திருப்பம்-72
திருப்பம்-72
டிக்..டிக்..டிக்.. என்று ஓய்வின்றி உழைக்கும் கடிகாரத்தின் உபயத்தால் நாட்கள் அழகாய் சென்றன. மாலைநேரத் தேநீருக்காக சங்கமித்ராவும் வளவனும் புத்துணர்ச்சிப் பெற்று வர,
அறையைவிட்டுச் செல்லும் முன் தன்னவளை அமர்த்திய வளவன், “மித்ரா.. ஒரு ரோசனைடி” என்றான்.
“என்னதுங்க?” என்று மித்ரா கேட்க,
“நாம முன்ன ஆத்துல மீனுபிடிக்குலாம் ஏலமெடுப்போம் மித்து” என்று அவன் பேச்சை முடிக்கும் முன், “மீன் ஏலமா? இதெல்லாம் எப்போங்க?” என்று ஆர்வமாய் கேட்டாள்.
லேசான சிரிப்போடு, “முன்ன மித்ரா.. அஞ்சு வருஷமாச்சு. ஏலம் வேற ஆளுவ எடுத்தாவ. அப்பத கையில பைசா பொழங்கலைனு விட்டுப்புட்டம்” என்று கூற,
“ஓ.. இப்ப மறுபடி நீங்க எடுக்கப் போறீங்களா?” என்று கேட்டாள்.
“இல்லட்டி.. பண்ண மாதிரி வப்பமானு யோசிக்கேம்” என்று அவன் கூற,
“வாவ்.. சூப்பருங்க. அப்ப நம்ம வீட்டுக்கு இனி மீனெல்லாம் ஈசியா கிடைக்கும்” என்று ரசனையிலேயே ருசி பார்த்தபடி கூறினாள்.
அவள் தலையில் கொட்டியவன், “இது தொழிலுட்டி. நீயு திங்க வேணுமின்னா கேலேம். நான் வாங்கித்தாரேம்” என்று கூற,
“எங்க? உங்க அம்மா தான் மீனெல்லாம் எப்பவாதுதான் பண்ணுவோம். எனக்கு சேராது, இப்படி செஞ்சா மாமாக்குப் பிடிக்காது அப்படி இப்படினு செய்யவே மாட்டேங்குறாங்க. நானா எனக்கு மட்டுமாது வச்சுக்கலாம்னா அதுக்கும் வழியில்ல” என்று கூறினாள்.
“ஒனக்கு சாப்புடனும்மினா நீயு வாங்கி செஞ்சுகிடு இனிமே. ஆறும் ஏதும் சொன்னா, நாங்கேட்டேன்னு சொல்லிக்க” என்று கூறியவன், “சரி என்னைய சொல்ல வந்தத சொல்ல விடேம்டி” என்க,
“ஓகே ஓகே சொல்லுங்க” என்றாள்.
“பண்ண தொவங்க எடமெல்லாம் தேடிகிட்டுதேம் இருந்தேம். பைசா போடனும். ஒன்னால…” என்று முடிக்கும் முன்,
“ஓ பணமா? என்கிட்ட நீங்க உரிமையா பணம் கேட்டு நாயில்லைனு சொல்லுவேனா? நீங்க சம்பாதிக்குறதுல எனக்கு எப்படி உரிமையிருக்கோ, அதேபோலதான் என் சம்பாத்தியத்துல உங்களுக்கு உரிமையுண்டு” என்றவள் தனது கைப்பையிலிருந்து வங்கி கணக்கு அட்டையை அவன் கையில் வைத்தாள்.
“இதுல என் சேவிங்ஸ்ல இருக்குறது போதுமானு பார்த்துக்கோங்க” என்று அவள் கொடுக்க,
சின்ன சிரிப்போடு, “இதுல எம்புட்டு இருக்கோ அது போதும். ஓம்பேருலதேம் தொவங்கப்போறேம். அதேம் ஓங்கிட்ட காசு வாங்குதேம்” என்றான்.
அவனை அதிர்வாய் பார்த்தவள், “என் பேர்லயா? எதுக்குங்க?” என்று கேட்க,
“இந்தூட்டுல அம்புட்டு பேரு பேருலயும் ஐயா ஒவ்வொன்னு போட்டு வச்சாவ மித்ரா. வர்ற மருவளுங்களுக்கு என்னமாது நீங்க செய்யனும்யானு அடிக்கடி சொல்வாவ. விக்ரமுக்கு வயலு மொத்தமும் கொடுத்தாவ. அண்ணி கல்யாணத்துக்கு முன்னுக்கவும், கட்டிகிட்டு ரெண்டு மாசமும் ஐடில வேலை பாத்துச்சு தெரியும்ல? அண்ணி காசுலதேம் அண்ணே மில்லு கட்டிச்சு. எம்பொட்டாட்டி இந்தூட்டுல வடிச்சுக்கொட்ட மட்டுமில்ல, எனக்கும் சேத்துதேம் அவ பொழப்புக் கொடுக்கானு நாலு பேருட்ட நாம்பெருமையா பேசிகிடனும். அதுக்கும் மருவாதி கொறையக்கூடாதுனு சொல்லுவியாம். ஐயா எது வாங்கிபோட்டாலும் அம்மா பேருலதேம் வாங்குவாவ. அம்மா கையில காசெல்லாங்கிடையாது அப்பத. கொஞ்ச பேரு ஓசிக்கு புருஷம் வாங்கி போட்டதுதானனு சொல்லவுந்தேம், அந்த பேச்சுக்கூட ஒனக்கு வேணாமுடினு மைணிட்டயே காசு வாங்கினியான் விக்ரம். பத்து பைசாகூட போதும் நீயு கொடு. மித்ததுக்கு நாம்போட்டுகிடுதேம்னு சொல்லினியாம். தனத்துக்கு வீடு இருக்கு, திரி அக்கா பேருலதேம் பூந்தோட்டமிருந்துச்சு. திரி அக்காதேம் பாத்துகிட வழியில்லனு எனக்கே வித்துட்டாவ. ரப்பரு எம்பேருல எழுதினதாலதேம் தீபிக்கு மாத்தல. இல்லாங்கட்டிக்கு அங்கனதேம் போயிருக்கும். தாத்தா காடு ஒன்னு இருக்கு. அததேம் தீபியக்கா பேருல எழுதிவச்சாவ. ஒனக்கு என்னமாது போடனும்முனு ரோசிச்சுட்டே இருந்தேம். ஏங்கையில பூந்தோட்டம், ரப்பரு தோட்டம், தேங்கதேம் இருக்கு. தேங்க பறிச்சு விக்குறது, ரப்பரு அத்தானுக்கு போயிடும். பூவு வித்துபோவும். சென்டு பேக்டிரி ஆரமிப்போமானு ரோசிச்சேம். நம்ம சோலிக்கு சரிபட்டு வாராதுனு பட்டுச்சு. அதேம் பேசாம பண்ண போடுவம்னு இந்த முடிவுக்கு வந்தேம்” என்று நீளமாகப் பேசி முடித்தான்.
“ஏ ஹப்பா..” என்று அவள் மூச்சிழுத்துவிட,
அதில் சிரித்துக் கொண்டவன், “இன்னுமொன்னு நீயுங்கூட ஜூவாலஜி படிச்சவதேம். ஒனக்கும் பண்ணபோட்டா நாலு வேல எடுத்து செஞ்சுகிட தெரிஞ்சுருக்கும்ல?” என்று கேட்டான்.
“ம்ம்.. தெரியுங்க. நான் யூஜி, பீஜில இன்டர்ன்ஷிப் கூட ஃபிஷ் எக்ஸ்போர்ட் சைட்தான் போனேன். மீன் சாப்பிட பிடிக்குங்குற ஆர்வத்துல போனது. அங்க போனா பத்துநாள் ட்ரெயினிங் முடிஞ்சு போகும்போது ஃப்ரீயா மீன் தருவாங்க.. அங்கதான் சுறாலாம் தந்தாங்க.. என்னா டேஸ்டு தெரியுமா?” என்று நினைவுகளில் சஞ்சரித்தபடியே அவள் கேட்க,
“ஏட்டி.. நீயு பேசுறத பாத்தாக்க ஒன்னய வச்சுட்டு மீனு பண்ண தொவங்குறது செரமம் போலயோனு படுது இப்பம் எனக்கு. நீயே கொண்டாந்து பொறிச்சு சாப்பிட்டுடுவ போலயே” என்று கேட்டான்.
“ஹலோ மிஸ்டர் திருமால்.. வேலைனு வந்துட்டா நாங்க வெள்ளக்காரங்க. அதுலாம் கராரா இருப்போமாக்கும்” என்று கோபம் போல் அவள் கூற,
அவளை இடையோடு வளைத்துக் கொண்டவன், “இஞ்சார்ரா.. அப்புடிங்கலாக்கும்? அப்பனா நானுங்கூட கொஞ்ச வேல வச்சுருக்கேம். பாக்கீயளா?” என்று கேட்டான்.
அவன் பிடியில் அதிர்ந்து குளிர்ந்து சிவந்தவள், “அ..அதுலாம் இப்ப முடியாது” என்க
வாய்விட்டு சிரித்தபடி, “கோம்ப” என்று அவள் நெற்றி முட்டினான்.
“சரி.. வீட்டுல கலந்து பேசி முடிவாயிட்டு பொறவு கேக்கேம். அப்ப குடு” என்று அவன் கூற,
சரியென்று ஒப்புக்கொண்டாள்.
அன்று மாலையே சுயம்புலிங்கம் மற்றும் விக்ரமிடம் தனது எண்ணத்தை அவன் கூற,
“ரொம்ப நல்ல வெசயம்யா. நாங்கூட ரெண்டு மாசமானா கண்ணாலமாயி வருஷமே ஆவப்போவுது இன்னும் ஏம்யா ஏதும் நீயு செய்யலனு கேக்கத்தேம் இருந்தேம். நீயாவே முன்னுக்க வந்துட்ட. நல்லபடியா எடுத்து நடத்து” என்று சுயம்புலிங்கம் கூறியிருந்தார்.
“என்ன சங்கு? வீட்டுல மீனு வாங்கி செய்ய முடியலைனு பண்ணைக்கு இறங்கியாச்சு போல?” என்று கார்த்திகா கேலியாக் கேட்க,
“நான் நினைச்சேன் க்கா நீங்க இதைதான் கேட்பீங்கனு” என்று மித்ரா கூறினாள்.
“கேக்காமயா? நீதேம் மீனுமீனுனு தவிப்பியேடி மைணி” என்று தனலட்சுமி கூற,
“அடியே.. ஒன்னு வாடி போடினு கூப்பிடு. இல்ல அன்னினு கூப்பிடு. ஏன்டி மிக்ஸ் மேட்ச் பண்ற?” என்று சங்கமித்ரா கேட்டாள்.
“பேச்ச மாத்தாதத்தா” என்று கார்த்திகா கூற,
“சத்தியமா எனக்கு தெரியாதுக்கா. அவங்களாதான் வந்து சொன்னாங்க. ஆனா என்கிட்ட கேட்டிருந்தா நானும் மீன்பிடி பக்கம்தான் போயிருப்பேன். கடல்பக்கம் வாழ்ந்துட்டு மீன் சாப்பிட மாட்டேங்குறீங்களேக்கா நீங்கலாம்” என்று ஆயாசமாய் சங்கமித்ரா கேட்டாள்.
“நானு விருதுநகரு காரிடி. பொறிச்ச பொரட்டாவும் கோழி கொழம்புந்தேம் எங்களுக்குலாம்” என்று கார்த்திகா கூற,
“மீனு வாட திரியக்காவுக்கு ஆவாது மைணி. அதேம் இந்தூட்டுல சின்ன புள்ளையலருந்தே எங்களுக்கு மீனுலாம் பேருசா பழக்கல. எப்பமாது வெளிய சாப்பிட்டாதேம்” என்று தனம் கூறினாள்.
“அதுசரி.. எந்த மேட்டரெடுத்தாலும் திரி அண்ணிதான் எனக்கு வில்லன் வேலைப் பாக்குறாங்க” என்று சங்கமித்ரா அழுப்பாய் கூற,
“இதெல்லாம் ரெகார்டு போட்டு அக்காட்டக் காட்டனும்” என்று தனம் கூறினாள்.
“ஏட்டி… ரெகார்டுலாம் வேணாம். சங்கு இப்புடி பேசிச்சுனு நீயு நாலு வார்த்த சொன்னாபோதும். மைணி பாத்துகிடுவாவ” என்று கார்த்திகா கூற,
“அத செல்லுங்க அக்கா. ஆதாரமாம் ஆதாரம். என்னைத் திட்ட அதலாம் வேண்டவே வேணாம் அவங்களுக்கு” என்றாள்.
அதில் மற்ற இருவரும் சதங்கையொலியாய் சிரிக்க, இதமான மனநிலையோடே அன்றைய நாள் முடிந்தது. காலை புன்னகையே உருவாய் புறப்பட்டுச் சென்ற மனைவியை மாலை இப்படிக் காண இயலாது என்று தெரியாமல் அவளுக்கு முத்தங்களை வழங்கி அனுப்பிவைத்துவிட்டுத் தானும் தன் பணிக்குச் சென்றான் வளவன்.
காலை பூந்தோட்டம், மதியம் ரப்பர் தோட்டமென்று வேலை நெட்டித் தள்ள, மாலை தென்னந்தோட்டம் வந்தவன், வடிவேலுடன் மேற்பார்வையில் ஈடுபட்டான்.
“ஏம்லே வளவா.. இஞ்சாரேம்.. பூஞ்ச புடிக்கிடா தென்னையில. அடித்தண்டழுவ போலருக்கு?” என்று வடிவேல் ஒரு மரத்தைச் சுட்டிக் காட்டிக் கூற,
“அட ஆமால்லே” என்றவன் குறிப்பிட்ட அப்பகுதியில் உள்ள சில மரங்களின் தண்டுகளில் ஒருவகையான பூஞ்சைத் தாக்கியிருப்பதைக் கண்டான்.
“என்னம்லே இது.. நம்ம தென்னைக்கு வந்த சோதன” என்று வடிவேல் வருத்தமாய் கூற,
அவனோடு தோப்பு வீட்டிற்குச் சென்றவன், மருந்து கலவைகளை நீரில் கலந்து, “நாம பூச்சு மருந்து ஒன்னும் அடிக்கிலியேலே ஒன்னும் வாராதுனு கட்டியஞ்சொல்லுறதுக்கு. வுடு மருந்து அடிச்சுப் பாப்பம்” என்று கூறினான்.
வாலி நிறைய நீருடன் அதற்கான மருந்தை கலந்துகொண்டு சென்றவர்கள் மருந்துகலந்த நீரை மரத்தில் அள்ளித் தெளித்தனர்.
வடிவேல் தான் கொண்டு போன மருந்துகளைத் தெளித்து முடித்து வரவும், வளவனின் அலைபேசி ஒலி எழுப்ப, "யாருனு பாருலே" என்று கூறினான்.
அவன் கழட்டி வைத்திருந்த சட்டையில் கிடந்த அலைபேசியை எடுத்த வடிவேல், "ஏதோ நம்பரா இருக்குதுலே" என்க,
"எடுத்து ஸ்பீக்கரு போடு" என்றபடி மருந்து கலவையை அள்ளித் தெளித்தான்.
வடிவேலும் அழைப்பை ஏற்று, ஒலிபெருக்கியில் போட, "அ..அண்ணே.." என்று அழும் குரலில் ஒரு இளைஞனின் குரல் ஒலித்தது.
"யாரும்லே?" என்று வளவன் புருவம் சுருக்கி அழைக்க,
"அண்ணே.. நா.. நான் மணி. சங்கு அக்காகூட வேலபாக்கேம்" என்று கூறினான்.
சங்கமித்ரா பெயரை அவன் குறிப்பிட்டதுமே, அவனது அழும் குரலில் பதறிய வளவன், குவளையைக் கீழே போட்டு அலைபேசியைப் பட்டென வாங்கி, "அவோளுக்கு என்னம்லே?" என்க,
எதிரிருப்பவன் ஓவென்று அழுதான்.
"லே என்னனு சொல்லிட்டு அழுடா" என்று ஆத்திரத்தோடு வடிவேல் சப்தமிட, வளவன் இதயம் வேகமாய் படபடத்தது.
"அ..அக்காவுக்கு ஆக்ஸிடென்ட் ஆயிடுச்சுண்ணே" என்று அவன் கூற,
காதுகளில் இடி விழுந்ததைப் போல் உறைய வைத்தது, திருமாவளவனை.
அவன் உறை நிலையில் அலைபேசியை பிடுங்கிய வடிவேல், "எங்கம்லே இருக்கீய? ஆஸ்பத்ரி போயாச்சா? தங்கபுள்ளைக்கு என்னம்லே?" என்று கேட்க,
"ஆஸ்பிடல்லதாம் இருக்கேம் அண்ணே. கொண்டாந்து சேத்துருக்கியேம். எ.. எனக்கு பயமாருக்குண்ணே. அக்காக்கு நெறையா ரெத்தம் போயிடுச்சு. டாக்டருலாம் என்னென்னமோ பேசிக்காவ" என்று அழுதான்.
அவன் பேசுவதைக் கேட்கக் கேட்க, வளவன் உள்ளம் இன்னும் அதன் துடிப்பை அதிகரித்தது.
மருத்துவமனை விபரங்களைக் கேட்ட வடிவேல், "வளவா ஒன்னுமிருக்காதுலே. நீயு பதட்டப்படாதுவா" என்று அழைக்க,
அவன் கரத்தை இறுக்கமாய் பற்றியவன், "செத்துடுவேம்லே" என்றான்.
"லே கோம்பத்தனமா பேசாத. அதுலாம் ஒன்னுமாவாது. வா" என்று நண்பனை தேற்றியவன் அவனை அழைத்துக் கொண்டு விரைந்து மருத்துவமனைக்கு விரைந்தான்.
Comments
Post a Comment