திருப்பம்-86
திருப்பம்-86
அவிநாஷின் அழைப்பை வைத்ததும் விக்ரமிடமிருந்து அழைப்புவர, அதை ஏற்றுக் காதில் வைத்தவன் எதுவும் பேசும் முன், “இஞ்சாருடா இங்கன ஒனக்கு தனியா பிரிச்சுக்கொடுக்க எந்த சோலியுமில்ல. அங்கன ஏம்மச்சினிய கெழப்பிக் கூட்டியாரதுதேம் நா ஒனக்குத் தார சோலி. புள்ளய பேசி கூட்டிகிட்டு வா. அப்றம், ஆரும் என்னமும் வந்து இங்க பேசினாவனா எங்கிட்டச் சொல்லு. சவட்டிபுடுதேம். எதுவும் ரோசிக்காம நீயும், அந்த புள்ளையும் கெளம்பி வரப்பாருவ” என்று கூறியவன், “அப்றம்லே அந்த புள்ளைக்கு எதும் சங்கடமாருந்துச்சுனா சொல்லு. இங்கன நம்ம வீட்டாளுவ அவோள தங்கமாதேம் பாக்குறோம். அடுத்தவியளும் தங்கமா பாக்கனும்முனு இல்ல. கிறுக்கேன் கையில வைரமும் தங்கமும் மதிப்பிலாதுதேம் தெரியும்ல? நமக்குப் தெரியும் அந்த புள்ள இருப்பு. எதும் ரோசிக்காம கூட்டிவான்ன?” என்றான்.
கோர்த்திருந்த கண்ணீர் முத்துமுத்தாய் வழிய, வளவனுக்கு அழுகையே வந்துவிட்டது. உடல் நலத்திற்கு குணமாக எடுக்கும் மாத்திரைப் போல் அல்லவா இந்த மனநலம் சீர் செய்திடும் அன்பு நிறைந்த மனிதர்கள்?!
உள்ளுக்குள் தன் அண்ணன்களை எண்ணி சந்தோஷம் கொண்டவன், சரியெனச் சொல்லி உற்சாகமாய் அவளை தயார் செய்ய சென்றான்.
கல்யாண மண்டபமே ஜே ஜே எனக் கலைகட்டியது.
மணமேடையில் அமர்ந்திருந்த வடிவேல் அருகே நின்றிருந்த விக்ரமன், “ஏம்லே வெறயலாருக்க?” என்று கேட்க,
“நா..நானா? இல்லியே” என்று வடிவேல் கூறினான்.
“மூஞ்சில டென்ஷன் டன் கணக்குல தெரியுது. இல்லையாம். என்னம்லே வெசனம்?” என்று விக்ரமன் கேட்க,
“தெ..தெர்லலே. ஒருமாதிரி படபடனு இருக்கு” என்றான்.
அவன் அருகே வந்த மகாதேவன், “அது அப்படித்தாம்லே இருக்கும். ஒருமாதிரி நல்லா லவ் பண்ணிப்டு, இப்ப கல்யாணம்னு மேடை வரையும் வந்துச்சுங்குற சந்தோஷத்துல படபடனு தெனயா வரும். ஓன் ஆளு பக்கட்டு வந்து ஒக்காந்தா அம்புட்டு சுளுவாயிபுடும்” என்று கூற,
“வளவேம் எப்பம்ணே வாரான்?” என்று கேட்டான்.
பக்கென்று சிரித்த ஆடவர்கள் “வருவாம்லே” என்க,
வாசலில் வளவன் தன்னவளுடன் வந்து சேர்ந்தான்.
அவளை சக்கர நாற்காலியில் அமர்த்திக் கொண்டு அவன் உள்ளே வர,
சுற்றியிருந்தோர் பார்வையெல்லாம் அவர்கள் பக்கம் திரும்பியது. அவரவர் சங்கமித்ராவைப் பார்ப்பதும், அவளைப் பற்றியும், அவள் குரல் பரிபோனதைப் பற்றியும் தங்களுக்குள் பேசுவதுமாய் இருக்க, வெகுவாக சங்கடப்பட்டுப் போனாள் பெண்.
என்ன நடந்தாலும் தன் புன்னகையை வாட விடக்கூடாது என்ற முடிவை அவளுக்காக எடுத்திருந்தாலும் சட்டென வாடியிருப்பாள். ஆனால் அவள் அவளவனுக்காக அல்லவோ அம்முடிவை எடுத்தது? அதற்காகவே தன்னைத் தேற்றிக் கொண்டு புன்னகை மாறாது அமர்ந்திருந்தவள், மேடையில் அமர்ந்திருந்த வடிவேலைப் பார்த்து கையசைத்தாள்.
அதில் மலர்ந்து புன்னகைத்த வடிவேல், தானும் கையசைக்க, சங்கமித்ராவின் பெற்றோர் அவள் அருகே வந்தனர்.
“அத்தே மாமா.. வாங்க வாங்க. சாப்டாச்சா?” என்று வளவன் கேட்க,
“ஆச்சு மாப்பிள்ளை” என்றனர்.
சுற்றி முற்றி தன் பார்வையால் அலசும் மித்ராவைப் பார்த்த வளவன், “சங்கி மைணியக்கானும்?” என்று கேட்க,
அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
“மேல தனத்தோட ரூமுல இருக்கா மாப்பிள்ளை” என்று தாட்சாயணி கூற,
“அண்ணே?” என்றான்.
“சம்மந்தி ஐயா எங்கயோ அனுப்பிருக்காங்க” என்று அவர் கூற,
“சரித்தே” என்றவன், “சாப்பாடு கொண்டு வரேம் மித்ரா. பந்தி மேல ஓடுது. நீயு இங்கன கீழ ரூமுல சாப்பிட்டுக்க” என்று கூறினான்.
'இப்ப பசிக்கல’ என்று அவள் கூற, மணியைப் பார்த்தவன், “சரி. கொஞ்சம் நேரம் போனவாட்டி வாங்கி வாரேம்” எனக், கூறினான்.
'நீங்க வேலு அண்ணாகூட போய் நில்லுங்க. அம்மா இருக்காங்க தானே' என்று அவள் சைகை செய்ய,
பெற்றோர் அவளை வருத்தம் அடங்கிய பார்வை பார்த்தனர்.
இந்நேரம் தன் மகள் நிலை இப்படியில்லாமல் இருந்திருந்தால்? என்று நினைக்காமல் இருக்க இயலவில்லை அவர்களால்.
“சரிமா” என்றவன், “அத்தே மாமா. நீங்க பாத்துகிடுதீயளா? நாம்போயி வேலுகூட செத்த இருக்கேம்” என்க,
“நீங்க போங்க மாப்பிள்ளை. நாங்க பாத்துக்குறோம்” என்றனர்.
சரியென்ற தலையசைப்போடு அவளைப் பார்த்து கண்ணடித்துவிட்டு அவன் செல்ல, பெற்றோர் முன் என்ன இது? என்று அதிர்ந்து வெட்கம் கொண்டவள், அவர்களைப் பார்க்கவும் கண்டும் காணாததைப் போல் அவர்கள் புன்னகை மறைத்து முகம் திருப்பிக் கொண்டனர்.
மேடைக்கு வந்தவன் தன் நண்பனைப் பின்னிருந்து கழுத்தோடு இருக்கிக் கொண்டு, “மாப்ளோய்” என்க,
“டேய் அலம்பலு பண்ணாதலே மக்கா” என்று தெய்வா கடிந்தார்.
“அம்மோவ்.. இவேம் இப்பத்தேம் இந்தூட்டு மாப்பிள்ள. மொத ஏம்மாப்பிள்ள. அவேம் கல்யாணத்துக்கு அனக்கத்தக் கூட்டாம எப்புடிங்கேம்” என்றவன், “என்னடி மாப்ளோய்.. எந்தங்கச்சிய வரச்சொல்லுவமா?” என்று கேட்க,
வடிவேல் பதில் கூறும் முன், “அந்தா புள்ள வந்துட்டுல?” என்று மகா கூறினான்.
தீபிகாவும் திருபுராவும் பொன்போல் தனலட்சுமியைக் கூட்டிவர, கார்த்திகாவும், சங்கீதாவும், கையில் சங்கவி மற்றும் ஒளிசுடருடன் பின்னே வந்தனர்.
அத்தனை நேரம் படபடவென அமர்ந்திருந்தவனுக்கு, அவளைப் பார்த்ததும் மனம் தடதடவென அடித்துக்கொள்ளத் துவங்கியது.
பச்சைப் பட்டுடுத்தி தன் வாழ்வில் பசுமை பிறக்கச் செய்ய வருபவளைக் கண்டவன் உள்ளமெல்லாம் குளிர்ந்தது.
அவர்களது பல வருட காதல், இன்று திருமணத்தில் தொடரவிருக்கின்றது…
கணக்கில்லா ஆசைகளும், வண்ண வண்ணக் கனவுகளும், அளவற்றக் காதலும், எண்ணிலடங்கா ஏக்கங்களும், அனைத்தையும் ஆக்கரமித்தக் காதலும், அக்காதலுக்கு உரியவர்களை, உறவறிய ஊரறிய, உரிமைப்பட்ட உடைமையாய் மாற்றிக்கொள்ளும்… அப்பொன்னான தருணத்தில் உணர, அக்காதலைத்தவிரத்தான் வேறு உணர்வுண்டோ? அப்படியே உணரப்பெற்றாலும், அவ்வுணர்வு காதலுக்குள் அடக்கம் பெறாது போய்விடுமோ? உணரும் உவகையும், நெகிழ்ச்சியும்கூட காதலல்லாது வேறேதாகிட இயலும்!?
தன்னையும் மறந்து, தன் மதி மயங்கச்செய்த மங்கையை வடிவேல் பார்த்திருக்க, அருகே கலகலவென்று பலர் சிரிப்பலைகள் கேட்டது. அதையெல்லாம் கருத்தில் கொள்ளாது, அவன் பார்வை, கொஞ்சம் நாணமும், நிறையக் காதலும் தாங்கியவளின் சிறு புன்னகையில் சிதைந்துருகியது.
பதுமையாய் அவன் அருகே அமர்ந்தவள், “யோ வழியுதுயா” என்று மெல்ல முனக,
நினைவு மீண்டோனாய் அக்கம் பக்கம் திரும்பிப் பார்த்தான்.
“ஏம்லே.. கொஞ்ச நேரம் முன்னுக்க ஓம் ஆளு வந்தா சரியாபோவுமுனு சொன்னதுக்கு வளவேனக் கூப்பிடச்சொல்லிக் கேட்ட மானஸ்தனப் பாத்தீயளாலே?” என்று மகா அட்டகாசச் சிரிப்போடு கேட்க,
“பாத்தீயளாண்ணே? நான் வந்து கட்டிகிட்டேம் ஒரு வார்த்த பேசலியே எங்கிட்ட.. ம்ம் இனி ஏந்தங்கச்சி ஏங்கூட்டுக்காரன எங்கிட்டருந்து பரிச்சுகிடுவா போலயே” என்று வளவன் வருத்தம் போல் கேட்டான்.
“இம்புட்டு நா ஒனக்கு விட்டு வச்சதே பெருசுண்ணே” என்று தனம் முகவாயைத் தோழில் இடித்துக் கொண்டு கூற,
“ஓஹோ..” என்று ஆடவர்கள் அனைவருமாய் கோஷம் எழுப்பினர்.
முகத்தைப் பாவம் போல் வைத்துக் கொண்ட வளவன், “பாத்தீயாளே.. ஓம் பொஞ்சாதி என்ன பேச்சு பேசுதா.. நீயு பாத்துட்டுச் சும்மாருக்க?” என்று கேட்க,
“லே அனக்கத்தக்கூட்டாது இருடா” என்று வெட்கம் கொண்டு நெழிந்தபடி வடிவேல் கூறினான்.
“அடப்பாவி.. இப்பதே சாஞ்சுபுட்டியா. ம்ம்.. சுந்தரி அத்தே.. ஒங்க புள்ள இனி ஒங்களுக்குமில்ல. எந்தகங்ச்சிதேம் போல” என்று வளவன் வம்பு செய்ய,
“லேய் கம்மினு இரேம்லே” என்றான், வடிவேல்.
மகனின் வெட்கம் கண்டு சிரித்த சுந்தராம்பாள், “ஆச்சு.. ஏம்மருமவோளுக்காவத்தானம்லே பதவீசா வளத்தேம். எனக்கும் பொறவு ஏம்மவன தாங்க ஒருத்தி வந்துபுட்டானா சந்தோஷந்தேம் சாமி” என்று மனமாரக் கூற,
தனலட்சுமி தன் அத்தையைப் பார்த்து, “லவ் யூ அத்தே” என்று இதயம் காட்டினாள்.
இந்த கலகலப்புகளை சிறு புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்த மித்ராவின் அருகே வந்த சங்கீதா, “ஏ சங்கு எப்புடி இருக்க?” என்று கேட்டாள்.
'நல்லாருக்கேன்' என்பதைப்போல் சைகை செய்தவள், குழந்தையை வருடி கொஞ்ச, குழந்தையும் கிழுக்கிச் சிரித்தது.
அதை ரசித்துப் பார்த்தவளுக்கு உணவுத் தட்டை நீட்டிய கார்த்திகா, “நேரமாச்சு மாத்திரை போடனும்ல? சாப்பிடு” என்க,
சிறு புன்னகையுடன் அதை வாங்கிக் கொண்டாள்.
இதனை தூரத்திலிருந்து பார்த்த வளவனும் மனம் நிறைய புன்னகைத்துக் கொள்ள,
கோவில் ஐயரிடம் கேட்டுவைத்திருந்த மாலையுடன் அவிநாஷும் அவ்விடம் வந்து சேர்ந்தான்.
மிகுந்த கலகலப்புடன் அவ்விடமே புன்னகை நிறைந்திருக்க, ஐயரும் மங்கள சொற்கள் ஓதிய பொன் தாலியை எடுத்து வடிவேல் கரம் சேர்ப்பித்தார்.
அதை வாங்கியவன் தனலட்சுமியை நோக்க, கண்கள் நிறைந்த புன்னகையுடன் அவனைப் பார்த்து, ‘ஐ லவ் யூ' என்று இதழசைத்தாள்.
சப்தமற்ற வாக்கியத்தின் ஆனந்த இசை அவன் உள்ளமெங்கும் நிறைய, கண்கள் ஆனந்தமாய் தழும்பியது.
கண்கள் தழும்பி, இதழ் சிரிக்க, அப்பொன் தாலியை ஆடவன் அவள் கழுத்தில் சேர்ப்பிக்க, நிறைவான மனதுடன் அதை ஏற்று அமர்ந்திருந்தாள்.
அவர்கள் காதலை ஆராதித்த அத்தருணம், அவர்கள் காதலுக்கு மணிமுடி சூடிய அத்தருணம், அவர்களின் காதலால் இன்னும் வண்ணம் பெற்றது…
கன்னம் தாண்டிய அவன் கண்ணீர் துடைத்தவள், “கவலப்படாதீய. கண் கலங்காம பாத்துகிடுவேம் ஒங்கள” என்க,
“வாயாடி” எனக்கூறி சிரித்துக் கொண்டான்.
சுற்றிலும் அவளது பெற்றோரும் உடன் பிறந்தவர்களும் அக்காட்சியை ஆனந்த நிறைவோடு பார்த்து நிற்க, அனைவரும் பூ மழைத் தூவி வாழ்த்தினர்.
“கடசில நம்மக் குடும்பத்தோட கடக்குட்டிக்கும் கல்யாணமாச்சுது” என்று திரிபுரா கூற,
“ஆமா க்கா. அவோள பாக்கவே கண்ணெல்லாம் நெறையுது. இம்புட்டுண்டு புள்ளையா மடில போட்டு ஆட்டின காலம்போயி இப்பத அவோளுக்கே கல்யாணம். நெஞ்செல்லாம் நெறஞ்சுபோச்சு” என்று தீபிகா கூறினாள்.
புகைப்படக் கலைஞரும் ஜோடிகளை புகைப்படம் எடுக்க, வந்தவர்களும் வரிசையாய் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர்.
திபுரா, தீபிகா, விக்ரம், வளவன் மற்றும் தனம் மட்டுமாக புகைப்படம் எடுத்துக் கொள்ள,
தெய்வா, சுயம்புலிங்கம், திரிபுரா, சிவபாதசேகரன், தீபிகா, மகா, அவர்களின் பிள்ளைகள், விக்ரம், கார்த்திகா, ஒளிசுடர், மணமக்களை அமர்த்தி அவர்களை சுற்றி நின்றுகொண்டனர்.
தன்னவளை அழைத்துக் கொண்டு மனமேடை வந்த வளவன் கரம் பற்றி அழுத்தம் கொடுத்தவள், தன் சக்கர நாற்காலியைப் பார்க்க, அதனுடன் புகைப்படம் எடுக்க அவள் விரும்பாதது புரிந்தது.
கண்கள் மூடி திறந்தவன், அருகே சென்று, அவளைப் பிடித்துக் கொண்டு நிற்க உதவியபடி, “அடிபட்டக்கால ஊனாத மித்து. நாம்புடிச்சுக்குதேம்” என்றான்.
நொடியும் தாமதிக்காமல், மற்றவர்களும் அவர்களைச் சூழ்ந்துக்கொண்டு அவள் எழ உதவ,
“எம்புள்ளைய நல்ல இடமா கட்டிக்குடுத்துருக்கோம்டி. சந்தோஷமா இருக்கு” என்று நெகிழ்வான குரலில் அவிநாஷ் சங்கீதாவிடம் கூறினான்.
தன்னவளையும் வளைத்துப் பிடித்துக் கொண்டு தானும் வந்து வளவன் குடும்ப புகைப்படத்தில் ஐக்கியமாக, அழகாய், கவித்துவமாய் அது கருவியில் சேர்ந்தது…
“மனசு நெறஞ்சு போச்சுடி” என்று வடிவேல் கூற,
“போகமயா? நாந்தேம் வந்துட்டேம்ல?” என்று கூறினாள், அவன் காதல் மனைவி தனலட்சுமி.
Comments
Post a Comment