திருப்பம்-76

திருப்பம்-76



நேரம் கடந்து மதிய உணவிற்கு எழுந்தவளை மெல்ல அமர்த்தியவன், “சாப்பிடுறியா?” என்க, மெல்ல தலையசைத்தாள்.


அவளுக்கான பத்திய உணவைக் கொண்டு வந்தவன் கரண்டியில் எடுத்து ஊட்டிவிட, உணவிலும், அவனிலும் கவனம் இல்லாதபடியே உண்டு கொண்டிருந்தாள்.


தேவையில்லாமல் எதையோ சிந்திக்கின்றாள் என்பதை அவள் முகம் கண்டே புரிந்துகொண்டவன், அவளை அழைக்க முற்பட, கதவு தட்டப்படும் சப்தம் கேட்டது.


“ஆரு?” என்று அவன் கூற,


“நாந்தான்டா” என்று அவிநாஷ் குரல் கொடுத்தான்.


“வாங்கண்ணே” என்று அவன் கூற,


உள்ளே நுழைந்த அவிநாஷ், இந்த பத்து நாட்களில் பரதேசம் சென்ற சாமியாரைப் போல் மாறியிருந்தான்.


அவனுடன் சங்கமித்ராவின் பெற்றோரும் வந்திருந்தனர்.


நடப்பை தன் செவி உணர்த்த முயற்சித்தும் கூட, சிந்தையின் பிடியிலிருந்த சங்கமித்ரா அவர்களைத் திரும்பிப் பார்த்தாள் இல்லை.


தன் மகளாய் பாவித்து குழந்தைபோல் எண்ணியவள் இப்படிப் படுக்கையில் விழுந்துவிட்டாளே என்று எண்ணி எண்ணியே அவிநாஷ் சோர்ந்து போயிருந்தான்.


அவளை வந்து பார்த்துவிட்டு வீடு சென்றவன், சங்கீதாவை அணைத்துக் கொண்டு அழுத அழுகையில் அவளே ஆடிதான் போனாள். “என் பாப்பாடி அவ. எப்புடி அவ்வளவு வலியைத் தாங்குவா?” என்று அவன் கதறியதில், கண்கள் கலங்கிய சங்கீதா தான் இறுதியில் தன்னவனைத் தேற்றியிருந்தாள்.


தாங்கள் வந்தும்கூட தங்களை நிமிர்ந்து பார்த்திடாத அவள் செயலில் மனம் நொந்து போனவன், வளவனை நோக்க, “மித்ரா..” என்று வளவன் அழுத்தி அழைத்தான்.


அதில் சட்டென சுயம் மீண்டவள் வந்தவர்களைக் காண, “சங்கு..” என்று பரிதவிப்பாய் அழைத்தபடி அவளது பெற்றோர் அவளருகே வந்தனர்.


'அம்மா..’ என்று அழைக்க முயற்சித்தாள். ஆனால் குரல் வரவில்லையே! அதில் அவளையும் மீறி அவள் விழிகளில் நீர் கோர்த்துக் கொள்ள, பொங்கியெழும் வேதனையை மற்றவர்கள் கட்டுப்படுத்திக் கொண்டு நின்றனர்.


“கண்ணு.. ஒன்னுமில்லடாமா.. எதுக்கு அழுற நீ? எல்லாம் சரியாயிடும்” என்று சச்சிதானந்தம் மகளுக்கு ஆறுதல் கூற,


சிறு தலையசைப்பை மட்டும் பதிலாய் கொடுத்தாள்.


வெளியிடங்களில் எப்படியோ? ஆனால் வீட்டில் சங்கமித்ரா அமைதியாக இருந்த பொழுதில்லையே? வாய் ஓயாமல் பேசி சிரிக்கும் தங்கள் வீட்டு இளவரசி இருக்கும் இருப்பை எண்ணி அனைவரும் வருந்த, அவிநாஷைப் பார்த்தாள்.


அவள் அருகே வந்து தலையில் பட்டும் படாமல் கரம் வைத்தவன், “ஒ..ஒன்னுமில்லடா பாப்பா. எல்லாம் ஓகே ஆயிடும்” என்க,


வெறுமனே பார்த்துக் கொண்டவள், மெல்ல தலையசைத்தாள்.


“சாப்பாடு குடுக்குறீங்களா மாப்பிள்ளை?” என்று தாட்சாயணி கேட்க,


அவர் எண்ணம் புரிந்தவனாய், கின்னத்தை அவரிடம் கொடுத்தவன், “ஆமாத்தே. நீங்கக் கொடுங்க” எனக் கூறி அவிநாஷோடு வெளியே வந்தான்.


“என்னடா பாப்பா இப்புடியிருக்கா” என்று அவிநாஷ் கேட்க,


“இன்னிக்குதேம் அண்ணே அவோளுக்கு கொரலு போச்சுனு தெரிஞ்சுது” என்றான்.


“ரொம்ப அழுதாளோ?” என்று அவிநாஷ் பரிதவிப்பாய் கேட்க, வளவனிடம் பெருமூச்சே பதிலாய்!


இருவரும் வேதனையின் பிடியில் தான் சிக்கித் தவித்தனர். ஆனால் ஒருவருக்கு மற்றவர் ஆறுதல் கூறி தேறிக் கொள்ள முயற்சித்தனர்.


“எப்ப டிஸ்சார்ஜ் பண்ணுவாங்க வளவா?” என்று அவிநாஷ் கேட்க,


“இன்னிக்கு ஸ்கேன் எடுக்கோம்னு சொல்லிருக்காவ அண்ணே. பாத்துபோட்டு ரெண்டு நாளுல பண்ணிடலாம் சொல்லிருக்காவ” என்று கூறினான்.


“உங்க ரூம் மாடியில இருக்கே. எப்படி பாப்பாவ கொண்டு போவ?” என்று அவிநாஷ் கேட்க,


“கீழு ரூம ரெடி பண்ணிட்டேம் அண்ணே. அவோ கொணமாவுற வார அதுலதேம் இருக்கனும்” என்று கூறினான்.


தன் மச்சினிக்காக ஒவ்வொன்றையும் வளவன் பார்த்துப் பார்த்து செய்வதில் மனம் நெகிழ்ந்து போன அவிநாஷ், அவனை அணைத்துக் கொண்டு, “என் பாப்பாவ உன்னவிட யாராலயும் நல்லா பாத்துக்க முடியாதுடா” என்று கூற,


“ஏம் உசுருண்ணே.. பாத்துகிடாமயா?” என்றான்.


தருணங்கள் நெகிழ்வாய் கடந்து செல்ல, அவளது தலையில் போடப்பட்ட கட்டை மொத்தமாக பிரித்து, அவளை ஸ்கேன் எடுப்பதற்காக அழைத்துச் சென்றனர்.


அனைத்தும் முடிந்து தையிலிடப்பட்ட இடத்தில் மட்டும் கட்டு ஒட்டப்பட்டு, இடது கையிலிருந்த கட்டையும் எடுத்து, தையலிட்டிருந்த இடத்தில் மருந்து மட்டும் வைத்துவிட்டனர்.


மேலும் முகத்தில், கழுத்தில், கைகால்களில் இருந்த காயங்களுக்கும் மருந்துகள் தேய்த்துவிடப்பட, அனைத்தையும் உடனிருந்து பார்த்துக் கொண்ட வளவன் மருத்துவரிடம் பேசிவிட்டு வந்தான்.


அவனையே வைத்த விழி அகற்றாது பார்த்தவள், கேள்வியாய் கண்கள் உயர்த்தி இறக்க, “தலைல ரத்தம் ஒறஞ்சுருக்குமோனுதேம் பாத்தாவளாம். ஆனா அப்புடி ஏதுமில்லனு சொல்றாவ மித்ரா. அதேம் கட்டுயெல்லாம் பிரிச்சு மருத்தெல்லாம் வச்சுட்டாவ. நாளைக்குக் காலையில வீட்டுக்குப் போயிடலாம். நம்ம வீட்டுல கீழு ரூமதேம் ரெடி பண்ணிருக்கேம். அங்கனதேம் நீ நடக்குற வார இருந்துகிடப் போறோம்” என்று கூறினான்.


மருத்துவமனையிலிருந்து கிளம்புவதே அப்போதைக்கு அவளுக்குச் சற்று ஆசுவாசமாக இருந்தது. சிறு பெருமூச்சுடன் சாய்ந்தவள், அப்படியே உறங்கிப் போக, வீட்டிற்கும் தகவல் தெரிவித்தான்.


மாலை ஏழு மணியளவில் தீபிகா மற்றும் திரிபுரா வந்திருக்க, சங்கமித்ரா முழிக்கக் காத்திருந்த வளவன், அவள் முழித்ததும், “வெளிய போறேம் மித்ரா. நைட்டு வந்துடுவேம்” என்று கூறிவிட்டுச் சென்றான்.


மருத்துவமனையை விட்டு வெளியே வந்தவன், வடிவேலுவிற்கு அழைப்பு விடுக்க, “நாங்கெளம்பிட்டேம்லே. அங்கனதேம் போயிட்டிருக்கேம்” என்று வடிவேல் கூறினான்.


“சரிலே.. நீயு போ. நானும் பத்து நிமிசத்துல வந்துடுதேம்” என்று கூறிய வளவன், அழைப்பைத் துண்டித்து விட்டுத் தன் வண்டியைக் கிளப்பிக் கொண்டு புறப்பட்டான்.


இருவரும் ஐந்து நிமிட இடைவெளியில் அவ்வீட்டு வாசலை வந்தடைய, “உள்ளப் போலாந்தானலே?” என்றபடி வளவன் வண்டியிலிருந்து இறங்கினான்.


பத்து நாட்களில் அவன் தோற்றம் எத்தனை மாறிப்போனதென்பதைக் கண்ட வடிவேலுவிற்கு அத்தனை வேதனையாக இருந்தது.


கண்ணுக்குக் கீழ் கருவளையத்துடன், உடல் அயர்ந்து, கசங்கிய உடை, கலைந்தத் தலைமுடியென பித்தனைப் போல் வந்து நின்ற நண்பனை தன் விழிகளால் ஒரு முழு நிமிடம் அளந்த வடிவேல் அவனை அமைதியாய் அணைத்துக் கொண்டான்.


அந்த நிமிடம், வளவனுக்குமே அந்த அரவணைப்புத் தேவையாகவே இருந்தது.


நண்பன் முதுகில் தட்டிக் கொடுத்த வடிவேல், “எல்லாம் சுளுவா சரியாப்போவும்லே” என்க,


“அப்புடித்தாம்லே நானுங்கூட நம்புதேம்” என்று கூறினான்.


அவன் தோளில் ஆறுதலாய் தட்டிக் கொடுத்த வடிவேல் அவன் சிகையைத் தன் கைகொண்டு சீர் செய்துவிட, நண்பனின் செயலில் சிறு புன்னகை பூத்தவன், “இதெல்லாம் பாத்தா தனம் ஒடக்கிழுத்துட்டு வரும்லே” என்று கூறினான்.


“வரட்டும்.. அது தலையையும் கோதிவிட்டு சரிகட்டிகிடுதேம்” என்று அவன் கூற,


“ஓந்தலைய அது கையில தனியா கலட்டாமருந்தா சரிதாம்லே” என்று சிரித்துக் கொண்டான்.


தன்னைக் கேலி செய்தானாலும் நண்பன் சிரிக்கின்றானெனில் போதுமே! என்ற மனதோடு உருகிய வடிவேல், “வாலே உள்ளக்கப் போவோம்” என்று அவ்வீட்டு வாயிலுக்குச் சென்று கதவைத் தட்டினான்.


சில நொடிகளில் கதவுத் திறக்கப்பட, ‘என்ன யாரையும் காணும்?’ என்று மேலே பார்த்துக் கொண்டிருந்தவர்கள் கவனத்தை, கையுயர்த்தி சொடுக்கிட்டு அழைத்தது ஒரு பிஞ்சு கை.


இருவரும் கீழே குனிந்து பார்க்க, நான்கிலிருந்து ஐந்து வயதுக் குழந்தை ஒன்று அழகாய் சிரித்து, “யாரு யாரு?” என்று கேட்டான்.


அக்குழந்தையைப் பார்த்து இருவரும் புன்னகைத்துக் கொள்ள, “ஆரூ..” என்றபடி அங்கு வந்த வயோதிகப் பெண்மணி, “யாருப்பா வேணும்?” என்று கேட்டார்.


“மித்ரன் அண்ணே இல்லைங்களா ம்மா?” என்று வடிவேல் கேட்க,


“அவன் வெளிய போயிருக்கானேய்யா” என்று கூறினார்.


“ரொம்ப நேரமாகுமுங்களா?” என்று வளவன் கேட்க,


“இல்லபா போயி நேரமாச்சு. வந்துடுவான்” என்று அவர் கூற,


“முகி.. யாரு?” என்று கணீரென ஒரு குரல் ஒலித்தது.


அக்குரலைத் தொடர்ந்து, அக்குரலுக்குச் சொந்தமானவர் அவ்விடம் வர, “ஐயா.. என்னயத் தெரியுதுங்களா?” என்று வளவன் கேட்டான்.


“தம்பிய பாத்தாப்லதான் இருக்கு.. ஆனா பிடிபடலையேப்பா” என்று அவர் கூற,


“நான் வளவன். இவேம் வடிவேலு. தேங்க தோட்டத்துக்காரவ” என்று அவன் நினைவூட்டும்படி கூறினான்.


“அட வளவா.. வேலா.. வாங்க வாங்கப்பா” என்று கூறிய, வேந்தன், பேரனைத் தூக்கிக் கொள்ள, அவரது மனைவி முகிழினியும் அவர்களை இன்முகமாய் வரவேற்றார்.


“மருமகள கூட்டிகிட்டு ஆஸ்பத்ரி போயிருக்கான்பா” என்று வேந்தன் கூற,


“என்னாச்சுங்கைய்யா?” என்று வடிவேல் கேட்டான்.


“ஒன்னுமில்லபா. ப்ரியா முழுகாமருக்கா. அதான் செக்கப்கு போயிருக்கான்” என்று முகிழினி இன்முகமாய் கூற,


“அட தொரை சார் இத சொல்லவேயில்ல” என்ற வளவன், “அரோஹன் தானேய்யா?” என்று குழந்தையைக் காட்டிக் கேட்டான்.


“ஆமாய்யா” என்றவர் குழந்தையை அவனிடம் கொடுக்க,


அவன் புதர் முடியினுள் கைநுழைத்தக் குழந்தை கிளுக்கிச் சிரித்தான்.


“அம்புட்டு புள்ளையளுக்கும் ஓம் முடிதாம்லே புடிச்சிருக்கு” என்று வடிவேல் கூற,


வளவன் மனதில் சங்கமித்ராவின் முகம் வந்து போனது.


ஆரோஹனை கொஞ்சிய வளவனிடமிருந்து குழந்தையை வாங்கிய வடிவேலும் கொஞ்சி மகிழ,


“அப்புடியே மித்ராண்ணே போலதேம் இருக்கியாம்” என்று வளவன் கூறினான்.


அனைவரும் சிலநிமிடம் பேசிக் கொண்டிருக்க,


வாசலில் வண்டி சப்தம் கேட்டது.


“அப்பா.. அப்பா..” என்றபடி குழந்தை வடிவேலிடமிருந்து குதித்திறங்கி வாசலுக்கு ஓட,


“அடேய் உங்கப்பா உள்ள வரமாட்டானாடா” என்றபடி முகிழினி குழந்தை பின்னோடே ஓடினார்.


அதற்குள் வாசலைத் தாண்டிய குழந்தைத் தன் தந்தையின் காலைக் கட்டிக் கொள்ள,


“ஹப்பா.. உங்கப்பாவை எனக்குக் கொஞ்சம் மிச்சம் வைடா யப்பா” என்று கோபம் போல் கூறிக் கொண்டாள், ரசிகப் ப்ரியா.


மனைவியையும் அவள் ஐந்து மாத இரட்டை சூழ் தாங்கிய வயிற்றையும் குறும்பும் புன்னகையுடன் பார்த்த யாழ் மித்ரன் தன் மகனைத் தூக்கிக் கொள்ள, “அப்பா பிரெண்ட்ஸ் வந்திருக்காங்க” என்று குழந்தை மழலைக் குரலில் கூறினான்.


“அப்பா ஃபிரெண்ட்ஸா அம்மா ஃப்ரெண்ட்ஸா?” என்று ரசிகப்ரியா கேட்க,


“அய்யோ மறந்துட்டேனே” என்றபடி உள்ளே நுழைந்தான், யாழ் மித்ரன்.


(எனது அந்தகார அணங்கே கதையின் கதாபாத்திரங்களே இவர்கள்)


“ஸ்ஸ்.. சாரிடா. மறந்தேபோயிட்டேன்” என்று யாழ்மித்ரன் கூற,


“அட இருக்கட்டும்ணே” என்றபடி இருவரும் எழுந்தனர்.


உள்ளே வந்த ரசிகப்ரியாவைப் பார்த்து புன்னகை பூத்தவர்கள், “நல்லாருக்கீயளா மைணி?” என்க,


யாரென்று தெரியாத போதும், நிமிர்ந்த நேர்கொண்ட பார்வையுடன், “நல்லாருக்கேன். உட்காருங்க” என்று கூறினாள்.


“நான் கன்னியாகுமரில இருந்த சமையம் பழக்கமான பசங்கமா ரசிகா. திருமாவளவன், வடிவேல். ஒரு கேஸ் விஷயமா இவங்க தென்னந்தோப்புக்கு விசாரிக்கப் போயிருந்தேன். அப்ப அப்பாவும் வந்து போயிருந்ததால நல்ல பழக்கம். அவங்க அக்கா ஹஸ்பென்ட் மகா எனக்குக் காலேஜ் மேட்” என்று யாழ் மித்ரன் கூற,


மற்றவர்கள் கேட்டுக்கொண்டு புன்னகைத்தனர்.


குழந்தையை இறக்கிவிட்ட மித்ரன், “மாடிக்குப் போயி பேசுவோமாடா?” என்க,


“சரிண்ணே” என்று இருவரும் கூறினர்.


“சோலியா பேசவந்தீங்கனா காபி தண்ணி குடிச்சுட்டுப் போகலாமே?” என்று முகிழினி கேட்க,


“இல்லம்மா இருக்கட்டும்” என்றானர்.


“என்னடா இருக்கட்டும்? இருங்க. குடிச்சுட்டே போகலாம்” என்ற மித்ரன் தானே சென்று தன் தந்தைக்கு உதவினான்.


தன்வீட்டிற்கு வந்தவர்களுக்கும், தன் வீட்டாருக்கும் தேநீர் போட்ட மித்ரன், தன்னவளுக்கு மட்டும் பழச்சாறு தயாரித்துக் கொண்டுவர, ரகசியமாய் அவனிடம் வம்பு பேசியபடி வாங்கிக் கொண்டாள்.


“புள்ளைய பாத்துட்டு அண்ணே மாறி இருக்கியான்னு சொன்னம்லே. புள்ள பாவனையெல்லாம் மைணி போலதேம் போல” என்று வடிவேல் கூற,


அன்னையைப் போலவே அமர்ந்து, பழச்சாறு குடிக்கும் குழந்தையைப் பார்த்து அனைவரும் புன்னகைத்தனர்.


கொடுக்கப்பட்ட தேநீரைக் குடித்து முடித்த இருவரும் அவனோடு மேலே செல்ல, 


“சொல்லுங்க டா என்ன பிரச்சினை?” என்று மித்ரன் கேட்ட கேள்விக்கு நண்பர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.



 

Comments

Popular posts from this blog

திருப்பம் -01

திருப்பம்-03

திருப்பம் -02