8.சாராவின் ஜீபூம்பா

 அத்தியாயம்-8



"என்னடா சொல்ற?" என்று இலக்கியன் அதிர, "ஆமா மச்சி. குழந்தைக்கு எந்த செக்ஷுவல் அஃபென்சும் நடக்கலை" என்று தினேஷ் கூறினான். 


"அப்றம் அந்த காயம்?" என்று இலக்கியன் வினவ, 


"கத்தியால கீறின காயங்கள்டா. குழந்தையோட குரல் நாளங்கள் ரொம்ப கடுமையா பாதிக்கப்பட்டிருக்கு. இட் மீன்ஸ் குழந்தை ரொம்ப நேரம் கத்தி அழுதிருக்கா. அப்றம் கனமான இரும்பு பொருள் வைத்து குழந்தையோட தலையில் அடிக்கப்பட்டிருக்கு. தோல் எல்லாம் கிழிச்சு ஸ்கல்லை (மண்டையோடு) கிராக் பண்ணிருக்கு. அப்றம் உடம்புல எந்த கைரேகையும் இல்லை" என்று தினேஷ் கூறினான்.


"இட் சீம்ஸ்..?" என்று இலக்கியன் நிறுத்த, 


"சைக்கோ கில்லிங்கா கூட இருக்கலாம்" என்று தினேஷ் பதிலளித்தான். 


சரியென அழைப்பைத் துண்டித்தவன் அப்படியே நிற்க, சாரா ஹாரனை அலறவிட்டு "லக்கீ.." என்று கத்தினாள்.


அதில் திடுக்கிட்டுத் திரும்பியவன், "பாப்பா.." என்க, 


"எவ்வளவு நேரமா கூப்பிடுறேன் லக்கி" என்றாள். சாராவைப் பார்த்ததும் அந்த குழந்தையின் முகம் அவன் நினைவடுக்கில் வந்துபோக ஒரு நொடி அதிர்ந்து பதறித்தான் போனான்.


"என்ன பாப்பா?" என்று அவன் வினவ, 


"லேட்டாச்சு லக்கி. எவ்வளவு நேரம் ஃபோன்?" என்று புருவம் உயர்த்தி மிரட்டும் தோரணையில் அவள் கேட்டாள். 


அதில் மெல்ல புன்னகைத்தவன் வண்டியில் அமர்ந்து அதை உயிர்ப்பிக்க, "ஜீ..பூம்..பா" என்று ஜீபூம்பா தனது மந்திரத்தைப் போட்டது.


"லக்கி.. மதியோட சித்தி சோ ஸ்வீட். அவங்களுக்கு என்னை ரொம்ப பிடிச்சிருக்காம். அவங்கள நான் ஆரு தான் சொல்லுவேன். நீ கண்டிப்பா ஒருநாள் அவங்கள மீட் பண்ணனும் லக்கி" என்று சாரா கூற, 


தன் எண்ணத்தினோடு அவன் "ம்ம்" மட்டும் கொட்டினான்.


'அடடே.. இந்த போலீஸ் ரொம்ப தீவிரமா இருக்கானே.. நம்ம ஜீபூம்பா வேலை செய்ய மாட்டேங்குது.. ஹ்ம்.. சரி முதல்ல இந்த வாண்டு கிட்ட நம்ம‌ வேலைய முடிப்போம்' என்று ஜீபூம்பா நினைத்துக் கொள்ள சாராவை ஹோமில் விட்டுவிட்டு இலக்கியன் புறப்பட்டான்.


எப்போதும் போல் உடைமாற்றி வந்த சாரா மாடிக்குச் சென்று தன் புத்தகத்துடன் அமர, "ஏ சாரா" என்று ஜீபூம்பா அழைத்தது. 


"என்ன ஜீபூ" என்று சாரா வினவ, "உனக்கு இலக்கியனை பிடிக்கும் தானே?" என்று கேட்டது.


"இதென்ன கேள்வி ஜீபூ?" என்று சாரா வினவ, 


"உன் லக்கியே உன்னைத் தத்தெடுத்துகிட்டா உனக்கு ஹேப்பியா?" என்று ஜீபூம்பா வினவியதும் அவள் விழிகள் அகல விரிய அதைப் பார்த்தாள். 


தத்தெடுப்பதென்றால் என்ன என்பது பற்றிய விழிப்புணர்வு ஆசிரமத்தில் வளர்ந்தவளுக்குச் சொல்லியா தரவேண்டும்? ஆனால் இதுநாள்வரை சாரா அப்படியெல்லாம் யோசித்ததே இல்லை. 


லக்கி தான் தனக்கு எல்லாம் என்பது வரை மட்டுமே இருந்த சாரா லக்கி தன்னை தத்தெடுத்துக் கொள்ள வேண்டும் என்றெல்லாம் யோசித்ததே இல்லை. ஆனால் தத்தெடுத்தால் வேண்டாம் என்றா கூறிடுவாள்? 


ஒருவித அதிர்வோடு ஜீபூம்பாவைப் பார்த்தவள், "என்ன சொல்ற ஜீபூ?" என்று வினவ, 


"ம்ம்.‌.. இப்ப சொல்றேன்.. நான் இங்க வந்த நோக்கம் உனக்கு அம்மா அப்பானு ஒரு குடும்பத்தை அமைச்சுக் கொடுக்கத்தான். உன்னுடைய அப்பா உன் லக்கி தான். அப்ப உனக்கு அம்மாவா யாரை எடுத்துப்ப?" என்று கேட்டது.


"என்ன உலறுற நீ?" என்று அவள் புரியாது வினவ, வாய்விட்டு சிரித்த ஜீபூம்பா, "எப்பவும் ஒரு அம்மா அப்பா தான் குழந்தைய அமைச்சுப்பாங்க. ஆனா உன் விஷயம் ரொம்ப ஸ்பெஷல். நீ தான் உனக்கான அம்மா அப்பாவை தேடிக்கப் போற" என்று கூறியது.


சாரா அதனை விழிவிரியப் பார்க்க, அவள் மன அடுக்கில் ஆரண்யாவின் முகம் மின்னி மறைந்தது. 


"உனக்கு ஆருவ பிடிக்கும்ல?" என்று ஜீபூம்பா வினவ, மனதில் தோன்றிய ஆரண்யாவின் சிரித்த வதனத்தை நேரில் காண்பதைப் போன்ற பிரம்மையோடு ஆமென தலையசைத்தாள்.


"சோ நம்ம பிளான் ஆரண்யாவையும் உன் லக்கியையும் கல்யாணம் செய்துக்க வைக்கனும்" என்று ஜீபூம்பா கூறியது. 


"என்னது?" என்று அவள் வினவ, 


"ஆமா.. உன்னோட மம்மியவும் டாடியவும் ஒன்னு சேர்க்க போற கியூபின்ஸ் நம்ம தான்" என்று ஜீபூ கூறியது. 


யோசனையோடு இருந்த சாரா, குழந்தைத்தனமான துள்ளலோடு, "அப்ப கடவுள் எனக்கு மம்மி டாடிய நானே செலெக்ட் பண்ணிக்க சாய்ஸ் கொடுத்துட்டாரா ஜீபூம்பா?" என்று கேட்க, 


"ஆமா சாரா" என்று ஜீபூ கூறியது. 


துள்ளலோடு எழுந்தவள், "சூப்பர் ஜீபூ. அப்ப எப்படி லக்கிக்கு கல்யாணம் பண்ணி வைக்க?" என்று சாரா வினவ, 


"அதுக்கு தான் லக்கி கிட்ட நீ ஆரு பத்தி பேசனும்" என்று ஜீபூ யோசனை கொடுத்ததும், "அவ்ளோதானா? இனிமே பாரு.. ஆரு புராணம் தான் பேசப்போறேன்" என்று கூறினாள்.


அடுத்த நாளே பாட்டு வகுப்பு செல்லத் தயாராகியவளை சக்கரவர்த்தி வந்து வகுப்பில் விட்டுச் செல்ல, 'ம்ஹூம்.. இப்படியே போனா சரிவராது. இதுங்கள மீட் பண்ணிக்க வைச்சா தான் சரிவரும்' என்று எண்ணிய ஜீபூம்பா, "ஜீ…பூம்ம்..பா.." என தனது மந்திரத்தைப் போட்டது.


கமிஷ்னரை சந்திக்க வேண்டி சென்றுகொண்டிருந்த இலக்கியன், அலைபேசி ஒலிக்கவும் வண்டியை ஓரம் கட்டி அழைப்பை எடுத்துப் பேசினான். 


"ம்ம் மிஸ்டர் இலக்கியன். ஒரு வர்க்கா நான் மினிஸ்டர பார்க்கப் போறேன். நான் திரும்ப கூப்பிடும்போது நீங்க வாங்க" என்று கமிஷ்னர் கூற, 


"ஓகே சார்" என்று வைத்திருந்தான். 


அலைபேசியையே அவன் பார்த்திருக்க அவன் அலைபேசி மீண்டும் தன்னிலை இழந்து புகைப்படம் அடங்கிய செயலி திறந்து கொண்டது. 


அதில் அவனும் சாராவும் மூக்கும் மூக்கும் உரசியபடி சிரிக்கும் புகைப்படம் ஒளிர, லேசாய் சிரித்துக் கொண்டவன், 'வரவர ஃபோன் ரொம்ப ஹேங்க் ஆகுது' என்று நினைத்துக் கொண்டு வண்டியை அவளது பாட்டு வகுப்பை நோக்கிச் செலுத்தினான்.


அங்கு ராகவியின் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்த நிலாவின் அலைபேசி ஒலிக்க, அதை எடுத்தவளுக்கு ‘அவசரமாக சொந்தம் ஒருவரின் வீட்டிற்கு செல்வதாக' ராகவி தகவல் கூறினாள். சரியென்று வைத்தவள் அலைபேசியிலேயும் அதே மாயம் நிகழ, அவளும் மதியும் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒளிரவும் அவள் வண்டி பாட்டு வகுப்பை நோக்கிச் சென்றது.


வகுப்பு முடியும் முன்பே வந்திருத்த இலக்கியன் அந்தக் கட்டிடத்தை சுற்றியுள்ள பூந்தோட்டத்தில் காலாற நடக்கலானான். தனது வண்டியில் உள்ளே நுழைந்த நிலா, தனது வண்டியை வாகன நிறுத்தத்தில் நிறுத்திவிட்டுத் திரும்ப, காக்கி உடையில் சுற்றியிருக்கும் மலர்களின் அழகை ரசித்தபடி ஈரமான புல் தரையில் கால்கள் பதிய நடக்கும் இலக்கியனின் முதுகுப்புறம் தென்பட்டது.


"ம்ம்.. மேஜிக் வேலை செஞ்சுடுச்சு.. இனி தானா நடப்பதை வேடிக்கைப் பார்ப்போம்" என்று ஜீபூம்பா சிரித்துக் கொள்ள, அவள் கால்கள் தன்னிச்சையாய் இலக்கியனை நோக்கிச் சென்றன. அவன் யார் என்னவென்று ஏதும் தெரியாத போதும் ஏனோ அவள் கால்கள் அவனை நோக்கிச் சென்றன.


தன்னை நோக்கி ஏதோ காலடி சத்தம் கேட்பதில் நடையை நிறுத்திய இலக்கியன் அதனைக் கூர்ந்து கேட்க, அவன் நாசியை பெண்ணவளின் பிரத்யேக வாசத்தோடு, அப்போதுதான் குளித்துவிட்டு கிளம்பியதால் அவள் உடலில் எழுந்த வளவைக்கட்டியின் வாசமும் சேர்ந்து அவன் நாசியைச் சீண்டியது.


அதில் சட்டென அவன் திரும்பிட, அவன் அருகே இருந்தவளோ அவன் திரும்பிய வேகத்தில் பின்னே எட்டு வைக்க முயற்சித்து அவளது நீண்ட மிடி (பாவாடை) தட்டிக் கீழே விழப்பார்த்தாள். அவள் விழவுள்ளதைக் கண்டவன் தனது பரந்த கரங்களை அவள் இடையில் கொடுத்து தன்னை நோக்கி இழுத்துப் பிடித்துக் கொள்ள, விழிகள் அலக விரிய, அவன் மார்போடு வந்து மோதியவள் அவனது சட்டைக் காலரை இறுக பற்றிக் கொண்டாள். இயல்பாகவே சிவப்பு நிறம் கொண்ட அவளது காதுமடல்கள் மேலும் சில்லிட்டு சிவந்தன.


உலகமே உரைந்துவிட்ட உணர்வில் அவள் கண்கள் மேலும் விரிந்து கொள்ள, அவளுள் ஒரு மெல்லிய நடுக்கம் உருவானது. இலக்கியனும் தன்னை மறந்த நிலையில் அவளைத் தன்னோடு சேர்த்து அழுந்தப் பிடித்துக் கொண்டு நிற்க, அவனுக்கு மூச்சே அடைத்துப் போன உணர்வு.


சட்டென கிரீச்சிட்டுப் பறந்த பறவைகளின் ஒலியில் இருவரும் தன்னிலை அடைய, அப்போதே அவளைத் தன் கரத்தால் சிறைபிடித்திருப்பதை உணர்ந்து அவளுக்கு விடுதலை கொடுத்தான்.


பட்டென அவனிடமிருந்து நகர்ந்தவள் தனது சிகையை சரிசெய்வதைப் போன்ற பாவனையில் இமைகள் படபடக்க, சிரம் தாழ்த்தி, "சா..சாரி சார். சாரி" என்றாள்.


அவளைக் கூர்ந்து பார்த்து, "யூ..? ஆரண்யா?" என்றவன் கையில்லா மேலாடை அணிந்திருந்தவளின் கரத்தை ஆராய, காயம் ஆறிய தடங்கள் அதில் இருந்தன. அவன் பார்வை செல்லும் தனது காயத்தடங்கள் இருந்த கரத்தைப் பார்த்தவள், "சார் நீங்க?" என்க, 


"ஐம் இலக்கியன். காயம் ஆறிடுச்சு போல?" என்றான்.


"ஓ சார்.. மாமா சொன்னாங்க. நீங்க தானா? தேங்க்யூ சோ மச் சார்" என்று அவள் கூற சன்னமான புன்னகையுடன் தலையசைத்தான். அடுத்து என்ன பேசவென்று தெரியாமல் அவள் விழிக்க, 


"சித்தி.."


"லக்கீ.."


என்ற குழந்தைகள் இருவரின் குரல்களும் கேட்டு இவர்கள் இருவரும் திரும்பினர்.


குழந்தைகள் ஓடிவந்து அவரவர் அழைப்பிற்குரியவர்களை அணைத்துக் கொள்ள, "லக்கி உனக்கு ஆருவ தெரியுமா?" என்று சாரா வினவினாள்.


அதில் இலக்கியன் நிலாவை நோக்க, "சித்தி இவங்க தான் சாராவோட லக்கி. உங்களுக்கு முன்னயே தெரியுமா?" என்று மதி கூறினாள்.


அதில் இலக்கியனைப் பார்த்தவள், விரிந்த புன்னகையுடன் "ஓ.. சார் நீங்க தான் லக்கி..ச..சாரி அவங்களா? சாரா சொல்லிட்டே இருப்பா" என்று கூற, 


தானும் புன்னகைத்தவன், "ம்ம்.. வண்டில பேபிடாலோட பேச்செல்லாம் உங்களைப் பற்றித்தான்" என்று கூறினான். 


சாரா மதியின் பின்னே நிற்கும் ஜீபூம்பாவைக் கண்டு 'ஏ உன் வேலையா?' என்க, தன் கரங்களை ஆட்டி 'ஜீ..பூம்..பா' என்று கூறி கண்ணடித்தது‌.


"ஓகே சார். நைஸ் டூ மீட் யூ" என்று அவள் கரம் நீட்ட, தானும் அவளது மெல்லிய கரத்தை அழுந்தப் பிடித்து குலுக்கியவன், "பை" என்றுவிட்டு சாராவைப் பார்த்து, "போலாமா பேபிடால்" என்றான்.


"போலாம் லக்கி" என்று அவள் கூற, அவளைத் தூக்கிக் கொண்டு கன்னத்தில் முத்தமிட்டவன், அவளைக் கொஞ்சிப் பேசிக் கொண்டே செல்ல, அவனையே இமைக்காது, புன்னகையுடன் பார்த்தாள் ஆரண்ய நிலா.

 


Comments

Popular posts from this blog

திருப்பம் -01

திருப்பம்-03

திருப்பம் -02