திருப்பம்-74
திருப்பம்-74
அன்றைய பொழுது சோகத்தின் சுவடோடு கடந்து காலையும் புலர, கார்த்திகா, தீபிகா மற்றும் சிவபாதசேகரன் ஆகிய மூவரும் மருத்துவமனைக்கு வந்தனர்.
ஆண்கள் அனைவரும் இரவெல்லாம் விழித்திருந்ததை அவர்கள் விழிகளே தெளிந்த நீரில் முகம் பார்ப்பதைப் போல் தெளிவாய் காட்சிப்படுத்தியது.
“டாக்டரு என்ன சொல்றாவண்ணே?” என்று கார்த்திகா கேட்க,
வளவனைப் பார்த்த வடிவேல், “உசுருக்கு ஒன்னுமில்லத்தா” என்று முடித்துக் கொண்டான்.
மனைவியை சற்றே தள்ளி அழைத்துச் சென்ற மகா, “அந்த புள்ளைக்கு கையு காலுயெல்லாம் எலும்பு முறிஞ்சுகெடக்கு தீபு” என்க,
“அய்யோ என்னங்க சொல்றீய?” என்று தீபிகா பதறினாள்.
தூரத்திலிருந்து அவள் முகம் பார்த்தே கார்த்திகாவும் வர, சிவபாதசேகரன் விக்ரமை அழைத்துப் பேசினான்.
“ஆபரேஷனெல்லாம் சுளுவா முடிஞ்சு போச்சுத்தா. ஆனா தேரி வார ஆறு மாசமாது ஆவும் போலருக்கு” என்ற மகா, சிறு தயக்கத்திற்குப் பின், “அது தொண்டையில பலமா அடிபட்டிருக்காம்” என்க,
“அய்யோ” என்று கார்த்திகா வாயில் கைவைத்து அதிர்ந்தாள்.
“அதால பேச முடியாதாம்” என்று மகா கூற,
“அய்யயோ.. என்னங்க சொல்றீய?” என்று தீபிகா மேலும் அதிர்ந்தாள்.
“தொண்ட நரம்பெல்லாம் அடியாபோச்சாம். பேச்சு வராதுனு சொல்றாவ. அதுக்கு தனியா ட்ரீட்மென்டு பாத்தா கண்டிப்பா பேச்ச கொண்டு வரலாம். ஆனா ஒரு வருஷங்கழிச்சுதேம் அத தொவங்கமுடியுமினு சொல்றாவ” என்று மகா கூற,
பெண்கள் இருவரும் அதிர்விலிருந்து மீள இயலாது தவித்தனர்.
“இஞ்சாருங்க.. இந்த நேரத்துலதேம் அந்த புள்ளைக்கு நாம தொனையாருக்கனும். இன்னும் வளவேன் அவோ வீட்டுக்குக்கூட சொல்லல. நாலு பேரு அவ முன்னுக்க அழுது வச்சா அது இன்னுந் திராணியில்லாது போவும்ல? வருத்தந்தேம். ஆருக்கில்ல? கட்டிக்கிட்ட அவேனும் துடிச்சுகிட்டு இருப்பியாம். நம்ம வருத்தத்த அழுதுபோட்டுக் காட்ட இது நேரமில்ல. கண்ண தொடச்சுபோட்டு அவியளுக்கு ஆறுதலா போயி வேலைய பாப்பம்” என்று மகா கூற,
பெண்கள் இருவரும் கலக்கத்துடன் கண்ணீர் துடைத்துவிட்டு வளவனிடம் சென்றனர்.
வளவன் தோளில் கரம் வைத்தத் தீபிகா, “ஏம்லே..” என்க,
மெல்ல அவளைத் திரும்பிப் பார்த்தான்.
“லேய்.. வீட்டுக்குப் போயி குளிச்சுபோட்டு ஒருவா என்னமாது மென்னுட்டு வாலே. நானும் அத்தானும் கார்த்தியும் இருக்கோம்” என்று தீபிகா கூற,
“அக்கா.. நீயி எனக்காவதேம் சொல்லுற. சரிதேம்.. ஆனா அவ கண்ணு முழிக்கையில நாயிங்க இருக்கனுமுக்கா. சத்தியமா நவரமுடியாது. சங்கடபடுத்தாதக்கா. அவோளுக்கு நாந்தேம் தேவை.. நாம்மட்டுந்தேம் தேவை” என்று கலங்கத்துடித்தக் கண்களைக் கட்டுப்படுத்திக் கொண்டு கூறினான்.
மலுக்கென்று நீர் கோர்த்துக் கொள்ள, அதை கட்டுப்படுத்திய கார்த்திகா, “ஏங்க.. நீங்க எல்லாம் போயி குளிச்சுட்டு கொழுந்தருக்கு துணியும் சாப்பாடுங் கொண்டுவாங்க” என்று விக்ரமிடம் கூற,
சரியென்ற தலையசைப்போடு மற்றவர்களையும் அழைத்துக் கொண்டு விக்ரம் சென்றான்.
அங்குள்ள கழிப்பறைக்குச் சென்று முகம் கழுவி தன்னைத் திருத்திக் கொண்டு வந்த வளவன், பெருமூச்சு ஒன்றை இழுத்துவிட்டு அவிநாஷுக்கு அழைத்தான்.
இரவு அவனது செல்ல சீமாட்டியின் உபயத்தால் உறக்கம் துறந்து இருந்தவன், அப்போது சில நிமிடங்கள் முன்புதான் கண்ணயர்ந்து இருந்தான். அதனை தடைசெய்திடும் வகையில் வளவன் அழைக்க, அரை தூக்கத்தோடு எடுத்து விழிகளை தேய்த்துக் கொண்டு அழைப்பை ஏற்றான்.
“சொல்லுடா.. என்ன காலையிலயே” என்று அவிநாஷ் கேட்க,
“தூங்கிட்டிருந்தீயளா அண்ணே?” என்றான்.
அந்த உறக்க நிலையிலும் அவன் குரல் வேறுபாட்டை உணர்ந்துகொண்ட அவிநாஷ், “ஏன்டா குரல் ஒருமாதிரி இருக்கு? எதும் பிரச்சினையா?” என்று கேட்க,
இதழ் கடித்துத் தன் கண்ணீர் அடக்கினான்.
“வளவா?” என்று அவிநாஷ் படபடப்பை உள்ளடக்கியக் குரலில் அழைக்க,
“ஒ..ஒங்க பாப்பா என்னைய தவிக்க விட்டுட்டு ஆஸ்பத்ரில படுத்து கெடக்கா” என்று உடைந்துபோன குரலில் கூறினான்.
அதில் பதறி எழுந்த அவிநாஷ், “வளவா.. என்ன சொல்ற? பாப்பாக்கு என்னாச்சு?” என்று பதற,
“ஆ..ஆக்ஸிடென்ட் அண்ணே” என்றான்.
மேலும் கேட்கத் துடித்தக் கேள்விகளை அவனது அழுகையொலியில் அடக்கிய அவிநாஷ், “எங்க இருக்கீங்க? அத்தை மாமாக்கு தெரியுமா?” என்று கேட்க,
“இ..இன்னும் சொல்லல அண்ணே. நீங்கக் கூட்டி வாரீயளா?” என்று சிறுபிள்ளை போல் கெஞ்சுதலாய் கேட்டான்.
“நான் வரேன் நீ வையு” என்று என்ற அவிநாஷுக்கு மூச்சே அடைப்பதைப் போலானது.
“என்னங்க? என்னாச்சு? ஏன் ஒருமாதிரியா இருக்கீங்க?” என்று கேட்டபடி சங்கீதா உள் நுழைய, மனைவியை அணைத்துக் கொண்டவன், “எ..எம்புள்ளைக்கு என்னனு தெரியலியேடி” என்று நடுநடுங்கும் குரலில் கூறினான்.
அவன் விழியிலிருந்து கொதித்திறங்கும் கண்ணீர் அவள் கழுத்தைச் சுட, “என்னாச்சுங்க? யாருக்கு என்ன? ச..சங்கு..சங்குக்கு என்னமுமா?” என்று கேட்க,
அவளை விட்டு விலகி தன் கண்ணீரை அழுந்தத் துடைத்தவன், “ஆக்ஸிடென்ட் ஆயிடுச்சுனு சொல்றான் கீதா” என்று கூறினான்.
“ஆக்ஸிடென்டா?” என்று அதிர்ந்தவளுக்கு வார்த்தையே வரவில்லை.
“என்னனு தெரியல” என்றவனுக்கு வளவனின் கண்ணீர் குரல் நெஞ்சை அறுக்க, “நான் அத்தை மாமாவ கூட்டிட்டுப் போறேன். நீ இரு. அங்க போயிட்டு என்னனு சொல்றேன்” என்று கூறினான்.
“இல்லங்க நானும் வரேன்” என்று அவள் கூற,
“சொன்னா புரிஞ்சுக்கோ கீதா. பாப்பா முழிச்சுட்டா அங்க சமாளிக்க முடியாது. உன்னை கண்டிப்பா கூட்டிட்டுப் போறேன். ஆனா இப்ப வேணாம்” என்று அவளை எப்படியோ சமாதானம் செய்தவன், அத்தை மாமாவையும் அழைத்துக் கொண்டு மருத்துவமனை வந்து சேர்ந்தான்.
யாருக்கு என்னவோ? என்று பதறிக் கொண்டே வந்த பெரியவர்கள் இருவரும், இருக்கையில் விட்டத்தை வெறித்தபடி அமர்ந்திருக்கும் வளவனையும் அவனுக்கு அருகே சங்கமித்ராவுக்காக வேண்டிக்கொண்டு அமர்ந்திருத்த மற்றவர்களையும் கண்ட நொடி திகைத்துப் போயினர்.
“மா..மாப்பிள்ளை..” என்று சச்சிதானந்தம் தன் மூத்த மாப்பிள்ளையை அதிர்வாய் நோக்க, வேதனையோடு கண்கள் மூடித் திறந்து ஆமென்று தலையசைத்தான்.
“அய்யோ எம்பொண்ணு” என்று அதிர்ந்த தாட்சாயணியின் குரலில் கார்த்திகா, தீபிகா மற்றும் சிவபாதசேகரன் திரும்பிப் பார்க்க,
“அத்தை.. ஒன்னுமில்ல” என்று அவரை ஆற்றுப்படுத்த முயற்சித்தான்.
அதற்குள் அவர்கள் மூவரும் இவர்களை நெருங்கிட, “அம்மாடி.. எம்பொண்ணுக்கு என்னடா ஆச்சு?” என்று கார்த்திகா கையைப் பிடித்துக் கொண்டு தாட்சாயணி அழுதார்.
“அ..அம்மா.. ஒன்னுமில்ல பதறாதீய” என்றவளுக்கும் கண்ணீர் வந்துவிட,
சச்சிதானந்தம் அங்கு வெறித்தபடியே அமர்ந்திருக்கும் மருமகனைக் கண்டு தன் இதயத்துடிப்பு பயத்தில் அதிவேகம் காட்டுவதாய் உணர்ந்தார்.
“அத்தான்.. என்னாச்சு?” என்று பயத்தை உள்ளடக்கிய குரலில் அவிநாஷ் கேட்க,
“புள்ள வண்டில வாரச்ச எவனோ அடிச்சுபோட்டு போயிருக்கியாம்லே. அடிச்ச வேவத்துக்கு கை காலுயெல்லாம் எலும்பு முறிஞ்சு போச்சாம்” என்று வருத்தமாய் கூறினான்.
“அய்யயோ” என்று தாட்சாயணி பதறியழ,
“உசுருக்கு ஒன்னுமில்லம்மா. பயப்படாதீய” என்று கூறிய சிவபாதசேகரன், அவள் குரல் போனதை எப்படிக் கூற என்று புரியாமல் தவித்தான்.
“அத்தே.. ஆபரேஷனெல்லாம் நேத்தே சுளுவா முடிஞ்சு போச்சு. இப்பப் பயப்பட ஒன்னுமில்ல. அச்சபடாதிருவ. புள்ள கண்ணு முழிக்கத்தேம் எல்லாங்காத்து கெடக்கோம்” என்று தீபிகா ஆறுதல் கூற,
“வே..வேற ஒன்னுமில்லயா?” என்று பயத்தோடு சச்சிதானந்தம் சிவபாதசேகரனின் தயக்கம் கண்டு கேட்டார்.
ஒரு பெருமூச்சை விட்டவன், “புள்ள தொண்டியில அடிபட்டதுல கொரலு போச்சு ஐயா” என்க,
அதிர்ந்துபோன தாட்சாயணி மயங்கி சரிந்தார்.
“அய்யோ அம்மா”
“அத்தே” என்று அவர்கள் அவரைத் தாங்கிப் பிடிக்க, சச்சிதானந்தம் உறைநிலையில் அதிர்ந்து நின்றார்.
“ஐயா.. பதறாதீய. கொரலு போச்சுனா ஒரேடியாலாம் போவல. அதுக்கும் வைத்தியம் பாத்து கொண்டாரலாமுனு சொல்லிருக்காவ. பயப்பட ஒன்னுமில்ல. இந்த நேரத்துல நாமதேம் அவோளுக்குத் துணையாருக்கனும். அழுவாதீய ஐயா” என்று கார்த்திகா அவரை சமாதானம் செய்ய,
அவிநாஷ் மெல்ல வளவனை நெருங்கினான்.
அவர்கள் வந்தது, நின்றது, பேசுவதென்று எல்லாம் காதில் விழுந்தது. ஆனால் அவன் பார்வை கூட அவள் படுத்திருக்கும் அறை வாசலை விட்டு இம்மியளவு நகரவில்லை.
காய்ந்து போன விழிகளை எரித்துக் கொண்டு அவ்வப்போது சில துளிகள் வந்து சென்ற வண்ணமாய் இருக்க, அவன் இதழ்களில் மெல்லிய அசைவு. அவள் பெயரைத்தான் நிச்சயம் அவன் உச்சரித்துக் கொண்டிருக்க வேண்டும் என்பது அவனைப் பார்க்கும்போதே தெரிந்தது.
அவன் அருகே வந்த அவிநாஷ் அவன் தோளை அழுத்தமாய் பற்றிக் கொள்ள,
குபுகுபுவென்று வளவன் கண்களிலிருந்து நீர் வழிந்தது.
அவனை இழுத்து இறுக்கமாய் அணைத்துக் கொண்ட அவிநாஷ், “ஒன்னுமில்லடா” என்க,
“தவிப்பாளே அண்ணே.. அவளுக்கு என்னனு பதிலு சொல்லுவேம்?” என்று கதறினான்.
“உன் மித்ராடா அவ. நீ சொன்னா கேட்டுக்க மாட்டாளா?” என்று அவிநாஷ் கலக்கமாய் கூற,
“கண்ணு முழிடினு இம்புட்டு நேரமா சொல்லுதேம்.. கேக்க மாட்டிக்காளே?” என்று என்றான்.
அவன் குரலில் வலி கூடிக்கொண்டே போக, தன் இறுக்கம் அதிகரித்த அவிநாஷ், “வந்துடுவாடா” என்று கூறினான்.
“வரனும்ணே.. வந்துதேம் ஆவனும்.. திராணியில்லாம கெடக்கேம் அண்ணே.. ஜீவன் செத்து போவும்” என்று கூறி விலகியவன் தன் கண்ணீரை அழுத்தமாய் துடைத்துக் கொண்டு அவள் அறை வாசலை வெறிக்கத் துவங்கினான்.
நேரம் கூர் பாறையில் ஊர்ந்து செல்லும் நத்தையின் உணர்வை கொடுத்து வளவனைத் துடிக்க வைக்க, அவன் துடிப்பையும், உள்ளே துடிக்க வைத்துக் கொண்டிருப்பவள் விழிப்பின் எதிர்ப்பார்ப்பையும் கொண்டு அனைவரும் தவித்து அமர்ந்திருக்க,
அவளறையிலிருந்து வெளியே ஓடிய செவிலி மருத்துவரை அழைத்து வந்தாள்.
மருத்துவர் உள்ளே செல்லவும் அனைவரும் பதட்டமாக, சில நிமிடங்கள் கழித்து வெளியே வந்தவர், “அவங்க கண் விழிச்சுட்டாங்க. எந்த பிரச்சனையும் இல்லை. கூட்டமா போய் பார்த்துட்டு வராம ஒவ்வொருத்தரா போயிட்டு வாங்க. அவங்கள ஸ்டிரெயின் பண்ண வைக்க வேண்டாம். அன்ட் அவங்களால பேச முடியாதுங்குறது இப்ப வரை அவங்களுக்குத் தெரியாது. பேச ட்ரை பண்ண மாட்டாங்க. அப்படியே பண்ணாலும் பானிக் ஆகாம பார்த்துக்கோங்க. நர்ஸ்.. நீங்க கூடவே இருங்க” என்று கூறிவிட்டுச் சென்றார்.
அனைவரும் வளவனை நோக்க, அவன் நர்ஸை இறைஞ்சுதலாய் பார்த்தான்.
அவன் பார்வைக்கான அர்த்தம் புரியவே “நான் இங்கயே இருக்கேன் சார். நீங்க பாத்துட்டு வாங்க. எதும்னா கூப்பிடுங்க” என்று செவிலியர் கூற,
நன்றியான பார்வையுடன் எழுந்தான்.
கால்கள் அதன் நடுக்கத்தை வெளிப்படையாய் காட்டிக் கொடுக்க, மூச்சை இழுத்துவிட்டு, தன் முகத்தை அழுத்தமாய் துடைத்துக் கொண்டவன், உள்ளே செல்ல,
கட்டிலில் ஓய்ந்துபோய் படுத்திருந்தாள் பெண்.
கண்களை ஒரு முழு நிமிடம் கூட திறந்து வைக்க முடியாதபடி மயக்கமாய் உணர்ந்தவள், அவளவன் வாசம் உணர்ந்து சட்டென விழி உயர்த்திப் பார்த்தாள்.
அவளுக்கும் தனக்குமான இடைவெளியை அணு அணுவாய் உணர்ந்து குறைத்தவன், அவள் அருகே வந்து நின்றான்.
இரு விழிகளும் ஒன்றை ஒன்று தழுவிக் கொண்டு அத்தனை மணி நேரமும் கொண்ட வேதனையைப் பரிமாறிக் கொண்டிருந்தது.
ஆழ்ந்த அமைதியை கலைக்கும் தலையாய பணியை இருவரின் மூச்சுக்காற்று மட்டுமே மேற்கொண்டிருக்க, அப்படியே அவளருகே மண்டியிட்டு அமர்ந்தான்.
அவள் விழியோரத்திலிருந்து நீர் மணி உருண்டோடிக் காதுமடல்களைச் சேர, நடுநடுங்கும் கரத்தில் தவிப்பாய் அதனை மிக மிக மெல்லமாய் துடைத்துவிட்டான்.
அவள் பேச முயற்சித்து வாய் திறக்க முயல, தன் விரலை இதழில் வைத்துத் தடுத்தவன், இடவலமாய் தலையசைத்தான்.
நொடிகள் நிமிடங்களாய் மாறிக் கடந்தோடின… இருவரும் ஒரு வார்த்தைக் கூட பேசிக் கொள்ளவில்லை என்பதைவிட, அதற்கானத் தேவை அவர்களுக்கு இருக்கவில்லை என்பதே சரி…
அவள் தலையில் கைவைக்கப் போனவன் அதிலிருந்த கட்டைக் கண்டான். கரம் மெல்ல குனிந்து கைபற்றப் போக, அங்கும் கட்டிடப் பட்டிருந்தது.
அவளை உச்சியிலிருந்து பாதம் வரை உள்வாங்கியவன் அவளைப் பார்த்து அழுத்தமாய் கண்மூடித் திறக்க, அவளும் சமாதானமாய் விழி மூடித் திறந்தாள்.
இன்னும் ஒரு வருடம் தொடரவிருக்கும் மௌன மொழிகளுக்கு இருவருமே அத்தருணத்தில் பிள்ளையார் சுழியிட்டுத் துவங்கி வைத்தனர், மௌனமாய்!
Comments
Post a Comment