” என்று மகா கேட்க,


“அதுசரி.. கழுத வயசாச்சுல? இன்னும் என்னத்த ரோசிச்சுகிட்டு? கட்டிகிட்டுப்போன்னா போயித்தேம் ஆவோனும்” என்று தெய்வா கூறினார்.


வடிவேலுவிற்குத்தான் ரத்த அழுத்தம் ஏறிக்கொண்டே போனது.


'கல்லயும் மண்ணயும் பாத்த கணக்கா ஒக்காந்துருக்கா. நாவொருத்தேம் தவிக்கேம்னு புரியிதா இல்லியா இவோளுக்கு’ என்று அவன் மனம் பதைபதைக்க,


“கட்டிகிடயெல்லாம் எனக்கு சம்மதமுதேம் ஐயா. ஆனா நீங்க பாத்த ஆளு வேணாம்” என்று தனம் ஒரே போடாய் போட்டாள்.


அவள் காதல் விடயம் தெரிந்தவர்கள் கூட, அவளது தைரியமான பேச்சில் அதிர்ந்து நோக்க,


“ஏம்லே வேணாம்?” என்று சுயம்புலிங்கம் அமைதியாய் கேட்டார்.


“வேணாம் ஐயா. வீணா அலையோனும்ன? எனக்கு ஒருத்தவியள புடிச்சுருக்கு. பாருவ. நல்ல மனுஷேம்தாம். பேசி எப்புடினு நீங்களுந்தேம் விசாரிக்கோவ. பொறவு கட்டிவச்சுடுவ. கட்டிக்கேம். வேற ஆருக்கும் கழுத்த நீட்டுறதுக்கில்லய்யா” என்று அவள் கூறிவிட,


“பாவி மவளே என்னடி பேசுற? ஐயா முன்னுக்க எம்புட்டு அகமா பேசுற நீயு?” என்று தெய்வா கை ஓங்கினார்.


“தெய்வா..” என்று மனைவியைத் தடுத்த சுயம்புலிங்கம், “ஏம்புள்ள எங்கிட்ட இம்புட்டு திராணியோட சொல்லுதுன்னா தப்பான வழியில போயிருக்காது. கம்மினு கெட” என்று கூற,


தந்தையை நன்றியாய் பார்த்தவள், “அவோளயே வந்து பேசச் சொல்லுதேம் ஐயா” என்றுவிட்டு உள்ளே சென்றாள்.


“என்னங்க என்ன சொல்லிட்டுப் போறா இவ? பதவீசா படிக்க வச்சு நம்பி அனுப்பினாக்கா இவோ இப்புடி பேசிட்டு போறா?” என்று தெய்வா புலம்ப,


“ஏட்டி அனக்கத்தக்கூட்டாதிரேம்” என்றவர் மகன்களை ஏறிட்டார்.


இருவரும் அமைதியாய் அமர்ந்திருக்க, அவருக்கு ஏதோ புரிவதைப் போலிருந்தது.


“சொல்லுதேம்னு தப்பா எடுக்காதீய மாமா. அது இம்புட்டு தெகிரியமா பேசுதுனா நல்லா முடிவாதேம் இருக்கும். எதும் வெரசா ரோசிக்காம அவோ முடிவென்னனு பொறுத்துப்பாத்து பேசுவ” என்று மகா கூற,


“எம்புள்ள சந்தோஷமுதேம் முக்கியம் மாப்பிள்ளை. என்னனு பாப்போம்” என்றதோடு அவரும் உள்ளே சென்றுவிட்டார்.


“ராங்கி மாறி பேசுவாளே.. எவேன காட்டப்போறாளோனு அச்சமாருக்குதேடி” என்று தெய்வா புலம்ப,


வடிவேலுவிற்கு வியர்த்து தலை சுற்றலே வருவதைப்போலானது.


“என்னம்லே தெணயா வருதா?” என்று விக்ரமன் கேட்க,


“ஓம்பாடு திண்டாட்டம்தாம்டி” என்று வளவன் கூறினான்.




Comments

Popular posts from this blog

திருப்பம் -01

திருப்பம்-03

திருப்பம் -02