திருப்பம்-67

திருப்பம்-67



காலை சாவகாசமாய் எழுந்து குளித்துத் தயாராகி தனம் வெளியே வர, கூடத்தில் சுயம்புலிங்கத்திற்கு தேநீர் கொண்டு வந்த தெய்வா மகளைக் கண்டதும் மேஜையில் கோப்பையை ‘டொம்’ என்ற சப்தத்துடன் வைத்துவிட்டு, அவளை முறைத்தபடியே முகத்தை வெடுக்கென்று திருப்பிக் கொண்டு செல்ல, ஒருநொடி ஸ்தம்பித்துதான் நின்றாள்.


“ஏ தெய்வா.. என்னதிது? புள்ளய பாத்து இப்புடியா மொகத்த வெட்டிட்டு போவ?” என்று சுயம்புலிங்கம் கேட்க,


“ஒங்க புள்ள பண்ணது மட்டும் என்னவாம்? குடும்பமே கூடியிருக்கையில எம்புட்டு தெகிரியமா நெஞ்ச நிமித்திட்டு எவனயோ காதலிக்கேம்பா” என்று கோபமே உருவாய் தெய்வா கேட்டார்.


“கொலை குத்தமா ம்மா பண்ணினேன் நானு?” என்று தனம் கேட்க,


“அப்புடியிருந்தாகூட மனசு ஆரியிருக்கமடி” என்று தெய்வா கூறினார்.


“தெய்வா.. நாம தீபிக்குக் கட்டி வைக்கலியா? நீயு இப்புடி பேசுறத மாப்பிள்ள கேட்டாக்கா என்ன நெனப்பாவ?” என்று சுயம்புலிங்கம் கேட்க,


“ஏங்க ஆம்பள அவரு பேசுறதும் இவோ பேசுறதும் ஒன்னா?” என்றார்.


“அதுசரி.. சமத்துவமெல்லாம் பேச்சுக்குத்தான் போல? நம்ம வூட்டுலயே காணலியே” என்று தனம் கூற,


“நேசத்துல என்னத்த ஆணு பொண்ணுனு? அவோ எம் வளர்ப்புடி. தப்பா ரோசிச்சிருக்க மாட்டானு நான் நம்புதேம். ஒனக்கு நம்பிக்க இல்லயா?” என்று சுயம்புலிங்கம் கேட்டார்.


“நம்பித்தான இப்புடி அம்புட்டு பேரு மூன்னுக்க மூக்கறுக்குறாப்ல பேசினா?” என்று கோபமாய் தெய்வா கேட்க,


“அம்புட்டு பேரு அம்புட்டு பேருனா யாரு முன்ன பேசினேம்? எல்லாம் நம்மூட்டு ஆளுவதான? ஒன்னு நடந்தாக்கா பட்டுனு அவியளுக்குத்தான அடிச்சு கூப்பிடுதோம்?” என்று கேட்டாள்.


“அகத்தப் பாத்தீயளா இவளுக்கு? இந்த பேச்சுக்குத்தாம்டி எனக்குப் பயந்து வருது. ஆருனு கேட்டா மட்டும் ஏம்டி வாயத்தெறக்க மாட்டுத?” என்று தெய்வா கேட்க,


“அவியளே வந்து பேசுவாவனு சொன்னேம் தானம்மா?” என்றாள்.


“ஏன் நீயு சொல்லத்தான? போயி மனச கலச்சிபுடுவம்னு அச்சபடுதியோ?” என்று அவர் கேட்க,


“அதுலாம் ஒங்களால முடியாத காரியம்மா. ஐயா மனசுலருந்து ஒங்கள கலைச்சுட முடியுமா சொல்லுவ? என்ன ஐயா? நான் வந்து பேசினாக்கா அம்மாவ மறந்துட்டு போயிடுவீயளா?” என்று கேட்டாள்.


“அதுயெப்புடித்தா?” என்று அவரும் மகளுக்கு ஒத்து ஊத, தெய்வா கணவரை முறைத்தார்.


“நீயு பாக்குறத பாத்தா ஆமானு சொல்லிருக்கனும் போலருக்கே?” என்று சுயம்புலிங்கம் தேநீரை ருசித்தபடியே கூற,


அவரை மேலும் முறைத்தவர், “அவிய எம்புருஷேம்டி” என்று மகளிடம் பாய்ந்தார்.


“அவியளும் எம்புருஷம்தாம்மா” என்று அவள் ஒரு அர்த்தத்தில் கூற,


நெஞ்சில் கைவைத்துக் கொண்ட தெய்வா, “ஏங்க இவ பேச்ச கேட்டீயளா? அடியே.. ஊரு சிரிக்க என்னத்தயாது பண்ணிட்டு வந்து அந்த மனுஷன நெஞ்ச புடிக்க வச்சுபுடாதடி” என்று மீண்டும் கத்தத் துவங்கினார்.


“ஷ்ஷோ..” என்று தலையைத் தேய்த்துக் கொண்டவள் தந்தையை நோக்க, “தெய்வா.. அனக்கத்தக்கூட்டாத உள்ளக்க போ” என்று சுயம்புலிங்கம் சப்தம் போட்டார்.


“ஆமா ஒன்னு பேச விடாதீய இந்தூட்டுல என்னய. என்னமாது செய்யக்கூடாதத செஞ்சுட்டு வந்த பொறவு அய்யோ அம்மானு அடிச்சுட்டு ஏம் வளர்ப்பயில்ல பேசுவீய” என்று புலம்பியபடியே அவர் உள் செல்ல,


தந்தையின் அருகே வந்து அமர்ந்து அவர் கரம் பற்றியவள், “நீங்க என்ன நம்புறீங்க தான ஐயா?” என்று கேட்டாள்.


அவள் தலையைப் பரிவாய் கோதியவர், “ஓங்கண்ணுல பயமில்லத்தா. அதுவே நீயு எம்புட்டு உறுதியாருக்கனு சொல்லுது. அம்புட்டு உறுதியிருக்குன்னா நீயு நல்ல பாதையிலதேம் போயிருப்ப. ஐயா ஒன்னய நம்புதேம். அவியள வந்து பேசச்சொல்லு. பாத்து முடிவு செய்யுவம்” என்று கூற,


கண்கள் கலங்க தந்தையை ஏறிட்டவள், “அம்மா ஏம்ப்பா நம்பவே மாட்டிக்காவ? நாயென்ன ஓடியா போவப்போறேம்?” என்றாள்.


“அவோள பத்தித் தெரியாதா கண்ணு? பழய ரகம். ஊரு விட்டு ஊரு பொண்ணு எடுக்கவே அந்த குதிகுதிச்சாவ. எல்லாம் பயந்தேம் கண்ணு. நீயு என்னமாது தப்பா கிப்பா முடிவு எடுத்துபுட்டு வெசனப்பட்டா ஆருக்கு வருத்தம்? முக்கி மொனங்கி முத்தா பெத்தவன்ன? அதேம் சவட்டுமேனிக்கு பேசிட்டு அலையுதா. வெசனப்படாத தாயி” என்று மகளையும் விட்டுக் கொடுக்காது, மனைவியையும் குறைத்துப் பேசாது பேசினார்.


அதில் சிறு புன்னகையுடன் தன் கண்ணீர் துடைத்தவள், “அம்புட்டு லவ்ஸுன்ன ஐயா அம்மா மேல?” என்க,


“இல்லாங்கட்டிக்கு வாழ முடியுமாத்தா?” என்று சிரித்தார்.


சிறு புன்னகையுடன் தலையசைத்தவள் எழுந்து சமையலறை செல்ல, அங்கு சங்கமித்ரா மதிய உணவுகளை கட்டிக் கொண்டிருந்தாள்.


“மைணி பசிக்கி” என்று அவள் கூற,


“அவோளுக்கு ஒன்னுமில்லனு சொல்லியனுப்பு” என்று உள்ளிருந்து தெய்வா குரல் கொடுத்தார்.


முகத்தில் அறைந்தார் போன்ற பதிலில் முகம் சுருங்கிய தனத்தைக் கண்டு வருத்தம் கொண்ட சங்கமித்ரா, ‘இரு வரேன்' என்பதாய் சைகை செய்துவிட்டு உள்ளே சென்றவள் தட்டில் உணவுடன் வந்தாள்.


“அதுசரி.. இவோ என்னிக்கு எம்பேச்ச கேட்டா இன்னிக்குக் கேக்க. நாஞ்சொன்னா அதுக்கு மறுப்பாதான செய்வாவ. ஆனாலுங்கூட நானு ஒன்னும் சொல்லிடக்கூடாது. ஆரயும் மூட்டிக்கொடுத்து என்னய வில்லியாக்க பா(ர்)ப்பா” என்று தெய்வா சங்கமித்ராவை சப்தம் போட,


தட்டைவைத்துவிட்டு எழுந்த தனம், “என்னய பேசனும்மினா எங்கிட்ட பேசும்மா. அவோள வையாத. என்ன நாஞ்சாப்பிடக்கூடாதாக்கும்? உண்கல தாயி. இந்தா.. நான் திங்காமதான இந்தூட்டுல பண்டம் மிச்சமாவப்போவுது” என்று கத்திவிட்டு நகர்ந்தாள்.


அவள் கரம் பற்றி நிறுத்திய சங்கமித்ரா, “நான் புதுசா சொல்ல வேணாம் தனம். விவசாயம் பண்றவங்க கூடதான பொறந்து வளந்துருக்க? உன் தட்டுல மிஞ்சி குப்பைக்குப்போறது கூட இல்லாம எத்தனைப்பேர் பட்டினி கிடப்பாங்க? சாப்பிடு. யாரும் என்னமும் பேசுறாங்கனு அதை சாப்பாடுல எப்பவுமே காட்டக் கூடாது” என்று பொதுவாய் கூறுவதைப் போல் மாமியாரைக் குறித்துக் கூற,


அங்கு வந்த கார்த்திகா, “என்னாச்சு சங்கு?” என்றாள்.


ஓரக்கண்ணால் தன் மாமியாரைப் பார்த்துக் கொண்டவள், “சாப்பிடு தனம்” என்க,


தனத்திற்கு கண்ணை முட்டிக்கொண்டு கண்ணீர் வந்தது. அது வருத்தம் என்பதைவிட கோபத்தின் வெளிப்பாடாகவே வெளிப்பட்டது.


அப்படியே தனம் நிற்க, அவளை அமர்த்தி தட்டிலுள்ள உணவை சங்கமித்ரா ஊட்ட, அன்னையை முறைத்துக் கொண்டே அதை வாய் திறத்து வாங்கிக்கொண்டாள்.


இவற்றைப் பார்த்த தெய்வா முகத்தைத் திருப்பிக் கொண்டு சமையலறைக்குச் சென்றுவிட, “மைணி போதும் விடு. நாங்கெளம்புதேம்” என்று கூறினாள்.


“இருக்குற கோவத்த சாப்பாட்டுல காட்டி என்னடி பண்ணப்போத? ஒழுங்கா பசியாறிட்டு போ” என்று கார்த்திகா அதட்ட,


“அதேம் ஒங்க மாமியா நெறக்க நெறக்க குடுத்துட்டாவளே. இன்னும் வேற வேணுமா? ஒருநா மிச்சம் வச்சு பாவம் வந்தா நானே கட்டிகிடுதேம்” என்றவள், “நீயே சாப்பிட்டுடு மைணி. எனக்கு சத்தியமா தொண்டைக்குக் கீழ எறங்க மாட்டுது” என்று கூறினாள்.


அவளைப் பார்க்கவே சங்கமித்ராவிற்கு பாவமாக இருந்தது. “சொல்லிடலாம்ல தனம்? சொல்லாமருக்கப்போய் தான அவங்க பயப்படுறாங்க” என்று சங்கமித்ரா மெல்லொலியில் கேட்க,


“பொல்லாத பயம்.. போ மைணி. எங்கைய்யாக்கு உள்ள நம்பிக்க இவியளுக்கு இல்லத்தான? பொட்டப் புள்ள காதலிக்கக்கூடாதாம். கட்டிகிட்டு பொறவு காதலிக்க மாட்டேம்னா ஆவுமா? இவிய பாத்து குடுக்கவனாயிருந்தா எனக்குக் காதலு வந்தே ஆவனும். நானா தேடிகிட்டா வரக்கூடாதாம்ல?” என்று கோபமாய் கேட்டவள் வழியும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.


“ஏன்டி சொல்ல மாட்டிக்க. ஈகோவோ பயமோ. என்னவாருந்தா என்ன? ஒன்னய வையாமருப்பாவதான?” என்று கார்த்திகா கேட்க,


“அவிய வந்து சொல்லுவாவ மைணி” என்று இருக்கமாய் கூறினாள்.


அவளுக்குள் ஏதோ முடிவாகியிருக்கின்றாள் என்பது பெண்கள் இருவருக்கும் புரிந்தது. அதைத் தோண்டித் துருவ விரும்பாது அவர்கள் விட்டுவிட, “நான் வாரேம் மைணி” என்று எழுந்தாள்.


தட்டை வைத்துக் கொண்டு சங்கமித்ரா கெஞ்சுதலாய் பார்க்க,


அவள் கையிலுள்ளதை வாங்கிக் கொண்டு, “போதும் மைணி. ப்ளீஸ். முடியல” எனச் சென்றுவிட்டாள்.


சங்கமித்ராவால் அவள் வலியை புரிந்துகொள்ள முடிந்தது. தன்னவன் தனக்கில்லையென்ற வலியை அவள் உணர்ந்திருக்கின்றாள். தன்னவன் தனக்குத்தான் என்றபோதும் அவனுக்காக தனம் வலி சுமக்கின்றாள். அவ்வளவு தான் வித்தியாசம் என்று அவள் பெருமூச்சு விட்டுக்கொள்ள, “அத்தைய என்ன ரகத்துல சேக்கனே புரியலட்டி” என்று கார்த்திகாவும் பெருமூச்சு விட்டாள்.


வண்டியில் செல்ல மனமில்லாது பேருந்தில் செல்லுவதற்கு புறப்பட்டு ஏறி அமர்ந்த தனலட்சுமி மனம் பலதரப்பட்ட உணர்வுகளில் சிக்கி சில நினைவுகளில் சென்று நின்றது.


'வளவாண்ணே.. ஓங்க கூட்டுக்காரவ என்னைய ஆட்டத்துல தோக்கடிக்காவ எப்பப்பாரு.. அவோள இனிமே வெளாட கூட்டிக்கிட்டு வராதீய. என்னைய தோக்க தோக்க வைக்காவ’ என்று சிறு பிராயத்தில் ஓடி பிடித்து விளையாடும்போது வடிவேல் எப்போதும் அவளை பிடித்துவிடுவதில் கோபம் கொண்டு அவள் கத்த,


“ஒனக்கு எங்கிட்டருந்து தப்பி ஓட தெரியில. ஒழுங்கா ஆட கத்திகிட்டுவா. பச்ச புள்ளயாருந்துட்டு சாட்டு சொல்லிட்டுருக்கவ” என்று வடிவேல் கூறினான்.


அவனைப் பார்த்து மூக்கு விடைக்க முறைத்துவிட்டு அவள் செல்ல, அதில் கைகள் தட்டி இவன் சிரித்துக் கொண்டான்.


அந்த பொன்னான நினைவில் அவள் இதழ்கள் பூவாய் மலர்ந்தது.


'யாருடி அவிய? தெரிஞ்சவியளா?’ என்று கல்லூரி படிக்கும் வயதில் பேருந்து நிலையத்தில் தன்னை பத்திரமாய் அழைத்துவந்து விட்டுச் செல்பவனையே பார்த்து நின்றவளிடம் அவளது தோழி ஒருத்தி கேட்க,


'அண்ணே பிரெண்டு' என்று அவனைப் பார்த்தபடியே கூறித் திரும்பியவள் மனதில் ஒருவித இனம் புரியாத சிலிர்ப்புத் தோன்றி மறைந்திருந்தது.


‘ஏ புள்ள..’ என்று பேருந்து நிலையத்திற்கு ஓடிவந்த வடிவேல் மூச்சிறைக்க நிற்க,


'எதுக்கு இந்த ஓட்டம் ஓடி வாரீய?’ என்று தனது தண்ணீர் போத்தலை எடுத்து நீட்டினாள்.


மூச்சை இழுத்து விட்டுக் கொண்டு அதைவாங்கிப் பருகியவன், ‘சாப்பாட விட்டுப்போயிட்டியாம். அத்தே குடுத்துவிட்டாவ' என்று நீட்ட,


'இதுக்கா இம்புட்டு ஓட்டம்? இல்லாங்கட்டிக்கு அங்கனயே வாங்கி சாப்பிட்டுருப்பேம்ல?’ என்று கேட்டாள்.


'சாப்டியா இல்லயானு யோசனையாவே இருக்கும்ல?’ என்றவன் அவளது பார்வையில் தடுமாறி, ‘அத்தைக்கு.. அத்தை ரோசிச்சுட்டே இருப்பாவன்ன?’ என்க,


'ம்ம்.. ரேசனலாம் வேணாம். சரியா நேரத்துக்கு சாப்டுடுவேம்' என்று அதை வாங்கியவள், ‘ஒங்க அத்தைக்கு.. அத்தைக்கு சொல்லிடுவ’ என்றாள்.


கல்லூரி இளநிலை முடியும் தருவாய் ஒன்றில் தனது புத்தகம் ஒன்றில் இதயம் போன்று வரைந்து அதில் ‘TV’ என்று எழுதி அவள் அழகு பார்க்க, ‘என்ன டீவிடி? என்ன படம் ஓடுதாம்? காதல் படமோ?’ என்று அவள் தோழி கேட்டாள்.


அதில் வெட்கம் கொண்டு புன்னகைத்தவள், ‘ஓடும்.. காதல் படந்தேம் கூடிய சீக்கிரத்துல ஓடும்' என்று கூற, ‘ரைட்டு.. இது முத்தப்போவுது போலயே’ என்று அவள் கூறினாள்.


ஒரு நாள் கீரை ஆய்ந்துக் கொண்டிருந்த கார்த்திகாவிடம் வந்தமர்ந்தவள், வேறு யாருமில்லை என்பதை உறுதி செய்துக் கொண்டு, ‘எனக்கு அவோள புடிச்சுருக்கு மைணி’ என்க,


கீரையை ஆய்ந்தபடியே, ‘எவோள?’ என்று கேட்டாள்.


'அதேம்..’ என்றவள் கொஞ்சம் வெட்கத்தோடு, ‘வளவாண்ணே கூட்டுக்காரவ’ என்க,


'வேலு அண்ணேனயா?’ என்றாள்.


'ம்ம்..’ என்று தலையசைத்தவள், ‘அவோளுக்கும் பிடிக்கும்னுதேம் நெனக்கேம்’ என்க,


'அதெப்புடி சொல்லுத?’ என்று கேட்டாள்.


'அதுலாம் தோனும் மைணி’ என்றவள், ‘இன்னும் ரெண்டு வருஷம் படிச்சு முடிச்சு பொறவாட்டிக்கு சொல்லுவேம் மைணி. அவியளுக்கும் என்னய புடிக்கும்ன. காத்திருப்பாவ’ என்று கண்கள் பிரகாசிக்கக் கூற,


'நீயு கிரஷ்ஷுனு சொல்லிட்டுச் சுத்தும்போதே நெனச்சேம்டி. இப்பத முத்திபோச்சுன்ன?’ என்று கேலி செய்த கார்த்திகா, தன்னாலான அறிவுரைகளையும் கூறிவிட்டே சென்றாள்.


நினைவுகளின் பயணத்தை அவளது பயண முடிவு தடை செய்ய, ஒரு பெருமூச்சுடன் எழுந்து கல்லூரிக்கு நடையைக் கட்டினாள், தனலட்சுமி.


 

Comments

Popular posts from this blog

திருப்பம் -01

திருப்பம்-03

திருப்பம் -02