திருப்பம்-73

 திருப்பம்-73



மணி கூறிய மருத்துவமனையை அடையவுமே வண்டி நிறுத்தும்வரையும் கூட பொறுக்காது வளவன் உள்ளே பாய்ந்து நுழைந்தான்.


"சிஸ்டர், சங்கமித்ரா?" என்று பதைபதைப்பாய் முகப்பில் அவன் விசாரிக்க,


அவரும் குறிப்புகளை பிரட்டி, "அந்த ஆக்ஸிடென்ட் கேஸ் தானே சார்?" என்று கேட்டு வழிகூறினார்.


ஓட்டமாய் அங்கே சென்றவன், அறுவகை சிகிச்சை பிரிவிலுள்ள அறை வாசலில் பயமும், கலக்கமுமாய் அமர்ந்துகொண்டிருந்த மணியைக் கண்டு, பதைபதைப்போடு சென்றான்.


வளவனை ஏற்கனவே புகைப்படங்களில் கண்டிருப்பதால் அடையாளம் கண்டுகொண்டு எழுந்த மணி, "அண்ணே.. அக்கா.." என்று அறையைக் கைகாட்ட, 


அவன் கைகாட்டிய அறைக் கதவின் வழியே பார்த்தவனுக்கு, ரத்தம் நிறைந்த பெண்ணவளின் தோற்றத்தினை சுத்தம் செய்து கட்டிட்டுக் கொண்டிருந்த மருத்துவர்களின் செயல் கண்ணில் பட்டது.


அந்த நொடியே, தன் செயல்பாடு நின்றுவிட்டதைப்போல் அவன் பொத்தென்று தரையில் அமர,


அங்கே ஓடிவந்து நண்பனைத் தாங்கிய வடிவேல், "வளவா.." என்றான்.


"எ..எம்மித்ராலே.." என்று கைகள் நடுநடுங்க அவன் அறையைக் காட்ட,


கண்கள் கலங்கத் தன் நண்பனைப் பார்த்தவன், "ஒன்னுமாவாதுலே" எனக் கூறி, மணியைப் பார்த்து, "என்னம்லே ஆச்சுது?" என்றான்.


"தெரில அண்ணே. அக்கா எங்கிட்ட பேசிட்டு வாரேம்னு சொல்லிட்டு கெளம்பிப் போச்சு. நானும் வேலைய முடிச்சுட்டு அடுத்த பத்து நிமிஷத்துல கெளம்பிட்டேம். எங்க ஆபிஸ்லருந்து கொஞ்சம் தூரம் தள்ளி ஒரே கூட்டம். என்னனு வந்துபாத்தா.." என்றவன் ரத்த வெள்ளத்திற்கு நடுவே கிடந்த சங்கமித்ராவின் தோற்றத்தை மீண்டும் காலப்பயணம் செய்து பார்த்து வந்ததைப் போல் நடுங்கினான்.


செவிலியரும் மருத்துவரும் வெளியே வர, வடிவேல் ஓடிச்சென்று, "டாக்டர்... சங்கு?" என்று பதைபதைப்போடு கேட்டான்.


"நீங்க?" என்று அவர் வினவ,


"நான் அது அண்ணே டாக்டர். அவேம் அவோ புருஷன்" என்க,


"வண்டி மோதினதுல தூக்கி எறியப்பட்டிருக்காங்க சார். சில இடங்கள்ல போன் (எலும்பு) கிராக் ஆயிருக்கு. தலைலயும் நல்ல அடி. ப்ளட் நிறைய லாஸ் ஆயிருக்கு. நல்லவேல ரேர் ப்ளட் க்ரூப் இல்ல. சீக்கிரம் ஆபரேஷன் பண்ணியே ஆகனும்" என்று கூறினார்.


விறைத்தபடி அமர்ந்திருக்கும் நண்பனைக் கண்கள் கலங்க பார்த்தவன், "ஆபரேஷனுக்கானதா பாருவ சார். எங்க பக்கமிருந்து செய்ய வேண்டியதெல்லாம் செய்யுதோம்" என்க,


"ஆக்ஸிடென்ட் கேஸ் சார். போலீஸ்லயும் கொஞ்சம் பேசிடுங்க. அவங்க நிலைமை கிரிடிகலா இருக்கப்போய்தான் எடுத்தோம்" என்று கூறிச் சென்றார்.


வளவனைத் தேற்றுவதைவிட தற்போது ஆகவேண்டியதைப் பார்ப்பதே முக்கியம் என்று புரிய, வடிவேல் விக்ரமனுக்கு அழைத்தான்.


அழைப்பு ஏற்கப்பட்டதும், கொஞ்சம் கூட தாமதிக்காமல், "லே.. நாஞ்சொல்லுற ஆஸ்பத்திரிக்கு வா. நம்ம சங்குக்கு ஆக்ஸிடென்ட் ஆவிபோச்சு. பேச நேரமில்ல. ஆக்ஸிடென்ட் கேஸ்னு தயங்குறாவ. ஸ்டேஷன் போயி பர்மிஷன் லெட்டரு எழுதிட்டு வா" என்றான்.


"என்னம்லே சொல்லுத?" என்று அதிர்ந்து எழுந்த விக்ரமனும் அவன் குரலின் அவசரம் புரிந்து விரைந்து செயலாற்றினான்.


சில நிமிடங்களில், வீட்டிற்கும் தகவல் தெரியப்படுத்தப்பட, வீட்டாட்கள் அனைவரும் அடித்துப் பிடித்து ஓடி வந்தனர்.


"லே வேலா.. என்னய்யா என்னென்னமோ சொல்லுத? என்னம்லே ஆச்சு சங்குக்கு?" என்று தீபிகா கேட்க,


"ஆரோ அடிச்சு வீசிருக்காவக்கா நம்மூட்டு புள்ளைய" என்று கண்ணீரும் வேதனையுமாய் கூறினான்.


"என்ன அண்ணே சொல்றாவ?" என்று கார்த்திகா பயம் கலந்த குரலில் கண்ணீரோடு கேட்க,


"ஆபரேஷன் பண்ணனுமுனு சொல்லுறாவத்தா. எலும்பெல்லாம் ஒடஞ்சுருக்குதாம்" என்றான்.


"ஆத்தே!" என்று நெஞ்சில் கைவைத்துக் கொண்ட தெய்வா மகனை நோக்க,


வந்தபோதிருந்த நிலையிலேயே அப்படியே வெறித்து அமர்ந்திருந்தான்.


மகாதேவனும் சிவபாதசேகரனும், அவனுக்கு இருபுறமும் சென்று மண்டியிட்டு, "லே வளவா.. ஒன்னுமாவாதுலே அவளுக்கு" என்க,


அவன் பதில் உரைத்தானில்லை.


"அய்யோ எம்மவேன இப்புடி பாக்க முடியிலயே.." என்று தெய்வா சப்தமிட்டு அழ,


அழுகையுடன் திரிபுரா அவரைத் தாங்கிக் கொண்டாள்.


தீபிகாவும் கார்த்திகாவும் ஒருபக்கம் பயமும் கண்ணீருமாய் நிற்க, தனலட்சுமியும் சூழலில் மிரண்டு அழும் குழந்தையை நெஞ்சோடு அணைத்துக் கொண்டு அழுதபடி அவ்விடம் விட்டுச் சென்றாள்.


அங்கு விரைந்தோடி வந்த விக்ரமன், தன் குடும்பத்தைக் கண்டு பெருமூச்சு விட்டு, "எல்லாம் ஆச்சுது. ஆபரேஷனாரமிச்சுடுவாவ. ஒன்னுமாவாது. யாரும் அச்சப்படாதிருங்க" என்று கூற


"எய்யா விக்ரமா.. என்னய்யா சொல்லுறாவ.. எனக்கு ஒன்னுமே ஏறலயே.." என்று சுயம்புலிங்கம் கண்ணீரோடு கேட்டார்.


"ஒன்னுமாவாது ஐயா.. வெசனபடாதிருங்க" என்று அவன் கூற,


"என்ன சத்தம் இங்க? இது ஆஸ்பிடல். இத்தன பேர்லாம் இருக்கக்கூடாது. நாலுபேர தவிர எல்லாரும் கிளம்புங்க" என்று செவிலி வந்து சப்தமிட்டார்.


மகா, வளவன், விக்ரம் மற்றும் வடிவேல் இருப்பதாய் கூற,


"எய்யா பொம்பளைங்க ஆரும்னா இருக்கட்டும்லே" என்று சுயம்புலிங்கம் கூறினார்.


"ஆபரேஷன் முடியவே ரொம்ப நேரமாவுமாம்யா. புள்ள முளிக்க நாள மதியங்கூட ஆவும். எல்லாத்தையும் கூட்டிகிட்டு போங்க. ஒன்னுமாவாது" என்று ஆறுதல் கூறி எப்படியோ விக்ரமன் அனைவரையும் அனுப்பிவைத்துவிட்டுத் தன் இரட்டையனிடம் வந்தான்.


எதையும் உணராத நிலையில் விறைத்திருக்கும் வளவனை விக்ரமன் இறுக அணைத்துக் கொள்ள, இயற்கை ஊற்றாய் நீர் ஊர்ந்துவரும் கிணற்றைப்போல், கண்ணீர் ஊற்று சுரந்து, அவன் கண்களிலிருந்து பொழிந்து, மெல்ல விசும்பல் பிறந்து, பெரும் கேவலாகி, வெடித்துச் சிதறும் அழுகையாய் உருமாறியது.


"அ..அவோள இ..இப்புடி பா..பாக்க முடியிலயேலே.. தா..தாங்க மாட்டாளே.. அ..அவளுக்கு எ..என்னமாதுனா செ..செத்துடுவேம்லே.." என்று தன் நெற்றியில் அறைந்துக் கொண்டு அழுதான்.


வளவன் கோபத்தைத் தான் அவ்வீட்டார் பார்த்திருக்கின்றனரே தவிர, அவன் கண்ணீரையில்லை.. அதிலும் இந்த வெடித்துச் சிதறும் கண்ணீரை நிச்சயமில்லை…


“லே.. ஒன்னுமாவாதுடா” என்று தன் உடன் பிறந்தவனை இறுக்கமாய் அணைத்துக் கொண்ட விக்ரமன் கண்களிலிருந்தும் கண்ணீர் வழிய,


“ப..பயமாருக்குலே..” என்று கதறலாய் உரைத்தான்.


“ஏவேய்.. அழுவாம இருடா. ஒன்னுமாவாது‌. டாக்கருவ உசுருக்கு பாதகமுனு ஒன்னுஞ் சொல்லலியே. நீயா ஏம்லே வெசனப்படுதவ?” என்று மகா அவனைத் தேற்ற முயற்சிக்க, 


அவன் கதறல் நின்ற பாடில்லை.


“இம்புட்டுக்கு இவேம் அழுவியானாலே?” என்று மகாவே வருத்தமும் ஆச்சரியமுமாய் கேட்க,


“அந்த புள்ளைய கட்டிக்க முடியாம போனதுக்கே அப்புடி தவிச்சாம் அண்ணே. இ..இப்பத” என்று வடிவேல் கண்ணீர் குரலடைக்கக் கூறினான்.


உடன் பிறந்தவனின் சோகத்தை அவன் உடனே பிறந்த விக்ரமால் உணர இயன்றது. “ஒன்னுமாவாதுலே.. நீயி பயப்படாதிரு. ஒன்னுமாவாது” என்பதை மட்டும் தாரக மந்திரமாய் கூறியவன், அவனை அணைத்து சிறுபிள்ளைக்குத் தட்டிக் கொடுப்பதைப் போல் தட்டிக் கொடுத்து ஆற்றுப்படுத்த முயன்றான்.


வெடித்தழும் கண்ணீர் ஓய்ந்து அப்படியே வெறித்த நிலையில் விக்ரமன் மீதே அவன் சாய்ந்து அமர்ந்திட, “ஏலே என்னமாது குடிக்காவது வாங்கியாலே அவேனுக்கு” என்று மகா அனுப்பினார்.


வடிவேலும் விரைந்து சென்று பழச்சாறை வாங்கிவர, அதை வாங்கிய விக்ரமன், “அவோ முழிச்சு வாரயில ஒனக்கு தெம்பிருந்தாதேம் பாத்துகிட முடியும். என்னமாது பொழம்பாம மருவாதிய இத குடிலே” என்று அதட்டலாய் கூற முயன்றும் அதில் வருத்தம் படிந்தே வந்தது.


மறுத்துப்பேசுமளவுகூட திராணியில்லை வளவனிடம். அவளுக்கு விபத்து என்று அவளை அக்கோலத்தில் பார்த்த நொடியே தன் திடம் மொத்தமும் இழந்துவிட்டான். அந்த நிலையில் கொடுக்கப்பட்ட பாணத்தை மறுக்காது அவன் பருகிட, இரவு ஆண்கள் யாரும் துளி தூக்கமில்லாது தவித்துக் கொண்டிருந்தனர்.


நள்ளிரவைக் கடந்து இரண்டு மணிநேரம் ஆன பின்புதான், மருத்துவர் அவர்களை அழைத்தார்.


விக்ரம், வடிவேல் மற்றும் மகா எழுந்திட, வளவன் அப்படியே அமர்ந்திருந்தான்.


மூவரும் அவனைத் திரும்பிப் பார்க்க, “அவளுக்கு ஒன்னுமில்லதான? எ..எதும்..எதும் தப்பா சொல்லிட மாட்டாவளே?” என்று கரகரத்தக் குரலில் திக்கித் திணறிக் கேட்டான்.


“அதெல்லாம் ஒன்னுமிருக்காதுலே.. வா” என்று அவனைத் தாங்கிக் கொண்ட மகாதேவன் உள்ளே செல்ல,


மருத்துவர் அவர்களை அமரும்படிக் கூறினார்.


மகாவும் வளவனும் அமர, வடிவேலும் விக்ரமும் பின்னே நின்றுகொண்டனர்.


கண்கள் சிவந்து விழிநீர் தேங்க மருத்துவரைப் பார்த்த வளவன், “அவ உசுருக்கு மட்டும் என்னமாதுனு சொல்லிடாதீய டாக்டர்” என்க,


“பயப்படாதீங்க சார். அவங்க உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை” என்று அவன் மனதில் இதம் விதைத்துப் பாசனமிட்டார்.


தன் நெஞ்சில் கைவைத்துக் கொண்டு சாய்ந்தவன், பிடித்து வைத்த பெருமூச்சை வெளியிட, “பட் அவங்க நிலைமையைப் பற்றி கொஞ்சம் சொல்லனும்” என்றபடி மற்றவர்களைப் பார்த்தார்.


“அவேம்ட தனியா ஏதும் பேசனுமா டாக்டர்?” என்று மகா வினவ,


“இல்ல சார். அப்படியெந்த பிரச்சினையும் இல்லை” என்றவர், அவளது மருத்துவ விபரம் சார்ந்து கோப்பை எடுத்து வைத்து, “அவங்க ரெண்டு கைலயும் பலத்த அடி ஏற்பட்டிருக்கு. வலது கைல எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கு. இடது கால்லயும் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கு. தலையில் அடி ஏற்பட்டு அதிக ரத்தப்போக்கானதுல ரத்தம் எதும் உறைஞ்சிருக்குமோனு பயந்தோம். லக்கிலி அப்படி எதுவும் நடக்கலை. ஆனா..” என்று இழுக்கவும்,


“ஆனா? ஆனா என்ன டாக்டர்?” என்று விக்ரம் படபடப்பாய் கேட்க,


“அவங்க விழுந்து இடத்தில் இரும்பு கம்பி, கட்டை இப்படி எதும் ஆப்ஜக்ட் இருந்துருக்கும்னு நினைக்குறேன். அவங்க தொண்டைப் பகுதியில் நல்லா அடிச்சிருக்கு. அதுல அவங்க வோகல் கார்ட் சேதமடைஞ்சிருக்கு” என்றார்.


“அதால?” என்று வடிவேல் படபடப்பாய் கேட்க,


“அவங்களால பேச முடியாது” என்று பெரும் இடியை அவர்கள் தலையில் இறக்கினார்.


ஆடவர்கள் மூவர் மருத்துவரை அதிர்ந்து பார்க்க, “அவ உசுருக்கு?” என்று வளவன் கேட்டான்.


“உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை சார்” என்று கூறியவர் அடுத்து பேசும் முன், “அவள எப்ப பாக்கலாம்?” என்று கேட்டான்.


“இப்பதான் ஆபரேஷன் முடிஞ்சுருக்கு சார். காலைல அலோவ் பண்ணுவோம்” என்று அவர் கூற,


கண்களை அழுத்தமாய் மூடிக் கொண்டு தலையைத் தாங்கினான்.


“டாக்டர்.. கொ..கொரலு.. இனி..” என்று வடிவேல் தடுமாற,


“ஸ்பீச் தெரபி எடுத்தா குணமாகும். வாய்ப்புகள் ரொம்பவே அதிகம் தான். ஆனா கண்டிப்பா இப்ப முடியாது. அவங்களுக்கு பட்டிருக்கும் அடிலருந்து மீண்டு, அவங்களோட மெடிகேஷன்ஸ் முடியவே ஒரு வருஷமாது ஆகும். அவங்க சாதாரணமா எழுந்து நடக்கவே மூனு நாலு மாசம் மேல ஆயிடும். அதுலருந்து அவங்க முழுசா ரெகவர் ஆயி வர்றதுக்கு பத்துலருந்து பன்னிரண்டு மாசம் வரை தாராளமா தேவைப்படும். அது முடிஞ்சு அவங்க தெரபிக்கு ஃபிஸிகலி ரெடியானா தான் மேற்கொள்ள முடியும். ஆனா கண்டிப்பா பேச்சு மீண்டுவர்றதுக்கான வாய்ப்புகள் அதிகம் தான்” என்று கூறினார்.


சந்தோஷம் கொள்வதா துக்கப்படுவதா? என்று புரியாத நிலையில் மற்ற முவரும் தவிக்க,


“ஒரு வருஷத்துக்குத் தானே டாக்டர்? அவ பேசிதேம் புரியனுமுனு எனக்கு இல்ல. அவள நான் ஒருக்கா பாக்கனும். அதுக்கு மட்டும் என்னமாது பண்ணுங்களேம்” என்று மன்றாடலாய் அவன் கேட்க,


அவன் வருத்தம் கண்டு மனம் இறங்கியவர், “டிஸ்டர்ப் பண்ணாம தள்ளி நின்னு பாத்துட்டு வாங்க சார்” என்றார்.


அதுவே போதும் என்பதைப் போல் எழுந்தவன் வெளியேற, அவனை செவிலி ஒருவர் உள்ளே அழைத்துச் சென்றார்.


முடி மழிக்கப்பட்டு அறுவை சிகிச்சை நடந்தேறியதன் பலனாய் தலையில் கட்டிடப் பட்டிருக்க, முகத்திலும் கழுத்தில் சிராய்ப்புகளும் காயங்களும் குடிபுகுந்திருந்தன.


வலது கையில் எலும்பு முறிவுக்கான சிகிச்சை முடிந்து கட்டிடப் பட்டிருக்க, இடது கையில் ஏற்பட்ட பெரிய பெரிய காயங்களுக்கும் தையிலிடப்பட்டு கட்டிடப் பட்டிருந்தது. இடது காலிலும் எலும்பு முறிவுக்கான சிகிச்சை முடிந்து கட்டிடப் பட்டிருக்க, பலவகையான மருத்துவ உபகரணங்களுக்கு நடுவில் வென்னீர் ஊற்றப்பட்ட அல்லிக்கொடிபோல் படுத்துக் கிடந்தாள்.


அவள் கரத்தைப் பற்றிக் கொண்டு அழுதிட வேண்டும் என்று வந்த எண்ணத்தை அவள் நிலை குறித்து எண்ணிக் கட்டுப்படுத்தியவனுக்கு, அவனையும் மீறி கேவல் வெளியே எட்டிப் பார்த்தது.


'முழிச்சு வந்து என்னைய பார்வையாலயே நூறு கேப்பியேடி.. ஒனக்கு எப்படிடி சமாதானஞ் சொல்லப்போறேம்?’ என்று மனதோடு கேட்டுக் கொண்டவன், அதற்குமேல் தாக்குப்பிடிக்க இயலாமல் வெளியே சென்றுவிட்டான்.



Comments

Popular posts from this blog

திருப்பம் -01

திருப்பம்-03

திருப்பம் -02