திருப்பம்-68
திருப்பம்-68
அங்கு தென்னந்தோப்பில் மரத்தடியில் சாய்ந்து அமர்ந்துகொண்டிருந்த வடிவேலுவிற்கு குழப்பமான மனநிலையில் நெஞ்சம் தவித்தது.
அவன் அருகே ஏதோ சப்தம் கேட்டு நிமிர, நந்தியையும் மருதையும் பிடித்துக் கொண்டு வளவன் நின்றிருந்தான்.
அவர்களைப் பார்த்துக் கொண்டு அவன் மீண்டும் சிரம் தாழ்த்த, மருது அவன் அருகே வந்து அவன் மடியில் முகம் வைத்துப் படுத்துக் கொண்டது.
அதில் தன்னைப்போல் அவன் இதழ்கள் கனிவாய் விரிய, கரம் தன்னியல்பில் மாட்டின் தலையைக் கோதிக் கொடுத்தது.
“என்னம்லே பிரச்சின? ஏன் இப்புடி இடிஞ்சிருக்கவ?” என்று வளவன் கேட்க,
“தவிப்பாருக்குதுலே” என்றான்.
“ஏம்லே? என்ன ஆவிப்போச்சு இப்பத? நீயுன்னா வீட்டுல அம்புட்டுபேரும் கண்ண மூடிக்கிட்டு சரினுடுவாவ” என்று வளவன் கூற,
“அதுக்குலாம் பயமில்லலே. அதெல்லாம் சரினு சொல்லுவாவனு நம்பிக்கருக்கு. ஆனா போயி பேசனுமே” என்று தவிப்பாய் கூறினான்.
அவனது தவிப்பான நிலைகண்டு அவன் தோளில் கரமிட்ட வளவன், “அவோ அண்ணேனா இல்லாது வேற ஆளா நெனச்சுகிட்டு சொல்லுலே. ஒன்னய தப்பாலாம் நெனக்க மாட்டேம்” என்க,
“நீயு என்னய எப்பவுமே தப்பா நெனச்சுகிட மாட்டலே” என்று பெருமையாய் கூறிக் கொண்டவன், “மாமாவ நெனச்சு பயமில்லலே. அத்தேதாம் ஏதாது பேசிபுடுமோனு வெசனமாருக்கு. போதாதுக்கு இன்னும் கடன அடச்ச பாடில்ல. ஒன்னய நம்பி உள்ளக்க விட்டமேனு ஒத்த பார்வ பாத்துச்சுனாகூட செத்துடுவேம்லே” என்று கூறியவன் கண்கள் ரத்தமாய் சிவந்துபோனது.
“ஏலே மாப்ள.. கடன அடச்சுபோட்டுதேம் நீயு கட்டிகிடனும்முனா எப்புடிலே? அத கட்டிகிட்டு கடன அடைக்க முடியாதா? ஓங்கடன அடைக்க நாந்தாரேம்னு சொல்ல எனக்கு செத்த நேரமாவாதுலே.. ஆனாகூட அது ஒனக்கு தோதில்லனு புரிஞ்சுதேம் தள்ளி நிக்கேம். ஒன்னு புரிஞ்சுக்கலே.. யாரும் ஒன்னய கடம்பட்டவனா பாக்க மாட்டாவ. நீயு அதயே நெனக்காத. மிஞ்சிபோனா ரெண்டு மூனு வருஷத்துல அடச்சுபுட மாட்டீயா? அதுவே கூடலே. நீயு ஒத்த வருஷத்துலகூட அடச்சுபுடுவ. பொறவு ஏம்லே அதயே நெனக்க?” என்றவன், “அடுத்து அம்மா வெசயத்துக்கு வாரேம். அம்மா துடுக்கா பேசுறவதேம். ஆனா நீ நெனக்குற வார்த்தைய சொல்லுவாவனு எனக்கு தோனலலே. அப்படியே சொன்னாலுங்கூட நீயேம் வெசனப்படனும்முங்கேம்?” என்க,
நண்பனை புரியாத பார்வை பார்த்தான்.
“நீயு ஒன்னும் அத ஏமாத்திட்டு போவலலே. ஒருநாகூட தப்பா ஒரு பார்வ பாத்தது இல்லவே. ஏங்கூட்டுக்காரனயும் எனக்கு தெரியும், ஏந்தங்கச்சியவும் எனக்குத் தெரியும். அதுகூட ஒன்னு ரெண்டுமொற ஆசபட்டு பேசிருக்கும்லே. ஆனா நீயு நெசத்துக்கும் பம்பிட்டு போவத்தேம் பாத்திருப்ப” என்று நண்பனை அறிந்தவனாய் கூற,
வடிவேலின் கண்கள் கலங்கியது.
“ஊரு பாக்க அதுக்கு நீயு மஞ்ச கயிறு கட்டலலே. மத்தபடிக்கி அது ஓம்பொஞ்சாதிதேம். அதுட்ட ஒனக்கு உரிமையா இல்ல? அத்த மாமானு வாயி நெறக்க கூப்பிடுததான? ஓம் மாமேன் மவள பாக்கவும், பேசவும் கட்டிகிடவுந்தேம் ஒனக்கு உரிம இல்லையா என்ன? எங்கம்மா அப்புடி ஒரு வார்த்தையா கேட்டுச்சுனா, ஏம்மருமவேன்னு நீங்க கூப்பிட்டது மட்டும் வெறும் பேச்சானு நெஞ்ச நிமித்துட்டுக் கேளுலே” என்று அவன் தோள் தட்டி வளவன் கூற,
நண்பனை அணைத்துக் கொண்டு, “வளவா..” என்று அழுதேவிட்டான்.
“லே.. என்னலே சின்னபுள்ளையாட்டம்?” என்று கேட்ட வளவன் அவனுக்குத் தட்டிக் கொடுக்க,
“சத்தியமா ஒன்னய போலலேம் ஆருக்கும் கூட்டுக்காரன் அமையமாட்டியாம்லே. ஓந்தங்கச்சிய விரும்புறேன்னதுக்கும் பொல்லாப்பு காட்டல. ஒங்கம்மா பேசுமேன்னதுக்கும் ஒடக்கிழுக்கல. இம்புட்டுக்கும் எனக்காவ பேசாறீயேலே” என்று கேட்டான்.
“ஏன்னா நீயு ஏம் வேலுலே. ஏம் வேலன எனக்குத் தெரியாதாக்கும்? காதலு ஒன்னும் கொலயோ குத்தமோ இல்லியேலே. நாம போற பாத சுத்தமாருந்தா, நம்ம காதலும் சுத்தமாதாம்லே இருக்கும். ஓங்காதலு சுத்தமான காதலுலே. ஒன்னய கட்டிகிட ஏந்தங்கச்சி குடுத்து வச்சிருக்கனும். பொறவு என்னம்லே வெசனம்?” என்று வளவன் கேட்க,
கண்ணீருடன் நண்பனைப் பார்த்து, “உருக்குறலே நீயு என்னைய” என்றான்.
“போலே போ.. ஏந்தங்கச்சிட்ட பேச வேண்டியதலாம் எங்கிட்ட பேசுற. சும்மாவே அவோ இப்பம்லாம் ஒன்னய பாத்தா பொறாமையாருக்குண்ணேனு சொல்லிட்டுத் திரியிரா” என்று வளவன் கூற,
“என்னத்துக்காம்?” என்று கண்ணீர் துடைத்து சிரித்தபடி கேட்டான்.
“ஓங்கூடயே நாயிருக்கேனாம்” என்று வளவன் சிரிக்க,
“அதுசரி” என்று சிரித்தவனுக்கு அழகாய் வெட்கம் வந்து ஒட்டிக் கொண்டது.
நந்தி தன் தலையை ஆட்டி அசைத்து வளவனை அழைக்க, “வாரேம்லே வாரேம் வாரேம்” என்று எழுந்தவன், “சின்னவரே வாரீயலா?” என்று மருதை தட்டிக் கொடுத்துக் கேட்க,
மருது வடிவேலிடமிருந்து எழுந்தானில்லை.
“சரிதேம்.. செத்த நேரம் வச்சுட்டு ஒரு நட நடத்தி கொட்டால கட்டிடுலே. நானு இவேனோட போயி ஒருக்கா சோலிய பாத்துபோட்டு வாரேம்” என்று கூறிய வளவன் நந்தியோடு செல்ல,
மருதை தடவிக்கொடுத்தபடி சாய்ந்து அமர்ந்தவன் மனக்கண்ணில் பூவாய் சில நினைவுகள் மலர்ந்தது.
அவள் கல்லூரி அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்திருப்பவனைப்போல் அவன் நின்றுகொண்டிருக்க,
கல்லூரி முடித்து வந்தவள், “யாருயா அது? நம்மண்ணே கூட்டுக்காரவளா? என்ன இந்த பக்கம்?” என்று அவன் அருகே வந்த கேட்டாள்.
அவள் தூரத்தில் வரும்போதே பார்த்துவிட்டு மனதில் அடைமழையில் ஆட்டம்போட்டபோதும், ஏதோ இப்போதுதான் பார்ப்பதைப்போல் திரும்பியவன், “அட நீயு என்னம்மா இங்கன?” என்றான்.
“அதுசரி.. நாங்க கேக்க வேண்டியத நீய கேக்கீயளாக்கும்?” என்றவள், “எங்காலேஜு இங்கனதேம் இருக்குன ஒங்களுக்கு தெரியாதுன்ன?” என்று கேட்க,
அசடு வழிவதை மறைத்துக் கொண்டு, “ஆமாம்மா.. ஒரு சோலியா வந்தேம்” என்றான்.
“ஏ தனம்.. யாருபா?” என்றபடி அவள் தோழி அருகே வர,
வடிவேலைப் பார்த்தபடி, “எங்கண்ணேனோட கூட்டுக்காரவ” என்க,
“யாரு நீ சொல்லுவியே..” என்று கூற வந்தவளை விழிகள் விரித்துப் பார்த்தபடி, “ஏ பிள்ள.. ஓன் அக்கா போனடிக்க சொன்னாவன்னியே” என்றாள்.
“என் அக்காவா?” என்ற அந்த பெண்ணும் தனக்கு முளைத்தத் திடீர் அக்காவைப் பற்றி புரியாமல் விழிக்க,
“ஆம்மா.. உன்ன்.. அக்க்காதேம்ம்” என்று கண்களை உருட்டி அவள் அழுத்திக் கூறினாள்.
அவள் அழுத்தத்தில் விடயம் புரிந்துகொண்ட அவள் தோழி, “ஒ..ஓ.. என் அக்காவா.. ஆமா ஆமா.. கூப்பிட சொன்னாங்க. நான் கூப்பிட்டுட்டு வரேன்” என்று நகர,
செல்பவளைக் கண்டு பெருமூச்சுவிட்டுக் கொண்டு திரும்பியவள், “வண்டில வரலியாக்கும்?” என்றாள்.
“இல்லத்தா. சர்வீசுக்கு விட்டிருக்கேம். வளவேனும் சோலினு மொதயே ரொம்ப தூரம் கெளம்பிட்டியாம். சரி நமக்கு பக்கந்தானேனு வந்துட்டேம். பஸ்ஸு எப்ப வரும்?” என்று வடிவேல் கேட்க,
“இந்தா வந்துடும்” என்றவள், அடுத்து என்ன பேசி பேச்சை வளர்ப்பதென்று காரணம் தேடினாள்.
“சாப்டீயளா? ஆளே என்னவோபோல இருக்கீய?” என்று அவள் கேட்க,
“வேனா வெயிலுத்தா. அதேம் கொஞ்சம் தெணயாருக்குது. சாப்பாடெல்லாம் சாப்டத்தேம் செஞ்சேம்” என்றான்.
“தர்பூசணி விக்காவ வாங்கி சாப்பிட்டத்தான?” என்று அவள் கூற,
அங்கிருந்த கடையைப் பார்த்தான்.
அவளுக்கு தர்பூசணி என்றாள் கொள்ளை பிரியம் என்று அவனுக்கா தெரியாது? ஆனாலும் கூட இப்போது அவனுக்காவே கூறினாள்.
சென்று இரண்டு துண்டுகளை வாங்கி வந்தவன் அவளிடம் ஒன்றை நீட்ட, போக்கு காட்டாமல் உரிமையுடன் வாங்கிக்கொண்டாள். அவள் தன்னிடம் எடுத்துக்கொள்ளும் அந்த உரிமை அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது.
தர்பூசணிச்சாறு இதழோரம் வழிய அவள் உண்ணும் அழகைப் பார்க்கவே, அவன் தாகம் தனிவதாய் ஒரு எண்ணம். மாறாய் அவளுக்குத்தான் அவன் பார்வையில் தாகம் கூடியது.
இன்ப அவஸ்தையோடு அதை உண்டு முடித்தவள், “பஸ்ஸு வருது” என்க,
“ம்ம்” என்று தலையசைத்தான்.
பேருந்து வரவும் இருவரும் ஏறிக்கொள்ள, ஒரு ஜோடி இருக்கைகள் அவர்களுக்காகவே காத்திருப்பதைப்போலிருந்தது.
சென்று அமர்ந்தவள் அவனை நோக்க, அவன் அவள் அருகே சென்று நின்றுக்கொண்டான்.
உட்காரென்று அவள் இதழ்கள் மட்டும்தான் கூறவில்லை, அதேபோல் வேண்டாம் என்பதையும் அவன் இதழ்கள் மட்டுமே கூறவில்லை.
“எய்யா நீயி ஒக்காரப்போறியாக்கும்?” என்று ஒரு பெண்மணி வந்து கேட்க,
“இல்லைங்கக்கா.. நீங்க ஒக்காருவ” என்றான்.
அந்த பெண்மணியை உள்ளே அனுப்பியவள் அவனை முறைத்துவிட்டுக் திரும்பிக் கொள்ள,
‘இரவா பகலா குளிரா வெயிலா
என்னை ஒன்றும் செய்யாதடி
கடலா புயலா இடியா மழையா
என்னை ஒன்றும் செய்யாதடி
ஆனால் உந்தன் மௌனம் மட்டும் ஏதோ செய்யுதடி
என்னை எதோ செய்யுதடி, காதல் இதுதானா
சிந்தும் மணி போலே சிதறும் என் நெஞ்சம்
கொஞ்சம் நீ வந்து கோர்த்தால் இன்பம்
நிலவின் முதுகும் பெண்ணின் மனமும்
என்றும் ரகசியம்தானா
கனவிலேனும் சொல்லடி பெண்ணே காதல் நிஜம்தானா' என்று பாடல் பேருந்தில் ஒலித்தது.
அதில் சட்டென இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள,
அந்த பார்வையில் இருவருக்குமே ஒருவித தடுமாற்றம் உருவானது.
வெவ்வேறு புறம் முகம் திருப்பிக் கொண்டவர்களுக்கு, அந்த தடுமாற்றத்தை சமன் செய்ய கொஞ்சம் நேரம் தேவைப்பட்டது.
அவளை விட அவனுக்குக் கூடுதலாகவே தேவைப்பட்டது.
அழகான பாடல்களுடன் அப்பயணம் முடிவடைய, இருவரும் கீழே இறங்கினர்.
“வீட்டுக்கு வாரியளா?” என்று அவள் கேட்க,
“தோப்புக்கு போகனும்” என்றான்.
சுருங்கத்துடித்த முகத்தை சரிசெய்தவள், “சரி.. போய்வாரேம்” என்க,
“ம்ம்” என்று கையசைத்தான்.
கொஞ்சம் தூரம் சென்றவள் திரும்பிப் பார்க்க, அவளையே பார்த்து அவள் பார்வைக்காக காத்திருந்தவனுக்கு அப்படியொரு உணர்வு தோன்றியது.
அவன் உவகையை படம் போல் காட்டிய முகத்தைக் கண்டவள் மனமும் குளிர்ந்து போக, உற்சாகமாய் கையசைத்துவிட்டுச் சென்றாள்.
'அவோளுக்கு என்னய புடிச்சுருக்குது. அவோ கண்ணே சொல்லுது’ என்று தன் நெஞ்சை நீவிக் கொண்டவன், ‘ஐ லவ்யூ சொல்லுவியா புள்ள எனக்கு?’ என்று எண்ணிக் கொள்ள,
அந்த நினைவுகளை நினைத்துத் தற்போதும் அவன் இதழ்கள் விரிந்தன.
'ஐ லவ் யூ சொல்லி கட்டிக்கனு வந்து நின்னுபுட்டா’ என்று மனதோடு கூறிக் கொண்டவன் மருதைத் தட்டிக் கொண்டு எழ, ‘ஈவினிங் பேசனும். பஸ் ஸ்டாப்பிக்கு வந்துடுவ’ என்று அவனுக்கு தனலட்சுமி குறுஞ்செய்தி அனுப்பியிருந்தாள்.
அதைப் பார்த்தபடியே பதில் அனுப்பாது அவன் நிற்க,
'ஒங்கள பாத்து பேசனும். அம்புட்டுதேம். வாரீய தான?’ என்று கேட்டாள்.
'ம்ம்..’ என்று அவன் பதில் அனுப்ப, ‘ரொம்ப ரோசிக்காதீய. ஒங்களுக்கும் ஒங்க கற்புக்கும் என்னால எந்த பங்கமும் வாராது’ என்று பதில் அனுப்பினாள்.
'அடியாத்தீ..’ என்று நெஞ்சில் கைவைத்துக் கொண்டு சிரித்தவன், ‘கோம்ப… கொழுப்பாடி ஒனக்கு?’ என்க,
'ஆமாங்கேம். அதுக்காவ என்ன செய்யப்போறீயளாம்? வந்து அளந்து பாக்க போறீயளாக்கும்?’ என்றாள்.
‘'ஏட்டி.. என்னட்டி பேச்செல்லாம் ஒருபடியாருக்கு’ என்று அவன் கேட்க,
'காலையில சாப்டீயளா?’ என்று வேறு பேச்சுக்குத் தாவினாள்.
‘சாப்டேம்.. சாப்டுதேம் வயலுக்கு வந்தேம்’ என்று அவன் கூற,
'அப்ப சரி. நாஞ்சாப்பிடல. சமாதானம் பண்ணி என்னைய சாப்பிடச் சொல்லுங்க’ என்றாள்.
அதை கண்டு பக்கென்று சிரித்தவன், ‘நானா கேட்டு சொல்லனும் அத' என்க,
'அதெல்லாம் எனக்கு பிரச்சினயே இல்ல. நீங்களா கேக்காட்டியும் நானா கேட்டு வாங்கிப்பேம்' என்றவள், ‘அதுக்கு உரிம இருக்குதான?’ என்று கேட்டாள்.
'ஒனக்கில்லாதாத்தா?’ என்று கேட்டவன் குறுஞ்செய்தியில் அவன் உயிரே உருகி வழிவதாய் அவளுள் ஒரு உணர்வு…
'பாக்கனும்போலருக்கு' என்று அவள் செய்தி அனுப்ப, மருதோடு சேர்ந்து ஒரு சுயமி எடுத்து அனுப்பினான்.
'நல்ல அழுவ போல?’ என்று அவன் கண் பார்த்து கதைபடித்தவளாய் கேட்க,
சிரிக்கும் பொம்மைகளை அனுப்பினான்.
'வந்துபுடுங்க.. பாக்கனும். மனசு பாக்கனும்மினு தவிக்கி’ என்று கூற,
'வாரேம் லச்சு’ என்றான்.
'ம்ம்..மணியாச்சு.. வரேம்’ என்றவள், ‘போட்டா?’ என்க,
‘'போய்வா’ என்று பதில் அனுப்பிவிட்டு வைத்தான்.
Comments
Post a Comment