திருப்பம்-81

 திருப்பம்-81



“இவேம் பேரு யாழ் மித்ரனாம் ஐயா. இங்கன கன்னியாகுமரிலதேம் கொஞ்ச காலம் வேலையில இருந்துருக்கியாம். பொறவு கோவயில வேல பாத்துருக்கியாம். இங்கன ஏதோ பெரிய போலீசாதேம் இருக்கியாம். இது இவேம் ஐயன். இவியளும் போலீசாதேம் இருந்து இப்பத ரிட்டயரு வாங்கிட்டுருக்காவ. இது இவிய அம்மை. டீச்சரா வேல பாத்துருக்காவ. இது இவேம் பொஞ்சாதி. இவோளும் டீச்சராதேம் வேல பாக்குதா. இப்பத முழுகாம வேற இருக்காவ. இது இவியளோட மவேம்” என்று தங்கப்பாண்டியின் அடியாள் மாயன், யாழ் மித்ரனின் குடும்பப் படத்தைக் காட்டிக் கூறிக் கொண்டிருக்க,


யாழ்மித்ரனின் தீட்சண்யம் பொருந்திய விழிகளை ஆழ்ந்து பார்த்தபடியே அமர்ந்திருந்தான் தங்கப்பாண்டி.


“நாம முன்ன பாத்த போலீசுக போல இல்லண்ணே இவேம். ரொம்ப கராரான போலீசாக்கும். சவட்டியெடுத்துப் புடுவியான்னு பேசிக்குறாவ. சின்ன வயசுலயே பெரிய போலீசு பட்டத்துக்கு வந்தானாம்ல? கோவையில இவேம் இருந்த வார தப்பு தண்டா செய்யுறவோ எல்லாம் அம்புட்டு வெறையலாருப்பாவனுவளாம் இவேன பாத்தா” என்று அந்த மாயன், யாழ் மித்ரன் புகழைப் பாடிக் கொண்டிருக்க,


“மிண்டாதிருலே (பேசாதிருலே)” என்று தங்கப்பாண்டி கத்தினான்.


தன் நெற்றிப் புருவத்தை நீவிக் கொண்டே முறுக்கேறிய புஜங்களை, காளைத் தன் திமிலை அசைப்பதைப் சோல் அசைத்துக் கொண்டபடி எழுந்தவன், அவ்வறையில் குறுக்கும் நெடுக்கும் நடந்தான்.


“அண்ணே..” என்று மாயன் மெல்ல அழைக்க,


“இவேம் எம்புட்டுப் பெரிய கொம்பனாருந்தாலும் எனக்கு கவலயில்லலே. எனக்கு அந்த வளவேம் அடிசரிஞ்சு நிக்கனும். அதநாம்பாத்து ரசிக்கனும்லே” என்று கர்ஜனையாய் கூறினான்.


அவன் கண்களில் ஒருவித வெறி தெரிந்தது…


“அவேம் தொழிலுல சரியனும்லே. அவேம் கீழ வரனும். நானு மேல நிக்கனும். அதுக்கு என்ன ஆவுமோ அத செய்யு” என்று கத்திய தங்கப்பாண்டியின் காதுகளில் ஓங்கி ஒலித்தது அவன் தந்தையின் குரல்.


'அவேன பாருலே.. ஊருக்குள்ள அவங்கப்பன போல அம்புட்டு பதவீசா நடந்துக்குறியாம். நீயுந்தேம் இருக்கியே'


'அவேன பாருலே.. எப்புடி கையுங் கணக்குமா செலவு செஞ்சு மதிப்பாருக்கியாம். நீயுந்தேம் இருக்கியே’


'அவேனப் பாருலே.. எப்புடி தொழில கட்டி மேய்க்குறியாம். எக்ஸ்போர்டுல இந்த பக்கட்டுருந்து பொருளுவ அவேன மீறி ஒன்னு போவுதில்ல. அவேன பாத்து கத்துக்கிடுலே' 


'புள்ளனு ஒன்னு பெத்தா அவேன போல பெத்துகிடனும்லே. எப்புடி பதவீசா வாழுறியாம். அப்பேனுக்கு தப்பாம இருந்து அம்புட்டு மருவாதிய சம்பாதிச்சுகிட்டியாம். நீயளுந்தேம் இருக்கீயளே' என்று பல வரிகள், அவன் தந்தையின் குரலில் ஓங்கி ஒலித்தது.


இன்றளவும் அவன் கேட்டுவரும் குரல்களாயிற்றே அவை…


ஆம்… தங்கப்பாண்டியின் அப்பா முத்துசேகரனும் இதே ஊரில் பரம்பரைப் பரம்பரையாய் தொழில் செய்து வருபவர் தான். ஆனால் சுயம்புலிங்கத்திற்குக் கிடைக்கும் மரியாதையும் புகழும் அவருக்கு என்றும் கிடைத்ததில்லை. அப்படிக் கூறுவதை விட பெருமை பெரும் வகையில் அவர் ஏதும் செய்திடவில்லை எனலாம். 


தன்னால் பெறமுடியாத புகழைத் தன் மகன் வாங்கிக் கொடுப்பான் என்று எண்ணியவர் எண்ணத்தில் ஒருகூடை மண்ணை அள்ளிக் கொட்டினான் தங்கப்பாண்டி. அவனது பொறுப்பற்ற குணம், பிற்போக்கான சிந்தனை என அனைத்தும் அவரை மேலும் சோர்வடையச் செய்திட, தனது அதிருப்தியை இப்படியான வார்த்தைகளில் கொட்டிக் கவிழ்த்தத் துவங்கியிருந்தார்‌.


நல்ல நிலைக்கு வரவேண்டும் என்று எடுத்துக் கூறியிருந்தாலும்கூட நல்ல வழியை அவன் நாடியிருப்பானோ என்னவோ? நாளும் பொழுதும் திருமாவளவனுடன் ஒப்பிட்டு அவனை மட்டம் தட்டியே பேசும் அவர் பேச்சால், எப்படியாவது அவனை வீழ்த்திக் கீழே தள்ள வேண்டும் என்ற வெறியும், அதற்கு முறையற்ற செயல்களாக இருப்பினும் அதை செய்திடலாம் என்ற எண்ணமும் அவனுள் வேரூன்றத் துவங்கியது.


சின்னச் சின்ன செயல்களாக செய்து அவனை வீழ்த்த அவன் முயற்சித்தும்கூட எதுவுமே அவனுக்குக் கை கொடுக்கவில்லை. ஆனால் சங்கமித்ராவை விபத்திற்கு உட்படுத்தியது முற்றிலும் தற்செயலான செயலே. இருந்தும்கூட அது அவனை வருத்தவில்லை. இதனாலாவது அவன் தொழிலில் சரிந்தால் நலமே என்றே நினைத்தான்.


தற்போது என்ன செய்தும் வளவனை வீழ்த்த முடியவில்லையே என்று வெறியில் சுற்றிக் கொண்டிருப்பவனை தீர்த்துக் கட்ட, வளவன், மித்ரனின் உதவியை நாடியிருக்க, அது அவன் ஈகோவை இன்னும் பதம் பார்த்திருந்தது.


“மொதல்ல இந்த போலீச தீத்து கட்டோனும்லே. பொறவு வெக்கேம் இந்த வளவனுக்கு செக்கு” என்று தங்கபாண்டி கூற,


“என்ன செய்யனும்முனு மட்டும் சொல்லுங்கண்ணே” என்று அவனிடம் கூலிக்குக் கையேந்தும் அந்த தடியனும் விசுவாசமாய் கேட்டான்.


“அந்த போலீசு பாக்குற மத்த கேசுவல விசாரீய. அதுல அவேனுக்கு தொல்ல குடுத்துப் பாப்பம். அதுக்கும் அசரலனா..” என்றவன் பார்வை அவனது குடும்பப் புகைப்படத்தில், குறிப்பாக அவன் மனைவி ரசிகப்ரியாவின் மீது படிந்தது.


“புரிஞ்சுதுண்ணே. மொதோ இதுக்கான வேலையப் பாக்கேம். இது சுளுவா முடியாட்டிப் பொறவு அவோள தூக்கிபுடுவம்” என்று மாயன் கூற,


குரூர சிரிப்புடன் தங்கபாண்டி அவர்களது படத்தைப் பார்த்துத் தலையசைத்தான்.


அங்கு தென்னந்தோப்பில் வளவனைத் தேடி அழைந்துகொண்டிருந்த வடிவேல், தூரத்தில் மரம் ஒன்றுக்குப் பின் அவன் அமர்ந்திருப்பது தெரியவும், “வளவா..” என்று அழைத்தபடியே அவனை நோக்கிச் சென்றான்.. ஆனால் வளவன் தான் அவன் குரலுக்கு செவிசாய்த்தான் இல்லை‌.


"லே.. எம்புட்டு நேரமா கூப்பிடுதேம்.. காதுல என்ன ஈயமா ஊத்தி வச்சிருக்க?" என்று கேட்டபடி அம்மரத்தின் பின்னே வந்த வடிவேல், கையில் புத்தகத்துடன் அமர்ந்திருக்கும் வளவனைக் கண்டான்.


தான் இத்தனை தூரம் கத்திக் கொண்டே வந்தது, அவன் அருகே நிற்பதென்று ஏதும் அறியாமல், உணராமல் அமர்ந்து, முகத்தில் சின்ன சிரிப்போடு படித்துக் கொண்டிருந்த வளவனைக் கண்டு, "ஏலேய் வளவா" என்று வடிவேல் கத்தி அழைக்க,


எதிலிருந்தோ விழித்தெழுபவனைப் போல் நிமிர்ந்தவன், பயணித்துக்கொண்டிருந்த உலகத்தில் பயணம் தடைபட்ட எரிச்சலோடு முகம் சுருங்கி, "என்னம்லே?" என்றான்.


அவன் முன்னே வேட்டியை மடித்துக் கொண்டு அமர்ந்த வடிவேல் அப்புத்தகத்தை வாங்கிப் பார்த்து, "என்னதுலே இது?" என்க,


"பாத்தா தெரிலியாக்கும்? புஸ்தகம்லே" என்றான்.


"அது தெரியாதாலே எனக்கு?" என்று கோபமாய் அவன் கேட்க,


"பொறவு என்னத்துக்குடா கேக்க?" என்று இவனும் கோபப்பட்டான்.


அட்டைப்படத்திலிருந்த காதல் ஜோடியின் படத்தையும், கதை தலைப்பையும் கண்டவன், "நாவலா வளவா?" என்க,


அழகான புன்னகையுடன், "ஆமாலே" என்றான்.


"நீயெப்போருந்துலே புஸ்தகமெல்லாம் படிக்காரமிச்ச?" என்று வடிவேல் ஆச்சரியமாய் கேட்க,


"இப்பம்தாம்லே.. கொஞ்ச நாளாதேம்" என்றான்.


"என்னலே புதுசா?" என்று வளவன் கேட்க,


"மித்ராவுக்காவலே" என்றான்.


"தங்கபுள்ளைகாவயா? ஏம்லே? படிச்சு நீயு கத சொல்லுவியா?" என்று வடிவேல் கேட்க,


"இல்லலே.. வீட்டுலயே சும்மா படுத்துகெடக்க என்னமோ போலருக்குனு கொஞ்ச நாமின்ன அழுதா. அவ இருக்குற நெலைக்கு போனும் ரொம்ப நேரமெல்லாம் பாக்க விடுறதில்ல. டீவியும் அழுத்துப்போவுது அவளுக்கு. அவ நாவலுயெல்லாம் படிப்பா.. அதேம் புஸ்தகமெடுத்துக்கொடுப்பமானு ரோசிச்சேம்.. ஆனா அதுலயுங் கொஞ்சம் பயம்" என்றான்.


"அதுல என்னம்லே பயம் ஒனக்கு?" என்று வடிவேல் கேட்க,


"தனம் கத படிப்பாலே. ஒருக்கா ரூமுக்கு போனப்ப ஒக்காந்து கரிச்சிட்டிருந்தா. என்னமோ ஏதோனு கேட்டாக்கா கத படிச்சு அழுறேம்னா. எனக்கு கோவமா வந்துச்சு. இதுக்காலே கரிக்கனு கேட்டேம். அப்பத சொன்னா. 'கத ஒன்னும் லேசுபட்டதில்லணே. ஒத்த வார்த்தைய உணர்ந்து ஒருத்தவிய எழுதும்போது, அந்த உணர்வு அப்புடியே படிக்குறவோளுக்கும் வரும். அப்பத அதுலருக்க சோகமும் நமக்கே நடக்காப்ல தாக்கும். அப்பத இப்புடி அழுவ வாரதுதேம்' அப்புடினு சொன்னா" என்று வளவன் கூறினான்.


நண்பன் கூற வருவதை உணர்ந்த வடிவேல் இதழ்கள் புன்னகைக்க, "முன்னலாம் எப்பமே சிரிச்சுட்டேதாம்லே இருப்பா ஏம் மித்ரா. இப்பலாம் சிரிக்குறதே ரொம்ப கொறவு. அவோ மனச லேசு பண்ண நாம்பாட்டுக்கு என்னம்மாது எடுத்தாந்துகுடுத்து அவோ இருக்குற நெலமைக்கு அதுல என்னமாது சோகமா படிச்சு அழுதானா? அதேம் அவளோக்குக் கொடுக்க முன்ன நாம ஒருக்கா படிச்சுப் பாத்துட்டு தருவம்னு ஒரு வாரமா போயி லைப்ரரில புஸ்தகமா எடுத்து படிக்கேம். எந்த சோகமும் இல்லாம, அப்புடியே இருந்தாலும் பெருசா அவோள பதிக்காத வகயில இருக்குன்னா மட்டும் அந்தக் கதைய அவளோக்குப் படிக்கக் கொடுப்பேம். அவ இருக்குற நெலையிக்கு ஒரு கத படிக்குறதுக்குள்ள நானு ரெண்டு மூனு படிச்சுடுவேம். அதுல அவளுக்குத் தோதுபடுற கதைய கொண்டோயி கொடுப்பேம்" என்று கூறினான்.


"மென் இன் லவ்வுங்குறது இதேம் போல மாப்ள" என்று வடிவேல் உணர்ந்து கூற,


"மென் கிரியேடட் பை விமென்னு சொல்லுவாவளே.. கதையில படிக்கையில நல்லா வெளங்குதுலே. பெருசா ஒன்னுமில்ல.. நவ நட்டுயெல்லாம் எதிர்ப்பாக்கலலே பொண்ணுக. பாசமும் மரியாதையுந்தேம் எல்லா பொண்ணுவளும் எதிர்ப்பார்க்காவ. அதேபோல பசங்களயும் அம்போனு விடல. ஆம்பள புத்தி சபள புத்திதேம்னு சொல்றவோ மத்தியில, காதலுல இருக்க ஆம்பள என்னமெல்லாம் பண்ணுவியாம்னும் ரொம்ப அழகா காட்டுதாவ" என்று கூறினான்.


"அப்புடியினா நீயும் அப்புடியொரு பீசுதாம்லே.." என்று வடிவேல் உளமார கூற,


"அவோ அப்புடிதேம் என்னைய வச்சுகிடுதாலே" என்று தன்னவளை நினைவில் நினைத்து மகிழ்ந்தபடியே கூறினான்.


“தங்கபுள்ள ஓங்காதலுக்குக் குடுத்து வச்சிருக்காளா இல்ல நீயு அது காதலுக்குக் குடுத்து வச்சுருக்கீயானு தெரியிலலே” என்று வடிவேல் மனமாரக் கூற,


வளவன் மனதில் என்றோ ஒருநாள் இருவர் காதலையும் ஒப்பிட்டுக் கூறியதற்கு ‘நம்மில் நாம் கொண்ட காதல், அதை நீ ரெண்டாக பார்ப்பாயா?’ என்று பாடல் வரிகளில் அவள் பதில் கொடுத்தது நினைவு வந்தது.


அதில் தன் பின்னந்தலையைக் கோதியவன் அழகாய் புன்னகைக்க,


“பாருடி.. மாப்புள்ளைக்கு வெக்கமெல்லாம் வருதாக்கும்?” என்று கேட்ட வடிவேல் அட்டகாசமாய் சிரித்தான்.


“வேய்.. ஒனக்கும் கல்யாணம் ஆவுமின்ன? அப்பத வச்சுகிடுதேம்லே. நளியடிச்சு கொல்லுதேம் பாத்துகிடு” என்று வளவன் கூற,


சிறு சிரிப்பை பதிலாய் கொடுத்தவன், “நீயு படிலே. நாம்போய் ஓரெட்டு சோலியெல்லாம் ஆவுதானு ரப்பரு தோட்டத்துல பாத்துகிட்டு வாரேம்” என்று கூறினான்.


“ஒனக்குதாம்லே ரொம்ப வேல வெக்கேம்” என்று வளவன் சற்றே வருத்தமாய் கூற,


“வேல வக்குறதுலாம் பிரச்சினயில்லடி மாப்ள. அதுக்கும் சேத்துபோட்டு காச பிரிக்கப் பாத்தியா அதேம் வெசனமாருக்குது. ஏற்கனவே தங்கபுள்ள மருந்து செலவுவேற ஒனக்கு ஏத்தமாருக்கும். எனக்கென்னம்லே செலவு கெடக்கு இப்பத? பாக்குற வேலைக்கெல்லாம் காசு போட்டு அம்புட்டுக்குக் கராரா இருக்கியே” என்று கூறினான்.


“தொழிலு வேற குடும்பம் வேறலே. நீயு பாக்குற வேலைக்குத்தேம் வார காச பிரிச்சுத்தாரேம். எம்பொஞ்சாதி செலவ பாக்க முடியாதபடிக்கு எனக்குக் கைய கடிக்கல. வேணுமின்னா வாயவிட்டே ஓங்கிட்ட கேட்டுகிட மாட்டேனாக்கும்?” என்று வளவன் கேட்க,


“அய்யாருபோல பேச்சுலே. எப்புடியாது பேசியே அணக்கத்த அணச்சுபுடுத” என சிரித்தபடி எழுந்து சென்றான். செல்லும் நண்பனையே சிறு புன்னகையுடன் பார்த்தவனும் மீண்டும் தனது புத்தகத்தில் புதையுண்டு அக்கதையினுள் பயணம் செய்வதைத் தொடர்ந்தான்.



Comments

Popular posts from this blog

திருப்பம் -01

திருப்பம்-03

திருப்பம் -02