திருப்பம்-75
திருப்பம்-75
அவ்வறையே பெரும் ரணகலமாய் இருந்தது. செவிலியர் படபடப்பாய் அவளை ஆற்றுப்டுத்த முயற்சித்து, “ஒன்னுமில்ல எல்லாம் ஓகே ஆயிடும். நீங்க அசையாதீங்கமா. கை, காலெல்லாம் இப்பதான் ஆபரேட் பண்ணியிருக்கு” என்று கூற,
அவளிடம் அழுகையின் பெரும் ஒலி!
பத்து நாட்களாயிற்று. இந்தப் பத்து நாட்களும் மயக்க நிலைக்குச் செல்வதும் மீள்வதுமாய் தவித்த சங்கமித்ரா, இப்போது தான் நிலையாக சில மணிநேரமாவது முழித்திருக்கவே முயற்சித்து வெற்றி கொண்டிருக்கின்றாள்.
இந்த நிலையில், காலை பத்து மணிபோல் கண்விழித்தவள், தன்னைச் சுற்றிப் பார்த்து, செவிலியர் மற்றும் கார்த்திகா அமர்ந்திருப்பதைக் கண்டாள்.
படுத்தே இருப்பது மதமதம்பாய் இருக்கவே சற்றே எழுந்து அமர எண்ணியவள் அவர்களை அழைக்க முயற்சிக்க, அத்தோ பரிதாபம் பேச்சு வரவில்லை.
மாறாக அவளிடமிருந்து அவள் குரலைப் போலவே இல்லாத ஒரு ஒலி மட்டும் எழுந்தது.
அந்த ஓசையில் இருவரும் அவளைக் கண்டு நெருங்கிவர, குழப்பமான முக பாவத்துடன் மீண்டும் பேச முயற்சித்தவளுக்கு, பேச்சு வரவில்லை.
தொண்டையை அழுத்தி வலி உருவாகுவதாய் உணர்ந்தவள், படபடப்பாய் கார்த்திகாவையும் செவிலியரையும் பார்த்து, பேச முயற்சி செய்ய,
“ஸ்டிரஸ் பண்ணிக்காதீங்க க்கா” என்று செவிலியர் கூறினார்.
அவள் பதட்டமாய் அவரைப் பார்த்து, தன்னால் பேச இயலாததைக் கூற முயற்சிக்க,
“ஒன்னுமில்லைங்க அக்கா..” என்று சமாதானம் செய்தாள்.
மருத்துவர் இனி அவள் கேட்டாள் விடயத்தைக் கூறிவிடலாம் என்று சொல்லியிருந்த நிலையில், “அக்கா.. நீங்க பயப்படுற அளவு ஒன்னுமில்லை. உங்க தொண்டை நரம்புகள் விழுந்தபோது எதுலயோ மோதி ஏற்பட்ட அழுத்தத்தால பேச்சுத்திறன் போயிடுச்சு” என்க, அதிர்ந்து போன சங்கமித்ரா படபடப்பாய் கார்த்திகாவைப் பார்த்தாள்.
“சங்கு ஒன்னுமில்ல சங்கு. அதெல்லாம் திரும்ப கொரல கொண்டாந்துருலாம்முனு சொல்லிருக்காவ” என்க,
அவளுக்கு நம்பிக்கையே வர மறுத்தது. தன் நிலை புரிந்து தன்னை சமாதானம் செய்யக் கூறுகின்றனர் போலவே என்று எண்ணியவள், கணவன் இந்த பத்துநாளாய் தன்னைப் பேச விடாது விழி பாஷை நடத்தியது புரிந்தது.
நெஞ்சாங்கூடு ஏறி இறங்க, சுவாசத்திற்கே தவிப்பாய் உணர்ந்தவள் கண்ணிலிருந்து விழிநீர் மடமடவென வழிந்தது.
“சங்கு ஒன்னுமில்ல சங்கு.. நீயு பயப்பட வேணாம்னு டாக்டரே சொன்னாவ” என்று கார்த்திகா அவளை சமாதானம் செய்ய முயற்சிக்க,
“ஆ..” என்று அழுதபடி எழ முயற்சித்தாள்.
அவள் குரல் வேறு யாரோ ஒருவரின் குரலைப் போல் கேட்டது. தொண்டை நரம்புகளில் ஏற்பட்டிருக்கும் பாதிப்பைப் பொருத்து பேச்சு தடைபடும் என்றாலும், முற்றுமாக பாதிக்கப்பட்டால் மட்டுமே குரலே இல்லாமல் போகும். எனினும் கூட, பாதிப்பைப் பொறுத்து குரல் மாறுபாடு நிச்சயம் ஏற்படும். ஆகவேதான் அவளது குரலே வேறு ஒருவரின் குரலைப் போல் கேட்கப்பெற்றது.
அதில் இன்னும் உடைந்து போனவள் ஆற்றாமையோடு எழமுயற்சி செய்ய, கை கால்களை இம்மியளவு அசைத்தாலும் பெரும் வலி ஏற்பட்டது.
அதில் துடித்துப் போனவள், விட்டத்தை வெறித்தபடி கத்த, அதிகப்படியான அழுத்தம் தொண்டையில் வலியைக் குடுத்தது.
“மேம் நான் போய் டாக்டர கூட்டிட்டு வரேன்” என்று நர்ஸ் வெளியே செல்ல எத்தனிக்க, பதறியடித்துக் கொண்டு வளவன் உள்ளே நுழைந்தான்.
வேகமாய் அவன் கதவைத் திறந்துகொண்டு வந்த சப்தத்தில் மூவரும் அவனை நோக்க, படபடப்பும் பரிதவிப்புமாய் சங்கமித்ராவைப் பார்த்தான்.
அவனைப் பார்த்தவள் மூச்சை இழுத்து வெளியிட்டபடியே பரிதாபமாய் பார்க்க, மீண்டும் அழுகை வந்தது. கேவி அழுக அழுக தொண்டையில் வலி ஏற்பட்டது.
விரைவாய் அவளை நெருங்கியவன், “ஷ்ஷ்..” என்று அவள் கன்னம் துடைத்தான்.
மெல்ல தலையை இடவலமாய் அவள் அசைக்க, “ஷ்ஷ்..” என்று மீண்டும் கூறியவன் அவள் நெற்றியில் கரம் வைத்து, இடவலமாய் தலையாட்டினான்.
அவளது கேவல் அடங்கி விசும்பல் மட்டுமே மிஞ்ச, எச்சிலைக் கூட்டி விழுங்கும் தொண்டைக்குழியைப் பார்த்தவன், “வலிக்குதா?” என்றான்.
ஆமென்பதாய் அவள் தலையசைக்க, செவிலியரைப் பார்த்தான்.
அவரும் தலையசைப்போடு செல்ல, கார்த்திகா அவர்களுக்குத் தனிமை கொடுக்க வேண்டி வெளியே சென்றாள்.
மீண்டும் சங்கமித்ரா கண்களிலிருந்து கண்ணீர் பெருகியோட, “மித்ரா..” என்று அழுத்தமாய் அழைத்தபடி அவள் கண்ணீர் துடைத்தவன், “என்னையப் பாரு” என்றான்.
கண்ணீர் பொங்கும் விழிகளோடு பாவை அவனை நோக்க, “ஒன்னுமில்ல. தொண்டையில என்னமோ அடிபட்டு நரம்பு பாதிப்பாச்சாம். அவியட்ட கேட்டுட்டேம். இதுக்குனு இருக்க ட்ரீட்மெண்டு எடுத்தா பேச்சு திரும்ப வந்துடும்னு சொல்லிட்டாவ. ஆனா அதுக்கு மொத நீயு இதுலருந்து தேரி வரனும். அப்பதேம் அத செஞ்சுகிட முடியும். என்னத்துகுடி அழுற? என்ன ஆவிபோச்சு?” என்றான்.
அவனைப் பரிதவிப்பாய் பார்த்தவள் பார்வை, ‘நீ சொல்வது நிஜமா?’ என்பதை வெளிக்காட்ட,
அவள் தலையில் கை வைத்தவன், “ஓம்மேல சத்தியமாடி” என்றான்.
வேதனை குறையவில்லை என்றாலும் நம்பிக்கை ஒன்று உருவானது.
அவனையே பாவமாய் பார்த்தவள், கண்களையே பார்த்தவன், “நீயு பேசிதேம் நானு புரிஞ்சுக்கனுமுனு இல்லடி. நீயு பாத்தாலே எனக்கு புரியும். என்னமாது கண்டதையும் ரோசிச்சுபோட்டு என்னைய சாவடிக்காத. உசுரு பொழச்சு வந்துருக்கேம்” என்று கூறினான்.
தன் கீழதலைக் கடித்துக் கொண்டு அவனை பரிதவிப்பாய் அவள் நோக்க, தன் விரல் கொண்டு அவள் இதழை பற்களிடமிருந்து காத்தெடுத்தவன், அவள் கன்னம் பற்றி, “நாந்தாம் இருக்கேம்ல மித்ரா. ஒனக்கு ஒன்னு ஆவ விட்டுபுடுவேனா? ஒன்னும் ரோசிக்காத. எல்லாஞ் சரியாப்போவும்” என்றான்.
ஒரு பெருமூச்சுடன் சாய்ந்தவள் அவனைப் பார்த்துவிட்டுத் தன்னை கண் காட்ட, அவளைப் புரிந்துகொண்டோனாய், “டாக்டருட்ட கேட்டுட்டு ஒக்காத்துறேம் மித்ரா” என்றான்.
சரியாய் மருத்துவரும் உள்ளே வந்துவிட, அவளது அமைதியான தோற்றத்தை செவிலியர் ஆச்சரியமாய் பார்த்தார்.
“மிஸஸ் சங்கமித்ரா.. ஏன் அவ்வளவு அழுகை? அதெல்லாம் குரலை மீட்டு எடுத்துடலாம். அதுக்கு முதல்ல இப்ப நீங்க ஒழுங்கா மருந்தெடுத்து ரெஸ்ட் எடுக்கனும்” என்று மருத்துவர் கூற,
அவள் ஆயாசமாய் தலையசைத்தாள்.
“தொண்டையில் வலி இருக்கா?” என்று அவர் கேட்க,
வேகமாய் ஆம் என்று தலையசைத்தவளுக்குக் கண்கள் கலங்கியது.
“கை காலெல்லாம் இப்பதிக்கு அசைக்கக் கூடாது. போன் ப்ராக்சர் ஆயிருக்கு. உங்க நல்ல நேரம் மொத்தமா உடைஞ்சு ஸ்கின்ன கிளிச்சிட்டு வரலை. சின்னச் சின்ன கிராக்ஸ்தான். அதுக்கான சிகிச்சைகளைக் கொடுத்திருக்கோம். முறிவு ஏற்பட்ட இடத்தில் திரும்ப போன் செல்ஸ் உருவாகி, முறிவு சரியாகும்வரை அசைவுகள் கொடுக்காம இருக்கனும்” என்று கூறியவர், செவிலியரிடம் சில ஊசிகள் போடும்படிக் கூறினார்.
“தலையில வலி எப்படி இருக்கு?” என்று அவர் கேட்க,
விழிகளை உயர்த்திக் கொண்டு தலையிலுள்ள கட்டை உணர்ந்தவள் அவரைக் கேள்வியாய் பார்த்தாள்.
“தலையிலயும் அடிபட்டு ஆப்ரேட் பண்ணிருக்குமா” என்று அவர் கூற,
'ஓ..’ என்பதைப் போல் பார்த்தவள், ‘இப்பதிக்கு வலி இல்லை' என்பதை எப்படித் தெரியப்படுத்த என்று புரியாமல் வளவனைப் பார்த்தாள்.
“இப்பத்திக்கு வலி இல்லையா?” என்று அவன் கேட்க,
வியப்பாய் ஆமென்று தலையசைத்தாள்.
“குட்.. டென் டேஸ் ஆனதால பெயின் நல்லா குறைஞ்சிருக்கு. ஈவ்னிங் கட்டை பிரிச்சு எதுக்கும் ஒரு ஸ்கேன் எடுத்துப் பார்த்திடலாம்” என்று மருத்துவர் கூற, வளவன் தலையசைத்துக் கொண்டு, “ஒக்கார வைக்கலாமா டாக்டர்?” என்று கேட்டான்.
மித்ராவைப் பார்த்து, “ரொம்ப மதமதப்பா இருக்கா?” என்று அவர் கேட்க,
அவளும் ஆமென்று தலையசைத்தாள்.
“வலது கையிலும் முறிவு இருக்கு. உட்கார வைப்பதால காலுக்கு அசைவில்லைனாலும் கையில் ஏற்படும். இருந்தாலும் பேஷன்ட் டிஸ்கம்ஃபோர்ட்னு ஒன்னு இருக்கே. மேல டேபில் டாப் வச்சு கைய அதுல நீட்ட வச்சுடுங்க நர்ஸ்” என்று வளவனிடம் துவங்கி, செவிலியரிடம் முடித்துவிட்டுச் சென்றார்.
மருத்துவர் கொடுத்த ஊசிகளை எடுத்து வைத்த செவிலியர், “கொஞ்ச நேரம் உக்காந்துட்டு படுக்கும்போது போட்டுக்கலாம்” என்று கூறி, கட்டிலை அவள் உட்காருவதற்கு ஏதுவாய் சாய்க்க முன் வந்தார்.
வளவனும் வந்து உதவ, “அவங்க கைய நேரா நீட்டி பிடிச்சுக்கோங்க சார்” என்று கூறிய செவிலி, கட்டிலை லேசாக உயர்த்த, அவ்வசைவுகளில் லோசாய் வலி ஏற்பட்டு அவள் முகம் சுறுங்கியது.
“ஒன்னுமில்ல ஒன்னுமில்லடா. ஆச்சு” என்று கூறியவன், “மைணி.. அந்தா டேபில எடுங்க” என்க, கார்த்திகாவும் அதனை எடுத்து வைத்தாள்.
மித்ராவின் கையை பதமாய் அதில் வைத்தவன், அவளை நோக்க, ஆயாசமாய் அமர்ந்து பெருமூச்சு விட்டுக் கொண்டவள் அவனைக் கேள்வியாய் பார்த்தாள்.
“கை காலுல கட்டெல்லாம் பிறிக்க எம்புட்டு நாலு ஆவும்?” என்று வளவன் செவிலியரிடம் கேட்க,
“கைக்கு ரெண்டு மாசம், காலுக்கு மூனு மாசம் வரை ஆகும் சார்” என்று கூறினார்.
அதில் விழிகள் விரித்தவள் மீண்டும் வளவனைப் பார்க்க, “அதுவார ஆஸ்பத்ரிலதேம் இருக்கனுமா?” என்று கேட்டான்.
“இல்ல சார்.. பொதுவா ஏழு எட்டு நாளுல அனுப்பிடுவோம். இவங்களுக்கு நிறைய அடி இருக்கு இல்லையா? அதான் ரொம்ப நாள் அப்சர்வேஷன்ல இருக்க வேண்டியிருக்கு. ஸ்கேன் பார்த்துட்டா ரெண்டு மூனு நாள்ல அனுப்பிடுவாங்க” என்று அவர் கூற,
சரியென்று தலையசைத்துக் கொண்டான்.
“நான் டாக்டருட்ட பேசிட்டு வாரேம் மைணி” என்ற வளவன் சங்கமித்ராவைப் பார்த்து தலையசைத்துவிட்டுச் செல்ல,
செவிலியர், “லவ் மேரேஜாமா இவங்களுக்கு?” என்று கார்த்திகாவிடம் கேட்டார்.
கார்த்திகா புன்னகையாய் சங்கமித்ராவைப் பார்க்க, அவள், ‘ஆம்’ என்று தலையசைத்தாள்.
அவள் முகத்தில் அத்தனை நேரம் இல்லாத ஒரு மெல்லிய புன்னகை குடி புகுவதைக் கண்ட கார்த்திகா, மனம் நிம்மதி பெற்று, “ஆமா க்கா. லவ் மேரேஜ் தான். ஆனா கல்யாணம் முடிவானதுக்கு அப்றம் வந்த லவ்” என்று கூற,
“அரேஞ்ச் மேரேஜ் தானா?” என்று கேட்டவர், “நாங்கூட அந்தத் தம்பி வந்த நாள்லருந்து தவிச்சதுலாம் பாத்து லவ் மேரேஜ்னு நினைச்சுட்டேன்” என்றார்.
“ஏன் அரேஞ்ச் மேரேஜ் பண்ணவியளாம் பொண்டாட்டிய தாங்குறதில்லையாக்கும்?” என்று கார்த்திகா கேட்க,
“எங்க காலத்துலலாம் அப்புடியில்லம்மா. பாசமிருந்தா கூட பெருசா வெளி காட்டிக்க மாட்டாவ. லவ் மேரேஜ் பண்ணவங்கதான் இப்புடிலாம் இருந்து பாத்துருக்கோம். பரவால்ல.. இந்த காலத்து பசங்க அந்த தப்பப் பண்ணாம நல்லபடியாதான் இருக்காங்க” என்று கூறியவர், “நான் வார்ட்ல ஒரு ரவுன்ஸ் போயிட்டு வரேன். அதுவரை உக்காந்துக்கோங்க. வந்து ஊசி போட்டதும் படுத்துக்கலாம்” என்றுவிட்டுச் சென்றார்.
மெல்லிய புன்னகையுடன் தலையசைத்த கார்த்திகா, சங்கமித்ரா அருகே அமர்ந்துகொண்டு, “லவ் மேரேஜாக்கும்? ஏண்டி வேவமா தலையாட்டுதவ?” என்க,
சிறு புன்னகையுடன், ஆமென்று தலையசைத்தாள். அந்த நேரத்தில் அந்த இதமான சூழல் அவர்களுக்குத் தேவையாகவே பட்டது.
சிலநிமிடம் கழித்து வந்த செவிலி, அவளுக்கு ஊசி போட, வளவனும் உதவி அவளை மீண்டும் படுக்க வைத்தான்.
படுத்திருந்த பெண் அப்படியே தூங்கிப் போக அவள் தலை வருடியபடியே அமர்ந்திருந்தவன் தோள் தொட்ட கார்த்திகா, “கொழுந்தரே..” என்று அழைக்க,
“பயமாருக்கு மைணி.. ரொம்ப யோசிப்பா.. இந்த கொரலுக்கு என்னல்லாம் செய்யப்போறாளோனு பயந்து வருது..” என்றான்.
“ஒன்னுமில்ல கொழுந்தரே.. எல்லாஞ்சரியா போவும்” என்று கார்த்திகா கூற,
“அம்மாவும் திரியக்காவும் என்னமாது பேசிடாம இருக்கனும் மைணி. அத நெனச்சாதேம் இன்னும் பயமாருக்கு” என்றான்.
கார்த்திகாவிற்குமே அது கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. இருப்பினும் தன் கொழுந்தனுக்கு ஆறுதல் கூறி தேற்றியவள், அவனை வீட்டிற்குப் போகும்படி கூற,
“இல்ல மைணி.. இந்தா சொன்னேம் தான காலைலயே.. எழுந்து அவள அழுவவிட்டுட்டோமேனு ஆவிப்போச்சு” என்று நொஞ்சை நீவிக் கொண்டவன், “அவோளுக்கு நா வேணும் மைணி.. நாயிருக்கேம். நீங்க போயி சாயிந்திரத்துக்கு வேற ஆரையும் அனுப்பிவிடுவ. சுடரு உங்களத்தேம் தேடும்” என்று கூறி அவளை அனுப்பி வைத்தான்.
Comments
Post a Comment