7.சாராவின் ஜீபூம்பா
அத்தியாயம்-07
இலக்கியனைக் கட்டிக் கொண்டு குழந்தையவள் நன்கு தூங்கிக் கொண்டிருக்க, முழிப்பு வந்த பிறகும் குழந்தையவள் தன்னைக் கட்டிக் கொண்டு வாயிலிருந்து எச்சில் வடிய தூங்கும் அழகை புன்னகையுடன் பார்த்தான்.
நேரமாவதை உணர்ந்த இலக்கியன், "பாப்பா.." என்று அவளை எழுப்ப முயல, அவனை இன்னும் கட்டிக் கொண்டு வாகாய்த் தூங்கினாள்.
அதில் மீண்டும் புன்னகையுடன் அவளை ரசித்தவன், "பாப்பா.. ஸ்கூல் போகனும்ல. எழுந்திரிடா" என்று எழுப்ப,
புரண்டு புரண்டு படுத்தவள் அவனது தொடர் அழைப்பில், "அச்சோ சாரி சுபிக்கா" என்று பதறி எழுந்தாள்.
அதில் சிரித்தபடி எழுந்தவன், "பாப்பா" என்க,
கண்களைக் கசக்கிக் கொண்டு, "லக்கி" என்றாள்.
"பேபிடால் நீ லக்கி கூட இருக்க. ஹோம்ல இல்லை" என்று கூறியபடி தனது சட்டையில் அவள் வாய் துடைக்க,
அவனைக் கட்டிக் கொண்டு, "தூக்கம் வருது லக்கி" என்றாள்.
"ஸ்கூல் போகனும் பேபிடால்" என்று அவளைக் கொஞ்சி, கெஞ்சி அழைத்து குளிப்பாட்டி தன்னிடம் உள்ள அவளது உடை ஒன்றை அணிவித்து, "ஹோம் போய் யுனிபார்ம் மாத்திக்கலாம்டா" என்றான்.
வேகமாய் தலையாட்டியவளைக் கீழே அனுப்பி வைத்தவன் தானும் தயாராகி வர, கீழே ராதா அவளுக்கு உணவூட்டிக் கொண்டிருந்தார்.
காவல் நிலையத்திலிருந்து இலக்கியனுக்கு அழைப்பு வர, அழைப்பை ஏற்றவன், "சொல்லுங்க செந்தில்" என்றான்.
"சார்.. இ..இங்க ஒரு கொலை கேஸ் சார்" என்று அவன் கூற,
"வாட்? யாரு?" என்றான்.
"பெரிய இடம் போல சார்" என்று அவன் கூற,
"ஓகே நான் வரேன்" என்றவன், "அத்தை.. மாமா எங்க?" என்றான்.
"வாகிங் போயிருக்காரு கண்ணா" என்று அவர் கூற,
"பாப்பாவ ஹோம் கூட்டிட்டு போய் யுனிபார்ம் மாத்தினதும் ஸ்கூல்ல விட சொல்லிடுங்க. ஒரு வேலை. நான் உடனே கிளம்பனும்" என்றான்.
"சரிப்பா" என்று அவர் கூற, குழந்தையைத் தூக்கி அவள் மூக்குடன் தன் மூக்குரசியவன், "டாட்டா பேபிடால்" என்க,
"லக்கி சாப்பிடலை?" என்றாள்.
"ஒரு வேலைடா பாப்பா. லக்கி சீக்கிரம் சாப்பிட ட்ரை பண்றேன். பாய்" என்று முத்தமிட்டுச் சென்றான்.
தனது இரும்புக் குதிரையைக் கிளப்பிக் கொண்டு விரைந்து வந்தவனை செந்தில் தான் வரவேற்றான்.
விறுவிறுவென உள்ளே நுழைந்தவன், "ஸ்பாட் எங்க? ஆள் போயாச்சா? ஃபாரன்ஸிக் ஆட்கள் ஸ்பாடுக்கு போயாச்சா? இறந்தது யாரு?" என்று கேள்விகளை அடுக்க,
"சார்.. ஏழு வயசு குழந்தை சார்" என செந்தில் கூறினார்.
"வாட்?" என இலக்கியன் அதிர்ந்து திரும்ப, "ஆமா சார்" என்று கூறினான்.
உடனே செந்திலைக் கூட்டிக்கொண்டு ஜீப்பில் கொலை நடந்த இடத்திற்கு வர, அங்கு சுற்றி தடுப்புக் கயிறு போடப்பட்டு உடற்கூறு ஆய்வாளர்கள் தங்கள் பணியைச் செய்துக் கொண்டிருந்தனர்.
அப்பகுதியின் அரசியல் தலைக்கட்டைச் சேர்ந்தவர் வீட்டுப் பிள்ளையது. அக்குழந்தையின் தாயார் அழுது மயங்கியதால் அவருக்கு ஒருபுறம் சிகிச்சை நடக்க சில வினாடிகளிலேயே அவற்றை நோட்டம் விட்டவன் சடலத்திடம் வந்தான்.
ஆடைகளற்று உடலெங்கும் கீறலுடன் நெற்றியில் அடிபட்டு மண்டை ஓடே வெளியே தெரியும்படி இறந்து கிடந்த குழந்தையைப் பார்த்த நொடி அந்தக் காவலனே அதிர்ந்து தான் போனான்.
அடிவயிற்றைப் புரட்டிக் கொண்டு வருவதைப் போல் உணர்ந்தவன் செந்திலின் தோளை அழுந்தப் பற்ற, "சார்" என்றபடி செந்தில் அவனை நோக்கினான்.
சற்றே ஓரம் ஒதுங்கியவனுக்கு செந்தில் வண்டியிலிருந்து நீர் எடுத்துக் கொண்டு வந்து தர, அதைப் பருகி தன்னை நிலைப்படுத்தியவன் சுற்றியுள்ள கூட்டத்தைப் பார்த்து அவ்விடம் விரைந்து அங்குள்ள உடற்கூறு ஆய்வாளரான தினேஷிடம் சென்றான்.
"தினேஷ்.. முதல்ல குழந்தைய கவர்பண்ணி ஹாஸ்பிடல் அனுப்புங்க. மீடியாலாம் வந்துடுச்சு" என்றவன் குரலில் அத்தனைக் கோபம் இருக்க,
"சாரிடா" என்ற தினேஷ் உடனே அதற்கான வேலையில் ஈடுபட்டான்.
இடத்தில் ஆய்வுகள் முடியவும், "எனி எவிடென்ஸ்?" என்று இலக்கியன் வினவ,
"சுத்தியுள்ள பிளட் சாம்பிள்ஸ் அண்ட் பிங்கர் பிரிண்ட்ஸ் எடுத்திருக்கோம். டெஸ்ட் பண்ணா தான் தெரியும் இலக்கியா" என்று கூறினான்.
"ம்ம்.." என்றவன் தயங்கியபடி, "செ..செக்ஷுவல் அட்டேக்கா இருக்குமா?" என்று வினவ,
"பார்த்தா அப்படிதான் தெரியுது மச்சி" என்று தினேஷ் கூறினான்.
"எப்பிட்றா இவ்வளவு சின்னக் குழந்தைய?" என்று வினவ,
"நீயே இப்படி கேட்குறியேடா. அஞ்சு வயசு குழந்தைல இருந்து அம்பது வயது முதியவங்க வரை நடக்குது" என்றவன் ஒரு பெருமூச்சுடன், "டெஸ்ட் பார்த்துட்டு ரிபோர்ட்ஸ் தரேன்" என்றுவிட்டுச் சென்றான்.
"செந்தில் பாப்.. பாடிய யாரு முதல்ல பார்த்தது?" என்று இலக்கியன் வினவ,
"சார் காலைல தண்ணி பாய்ச்ச நிலத்தோட சொந்தக்காரர் வந்திருக்காரு. அவரு ரோட்டோரமா ஏதோ தெரியுதேனு வந்து பாத்து பயந்து போயிட்டாரு. ஆள் பெருசா நடமாடாத ரோடுனு இங்க போட்டிருப்பாங்க போல சார். அவர் இன்பார்ம் பண்ண உடனே சுரேஷ் சாரோட ரெண்டு கான்ஸ்டபிள அனுப்பிட்டு உங்களுக்கு கால் பண்ணேன். அப்படியே பாரன்சிக்கும் சொன்னேன். நீங்க வர்ற கொஞ்சம் நேரம் முன்ன அவங்க வந்துட்டாங்க சார்" என்று செந்தில் அத்தனை தகவல்களையும் கூறினான்.
சாலைக்கு இருபுறமும் இருந்த விவசாய நிலத்தினைக் கண்டவன், அதை நோக்கிச் செல்ல, நிலத்தில் நின்று கொண்டிருந்த சிலர் அவனையே குறுகுறுவெனப் பார்த்தனர்.
ஆணவன் வரப்பில் காலெடுத்து வைக்க வந்து பின் அங்குள்ளோரைப் பார்த்தான்.
என்ன நினைத்தானோ தனது பூட்ஸை கலைந்து வெறும் காலில் அவன் உள்ளிறங்க, அவர்கள் முகத்தில் ஒரு ஆசுவாசம். நிலத்தை நோட்டம் விட்டபடி வந்தவன் காலில் ஏதோ சுருக்கென்று குத்த "ஸ்ஸ்.." எனக் கீழே குனிந்து பார்த்தான்.
ஒற்றைக் காலை மடக்கி அமர்ந்தவன் அதென்னவென்று நோக்க, கழுகு முகம் கொண்ட பிரேஸ்லெட் இருந்தது. சுற்றி முற்றிப் பார்த்தவன், தனது கைக்குட்டையை எடுத்து, அதனை கைரேகை படாதபடி எடுத்து தன் பாக்கெட்டிற்குள் வைத்துக்கொள்ள, அங்கு அருகே இருந்த வயலில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் யாரோ அவசரமாக ஓடிச் சென்றிருக்கும் அடையாளமாய் பயிர்கள் சேதமடைந்திருந்தன.
அதையும் தனது அலைபேசியில் புகைப்படம் எடுத்துக் கொண்டவன் மேலும் சிறிது தூரம் சோதனை செய்துவிட்டு வர, செந்தில் அவனிடம் வந்தான்.
தனது காலுறையை அணிந்தபடி, "இந்த நிலத்தோட சொந்தக்காரரைக் கூப்பிடுங்க" என்று இலக்கியன் கூற,
"இதோ சார்" எனச் சென்று அவரைக் கையோடு கூட்டி வந்தான்.
அந்த பெரியவர் பயந்து அதிர்ந்த தோரனையிலேயே வர, நடந்த சம்பவத்திலிருந்து அவர் இன்னும் வெளிவராததை இலக்கியனால் புரிந்துகொள்ள முடிந்தது.
இருந்தும் தனது கடமையைக் கருத்தில் கொண்டு, "எப்ப பார்த்தீங்க?" என்று அவன் வினவ,
"காலைல ஒரு அஞ்சு நாப்பதுக்கே நிலத்து பக்கம் வந்தேன் தம்(பி).. சார். அப்போ லேசா இருட்டா தான் இருந்தது. எனக்கு அதனால எதும் தெரியலை. திரும்ப ஏழு மணி மேல வந்தப்போ தான் என்னவோ கிடக்குதேனு வந்தேன். இது பெரிய ரோட்டோட இணைக்குற குறுக்கு வழிப்பாதை. அதனால எட்டு மணி மேல பள்ளிகூடம் போகுற கொஞ்சம் பிள்ளைங்க தான் இந்த பக்கம் வருவாங்க. அதனால யாரா இருக்குமோ பிள்ளைக எதும் விழுந்து கிடக்குதானு பாக்க வந்தேன் சார். பார்த்தா அ..அந்த பிள்ள. என் ஈரகொலையே நடுங்கிபோச்சு சார். பயந்து போய் அப்படியே உக்காந்துட்டேன். மூச்செல்லாம் முட்டுறபோல ஆகவும் தான் போலீசுக்கு சொல்லனும்னு அழைச்சேன்" என்று கூறினார்.
அனைத்தையும் கேட்டவன், "இந்த நிலம் எல்லாம் உங்களோடதா?" என்று வினவ,
"ஆமா சார். அந்தா அதுவர என்னோடதுதேம். எங்க அப்பாரு காலத்துலருந்து நாங்க தான் வெள்ளாம பண்றோம்" என்று எதிலிருந்து எதுவரை தன் நிலம் என்பதையும் கூறினார்.
"நைட்டு வேற யாரும் புது ஆளுங்க வந்து போனதா பார்த்தீங்களா?" என்று அவன் வினவ,
"இல்ல சார். அப்படி யாரையும் பாக்கலைங்க. நேத்து நைட்டு கூட வந்து மழ பெய்யுற போல இருக்கேனு வரப்பு வெட்டிவிட்டு போவோம்னு வந்துட்டு போனேங்க சார். ஒன்பது மணி போல இருக்கும்" என்று தடுமாற்றமாய் கூறினார்.
"ம்ம்.. நீங்க போகலாம். எதும் விசாரணைனா கூட ஒத்துழைங்க" என்று அவன் கூற,
"சரிங்க சார்" என்றுவிட்டுச் சென்றார்.
"குழந்தையோட பேரென்ட்ஸ்?" என்று அவன் வினவ, "ஹாஸ்பிடல் போயிருக்காங்க சார்" என்று செந்தில் கூறினான்.
செந்திலைக் கூட்டிக் கொண்டு மருத்துவமனை வந்தவன் அக்குழந்தையின் குடும்பத்தாரிடம் சென்றான். அப்பகுதியின் முன்னால் அமைச்சராக இருந்தவர் ராமலிங்கம். அவரது மனைவி யசோதா மற்றும் அவர்களது ஒரே மகன் சித்தார்த் மருமகள் சித்ரா அங்கு சோகமே உருவாக இருந்தனர்.
சித்தார்த் மற்றும் சித்ராவின் ஏழு வயதான மூத்த பெண் குழந்தை மதுமிதா தான் தற்போது இறந்தவள். அனைத்தையும் வண்டியில் வரும்போதே கேட்டுத் தெரிந்துக் கொண்டிருந்தான்.
அவர்களிடம் வந்த இலக்கியன் அழுது கரைந்து கொண்டிருக்கும் சித்ராவைப் பார்த்துவிட்டு ராமலிங்கத்திடம்,
"நான் எஸ்.ஐ.இலக்கியன் சார். மதுமிதா கேஸ் நான் தான் நடத்தப் போறேன். உங்ககிட்ட சில விஷயம் கேட்டு தெரிஞ்சுக்கனும்" என்று தன் கைகடிகாரத்தைப் பார்த்துக் கொண்டவன்,
"பாடியைக் கொடுக்க இன்னும் நேரம் இருக்கு. இப்பவே வந்து விசாரணை செய்றதுக்கு மன்னிக்கனும். ஆனா நீங்க சொல்றதை வெச்சுதான் என்னால ஒரு அனுமானத்திற்கு வரமுடியும்" என்றான்.
சித்ரா பெருங்குரலெடுத்து அழுதபடி தன் மாமியாரை அணைத்துக் கொள்ள, ராமலிங்கம் வருத்தத்துடன் "என்ன சார் கேட்கனும்?" என்றார்.
அவர் தனக்கு ஒத்துழைப்பதில் நிம்மதி கொண்டவன், "நன்றி சார். பாப்பா காணாம போனாங்களா?" என்று வினவ,
"இல்லை சார்" என்றார்.
"அப்பறம் எப்படி?" என்றவன் சித்தார்த்தை நோக்க,
"தெரியலை சார். நைட்டு எங்ககூட தான் இருந்தா. ராத்திரி ஒரு ஃபோன் கால் வந்தது. பன்னிரெண்டு மணி போல இருக்கும். அப்ப எழுந்து பேசும்போது கூட எங்க பக்கத்துல தான் இருந்தா. காலைல எழுந்து பார்த்தா காணும். கீழ அவ தாத்தா ரூமுக்கு எப்பவும் காலைல எழுந்ததும் போயிடுவா. அப்படி போயிருப்பானு நினைச்சு விட்டுட்டோம். நாங்க ரெடியாகி கீழ வந்து அம்மாகிட்ட கேட்டா அவ வரலையேனு சொல்றாங்க. அதுக்குள்ள உங்க கான்ஸ்டபிள் ஃபோன் பண்ணி கூப்பிட்டாரு. வந்து பார்த்தா" என்றவர் அதற்குமேல் கூற முடியாமல் கேவி அழுதான்.
"என் பொண்ணுக்கு என்ன சார் ஆச்சு? அ..அவள என்ன பண்ணாங்களோ தெரியலையே" என்று சித்ரா அழ,
"சார்.. என் பேத்திய இந்த நிலைமைக்கு ஆளாக்கினவன சும்மா விடாதீங்க சார்" என்று அந்தப் பெரியவரும் அவன் கைபிடித்து கெஞ்சியபடி அழுதார்.
Comments
Post a Comment