திருப்பம்-77

 திருப்பம்-77



வீட்டு வாயிலில் சக்கர நாற்காலியில் அமர்த்திய நிலையில், தன்னவளுடன் வளவன் வந்து நிற்க, மொத்த குடும்பமும் அங்கே திரண்டிருந்தது.


சங்கமித்ராவின் பெற்றோர், அக்கா, அத்தான், குழந்தை, தீபிகா மற்றும் திரிபுராவின் குடும்பமென அனைவருமே கூடியிருக்க, சில அக்கம் பக்கத்தார் கூட வந்திருந்தனர்.


கூந்தல் மழித்தெடுக்கப்பட்ட, தலையும், கட்டுகளுடனான கைகால்களும், மருத்துவமனையில் நோயாளிகளுக்குப் போடப்படும் உடையுமென, வந்திறங்கியவளுக்கு, அத்தனைபேரையும் கண்டு சங்கோஜமாக இருந்தது.


சிரம் தாழ்த்தி, பிறர் முகம் நோக்க இயலாது, தன்னைச் சுற்றிலும் துளைக்கும் பரிதாபப் பார்வையில் ஒருவித கழிவிரக்கத்துடன் தவித்தவளை அழைத்துவந்த வளவன் வாசலில் நிற்க, தெய்வநாயகி ஆரத்திக் கரைத்துக் கொண்டுவந்தார்.


மகனுக்கும் மருமகளுக்கும் சேர்த்தார் போலேயே சுற்றியவர், “எல்லா கண்ணும் அழிஞ்சு போவட்டும்” என்று கலக்கமாய் கூறிவிட்டுச் சென்று, அதனை வாசலில் ஊற்றி வர,


அவளை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றான்.


வீட்டின் உள் படிகளைத் தாண்டி கூடத்திற்குப் போகவேண்டிய நிலையில், வளவனும் விக்ரமனும் சேர்த்தே நாற்காலியோடு ஆளுக்கொருபுறமாய் தூக்கி அவளை உள்ளே அழைத்துச் செல்ல, மித்ராவின் பெற்றோருக்கு தாங்கள் பெண்ணைக் கட்டிக் கொடுத்தயிடம் அவளை நல்ல விதமாக பார்த்துக் கொள்வதாய் ஒரு ஆசுவாம் எழுந்தது. சிறு செயல்கள் கொடுக்கும் ஆறுதல்களின் மதிப்பும் அதிகம் தானே!


அனைவரும் கூடத்திற்கு வர, அவளை பூஜையறைக்குக் கூட்டிச் சென்று விளக்கேற்றிய தனலட்சுமி, விபூதியை எடுத்து அவளுக்கு இட்டுவிட்டாள்.


மீண்டும் அவள் கூடம் அழைத்துவரப் பட, பேச இயன்றால் கூட அவளிடம் நாலு நல விசாரிப்புகள் முடித்துக் கொள்ளலாம், இங்கு அதுவுமில்லையே என்று அனைவருமே வருத்தமும் கலக்கமுமாய் நின்றனர்.


அந்த மயான அமைதியை கலைத்த வடிவேல், “ஆத்தா தங்கபுள்ள.. என்னமாது குடிக்கிறியா?” என்று கேட்க,


சங்கோஜத்துடன் வேண்டாமென தலையசைத்தாள்.


அவள் சங்கடம் அனைவருக்குமே புரிய, அவளுக்கான பழச்சாறைத் தானே தயாரித்துக் கொண்டு வந்த வளவன், அவள் அருகே மண்டியிட்டு அமர்ந்து, “குடி” என்றான்.


விழிகளில் நீர் தழும்ப அவனை அவள் நோக்க,


“ஷ்ஷ்..” என்று மெல்லமாய் கூறியவன், “குடி” என்று புகட்டினான்.


அவள் மெல்ல மெல்ல மூக்கை உறியும் சப்தமும், பழச்சாறை விழுங்கும் சப்தமும் மட்டுமே அக்கூடத்தில் ஒலித்தது.


ஒலியிழந்து வந்தவளிடமிருந்து மட்டுமே பிறந்த ஒலியாய் அவை…


அவள் பழச்சாறை மெல்ல மெல்ல வலியுடன் குடித்து முடிக்க, அவளது நாற்காலியை நகர்த்திக் கொண்டு கீழே தயார் செய்த அவர்களுக்கான அறையை நோக்கிச் சென்றான்.


கதவை சிவபாதன் திறந்துவிட, மகா விரைந்து சென்று மின்விசிறியையும் விளக்கையும் உயிர்ப்பிக்க, கார்த்திகா அறையை சரிபார்த்தாள்.


தன்னவளோடு அறைக்குள் நுழைந்த வளவன் அவளை அப்படியே பதமாய் தன் கரங்களில் ஏந்திக் கொண்டு கட்டிலில் படுக்க வைக்க, உள்ளே வந்த தீபிகா தலையணைகளை அவளைச் சுற்றி அணைவாய் வைத்தாள்.


அவிநாஷ் மூட்டுவரை ஏறிய அவள் உடையை சீர் செய்திட, ஒருவரையும் பார்க்க இயலாமல் விழிகளை இறுக்கமாய் மூடிக் கொண்டு கீழிதழைப் பற்கள் கொண்டு கடித்துக் கொண்டாள்.


அவள் அருகே சரிந்து அமர்ந்த வளவன், மற்றவர்களை நோக்க, அனைவரும் சிறு தலையசைப்புடன் வெளியேறினர்.


அவள் தாடையில் விரல் வைத்து அழுத்தி, அவள் இதழைப் பற்களிடமிருந்து விடுவித்தவன், “அழுவனும்னா அழுதுபுடு” என்க,


பெருமூச்சை இழுத்துவிட்டவள், தலையை மட்டும் அவன் பக்கமாய் திருப்பி அழுது விட்டாள்.


சப்தம் பெரிதாகவெல்லாம் எழுப்ப இயலவில்லை என்றாலும் கூட, வெளியே உள்ளவர்களுக்கு அவளது அழுகையொலி கேட்கவே செய்தது.


“ஏம்புள்ளய இப்புடி பாக்க முடியலையே” என்று தாட்சாயணி தெய்வாவிடம் கண்ணீர் சிந்த, விழி கலங்கிய தெய்வா, “எல்லாஞ் சரியாபோவும் சம்மந்தி” என்று கூறினார்.


அவருக்கு அவளைப் பிடிக்காது தான். ஆனால் அவளுக்கு ஒரு துன்பம் நேர வேண்டும் என்று அவர் நினைக்கவில்லையே? அவளுக்கு நேரும் இன்னலால் தன் மகன் வாழ்வும் பாதிக்கப்படுமே என்ற எண்ணம் தான் என்றாலும் கூட, மனிதாபிமானமும் இருக்கவே செய்தது.


தான் திட்டி அழுது அஞ்சும் பெண் தான் என்றாலும் இன்று இப்படியான நிலையில் அவளைக் காண, திரிபுராவிற்கும் வருத்தமாகவே இருந்தது.


சச்சிதானந்தம் மௌனமாய் கண்ணீர் வடித்தபடி தன் மகளின் அழுகையொலி கேட்கும் அறையையே நோக்க, “ஒன்னுமில்ல சம்மந்தி. அச்சப்படாதிருங்க. தலைக்கு வாரது தலப்பாவையோட போச்சுனு நெனச்சுப்பம். புள்ளய நாமதான தேத்தி கூட்டியாரனும்?” என்று சுயம்புலிங்கமும் வருத்தமாய் ஆறுதல் கூறினார்.


ஒருவர் வருத்தத்திற்கு மற்றவர் ஆறுதல் கூற, சங்கீதாவிற்கு தன் தங்கையை இப்படிப் பார்க்கவே மனம் தாளவில்லை.


“நாம போலாமேங்க” என்று தன்னவனைப் பார்த்து இறைஞ்சுதலாய் கேட்டவள், “அவள இப்புடி பாக்குற தெம்பு என்க்கில்லைங்க. ப்ளீஸ் போலாம்” என்று அழுதுவிட, விழிகளில் கோர்த்த நீரை அழுந்தத் துடைத்துக் கொண்ட அவிநாஷ், சிறு தலையசைப்புடன் தன் அத்தை மாமாவைப் பார்த்தான்.


அவர்களும் அந்த சூழலில் மேலும் வருந்தியிருக்க இயலாது எழுந்துவிட, “சாப்பிட்டு போவத்தான அத்தே” என்று திரிபுரா கேட்டாள்.


“இல்லமா.. வேணாம்.. இப்ப ஒருவாய் சாப்பாடு எறங்காது. நாங்க வரோம்” என்று அவர் கூறிவிட,


மேலும் வற்புறுத்த மனமில்லாமல் ஒப்புக்கொண்டு அனுப்பி வைத்தனர்.


அவள் கண்ணீர் மொத்தமும் தன் நெஞ்சம் தாங்கிய வளவன், அவள் அழுது ஓயும்வரை பொறுமை காத்தான்.


மெல்ல மெல்ல அவளாகவே அமைதிபெற, அவளுக்கு தட்டிக் கொடுத்தபடி, “என்னமாது ரோசிச்சுட்டு உள்ளுக்குள்ளயே மறுகிட்டு இருந்தனு வையு.. சவட்டிபுடுவேம். எதுனாலுஞ் சொல்லு. உள்ளக்கயே வச்சு மிண்டாதிருக்காத (பேசாதிருக்காத). கேக்க ஓம் புருஷேம் இங்கன ஓங்கூடதேம் இருக்கேம், இருப்பேம்” என்று கூறினான்.


அவனை தலை நிமிர்த்திப் பார்த்தவள், விழிகள் கலங்கி, தன் தலையில் கை வைக்க,


அவள் கரத்தைப் பற்றிக் கொண்டவன், “பச்ச புள்ளைக்கு மொட்ட போட்டகணக்காதேம் இருக்க” என்று கூறினான்.


வலி நிறைந்த புன்னகையோடு பார்த்தவள், அவனை அருகே அழைக்க, அவளை நெருங்கி படுத்துக் கொண்டான்.


அவன்மீது மெல்ல தன் தலையை சாய்த்துக் கொண்டவள், கண்கள் மூட, அவளுக்குத் தட்டிக் கொடுத்துத் தூங்க வைத்தவன் சிந்தனை இரு தினங்கள் முன் யாழ் மித்ரன் வீட்டிற்கு சென்றுவந்த நினைவில் ஆழ்ந்தது…


இரண்டு நாட்கள் முன்பு…


யாழ்மித்ரன் வீட்டு மொட்டை மாடியில் மூவரும் அமர்ந்திருக்க, “சொல்லு வளவா.. என்ன பிரச்சினை?” என்று மித்ரன் கேட்டான்.


“அண்ணே.. எங்களுக்கு தொழிலுல ஒருத்தனோட ஒடக்கு” என்று வடிவேல் கூற,


“என்ன பிரச்சினை? யார் கூட?” என்று மித்ரன் கேட்டான்.


“முன்ன கொளமெல்லாம் ஏலத்துல எடுப்பம் அண்ணே. அப்புடித்தேம் ஊருள ஒரு பயலோட ஒடக்காச்சு. ஏலத்துக்கு எடுத்த சமயம் எங்க பக்கட்டு தாரேம்னவியள வசயா வஞ்சு மெரட்டினு எங்களுக்குக் கொடுக்கக்கூடாதுன்னியாம். அதுக்கு நாங்க போயி கேட்டதுக்கு, ஒரே பிரச்சினையாபோயி, கையுகலப்பாவ பாக்க, வளவேன் தான் வம்பு வேணாமுனு வுட்டுகுடுத்துபுட்டியான். ஆனா அந்தபய விடாது எங்கக்கூட எங்கனயாது சரசம் பண்ணிகிட்டே இருப்பியான்” என்று வடிவேல் கூற,


அவனைத் தொடர்ந்த வளவன், “அவேனும் பெரிய தலகட்டுதேம் அண்ணே. ஊருக்குள்ள மருவாதினு பெருசாயில்லினாலுங்கூட, வசதியுண்டு. போட்டி போட்டுகிட்டு அவேனும் எக்ஸ்போர்ட் பிஸ்நஸ் பண்றேன்னு வந்தியான். ஒத்த வருஷத்துல அது படுத்துடுச்சு. எங்க சோலிய கெடுக்கேம்னு பூந்தோட்டப்பக்கட்டு அவேம் ஆளுவள வேலைக்கு வுட்டு வம்பு செஞ்சியாம். அது இப்பத கொஞ்ச மாசம்மின்ன போலீஸு கேஸுனு ஆச்சு. பெருசா ஒன்னுந்தேரல. குடௌனு தாக்கோல (சாவி) திருடுறது, வயலுவலுக்குள்ள ஆள வுடுறதுனு சின்னச் சின்னதா செஞ்சுட்டு இருந்தியாம். படியா சிக்கலியேனு வுட்டுவச்சம். இப்பத தேங்கயில பூஞ்சைய தெளிச்சுட்டு போயிருப்பியாம்னு சந்தேகமாருக்குது..” என்றான்.


அவர்கள் பேச்சையே கவனித்துக் கொண்டிருந்த யாழ்மித்ரன், “ம்ம்..” என்று மேலும் அவர்களைக் கூறி முடிக்கும்படி ஊக்கப்படுத்த,


“இப்பத ஏம் பொஞ்சாதிய அடிச்சு ஆஸ்பத்ரில படுக்க வச்சுபுட்டானுவனு தோனுதுண்ணே” என்று வளவன் கூறினான்.


கூறும்போதே அவன் விழிகள் சிவந்துபோனது‌.


அவனை ஆச்சரியமாய் பார்த்த மித்ரன், “என்னடா சொல்ற?” என்க,


“தெரிஞ்சு பண்ணானுவளா தெரியாம பண்ணானுவளானு தெரிலண்ணே. ஆனா அவியதேம்” என்று வடிவேல் கூற,


“ஆக்ஸிடென்டுங்கவுமே போலீஸுல பேசிட்டுதேம் சிகிச்சக்கு விட்டது. அப்பத கேமரால தேடி பாத்து வண்டிய கண்டுபிடிச்சுருக்காவ. அது அவிய வண்டிதேம். ஆனா இப்பத கடையில வித்துபுட்டம் வித்து ஒருவாரமாச்சுதுனுட்டானுவ. அந்த கடையில அந்த தேதிக்கு வித்தாப்புல ரசீதுலாம் காட்டுறானுவ. ஆனா எங்களுக்கு நம்பிக்கையா அமுடலைங்கண்ணே” என்று வளவன் கூறினான்.


“ஆள் யாரு?” என்று மித்ரன் கேட்க,


நண்பர்கள் இருவரும் ஒன்றுபோல், “தங்கபாண்டி” என்றனர்.


சற்றே மித்ரன் யோசனையாய் தன் புருவம் தேய்க்க,


“வெளிய போலீசுல பேசலாம்னு ரோசிச்சப்பதேம் வேலு நீங்க இந்தூரு பக்கம் மாத்தலாயி வந்துருக்கீயனு சொன்னியாம் அண்ணே. அதேம் ஒங்களப் பாத்தே பேசிட்டுப் போவம்னு அழச்சேம்” என்று வளவன் கூறினான்.


உள்மூச்சை வெளியேற்றியபடியே தலையாட்டியவன், “தொழில்முறை பகையத்தவிர தனிப்பட்ட பகைனு எதுவும் இருக்காடா?” என்று கேட்க,


“அப்புடி ஏதும் அமுடலைணே” என்று கூறினர்.


சிறு தலையசைப்புடன் யோசித்தவன், “அவங்க ஃபோட்டோ நம்பர் இப்படி எதுவும் இருக்காடா?” என்று கேட்க,


“இருக்குண்ணே” என்ற வடிவேல் அவற்றைப் பகிர்ந்துகொண்டான்.


அவற்றை வாங்கிக் கொண்ட மித்ரன், “நான் என்னனு விசாரிக்குறேன் வளவா. உன் வைஃப வேணும்னே தான் ஆக்ஸிடென்ட் பண்ணியிருக்காங்கனா பெரியளவு பகையெதும் இருக்கும். கொலை அளவுக்கு போறாங்கனா அதை என்னனு தெரிஞ்சுகிட்டு அடுத்த ஸ்டெப் வைக்குறது அவசியம். நீ அவங்கள பத்திரமா பார்த்துக்கோ. மத்த எல்லாரையுமும் சேஃபா இருந்துக்க சொல்லு” எனக் கூற,


“சரிண்ணே” என்றான்.


அவன் முகத்தின் சோர்வை கண்டு, “அவங்க பெயர் என்னடா? எப்படியிருக்காங்க இப்ப?” என்று கேட்க,


பெயருக்கும் கூட நோகாதபடி, “மித்ரா” என்றான்.


“ஆங்?” என்று மித்ரன் விழிக்க,


பக்கென்று சிரித்த வடிவேல், “தங்கபுள்ளைக்கு ஒங்க பேருதேம் அண்ணே. சங்கமித்ரா” என்று கூறினான்.


அதில் மித்ரன் தானும் புன்னகைக்க, “வண்டில அடிச்சுட்டாவண்ணே. தலையில கையுல காலுலலாம் அடி. அ..அவோ தொண்டையில” என்றவனுக்குத் தொண்டை அடைத்துக் கொண்ட உணர்வு.


வடிவேல் அவன் தோளைப் பற்றி அழுத்திக் கொடுக்க, நண்பனைப் பார்த்து பெருமூச்சு விட்டவன், மித்ரனைப் பார்த்து, “தொண்டையில அடி அண்ணே. அ..அடுத்து அதுக்கு சிகிச்ச எடுத்தாதேம் பேச்சு வருமினுட்டாவ” என்க, 


சற்றே அதிர்ந்த மித்ரன், “என்னடா சொல்ற?” என்றான்.


சிவந்த கண்களை மூடி, எச்சிலைக் கூட்டி விழுங்கியவன் தனது சோகத்தையும் சேர்த்தே விழுங்குவது புரிய, அவன் அருகே வந்தமர்ந்த மித்ரன் அவன் தோளை அழுந்த பற்றித் தட்டிக் கொடுத்தான். “பாவம்ணே அவோ” என்று கலக்கமாய் வளவன் கூற,


“எதுவும் யோசிக்காதீங்க. எல்லாம் சரியாப்போவும். என்கிட்ட சொல்லியாச்சுல? இனி இந்தப் பிரச்சினைய நான் பார்த்துக்குறேன். நீ அவங்கள மட்டும் கவனிச்சுக்கோ” என்று கூற, இருவரும் தலையசைத்துக் கேட்டுக்கொண்டனர்.



Comments

Popular posts from this blog

திருப்பம் -01

திருப்பம்-03

திருப்பம் -02