திருப்பம்-87
திருப்பம்-87
வடிவேலுவின் வீட்டில்தான் ஆட்கள் நிறைந்திருந்தனர்.
மாலை நேரம் நலங்கு வைத்து, நெருங்கிய சொந்தங்களிடையே இரவு உணவை முடித்துவிட்டுப் புறப்படும் நோக்கத்துடன், நலங்கை வைத்து முடித்த அனைவரும் அமர்ந்து பேசி சிரித்துக் கொண்டிருந்தனர்.
ஒருவித ரம்மியம் அப்பொழுதில் மிதந்து கொண்டிருந்தது. உடன் பிறந்தோரின் இருப்பு, மாமன் மச்சான் உறவுகளின் கேலி கிண்டல், காதல் ஜோடிகளின், கடைக்கண் பார்வையில் கசிந்திசைக்கும் காதல், குழந்தைகளின் விளையாட்டு ஆர்ப்பரிப்புகள், பெரியோர்களின் தீவிரப் பேச்சுக்கள், சில வம்பு பேசுபவர்கள் இடையே கடிபடும் வம்புகள் என, அனைத்தும் கலந்த கலவையாய் இருந்தது அவ்விடம்.
அமரக்கூட இடம் இல்லாத அளவு ஆட்களின் நிறைவைக் கொண்டிருந்தது, அவ்வீட்டில் இருப்போரின் மனதைப் போல்.
“ஒத்த மவேனு வச்சுருக்காவ எங்க மைணி. சீக்கிரத்துல ஒத்த புள்ளைய பெத்துப்போட்டு செறப்பு செஞ்சுபுடு” என்று ஒருநாள் விருந்தினராய் வந்த வடிவேலின் அத்தை கூற,
“அதுக்கென்ன ஆத்தா. பெத்துகுடுத்துபுடுவம். எம்புட்டு பெத்துப்போடட்டுமாக்கும்? நீங்க வளக்க வருவீயளா?” என்று இடக்காய், படு நக்கலாய் கேட்டாள், தனலட்சுமி.
தற்போது வடிவேல் அவளைத் தடுக்கவில்லை. மாறாய் அவள் பேச்சை ரசித்துப் பார்த்தான். தான் பேசிடாத, பதில் கொடுத்திடாத தனது சொந்தங்களுக்கு தன்னவள் மூலம் பதில் கிடைத்துவிட்டுத்தான் போகட்டுமே! என்ற எண்ணம் அவனிடம்…
“ஏ ஆத்தே.. மைணி.. ஒங்க மருமவ பொழச்சுகிடுவா” என்று அவர் கூற,
“பொழைக்கனுமில்ல ஆத்தா. இவியள கட்டிகிட்டு ரொம்ப வருஷம் வாழனும்முல்ல? பேச்சுகூட இல்லினா எப்புடி. சரி பேச்ச மாத்தாதபடிக்குச் சொல்லுங்க. வந்து எம்புள்ளைய ஏந்துவீயளா? சீரெல்லாம் எம்புட்டுச் செய்வீய?” என்று கேள்விகளை அடுக்கினாள்.
“தனம்.. அனக்கத்தக்கூட்டாதிரு” என்று தெய்வா அதட்ட,
“பேசட்டுமத்தே.. எம்பொஞ்சாதி என்னத்த தப்பா கேட்டுபுட்டா?” என்றவன் தன் அத்தையைப் பார்த்து, “எங்கத்தட்ட உரிமையாத்தான பேசுதா” என்றிடவும் அவராலும் அவனை எதிர்த்து சபையில் வைத்துப் பேசிட இயலவில்லை.
'அப்புடி போடுடி மாப்ளோய்' என்று மனதோடு வளவன் சபாஷ் போட,
“ஓம் மாப்ளைக்கு கல்யாணத்தால சக்தி கூடிபோச்சுது போலலே. என்ன கெத்தா ஒக்காந்திருக்கியான் பாரு” என்று மகா அவன் காதில் ஓதினான்.
“நம்மூட்டு புள்ள மருத மீனாட்சியாட்டாம். அது தோரணயே தனி. வந்து சிக்குற சொக்கந்தேம் சொக்கிப் போயி, அவோ இருப்புக்கு பெருமபட்டு கட்டுப்படனும்” என்று மனமாரக்கூறினான்.
அந்த பெண்மணியும் தனத்திடம் வாய் கொடுக்க இயலாது நகர்ந்துவிட, “ஒங்கைய்யா வீட்டாளுவ எல்லாம் டாக்ஸிக்காதேம் இருப்பாவ போலியே” என்று கடுகடுப்பாய் கேட்டாள்.
“ஏம்லே எள்ளும் கொள்ளும் வெடிக்கு” என்று அவள் முகம் பார்த்தபடி அவன் கேட்க,
“காலயில சங்கு மைணிட்ட போய் சைகைல பேசிட்டு இருக்காவ. அவோ காது கேக்குமினு சொல்லவும், ‘காதும்போச்சு கொரலும் போச்சுன்ன நெனச்சேம்’ அப்புடினு எகன மொகனயா பேசிருக்காவ. இதுல அக்கறையா கேக்காப்ல காலு சரிவர எம்புட்டு நா ஆவுமினு ஆரமிச்சு, கொழந்த பாக்கியத்துக்குலாம் ஒன்னுமில்லனுலாம் கேட்டிருக்காவ. கார்த்தி மைணி பக்கட்டு வாரவும் இவிய பேச்சக் கேட்டுட்டு நறுக்கு நறுக்குனு நாசூக்கா பேசி அனுப்பிடாவ” என்றாள்.
“ஏட்டி இதெப்ப நடந்துச்சு? எங்கிட்ட ஒரு வார்த்த சொல்லத்தான?” என்று அவன் கேட்க,
“ஆருனு எனக்குந்தேம் தெரியல. ஆனா மாமா வீட்டாளுவதேம்னு மைணி சொன்னாவ. ஒங்கட்ட சொல்ல என்ன? தெரிஞ்சுருந்தா நானே ஆஞ்சுருக்க மாட்டேம்” என்று கூறினாள்.
அதில் லேசாய் புன்னகைத்தவன், “அடாவடிலயே அம்புட்டு அழகாருக்கடி” என்று கூற,
“ஆஹாங். ஆட்டும் ஆட்டும்” என்று சிரித்துக் கொண்டாள்.
“அந்தா பாத்தீயலாலே? இங்கன ஒரு பேச்சு ஓடுர கேப்புல தனியா லவ்ஸு பண்ண ஆரமிச்சுட்டானுவ” என்று மகா கூற,
“அட ஏண்ணே?” என்று வேலு கேட்டான்.
“பாவம் புதுசா கட்டிகிட்டவ. என்னமும் பேசட்டுமே. ஒமக்கென்ன?” என்று தீபிகா கூற,
“அத்தான்.. அக்கா சொல்லுறத பாத்தாக்கா, நீங்கதேம் பேசல அவியளாது பேசட்டுங்குறாப்புல இல்ல இருக்குது” என்று விக்ரமன் கேலி செய்தான்.
“அட போக்கிரி” என்று கூறிய தீபிகாவிற்கு வெட்கம் வந்துவிட,
“என்ன மைணி.. செவக்குறாப்ல இருக்கு” என்று கார்த்திகா கேலி செய்தாள்.
“ஆமா ஆமா.. செவக்குது இப்பத்தேம். அந்தாருடி.. எந்தம்பிதேம் அங்கன ரொம்ப நேரமா ஒன்னயவே சைட் அடிச்சுட்டுருக்கியாம்” என்று தீபிகா கூற,
சட்டென விக்ரமைப் பார்த்தாள்.
அவன் தீபியை செல்லமாய் முறைக்க,
“போட்டுக்குடுத்துபுட்டனு மொறைக்கான் பாரேம்” என்று திரிபுரா சிரித்தாள்.
“அட மைணி.. அவியள விடுங்க. ஏங்கொழுந்தருதேம் அப்பைக்கு அப்ப பார்வையிலயே படியா ஸ்கோர் பண்ணுறாவ” என்று கார்த்திகா கூற,
அனைவர் பார்வையும் சங்கமித்ரா புறம் திரும்பியது.
திருதிருவென விழித்தவள் இடவலமாய் தலையசைக்க,
பெரும் சிரிப்பலைத் தோன்றியது.
நேரம் செல்லவும் அனைவரும் புறப்பட ஆயத்தமாக, சந்தோஷமாய் தனது அன்னை மற்றும் தந்தையை அணைத்துக் கொண்டாள்.
அவள் தலையில் வலிக்காமல் குட்டிய விக்ரம், “என்னடி கல்லுபோல நிக்க? கரிக்க மாட்டியா?” என்று கேட்க,
“ஏங்கரிக்கனுமுங்கேம்? இந்தா தடிக்கி விழுந்தா வீடு. நெனதம் இவியளே அங்கனத்தேம் கெடக்கப்போறாவ. பொறவு என்ன மாறிபோச்சுனு கரிக்க?” என்று கேட்டாள்.
“என்ன மாறிபோச்சா?” என்ற வளவன், “சரிதேம்.. ஆனா நாங்கதாம் புள்ள ஒன்னய ரொம்ப மிஸ் பண்ணுவம்” என்று உண்மையாய் கூறினான்.
அவ்வீட்டின் கடைகுட்டியாயிற்றே தனம். அவள் சத்தம் இல்லாத நாளுண்டா அவ்வீட்டில்? தற்போது அவள் வாசம், அவர்கள் நண்பன் இல்லத்தில் தான் என்று நினைக்க சந்தோஷமாகவும் இருந்தது, அவளை விட்டுப் பிரியும் ஏக்கமும் இருந்தது.
இரட்டையர்களை அணைத்துக் கொண்டு, “ஒங்களயெல்லாம் விட எம்மைணியளதேம் தேடும் எனக்கு” என்று கூறி கார்த்திகா மற்றும் மித்ராவை ஏறிட்டாள்.
அவர்கள் இருவரும் கண்கள் கலங்கி நெகிழ்வாய் அவளை நோக்க,
“ஒருத்தவிய எனக்கு அம்மா போல. ஒருத்தவிய எனக்கு தோழிபோல” என்று உருக்கமாய் கூறியவள், அண்ணன்களை கிள்ளி, “ஒழுங்கா பாத்துகிடுவ. எம்மைணிக்கு ஒன்னுனா நாந்தேம் மொத வந்து நிப்பேம்” என்று கூறினாள்.
கார்த்திகா அவளது பேச்சில் நெகிழ்ந்து அழுதுவிட, அவளை வந்து அணைத்துக் கொண்டு ஆறுதல் படுத்தியவள், மித்ரா முன் மண்டியிட்டு, “என்னய நீ ரொம்ப மிஸ் பண்ணுவன?” என்று கேட்டாள்.
கண்கள் கலங்க ஆமென்று அவள் தலையசைக்க, அவளை அணைத்துக் கொண்டு, “பொறவு ஓம்மாமியாட்டருந்து நாந்தான ஒன்னய காத்துவிடுவேம். மிஸ் பண்ணிதேம் ஆவனும்” என்று மெல்லொலியில் கூறினாள்.
அதில் சிரித்தவள் அவள் தோளில் லேசாய் அடித்துத் தன் கண்ணீர் துடைக்க, அத்தருணம் இதமான ஏக்கம் மற்றும் சோகத்துடன் நகர்ந்தது.
தன் தந்தையிடம் வந்தவள், “அம்புட்டுக்குப் பொறவும் எம்புள்ள, ஏம் வளர்ப்பு பெசகாதுனு எனக்காவ நின்னவரு ஐயா நீங்க. புள்ளனு ஒன்னு வளத்தா ஒங்களப்போலதேம் வளப்பேம். ஏம் ஐயன் என்னய வளத்த வெதம் செறக்க வாழுவேம்” என்க,
அவளை அணைத்துக் கொண்டு உச்சி முகர்ந்தவர், தன் கண்ணீணைத் துடைத்துக் கொண்டார்.
தாயையும் அணைத்துக் கொண்டு, “ஆத்தா போனடிச்சா எடு. கொழம்பு ரசம் வெக்கலாம் ரெசிபி கேப்பேம். ஏம் ஐத்தயே சொல்லித்தருவாவதேம். ஆனா அவியள அப்ப அப்ப நானும் இம்பிரஸ் பண்ணனூம்முல?” என்று கேட்டு கண்ணடிக்க,
“வாயி வாயி..” என்று லேசாய் அடித்தவர் மகளை அணைத்துக் கொண்டு, அறிவுரைகள் கூறினார்.
அவளது இரண்டு அக்காக்களும் வந்து நிற்கவும், “அனுபவசாலிய எதும் அறிவுரத்தரப்போறீயளா?” என தனம் கேட்க,
“இல்லடியம்மா. எங்களவிட நீ நல்லா வெவரமாதேம் இருக்க. எங்களுக்கு வேணுமின்னா ஒருமணிநேரம் பாடம் எடு. நெதம் வாரோம்” என்று திரிபுரா கூறினாள்.
“பீஸ் கேப்பேம்” என்று கூறியவள், “சங்கு மைணி.. ஒனக்கு ஃப்ரீதேம். அப்படியானும் வந்து கத்துகிடு எங்கிட்ட” என்று சிரிக்க,
திரிபுரா முகம் சுழித்துக் கொண்டு தன் அன்னையைப் பார்த்தாள்.
அவர் முகத்திலும் அந்த பேச்சில் ஒரு அதிருப்தி வந்துபோக,
“சரி சரி.. ரொம்ப வாயாடி அத்தைய பயங்காட்டாம, நல்லா வச்சு பாத்துகிடு. சந்தோசமா இரு” என்று தீபிகா கூறினாள்.
ஒவ்வரிடமும் பேசி அறிவுரை மற்றும் வாழ்த்தைப் பெற்றவள் அவர்களுக்கு விடை கொடுக்க,
மிச்ச சொச்ச சொந்தங்களையும் அவரவருக்கு ஒதுக்கப்பட்ட இருப்பிடங்களுக்கு அனுப்பி வைத்தனர்.
இரவு குறித்த நேரத்தில் பால் செம்பை அவள் கையில் கொடுத்த சுந்தராம்பாள், “ஏம்புள்ள ஒன்னய சந்தோசமா வச்சுகிடுவான் தாயி. நீயும் அவேன கண்ணுக்குள்ள வச்சுகிடுவனு நம்பிக்க இருக்கு. நீங்க சந்தோசமா வாழ்ந்தாலே போதும் எனக்கு” என்று கூறி, “அவேம் ரொம்ப பேச மாட்டியான்த்தா. சமயத்துல ஒனக்கு ஆதரவாகூட அவசரத்துக்கு பேச வாராம இருந்திடுவியாம். அப்பத கொஞ்சம் நீ அனுசரிச்சு போயிக்கோ தாயி” என்று அவள் தாடை பற்றிக் கூற,
தானும் அவர் தாடை பற்றியவள், “ஒங்க புள்ளைய இந்த தனத்துட்ட ஒப்படைச்சுட்டீயத்தான? கண்ணு கலங்காம பாத்துகிடுதேம்” என்றாள்.
அவளுக்குப் புன்னகையாய் ஆசி கூறியவர் அனுப்பி வைக்க, அவர்களது அறையாய் மாறிப்போன அவன் அறைக்குள் பிரவேசித்தாள், அவனவளாய்…
அவளைக் கண்டதும் அவனுக்குத்தான் பதட்டம் கூடியது.
பால் செம்பை அவனிடம் கொடுத்தவள், அவன் பாதம் பணிய, பதறி நகர்ந்தவன், “ஏட்டி இதுலாம் வேணாம்” என்றான்.
“எதுலாம்?” என்று பதட்டமாய் அவள் கேட்க,
“கால்ல விழுறத சொன்னேம்” என்றான்.
பெருமூச்சு விட்டவள், “நான் என்னமோ நெனச்சுபுட்டேம்” என்க
அவனுக்கு ஒரு வெட்கப் புன்னகை உதயமானது.
அவள் அருகே வந்து அமர்ந்தவன், “நெறவாருக்குடி” என்று மனமாரக் கூற,
“எனக்குனாப்ல? எந்தங்கத்த கட்டிகிட்டேம். இதவிட வேற என்ன வேணுமாம்” என்று அவன் கன்னம் பற்றிக் கொஞ்சியபடி கூறினாள்.
என்ன பேசி எப்படி நேரத்தை ஓட்ட என்றே தெரியாமல் வடிவேல் என்ன என்னவோ பேசினான்.
“யோ.. ஏம்யா பயப்படுத?” என்று அவன் மறைக்கத் துடித்ததைக் கண்டு கொண்டவளாய் அவள் கேட்க,
ஒரு பெருமூச்சு விட்டவன், “படபடங்குதுடி” என்றான்.
“என் டயலாக்குங்க இது” என்று சிரித்தவள், அவன் வலது கன்னத்தில் கரம் வைத்து, “விடுங்க.. ஒன்னுமில்ல” என்க,
தானும் அவள் இடது கன்னத்தில் கை வைத்தவன், “ஓன்னய சந்தோசமா வச்சுகிடுவனாடி?” என்று கேட்டான்.
“என்னைய கேட்டா? நீங்கதேம் சொல்லனும்” என்று அவள் கூற,
“அதேம் ஒங்கிட்ட என்னய ஒப்புகுடுத்துட்டேம்னு அம்புட்டு பேருட்டயும் சொன்னியே. அப்ப ஏம்முடிவு ஓங்கையில தான?” என்று அவள் கரம் பற்றினான்.
அந்த நெருக்கம் அவர்களுக்கு புதிது.. அவனிடம் ஆசையும் தயக்கமும், அவளிடம் காதலும் உரிமையும்…
“காதலிக்கயிலயே அப்புடி தாங்கினவருங்க நீங்க. என்னய சந்தோசமா வச்சுகிட மாட்டீயளாக்கும்? ஒத்த மனுசுதேம். அத நா ஒங்களுக்கு எழுதி வச்சாப்ல, நீயளும் என்ககுத்தேம் எழுதி வச்சுருக்கீய. அதுலாம் சொல்லி, பேசிதேம் நீங்க காட்டனும்னு இல்ல. எனக்கே புரியும். ஒங்கட்ட எம்புட்டு வேணா கொற இருக்கட்டும். நா என்னுல அத கூட்டி ஈடுகட்டிப்பேம். பயப்படாதீய. அதெல்லாம் சந்தோசமாதேம் வாழுவோம்.. காலம்பூரா” என்று அவள் கூற,
கண்ணீரோடு அவளை அணைத்துக் கொண்டவன், “ரொம்ப காதலிக்க வச்சுட்டடி. பொசுக்கு பொசுக்குனு கண்ணு கலங்கிடுது” என்று கூறினான்.
“கரிக்கட்டும்.. அதேம் தொடைக்க நாயிருக்கேம்ல?” என்றவள் அவன் கண்ணீர் துடைத்து, “யோ என்னய பாரேம்” என்க,
அவளை நிமிர்ந்து பார்த்தான்.
ஆழ்ந்த அமைதியான பார்வை பரிமாற்றம். மெல்ல மெல்ல இடைவெளி குறைய, அவன் இதழோடு தன் இதழ் பூட்டியவள், தன் வழிகாட்டுதலில் அவனை தங்கள் வாழ்வின் புது பக்கத்திற்கு நகர்த்திச் சென்றாள், காதலும் மோகமுமாய்…
Comments
Post a Comment