திருப்பம்-85
திருப்பம்-85
“ஏ மக்கா.. அந்த தாம்பாலத்தயெல்லாம் எடுத்தாந்து வைம்லே. அம்புட்டு சாமாணயும் அனுப்பிட்டு, நாமலும் ராவுக்கே போயிடுவம்” என்று தெய்வா குரல் கொடுக்கவும்,
“ஏங்க இங்க வாங்க. ஒங்கம்மாக்கு ஏற்கனவே செரயா (எரிச்சலாய்) கெடக்கு. எங்கனயும் போய் கரங்காம (சுத்தமா) சோலிய முடிச்சுக்குடுத்துப்போங்க. ஒத்தையா எம்புட்டுத்தேம் நானும் எடுத்தாந்து வைக்க?” என்று கார்த்திகா தன்னவனிடம் கூற,
“சரிட்டி. எங்கனயும் போவல” என்று விக்ரமன் கூறினான்.
தன்னவளுக்கு உணவைக் கொடுத்துவிட்டு வந்த வளவன், “மைணி ஏதும் சோலி சொல்லுவ நானுஞ்செய்யுதேம்” என்று கூற,
“சங்குக்கு சாப்பாடு குடுத்தாச்சா கொழுந்தரே?” என்றாள்.
“அவோ கையு கட்டுதேம் எடுத்தாச்சே. அவளே உங்கிக்குறேமுனு சொல்லிப்டா. நீங்க என்ன சோலினு சொல்லுவ” என்று அவன் கேட்க,
“தாம்பாலத்தயெல்லாம் வண்டில ஏத்தனும் கொழுந்தரே” என்று கூறினாள்.
“சரி மைணி. நாஞ்செய்யுதேம்” என்று அவன் செல்ல,
எழுந்து செல்ல எத்தனித்த விக்ரமனை நிறுத்தி, “அதேம் கொழுந்தரு செய்யுறாவல்ல? எனக்கு சின்ன உள்ளி (சின்ன வெங்காயம்) உரிச்சு தந்துட்டுப் போங்க” என்று சமையலறையில் நிறுத்திக் கொண்டாள்.
அனைத்து வேலைகளும் பரபரப்பாய் ஓடிக் கொண்டிருந்தது. ஆம்… நாளை தனலட்சுமி மற்றும் வடிவேலுவின் திருமணமே.
அனைத்து சாமான்களையும் கட்டி மண்டபத்திற்கு வண்டியில் அனுப்பி வைத்திட, “ஏம்லே வளவா நீயு போயி சாமானெல்லாம் ரூமுல சரியா அடுக்கிட்டானுவளானு பாத்திடு. ஏட்டி கார்த்தி எங்கனடி அவ? நாளைக்கி மூஞ்சிக்கு பூச்சு போட ஆளு வாராவனு சொன்னா. எல்லாம் பேசிட்டாளானு கேட்டுகிடு. அந்தா அம்மில மருதாணி அரச்சு வச்சுருக்கேம். நைட்டு அவோளுக்கு வச்சுவிட்டுட்டு நீங்களும் வச்சுகிடுங்க. ஓம் ஒரகத்திக்கு வச்சுட்டு நீயு ஒரு கையுக்கு வச்சுகிட்டுவா. அடுத்த கையுக்கு நான் வச்சுடுதேம். அப்றம்.. ஏங்க பெரியவட்ட பேசிட்டீயளா? காலையில நேரமா வந்துடச் சொல்லுவ. ஏம்லே விக்ரமா.. தீபிக்குப் போட்டு புள்ளையல நம்மளோட ராவுக்கே அனுப்பிக்காளானு கேட்டுகிடு” என் தெய்வா பேசிக்கொண்டே சென்றார்.
விழிகள் பிதுங்கி வெளியே வருமளவு அவர் சென்ற திசையைப் பார்த்த கார்த்திகா, “ஏங்க.. ஒங்கம்மாக்கு கொறயா பேசவே வாராதா?” என்க,
வளவன் பக்கென்று சிரித்தபடி, “மைணி அவோளுக்கு நானே மருதாணி வச்சுடுதேம். நீங்க அங்கன மண்டபத்துக்குப் போயிட்டு வச்சுகிடுங்க” என்றான்.
“நீங்க மண்டபத்துக்கு வரலியா?” என்று அவள் கேட்க,
“ரூமு கொறயாதேம் இருக்குது மைணி. வடிவேலு வீட்டாளவளுக்கு கொஞ்சத்த கொடுத்தாச்சு. சாமானே ஒரு ரூமு பூரம் அடஞ்சுடும். ஐயா அம்மாக்குப் போவ நீங்க படுக்கவே எடமிருக்குதானு பாத்திடுவ. அவோளுக்கு கட்டிலு கெடயாது அங்கன. நாங்காலயில வெரசா வந்து சோலியெல்லாம் பாத்துகிட்டு வந்து இவோள ரெடி பண்ணி கூட்டியாரேம்” என்று கூறினான்.
“சோலியெல்லாம் பாக்க அங்க ஆளுவ இருக்கோம்லே. நீயு புள்ளைய ரெடி பண்ணிகூட்டிட்டு வா” என்று விக்ரமன் கூற,
“அதத்தேம் சொல்ல வந்தேம். நம்ம குடுமத்துல ஆளுக்கா பஞ்சம்? அவிநாஷ் அத்தான் காலையில வெரசாவே வாரேமுனு சொல்லிருக்காவ. எங்கண்ணே இருக்காவ. இவிய, மகா அண்ணே, சிவா அண்ணேலாம் இருக்காவத்தான? பாத்துகிடலாம்” என்று கார்த்திகாவும் கூறினாள்.
சிறு புன்னகையுடன் அவன் தலையசைக்க,
“என்னமாது ரோசிக்காம போலே” என்று விக்ரமன் கூறினான்.
இரவு அனைவரும் உணவை முடித்துக் கொண்டு தங்கள் துணிமணிகளுடன் புறப்பட ஆயத்தமாக,
“ஏத்தா மவராணி.. வாரியலா?” என்று தனலட்சுமியை கார்த்திகா அழைத்தாள்.
பொன்போல் தயாராய் இருந்தவள், “ஏம்மைணி.. எப்புடியும் அங்கனபோயி தூங்கத்தான போரேம்? அப்புறம் என்னத்துக்கு எங்கம்மா இம்புட்டு நவபூட்டிருக்காவ?” என்று கேட்க,
“போய் கேக்கத்தான அவியட்டயே?” என்று கார்த்திகா நக்கல் செய்தாள்.
“இத்துடன் விளையாட்டு செய்திகள் முடிவடைகிறது. பொறப்படலாமா?” என்று அவள் அப்படியே பேச்சை மாத்த,
கொள்ளெனச் சிரித்தவள் அவளைக் கூட்டி வந்தாள்.
அனைத்தையும் சரிபார்த்த தெய்வா, “பொறப்படுவமா?” என்க,
தன்னவளை சக்கர நாற்காலியில் தள்ளிக் கொண்டு கூடத்திற்கு வந்த வளவன், “எல்லாம் எடுத்துக்குடீயதான? எதும் வேணுமினா சொல்லிவிடுவ. காலையில கொண்டாரேம்” என்று கூறினான்.
அவனையும், மித்ராவையும் ஒரு பார்வை பார்த்தவர், “காலயில வெரசா வந்துபுடுலே” எனக் கூறி அவளையும் பார்த்து ‘சரியா?’ என்பதைப் போல் தலையசைக்க, மெல்ல புன்னகைத்தபடி தானும் தலையசைத்தாள்.
அவள் கையைப் பார்த்தவர், “ஏட்டி மருதாணி வக்கலியா அவோளுக்கு?” என்று கார்த்திகாவிடம் கேட்க,
'தோ பாருடா' என்று உள்ளுக்குள் நினைத்துக் கொண்டவள், “கொழுந்தரு வக்கேம்னு சொல்லிட்டாரு அத்தே” என்று கூறினாள்.
சரியென்ற தலையசைப்புடன், “பொறுப்படலாமாங்க?” என்று அவர் கேட்க,
“போலாம்த்தா” என்றவர், “எய்யா புள்ளைய பாத்து கூட்டிகிட்டுவா. இங்கிக்கு அங்கிக்கும் சலம்பாம, பொறுமையா கெளம்பியா” என்று மகனிடம் கூறி, “பாத்து வாங்க தாயி” என்று மருமகளிடமும் கூறினார்.
இருவரும் சம்மதமாய் தலையசைக்க,
“மைணி பாத்து கெளம்பி வாங்க ரெண்டேரும்” என்று அவள் கரம் பற்றி அழுத்திவிட்டுச் சென்றாள், தனலட்சுமி.
அனைவருமாய் புறப்பட்டு மண்டபத்திற்குச் செல்ல,
தன்னவளை படுக்கையில் அமர்த்திய வளவன் சென்று மருதாணியை எடுத்து வந்தான்.
சிகிச்சை முடிந்து மூன்று மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், அவள் கையிலுள்ள கட்டு பிரிக்கப்பட்டிருந்தது. இன்னும் ஒரு மாதத்தில் காலில் உள்ள கட்டினையும் பிரித்துவிடலாம் என்று மருத்துவர் கூறியிருக்க, தலையிலும் வலி முற்றுமாய் மறைந்து, கூந்தலும் மேல் கழுத்துவரை வளர்ந்திருந்தது.
அவள் கரம் பற்றி ஆசையாய் அவன் மருதாணி வைத்துவிட, பாவை அவனையே வைத்த விழி எடுக்காமல் பார்த்தாள்.
“என்னட்டி?” என்று அவள் கரத்தில் கவணம் வைத்தபடியே, அவள் பார்வை உணர்ந்தோனாய் அவன் கேட்க,
அதே பார்வை அவளிடம்.
அவளை நிமிர்ந்து பார்த்தவன், ‘என்ன?’ என்பதைப் போல் புருவம் ஏற்றி இறக்க,
மன்னிப்பாய் ஒரு பார்வை அவளிடம்.
“கோம்பத்தனமா என்னமாது நெனக்காதட்டி. அங்கன மைணிக்கும் விக்ரமனுக்குமே படுக்க எடமிருக்குமானு தெரியில. அவோ எப்புடியோ மாடிக்குனாலும் போய் படுத்துப்பாவ. ஒனக்குக் கட்டிலு வேணாமா?” என்று கேட்டவன், “என்னமாது நீயா நெனக்காத மித்ரா. நீயு எடுத்துச் செஞ்சுதேம் இங்கன சோலி கொறையப்போவுதுனு இல்ல” என்று கூற,
ஒரு பெருமூச்சு மட்டுமே அவளிடம்.
தன்னை கண்ணாடியில் திரும்பிப் பார்த்துக் கொண்டவள், தன்னை அளவிடத் துவங்கினாள்.
நடையில்லாமல் மூன்று மாதம் அமர்ந்தும் படுத்துமே இருப்பதில் அவளது எடை சற்றே கூடியிருந்தது. ஏதோ அவன் பராமரிப்பில் தான் அவளுக்கு ஓரளவு முடி வளர்ந்திருக்க, இடைவரையானத் தன் கூந்தலுக்கு இது மிகவும் குறைவென்று எண்ணிப் பார்த்து வருத்தமுற்றாள்.
இதெல்லாம் சின்னச் சின்ன விஷயங்கள், உடல் நலம் குணமானபின்பு தன்னால் மீட்க முயன்றவை என்று புரிந்தும்கூட அவளுக்கு வருத்தமாகத்தான் இருந்தது. சொல்லி அழ குரலும்கூட தற்போது இல்லை என்று பலவகையான சிந்தனைகள், அவளை மனச்சோர்வாகவேதான் வைத்திருந்தது.
அவளது உடல் நலன்களும் அதற்கு ஒரு காரணமே. ஒரே இடத்தில், படுத்தும், அமர்ந்து மட்டுமே இருப்பது அவளுக்கே பிடிக்கவில்லை. இதில் நடக்க முயற்சிசெய்து காலை சற்று அழுத்தமாய் ஊன்றினால் வின் வின்னென்று வலி உயிர் போய் விடுகிறது.
வலியென்று அழுதுவிட்டாள்கூட, தொண்டையின் அழுத்தத்தில் அது ஒரு பக்கம் வலிக்கச் செய்கிறது. ஒருவித எரிச்சலான மனநிலையில் இருக்க, எடை, முடி, போன்ற சிறுசிறு விஷயங்கள் கூட அவளுக்கு பெரும் வருத்தம் கொடுப்பதாகவே உணர்த்தியது.
அவனைப் பாவம் போல் பார்த்தவள், ‘நான் ரொம்ப யோசிக்குறேன்ல?’ என்று சைகை செய்ய,
ஆமென்பதாய் தலையசைத்தவன், “இங்க இருக்குற கொஞ்சூண்டு மூளையில எனக்குத்தேம் மொத எடமிருந்துச்சு. இப்பத பாத்தா வேண்டாத குப்பயெல்லாம் கெடக்கு” என்றான்.
சிரம் தாழ்த்திக் கொண்டவளுக்கு தன் உணர்வை வெளிப்படுத்திடத் தெரியவில்லை, ஆனால் அவனுக்கோ அவள் வெளிப்படுத்தி புரிந்துகொள்ள வேண்டிய தேவையிருக்கவில்லை.
அவள் கன்னம் பற்றியவன், “இஞ்சாருடி.. நீயு சொல்லித்தேம் புரியனுமினு இல்ல. எல்லாம் புரியுதுதேம். ஒனக்கு ஏற்கனவே ஒடம்பு படுத்துதாங்கட்டிக்கு மனசு சோர்வாதேம் இருக்கும். ஆனா நீயு கொஞ்சம் ரோசி, இப்புடியே இருந்தாக்கா ஒனக்குதேம் அழுத்தும். என்னமாருந்தாலும் எங்கிட்டக்க சொல்லிபுடு. உள்ளக்க வச்சு அடைக்காத. சரியா?” என்று கூற,
சரியென்று தலையசைத்தாள்.
அதில் புன்னகைத்தவன், “நாளைக்கு இது நல்லா செவந்துச்சுனா ஓம்மேல எனக்கு நெறயா பாசமிருக்குமுனு அர்த்தம்டி மித்ரா” என்க,
இடவலமாய் தலையசைத்தவள், ‘இது சிவக்கனுமா என்ன? என் மனசுக்குத் தெரியாதா?’ என்று சைகை செய்தாள்.
“ஆஹாங்? தெரியுமாக்கும்?” என்றவன் அவளை நெருங்க,
பார்வையாலேயே தடுத்தவள், ‘மருதாணி வைங்க' என்று ஜாடை காட்டினாள்.
அதில் சிரித்துக் கொண்டவன் அவளுக்கு மருதாணி வைத்துவிட, அவளும் மெல்லிய புன்னகையுடன் வைத்துக் கொண்டாள்.
மருதாணி வைத்து முடித்ததும் இருவரும் படுத்துவிட, மெல்ல அவன் பக்கமாய் திரும்பினாள்.
“என்ன மித்ரா? வசதியா படுக்க முடியலயா?” என்று அவள் உடல் மொழியைக் கொண்டே புரிந்துகொண்டோனாய் அவன் கேட்க,
அவனையே வைத்த விழி எடுக்காமல் பார்த்தாள்.
அவள் கரத்தைத் தன் மீது போட்டுக் கொண்டு, மருதாணி அழியாதவாரு படுக்க உதவியவன், “ஓகேவா?” என்க,
கண்களால் அவனை அருகே அழைத்தாள்.
எதோ கூற விழைகிறாள் போலும் என அவன் நெருங்க, அவன் நுனி மூக்கில் அழுத்தமாய் முத்தம் வைத்தவள், சிறு புன்னகையுடன் அவன் மார்பில் தலை சாய்க்க,
அதில் இன்பமாய் குளிர்ந்தவன் அவள் தலைகோதிக் கொடுத்தபடி படுத்துறங்கினான்.
மறுநாள் காலை விரைவே எழுந்த வளவன், ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பவளைப் பார்த்து புன்னகைத்தபடி அவள் கரத்தைப் பார்த்தான்.
ஆங்காங்கே மருதாணி விழுந்திருந்த இடங்களில் சிவப்பாய் தெரிந்த அதன் நிறத்தைக் கண்டு உள்ளம் குளிர்ந்தவன் அதே மனநிலையோடு சென்று விரைவே குளித்துத் தயாராகி வந்தான்.
விக்ரமனுக்கு அழைப்பு விடுத்தவன் அவன் அழைப்பை ஏற்காததில் அவிநாஷுக்கு அழைக்க, அழைப்பை ஏற்ற அவிநாஷ், “சொல்லுடா ரெடியாகியாச்சா?” என்று கேட்டான்.
“நான் குளிச்சு உடுப்பு மாத்திட்டேம் அண்ணே. ஒங்க பாப்பாவ இன்னும் உசுப்பல” என்றவன், “அங்கன சோலியாவுதாண்ணே? நான் வாரேம் நீங்க இங்கன இவோளுக்குத் தொணைக்கு வந்திருக்கீயளா?” என்று கேட்க,
“டேய் தம்பி. இது நம்ம தங்கச்சி கல்யாணம்டா. நானும் அவளுக்கு ஒரு அண்ணன் தான். இங்க வேலையெல்லாம் ஒழுங்கா ஆகுது. இருக்குற ஆளே போதும். நீ என் பாப்பாவை ஒழுங்கா ரெடி பண்ணி கூட்டிட்டுவா” என்று அவிநாஷ் புன்னகையுடன் கூறினான்.
“அண்ணே..” என்றவன், நெகிழ்வாய் நிறைவாய் புன்னகைக்க,
“என்னடா?” என்று பரிவாய் அவிநாஷ் கேட்டான்.
“பயமாருக்குண்ணே” என்று வளவன் மெல்லிய பயம் நிறைந்தக் குரலில் கூற,
“எதுக்குடா?” என்று அவிநாஷ் கேட்டான்.
“யாரும் அவோள என்னமும் சொல்லிடுவாவளோனு பயந்து வருதுண்ணே. வாரா வாரம் கோவிலுக்குப் போகயிலயே அ..அவளுக்கு ரொம்ப சங்கடமாருந்துருக்கு அண்ணே. எனக்காவத்தேம் கம்மினே வந்தா” என்று வளவன் கூற,
“எதுக்காம் பாப்பாக்கு சங்கடம்?” என்று கேட்டான்.
“மூனு மாசமா சாப்பிட படுக்கனே இருக்குறதுல கொஞ்சம்போல, கொஞ்சம்தேம் அண்ணே.. வெயிட் போட்டிருக்கு. முடிவேற இல்ல. ஒங்க பாப்பாக்கு முன்னமே ஒன்னும் பதினாறடி கூந்தலு இல்லதேம். ஆனா இருக்குறத ரொம்ப பதவீசா பாத்துகிடுவால்ல? இப்பத இத்தினிகாண்டு முடியோட போவ வர புடிக்குதில்ல. ஆசபட்டு நாமலா வெட்டிகிடுறதுக்கும் அதுவா அம்போனு போறதுக்கும் வித்தியாசமிருக்குமில்லண்ணே.. அதேம் அவளால ஏத்துகிட இயலல பாவம். வெயிட்டுகூட ரொம்பலாம் தெரியல அண்ணே. ஆனா அவோ கம்மினே படுத்து கெடக்க அழுப்பாருக்கப்போய் என்ன என்னமோ ரோசிக்குறா. இதுலாம் ஒன்னுனு யோசிக்கியேடினு தோனுதுதேம். ஆனா அவோ நெலயில இருந்து பாக்கயில கஸ்டமாதேம் இருக்குது அண்ணே. அங்கன கல்யாணத்துல வச்சு ஆரும் என்னமும் பேசிடுவாவளோனு மனசு கெடந்து சலம்புது. உங்கட்ட சொல்ல என்ன அண்ணே? ஆரோனு ஏம் அடுத்தாளுவர போவனும்? திரியக்காவே என்னமும் பேச்சு போக்குல சொல்லிடுவாவளோனு அடிச்சுக்குது அண்ணே” என்று மிகுந்த பதட்டமும் பயமுமாய் புலம்பிய முதிர்ந்த ஆண் மகன், அவிநாஷின் மனதில் சிறு குழந்தையாய் தோன்றினான்.
காதல் விந்தையிலும் விந்தை அல்லவா?!
“வளவா” என்று அமைதியாய் அழைத்த அவிநாஷ், “என் பாப்பா சங்கடப்பட்டானு சொன்ன. அதேநேரம் அவ உனக்காக வந்தானும் நீ சொன்ன தானே? அவ வருத்தம் படுவாதான்டா. ஆனா அவளுக்கா இல்லனாலும் கூட, உனக்காக அந்த வருத்தத்தை துச்சமா தூக்கிப்போடவும் தயங்க மாட்டா. நீ இருக்குற வர அவளுக்கு என்னடா குறையாயிடப் போகுது? கல்யாணம்னா வம்பு பேச நாலுபேர் வரத்தான் செய்வாங்க. அந்த பக்குவத்தை நீயும் உருவாக்கிக்கோ, அவளையும் உருவாக்கிக்க சொல்லு. வீசுற கல்லுக்குலாம் உடையுற கண்ணாடிபோல இல்லாம, தான் மனசு வச்சாத்தான் உடைவேன்னு திடமா இருக்கனும்டா. இதுவும் கடந்து போகும், எதுவும் கடந்துபோகும்” என்று கூறினான்.
வளவனுக்குக் கண்கள் கலங்கியது.
“தேங்ஸ் அண்ணே” என்று அவன் நெகிழ்வாய் கூற,
“போய் ரெடியாகி சீக்கிரம் வரப்பாருங்கடா” என்று கூறி அழைப்பைத் துண்டித்தான்.
Comments
Post a Comment