திருப்பம்-83

 திருப்பம்-83



அவன் குரல் கூறிய சொற்களுடன், தன் கழுத்தை வருடிய தாலியின் ஸ்பரிசத்தில் விழி திறந்து பார்த்தவள், அவனை வியப்பாய் நோக்க,


அழகாய் கன்னம் குழைய புன்னகைத்தவன், அவளைப் பார்த்துக் கண்ணடித்தான்.


அவள் அவனை வியப்பும் அதிர்ச்சியும் விலாகத பார்வையோடு நோக்க,


“எப்புடி? லவ் பண்ணி வீட்டுக்குலாம் தெரியாம ரன்னிங் மேரேஜு பண்ணிகிட்ட கணக்காருக்கா? நீயு நானு, நம்ம சாமி, நம்ம கல்யாணம்” என்று கூறினான்.


நொடியில் அவள் விழிகளில் நீர்த்துளிகள் கோர்த்துக் கொள்ள, உள்ளிருந்து வந்த ஐயர் குங்குமம் கொடுத்தார்.


அதை வாங்கியவன் கண்கள் மூடி வேண்டிக் கொண்டு அவள் நெற்றியில் இட்டுவிட,


அதை கண்கள் மூடி உள்வாங்கியவள் விழிநீர் அவள் கன்னம் தீண்டியது.


அழுத்தமான விரல்களால் அவள் கண்ணீர் துடைத்தவன், “அழுவாதடி என்னவோ போல வருது” என்று கூற,


விழுக்கென அவனை நிமிர்ந்து வேதனை மிகுந்த பார்வை பார்த்தவள், தன் கன்னம் துடைத்துக் கொண்டாள்.


சொல்லில் வடிக்க இயலாத ஒரு உணர்வுக் குவியல் அவளை ஆட்கொண்டது. இறைவனை தரிசித்துவிட்டு வெளியே இருவரும் வர, அவளைக் கூட்டிச் சென்று வண்டியில் அமர்த்தியவன், “இரு வாரேம்” எனச் சென்று ஐந்து நிமிடம் கழித்து வந்தான்.


பயணம் மீண்டும் அமைதியாய் தொடர, வீட்டை அடைந்தவன் அவளைத் தூக்கிக் கொண்டு உள்ளே நுழைய,


“அண்ணே இதான் சாக்குனு மைணிய தூக்கிட்டே அழையுறாவ பாத்தீயளா மைணி?” என்று தனம் கார்த்திகாவிடம் கேலி பேசினாள்.


கிளுக்கிச் சிரித்தக் கார்த்திகா, “அவிய வீட்டுக்காரி அவிய சொமக்காவ. ஒனக்குவேணுமினா நீயு ஓம் ஆள கேக்கத்தான?” என்று கேட்க,


“ம்க்கும்.. என்னைய தூக்கிட்டு பொறவு அவிய எங்கருந்து நடக்க? உருண்டுகிட்டுத்தேம் போவனும்” என்று சிரித்தாள்.


அங்கே அறையில் அவளை அமர்த்திய வளவன், சென்று அவளது சக்கர நாற்காலியைக் கொண்டு வந்து போட்டுவிட்டு, ஒரு பையிலிருந்து கொஞ்சம் போல் கனகாம்பரப்பூவை எடுத்தான்.


விரல் அளவு நீளம் மட்டுமே இருந்தது அப்பூச்சரம்.


அதை அவள் புருவங்கள் இடுங்க நோக்க,


குட்டி சிகை கவ்வியை எடுத்து வந்தவன் அப்பூவை அவள் தலையில் வைத்துக் குத்திவிட, விழிகள் விரிய அவனைப் பார்த்தவள், வெட்கத்துடன் இடவலமாய் தலையாட்டி மறுத்தாள்.


“இருக்கட்டும்டி. நம்ம சுடருல.. ஒருவயசு மொட்ட எடுத்துத் திரும்பினப் பொறவு இப்புடி கொஞ்சங்காணோம் முடி வளந்துருந்துச்சு. பூவக்கண்டா பாயுவா. இப்புடி கொஞ்சம் போல எடுத்து மைணி குத்திவிடுவாவ. பாக்க அழகாருக்கும். ஒனக்கும் அப்புடி குத்திப்பாக்கனுமுனு ஆசையாருந்துச்சு” என்று உண்மையான ஆசையோடு அவன் கூற,


அவளுக்கு வெட்கம் தாங்கவில்லை.


அவள் முடியை லேசாய் வருடி அப்பூவைத் தொட்டுப் பார்க்க,


“நல்லாத்தேம் இருக்குது மித்ரா” என்றான்.


லேசாய் சிரித்தவள் சரியென்று தலையசைக்க, “நாம்போயி ஐயாட்ட பேசிட்டு வாரேம்” என எழுந்து சென்றான்.


“தாலிகொடி எடுக்க வேலன நாளுபாக்க சொல்லிருந்தேம். ஏதும் சேதி சொன்னானா தனம்?” என்று சுயம்புலிங்கம் தனத்திடம் கேட்க,


கார்த்திகாவுடன் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தவள் தந்தை கேள்வியில் லேசாய் தடுமாறி, “மோந்திக்கு வாரேம்னு சொன்னாவ ஐயா. இப்பத வந்து அவியளே பேசுவாவ” என்றாள்.


அவள் கூறியதைப் போல் சில நிமிடங்களில் வடிவேலும் சுந்தராம்மாளும் வர,


“வாய்யா வேலா.. வாமா” என்று சுயம்புலிங்கம் வரவேற்றார்.


“அத்தே வாங்க வாங்க” என்று தனம் வரவேற்க,


“ஏ அப்பா.. அத்தேக்கு வரவேற்பு பலமாருக்குது. ஆனா அவியள வானு கூப்பிடலயே” என்று கார்த்திகா கேலி செய்ய,


“கூப்பிடாமத்தான (மனசுக்குள்ள) உள்ளக்க வந்தாவ” என்று கூறியவள் சிறு நாணப் புன்னகையுடன் உள்ளே சென்றாள்.


அவள் கூற்றில் அனைவரும் அவனை நோக்க, பாவம் அவனுக்குத்தான் வெட்கத்தை எப்படி மறைப்பதென்று தெரியாமல் தவிப்பாய் ஆனது.


“மாப்ளேய் மின்னுதுடியோய்” என்று வளவன் கேலி செய்ய,


“லேய் சும்மாருடா” என்று கூறி தன் பின்னந்தலையைக் கோதிக் கொண்டான்.


உள்ளிருந்து வந்த தெய்வாவும் வந்தவர்களை வரவேற்க, தனமும் வந்து நின்றுக் கொண்டாள்.


“சங்கு என்னலே பண்ணுறா?” என்று வடிவேல் கேட்க,


“ஒக்காந்துருக்காலே. கூட்டியாரவா?” என்று கேட்டான்.


“படுத்திருந்தா வுட்டுபுடுலே” என்று வடிவேல் கூற,


உள்ளே சென்ற வளவன், அவள் வசதிகளைக் கேட்டு, அவள் சம்மதத்துடன் வெளியே கூட்டிவந்தான். மறக்காமல் பூவைக் கலைந்துவிட்டே வந்தாள்.


“விக்ரம் இல்லியா தங்கபுள்ள” என்று வடிவேல் கேட்க,


“இன்னும் வரலேங்கண்ணே” என்றாள், கார்த்திகா.


“சரித்தா சரித்தா” என்றவன் தன் அன்னையை நோக்க, மென்மையாய் புன்னகைத்துக் கொண்டவர், “அண்ணே நாங்க ஒரு முடிவு எடுத்துருக்கோம். ஒங்கட்டக் கலந்துக்காத முடிவு செஞ்சதுக்கு மன்னிச்சுகிடுவ” என்று கூறினார்.


“என்னத்தாயி பெரிய வார்த்தையெல்லாம் பேசுத?” என்று அவர் கேட்க,


“கல்யாணத்துக்குக் குறிச்ச நாளுலருந்து கூட ரெண்டு மாசந்தள்ளி வார ஒரு முகூர்த்தத்துக்கு மாத்திகிடலாமுனு ரோசிக்கோம்” என்றார்.


அவர் கூற்றில் பதறிய தெய்வா, “ஏம்மைணி? என்னாச்சுது இப்பத?” என்க,


அனைவரும் குழப்பமாய் அவர் முகத்தையும் தனம் மற்றும் வடிவேல் முகத்தையும் மாறி மாறி பார்த்தனர்.


“ஏம்புள்ள கல்யாணத்துல அம்புட்டு பேரும் மனநெறைக்க வந்து வாழ்த்திட்டுப் போவனும்முனு பாக்கேம்” என்றவர், “அவேம் கல்யாணத்துக்கு அவேம் தங்கச்சியாலயே நடமாடி ஏலாதபடிக்கு இருக்கயில, மனசார வச்சுகிட எங்களுக்கு மனமொப்பலை” என்று கூற,


சங்கமித்ரா அதிர்ந்துபோய் அவர்களைப் பார்த்தாள்.


மற்றவர்களும் அவரது கூற்று சங்கமித்ரா குறித்தே என்பது புரிந்து அவளை நோக்க,


“அதெல்லாம் அவோளும் வருவா சம்மந்தி. அவோள கூட்டியாராம இருப்பமா?” என்று தெய்வா அவசரமாய் பதில் கொடுக்க,


“நீங்களா கூட்டியாரதுக்கும் அவோளா உரிமயோட வாரதுக்கும் வித்தியாசமிருக்குமில்ல சம்மந்தி?” என்றவரைத் தொடர்ந்து, “எங்கூட்டுக்காரனுக்கு எங்கண்ணாலத்துல பந்தக்காலு நடுறதுலருந்து பந்தி வக்குற வார அம்புட்டு வேல வச்சுருக்கேம் அத்தே. அவேம் பொண்டாட்டிய இப்புடி ஒக்காத்திட்டு போயி பாருடானா அவேம் போவானா, இல்ல எனக்குத்தேம் போவச்சொல்ல ஏலுமா சொல்லுவ?” என்க,


“மைணிக்கே அண்ணேம் இப்பத கையு காசெல்லாம் போட்டிருக்கும்ல அம்மா. எனக்கு படியா சீறுயெல்லாஞ் செய்ய வேணாமா?” என்று தனம் கேட்டாள்.


ஒவ்வொருத்தர் கூறும் கூற்று வெவ்வேறாக இருந்தாலும், சாராம்சம் என்னவோ சங்கமித்ரா எழுந்து நடமாடும் நிலைக்கு வந்தபின் செய்துகொள்ளலாம் என்பதே.


அது புரிந்துகொண்ட பெண்ணவளுக்கு அழுகையே வந்துவிட்டது. தனக்காக அவர்கள் சுபநிகழ்வையே தட்டிக் கழிக்குமளவு தான் அப்படி என்ன செய்துவிட்டோம்? என்று எண்ணியவளுக்கு கண்ணீர் அறுவியாய் கொட்டத், தன்னவனைப் பார்த்து இடவலமாய் தலையசைத்தாள்.


அவள் தொண்டையைக் கேவல் ஒலி வந்து முட்ட, மெல்லிய ஓசை அவளிடமிருந்து பிறந்தது. அதில் அழுத்தம் பெற்ற, அவளுக்குத் தொண்டையில் வலி ஏற்பட,


தன் தொண்டையைப் பற்றிக் கொண்டவளைப் பார்த்து, “ஏட்டி” என்று வளவன் பதறினான்.


“ஏட்டி மைணி” என்ற தனம் சென்று தண்ணீர் கொண்டுவந்துக் கொடுக்க,


அவள் கன்னம் வருடிய மித்ரா, வேண்டும் என்ற தலையசைப்புடன் வடிவேலையும் பார்த்து கெஞ்சுதலாய் தலையசைத்தாள்.


'என்னால பேசி சொல்ல முடியலையே' என்ற வருத்தமான பார்வையோடு அவள் வளவனை நோக்க,


“இதுலாம் வேணாம்லே. குறிச்ச தேதிலயே கட்டிக்கோவ” என்று கூறினான்.


“லே.. இது ஒனக்காவ இல்ல. ஏந்தங்கிச்சிக்காவ. ஏங்கூட பொறந்தத் தங்கச்சி இப்புடி காலொடிஞ்சு கெடந்தா நான் வச்சுப்பேனாலே? நாத்துனா முடிபோட அது வரவோணாமா?” என்று அதட்டல் போல் கூறிய வடிவேல் வந்து தனம் அருகே மித்ராவின் காலடியில் அமர்ந்தான்.


வேகவேகமாய் தலையை வேண்டாம் என்று அசைத்தவளுக்கு தனக்காக அவர்கள் செய்யும் செயலை ஏற்க இயலவில்லை.


அழுகையாய் வந்தது.


'வேணாம் ப்ளீஸ்’ என்று அவள் கெஞ்சுதலாய் நோக்க,


அவள் கண்ணீர் துடைத்த வடிவேல், “ஏத்தா தங்கபுள்ள. ஓன் அண்ணேனா என்னிய பாக்கலியா நீயு” என்று கேட்டான்.


விசும்பியபடி தலை குனிந்தவள், இடக்கரத்தில் தன் முகம் புதைத்துக்கொண்டு உடல் குலுங்க அழ,


அவள் பின்னே வந்து அவளைத் தாங்கிய வளவனின் கண்களும் கலங்கியது.


சுயம்புலிங்கம் நெகிழ்ந்துபோனார்.


தங்கள் வீட்டிற்கு வந்த பெண்மீது தாங்கள் பாசமும், அக்கறையும் காட்டுவது வேறு. வடிவேலையும் மீறி சுந்தராம்பாள் கூட இதற்கு ஒப்புக்கொண்டது அவருக்கு நெகிழ்வாய் இருந்தது. எனில் சங்கமித்ரா எத்தனை உரிமையோடு அவர்களுடன் பழகியிருக்க வேண்டும், அவர்களும் தான் எத்தனை பாசத்துடன் இருந்திருக்க வேண்டும்?


“மைணி” என்று அவள் தாடை பற்றிய தனம், “ஓம் பெஸ்டு பிரெண்டு தான மைணி நானு?” என்று கேட்க,


அவளைப் பார்த்து மேலும் கண்ணீர் சிந்தினாள்.


“எனக்கு நீயு வந்து பொடவயெல்லாம் கட்டிவிட்டு ரெடி பண்ண வேணாமா? பொண்ண கூட்டிகிட்டு வாங்கனு சொல்லயில பொன்னுபோல நீயும், கார்த்தி மைணியுந்தான என்னைய கூட்டியாரனும்? ஏங்கையப் புடிச்சு ஏங்கூட நீயு நடந்துவார வேணாமா? ஒனக்கு எப்புடியோ, எனக்கு அதெல்லாம் வேணும். கல்யாணமெல்லாம் வாழ்க்கையில ஒருக்காதேம் கட்டிகிட முடியும். அப்பத மனசு நெறஞ்சு அம்புட்டுப்பேரும் சந்தோசமாருக்க வேணாமா? மூஞ்சிய மூஞ்சிய பாத்துகிட்டு ஒரு ஓரமா நீயு ஒக்காந்துருக்க நானு தாலி கட்டிகிடனுமா?” என்று அவள் கேட்க,


அவளை அணைத்துக் கொண்டவள் உடல் குலுங்க அழுதாள்.


அக்காட்சியைக் கண்ட அனைவருக்குமே கண்கள் கலங்கியது, தெய்வா உட்பட. ஆனால் நெகிழ்வாய், வருத்தமாய் இருப்பதற்காகவெல்லலாம் திருமணத்தைத் தள்ளி வைப்பதை அவர் துளியும் விருப்பவேயில்லை.

முடிவான தேதி தள்ளிப்போவதில் வெகுவாய் மனம் சுனங்கினார்.


இங்கு மித்ராவின் தலைகோதிய வடிவேல், “தங்கபுள்ள… எங்க ஆசைக்காவண்டிடா” என்க,


“தாயி.. ஒன்னைய ஏம்புள்ளையாத்தேம் பாக்குறேம். அழாத ஆத்தா” என்று சுந்தராம்பாள் கூற,


கண்ணீரோடு அவரை ஏறிட்டாள்.


இத்தனை பாசத்திற்கு தான் என்ன செய்துவிட்டோம் என்று தோன்றியது. மேலும் அங்கிருந்து அழுது மற்றோரை சங்கடப்படுத்தவும் மனமில்லை, அழாமல் இருக்கவும் அவளால் முடியவில்லை.


தவிப்பாய் அவள் வளவனை நோக்க, அவள் பார்வையிலேயே அவள் அகம் அறிந்தவனாய், அவளை அறைக்குள் அழைத்து சென்றுவிட்டான்.


கட்டிலில் கிடத்தியவளை விட்டு பிரியக்கூட இடமலிக்காமல் அவனை அணைத்துக் கொண்டு அவள் அழ, 


அவளைத் தானும் அணைத்துக் கொண்டு, தட்டிக் கொடுத்தான்.


அவனைப் பார்த்து, ‘ஏன்?’ என்பதாய் அவள் நோக்க,


“ஒன்னய அம்புட்டுக்கு புடிக்கும்டி இங்கன எல்லாருக்கும்” என்றான்.


'அதான் ஏன்?’ என்பதாய் அவள் பார்க்க,


“பாசமெல்லாம் காரணம் வச்சு வாரதில்ல மித்துமா.. எந்த காரணமுமே இல்லாம வாரதுதேம் பாசம்” என்றான்.


நிமிடங்கள் நீள, அவள் கண்ணீர் நீண்டு, மெல்ல ஓய்ந்தது.


“மித்ரா” என்று அவன் அழைக்க,


'எனக்கு வருத்தமாருக்கு' என்பதாய் சைகை செய்தாள்.


“என்ன சொல்லனு தெரியலடி” என்று அவன் கூற,


கதவு தட்டும் ஓசை கேட்டது.


ஒரு பெருமூச்சு விட்டவன் சென்று கதவைத் திறக்க,


உள்ளே வந்த தனம் மற்றும் வடிவேல் அவள் அருகே அமர்ந்து கொண்டனர்.


அவர்களை ஆயாசமாய் அவள் நோக்க,


“எங்களுக்காக ப்ளீஸ்” என்றனர்.


கண்ணீருடன் தன்னவனைப் பார்த்தவள், அவர்களை நோக்க,


“எங்க ஆசைக்காக” என்றனர்.


தனம் கன்னம் வருடிய மித்ரா, மெல்ல தலையசைக்க,


அவளை அணைத்துக் கொண்டு நிமிர்ந்த தனம், கண்ணீரோடு, “தேங்ஸ்டி மைணி” என்றாள்.


அதில் மித்ரா வலியுடன் புன்னகைக்க,


வளவன் வடிவேலை சென்று அணைத்துக் கொண்டான்.


ஆத்மார்த்தமான அன்பு மட்டுமே அங்கு பிரதானமாய், அவர்களுடன் ஜீவித்து சுவாசத்துடன் கலந்திருந்தது…




Comments

Popular posts from this blog

திருப்பம் -01

திருப்பம்-03

திருப்பம் -02