திருப்பம்-69
திருப்பம்-69
அந்த பூங்காவில் எப்போதும் போல் தங்களது சந்திப்பை ஏற்படுத்திக் கொண்ட இரு உள்ளங்கள் பேசிக் கொள்ளாமல் அமைதியாக அமர்ந்திருந்தனர்.
சில நிமிடங்கள் தொடர்ந்த அம்மௌனத்தைத் தானே கலைத்த தனலட்சுமி, “நான் இன்னும் நீங்கதேம்னு வீட்டுல சொல்லல” என்க,
“ஏங்கிட்ட கேட்டுகிடாம நீயு சொல்லமாட்டனு தெரியும்” என்றான்.
“அப்படினா இன்னுமொன்னுங்கூட தெரிஞ்சுக்கோவ. நீய இம்புட்டு நாளா என்னத்துக்குத் தவிச்சீயனும் எனக்குத் தெரியும், இப்பம் எதுக்கு ரோசிக்கீயனும் எனக்குத்தெரியும்” என்று பூங்காவில் கண் பதித்ததபடி சாதாரணமாய் அவள் கூறிட,
அவளை சட்டெனத் திரும்பிப் பார்த்தான்.
அவன் அதிர்வை உள்வாங்கித் திரும்பிய தனலட்சுமி, “அத்தே கடனுக்காவத்தேம் நீங்க கல்யாணத்தத் தட்டிப்போடுதீயபோலனு பேசினாவ. என்ன கடனுனு விசாரிச்சேம். புரிஞ்சுகிட்டேம்” என்று கூற,
பின் ஏன் தன்னிடம் இதுகுறித்து அவள் பேசவில்லை என்று குழப்பமாய் நோக்கினான்.
“நீங்க எங்கிட்ட சொல்லிகிட வெசனப்படுதீயளேனு நாங்காட்டிகிடாம இருந்தேம்” என்று அவன் அகத்தின் கேள்விக்கும் அவள் பதில் கொடுக்க,
“லச்சு..” என்று பரிதாபமாய் அழைத்தான்.
“ஷ்ஷ்..” என்று அவன் இதழில் விரல் வைத்தவள், “நான் வீட்டுல சொல்லிட்டேம். அதுக்காவ இப்பமே வந்து பேசுங்கனு கேட்டுக்கிட மாட்டேம். ஆனா நீங்களும் வாரம, நாம்மட்டுமா தனியா போயி சொல்லவும் மாட்டேம். இன்னும் எம்புட்டு நா வேணா போவட்டும். அதபத்தி எனக்குக் கவலயில்ல. எங்கைய்யா என்னைய நம்புதாவ. எனக்கு அதுபோதும். நானா வந்து பேசுற வர காத்திருப்பாவ. ஒங்களுக்கு மனசொப்பி எப்பத பேசத்தோனுதோ அப்பத பேசுங்க” என்று அவன் கரம் பற்றினாள்.
“சும்மா ஒன்னும் வரல இந்தக் காதலு. ஒங்களுக்கு சங்கடங்கொடுக்குறாப்புல, நடந்துகிட வைக்க மாட்டேம். விட்டுட்டுப் போவ ஒன்னும் புடிக்கல. கூடயே கட்டிகிட்டு போவத்தேம் புடிச்சேம். எனக்கு உரிமையும் இருக்கு, ஒங்க தனியுரிமையுக்கு மதிப்புக் கொடுக்குற மனசும் இருக்கு” என்று தனலட்சுமி கூற,
அவளை வியந்து பார்த்தான்.
எப்படிப்பட்டக் காதல் இவளுடையது? தனக்காக சின்னச் சின்ன விஷயங்களைக்கூட யோசித்து செயலாற்றும் அவள் பக்குவத்தில் நெகிழ்ந்து போனவன், “ஏட்டி..” என்று கரகரப்பானக் குரலில் அழைக்க,
“லச்சுக்கு அவ ஆளு அழுதா பிடிக்காதுல்ல” என்றாள்.
அதில் இதழ் விரிய தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டவன், “ஓன் அண்ணேன பாத்து பொறாம படுதியாம்ல? சொல்லுறியாம்” என்று கேட்க,
“இல்லாமயா? என்னேரமும் ஒங்கக்கூடத்தேம் இருக்காவ. நீங்க அழுதா பொசுக்குனு கட்டிப்புடிச்சு ஆறுதல் சொல்லிப் புடுறாவ. நாம்பக்கம் வந்தாலே நீரு ஓடத்தான பாக்கீரு” என்று முகவாயைத் தோளில் இடித்துக் கொண்டு கூறினாள்.
அதில் “அடியாத்தீ” என்று வாயில் கரம் வைத்தவன், “என்ன வாயிடி ஆனா ஒனக்கு” என்க,
“ஒம்ம கட்டிகிட்டு குடும்பம் நடத்தனும்ல? இம்பிட்டுக்கூட பேசாங்காட்டி எப்புடி பொழைக்க?” என்றாள்.
“சரிதேம்.. எனக்குஞ்சேத்தப்போட்டு நீயே பேசிபுடு” என்று அவன் கூற,
“ஒங்களுக்கு சேத்தும் பேசிபுடுதேம். ஒங்க மனசுக்குள்ள இருக்குறதயும் நானே பேசிபுடுதேம். பொறவு நீங்க என்னத்தேம் செய்வீயலாம்?” என்று கேட்டாள்.
“ஒன்னய கட்டிக்கேம்ல? போதாதா?” என்று அவன் கேட்க,
“எந்த கட்டிகிடுறத பக்திப் பேசுறீயலோ தெரியிலயே” என்று யோசிக்கும் பாவனையில் கேட்டாள்.
“ஆத்தா.. நீயு சரியேயில்ல போ” என்று அவன் கூற,
“நாயெல்லாம் சரியாத்தேம் இருக்கேம். நீங்கத்தேம் ஒன்னத்தயும் வெளிகாட்டிக்கிடாம இருக்கீய” என்றாள்.
“மனசுக்குள்ளார வச்சுப் பழகிடுச்சு” என்று அவன் கூற,
“அப்ப உள்ளக்கப்போயி படிக்கத்தேம் பழகிக்கனும் நானு” என்றாள்.
அவளைக் காதலாய் பார்த்தவன், “எம்மேல கோவமே இல்லியா லச்சு ஒனக்கு? ஒடக்கிழுப்ப என்னமும் அனக்கத்தக்கூட்டுவனு பாத்தேம்” என்று கூற,
“என்னத்துக்கு ஒடக்கிழுக்கனுமாம்? இருக்குற ஒரண்ட போதாதா?” என்றாள்.
“ஏம் தட்டிக்கழிக்கேம்னு தெரிஞ்சும்ல அமைதியாருக்க?” என்று அவன் கேட்க,
“என்னத்தனு சொல்ல? எங்கிட்ட ஒருவார்த்த கேட்டா நானுங்கூடச் சேந்து ஒழச்சுருப்பேம்னு கேக்கத்தேம் வாய் வருது. அதயில்ல நீங்க தடுக்க நெனக்கீய? ஆனா நீங்க தடுக்க நெனச்சாலும் விதினு ஒன்னு இருக்குல்ல?” என்று கூறினாள்.
அவளைப் புருவம் சுருங்கப் பார்த்தவன், “என்னடி சொல்லுத?” என்க,
“கடனுக்கு எங்கையிலருந்து போடுறதும் சரியா வந்துசேரும்முங்கேம்” என்று கூறினாள்.
“லச்சு?” என்று அவன் புரியாது வினவ,
“நானுஞ்சேந்து சம்பாதிச்சுக்கொடுத்தா ரொம்ப நாளு ஆவும். அதேம் அடகு வச்சுட்டேம்” என்று சர்வ சாதாரணமாகக் கூறினாள்.
அரண்டு போய் எழுந்தவன், “என்னடி சொல்லுற?” என்று கேட்க,
“ஆமாங்கேம்” என்று மீண்டும் அதே சாதாரணத் தோரணையில் கூறினாள்.
“லச்சு வெளாடாத” என்று அவன் கூற,
ஒரு மஞ்சள் பையையும் எடுத்து வைத்தாள்.
“லச்சு இது மாமா ஒனக்காவ போட்டது. மரியாதையோட சொல்லுதேம் எடுத்துக்கிட்டுப் போயிடு” என்று பையைப் பார்தபடி அவன் கூற,
“எங்கைய்யா சின்ன புள்ளையிலருந்து எங்கிட்ட தெனத்துக்கும் பத்து பைசானாச்சும் சேத்து வச்சுக் கொடுத்தா. அதுல ஒனக்கு எதாது வாங்குவம்னு சொல்லித்தேம் வளத்தாவ. அதுல சீட்டுப்போட்டு சேத்ததுல வாங்கினத் தங்கக்காசு இருந்துச்சு. அதெல்லாம் அடகு வச்சாச்சு. எங்கைய்யா காசுதேம். ஆனா என் சேவிங்ஸாக்கும்” என்று கூறினாள்.
“லச்சு வேணாம்டி. ஒன்னய கொஞ்சி கேக்கேம். நீயும் நானுஞ்சேந்துகூட அடப்பம்னு சொல்லு. ஆனா ஓன் நவநட்ட வித்துபோட்டு அதை அடைக்க வேணாம்” என்று அவன் கூற,
“அப்ப ஏஞ்சாம்பாத்தியமாருந்தா சரியாக்கும்?” என்றாள்.
“ஆத்தா சத்தியமா அதுகூட சரிடி. எம்பொண்டாட்டி காசுதானனு எடுத்துப்பேம்” என்று அவன் கூற,
“மாமனாரு வீட்டுல காசு வாங்கினா கசக்காக்கும்?” என்று கேட்டாள்.
“என்னடி பேசுத? நாம்போட்டிருக்க சட்ட மொதக்கொண்டு எம்மாமனூட்டு காசுலதேம் வந்துச்சு” என்று அவன் கூற,
“இப்புடி சொல்லுறத நிறுத்துவ. நீங்க ஒழைக்கீய. அதுக்குக் காசு வருது. சும்மா ஒன்னும் தூக்கிக்குடுக்கல” என்றவள் மீண்டும் மஞ்சள் பையை உள்ளே வைத்தாள்.
அவன் அவளைப் புரியாமல் பார்க்க, “என்ன பார்வ? அதுக்குள்ளருக்குறது எஞ்சோத்து டப்பிதேம். ஒங்கள நம்பி நவநட்டயெல்லாம் அடகுவச்சுட்ட வரமுடியாது” என்று கோபமாய் கூறினாள்.
தன் நெஞ்சில் கைவைத்து பெருமூச்சுவிட்டு அமர்ந்தவன், “கோம்ப.. பயங்காட்டுதடி” என்க,
“போயாயோ” என்று திரும்பிக் கொண்டாள்.
“புள்ள.. எனக்கு மனசுக்கு ஒப்பலடி. ஒன்னய ஒங்கப்பாரு ராணியாட்டம் வளக்காவ. நீயு கடங்காரேம் பொண்டாட்டியா..” என்று முடிக்கும் முன்,
“என்னைய கொலகாரியாக்கிப்புடாதீய” என்றாள்.
அத்தனை நேரமில்லாது அப்போதுதான் அவள் விழிகள் கலங்கியது.
“நீரு கடம்பட்டவரா ஒடம்பட்டவரா என்ன சனம், என்ன சேதினு ஒன்னும் பாத்து வரலிய்யா நானு. கட்டிக்கிட்டா ஒத்த சொம்பு கஞ்சினாலும் இந்த மனுஷேம் நமக்குக் காலத்துக்கும் ஊத்துவாவ, இல்லாட்டி நாம ஊத்தி பாத்துப்பம்னு மனசுச்சொல்லித்தேம் விரும்பினேம். ஒத்த வார்த்த பேசுமின்ன பாத்து பேசுவ. உசுரே போராப்ல வலிக்கு” என்று அவள் கூற,
அவன் கண்களும் வேதனையில் கலங்கி போனது.
“என்னய என்னதாம்டி செய்யச் சொல்லுத?” என்று ஆற்றாமையாய் அவன் கேட்க,
“எங்கைய்யா அம்மா ஒங்கள கடம்பட்டிருக்கீயனு ஒத்த வார்த்த சொல்லிட மாட்டாவனு நான் நம்புதேம். சொன்னாலும் கட்டிக்கப்போறவ நானு. நாவொன்னும் வெரலு குடுத்தா கடிக்கத்தெரியாத புள்ள இல்ல. இப்ப மண்டைய உருட்டிட்டு பொறவு குத்துது கொடையுதுங்குறதுக்கு. நாலும் பத்தும் ரோசிச்சுத்தேம் பேசுறேம். ஒங்கள கட்டிக்கிட்டு பத்து பைசாலகூட நிம்மதியாதேம் குடும்பம் நடத்துவேம். கோடீசுவரனா கட்டினாலும் அது அமையாது” என்றவள் வழியும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, “ஒங்களுக்குப் புரியுதா இல்லியானு தெரியில. ஆனா ஒங்க மனசுல கடம்பட்டுக்கெடக்கோமேனு பதிஞ்சு போச்சு. அது ஆறுரவர காத்திருக்கேம். இல்ல கடன அடச்சாதேம் கட்டிப்பேம்னா சரி அதுக்கும் காத்திருக்கேம்” என்று தன் பையிலிருந்து ரூபாய் நோட்டுகளை எடுத்தாள்.
“இது இப்பம் மூனு மாசமா சம்பாதிச்சதுல ஏம் நொண்டிச்செலவுக்குப் போவ மீந்துபோனது அம்புட்டும். இந்த பைசாவ செலவு செய்ய ஆளுயில்லாம சும்மாதேம் பேங்குல போட்டு வச்சிருந்தேம். ஆத்தா சத்தியமா எம்பைசானா வாங்கிப்பேம்னு சொன்னீயதான? புடிங்க” என்று நீட்டினாள்.
அவனுக்கு உவகையும் வேதனையும் ஒருசேர அனுபவிப்பதாய் தோன்றியது.
அவன் சட்டைப்பையில் தானே தினித்தவள், தனது பையை எடுத்துக் கொண்டு எழ, தானும் எழுந்தான்.
நான்கடி நடந்து சென்றவள், “நீய எப்புடியிருந்தாலும் எந்த நெலயில இருந்தாலும் எவேம் என்ன சொன்னாலும் எனக்கு நீங்கதேம். இன்னொருக்கா அப்புடி சொல்லாதீய. ஒங்க மனசுல நெனச்சுட்டாக்கூட சரி மனசோட வச்சுக்கோங்க. கேக்குறதுக்கு ரொம்ப வலிக்கு” என்றுவிட்டுச் செல்ல, வேதனையோடு அங்கேயே தேங்கி நின்றான்.
காலையிலிருந்து கண்ணீர் விட்டுத் தவிக்கும் இந்த தனம் அவளுக்கே புதிதாகத்தான் இருந்தாள்.
என்ன செய்வது? காதல் செய்யும் மாய லீலைகள் கண்ணீரின்றி காதலைக் கொடுத்திடுமா?
பெருமூச்சுடன் வீடுவந்து சேர்ந்தவளது சோர்ந்த முகம் கண்ட தெய்வாவிற்கு இன்னும் என்னென்னமோ பயம் வந்தது.
'கரிச்சிருக்கா போலயே? என்னவாருக்கும்? அந்தப் பயட்ட பேசினாளா? அவேம் வோணாமின்னு சொல்லிருப்பானோ?’ என்று தானாய் என்னென்னவோ நினைத்துப் படபடத்தவர், “எட்டி.. ஓஞ்சீம காதலேம் எப்பத்தேம் வரப்போறியாம் பேச?” என்று கேட்க,
“கட்டிக்கப்போறவோ நாந்தானம்மா? எம்புட்டு வருஷமேயானாலும் நாங்காத்துத்தேம் கெடப்பேம்? நாயிங்கன இருக்குறது ஒனக்கு உறுத்துச்சுனா சொல்லு. எனக்கு போக்கிடம் ஒன்னும் இல்லாம இல்ல” என்று கத்தினாள்.
“செருப்புப் பிஞ்சுடும் கழுத. என்னட்டி பேச்சிது?” என்று தெய்வா அதட்ட,
“பின்ன என்னம்மா?” என்று கத்தினாள்.
“ஒன்னய பெத்தவடி நானு. வயித்துல நெருப்பக் கட்டிக்கிட்ட கணக்கா நாந்தவிக்குறது எனக்குத்தேம் தெரியும்” என்று அவர் கூற,
“நாவொன்னும் ஓடியெல்லாம் போயிட மாட்டேம்மா” என்றாள்.
அவ்வளவே! ஆத்திரம் கொண்டு எழுந்த தெய்வா அவள் கன்னத்தில் பளாரென்று அறைந்திட, சப்தம் கேட்டு ஓடிவந்த கார்த்திகா, “அய்யோ ஆத்தே” என்று பதறியபடி வந்து தனத்ததைத் தாங்கிக்கொண்டாள்.
ஒரு வேகத்தில் அடித்துவிட்ட தெய்வாவிற்குமே தனத்தைக் கண்டு மனம் கலங்கிப் போக,
“அரும பெருமையா வளத்தப்புள்ளைய கையநீட்டி அடிக்க வைக்கீயேடி” என்று தெய்வா கதறலாய் கூறினார்.
“கைநீட்டுற அளவு அவோ என்னத்தே பண்ணினா?” என்று கார்த்திகா மனம் பொறுக்காமல் கேட்க,
“இஞ்சாருடி.. அவ எம்பொண்ணு.. நான் அடிக்கேம் கொல்லுவேம். நீ கம்முனு அனக்கத்தக்காட்டாம இரு” என்று தெய்வா கத்தினார்.
“அத்தே பாத்து பேசுங்க” என்று வடிவேலுவின் குரல் அக்கூடத்தில் ஓங்கி ஒலிக்க, தனலட்சுமியின் உடல் சிலிர்த்தடங்கியது.
அதை அவளைப் பற்றியிருந்த கார்த்திகாவும் உணரப்பெற, மெல்ல திரும்பி வடிவேலுவைப் பார்த்தாள்.
சங்கமித்ராவும், வேலை முடித்து வரும்போது மில்லிலிருந்து சுயம்புலிங்கத்தையும் கூட்டிக்கொண்டு அப்போதே வீட்டை வந்தடைய, வாசலில் நின்று சப்தமாய் குரல் எழுப்பிய வடிவேலுவின் குரல் அவர்களை வந்தடைந்தது.
சங்கமித்ரா குழப்பமாய் தன் மாமனாரை நோக்க, “ஒங்கத்தகாரி என்னத்த ஒடக்கிழுத்து விட்டிருக்காளோ தெரியிலியேத்தா. ஓங்கூட ஒடக்கிழுக்க முடியாதபடிக்கு தனத்த பிடிக்குறா போலருக்கு” என்றவர், “புள்ளமேல பாசமிருங்காங்காட்டி பயமும் ரொம்பத்தேம் இருக்கு அவளுக்கு. என்னத்தச் சொல்ல?” என்று பெருமூச்சு விட்டார்.
பதில் கூறத் தெரியாமல் அவள் மாமனாரின் வேதனை நிலையை பரிதாபமாய் நோக்க,
“வாத்தா” என்றவர் உள்ளே சென்றார்.
“வேலா.. இவ பேசுறத பாருய்யா” என்று தெய்வா அழும் குரலில் கூற,
“உசுரு கொடுத்துப்புட்டீயங்குறதுக்காவ கொன்னுபோடுவேம்பீயளாத்த? கொன்னுபோடத்தேம் பெத்துப்போட்டீயளோ?” என்று உட்சபட்ச கோபத்தில் கர்ஜித்தவனை அவர் அதிர்வாய் பார்த்தார்.
உள்ளே வந்த சுயம்புலிங்கம், “என்னம்லே ஆச்சுது? தெய்வா என்ன இவேம் என்னென்னமோ சொல்லுதாம்? புள்ளைய அப்புடி சொன்னியாக்கும்?” என்று கேட்க,
“இஞ்சாருங்க.. வார்த்த வர்ரதுதேம். அதுக்குன்னு கொன்னுபுடுவாவலா?” என்று சமாளிக்கும்படி பேசினார்.
“சவட்டுமேனிக்கு பேசிட்டுத்திரியாதன்னு சொன்னா ஓம் புத்திக்கு ஏறாதாடி? திராணியில்லாம வார புள்ளய போட்டு என்ன பேச்சு பேசுத நீயு?” என்று திட்டியவர், “ஏத்தா.. நீயு போயி எளப்பாரு” என்று தனத்தைப் பார்த்துக் கூற, யாரையும் ஏறெடுத்தும் பாராது நகர எத்தனித்தாள்.
“லச்சு நில்லுடி” என்று வடிவேல் சப்தமிட, சட்டென அவனை நிமிர்ந்து பார்த்தவளுக்கு, அவன் விழி பாஷையே நடக்கவிருப்பதை கட்டியம் கூற போதுமானதாய் இருந்தது.
மித்ராவும் கார்த்திகாவும் ஆச்சரியமாய் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள, தெய்வா அவன் பேச்சில் குழப்பமும், பார்வையில் வியப்பும் கொண்டு விழித்தார்.
ஆனால் சுயம்புலிங்கத்திடம், ‘இது நான் எதிர்ப்பார்த்தது தான்' என்ற பாவமே இருந்தது. மகள் காதலைக் கூறியதில் மகன்கள் அமைதி காத்ததும், வடிவேல் பதட்டம் கொண்டதுமே அவருக்கு ஓரளவு சூழலை உணர்த்தியிருந்ததே.
Comments
Post a Comment