திருப்பம்-71

 திருப்பம்-71



நல்ல முகூர்த்த நாள் என்பதால் அக்கோவிலில் கொஞ்சம் மக்கள் வரவு அதிகமாகத்தான் இருந்தது. அத்தோடு நம் குடும்பத்தாட்களும் சூழ்ந்திருக்க, சிரிப்பும் நகைப்புமாய் அவ்விடமே கலகலத்தது.


ஆம்! அது வடிவேல் மற்றும் தனலட்சுமியின் நிச்சயதார்த்தமே!


வடிவேல் பக்கமிருந்து பெரிதாக சொந்தமென்று ஆட்கள் குறைவு தான். அவன் தந்தை வாழ்ந்த காலத்தில் மிகவும் கடினப்பட்டு உயரத்திற்கு வந்து, மீண்டும் விழத்துவங்கியிருந்த நிலையில் கடன்கள் பல பட்டு, அதனை அடைக்கவும் முடியாமல் உயிரிழந்திருந்தார். பெரிதாக ஒட்டுதல் இல்லாத குடும்பம்தான் அவன்பக்கம் என்றாலும், கடனென்று அவர் வீழத்துவங்கியதுமே உதவிக்கு பயந்து அனைவரும் மேலும் ஒதுங்கிக் கொண்டனர்.


வடிவேலின் தந்தை இறந்தபின்பு, பேச்சுவார்த்தைகள் முற்றுமாய் நின்று போயிருந்தது. உறவென்ற முறைக்கு வடிவேல் பத்திரிக்கை வைத்திருந்தபோதும் அவர்கள் திருமணத்திற்கு வருவதாய் கூறியிருந்தனர்.


ஆனால் நம் தனலட்சுமி பக்கம் ஊரே திரண்டிருப்பதைப் போல் கூட்டம் கலைகட்டியது. நிகழ்விற்கு, கார்த்திகாவின் பெற்றோர் மற்றும் அவளது அண்ணன், அண்ணன் மனைவி, மற்றும் அவர்களது பிள்ளைகளும் கூட வந்திருக்க, சங்கமித்ராவின் பெற்றோர் மற்றும், அத்தான் வந்திருந்தனர்.


ஒன்றரை மாதக் குழந்தையைக் கூட்டிக் கொண்டு கூட்டத்திற்கு வருவது வசதிப்படாதென்பதால் சங்கீதாவும் சங்கவியும் மட்டும் வரவில்லை.


அனைவரின் கண்பார்வையில், மகிழ்வே உருவாய், சுயம்புலிங்கம், தெய்வநாயகி, மற்றும் தனலட்சுமி ஒரு பக்கமும், சுந்தராம்பாள் மற்றும் வடிவேல் ஒரு பக்கமும் அமர்ந்திருந்தனர்.


கணவர் இல்லாத நிலையில் சபையில் அமர வெகுவாக சங்கடப்பட்ட சுந்தராம்பாள், வளவன் மற்றும் சங்கமித்ராவையே அமர்ந்து அவன் சார்பாகத் தட்டை மாற்றும்படி கேட்டார்.


ஆனால் வளவன் பிடியாய் மறுத்திருந்தான்.


“ஏங்கூட்டுக்காரனுக்காவ தட்டு மாத்த எனக்கொன்னும் சங்கடமில்லத்தே. ஆனா மாமாயில்லங்கக்காவண்டி நீய சபைக்கு வாராம இருக்கீயனு தெரிஞ்சா அம்மா அப்பா ரொம்ப வெசனப்படுவாவ” என்று கூறி வளவன் மறுத்திட,


“என்ன அம்மா நீங்க? இன்னுமா இதெல்லாம் பாக்குறீங்க? அதெல்லாம் யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க. சொன்னாலும்தான் நீங்க ஏன் பயப்படனும்? மனசார எம்புள்ள வாழ்க்கை நல்லாருக்கனும்னு நான் மாத்திக்குறேன்னு சொல்லுங்க. உங்க வேண்டுதலையெல்லாம் விடவா நாங்க வேண்டுறது பெருசாயிடப்போகுது” என்று சங்கமித்ரா கூறி அவரை சம்மதிக்க வைத்தாள்.


ஐயர் வந்து திருமணத்திற்கு இன்னும் மூன்று மாத இடைவெளியில் நாள் குறித்து, பத்திரிக்கை வாசிக்க,


பெண் வீட்டாரும் மாப்பிள்ளை வீட்டாரும் தட்டை மாற்றிக் கொண்டு, திருமணத்தை நிச்சயித்தனர்.


தனலட்சுமி முகத்தில் ஆயிரம் கோடி சூரியனின் பிரகாசம் தான் ஒளித்தது.


பகலவன் ஒளி கொண்டு ஒளி பெரும் நிலவாய், அவள் ஒளிகண்டே வடிவேலின் முகமும் ஒளி பெற்று பிரகாசித்தது. பொதுவாக நிச்சயத்திற்கென்று வந்தவர்கள் உடன் மட்டும் புகைப்படம் எடுக்கப்பட,


“எனக்கு ஒங்கக்கூட ரெண்டு போட்டனாலும் எடுக்கனுமே” என்று தனம் கூறினாள்.


“எல்லாம் இருக்காவ லச்சு” என்று அவன் தயங்க,


“அம்புட்டு பேரு முன்னுக்க முத்தமாயா தரச்சொன்னேம்?” என்று ஆயாசமாய் கேட்டாள்.


“ஏட்டி கோம்ப.. கோயிலுடி” என்று அவன் கூற,


“ஆமா ஆமா.. நீருதேம் சாமியாரு” என்று முகத்தை வெடுக்கென்று திருப்பிக் கொண்டாள்.


“அண்ணே நெலம ரொம்ப பாவமுனுதேம் நெனக்கேம். இப்பவே மொகத்த என்ன வெட்டு வெட்டுதா? அவோ முழிக்குறத பாரேம்” என்று கார்த்திகா சிரிக்க,


“எல்லா ஆம்பளைய நெலமையும் அதான? பொண்டாட்டி ஆட்டிப்படச்சா அமைதியாதேம் அனக்கத்தக்காட்டுதிருக்கனும்” என்று விக்ரம் கூறினான்.


அதில் வளவன் பக்கென்று சிரித்துவிட, இரட்டையர்களை முறைத்துப் பார்த்தவள், “நானு ஆட்டிபடைக்காததாலதேம் இந்தப் பேச்சு பேசுறீய. அந்த புள்ளைய கணக்கா நானும் ஒங்கள ஓட ஓட வெரட்டினேம்னா இப்படி பேசுவீயளா?” என்று கேட்டாள்.


“நல்லா கேட்ட கார்த்தி. நாங்கூட எந்தங்கச்சிட்டத்தேம் பாடம் படிச்சுக்கலாமுனு யோசிக்கேம்” என்று தீபிகா கூற,


“என்ன அன்னி? எங்களுக்குலாம் சீனியரே நீங்கதான். நீங்களே ஜூனியர் கிட்ட பாடம் படிக்கப்போறேன்னு சொல்றீங்க” என்று சங்கமித்ரா கேட்டாள்.


“என்னத்தடிமா செய்ய? எந்தங்கச்சி எக்ஸ்பீரியன்ஸுல கொறஞ்சவளாருந்தாலும் பெர்பாமென்ஸுல பின்னுறால்ல?” என்று தீபிகா கேட்க,


அங்கு பெரும் சிரிப்பலை பரவியது.


“என்ன அனக்கம் பலமாருக்கு? யார நளியடிச்சு சிரிக்கீய?” என்று கேட்டபடி திரிபுரா அவ்விடம் வர,


“எல்லாம் நம்ம தங்கச்சியத்தேம். நாமதேம் அவட்ட பாடம் படிச்சுகிடனும்முனு சொல்லுதேம்” என்று தீபிகா கூறினாள்.


“சரியா சொன்னடியம்மா.. இவிய அடிக்கடி தனத்த பாத்து இது கத்துக்க அது கத்துக்கனு சொல்லுவாவ. அதேம் அவியட்ட சொன்னேம்.. ஒத்த பார்வையிலயே அந்தப் புள்ளைய பாவமா நடுங்க வைக்கா. அந்த கலயயும் அவோட்டதேம் கத்துகிடனும்முனு சொன்னேம்” என்று திரிபுரா கூற,


“அதுசரி.. அப்போ இம்புட்டு நாளா நீயி அத்தான அப்புடி நடுங்க வைக்கலியாக்கும்?” என்று வளவன் கேட்டான்.


“என்னம்லே? அகமா?” என்று கோபம் போல் திரிபுரா கேட்க, மீண்டும் சிரிப்பலை பெருகியது.


அவ்விடம் புகுந்த வயோதிகப் பெண்மணி ஒருவர், “அப்புறம் என்னம்யா? தங்கச்சிக்கு பூமுடி போட்டாச்சு” என்று கூற,


“ஆமா ஆச்சி. கல்யாணத்துக்கும் வந்து இருந்து செறப்பு செஞ்சுத்தந்துட்டு போவனும்” என்று வளவன் கூறினான்.


“ஆட்டும்யா. வந்துடுவோம்” என்றவர், “என்னய்யா ஓங்கிட்ட ஏதும் நல்லசேதி‌ உண்டா? அஞ்சு ஆறு மாசமாச்சுன்ன? தள்ளி போடுறீயளோ?” என்று கேட்க,


சங்கமித்ரா சங்கடமாய் நெழிந்தபடி, ‘இந்த கெழவிகளுக்குலாம் வெவஸ்தயே இருக்காதுபோல. எல்லாரையும் வச்சுட்டு என்னயெல்லாம் பேசுறாங்க' என்று எண்ணிக் கொண்டு, பதில் பேசிட வாய் திறந்தாள்.


வளவனும் ஏதோ பேச வாயெடுக்க, இருவருக்கும் முன், “ஏதும் சேதின்னா நாங்களே கூட்டுச் சொல்லுவோம் ஆச்சி. சும்மா விசேஷத்துக்கு வாரப்பலாம் என்னமாது கேக்கனுமேனு கேக்காதீய. அம்புட்டு பேரையும் வச்சுகிட்டு பேசுற போச்சாது?” என்று பாணை உடைத்தார்போல் திரிபுரா பேசியிருந்தாள்.


சங்கமித்ரா திரிபுராவை வியப்பாய் பார்க்க, “நாம ஊரு வம்புலாம் பேசுறதில்ல தாயி. ஏதோ சேதியிருக்கானு கேட்டேம்” என்று அந்த பெண்மணி அப்படியே பேச்சை மாற்றினார்.


“ஆமா ஆமா ஆச்சி. தெரியுது” என்றவள் அவரிடம் பேசி அனுப்பிவைத்துவிட்டு சங்கமித்ராவைப் பார்த்து, “வாயில கொலுகட்ட என்னமும் வச்சுருக்கியாக்கும்? அவோ கேக்குறது ஒனக்குமட்டுமில்ல எந்தம்பிக்கும் சங்கடத்தத்தேம் தரும். வாயபூட்டிக்கிட்டு பேச்ச கேட்டுகிட்டா ஒனக்கு ஒன்னுமில்லனு இருக்கலாம். அவேனுக்கும் அப்புடியில்ல. சுருக்குனு ஒருக்கா பேசினாதேம் மறுக்கா பேச மாட்டாவ. பாத்து நடந்துக்க” என்று கூறிவிட்டு திரிபுரா செல்ல,


சங்கமித்ரா பேவென்று முழித்தாள்.


அவளைச் சுற்றியிருந்தோருக்கே அவளைப் பார்த்தாள் பாவமாகத்தான் இருந்தது.


“ஏட்டி..” என்று வளவன் அழைக்க,


“நான் ஒரு வார்த்த பேசுறதுக்குள்ள எப்படிங்க உங்க அக்கா இவ்ளோ பேசிடுறாங்க? அம்மாடி..” என்று நெஞ்சில் கைவைத்து பெருமூச்சு விட்டாள்.


“அதேம் திரி மைனியோட ஸ்பெஷாலிடியே” என்று கார்த்திகா சிரிக்க,


“ஏட்டி கோம்பைகளா.. எங்கள வச்சுட்டே எங்க அக்காவ ஓட்டுதீயலாக்கும்?” என்று தீபிகா கேட்டாள்.


“நீங்களாம் ஓட்டலியாக்கும்?” என்று கார்த்திகா கேட்க,


“சரிதேம்டியம்மா.. நாத்துநானு ஒரு மருவாதியில்ல எனக்கு ம்ம்” என்று மிரட்டல் போல் கேட்டாள்.


“அன்னி யூ டூ?” என்று பாவமாய் முகத்தை வைத்துக் கொண்டு சங்கமித்ரா கேட்க,


வாய்விட்டு சிரித்த தீபிகா, “போங்கடி போங்க” எனச் சென்றாள்.


நிச்சயம் நல்லபடியாக முடிவடைய, வடிவேல் கேட்கவில்லை என்றாலும் பரவாயில்லை என்று தானே முன்வந்து புகைப்படக் கலைஞரிடம் தங்களை மட்டும் இரண்டு புகைப்படங்கள் எடுக்கக் கூறி தனம் அவளவனுடன் எடுத்துக் கொண்டாள்.


“புள்ளனு ஒன்னு வளத்தா தனத்த போலதேம் வளக்கனும்” என்று கார்த்திகா உணர்ந்து கூற,


“ரொம்ப சரிக்கா. நான் பேசாம தனம்கிட்ட டெய்லி ஒருமணி நேரம் கோர்ஸ் போகலாம்னு இருக்கேன்” என்று சங்கமித்ரா கூறினாள்.


“சரிதேம்.. மொத அத செய்யு” என்று வளவன் கூற,


“உங்களுக்கு வேலையில்லயா? சும்மா நான் என்ன பேசுறேன்னு பாத்து கலாய்ச்சுட்டே இருக்கீங்க” என்றாள்.


“ஏம்லே அந்த புள்ளைய நளியடிக்க?” என்று விக்ரமன் அவளுக்காகப் பேச, 


“நல்லா கேளுங்க அத்தான்” என்று கூறினாள்.


இப்படியே பேச்சும் கலகலப்புமாய் அனைத்தையும் முடித்துக் கொண்டு அனைவரும் வீடுவந்து சேர,


அவரவர் அறைக்கு ஓய்வாகச் சென்று படுத்தனர்.


வளவன் நெஞ்சோடு வந்து படுத்தவள், “ஒன்னு சொல்லட்டா?” என்று கேட்க,


“என்னடி?” என்றான்.


“எனக்கு ரெண்டு வாரமா பீரியட்ஸ் வரல” என்று அவனை அணைத்தபடியே அவள் கூற,


“ஏதே” என்று அவள் புறம் திரும்பியவன், “செக் பண்ணியா?” என்று கேட்டான்.


இடவலமாய் தலையசைத்தவள், “நாளைக்குதான் பண்ணனும்னு இருக்கேன்” என்று புன்னகையாய் கூற,


“பொறவு ஏம்டி இப்பதயே எங்கிட்ட சொன்ன?” என்று ஆர்வம் தாங்கமுடியாது கேட்டான்.


“பிறகு வேற யாருகிட்ட நான் சொல்ல?” என்று அவள் கேட்க,


“இப்பமே பண்ணகூடாதோ?” என்று கேட்டான்.


“காலைலதான் பண்ணனும்” என்றவள், “எனக்கும் ஆர்வமாதான் இருக்கு.. ஆனா கொஞ்சம் பயமாவும் இருக்கு” என்று விரலில் அபிநயம் பிடித்துக் கூற,


“என்னத்துக்குடி பயம்? என்னமாருந்தாலுஞ்சரிதேம். நல்லதே நெனப்போம்” என்று கூறினான்.


“ம்ம்..” என்றவள், “உங்களுக்கு பயமாயில்லையா? இத்தன மாசமாச்சு..” என்க,


“என்னத்துக்கு பயம்?” என்றவன், “நீ பயப்படுதியா?” என்றான்.


“இல்ல.. நான் சைன்ஸ் ஸ்டூடென்ட்டாக்கும். அதுலாம் எஜுகேடடா தான் யோசிப்போம். இந்த மாசமில்லனா அடுத்தமாசம்” என்று அவள் கூற,


“பரவால்லயே.. இன்னிக்கு அந்த ஆச்சி பேசினதுக்கு என்னமாது பொலம்புவனு பாத்தேம்” என்றான்.


“ஹலோ மிஸ்டர் திருமால்.. முதல்ல கல்யாண புதுசு. அதனால லைட்டா பயமாதான் இருந்துச்சு. அதுக்காக எப்போமேலாம் பயப்பட மாட்டோம் ஆமா” என்க,


“ஆமா நீ பெரிய வீரி சூரில?” என்றான்.


“கேலி பண்றீங்களாக்கும்?” என்று கேட்டவள், அவன் முடியை பிடித்து இழுக்க,


“ஆ கோம்ப..” என்று தானும் அவள் பின்னலைப் பிடித்திழுத்தான்.


இவ்வழகான உரையாடலுக்கான பொருள் மாலையே கலைந்து போதுமென்று இருவருமே எதிர்ப்பார்த்திருக்கவில்லை…


“சரிவுடுடி.. நீதான சொன்ன இப்பமில்லனா அடுத்த மாசமின்னு?” என்று வளவன் கேட்க,


“நான் கொஞ்சம் எதிர்ப்பார்த்தேன்” என்று சோகமாய் கூறினாள்.


அழுது வடியவில்லை என்றாலும்கூட, எதிர்ப்பார்த்து ஏமாந்தது அவளுக்குப் பெரும் வருத்தமாகத்தான் இருந்தது.


அவள் தாடை பற்றித் தன்னைப் பார்க்கச் செய்தவன், “என்னடி?” என்க,


“சொன்னேன் தான். இந்த மாசமில்லனா அடுத்த மாசம். ஆனா இப்ப கொஞ்சம் அதிகமா எதிர்ப்பார்த்தேன்.. ரெண்டு வாரமா வரலைங்கவும் கொஞ்சம் உறுதியா ஃபீல் ஆயிடுச்சு. இப்ப இல்லைங்கவும்.. கஷ்டமாருக்கு” என்றவள், “நான் தேவையில்லாம பயப்படலாம் இல்லைங்க.. ஆனா இல்லைன்னது கொஞ்சம் வருத்தமா இருக்கு” என்று கண் கலங்கினாள்.


தான் அடிக்கடி புலம்புவதாகவும், தேவையில்லாமல் அதிகம் யோசித்து வருந்துவதாகவும் அவன் நினைத்துவிடுவானோ? என்ற பயத்தில் அவள் கூறுவது அவனுக்கு விளங்கியது.


“இஞ்சாரு.. கோவம், சந்தோஷம், அழுக, மோகம் போல பயமும் ஒரு உணர்வுதேம். நீயு பயந்தாலுங்கூட அத நாந்தப்பா சொல்ல மாட்டேம். அப்புடியிருக்க ஒனக்கு என்ன சேதினு வெளங்குது. ஆனா ஆசப்பட்டுப்போட்டு இல்லனு ஆனதுல வொசனமாருக்கு. அம்புட்டுத்தான? இது ஒன்னும் எனக்கு புரியாமயில்லடி. வுடு.. அடுத்த மாசம் எக்ஸ்ட்ரா வர்க் பண்ணி டார்கெட் அசீவ் பண்ணிபுடுவம்” என்க,


“ச்சி போங்க” என்று கோபம் போல் கூறித் தன் கண்ணீர் துடைத்தாள்.


அதில் வாய்விட்டு சிரித்தவன், அவள் முகத்தைப் பிடித்து ஆட்டி, நெற்றி முட்ட, “ஒருநாள் கூட சரியான பயந்தாரியா இருக்காளேனு நீங்க என்னை நினைச்சதில்லயா?” என்று கேட்டாள்.


“ஹ்ம்.. ஒன்னு நீயு புரிஞ்சுகிடு.. ஒரே வெசயத்துக்கு அதுபத்தின எம்புட்டு புரிதல் வந்தாலுங்கூட பயப்படாம இருக்க முடியலனா, அது அவியளோட இயல்பு. அந்த பயத்த மாத்திகிடத்தேம் வேணுமின்னாகூட, அதுக்கு நேரமாவும். பூனைய கொண்டோயி புலியா மாறுன்னா அதுவுந்தேம் என்ன பண்ணும்? ஆனா நீயு ஒரு வெடயத்துல புரிதலு வாராம இருக்கவரதேம் பயப்படுற. இது இப்புடித்தேம்னு தெரிஞ்சுகிட்டா அதுபத்தின பயத்துலருந்து வெளியதேம் வரப்பாக்க. பொறவு ஏம்டி நான் அப்படி நெனக்கப்போறேம்? எல்லாரும் எல்லா வெடயத்துலயும் தெகிரியமா இருக்க மாட்டாவ” என்றவன், அவளை மெல்ல நெருங்கி அமர்ந்து, கிசுகிசுப்பான குரலில், “எனக்கு மானுனா பயந்தெரியுமா?” என்க,


“மான்குட்டிக்கா?” என்றாள்.


“ம்ம்..” என்று பாவம் போல் தலையாட்டியவன், “ஒருக்கா சின்ன புள்ளையில மானுக்கு கேரெட்டு ஊட்டினேம். கைய கடிச்சுவச்சுடுச்சு. விடவேயில்ல வெரல. அதுலருந்து மானப்பாத்தாலே பயம். சின்ன புள்ளையில நடந்ததுதேம். ஆனாகூட எனக்கு இப்பவர மானுனா பயந்தேன். மாட்டுக்கே பயப்பட மாட்டிக்க, மானுக்கு ஏம்லே பயம்முனு அத்தான் கூட கேட்டிருக்காவ” என்று அவன் கூற,


“அச்சுச்சோ” என்று அவன் கன்னம் கொஞ்சியவள், “பரவால்ல பரவால்ல. அது ஒன்னும் தப்பில்ல. நீங்கதான் நம்ம நந்தியவே கட்டி மேய்க்குறீங்களே. மாடைப் பார்த்து பயப்படாதவருக்கு மானைப் பார்த்து பயம் வர்றது ஒன்னும் அவ்வளவு பெரிய தப்பில்ல” என்று கூறினாள்.


அதில் புன்னகைத்தவன், “அதேதேம் ஒனக்கும்” என்று கூற,


“ஓகே ஆபிசர்” என்று சல்யூட் அடித்துக் கூறி, மேலும் அவனை சிரிக்க வைத்தாள்.



Comments

Popular posts from this blog

திருப்பம் -01

திருப்பம்-03

திருப்பம் -02