திருப்பம்-82
திருப்பம்-82
அழகிய அந்திமாலைப் பொழுதில், தன் கைவசம் வந்திருக்கும் ஒரு கட்டப்பஞ்சாயத்து வழக்கு ஒன்றைப் பார்த்துக் கொண்டிருந்தான், யாழ் மித்ரன்.
மேலும் அவன் வேலைப்பார்க்கும் அப்பகுதியில் தற்போது சமீபமாய் தொல்லை தந்து கொண்டிருந்த ஒரு கொள்ளைக்காரனைக் கண்டறியும் பணி வேறு அவன் வசம் வந்திருக்க, அதில் ஓரளவு குற்றவாளியை யூகித்து பிடித்திடும் தூரத்தை எட்டியிருந்தவன், புதிதாக வந்திருக்கும் வழக்கில் சம்மந்தப்பட்ட அடியாளை விசாரணைக்கு அழைத்துவரக் கூறியிருந்தான்.
அந்தப் பகுதியில் கட்டப்பஞ்சாயத்து செய்து வரும் குருநாதனைத் தொடர்புகொண்டு வீணாக கலகம் ஒன்றை உருவாக்கியதே மாயன் தான். அவனுக்கு பணம் கொடுப்பதாகக் கூறி, மித்ரனுக்கு அதிகம் குடைச்சல் கொடுக்கும்படி விலை பேசியிருந்தான்.
பணம் வந்தால் பத்தும் பறக்கும் என்பதற்கு இணையாய், அவனும் உடனேயே ஒப்புக் கொண்டிருக்க, காவல் நிலையம் வந்து சேர்ந்த குருவின் அடியாள் தோரணையாய் யாழ் மித்ரன் முன்வந்து அமர்ந்தான்.
கால்மேல் காலிட்டு, திமிராய் அமர்ந்திருப்பவனைப் பார்த்த மற்ற காவலர்கள் மனதிற்குள், ‘திமிருக்கே திமிரா? இன்னிக்கு இருக்கு இவனுக்கு’ என்று மனதிற்குள் எண்ணிக் கொள்ள,
அவனைத் தன் ஆழமான விழிகளில் அளவிடும் பார்வை பார்த்தவன், “என்ன பஞ்சாயத்து இன்னிக்கு உங்க ஏரியால? உங்க மேல சில புகர் எல்லாம் வந்திருக்கு” என்று அமைதியாய் ஆரம்பித்தான்.
“ஆதாரமிருக்கா?” என்று தன் காலை ஆட்டியபடியே நக்கலாய் கேட்டவன், கொசு அடிப்பதைப் போல் தன் கன்னத்தில் அறைந்து கொண்டு, “ச*யன்.. வந்து சேருதுபாரு” என்று கூறிக் கொண்டு, “சொல்லுவ சாரே.. ஆதாரமிருக்குதா?” என்று கேட்டான்.
“ஆதாரம் தானே? காட்டலாம். நீங்க ரெண்டு பேர அடிச்சுருக்கீங்க. அதுல ஒருத்தர் கன்னம் வீங்கி போயிருக்கு. இன்னொருத்தர் கையு உடைஞ்சு கட்டுப்போட்டிருக்காங்க. நியாயமா உங்களுக்கு நான் குடுக்க வேண்டிய மரியாதையே வேற. என்ன நடந்ததுனு ரெண்டு பக்கமும் விசாரணை நடக்குற வரைதான் என் பொறுமையெல்லாம்” என்று மிக அமைதியாய் கூறிய மித்ரன் தானும், கொசு அடிப்பதைப் போல் தன் கையில் தட்டிக் கொண்டு, “கொசுவுக்குருக்குற தெனவ பாரு” என்று அதனை ஊதிவிட,
“என்னம்லே? நளியடிக்கீயளோ?” என்று வந்திருப்பவன் உறுமலாய் கேட்டான்.
“கேட்ட கேள்விக்கு பதிலை சொல்லு” என்று அழுத்தமாய் மித்ரன் கூற,
“இஞ்சாருலே.. அடிச்சேம்தேம். எங்கைய்யாட்டயே வந்து அவிய பண்றத தப்புன்னாவ. அதேம் அடிச்சேம்” என்று மிக திமிராய் அவன் கூறினான்.
“ஓ… உங்கைய்யா அப்புடியென்ன பண்ணாரு?” என்று கைகளைக் கட்டிக் கொண்டு படு நக்கலாய் மித்ரன் கேட்க,
“இந்த போட்டு வாங்குற வேலயெல்லாம் நம்மட்ட வேணாமுயா” என்று கூறி கேவலமாய் சிரித்துக் கொண்டான்.
“ஏதோ பெண் பிள்ளைய தப்பா பேசினதாதான் எனக்கு செய்தி வந்துது” என்று கூறியபடி கைகளை உயர்த்தி அவன் உடலை வலைத்து சொடுக்கெடுத்துக்கொள்ள,
“ஆமா பேசினாவ. எங்கய்யா வாயி. அவிய என்னமும் பேசுவாவ. இவேம் தப்பும்பானா? ஆதாரமில்லாம ஒன்னால ஒன்னுத்தியும்..” என்று கூறி அழுத்தமாய் பார்த்தான்.
“ஹ்ம்..” என்றபடி எழுந்த மித்ரன், “அப்றம்” என்க,
“நா என்ன கதையாலே சொல்லுதேம்? இஞ்சாரு.. எங்க வழியில குறுக்கால வந்தா, மொத்தமா டேசனயே கொளுத்திப்போட்டுட்டுப் போயிட்டே இருப்பம்” என்றவன், “சாம்பிலு பாக்கீயளா?” என்றபடி அம்மேஜையிலிருந்த சில கோப்புகளை அள்ளி கீழே வீசியவன், அதனில் தீயை பற்ற வைத்து எறித்திருந்தான்.
எறிந்து காற்றாகும் காகிதங்களை அமைதியும் அழுத்தமுமாய் பார்த்த மித்ரன், அங்கிருக்கும் ஒரு பெண் காவலரைப் பார்த்து தலையசைக்க,
அவரும் வந்து அந்த அடியாளின் கையில் விலங்கு பூட்டினாள்.
அதில் ஆத்திரத்துடன் திரும்பியவன் “என்னம்லே பண்ணுத? பொம்பளைக்கு இம்புட்டு அகமோ?” என்று அறையக் கை ஓங்க,
அதை லாவகமாய் தட்டிவிட்டு அவன் கன்னத்தில் தன் கரம் இறக்கியவள், “வகுந்துடுவேன். மருதகாரிமேல கையு வச்சுட்டு போவ ஒனக்கு தெனவிருக்காகும்? சீவிடுவேன்” என்று கர்ஜித்துவிட்டு அவனை சிறையில் தள்ளினாள்.
சின்ன புன்னகையுடன் தன் கைகளைத் தட்டிக் கொண்ட மித்ரனைப் பார்த்து, “ஏம்லே.. எங்கூருக்கே வந்து எம்மேலயே கை வெக்கீயோ? எங்கைய்யன தெரியுமாலே? என்னைய உள்ளார போட்டது தெரிஞ்சா வெளியனுப்பச்சொல்லிப்பேச ஆளுயில்லாமதேம் இம்புட்டு தூரத்துக்கு வருவேனாக்கும்?” என்று கத்தினான்.
விடாமல் ஐந்து நிமிடம் அவன் மூச்சு பிடிக்கக் கத்தியதன் உபயம், காவல் நிலைய அலைபேசி அதிர்ந்தது.
அந்த பகுதி கௌன்சிலர், வந்திருக்கும் புதியவனை விடச்சொல்லிக் கூற,
'ம்ம்.. கட்டப்பஞ்சாயத்துக்காரன் கௌன்சிலர கைல வச்சுட்டுத்தான் ஆடுறான் போல' என்று நினைத்துக் கொண்டு, “நேர்ல வந்து ஒரு லெட்டர் எழுதி குடுங்க சார். ரிலீஸ் பண்ணிடுறேன்” என்று திடமாய் கூறினான்.
“என்னம்லே? அகமா? நா ஆருனு தெரியும்தான? வுடுலே அவேன” என்று அவர் கூற,
“இது ஒன்னும் உங்கப்பன்வீட்டு ஸ்டேஷன் இல்ல. இஷ்டத்துக்கு ஆளை புடிச்சு உள்ள போடுறதுக்கும் வெளிய எடுக்குறதுக்கும்.. அப்புடினு மேலதிகாரி கேப்பாங்க சார். அதான்.. நீங்க ஒரு லெட்டர் எழுதி குடுத்துட்டா எனக்கு வம்பில்ல பாருங்க” என்றான்.
உள்ளே அடைபட்டவனுக்கு மெல்ல கிளிபிடிக்க, ‘கைகாசு வாங்கினதுக்கு அந்த மாயன் சொன்னியாம்னு கெடக்குறதலாம் எறிச்சுபோட்டாக்கா இவேம் என்ன உள்ள தள்ளிபுட்டியான். கௌன்சிலரு பாச்சா பழிக்காது போலியே’ என்று மனதோடு அச்சம் கொண்டான்.
என்ன பதில் கூறவென்று புரியாமல் அந்தப்க்கம் அழைப்புத் துண்டிக்கப்பட, “ஏரியால வேணும்னே நீங்க யாரு சொல்லி கலவரம் பண்ணீங்கனும் தெரியும்… எதுக்கு பண்ணீங்கனும் தெரியும். உங்களப்போல பல கிரிமினல்ஸ பாத்தவன்டா நானு. பிரச்சினை நடந்ததும் ஒரு கால் ஹிஸ்டரிகூடவா நோட் பண்ண மாட்டேன்” எனக் கூறி அவனைப் பார்த்து ஏளனமாய் சிரித்துவிட்டுச் சென்றான்.
அங்கு தனது இல்லத்தில் மனைவிக்கு உணவை ஊட்டிக் கொண்டிருந்த வளவன், “மித்து” என்று மெல்ல அழைக்க,
கையிலுள்ள புத்தகத்திலிருந்து கவனம் விடுத்து நிமிர்ந்து பார்த்து, ‘ஆ’ என்று உணவை வாங்க வாய் திறந்தாள்.
அவளுக்கு ஊட்டியபடி, “இன்னிக்கு வெள்ளிக்கெழம” என்று அவன் கூற,
உணர்ச்சிகளற்ற அவள் முகம் சட்டென வாடியது. இதோ அதோவென அவள் அடிபட்டுப் படுத்து இரண்டு மாதங்களான நிலையில், அவனும் கடந்த மூன்று வாரங்களாய் கண்ணன் கோவிலுக்குச் செல்ல அழைக்கின்றான்.
பொன்போல மகிழுந்தில் அமர்த்தி, சக்கர நாற்காலியில் தானே தள்ளிக் கொண்டு செல்வதாய் அவன் கேட்டும்கூட, அவளுக்கு ஒப்புக்கொள்ள மனமேயில்லை. பொதுவாகவே பெண்களுக்கு முடிமீதான பிரியம் அதிகம் இருக்கும். சங்கமித்ராவிற்கு நீண்ட நெடிய சிகை இல்லையென்றாலும்கூட ஓரளவு கொஞ்சம் நீளமாகத்தான் இருக்கும். அதிலும் அடர்த்தியாக இருக்கும்.
திருமணம் முடித்து இங்கு வந்தபோதே, ‘அச்சோ என் பட்டுக்கு தண்ணி மாத்தினது சேரலை போல. பாருங்க ரொம்ப கொட்டுறான்' என்று வருத்தம்போல் தன் உதிர்ந்த முடிகளைப் பார்த்தபடி அவள் கூறியிருக்க,
'ஏட்டி ஊருவிட்டு ஊருவந்து இத நீயு சொல்லிருந்தாலுங்கூட தகுமுடி. மதராசிலருந்து இந்தூருக்கு மாத்தி வந்தபொறவு ஒனக்குக் கொட்டாத கூந்தலு அந்தூட்டுலருந்து இந்தூட்டுக்கு மாறினதுலதேம் கொட்டுதோ?’ என்று கேட்டிருந்தான்.
தனியாக முடி வளர்க்க எண்ணையெல்லாம் கூட அவள் காய்ச்சி தேய்ப்பது வழக்கம். அப்படியிருக்க, இப்போது மொத்தமாய் மழிக்கப்பட்டத் தலையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாய் வளர்ந்திருக்கும் முடியுடன் வெளியே செல்ல வெகுவாக சங்கடப்பட்டாள்.
இதெல்லாம் ஒரு விடயமா? என்று நாம் எளிமையாக கூறிவிடும் சில விஷயங்கள் கடப்பதற்கு கடினம் தான். அதை புரிந்து கொண்ட வளவனும்கூட முதல் மாதம் அவளை அவள் போக்கிலேயேதான் விட்டு வைத்தான்.
வீட்டிற்குள்ளேயே அடைந்து பெரும்பாலும் அறையை விட்டுக் கூட அவள் வெளிவர விரும்பாமல் இருப்பதில் பெரும் சங்கடம் கொண்டவன், தற்போது கொஞ்சம் கொஞ்சமாக அவளை அறைக்கு வெளியேவும் சில நிமிடங்களேனும் அமர்த்தி வைக்கின்றான்.
அதனோடு முடிந்தவரை அவள் மனநிம்மதியை மீட்கக் கோவிலுக்காவது அழைத்துச் செல்வோம் என்றுதான் எண்ணுகிறான். எங்கே? அவள்தான் பிடிகொடுக்க இயலாதென்கின்றாளே!
அவளுக்கும் வெளியே செல்ல விருப்பமில்லாமல் இல்லை. தயக்கமும் சங்கோஜமும் போட்டுவைத்தத் திரையைத் தாண்ட இயலவில்லை. அதை அவளாகவே உடைத்து வெளியே வரவேண்டும் என்று எண்ணிய வளவனும், அதுக்குத்தான் அவளுக்கு உறுதுணையாக இருக்க முயன்று இன்று ஒரு முடிவோடு இறங்கினான்.
“இஞ்சாருடி.. முழுசா போடுத சுடிதாரு இருக்குமின்ன? அத போட்டுகிடு. ஒனக்கும் வசதிபடும், கோவிலுக்குப் போவவும் தோதுபடும். மோந்திக்கு ரெடியாவி போயி வருவோம்” என்று வளவன் கூற,
இடவலமாய் தலையசைத்தாள்.
“சவட்டியெடுக்கப்போதேம். அகமாடி ஒனக்கு? சொன்னா சரினு கேட்டுக்கப் பழவு. நாம கோயிலுக்கு போயாரோம். அம்புட்டுத்தேம்” என்று முடித்துக் கொண்டவன் எழுந்து செல்ல,
அவனை ஆயாசமாய் பார்த்தாள்.
சொன்னதைப் போல் மாலைநேரம், லேசான ஒரு பருத்து உடையுடன் வந்தவன், அவளை நோக்க, அதிருப்தியாய் அவனைப் பார்த்தாள்.
“கெஞ்ச வெக்காத புள்ள” என்று கெஞ்சுதலாய் கூறியவன், அவள் முகத்தை ஈரத்துணியால் துடைத்துவிட்டு, அவளைத் தயார் செய்தான்.
காயங்களைக் காரணமாய் கொண்டு இரண்டு மாதம் அவள் எந்த ஆபரணங்களும் அணியவில்லை. அவளது திருமாங்கல்யம் உட்பட.
கழுத்தில் காயம் ஆறும் முன்னமே அதை கவனித்தவளுக்கு மனம் சங்கடமாக இருந்தபோதும், தாலியில்லாமல் அவன் தன்னவன் இல்லை என்று எல்லாம் எண்ணிக்கொள்ளவில்லை. ஆனாலும் அது தன் மார்போடு முட்டி அகத்தில் சொல்லும் தைரியம் அவளுக்கு வேண்டுமாய்…
தன்னை தயார் செய்தவனையும் தன் கழுத்தையும் அவள் மாறி மாறி பார்க்க,
அதை கண்டுகொள்ளாததைப் போலவே சென்று தானும் தயாராகி வந்தான்.
அவளை சக்கர நாற்காலியில் அமர்த்தி வெளியே கூட்டிவந்தவன், கூடத்தில் அமர்ந்திருக்கும் மகாவைப் பார்த்து, “அத்தான்.. வாங்க வாங்க. எப்ப வந்தீய?” என்று கேட்க,
“இப்பம்தாம்லே. மாமாவ பாக்க வந்தேம். வெளிய போயிருக்காவலாம். அதேம் ஒக்காந்துருக்கேம்” என்றான்.
“சரித்தான். ஒரு ஒதவி பண்றீயளா? நானு இவோள கோயிலுக்குக் கூட்டிப்போறேம். காரு கதவ மட்டும் தரந்து உடுறீயளா? இவோள உள்ள ஏத்திபுடுதேம்” என்று வளவன் கேட்க,
“செய்யுனு செல்லு செய்யப்போறேம். என்ன ஒதவி கிதவினுட்டு” என்ற மகாவும் அவனுக்கு உதவினான்.
அங்கு வந்த தெய்வா, “ஏ மக்கா.. என்னலே பண்றீய?” என்று கேட்க,
“வீட்டுக்குள்ளயே அடஞ்சு கெடக்காம்மா. அதேம் கோயிலுக்குக் கூட்டிபோயிட்டு வரலாமுனு போதேம்” என்றான்.
“அவளுக்குத் தோதுபடுமானு கேட்டியா?” என்று அவர் கேட்க,
மகிழுந்தில் அமர்ந்திருந்த மித்ரா ஆச்சரியமாய் புருவம் உயர்த்தினாள்.
“எல்லாம் தோதுபடும். நாஞ்சொல்லி வேணாம்பாளா?” என்று வளவன் குறும்பாய் கூற,
“அடிபட்டவலே. ஓம்பேச்சுக்கு இழுக்க பாக்காத. பாத்து சுளுவா போயி வாங்க” என்று கூறிச் சென்றார்.
“என்னலே அத்தே எப்பதருந்து ஓம்பொஞ்சாதிக்காவலாம் பேச ஆரமிச்சாவ?” என்று மகா சிரிக்க,
“இந்தா இப்ப பேசினாவல்லத்தான்? அப்போருந்துதேம்” எனச் சிரித்தான்.
“அதுசரி” என்று சிரித்த மகா, “போய் வாங்களே. ஏத்தா பாத்து போ” எனக் கூறிச் செல்ல,
“மித்ரா நல்லா ஒக்காந்துட்டத்தான? ஏதும் சரியால்லயா?” எனக் கேட்டு சரிபார்த்துவிட்டுச் சென்று வண்டியை எடுத்தான்.
சில நிமிடங்களில் அவர்கள் கோவிலை வந்தடைய, அவளுக்குத்தான் பெரும் தயக்கமாக இருந்தது.
கீழே இறங்கி சக்கர நாற்காலியை எடுத்து விரித்து வைத்தவன், வந்து அவளைத் தூக்க, அவன் சட்டையை இறுக்கமாய் பற்றிக் கொண்டாள், ஒருவித பதட்டத்துடன்.
“ஒன்னுமில்ல மித்ரா” எனக் கூறியவன், அவளை நாற்காலியில் அமர்த்த, பூக்கடைக்காரப் பாட்டியிலிருந்து, பழக்கடைக்கார பெரியவர் வரை அவளைத் தெரிந்தோர் அனைவரும் இக்காட்சியைக் கண்டு அவள் நிலையில் அதிர்ந்தனர்.
அவளைத் தள்ளிக் கொண்டே அவன் செல்ல,
அவள் சங்கடத்துடன் சிரம் தாழ்த்தி அமர்ந்திருந்தாள்.
அவனை நெருங்கிய பெரியவர், “என்னத்தா ஆச்சுது?” என்று கேட்க,
அவள் வளவனைப் பார்த்தாள்.
“ஆக்ஸிடென்ட் ஆவிபோச்சுண்ணே. ரெண்டு மாசமாச்சுது” என்று அவன் கூற,
“அதேம் ஆளயே காணுமாக்கும்?” என்று பூக்கார பாட்டியும் கேட்டபடி வந்தார்.
“ஏம் ஆத்தா? நானு வாங்காம ஓம் பூவு வியாபாரம் படுத்துருச்சாக்கும்?” என்று அவன் குறும்பாய் கேட்க,
அதில் சிரித்துக் கொண்டவர், “இப்பத பரவாலியா தாயி?” என்று கேட்டார்.
பதில் கூற இயலாத நிலையில் கண்கள் கலங்கத் துடிக்க, சிறு புன்னகையை மட்டும் பதிலாய் குடுத்தாள்.
“போய் கும்பிட்டு வாரம்” என அவளைக் கூட்டிக் கொண்டு அவன் உள்ளே செல்ல, கோவில் ஐயரும் பதட்டமாய் கேள்விகள் எழுப்பினார்.
அனைத்திற்கும் பதில் கூறிய வளவன் தன் சட்டைப் பையிலிருந்து ஒரு பொட்டலத்தைக் கொடுத்தனுப்ப,
எதையும் ஏனென்று கேட்டுக்கொள்ளாமல் பால கிருஷ்ணனையே வெறித்துப் பார்த்தாள்.
பின் மெல்ல கண்கள் மூடிக் கொண்டவள், ‘எல்லாம் சீக்கிரம் சரியாயிடனும்' என்று வேண்டிக்கொள்ள,
“எல்லாஞ் சீக்கிரம் சுளுவா முடியும். நீயு கரிச்சு என்னயும் வருத்தாமரு. ஒனக்காவத்தேம் என்னைய அனுப்பிருக்காவன்ன? அப்பத நாயிருக்கேம்னு தெகிரியமா திடமாயி வா” என்றபடி ஐயர் அர்ச்சனை செய்து கொண்டு வந்து கொடுத்த அப்பொன் தாலியை அவள் கழுத்தில் கட்டி மும்முடிச்சிட்டான், திருமாவளவன்.
Comments
Post a Comment