திருப்பம்-70
திருப்பம்-70
தன்னை வியப்பும் ஆர்வமுமாய் பார்ப்பவள் அருகே வந்து கரம் பற்றியவன் சுயம்புலிங்கம் முன் சென்று நின்று, “ஏம்மாமா.. என்னைய ஒங்க மருமவேனாதான பாத்தீய? ஒங்க மவள கட்டித்தர மாட்டீயளா?” என்று கேட்க,
'இஞ்சார்ரா! புள்ளப்பூச்சிக்குக் கொடுக்கு மொளச்சுடுச்சு’ என்று அந்த சூழலிலும் மனதோடு தன்னவனை தனம் கேலி செய்துகொண்டாள்.
தெய்வா அதிர்ந்து போய் அவர்களை நோக்க, அவரை ஏறிட்டவன், “கொன்னுபோடுவீயளாக்கும் அத்தே? யாரக் கொல்லுவீய? அவோளயா என்னையா? அவோ ஏம் உசுருத்தே” என்று கூறுகையிலேயே அவன் கண்கள் கலங்கிவிட்டது.
'அய்யோ எனக்கு விசிலடிக்கனும்போலருக்கே.. ஏ அண்ணேனுவளா.. எங்கலே போனீய?’ என்று தனம் மனதோடு குத்தாட்டம் போட,
தெய்வா தன் மகளை ஆச்சரியமாய் பார்த்தார்.
“சாக்கக் கொற ஆத்தா. நான் இவியளத்தேம் ரொம்ப வருஷமா காதலிக்கேம்” என்றவள் தந்தையைப் பார்க்க, அவர் இதழில் மெல்லிய புன்னகை தோன்றியது.
“வேலா..” என்று தெய்வா வியப்பாய் அழைக்க,
“ஏம் மருமவேம் மருமவேம்னு சொல்லுவீயத்தானத்தே? ஒங்க மோளேய கட்டித்தர மாட்டீயளா?” என்று கேட்டவன் சுயம்புலிங்கத்தைப் பார்த்து, “ஒங்கபோல வசதியில்ல மாமா. ஆனா அவள ராணியாட்டம் வச்சுப்பேம்” என்று கரகரத்தக் குரலில் கூறினான்.
“சும்மா இதயே சொல்லாதீய” என்று தனம் குறைபட,
“ஏம்மருமவேம்னு நான் வாயி வார்த்தையா சொல்லல. ஒங்கபோல வசதியில்லனு நீயு பிரிச்சு பேசுறத பாத்தாக்காதேம் நீயு வேற ஆளோனு ரோசிக்கவருதுலே” என்று சுயம்புலிங்கம் கூறினார்.
“அப்புடிச்சொல்லுங்கைய்யா” என்று தனம் கூற,
“மாமா” என்று கண்ணீர் சிந்தினான்.
அவன் தோள் பற்றி அழுத்தம் கொடுத்தவர், “ஒனக்கில்லாத உரிமையாலே?” என்றவர், “ஒன்னத்தாம்லே கட்டிகொடுக்க மொத ஒங்கம்மாட்ட பேசினேம்” என்று கூற,
'இது எப்ப?’ என்று அனைவருமே அதிர்ந்து போயினர்.
“அவதேம் நீயு இப்பத கட்டிகிடுற எண்ணத்துலயே இல்லன்னா.. அதுக்குள்ள இந்த சம்மந்தம் வரவும்தேம் வீட்டுல சேதி போட்டு வச்சேம்” என்று சுயம்புலிங்கம் கூற,
“மாமா..” என்று ஆச்சரியமாய் அவரைப் பார்த்தான்.
“என்னம்லே முழிக்க? சுந்தரத்த ஏந்தங்கச்சியாதேம் பாவிக்கேம். அப்ப நீயு ஏம் மருமவேம் தான? கண்டது கழுதைய ரோசிச்சு எகன மோகனையா பேசாது சட்டுபுட்டுனு எம்மவள கட்டிக்கிடு. கடனுகெடக்கு கடனு.. நீயு அடச்சுபுடுவலே.. எம்மவள என்னயவிட நல்லாத்தேம் பாத்துப்ப” என்று சுயம்புலிங்கம் மனமாரக் கூற,
தனலட்சுமி தன்னவனைத் தன் தந்தை பெருமை பேசுவதில் கர்வமாய் உணர்ந்தாள்.
“தெய்வா.. அவசரபட்டு பேசுறது இதுவே கடசியாருக்கட்டும். நம்ம பெத்த புள்ளமேல நாம மொத நம்பிக்க வெக்கனும். ரோசிச்சு நடந்துக்க” என்று அழுத்தமாய் மொழிந்தவர், தன் மேல் துண்டை உதரிக்கொண்டு உள்ளே செல்ல,
தெய்வா தன் மகளின் கரத்தைப் பற்றினார்.
மருமகளை என்னற்ற முறை தேவையில்லாமல் பேசியபோது வராத குற்ற உணர்வு மகளைப் பேசியதில் தோன்றியது அவருக்கு. ஆயிரம் இருந்தாலும் அவள் மருமகள், இவள் மகளாயிற்றே!
கோபம் போல் அன்னையின் கரம் உதறியவள், “என்னா அடி.. பல்லு கில்லு கலண்டு ஒழுந்தா என்னம்மா செய்வேம்? ஒரு பக்கமா திரும்பிகிட்டா நீயா பாப்பா? அவருதேம் தவிக்கனும்” என்று கூற,
“ஆத்தா தனம்.. மன்னிச்சுடு தாயி” என்றவர், “எய்யா வேலா.. மன்னிச்சுடுய்யா. இந்த கோம்ப நீதேம்னு ஒத்த வார்த்த சொல்லிருந்தா இம்புட்டுக்குத் தவிச்சிருக்க மாட்டேம்ல. பெத்த வவுறு பயத்துல பத்தி எரிஞ்சுடுச்சு” என்று கூறினார்.
கார்த்திகாவும் சங்கமித்ராவும் சட்டென ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள, அவர்களது ஒரே எண்ணவோட்டம் அந்த பார்வை பரிமாற்றத்திலேயே அவர்களுக்கு விளக்கியது.
வெடித்துவரத் துடித்த சிரிப்பை, இதழ் கடித்து அடக்கிய இருவரும் ஒருவரை ஒருவர் நெருங்கிக் கொண்டனர்.
“ஆயிரமிருந்தாலும் பெத்த பொண்ணு பெத்த பொண்ணுதான?” என்று கார்த்திகா முனுமுனுக்க,
“மன்னிக்கனுமாம்ல க்கா? ஹ்ம்..” என்று சங்கமித்ரா பெருமூச்சுவிட்டாள்.
“மன்னிக்கலாம் முடியாது ஆத்தா. வேணுமின்னா போனா போதுனு மறந்துகிடுதேம். பேசுற வார்த்தைக்கு எல்லாம் மன்னிப்பு தீர்வாயிபுடாது. என்னைய இல்ல.. ஆரை பேசினாலும் தான் சொல்லுதேம்.. அம்புட்டு பேசினல நீயு” என்று தனலட்சுமி கூற,
முகம் வாடிய தெய்வாவைக் கண்டு, “அவோ வெளாடுதா அத்தே. நீங்க விடுங்க” என்று வடிவேல் கூறினான்.
தன்னவனை முறைத்துப் பார்த்தவள், அவன் கரம் கொடுத்த அழுத்தத்தில் மௌனமாக,
தெய்வாவும் தன் ஆதங்கத்தைக் கொட்டிவிட்டுக் கணவர் பின்னோடு உள்ளே சென்றார்.
“இப்புடி திடுமுனு ஆஜர் ஆவீயனு நெனக்கலைங்க” என்று தனம் கூற,
“நீ பேசிட்டு போனதும் ரொம்ப சங்டமாருந்துச்சு. அதேம் பாத்துட்டாது போவமுனு வந்தேம். அத்தே அப்புடி பேசவும் ரொம்ப வருத்தமா போச்சுது. என்னால நீயேம் வார்த்த வாங்கனும்” என்று வருத்தம் பூசிய குரலில் கூறினான்.
“அதுசரி.. அறையே வாங்கிபுட்டேம். வார்த்த வாங்குறதுக்கு பேசுறீய” என்று அவள் கன்னத்தைத் தேய்க்க,
“அடிச்சாவளா?” என்றான்.
“ம்ம்..” என்று சோகம் போல் அவள் தலையசைக்க,
அவள் கன்னத்தில் தன் நுனிவிரல் உரச வருடியவன், “மன்னிச்சிருடி” என்றான்.
“அஹம் அஹம்..” என்று கார்த்தியும் மித்ராவும் தங்கள் குரல் செறுமி இருப்பை உணர்த்தவும் தான், அவர்கள் இருப்பதையே கண்டு வடிவேல் பதறி விலகினான்.
தன் அண்ணிகள் இருவரையும் முறைத்த தனலட்சுமி, “அவியளே எப்பமாதுதேம் இப்புடிலாம் பேசுவாவ. அது பொறுக்கலையா ஒங்களுக்கு” என்று கூற,
“ஏட்டி சும்மாகெடயேம்” என்ற வடிவேல் பிடறி முடியைத் தேய்த்துக் கொண்டு, தன் வெட்கத்தைக் கட்டுப்படுத்தினான்.
“சரிதேம்.. தனத்துக்கும் சேத்துவச்சு அண்ணே வெட்கப்பட்டுக்கும். அண்ணேக்கு சேத்துவச்சு தனம் பேசிமுடிச்சுக்கும்” என்று கார்த்திகா கூற,
“சரியா சொன்னீங்க க்கா” என்று சங்கமித்ரா சிரித்தாள்.
“தங்கபுள்ளையளா..” என்று வடிவேல் கெஞ்சுதலாய் அழைக்க, போனால் போகட்டும் என்று தங்கள் கேலியை விடுத்தனர்.
உள்ளே சென்று தனது கணவரிடமும் அழுது பேசி சமாதானம் செய்த தெய்வா, சுயம்புலிங்கத்துடன் வெளியே வர,
“ஒனக்கு எப்பம் சேரினு படுதோ சொல்லு வேலா. ஆத்தாட்ட வந்து நாங்களே பேசுதோம்” என்று லிங்கம் கூறினார்.
தனத்தை பார்த்தவன், ஏக்கம் மறைத்து புன்னகைக்கும் அவள் விழிகள் கண்டு, “எனக்கு சம்மதமுதேம் மாமா. எப்பவேணா வந்து பேசுவ” என்க,
அவள் விழிகள் வெளிப்படையாய் தன் ஆச்சரியம் வெளிப்படுத்தியது.
“அப்புடி போடு” என்று உற்சாகமாய் கூறிய கார்த்திகா சங்கமித்ராவுடன் ‘ஹை-ஃபை’ தட்டிக் கொள்ள,
தெய்வா மருமகள்களை குறுகுறுவென்று பார்த்தார்.
தனலட்சுமி அடக்கப்பட்ட சிரிப்போடு தன் அண்ணிகளைப் பார்த்து, ‘உணர்ச்சிவத்த அடக்குங்க' என்று கண்ஜாடை காட்ட,
இரண்டு மருமகள்களும் கப்-சிப் ஆயினர்.
“நல்ல நாளு பாத்து வாரம்லே” என்று சுயம்புலிங்கம் கூற,
தனத்திடம் கண்காட்டியவன், அவளோடு சேர்ந்து அவள் பெற்றோரின் பாதம் பணிந்து ஆசி பெற்றான்.
ரணகலமாய் துவங்கிய அத்தருணம் இதமாய் முடிவடைந்திட, வடிவேலும் தன் அன்னையிடம் விஷயத்தைத் தெரிவிக்க வீடு சென்று சேர்ந்தான்.
இரவு வேலைகளை முடித்துக் கொண்டு வெகு தாமதமாகவும் சோர்வாகவும் இரட்டையர்கள் வந்து சேர, அவர்கள் உணவு உண்டு முடித்ததும் சுயம்புலிங்கம், “தனத்த பொண்ணு கேக்க இந்த ஞாயித்துக்கெழம எம்மருமவேம் வீட்டுக்கு வாரதா யோசிக்காம்லே. சோலி ஏதுமிருந்தா மாத்திடுவ” என்றார்.
இரட்டையர்கள் இருவரும் அதிர்ந்துபோய் தனத்தை நோக்க, அவள் சோகம் போல் முகத்தை வைத்துக் கொண்டு தலை கவிழ்ந்தாள்.
“அய்யா.. யாரு மாப்பிள்ள?” என்று விக்ரம் திணறலாய் கேட்க,
“தங்கச்சி மேல பாசத்தப் பாத்தீய சங்கு? அவோ கூட இம்புட்டுத் தெனற மாட்டியா. இவிய கொரலுதேம் பயங்கர பிசிறாருக்கு” என்று கார்த்திகா சங்கமித்ரா காதில் கேலியாய் கிசுகிசுத்தாள்.
“சும்மாருங்க அக்கா. நானே மாமா ட்ராமாக்கு கோ-ஆப்ரேட் பண்ண ட்ரை பண்ணி கஸ்டபட்டு சிரிக்காம இருக்கேன்” என்று சங்கமித்ரா கூற,
“ஆஹாங்?” என்று அவளைப் பார்த்தவள் அவளது அதீத சோகமான முகத்தைக் கண்டு, “எக்ஸ்டிரா ஆக்டிங் போட்டு நீயே காட்டிக்குடுத்துடுவ போலியே” என்றாள்.
இதற்கிடையில் “அதேம் சொன்னேம்லலே” என்ற லிங்கம் குறிப்பிட்டது என்னவோ ‘மருமகன்’ என்ற அவரின் வார்த்தையைத் தான். ஆனால் ஆண்கள் இருவரும் அவர் வரனாக வந்ததாய் கூறிய மதுரைக் காரன் என்று நினைத்துக் கொண்டு, “ஐயா சொல்லுறேம்னு தப்பா எடுத்துக்காதீய. தனம் ஆரையோ ஆசபட்டுச்சே” என்று விக்ரம் கேட்டான்.
“அதுட்ட அந்த பயல பேசச்சொல்லி நாந்தேம் கேட்டேம். அந்தப் பய வந்து பேசமாட்டிக்கானாமே? பொறவு நானுந்தேம் என்னய்யா செய்ய?” என்று லிங்கம் கேட்க,
'வேலூ…’ என்று மனதில் நண்பனை வெட்டி தாளித்து உப்புக்காரம் பிரட்டி எடுத்த வளவன், “ஒங்களுக்கு பய நல்லவேனா இல்லியானுதான ஐயா பயம்? பய சொக்கத் தங்கமுய்யா” என்று கூறினான்.
“பாத்தீங்களாக்கா? சொக்கத்தங்கமாம்?” என்று சங்கமித்ரா கூற,
“ஆமாடி. அதேம் நம்ம தனத்துட்ட வந்து அடகு வைக்காவ” என்று கூறி கிளுக்கிச் சிரித்தாள் கார்த்திகா.
அந்த சப்தத்தில் இரட்டையர்கள் அவர்களை நோக்க,
முகத்தில் சிரிப்பிற்கு சடன் பிரேக் போட்டு, சோகத்தை தத்தெடுத்துக் கொண்டு முந்தானையில் தங்கள் வாயைப் பொத்திக் கொண்டனர்.
“ஒனக்கு யாருனு தெரியுமாய்யா?” என்று சுயம்புலிங்கம் ஆச்சரியம் போல் கேட்க,
“ஆமாய்யா.. பய நல்லவேனா இல்லியானுதேம் ஒங்க பயமின்னா அத அப்புடியே விட்டுபுடுவ. அவேனுக்கு நாம் பொருப்பு. நீங்களா தேடினாகூட இம்புட்டுக்கு நல்லவியனா இருக்க மாட்டியான்” என்று வளவன் கூறினான்.
“ம்ம்.. நானுங்கூட கேள்வி பட்டேம்பா. ஆனா ரொம்ப சாதுவா இருக்கியாம். எம்புள்ளைய சமாளிக்குற அளவு தெனவிருக்குமானு தெரியலியே?” என்று அடக்கப்பட்ட சிரிப்போடு லிங்கம் கூற,
“அதெல்லாம் இருக்குமைய்யா. நல்லா அறிவான ஆளுதேம். என்ன கொஞ்சம் இளிச்ச வாயி” என்று தனம் கூறியதும், “அதேம் ஒன்னய கட்டிகிட ஆசபட்டிருக்காவ” என்ற கார்க்திகா வாய்விட்டு சிரித்தாள்.
அவளைத் தொடர்ந்து சங்கமித்ரா, தெய்வா மற்றும் லிங்கமும் சிரித்திட,
“பொறாம.. ஒங்களுக்கு எங்கண்ணா கெடச்சாப்புலதேம்” என்ற தனம், “ஏம் ரெண்டு அண்ணேனும் இப்புடி மூளைய குக்கருக்குள்ள வச்சுட்டு வந்து ஒக்காந்திருப்பீயனு நெனக்கல. வேற மாப்பிள பாக்கனுமினு சொன்னா நானு இப்படியா கல்லுபோல ஒக்காந்திருப்பேம்?” என்று கேட்டாள்.
அதில் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட இரட்டையர் தந்தையைப் பார்த்து, “ஐயா!?” என்க,
“இந்தபுள்ளதேம்லே கொஞ்சம் அண்ணேங்கூட வெளாடி பாப்பமுனு சொன்னா. அதேம் சும்மா வெளாண்டேம். வேலு இன்னிக்கு மோந்திலயே வந்து பேசிட்டியாம். அவேனதேம் பாக்கப் போறோம். சுந்தரத்துட்டயும் போனுல பேசிகிட்டாச்சு” என்று கூறினார்.
“அடிப்பாவி” என்று விக்ரம் கோபம் போல் எழ,
“அய்யோ அண்ணே.. ஒன் அன்பு தங்கச்சி பாவமின்ன? கல்யாணங்கட்டிப் போயிட்டா இப்புடி ஆட ஆளிருக்குமா?” என்று உருக்கமாய் பேச முயற்சித்தாள்.
“ச்சை கேவளமா நடிக்காத” என்று வளவன் கூற,
“எப்புடி ஒங்க பொஞ்சாதி நடிச்சத விடவா? அவிய ரெண்டு பேரும் சிரிப்ப அடக்கத்தேம் சேலைய வச்சு மூடினாவனு எனக்கே புரியுது. ஒங்களுக்கு புரியில பாருங்க” என்று தனம் சிரித்தாள்.
அவளது காதுகளை ஆளுக்கொருவராய் பிடித்துக் கொண்டு திருகிய இரட்டையர்கள், “வாயி வாயி வாயி” என்க,
“ஆ.. அண்ணே வலிக்கு.. சும்மாதேம்.. விடுங்க” என்றாள்.
அவள் அலறலில் வீடே சிரிக்கவும், அவளை விட்ட இரட்டையர்கள் பரிவாய் தலைகோதி, “எங்க கூட்டுக்காரேன நல்லா பாத்துக்கத்தா” என்க, “கண்ணுல வச்சு தாங்கிபுடுதேம்” என்று பெருமையாய் கூறியவள் கூற்றில் அனைவரும் நிறைவாய் புன்னகைத்தனர்.
Comments
Post a Comment