திருப்பம்-84

 திருப்பம்-84



அந்த மாலை வேளை, கார்த்திகாவும் விக்ரமனும் கோவில் சென்றிருக்க, சங்கமித்ரா அவளது அறையில் தூங்கிக் கொண்டிருந்தாள். தனம் கல்லூரியிலும், சுயம்புலிங்கம் வயலிலும், வளவன் மற்றும் வடிவேல் தோப்பிலும் இருந்தனர்.


“என்னமா என்ன என்னமோ கேள்விபட்டேம்” என்று அன்னையுடன் அமர்ந்து கீரையை ஆய்ந்தபடி திரிபுரா கேட்க,


“மிண்டாதிருடி. எனக்கு கதகதனுதேம் வருது” என்று ஆயாசமாய் தெய்வா கூறினார்.


“நீயேதும் கேக்கலியா ம்மா? இதுலாம் நல்லாவா இருக்குது? அவோ ஒருத்திக்காவ குறிச்ச தேதியமா மாத்தனுமாக்கும்?” என்று திரிபுரா கேட்க,


“என்னத்தடி கேக்கச் சொல்லுத? அவோ பக்கட்டு நான் என்னத்தச் சொன்னாலும் நாந்தேம் கெட்டவோளாவேம். குறிச்சத் தேதிய மாத்த மனசே ஒப்பல எனக்கு. என்னமாது சொன்னேம்னா அவோ மேல வஞ்சம் வச்சு பேசுதேம்பாடி அவ. எம்புள்ளைய முன்னுக்க நாந்தேம் கெட்டவோளாயி நிப்பேம்” என்று கூறினார்.


அந்நேரம் பார்த்து வளவன் உள்ளே நுழைய, பெண்கள் இருவருமே பதறித்தான் போயினர்.


அவர்கள் பேசிய எதையுமே கேட்காததைப் போல் அவன் அறைக்குள் சென்றுவிட,


“ம்மா.. தம்பி கேட்டுருப்பியானோ?” என்று திரிபுரா மெல்லியக் குரலில் அன்னையிடம் கேட்டாள்.


“ஆருடி கண்டா.. கேட்டிருந்தா எம்பொஞ்சாதிய பேசுதீயளேனு ஆடுவானே” என்று அவர் பயத்துடன் கூற,


வந்த வேகத்தில் மீண்டும் வெளியே சென்றான்.


மாலை அனைவரும் வீடு திரும்ப, வடிவேல் வந்து, “மொதல்ல குறிச்சத் தேதியிலயே கல்யாணத்த வச்சுகிடுவோம் மாமா” என்று கூறினான்.


“ஏம்லே மக்கா? என்னாச்சுது?” என்று சுயம்புலிங்கம் கேட்க,


சங்கமித்ரா அறையை ஒரு பார்வை பார்த்துக் கொண்டவன், “தங்கபுள்ள வேணாமுங்குது. அவோ ஒருத்திக்காவ ஒரு நல்ல காரியத்தத் தள்ளிப்போட வேணாமுங்காவ” என்று வடிவேல் கூறினான்.


அமைதியே உருவாய் கரங்களை மார்பிற்குக் குறுக்கே கட்டிக் கொண்டு நிற்கும் வளவனைப் பார்த்துக் கொண்டு, தெய்வாவும் திரிபுராவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள,


“ஏம்லே மக்கா பத்திரிக்கையெல்லாம் மாத்தச் சொல்லி சொல்லிட்டேம்லே. வேலைய ஆரமிச்சுட்டாவ வேற” என்று சுயம்புலிங்கம் கூறினார்.


வடிவேல் வளவனை நோக்க,


“பரவால்லைங்க ஐயா. ஒடனே போன போட்டு சொல்லிகிட்டா மாத்திகிடுவாவதான? மொத முடிவான தேதியிலயே வச்சுகிடுவம்” என்று கூறிவிட்டு அறைக்குள் சென்றான்.


அறையில் கண்கள் மூடி சாய்ந்து அமர்ந்திருந்த மித்ராவின் அருகே சென்று வளவன் அமர, 


அவன் அரவத்தில் கண்கள் திறந்தவள் மெல்ல புன்னகைத்தாள்.


சோகமான முகபாவத்துடன் அவன் அவள் கன்னம் வருட,


இடவலமாய் தலையசைத்தவள், ‘ஒரு அம்மாவா அவங்க வருத்தம் சரிதாங்க’ என்று சைகை செய்தாள்.


“உண்மதான்டி.. ஒரு அம்மாவா அவிய வெசனப்படுறது சரிதேம். இல்லன்னே சொல்லல. ஆனா அதென்னடி நீயு அவோள தப்பா பேசுவங்குறது? இம்புட்டுக்குப் பொறவூங்கூட அவோளுக்கு ஓம்மேல நம்பிக்கயே இல்ல பாரு” என்று வருத்தமாய் அவன் கூற,


அவன் கன்னத்தில் கரம் வைத்தவள், கண்கள் மூடித் திறந்து அவன் நெஞ்சில் விரல் வைத்துக் குத்தினாள்.


“நான் நம்புதேம் தான்டி. ஆனா அவிய” என்று பேச வர, அவன் இதழில் விரல் வைத்துத் தடுத்தவள், ‘அவ்ளோதான். நீங்க நம்பினா போதும்’ என சைகை செய்தாள்.


கண்கள் சிவந்து போக அவளைப் பார்த்தவன் அவள் கன்னங்களில் தன் கரம் வைக்க,


அவன் அடுத்த செயல் புரிந்து மென்மையாய் கண்கள் மூடினாள்.


ஆடவன் அவள் இதழை நெருங்க, ‘டிரிங்….’ என்ற ஓசையோடு அவன் அலைபேசி ஒலித்தது.


அதில் இருவருமே பதறிவிட, மென்மையாய் உரசிக் கொண்டு விலகின பூவிதழ்கள்‌.


மருண்டு படபடக்க அவள் நோக்க,


தன் ஒற்றைக் கண் சுருக்கித் தன் சட்டைப் பையிலிருந்து அலைபேசியை எடுத்தான்.


அவனை முறைப்பதா, இல்லை தான் வெட்கம் கொள்வதா என்று புரியாமல் அவள் முகம் திருப்ப,


“சாரிடி. இரு பேசிட்டு வந்துத்தாரேம்” என்று அழைப்பை ஏற்றான்.


“ஹலோ..” என்று அவன் கூற,


“ஹலோ வளவா..” என்று மித்ரன் அழைத்தான்.


“அண்ணே சொல்லுவண்ணே” என்று அவன் கூற,


“என்னடா வேலையாருந்தியா? தொந்தரவு பண்ணிட்டேனா?” என்று கேட்டான்.


“ஹ்ம்.. வேலையாதேம் இருந்தேம்..” என்று அவன் பெருமூச்சுவிட,


'என்ன பேச்சிது?’ என்பதைப் போல் பாவை முறைத்தாள்.


“டேய் அப்ப வேலையப்பாரு. நான் அப்றம் கூப்பிடுறேன்” என்று மித்ரன் கூற,


“இப்பவாண்ணே..” என்றவன் அவள் முறைப்பதைப் பார்த்து, “இல்லண்ணே. இப்ப முடியாது. நீங்க சொல்லுவ” என்றான்.


அவனது நக்கலான குரலில் ஏதோ விளையாட்டு என்று புரிந்துகொண்டவன், “தங்கப்பாண்டி மேட்டரா பேசனும்” என்று கூற,


சட்டென எழுந்து நின்று, “என்னாச்சுண்ணே?” என்று ஆழ்ந்த குரலில் கேட்டான்.


அவன் குரல் வேறுபாட்டில் சங்கமித்ராவும் குழப்பமாய் அவனை நோக்க,


“ஒன்னுமில்லடா. நீ ஃப்ரீனா நேர்ல பேசலாம்” என்று கூறினான்.


“வாரேம்ணே” என்று கூறி அழைப்பைத் துண்டித்தவன், யோசனையாய் அலைபேசியை நோக்க,


அவன் சட்டை நுனி பிடித்து இழுத்த சங்கமித்ரா, அவன் திரும்பவும், ‘என்ன?’ என சைகை செய்தாள்.


அவளைப் பார்த்ததும் தன் குழப்பங்களை மறைத்து, கண் சிமிட்டி, இடவலமாய் தலையசைத்துப் புன்னகைத்தவன், “வெளிய போயிட்டு வாரேம்” என்க,


‘பிரச்சினை இல்லதான?’ என சைகையில் கேட்டாள்.


அவள் தலைகோதி நெற்றி முட்டியவன், “ஒன்னுமில்லடி. தெரிஞ்ச அண்ணே கூப்பிடுதாவ. ஒனக்கு சரியாபோவட்டு அவியள அறிமொவஞ்செச்சு வெக்கேம். இப்ப நாம்போய் வாரேம்” என்க,


சரியென தலையசைத்தாள்.


அவள் நுனிமூக்கில் முத்தம் வைத்தவன் வெளியேற, சிறு புன்னகையுடன் அவன் செல்லும் திசை பார்த்து இருந்தாள்.


வெளியே சுயம்புலிங்கத்துடன் பேசிக் கொண்டிருக்கும் வடிவேலைப் பார்த்த வளவன், “லேய் நீயின்னும் கெளம்பலியா?” என்க,


“நல்ல மருவாதிலே” என்று வடிவேல் கூறினான்.


“வளவா என்னய்யா இது?” என்று சுயம்புலிங்கம் அவன் பேச்சினால் எழுந்த அதிருப்தியை வெளிப்படுத்த, 


“மன்னிச்சிருவ ஐயா” என்றவன், “மித்ராண்ணே கூப்டாவ. வாரியாலே” என்றான்.


“மித்ராண்ணேவா?” என்று கேட்டவன் வளவன் பார்வை உணர்ந்து, “வாரம்லே” எனக் கூறி, “போய் வாரேம் மாமா” என்றான்.


“சரிலே. அம்மைட்ட பேசிட்டுச் சொல்லு. போயி எல்லாம் எடுத்துருவம்” என்று அவர் கூற,


“சரி மாமா” என புறப்பட்டான்.


“என்னம்லே? எதும் ஒடக்கா?” என்று கேட்டபடி வளவன் பின்ன வடிவேல் அமர,


“தெரியிலலே. அண்ணே பேசனுமுனு கூப்டாவ. பாப்பம்” என்றபடி சென்றான்.


இருவருமாய் மித்ரன் வீட்டை அடைய,


இவர்களுக்காக மாடியில் காத்திருந்தான் மித்ரன்.


“வாங்க அண்ணா. அவர் மாடிலதான் இருக்காரு” என்று ரசிகா கூற,


“சரி மைணி” என்ற இருவரும் மேலே சென்றனர்.


“வாங்கடா.. உட்காருங்க” என்று மித்ரன் கூற,


“என்னாச்சுணே எதும் ஒடக்கா? எதாது ஒரண்ட இழுத்தானுவளா?” என்று வளவன் கேட்டான்.


“இல்லடா” என்றபடி வந்த மித்ரன் அவர்கள் முன் அமர்ந்து, “நான் நினைச்சது சரிதான்டா. வெறும் தொழில் பகை மட்டுமில்ல அந்தத் தங்கபாண்டிக்கு” என்று கூற,


நண்பர்கள் இருவரும் ஆச்சரியமாய் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.


“என்னண்ணே சொல்றீய? எங்கக்கூட அவியளுக்கு என்ன பகை?” என்று வடிவேல் கேட்க,


“உங்கக்கூட இல்லடா” என்ற மித்ரன் வளவனைப் பார்த்து, “உன்கூட” என்றான்.


“எங்கூடயா?” என்ற வளவன், “நான் என்னம்ணே பண்ணேம்?” என்று கேட்க,


“நீ பெருசா ஒன்னும் பண்ணலை. உங்க அப்பா பெயர காப்பாத்தினதோட தூக்கியும் நிறுத்திருக்க. அதுதான் அவன் பிரச்சினை” என்றான்.


“என்னனே சொல்றீய? ஒன்னும் ஏறலையே” என்று வளவன் கூற,


“கம்பேரிசன்னால வந்த இன்ஃபீரியாரிடி காம்ப்ளக்ஸ் வளவா” என்ற மித்ரன், ஒரு நிமிட அமைதிக்குப் பின் தொடர்ந்தான்.


“அவன் செஞ்சதா நீங்க சொன்னதையெல்லாம் வச்சுப் பார்க்கும்போதே எனக்கு இது வெறும் தொழில் பகையா தோனலை. அதனாலதான் அவனை க்ளோஸா வாட்ச் பண்ணேன். ஆள் ஏற்பாடு பண்ணி அவங்க வீட்டுக்கு வேலையாளா அனுப்பி வைச்சு, மைக்ரோ ரெகார்டர் பிக்ஸ் பண்ணேன்” என்றவன், தனது அலைபேசியை எடுத்து ஒரு குரல் பதிவை ஓடவிட்டான்.


'அவேம் எனக்கு போட்டியாலே? எங்கையா எப்போபாரு அவேன போல இருக்கியா? அவேன போல நடக்கியா? அவேன போல ஒழைக்கியானு கேட்டுட்டே இருப்பாவதான? அவேன முந்திக்காட்டனும்லே. அதுக்கு என்னவேனா செய்ய நாந்தயாருதேம்' என்று தங்கபாண்டி உறுமும் குரல் கேட்க,


வடிவேலும் வளவனும் அதிர்ச்சியாய் விழித்தனர்.


“நீயும் விக்ரமும் சேர்ந்து தான் தொழிலைப் பாக்குறீங்க. பட் அவனோட அப்பாவோட பார்வை உன் மேலதான் விழுந்திருக்கு..” என்று மித்ரன் முடிக்கும் முன்,


“மாமாகூட வெளியெடம் போவ வைக்க விக்ரமன விட வளவேன்தேம் அதிகம் போவியான் அண்ணே” என்று வடிவேல் கூறினான்.


“லக்கிலி அதனாலதான் விக்ரம் மிஸ் ஆயிருக்கான் அவன் பார்வைலருந்து. தொழில் பகை என்பதையெல்லாம் தாண்டி அவனுக்கு ஒருமுறையாது உன்னை பீட் பண்ணி முதலிடத்தைப் பிடிக்கனும். அதுக்கு என்ன செஞ்சாலும் தகும்னு நினைக்குறான்” என்று மித்ரன் கூற,


“அ..அப்ப மித்ரா ஆக்ஸிடென்ட்?” என்று வளவன் கேட்டான்.


“ப்ளான்டா (திட்டமிட்டதா) கூட இருக்கலாம். ஆனா ஷ்யோரா தெரியலை. கொலை செய்யுமளவு போவான்னு தோன்றலை. அதனால எனக்கு இது தற்செயலா இருக்கும்னு ஒரு அசெம்ஷன்” என்று மித்ரன் கூற,


“இவேன என்ன அண்ணே செய்யலாம்?” என்று வடிவேல் கேட்டான்.


“இதுவரை செய்த எதுக்குமே நம்மகிட்ட ஆதாரம் இல்லை. வெறும் வாய்ஸ் ரெகார்டரை கண்டிப்பா ஸ்டிராங் எவிடென்ஸா குடுக்க முடியாது. ஒன்னு அவன் உங்கக்கிட்ட நேரடியா பேசனும் இல்லை மோதனும். அப்பதான்டா நம்மால அடுத்த ஸ்டெப் எடுத்து வைக்க முடியும். ஆனா இந்த இன்ஃபீரியர் காம்ப்லெக்ஸ் ரொம்ப டேஞ்சரஸ்டா. சாதாரணமா நினைக்காதீங்க. ஒருமனுஷனோட தாழ்வு மனப்பான்மை அவனை பாதிக்கும் விதத்தைப் பொருத்து, அவனோட செயலாற்றல் பயங்கரமா இருக்கும். என்னோட வியூகம்படி அவன் உன் வைஃப ப்ளான் பண்ணி அடிக்காம இருந்திருந்தா சேஃப். ஆனா அதுவே அவனோட ப்ளானா இருந்தா அடுத்து மறுபடி அடிக்க அவன் தயங்க மாட்டான். அதனால ஜாக்கிரதையா இருங்க. அவன் இடத்தில் நம்ம ஆளுங்க இருக்காங்க. அவங்க மூலமா எதாவது தகவலோ ஆதாரமோ கிடைச்சா சீக்கிரம் இதை ஒரு முடிவுக்குக் கொண்டுவரலாம்” என்று மித்ரன் நீளமாய் பேசி முடிக்க,


வளவனும் வடிவேலும் ஒரு பெருமூச்சுடன் தலையசைத்தனர்.


“பயப்படாதீங்க. அதேநேரம் அசால்டாவும் இருக்காதீங்க” என்று மித்ரன் கூற,


“சரி அண்ணே” என்றான்.


சிலிநிமிடங்களில் இருவரும் புறப்பட,


“அண்ணே.. வீட்டு பக்கட்டுத்தேம் இருக்கோம். இவேனுவ ரெண்டேரும் இங்கருந்துதேம் கெளம்புறானுவ. எதாது வேலைய காட்டிபுடுவமா?” என்று தங்கபாண்டியின் அடியாள் கேட்க,


“வேணாம்லே. எம்புட்டுத்தூரம் போறானுவனுதேம் பாம்பமே. இந்தத் தங்கப்பாண்டிய அம்புட்டு லேசுல நெனச்சுட்டானுவ. நான் யாருனுதேம் காட்டுதேனே. அந்த போலீசு ஆளு அனுப்பியதுக்கே அகமாயில்ல ஆடியிருக்கியான். அவேனுக்கும் நான் யாருனு காட்டுதேம்” என்று ஆவேசமாய் கூறியத் தங்கப்பாண்டி அழைப்பைத் துண்டித்தான்.




Comments

Popular posts from this blog

திருப்பம் -01

திருப்பம்-03

திருப்பம் -02