திருப்பம்-79

 திருப்பம்-79



மாதம் ஒன்றுக்கு மேல் கடந்திருந்தது. சங்கமித்ராவின் நிலையில் முன்னேற்றமும் பின்னடைவும் சரிசமமாய் இருக்க, மறைமுகமாய் யாழ் மித்தரனிடம் கொடுத்த வழக்கும் அவ்வகையிலேயே சென்றது.


தங்கப்பாண்டியை நோட்டம் விட்டவனுக்கு வளவன் மீது அவன் வைத்திருக்கும் அதிருப்தியும், கோபமும், பகைமையும் அப்பட்டமாய் விளங்கியது தான் என்றாலும் அது தொழில் ரீதியான பகைமை மட்டும் தானா என்று உறுதி செய்துகொள்ள இயலவில்லை.


“அவனுக்கு உங்களப் பிடிக்கலைங்குறது தெளிவா தெரியுது. ஆனா அந்த பகைமை எந்த அளவுங்குறதுதான் தெரியலைடா. அப்றம் அந்த கடைலயும் ஆள் வீட்டு விசாரிச்சேன். அந்த வண்டிய ஆக்ஸிடென்ட் ஆகுறதுக்கு ஒரு வாரம் முன்னவே வித்துட்டதா தான் முதல்ல சொன்னான். பிறகு கேக்குற விதத்துல கேட்கவும் உண்மைய ஒத்துகிட்டான். ஆக்ஸிடென்ட் பண்ணின அன்னிக்கு, சரியா சொல்லனும்னா ஆக்ஸிடென்ட் பண்ண அடுத்தே வண்டிய வித்துருக்கானுங்க” என்று யாழ் மித்ரன் கூற,


“நெனச்சேம் அண்ணே” என்று வளவன் கூறினான்.


“இத வச்சு அவிய மேல கேஸு போட முடியாதா அண்ணே?” என்று வடிவேல் கேட்க,


“போடலாம். ஆனா தங்காதுடா. அவங்களுக்கு இன்ப்லூயென்ஸ் அதிகமாருக்கு. வாலிடான எதும் ஆதாரம் இருந்தா ஸ்டிராங்கா அப்போஸ் பண்ணலாம்” என்று மித்ரன் கூறினான்.


“என்னத்துக்குண்ணே இம்புட்டுத்தூரம் ஏறங்கினாவ? அம்புட்டு என்னத்தப் பண்ணோமுனு ஆட்டங்காட்டுறாவ?” என்று வளவன் கேட்க,


“தெரியலைடா. நேரடியா விசாரிச்சா தெரிஞ்சுக்கலாம் தான். ஆனா அதுல நமக்கு கேஸ் போடும்படியான ஆதாரம் எதுவும் சிக்காது. இத்தனை வருஷ சண்டை. சட்டுனு ஒரு முடிவுக்கு வந்துட முடியாதுல? கொஞ்சம் பொறுத்திருந்து பார்ப்போம்” என்று மித்ரன் கூறினான்.


“ம்ம்.. புரியுதுண்ணே” என்று இருவரும் கூற,


“சரிடா. இப்போதிக்குப் பயப்பட எதுவுமில்லைனுதான் படுது. ரிலாக்ஸாகுங்க. என்னனு சீக்கிரம் கண்டுபிடிச்சுடலாம்” என்று மித்ரன் கூறினான்.


அதையடுத்து சில பொதுவான பேச்சுவார்த்தைகள் தொடர,


“அண்ணே.. ஒங்களுக்கும் மைணிக்கும் லவ் மேரேஜோ?” என்று வடிவேல் கேட்டான்.


அத்தனை நேரம் ஒரு திடம் பூசியிருந்த மித்ரனின் முகம் பூவாய் இழக, அதரங்களில் மெல்லிய புன்னகை தோன்றியது.


“அண்ணே.. வெட்கமோ?” என்று வளவனும் கேலி செய்ய,


“டேய் ஏன்டா?” என்று சிரித்தவன், “லவ் மேரேஜே தான்” என்றான்.


“ஆஹாங்! மொதல்ல யாரு பண்ணது? நீங்களா மைணியா?” என்று வடிவேல் கேட்க,


“அவதான்டா. சொல்லாமலே பல வருஷமா லவ் பண்ணி அப்பறம் சொல்லி ஒரு வருஷம் லவ்” என்று கூறியவனுக்கு அவர்கள் வாழ்வின் கடந்துசென்ற அழகிய பக்கங்கள் ஒருமறை நினைவில் வந்து இசைமீட்டிச் சென்றது.


“பாரு.. சொல்லும்போதே அண்ணே மொவம் மின்னுது” என்று வளவன் சிரிக்க,


“அதுலாம் ஒரு ஃபீல்டா” என்று சிரித்தவன், “போதும்டா உங்க விளையாட்டு. எல்லாம் அவங்கவங்க வீட்டப்பாத்து போங்க” என்று கூறி அக்குளம்பிக் கடையிலிருந்து புறப்பட எழுந்தான்.


நண்பர்கள் இருவருமும் எழுந்து கொள்ள,


மூவரும் புன்னகையாய் விடைபெற்றுக் கொண்டனர்.


இதனைத் தன் பார்வையால் தொடர்ந்த ஒருவன், “அண்ணே.. ஆமான்னே.. இவனுவ ரெண்டேரும் சும்மாலாம் இல்ல. அந்த போலீசுட்டத்தேம் பேசிட்டுப் போறானுவ” என்று அலைபேசியில் கூற,


“நனச்சேம்லே. இவனுவ அப்புடிலாம் சும்மாருக்குற ஆளுவளா? பாக்கேம் பாக்கேம்.. எந்தக் கொம்பனால என்னய என்னம்லே பண்ணிட முடியும்? பாத்துகுடுதேம். அந்தப் போலீசு ஆரு என்னனு விசாரிச்சுட்டு வா” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தான், தங்கபாண்டி.


ஆடவர்கள் இருவரும் வளவன் வீட்டை அடைய,


சுடசுட ஆட்டுக்கால் சூப்பின் வாசம் கமகமவென்று வீசியது. 


இருவரும் உள்ளே செல்ல,


“ஏட்டி அம்புட்டுத்தேம் ஒன்னய. நில்லுங்கேம்ல? நில்லுட்டி.. சூப்பக்குடிச்சுப்போத்தா. ஒங்கைய்யன் என்னய ஒரு சூப்புக்கூட எம்புள்ளைக்குக் குடுக்கத்தெரில ஒனக்குனு நளியடிப்பியான். இந்தத் தனத்துக்கு பெரும் கௌவுரவக் கொரச்சலுடி அது” என்று கத்தியபடியே நீள்விருக்கையையும் தூணையும் சுற்றிச் சுற்றி ஓடும் ஒளிசுடரை அடக்க வழியறியாமல் தவித்துக் கொண்டிருந்தாள், தனலட்சுமி.


உள்ளே நுழைந்த இருவரும் இக்காட்சியைக் கண்டு சிரித்துவிட, அதெல்லாம் அவள் காதிலேயே கேட்கவில்லை.


“அத்தா அத்தா.. சூப் வேணா..” என்று மழலையில் கொஞ்சியபடி ஒளிசுடர் ஓட,


“வெளுக்கப்போதேம் பாரு” என்று கண்டித்தாள்.


அவளுக்கு உதவுகின்றேன் என வடிவேல் உள்ளே செல்லவும், அவனை கவனியாது அவன்மீது மோதியவள், தடுமாற, அவள் தோள் பற்றிப் பிடித்து நிறுத்திய வடிவேல், “ஏட்டிக் கோம்ப பாத்து” என்றான்.


அவன் புஜங்களைப் பற்றிக் கொண்டு நிலை பெற்றவள், தனது சித்தப்பனின் கைகளில் ஒய்யாரமாய் ஏறிக் கொண்ட சுடர் கிளுக்கிச் சிரித்து, “அத்தா அவுத்” என்ற சப்தத்தில் சுயம் பெற்றுத் திரும்பினாள்.


வளவன் அழகானதொரு புன்னகையுடன் அவர்களை நோக்க, பாவம் வடிவேலுவிற்குத்தான் வெட்கம் வந்துத் தொலைத்தது.


சட்டென அவள்மீதிருந்து அவன் கரமெடுத்துக் கொள்ள, ‘அய்யோ.. இந்தாளும் இவிய வெட்கமும்’ என்று உள்ளுக்குள் செல்லமாய் சளித்துக் கொண்டவள், முகவாயைத் தோளில் இடித்துக் கொண்டு நகர,


“எம்புள்ளைக்கு சூப்பக் குடுத்தியாடி?” என்றபடி கார்த்திகா வந்தாள்.


“மைணி.. நானு ஏந் தோள்விய ஒத்துக்கேம். என்னால ஒங்க புள்ளைக்கு சூப்பக் கொடுக்க முடியல” என்று ஆயாசமாய் அவள் கூற,


அனைவரும் அதில் சிரித்துக் கொண்டனர்.


அதனைக் கேட்டபடியே கோவில் சென்று திரும்பிய தெய்வா, நாட்கள் பல கழிந்துத் தன் வீட்டில் கேட்கும் சிரிப்பொலியில் மனம் நிம்மதி கொண்டார்.


வடிவேலைக் கண்டவர், “வாய்யா சாமி.. பாத்தே ரொம்ப நா ஆவுது” என்று கூற,


“நிச்சயமாச்சுதுல? அதுலாம் அடிக்கடிக்கு வரக்கூடாது” என்று வளவன் கூறினான்.


“ஏம்லே? அவேம் நம்மூட்டுப் புள்ள. அதுலாம் ஒன்னுமில்லயா. நீயு வந்துபோ” என்று வேகமாய் தெய்வா கூற,


அதற்கு புன்னகையை பதிலாய் கொடுத்தான்.


“தனம் சூப்பக்குடு நாம் புள்ளைக்கு ஊட்டுதேம்” என்று வளவன் கூற,


“நீயு போயி தங்கபுள்ளைக்கு ஊட்டுலே. நாம்புள்ளைக்கு ஊட்டுதேம்” என்று வடிவேல் கூறினான்.


“புள்ளைக்குக் குடுத்துட்டுப் போறம்லே” என்று வளவன் கூற,


“கொழுந்தரே.. ஏம்புள்ளைக்கே ஊட்டுவ. அண்ணே.. நீங்க இதப்புடிக. நீங்க குடிப்பீயளோ இல்ல ஒங்க ஆளுக்கு ஊட்டுவியளோ உங்கப்பாடு. சங்குக்கு எப்பதயோ சூப்பக் கொடுத்து விட்டுச்சு. குடுச்சுட்டுத்தேம் இருப்பா” என்று கார்த்திகா கூறினாள்.


“அவளா குடிக்களா?” என்று தெய்வா கேட்க,


“ஏம்மா இல்லன்னா நீயு ஊட்டப்போதியா?” என்று தனம் கேலி செய்தாள்.


தெய்வா அவளை முறைத்து, “ஏன்டி முடியாதவளுக்கு செய்யாதளவு நானுயென்ன அகம்புடிச்சா திரியுறேம்?” என்க,


“அத்தே.. நீங்க செய்யுறேன்னு நின்னாகூட கொழுந்தரு வேணாமுனுல சொல்லுறாவ? ஆரையும் பக்கத்துல விடாதபடிக்கு எம்பொஞ்சாதிக்கு நானே எல்லாஞ் செஞ்சுகிடுதேமுங்குறாவ. ஏதோ இப்புடி வெளிய வாசனு அவிய போனாதேம் நாம செய்ய முடியும்” என்று கார்த்திகா கூறினாள்.


“ஆமா ஆமா.. அண்ணே அதுவுரிமய விட்டே கொடுக்க மாட்டிக்கு” என்று தனம் கூற,


“இப்பத யாருதேம் ஊட்டுதாவ தங்கபுள்ளைக்கு?” என்று வடிவேல் கேட்டான்.


“நாந்தாம்லே ஊட்டினேம். என்னம்லே இப்பத ஒனக்கு?” என்றபடி விக்ரமன் வெளியே வர,


“ஏலே மக்கா.. நீயேம்லே ஊட்டுத?” என்று தெய்வா கேட்டார்.


“ஏம்மா? என்ன ஆவிப்போச்சு இப்பத?” என்று விக்ரம் கேட்க,


அவருக்கு பதில் பேசிட வரவில்லை. 


ஆனால் பழைமை குணம் கொண்டவருக்கு விக்ரம் சென்று சங்கமித்ராவிற்கு கொடுத்ததில் அதிருப்தி எழுந்திருந்தது.


என்ன முயன்றும் தடுக்க இயலாத அவரது முக பாவமே அதனைக் கூற,


“எனக்குச் சுடரு எப்புடியோ அந்த புள்ளையும் அப்புடித்தேம். முடியாது கெடக்கவளுக்கு ஒருவா ஊட்டுறதுல பாக்குறவிய என்ன வேணா நெனச்சுகுடட்டும். எங்க மனசு சுத்தமாதேம் இருக்குது” என்று அழுத்தமும் கோபமுமாய் கூறியவன், தம்பியிடமிருந்துத் தன் குழந்தையையும், தங்கையிடமிருந்து கின்னத்தையும் வாங்கிக்கொண்டு வெளியே சென்றான்.


“அம்மா ஒனக்கு எப்ப என்னத்தப் பேசனுமின்னே தெரியாதாம்மா? வயசு ஏற ஏற ஓம்புத்தியேம்மா இப்புடிப்போவுது?” என்று தனம் கடிய,


“ஏட்டி நானு ஒன்னும் தப்பா நெனச்சு சொல்லலடி” என்றவர் மகனைக் கண்டு பதட்டமாய், “அவளோக்குச் செய்ய வேணாமுனுலாம் சொல்லலயா. அவோளுக்கே ஏதும் சங்கடமாயிடுமௌனுதேம்” என்று கூறினார்.


எந்தவித உணர்வையும் வெளிக்காட்டாத பார்வை ஒன்று வீசியவன், “போயி கைய கால கழுவிட்டு பசியாறுவ ம்மா” என்று கூறவும்,


மகனை வருத்தமாய் பார்த்தவரும் உள்ளே சென்றுவிட, “ஏம்னே ஒரு வார்த்த படக்குனு கேக்கத்தான?” என்று தனம் கேட்டாள்.


“அவிய அவோள வேணுமின்னு பேசயிலயே நானு ஒன்னுஞ்சொல்லாதபடிக்குதேம் இருந்தேம். என்னமோ நெனச்சு என்னத்தயோ மொவத்துல காட்டிப்புட்டுப் போனதுக்கா புள்ள திட்டனுமுங்க? போத்தா.. திட்டனும்முனா இங்க கணக்கு போட்டு அம்புட்டுக்குத்திட்டலாம். அங்க அவள அப்புடி படுக்கப்போட்டுகிட்டு எனக்கு நாளும் பொழுதுமே உசுரோட ஓட மாட்டிக்குது. இதுல ஒடக்கிழுக்குறது ஒன்னுதேம் கொற” என்று ஆயசமாகவும் வருத்தமாகவும் கூறிவிட்டு அவளிருக்கும் அறைக்குச் சென்றான்.


அவன் பேசிவிட்டுச் சென்ற வரிகளில் கூட்டத்திலிருந்த மூவருமே மிகுந்த வருத்தத்திற்கு ஆளாக,


“அண்ணேன இப்புடிப் பாக்கவே வெசனமாருக்குது. எல்லாஞ் சீக்கிரம் பழயபடிக்கு அவனும் முருகா” என்று தனம் வாய்விட்டு வேண்டிக் கொண்டதை ஆமோதிப்பதாய் மற்றவர்களும் தலையசைத்தனர்.


உள்ளே சாய்ந்து அமர்ந்தபடி, என்ன செய்வதென்றே புரியாமல் பிரம்மை பிடித்தார் போல் அமர்ந்திருக்கும் சங்கமித்ராவைப் பார்த்த வளவனுக்கு மனதில் இன்னும் பாரம் கூடியது.


அதை வெளிகாட்டாது முகத்தில் உற்சாகமான பாவத்தைக் கொண்டுவந்தவன், “மித்ரா” என்று அவளருகே வந்து அமர,


அவனைத் திரும்பிப் பார்த்து மெல்லிய புன்னகை சிந்தினாள்.


“சூப்பு குடிச்சியா?” என்று அவன் கேட்க,


சிறு தலையசைப்புடன், அவனைச் சுட்டிக் காட்டி, இரு விரல்களில் ‘இரண்டு’ என அபிநயம் பிடித்து, ஊட்டி விடுவதைப் போல் பாவனை செய்தாள்‌.


“விக்ரம் ஊட்டினியானா?” என்று அவன் கேட்க,


ஆமென்பதாய் தலையாட்டியவள், தன்னைக் காட்டி, ‘வேண்டாம்’ என்பதைப்போல் தலையசைத்து, இடது கையை கட்டிடப்பட்டிருக்கும் வலது கை விரல்களுடன் கோர்த்துக் காட்டி, மீண்டும் ஊட்டுவதைப் போல் காட்டினாள்.


“நீயு மொத வேணாமின்னு பொறவு அவேம் நீயும் அவேனும் பிரெண்ட்ஸுனு சொல்லி ஊட்டினியானா?” என்று அவள் விளக்கம் புரிந்தவனாய் வளவன் கேட்க,


அவன் தனது கோர்வைற்ற சைகைகளைக் கூட சரிவர புரிந்துகொள்வதில் மகிழ்வும் நெகிழ்வும் கொண்டவள், ஆமென்று தலையசைத்தாள்.


அவள் கன்னம் தடவிக் கொடுத்தவன், “நெசந்தானடி? ஆம்பள, பொண்டாட்டி இல்லாது ஒரு பொம்பளைக்கு என்னமும் செஞ்சா தப்பாக்கும்? அவேனுக்குக் காச்சலடிச்சப்ப நீயு ஆஸ்பத்ரி கூட்டிப் போயி கூட்டியாந்து கஞ்சி வச்சுக்குடுத்தத்தான? அவேம் வேணாமுன்னானா? மித்தவிய என்னமாது நெனப்பாவனுலாம் நெனக்காத மித்ரா. ஒனக்கு புடிக்கலினா சொல்லு ஆரும் மறுக்க மாட்டாவ” என்க,


அவசரமாய் ‘இல்லை இல்லை' என்று தலையசைத்தாள்.


அதில் சிரித்துக் கொண்டவன், “நா‌ள ஆஸ்பத்ரி போயி வருவோம்ன?” என்க,


மெல்ல தலையசைத்தவள், சிறு தயக்கத்துடன், மேலே கை காட்டினாள்.


“கேட்டுக்கேட்டு சங்கடப்படுத்தாத மித்ரா. ஒனக்கு மறுக்கா மறுக்கா இல்லங்க எனக்குதேம் வெசனமாருக்குது. மேலுக்குப்படி குறுகலாருக்கும். ஒன்னய தூக்கிட்டு மேல ஏற வசதிபடாது. ஒரு ரெண்டு மூனு மாசமுதேம். காலு சரியான பொறவாட்டிக்கு நம்ம அறக்கே போயிடலாம்” என்று அவன் கூற,


சோகமாய் சிரம் தாழ்த்தியவள் மெல்ல தலையசைத்தாள்.


அவள் தலை கோதியவன், “போரடிக்காடி?” என்று கேட்க,


'ரொம்ப' என்பதைப் போல் பார்த்து தலையசைத்தாள்.


“போனும் டீவியும் ரொம்ப நேரத்துக்குக் குடுக்கக்கூடாதுனு சொல்றாவடி. மண்டையில ஆபரேஷன் பண்ணிருக்குதுல?” என்றவன், “வேற என்னமாது வழி பாக்கேம்” என்க,


மெல்ல தலையசைத்துக் கொண்டாள். அப்போதே அவனுக்கு ஒரு யோசனையும் தோன்றிவிட, அதற்கான ஆயத்தங்களைச் செய்ய தயாரானான்.



Comments

Popular posts from this blog

திருப்பம் -01

திருப்பம்-03

திருப்பம் -02