திருப்பம்-80
திருப்பம்-80
பொழுது விடிவதும் முடிவதும் தவராது நடக்க, அன்றைய காலை பொழுதும், கடமை தவறாமல் விடிந்தது.
இரவெல்லாம் கை வலியில் படுக்க இயலாது அனத்திய சங்கமித்ராவிற்கு தோளைப் பிடித்துவிட்டும், வலிநிவாரணி மருந்து கொடுத்தும் படுக்க வைக்க முயற்சித்த வளவனும்கூட தூக்கம் இழந்திருந்தமையால் காலை வெகு தாமதமாகவே கண் விழித்தான்.
அப்போதும் சங்கமித்ரா ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க, மெல்ல எழுந்து சென்று தன் காலை பணிகளை முடித்துத் தயாராகி வந்தவன், மணி பத்தைத் தாண்டி பதினொன்றை நோக்கி ஓடுவதைக் கண்டு, ‘பசி தாங்க மாட்டாளே பாவம்' என்று எண்ணியவனாய் அவளை நெருங்கினான்.
“ஏட்டி.. மித்து” என்று மெல்ல அவள் கன்னம் வருடி அவளை எழுப்ப முற்பட்டவன், அவன் கரத்தைத் தட்டிவிட்டு அவள் ஒருக்களித்துப் படுக்க முயலவும் பதறி அவளை வாகாய் பிடித்துத் தடுத்து, “ஆத்தா” என்றிருந்தான்.
அதில் தூக்கம் கலைந்தவள் சோர்வாய் கண் விழிக்க, “மித்ரா.. நேரமாச்சுது உங்கிட்டுப் படுடி” என்க,
சோர்வோடு எழுந்து அமர்ந்தாள்.
“பல்லு மட்டுங்கூட வெளக்கிக்க மித்ரா. உங்கிட்டு ஒறங்கு. மோந்திக்கு ஆஸ்பத்ரி போவுமின்னக்கூட குளிச்சுக்கலாம்” என்று அவன் கூற,
தூக்கம் கலையாமல் தலையசைத்தாள்.
சென்று அவளுக்கான பல்துலக்கியில் பற்பசை வைத்து எடுத்து வந்தவன், அவள் தேய்த்துக் கொண்டு துப்புவதற்கு ஒரு குவளையும், கொப்புளிப்பதற்கு வேண்டிய நீரை ஒரு குவளையிலும் எடுத்து வந்து அவளுக்கு உதவினான்.
அவன் உதவியோடு பல் துலக்கி முடிந்தளவளுக்கு செம்பு நிறைய நீரைக் கொடுத்தவன், அவள் குடித்து முடிக்கவும், கழிப்பறைக்கும் தூக்கிச் சென்று, அழைத்துவந்து அமர்த்த, அறைக்கதவு தட்டப்பட்டது.
“ஒனக்குதேம் டிபன் வருதுனு நெனக்கேம்” என்று கூறிய வளவன் கதவைத் திறக்க,
அவனைக் கட்டியணைத்த விக்ரம், “பொறந்தநாள் வாழ்த்துக்களுலே” என்று கூறினான்.
சங்கமித்ரா இக்காட்சியை அதிர்ந்து பார்க்க, வளவன் குழப்பத்துடன் விழித்தான்.
“என்னம்லே சொல்லுத?” என்று வளவன் புரியாது கேட்க,
அருகிருந்த அவனது அலைபேசியை எடுத்துப் பார்த்த சங்கமித்ரா, அதனில் அன்றைய நாளைக் கண்டாள்.
ஆம்! அன்று அவன் மற்றும் விக்ரமினது பிறந்தநாள்…
“லேய்.. இன்னிக்கு நம்ம பொறந்தநாளுலே” என்று விக்ரமன் கூற,
“ஆட்டும் ஆட்டும் ஒங்க ஆர்பாட்டம். தள்ளுவ. அந்த புள்ள பசியில கெடக்கும்” என்றபடி கார்த்திகா உள் நுழைய சங்கமித்ரா, தன்னவனது பிறந்தாளை மறந்துவிட்ட வருத்தத்தில் உள்ளுக்குள் அதிர்ந்து அமர்ந்திருந்தாள்.
“பொறந்தநாளு வாழ்த்துக்களுலே” என்று தமையனுக்கு வாழ்த்திய வளவன், “மைணி நானே தாரேம்” என்று தட்டை வாங்க முற்பட,
“கொழுந்தரே.. நீங்களே தாங்குங்க உங்க அவியள. நா வேணாமுங்கள. இப்பத போயி புதுத்துணி உடுத்திட்டு வாங்க” என்று கார்த்திகா கூறினாள்.
'புதுத்துணியா?’ என அவன் திரும்ப, விக்ரமன் கையில் பையுடன் நின்றுகொண்டிருந்தான்.
“சரி உடுத்துரேம் மைணி. துணிய அங்கன வையுலே” என்றவன், “மைணி மைணி நானே தாரேம்” என்க,
“கார்த்தி வுடுடி. அவேனே தரட்டும். அவேன் வெளிய வாச போற நேரம் பாத்து நீயு குடுவேம்” என்று விக்ரம் கூறினான்.
“ஹ்ம்.. சரிங்க கொழுந்தரே. நீயளே குடுங்க. குடுத்துப்புட்டு புதுத்துணி உடுத்திட்டு வாங்க. ஒங்கம்மா காலயுலருந்து அறயத்தேம் வச்சக் கண்ணு எடுக்காம பாக்குறாவ” என்று கார்த்திகா கூற,
சிறு தலையசைப்புடன் வாங்கிக் கொண்டான்.
தானும் தன் வாழ்த்தைத் தெரிவித்தவள், விக்ரமனுடன் வெளியேர,
மொனமாய் அமர்ந்திருப்பவள் அருகே சென்று அமர்ந்தவன், தட்டை மேஜையில் வைத்துவிட்டு, “விஷ் பண்ண மாட்டியாடி?” என்று கேட்டான்.
நொடியில் எங்கிருந்துதான் அத்தனைத் துளிகள் அவள் விழியை ஆக்கரமித்தனவோ?
மலுக்கென்று கோர்த்துக்கொண்ட நீர் சட்டென கன்னத்திலும் வழிந்து விட, கீழிதழைத் தன் பற்கள் கொண்டு கடித்துக் கொண்டாள்.
அவள் தாடைப் பற்றி, இதழ்களுக்குப் பற்களிடமிருந்து விடுதலை கொடுத்தவன், “என்னத்துக்குடி கரிக்க இப்பத? ஓங்கிட்ட ஒரு வாழ்த்துதான கேட்டேம்?” என்று கூற,
அவனை இதழ்கள் நடுநடுங்க பரிதாபமாய் பார்த்தவள் தன் தொண்டையை வருடி, ‘இல்லையே’ என்று சைகை செய்தாள்.
“கொரலு இருந்தாதேம் வாழ்த்தனுமாடி என்னய? இல்லனா வாழ்த்த மாட்டியாக்கும்?” என்று அவன் கேட்க, அவனைப் புரியாது பார்த்தாள்.
“எம்பொறந்தநாள மறந்துபுட்டேம்னு நெனக்குறத மொத நிறுத்துடி. நானே மறந்துபுட்டேம் அத” என்று அவன் கூற,
'என்னால தானே?’ என்பதைப் போல் பார்த்தாள்.
“ஆமா.. ஒன்னாலதேம். ஏன் ஒணர்வு அத்தனயுமே நீதானடி. அப்பம்னா ஏம்மறதியும் நீதான? நானும் நீயும் ஒன்னுதான? அப்பனா நானு மறந்து நீயு மட்டும் எப்புடி நெனவு வச்சுருக்க முடியும்? பாரு என்னய அறுத பழய வசனமெல்லாம் பேச வெக்க” என்று அவன் சிரிக்க, அவளால் அவனைப்போல் சிரிக்க இயலவில்லை.
அவன் பிறந்தாளை நினைவு வைத்திருக்கவில்லையே என்பது ஒரு வருத்தம் என்றால், வாய்விட்டு ஒருவார்த்தை வாழ்த்தக்கூட முடியவில்லையே என்பது ரணமாய் வழித்தது.
அழுகையுடன் அவன் மார்பில் தலை சாய்த்தவள், விசும்ப, அவள் முகம் பற்றி நிமிர்த்தியவன், “எனக்கு இப்பத வாழ்த்துவியா மாட்டியா?” என்றான்.
'எப்படி?’ என்பதைப் போல் அவள் பார்க்க,
“ஒனக்கு வாழ்த்த மனசு வாரும்ன? வாழ்த்த வழி இருக்குது. மனசுக்குள்ளார ஒனக்கு ஒரு கொரலு இருக்குதுல்ல? அதுலதானடி இம்புட்டு நாளா நீ பேசுறத கேட்டுகிட்டு இருக்கேம்? இப்பமும் கேப்பேம்” என்று கூறினான்.
அவளுக்கு அவன் பேச்சைக் கேட்கக் கேட்க இன்னும்தான் அழுகை வந்தது.
“மித்ரா..” என்று வருத்தமாய் அவன் அழைக்க,
தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டவள், இதழைப் பிரித்து புன்னகைத்தபடி, அவனைப் பார்த்து மனதிற்குள், ‘பிறந்தநாள் வாழ்த்துக்கள் மிஸ்டர் திருமால்’ எனக் கூறிக்கொண்டு இடக்கரத்தை நீட்டி அவன் கரம் பற்றி குலுக்க,
“மிஸ்டர் திருமாலுக்கு மிஸ்ஸஸ் மித்ராவோட வாழ்த்து சக்கரயா இனிக்குதுபோ” என்றான்.
அவனை பாவை அதிர்வாய் நோக்க,
“பரிசு தரமாட்டியாடி?” என்றான்.
அவனை அதிர்ச்சி விலகாது அவள் புரியாது நோக்க, மிக மிக மென்மையாய் அவள் இதழ் வருடினான்.
அதில் தன்னை மறந்து கண்கள் மூடியவள், அவனது புறா கூடைப் பற்றிக் கொள்ள,
பூவாய் திறந்துகொண்ட இதழ்களைப் பூபோல் பூட்டிக் கொண்டான்.
பல நாட்களுக்குப் பின் அமையும் சுகந்தமான சூழலும், இதழ் சஞ்சரமும் இருவரின் மனதிற்குமே மருந்திடும் வகையில் அமைந்தது.
ஒருவர் இதழில் கரைந்த மற்றவர், மனமின்றி பிரிய, நாணம் கொண்டு சிரம் தாழ்த்திக் கொண்டாள்.
அதை கண்டு மந்தகாசமாய் புன்னகைத்தவன், “ரொம்ப அழகாருக்கடி. மயக்குற” என்க,
அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
கள்ளமில்லா அவன் நேசம் கசியும் விழிகளை நெகிழ்வாய் பார்த்தவள், அவன் சிகை கோதி, ‘போய் டிரஸ் மாத்துங்க’ என்று சைகை செய்ய,
“நீயு சாப்பிடு மாத்துதேம்” என்றான்.
மறுப்பின்றி அவன் ஊட்டிய உணவை அவள் உண்டு முடிக்க, அவளுக்கு வாய் துடைத்துவிட்டு எழுந்தவன் சென்று உடையை மாற்றிக் கொண்டான்.
விக்ரமன் அணிந்திருப்பதைப் போல் அழகிய இளம் ஊதா நிற சட்டையும், வேட்டியும் கட்டிக் கொண்டு நின்றவன், தன் மீசை முறுக்கி அவளைப் பார்த்து ஒற்றைப் புருவம் உயர்த்திக் கண்ணடிக்க,
விரல்களால் ‘சூப்பர்’ என்று அபிநயம் பிடித்தாள்.
அவளிடம் வந்தவன் அவள் உடைகளைத் திருத்திக் கொண்டு அவளைத் தூக்க,
அவனை கேள்வியாய் பார்த்தாள்.
சக்கர நாற்காலியில் அவளை அமர்த்தியவன், “நீயும் வா” என்று கூறி கூடத்திற்கு வர,
மொத்த குடும்பமும் அங்கேதான் அமர்ந்திருந்தனர்.
கொஞ்சம் சங்கடமாக இருந்தாலும்கூட, முன்பை போல் அழுது அடம் செய்யாமல் அமைதியாய் அமர்ந்து கொண்டாள் பெண்.
“எய்யா வளவா..” என்று வந்து அவன் கன்னம் வழித்து திருஷ்டி எடுத்த தெய்வா, “ராசாவாட்டம் இருக்கலே” என்க,
அழகாய் புன்னகைத்துக் கொண்டான்.
“ஹாப்பி பர்த்டே அண்ணே”
“பொறந்தநாளு வாழ்த்துக்களுய்யா”
“ஆப்பி புத்ருதே சிச்சா”
“பொறந்தநாளு வாழ்த்துக்களு கொழுந்தரே” என்று பல வாழ்த்துக்கள் வர,
அனைவருக்கும் இன் முகமாய் நன்றி கூறினான்.
விக்ரமனுடன் சென்று இறைவனை வணங்கி வந்த இருவரும், அன்னை தந்தையின் பாதம் பணிந்து ஆசிபெற, பிள்ளைகளை மணமார வாழ்த்தினர்.
“ஏம்லே சோக்காரணுவளா.. பொறந்தநாளு வாழ்த்துக்களுலே” என்றபடி உற்சாகமாய் வடிவேல் உள்ளே நுழைய,
“தேங்ஸுலே” என்ற இரட்டையர்கள் அவனையும் அணைத்துக் கொண்டனர்.
“எய்யா.. அம்மா இனிப்பு பண்ணிருக்கேம்லே. இரு கொண்டாரேம்” என்ற தெய்வா மகன்களுக்கான இனிப்புடன் வந்து தானே ஊட்டிவிட,
சங்கமித்ராவிற்கு தன்னால் அவனுக்காக ஏதும் செய்திட இயலவில்லையே என்று வருத்தமாக இருந்தது.
அனைத்தையும் அமைதியுடன் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும் மருமகளைப் பார்த்த சுயம்புலிங்கம், “ஆத்தா உங்கிட்டியாமா?” என்க,
ஆமென்பதாய் தலையசைத்தாள்.
“சரித்தா.. வா தோட்டத்துல செத்த நேரம் எளப்பாறுவம்” என்று அவளது நாற்காலியை நகர்த்திக் கொண்டு செல்ல,
வடிவேலுவும் விக்ரமனுமாய் அவளை நார்காலியோடு தூக்கி வெளியே நிறுத்தினர்.
தானே தனது மருமகளை வீட்டு முன்னிருக்கும் சிறு தோட்ட அமைப்பில் தள்ளிச் சென்றபடி நடந்தவர், “ஆத்தா.. புள்ள.. அவேம் பொறந்தநாளுக்கு என்னமும் பண்ண முடியிலயேனு வெசனப்படாத தாயி. நீயு என்னமாது செய்யனுமுனு ஆசபட்டா ஐயேன்ட சொல்லு செய்யுறேம் என்ன? நீயா என்னமாது நெனச்சு நோவாது. அவேனுக்கு நீயு சந்தோசமாருக்குறதுதேம் மொத பரிசுத்தா” என்று பரிவாய் கூற,
அவளுக்கு உள்ளமெல்லாம் நெகிழ்ந்தது.
தன் மாமனாரைத் திரும்பிப் பார்க்க அவள் முற்பட, அவள் முன்னே வந்தவர், “என்னத்தா?” என்று கேட்டார்.
அவரிடமிருந்து அலைபேசியைக் கேட்டு வாங்கியவள், அதில், ‘அவங்களுக்கும் அத்தானுக்கும் ஒரு கேக் மட்டும் வெட்டலாமா மாமா?’ என்று தட்டச்சு செய்து நீட்ட,
“அம்புட்டுத்தான தாயி? நான் வாங்கியாரேம்” என்று கூறினார்.
அதில் புன்னகைத்தவள், ‘நன்றி மாமா' என்க,
“நன்றியெல்லாம் எதுக்குத்தா? நீயு நம்மூட்டு புள்ள. ஒன்னய கலங்கவிட்டுப் பாப்பமா?” என்று அவள் தாடையில் தட்டி வாஞ்சையுடன் கூறினார்.
அவள் ஆசைபடியே சென்று, மாலை அழகிய அணிச்சல் ஒன்றை அவர் வாங்கி வந்து வைக்க,
“ஐயா என்னது இது?” என்று விக்ரமன் சிரித்தபடி கேட்டான்.
மற்றவர்களும் கூட கூடத்திலேயே அமர்ந்திருக்க, தீபிகா மற்றும் திரிபுராவின் குடும்பமும் வந்து சேர்ந்தனர்.
“என்னய்யா இது புதுசா? சின்ன புள்ள கணக்காருக்குது” என்று சிறு வெட்கத்துடன் வளவன் கேட்க,
“ஏம் மருமவ புள்ள ஆசலே. எல்லாம் ஒன்னுகூடி கேக்கு வெட்டத்தான கேட்டுச்சு. செய்ய மாட்டீயளா?” என்று அவர் கேட்க,
அனைவரும் சங்கமித்ராவை நோக்கினர்.
திருதிருவென விழித்தவள் அனைவரையும் பாவம் போல் பார்த்துக் கொண்டு இரட்டையர்களைப் பார்த்து கண்கள் சுருக்க, இருவரும் பக்கென்று சிரித்தனர்.
அவ்வீட்டில் குழந்தைகள் கூட அணிச்சல் வெட்டி பிறந்த நாள் கொண்டாடி இராத நிலையில் இத்தனை வயதான பின்பு அணிச்சல் வெட்டிக் கொண்டாடுவது என்பது ஆடவர்களுக்கு கூச்சமாக இருந்தபோதும்கூட அவளின் ஆசைக்காக ஏற்றுக் கொண்டனர்.
அப்போது அவிநாஷும் அவனது மூன்று மாதக் குழந்தையும், சங்கீதாவும் வந்திருக்க, ஒரு தாளை எடுத்துவந்து வளவன் மற்றும் விக்ரமனிடம் நீட்டினான்.
“என்னதுண்ணே?” என்று இருவரும் ஒன்றுபோல் கேட்க,
“உங்க பேருல ஆசிரமத்து பிள்ளைகளுக்கு மதியம் சாப்பாடு போட்டதுக்கு வாழ்த்துக் கடிதம்” என்று புன்னகையாய் அவிநாஷ் கூற,
“அண்ணே!” என்று ஆச்சரியமாய் கேட்டனர்.
“தம்பிகளா ஷாக்கக் குறைங்க. இது அண்ணே வேலையில்ல. உங்க ரெண்டுபோரோட பொண்டாட்டிங்க வேலை” என்று அவிநாஷ் கூற,
இருவரும் தத்தமது மணையாளைப் பார்த்துக் கொண்டனர்.
பெண்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டு, தத்தமது கணவனை நோக்க,
“அமுக்குனிகளாருந்துட்டு எம்புட்டு வேல பாக்கீயடி” என்று தீபிகா கூறினாள்.
“நல்ல காரியந்தானத்தா” என்று மகா கூற,
“ஆமா அத்தான். நானும் அதேம் சொல்ல வந்தேம்” என்று திரிபுரா கூறினாள்.
அத்தருணம் மிக மிக அழகாய் அமைய,
அணிச்சலையும் வெட்டி, அனைவருக்கும் ஊட்டிவிட்டு, கொண்டாட்டத்தை மகிழ்வித்துக் கொண்டனர்.
அன்றைய இரவு அனைவருக்கும் வீட்டிலேயே விருந்து சமைக்கப்பட,
தன்னவளை அருகே அமர்த்திக் கொண்ட வளவன், “ஒன்னுமே சொல்லாம காலயில கரிச்சுட்டு எம்புட்டு பெரிய வேலையெல்லாம் பாத்துருக்கடி” என்க,
கண்கள் சிமிட்டி சிரித்தவள், அவன் மனதில் சித்திரமாய் பதிந்து குளிர்வித்தாள். இந்தக் குளுமையின் காலம் தான் எத்தனையோ???
Comments
Post a Comment