திருப்பம்-78
திருப்பம்-78
நினைவுகளிலிருந்து மீண்ட வளவன் வெளியே வர, அனைவரும் அவனையே வருத்தமாய் பார்த்து நின்றனர்.
“இங்கனயே என்ன பார்வ? எல்லாம் அவிய அவிய சோலிய பாருவ. அவ முன்னுக்க மொகத்த இப்புடியே வச்சுகிட்டு இன்னும் சங்கடப்படுத்தாதீய” என்றவன், விடுவிடுவென மேலே உள்ள அவர்களது அறைக்குச் சென்றான்.
அவ்வறையைத் திறந்ததும் எழும் வாசமே அவனுக்குள் என்னவோ செய்தது.
ஏக்கம்… சொல்ல முடியாத அளவு ஏக்கத்தைக் கொடுத்தது. அவளும் அவனும் அந்த அறையும் தான் எத்தனை நினைவுகளையும் உணர்வுகளையும் தாங்கியிருக்கின்றது? இன்று அவளுக்கு அவ்வறையில் பிரவேசிக்கக் கூட இயலாத நிலையில் படுத்திருக்கின்றாளே? என்று வருத்தமாகவும் இருந்தது.
அவளை திடமாய் வைத்திருக்கத் தன் திடத்தை கடைப்பிடித்து அவளை தெம்பூட்டுகின்றான் என்றாலும், அவள் தவிப்பைக் கண்டு தவியாய் தவிக்கும் தன் மனதின் வலிகளை அவனால் இல்லையென்றிட இயலுமா என்ன?
சென்று அலமாரியிலிருந்து அவளது புடவை ஒன்றை எடுத்துப் படுக்கையில் விரித்தவன் அதனில் குப்புறப் படுத்துக் கொண்டான்.
ஊருக்குச் சென்ற தாய்க்காக ஏங்கிய பிள்ளையைப் போல், அவளுக்காக அவன் ஏங்கினான். அவளுக்காக ஏங்கினான் என்றால், அவள் அணைப்பையும், அரவணைப்பையும், தீண்டலையும் கேட்டு அவன் மனம் ஏங்கவில்லை. அவளை அவளாய் பெற்றிட ஏங்கினான்.
அவளை அவளாய் என்றால், அவளது உடலும் குரலும் பழைய நிலைத் திரும்பிட அவன் ஏங்கவில்லை. அவள் நிலையும் மனமும் திரும்பிட ஏங்கினான்.
அவள் இதழ்கள் தொலைத்தப் புன்னகையை அவளுக்கு மீட்டுக் கொடுத்திட ஏங்கினான். அவள் விழிகள் தொலைத்த உயிர்ப்பை மீட்டுக் கொடுத்திட ஏங்கினான். அவள் மனம் தொலைத்த சந்தோஷத்தை மீட்டுக் கொடுத்திட ஏங்கினான். மொத்தத்தில் என்ன செய்தால் அவள் துறுதுறுப்பை மீட்டுவிட இயலுமென்ற தேடலில் விடையறியாமல் ஏங்கித் தவித்தான்.
அவள் புடவையில் முகம் புதைத்து வாசம் இழுத்தவன் விழியோரம் கண்ணீர்த்துளி வழிந்தது. இது தற்செயலாக அல்லாது தங்கபாண்டியின் ஆட்கள் துணிந்து செய்த செயலாக இருப்பின்
தன்னைத்தான் தன்னால் மன்னிக்க இயலுமா என்று அஞ்சினான்.
அவள் வடித்தக் கண்ணீரின் ஓலம் இன்னும் அவன் காதுகளுக்குள் ரீங்காரமிட்டு இரைச்சலாய் ஒலித்தது. 'அழுவாதடி.. நெஞ்ச ஆரோ பிடுங்கி ஏறியுறாப்ல இருக்குது’ என்று மனதோடு முனுமுனுத்துக் கொண்டு நிமிர்ந்து படுத்தவன், தன் நெஞ்சை நீவிக் கொண்டான்.
மனம் தவியாய் தவிக்க, அதை முழுதாய் உணர்ந்து கரைந்தவன், அவளுக்காக அவன் பரிசளித்தக் கடிகாரத்தைப் பார்த்தான். அதனில் உள்ளத் தங்கள் கோர்த்துக் கொண்ட கரத்தினை வெறித்தவன், நேரம் கண்டு விரைவே எழுந்தான்.
வந்து இரண்டரை மணி நேரம் கடந்ததைக்கூட தான் உணரவில்லையா? என்று ஆச்சரியம் கொண்டோனாய் சென்று முகம் கழுவி புத்துணர்ச்சிப் பெற்று வந்தவன் கீழே வர, மாலைநேரத் தேநீர் படலம் ஓடியது.
வளவனைக் கண்டதும், “டீ போடவா கொழுந்தரே” என்று கார்த்திகா கேட்க,
“வேணாம் மைணி” என்று அவள் அறையைப் பார்த்தான்.
“சங்கு இன்னும் முழிக்கல கொழுந்தரே. இப்பதேம் போயி பாத்துட்டு வந்தேம். உச்சிக்கும் நீங்க சரியா பசியாறலனு அத்தே வெசனப்பட்டுகிட்டு இருந்தாவ. டீயாது போட்டுத்தாரனே” என்று கார்த்திகா கேட்க,
“பசியில்ல மைணி” என்றவன் சமையலறைப் பக்கம் சென்றான்.
“என்ன வேணுமின்னு சொல்லுங்க கொழுந்தரே” என்று கார்த்திகா கேட்க,
“அவளுக்கு ஜூஸு மைணி. நானே போட்டுகிடுதேம்” என்று கூறியபடி பழத்தை எடுத்தான்.
“நாந்தேம் போடுதேனே” என்று அவள் கூற,
“நாயில்லாதப்ப நீங்கதேம் அவோளூக்குச் செய்யனும். நானிப்ப இருக்கேம்ல? நானே செய்யுறேம் மைணி” என்றவனாய் பழத்தை வெட்டினான்.
அதற்குமேல் வற்புறுத்தாமல் அவளும் சென்றுவிட, தானே அவளுக்காக பழத்தை வெட்டி அரைத்து குவளையில் ஊற்றிக் கொண்டு அறைக்குச் சொன்றான்.
உறக்கத்தில் இருந்தவள் அருகே சென்று, பார்த்தவன், குவளையை மூடி வைத்துவிட்டு, மாலைநேரம் போடவேண்டிய மாத்திரைகளையெல்லாம் பார்வையிட்டுக் கொண்டிருக்க, அவளும் மெல்ல மெல்ல தூக்கம் கலையத் துவங்கினாள்.
இரவு சரியான தூக்கமில்லாது போய்விடக்கூடாதென்றே அவளை மாலை அதிக நேரம் தூங்க அனுமதிக்காது எழுப்பியவன், அவளை மெல்ல அமர வைக்க, பொம்மை போல் அவன் செயலுக்கு உடன்பட்டாள்.
“பாத்ரூம் போனுமா மித்ரா?” என்று அவன் கேட்கவும், இல்லையென அவள் தலையசைக்க, ஒரு துண்டை நீரில் நனைத்து எடுத்து வந்தவன், அவள் முகம் கழுத்துக் கையெல்லாம் துடைத்துவிட்டு, பழச்சாறைப் புகட்டினான்.
அவன் உபசரிப்புகளை ஏற்று அதனைக் குடித்து முடித்தவளுக்கு மருந்துகளைக் கொடுத்தவன், அருகே அமர்ந்து கொள்ள,
மெல்ல அவன் தோள் சாய்ந்தாள்.
மௌனத்தின் பெரும் ஓலம் அவ்வறையில் எதிரொலித்தது.
“மித்ரா..” என்று அவன் மென்மையாய் அழைக்க,
அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
“போரடிக்குதா?” என்று அவன் கேட்க,
பதிலேதுமின்றி அவனைப் பார்த்தாள்.
“தெரியிலயாக்கும்?” என்றவன், “அமைதியாருக்காதடி” என்க,
அவள் விழிகளில் மலுக்கென்று நீர் கோர்த்துக் கொண்டது.
அவள் தாடை பற்றித் தன்னை நோக்கச் செய்தவன், “அமைதிங்குறது பேச்சுல போவுரதில்லடி. கரிக்காது நாம்பேசுறது கேளு. ஓம் கண்ணும் மனமும் சொல்லும். நீயு அமைதியாருக்கியா இல்லையான்னு. வாயி சொல்லனும்முனு இல்லட்டி” என்று கூற,
அவன் கன்னத்தில் கரம் வைத்து மெல்ல வருடினாள்.
அவள் தலையில் கரம் வைத்துத் தடவியவன், “மண்டைல போட்டிருக்க போண்டேஜு உறுத்தினா எடுத்துகிடலாம்முனு சொல்லிட்டாவ மித்ரா. நாளைக்கு வேணுமின்னா பிரிச்சுடுதேம். களிம்பு ஒன்னுத் தந்திருக்காவ. அதையும் தேச்சு விடுதேம்” என்று அவன் கூற,
மெல்ல தலையசைத்தாள்.
சிலநிமிடம் மீண்டும் அமைதி தொடர, “என்னமாது சாப்புடுதியா?” என்று கேட்டான்.
வேண்டாமென்று அவள் தலையசைக்க, “பாட்டு கேக்கியா?” என்றான்.
பதில் இல்லை அவளிடம்.
“பாட்டு கேட்டுபுட்டா நம்ம கொரலு போச்சேனு நெனப்பு வருமோனு யோசிக்கீயாக்கும்?” என்று அவன் கேட்க,
தன் அகம் கேட்டதை தன் முகம் பார்த்துக் கேட்கும் கணவனை ஆச்சரியமாய் நிமிர்ந்து பார்த்தாள்.
“திருமாலுக்குத் தெரியுமுடி” என்றவன், “கண்டதயும் யோசிச்சு தவிக்காதடி. நாஞ்சொல்லுறேம்ல? எம்மேல ஆணையா சொல்லுதேம்டி. ஒன்னுமில்ல ஒனக்கு. எல்லாஞ் சரியாப்போவும்” என்று கூற,
சோபையாய் புன்னகைத்தாள்.
அவள் மூக்கைப் பிடித்து ஆட்டயவன், அவள் மனம் கவர்ந்த மன்னாலனிலிருந்து மனக்கவலைக் கலையும் மணவாளனாய் மாறும் பணியில் தன்னை ஈடுபடுத்த ஆயத்தமாகத் துவங்கினான்.
நாட்கள் கடந்து வாரங்களில் பயணித்து சோகத்துடன் நகர, அன்றைய நாள் அமைதியாய் கூரையை வெறித்தபடியே படுத்திருந்தவள் முகத்தில் அச்சின்ன மாற்றம் தோன்றியதுமே அருகே வந்த வளவன், "பாத்ரூம் போனுமா மித்ரா?" என்று கேட்டான்.
அவன் கேட்ட பின்புதான், அவளுக்கே தன் தேவை புரிந்தது.
தன் நிலையைக் கண்டவள் கண்களில் மலுக்கென்று நீர் கோர்த்துக் கொள்ள, தன்னைப்போல் கீழதரங்களை அவள் பற்கள் கொடுமை செய்தன.
அவளை பொன்போல ஏந்திக் கொண்டவன், அவளுக்கான தேவைகள் முடித்துக் கூட்டிக் கொண்டுவர, அவனையே வைத்த விழி அகற்றாது பார்த்தாள்.
"என்னடி?" என்று கேட்டவன் அவளைப் படுக்க வைத்து, உடைகளைத் திறுத்த, பேசவும் முடியாமல், கைகளால் சைகையும் காட்ட முடியாமல் இருக்கும் நிலை அவளை மிகவும் நச்சரித்தது.
"இஞ்சாரு.. நீயி பேசிதேம் எனக்கு புரியனுமின்னு இல்ல மித்ரா. ஓம் பார்வ சொல்லும்.. தேவையில்லாம நோவாதடி" என்று மென்மையாய் அவள் கன்னம் வருடியபடி அவன் கூற, 'அப்படியா?' என்பதாய் பார்த்தாள்.
"அப்படித்தேம்" என்று அவன் கூற,
தன்னை முழுதாய் ஒரு பார்வை பார்த்துக் கொண்டவள், அவனைப் பரிதாபமாய் பார்த்து, 'வேண்டாம்' என்பதைப்போல் தலையசைக்க,
"நாஞ்செய்யுறதுல எனக்கே கஸ்டமில்லடி. பொறவென்ன ஒனக்கு?" என்றான்.
அவனை ஆச்சரியமாய் பார்த்தாள். 'எனக்காக ரொம்ப கஷ்டபடுறீங்க' என்ற அவளது கேள்வியை, அப்படியே புரிந்துகொண்டு அல்லவா பதில் தருகின்றான்?
தனக்கானத் தேவைகளில் ஒன்றைகூட புறக்கணிக்காமல், செய்கின்றேன் என்று முன்வந்த கார்த்திகா, தனம் மற்றும் தெய்வாவையும் செய்ய விடமால் அவன் அல்லவா அத்தனையையும் செய்து வருகின்றான்? அதில் அவனைக் கஷ்டப்படுத்துவதாய் அவளுள்ளளேயே எண்ணம் தோன்றி அவளை ஆட்டிப் படைத்தது.
அவள் அருகே சரிந்து அமர்ந்தவன், அவள் தலையை பரிவாய் கோதி, "எம்பொஞ்சாதி ரொம்ப கூச்ச சுபாவம்டி.. என்னயத்தவிர யாருட்டயும் ஒதவிலாம் கேட்டுகிட மாட்டா" என்று குறும்பாய் கூற,
அவள் கன்னங்கள் சூடேறி சிவந்தன.
முகத்தை மறுபக்கம் திருப்பிக் கொண்டவளுக்கு, அந்த நிமிடம் அவன் கூறிய வார்த்தைகளின் உண்மை உரைத்தது.
தன்னைப் பற்றிய யோசனையில் இறங்கியவள் எதிரே இருந்த கண்ணாடியில் தன்னை நோக்க, மளிக்கப்பட்டுக் கொஞ்சம்போல் முளைக்கத் துவங்கியிருந்த சிகை, கழுத்தில் காதிலென்று எதுவும் இல்லாமல், இரவு உடையில் கண்களில் உயிர்ப்பின்றி இருந்தாள்.
ஆனாலும்கூட, உடல் நலம் முடியாதவள் தானே? என்று எண்ணாமல் சிரத்தையுடன் அவளுக்கான தேவைகள் செய்யப்பட்டிருந்தது. உடை கசங்காது, முளைத்திருக்கும் ஊசிமுடிக்குத் தவராமல் எண்ணைத் தேய்க்கப்பட்டு, முகத்திலும் கழுத்திலும் உள்ளக் காயங்களுக்கு மருந்திடப்பட்டு, என்று உயிர்ப்போடு நோக்குபவர் கண்களுக்குப் புலப்படும் ஒரு நேர்த்தி தெரிந்தது.
அது அவன் ஒருவனால் மட்டுமே தனக்குக் கொடுக்க முடியும் என்பதும் புரிந்தது. அவனை மெல்ல அவள் திரும்பிப் பார்க்க, "இப்ப ஒத்துக்கிடுதியா?" என்றான்.
'ஏன் இப்படி?' என்று அவள் நோக்க,
"ஏன்னா நீயேம் மித்ராடி" என்று கூறி அவள் நெற்றியில் இதழ் ஒற்றியெடுத்தான்.
விழிகள் கலங்க அவனைப் பார்த்தவள், முகத்தைத் திருப்பிக் கொள்ள, அவள் தாடை பற்றித் தன்னை நோக்கச் செய்தவன், “அழுவாதடி’’ என்றான்.
அவன் மார்பில் முகம் புதைத்துக் கொண்டபடி அவள் படுக்க, அவள் தலை கோதியபடி, அவளது மனநிலையை மாற்றும் பொருட்டு, “நேத்து ஆஸ்பிடல்ல அந்த நர்ஸு ஒங்கிட்ட என்ன கேட்டாவ?” என்று கேட்டான்.
மெல்ல அவனை நிமிர்ந்து பார்த்தவள் திருதிருவென விழிக்க,
தன் மேலிதழின் ஓரத்தை மீசையோடு சேர்த்துக் கடித்தவன், குறும்பில் சுருங்கும் விழிகளுடன் அவளை நோக்கி, தன் புருவங்களை ஏற்றி இறக்கினான்.
அவன் மார்பில் தன் ஆள்காட்டி விரலால் குத்தி அவனையும் தன்னையும் சுட்டிக்காட்டியவள், கட்டைவிரலையும் ஆள்காட்டி விரலையும் குறுக்கே பிடித்து இதயம்போல் அபிநயம் செய்தாள்.
அழகாய் புன்னகைத்தவன், “லவ் மேரேஜானு கேட்டாவளோ?” என்று கேட்க,
புன்னகைக்கத் துடிக்கும் இதழை ஓரமாய் உள்ளிழுத்துக் கடித்தவளும் மேலும் கீழுமாய் தலையசைத்தாள்.
“மேடம் என்ன சொன்னீய?” என்று அவன் கேட்க,
நாணம் படரத் தலை தாழ்த்தினாள்.
அவள் தாடைப் பற்றி முகம் நோக்கச் செய்தவன், “ஆமானு சொன்னாப்லதேம் இருந்துச்சு” என்க,
மெல்ல ஆமென்று தலையாட்டினாள்.
சட்டென நிமிர்ந்து, ‘அரேஞ்ச் கம் லவ்' என்று அபிநயம் பிடித்து விளக்க முயற்சிக்க,
வாய்விட்டு சிரித்தவன், அவள் உச்சியில் இதழ் பதித்து, “ஆ.. குத்துதுடி” என்று தன் இதழைத் தேய்த்துக் கொண்டான்.
குறும்பாய் அவன் மீசையைப் பாவை மெல்ல வருட, “இந்த மீசயில எம்புட்டு நா நாங்குத்து வாங்கிருக்கேமுங்குறியோ?” என்று கேட்டவன், “கேடிடி நீயு” என்று கூறி அவள் கன்னத்தில் முத்தமிட்டு அவளைப் புன்னகைக்கச் செய்தான்.
Comments
Post a Comment