திருப்பம்-88
திருப்பம்-88
தங்கள் அறையில் ஒருவரை ஒருவர் அணைத்துப் படுத்திருந்த வளவன் மற்றும் சங்கமித்ராவிடம் ஆழ்ந்த மௌனம்.
அவள் கரம் பிடித்து உள்ளங்கையை ஆழ்ந்து சுவாசித்து முகர்ந்தவன், அதனில் முத்தம் வைக்க, புன்னகையாய் கூசியக் கரத்தை நகர்த்திக் கொண்டாள்.
அவள் கன்னம் வருடியவன், “அவிய பேசினத நெனச்சுட்டு எதும் வெசனப்படுதியா மித்ரா?” என்க,
'என்னது?’ என்பதைப் போல் புருவம் உயர்த்தினாள்.
“அதேம்.. வேலு வீட்டு பக்க ஆளுவ யாரோ பேசினாவளாமே” என்று இறங்கிய குரலில் அவன் கேட்க,
அவனை ஆழ்ந்து பார்த்தாள்.
லேசாய் முகம் வாட, ‘வருத்தமாதான் இருந்துச்சு. ஆனா வேணுமின்னு பேசுறவங்க பேச்சுக்கு மதிப்புக்குடுத்தா என் புருஷன் வருத்தப்படுவாருல்ல?’ என்று சைகை செய்து அவன் தாடைப் பற்றி ஆட்டினாள்.
தனக்காக, தான் வருத்தம் கொள்ளாதிருக்கவேண்டுமென அவள் வருத்தத்தைத் தூக்கி எறிகின்றாள்… எப்படியான நேசம் இதெல்லாம்? இப்படியான விந்தைகள் எல்லாம் காதலில் மட்டும் எப்படி சாத்தியப்படுகிறதோ? என்று நினைத்துக் கொண்டவன், அவள் நெற்றியில் முத்தமிட்டு, “தேங்ஸ்டி” என்க,
அவனை அதிருப்தியாய் பார்த்தவள், கன்னத்தைத் தட்டினாள்.
அதில் சிரித்துக் கொண்டவன், அவள் கன்னத்தில் முத்தமிட, அவன் மீசை குத்தும், அம்முத்த்தை ரசித்து ஏற்றவள், அவனை அணைத்துக் கொண்டு படுத்துறங்கினாள்.
மறுநாள் காலைப் பொழுது மிக ரம்மியமாய் விடிய, மறுவீட்டு விருந்திற்கென்று அடுத்த நாளே மணமக்களை அழைத்திருந்தார், தெய்வா. தன் உரிமையைத் தானே முதலில் முடித்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம், அவரை விரைவாகவே செயல்பட வைத்திருந்தது. உடன் சுந்தரம்பாளையும் அழைத்திருந்தார்.
மூவருமாய் வீடு வந்து சேர்ந்திருக்க, திரிபுராவும் வீட்டிற்கு வந்திருந்தாள்.
அம்மாவிற்கு உதவிகின்றேன் என்ற பெயரில் வாய் பேசத்தான் அவள் வந்திருக்கின்றாள் என்பது தெரிந்தும்கூட அனைவரும் கண்டும் காணாது கடந்தனர்.
சமையலறையில் தன் அன்னைக்கு உதவியபடி, “நீ பெரியாளுதேம் அம்மோ. மொத விருந்த ஒடனே நீயே வச்சுப்புட்ட?” என்று கேட்க,
“ஆமாடி.. நாம நம்ம உரிமைய விட்டுக்குடுக்கக்கூடாது தான?” என்றவர், சமையலறைக்கு வெளியே கார்த்திகாவையும், அவளுடன் சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்தபடி காய்களை நறுக்கித் தரும் சங்கமித்ராவையும் ஒரு பார்வை பார்த்து, சற்றே சப்தமாய், “விருந்து வைக்குறதெல்லாம் ஒரு மருவாதிடி. சிலர போலலாம் மாதம் போய் விருந்த வைக்குற ஆளு நாயில்ல” என்று கூறினார்.
அவர் சப்தம் அதிகரிக்கவுமே அது தன்னை குறித்தான பேச்சுதான் என்று புரிந்துகொண்ட சங்கமித்ராவிற்கு, திருமணம் முடிந்து ஒரு வருடம் ஆகவிருக்கும் நிலையில் இன்னும் இந்த சிறு விடயத்தை மனதில் நிறுத்தி பேசுவதும், தனது பெற்றோரையும் இதில் மையப்படுத்திப் பேசுவதும் வெகுவான சங்கடத்தைக் கொடுத்தது.
நொடியில் வாடிய அவள் முகம் கண்ட கார்த்திகாவிற்கும் வருத்தமாகிவிட, அவ்விடத்தில் ஆஜரான தனம், “என்ன அம்மோவ்.. அனக்கம் பலமாருக்குது” என்றாள்.
மகளின் மணக்கோலத்தை மனம் நிறைக்கக் கண்டவர், “வாடியம்மா” என்று புன்னகையாய் கூற,
“சிரிச்சு மழுப்பாத ம்மா. மைணிய என்னமாது சொல்லலேனா ஒனக்குத் தூக்கமே வராதோ?” என்று கேட்டாள்.
“ஏன்டி அம்மா இப்ப என்னத்த சொல்லிட்டாவ? ஆருக்கானாலும் ஆதங்கம் இருக்கத்தான செய்யும்?” என்று திரிபுரா கேட்க,
“அக்கா.. ஆயிருந்தேம் இது நம்ம பெத்தவிய வீடாருந்தாலும், இங்கனயும் மூனு குடும்பம் இருக்குதுனு புரிஞ்சுகிடு. ஒனக்கும் அத்தானுக்கும் எடேயவோ, ஓம் மாமியாகூடவோ ஒடக்குன்னு வாரயில இங்கருந்து ஆரும் வந்து பேசினாக்கா ஒனக்கு ஆவுமா? அவிய அவிய குடும்ப சோலியில மூக்க நொழைக்காது இருந்துகிடருதுதேம் நமக்கும் நல்லது, நம்ம பொறந்தூட்டு நிம்மதிக்கும் நல்லது” என்று கூறியவள், “ஏம்மா.. ஓன் சொக்காரவிய பக்கட்டு துட்டி விழுந்துருந்தா நீயும் ஒரு மாசம் போயிதான செஞ்சுருப்ப?” என்று பட்டெனக் கேட்டிருந்தாள்.
“ஏட்டி கோம்ப” என்று பதறிய தெய்வா, “கல்யாணமாயி மொத நாளு வாரவா என்னமாத சலம்பாதடி (ஒலறாதடி)” என்று கூற,
“நெருப்புனா சுட்டுபுடாத ம்மா. நாம்பேசுரது ஒனக்கு சுடுதுனா, நீ பேசுற பேச்சுக்கு அவியளுக்கு மனசு வலிக்காதா? முடியாதவள பேசி என்னத்தக் கண்டுட்டீய?” என்று கேட்டாள்.
“சரிடி ஓம்மைணிகாரிய நாங்க ஒன்னுஞ் சொல்லல” என்று வெடுக்கெனக் கூறிய தெய்வா முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு சென்றுவிட, மித்ரா ஆயாசமாய் பெருமூச்சு விட்டாள்.
மித்ராவின் தலைகோதிய தனம், கண்கள் மூடித் திறந்து செல்ல, கார்த்திகாவும் ஒளிசுடர் அழும் சப்தம் எழவும், “இந்த மவராணிக்கு இப்ப என்னவாம்?” என்றபடி எழுந்து சென்றாள்.
யாருமில்லாததைப் பார்த்துக் கொண்டு வந்த திரிபுரா, காய்கறிகள் வெட்டிப் போட்டிருக்கும் பாத்திரத்தைத் தூக்கியபடி, “அனக்கத்தக்கூட்ட வக்கில்லாட்டிக்கூட ஒடக்கிழுக்க ஆளு வச்சுருக்காவய்யா.. என்னத்த சொல்ல” என்று முனகிவிட்டு செல்ல, திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தாள்.
என்ன மாதிரியான வார்த்தைகளால் பதம் பார்த்துவிட்டாள்? என்று அதிர்ந்தவளுக்கு நெஞ்சம் அடைப்பதைப் போல் இருந்தது. தன் குரல் பறிபோனதிலிருந்து இன்னும் அந்த வேதனை தாழ இயலாமல் தன்னவனுக்காகத் தன்னைத் தேற்றிக் கொண்டிருக்கின்றாள்.
சைகை மொழியில் தன்னிலை விளக்க முயன்று சில நேரங்களில் அது இயலாது போகும்போதெல்லாம் அவள் அடையும் வலியைத்தான் சொல்லிவிட இயலுமா? துக்கம் தொண்டை அடைக்க, தவித்தவளுக்குக் கண்கள் கலங்கியது. அழுது மீண்டும் தன்னால் ஒரு பிரச்சினை வரக்கூடாதே என்று எண்ணியவள் தன் கண்களை மிக அழுத்தமாய் துடைத்துக் கொண்டாள்.
அவ்விடம் விட்டு செல்ல, சக்கர நாற்காலியை அவள் நகர்த்த முயல, அங்கு வந்த விக்ரமன், “என்னப்பா எங்கனயும் போனுமா?” என்று கேட்டான்.
அவன் முகம் பார்க்காமல் ஆமென்று அவள் தலையசைக்க,
“ரூமுக்கா சங்கு?” எனக் கேட்டான்.
மீண்டும் அவள் தலையசைக்க, அவள் நாற்காலியை நகர்த்திக் கொண்டு வந்து அறையில் விட்டவன், “ஆரையும் வரச்சொல்லவா சங்கு?” எனக் கேட்க, வேகமாய் வேண்டாமென தலையாட்டினாள்.
அவளைப் புருவம் சுருங்க பார்த்தவன், “என்னைய பாரேம்” என்க,
அவள் நிமிர்ந்தாள் இல்லை.
“ஆரும் என்னமும் சொன்னாவளா?” என்று அவன் கேட்க, கட்டுப்படுத்த இயலாமல் அவள் விழியிலிருந்து ஒருதுளி கண்ணீர் வழிந்தது.
மண்டியிட்டு அமர்ந்து அவள் முகம் நோக்கியவன், “ஏங்கிட்ட சொல்ல மாட்டியாத்தா? நான் ஓம் கூட்டுக்காரேம் தான?” என்று கேட்க,
அவளிடம் விசும்பல் ஒலி எழுந்தது.
“என்னத்தா? ஆரு என்ன சொன்னாவ?” என்று அவன் பரிவாய் கேட்க,
இடவலமாய் தலையாட்டியவள், நடுநடுங்கும் கரத்தைத் தன் தொண்டையில் வைக்கப் போக, அவள் கரம் பற்றித் தடுத்தான்.
“சொல்ல முடியாட்டி வுடு. என்னமோ ஓங்கொரல வச்சுத்தேம் பேசிருக்காவனு புரியுது. அம்மாவோ அக்காவோதேம் பேசிருப்பாவ. என்னய பாரேம்.. யாருனு சொல்லு” என்று விக்ரம் கேட்க,
வேகமாய் இடவலமாய் தலையாட்டியவள், ‘எப்ப இது சரியாகும்?’ என்று கேட்டாள்.
அவளைப் பரிவாய் பார்த்து தலைகோதியவன், “ஆவும்த்தா. அது அதுக்குனு ஒரு நேரமிருக்குமில்ல? ஒன்னய பேசுறவிய ஆரா இருந்தாலும் அவியளுக்கும் ஒரு நேரம் வாரும்” என்று கூற,
அவனை திடுக்கிட்டுப் பார்த்தாள்.
பேசியிருப்பது தன் குடும்பத்தார் என்று அறிந்தும்கூட இப்படியான வார்த்தைகளை விக்ரம் உதிர்ப்பது அவளுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது.
“நீயும் நம்மூட்டு புள்ளதான சங்கு?” என்று அவள் அதிர்ச்சிக்கான பதிலை கொடுத்தவன், அவள் கண்ணீர் துடைத்து, “என்னமும் சாப்டியா?” என்று கேட்க,
அதிர்ச்சி விலகாத பார்வையே அவளிடம்.
“வுடுத்தா.. பேசுறிவிய பேச்சுக்கலாம் கரிக்கக்கூடாது. என்னமாது சொன்னாவனா எங்கிட்டக்க சொல்லு. நாம்பாத்துக்குடுதேம். இப்பத ஏதும் உங்குதியானு சொல்லு” என்று அவன் கேட்க, வேண்டாமென தலையசைத்தாள்.
“சரிமா. செத்த ஒக்காந்துரு” என்றவன் அவளை கட்டிலருகே நகர்த்திவிட்டு வெளியே செல்ல, ஆழ்ந்த மூச்சை வெளயேற்றியவள் சாய்ந்து அமர்ந்தாள்.
இன்னமும்கூட மனதில் திரிபுராவின் வார்த்தைகள், குத்திக் கொண்டுதான் இருந்து. ஆனாலும் விக்ரமனின் ஆறுதல் கொஞ்சமே கொஞ்சம் அமைதிபடுத்தியிருந்தது.
தோப்பிற்கு சென்று வீடு திரும்பிய வளவன், “லே வேலா.. ஆரு வந்துருக்காவனு பாரேம்” என்க,
வாசல் பக்கம் திரும்பிய வேலன், வளவனுடன், யாழ் மித்ரன் மற்றும் ரசிகப்ரியா வருவதைப் பார்த்து மகிழ்ந்து போனான்.
“அண்ணே மைணி..” என்று உற்சாகமாய் அழைத்தபடி அவன் எழவும், சுயம்புலிங்கமும் விக்ரமனும் யாரென்று பார்க்க எழ, சமையலறையிலிருந்து பெண்களும் வந்தனர்.
வடிவேலை அணைத்துக் கொண்ட மித்ரன், “வாழ்த்துக்கள்டா. சம்சார சாகரத்தில் நீந்தப்போற, டியூப் எதுவும் பாதுகாப்புக்கு வச்சுக்கோ. உள்ள மூழ்கிடாம” என்று கேலி செய்ய,
“ம்ம்..” என்று ரசிகப்ரியா அவனை முறைப்பதைப் போல் ஏறிட்டாள்.
“காதல்ல மூழ்குறத சொன்னேன்டா” என்று அவன் பேச்சை மாற்ற, அதில் அனைவரும் சிரித்துக் கொண்டனர்.
“ஐயா மித்ரன் அண்ணே. போலீசாருக்காவ. சொல்லிருக்கேம்ல?” என்று வளவன் கூற,
“நெனவிருக்குதுயா வாங்க தம்பி வாம்மா. ஒக்காருவ” என்றவர், “தெய்வா புள்ளையளுக்கு குடிக்க போஞ்சு போட்டு எடுத்தா” என்று கூறினார்.
தெய்வாவும் சென்று எலுமிச்சை பழச்சாறு தயாரித்துக் கொண்டுவர, “இவிய அம்மா ண்ணே. இவிய அப்பா. இது..” என்று விக்ரமனைக் காட்டி முடிக்கும் முன், “உன் ட்வின் ப்ரதர்” என்று மித்ரன் கூறினான்.
அதில் இரட்டையர்கள் இருவரும் புன்னகைத்துக் கொள்ள, தனத்தை தன் அருகே அழைத்த வடிவேல், “பொஞ்சாதிண்ணே.. வளவன் தங்கச்சி” என்று கூற,
“பாருடா.. நீங்கதானாம்மா அது?” என்று கேட்ட மித்ரன், “ஹாப்பி மேரிட் லைஃப்” என்றான்.
“தேங்ஸ் அத்தான்” என்று தனம் கூற,
“ஹாப்பி மேரிட் லைஃப் மா” என்ற ப்ரியா தான் கொண்டுவந்த பரிசை நீட்டினாள்.
அதை புன்னகையுடன் இருவரும் ஏற்றுக்கொள்ள,
சுற்றி முற்றிப் பார்த்த மித்ரன், “மித்ரா இல்லையா?” என்று கேட்டான்.
ரசிகப்ரியா அவனை புரியாது நோக்க, “வளவன் வைஃப் பேரும் மித்ரா தான்டா. சங்கமித்ரா” என்று கூற,
“ஓ.. அப்படியா?” என்றவள், “அவங்க இல்லையா?” என்று கேட்டாள்.
“எங்கம்லே அவோ?” என்று வளவன் விக்ரமனை நோக்க,
“ரூமுலதேம் இருக்காலே” என்றான்.
“இந்தா கூட்டியாரேம்” என்ற வளவன் அறைக்குள் செல்ல,
மெல்ல அப்போதுதான் சக்கர நாற்காலியிலிருந்து எழ முயற்சித்துக் கட்டிலில் அமர எத்தனித்துக் கொண்டிருந்தாள்.
அவன் கதவைத் திறந்த ஓசையில் அவள் தடுமாறிவிட, “ஏட்டி கோம்ப” என்று பதறிக் கொண்டு அவளை நெருங்கியவன், அவளைத் தாங்கிக் கொண்டான்.
லேசான அழுத்தம் கொடுத்த வலியில் அவள் முகம் சுருக்க, அவளை கட்டிலில் அமர்த்தியவன், “அறிவிருக்காடி. மாறி ஒக்கரனுமினா ஆளுவ ஆரையும் கூட்டு எழ வேண்டியது தான? மறுக்கா விழுந்து வச்சா என்னத்தச் செய்ய? கோட்டி” என்று சப்தம் போட, அவன் அரவத்தில் தனமும் விக்ரமனும் உள்ளே நுழைந்தனர்.
பயத்தில் படபடத்து அமர்ந்திருந்தவள், ‘இல்ல முதுகு வலிச்சுதுனு மாறி உக்காரப்பாத்தேன்’ என்று சைகை செய்ய,
“அதுக்கு நீயா எழுவியா? ஏன்டி உசுர வாங்குத?” என்று கேட்டுவிட்டான்.
அவன் கேள்வியில் மித்ராவின் முகம் முற்றுமாய் வாடிவிட, தம்பியின் பின்னந்தலையில் ஒரு போடு போட்ட விக்ரமன் அவனை கண்டனமாய் முறைத்துவிட்டு, “நீ வாப்பா” என்று அவளுக்கு உதவி சக்கர நாற்காலியில் அமர்த்தினான்.
தன்னவனை கோபமும் வருத்தமுமாய் பார்த்தவள், விக்ரமனை நோக்க, “அவேம் கூட்டுக்காரவ வந்திருக்காவப்பா. வா நம்ம போயி பாப்பம்?” என்று கூறினான்
சரியென்று அவள் தலையசைக்க, தனம் வளவன் தோள் தட்டி, “பதட்டந்தேம். அதுக்காவ பொசுக்குனு பேசுறதா?” எனக் கேட்டு, “சரி சரி வா” என்று கூறி வெளியே அழைத்து வந்தாள்.
“என்னம்லே ஆச்சுது?” என்று சுயம்புலிங்கம் கேட்க,
“ஒன்னுமில்ல ஐயா” என்றவன், தம்பியை பார்க்க, அங்கே வந்த வளவனும், “மித்ரா அண்ணே” என்று தன்னவளைக் காட்டினான்.
“ஹாய்மா” என்று அவன் கூற,
சிறு புன்னகையுடன் தலையசைத்தாள்.
சங்கமித்ராவை கூர்ந்து நோக்கிய ரசிகப்ரியா, “நீங்க எந்த ஊருமா?” என்று கேட்டாள்.
அவள் வளவனை நோக்க, அவன், “சென்னைலதேம் பொறந்து வளந்தது எல்லாம் மைணி. இப்ப இந்தூரு வந்து ஒன்ற வருஷந்தேம் ஆவுது” என்று கூறினான்.
“உங்கள எங்கயோ பார்த்துருக்கேன்” என்ற ப்ரியா, யோசிக்க, அவரை குழப்பமாய் பார்த்தவள், ‘எனக்கு அப்படி இல்லையே' என்று சைகை செய்தாள்.
“சென்னைல எந்த ஏரியா? எங்க படிச்சீங்க?” என்று ரசிகா கேட்க,
அவள் மீண்டும் வளவனை நோக்க, வளவன் பதில் கூறினான்.
“ஓம்மருமவளுக்குத்தேம் பேச்சு இல்லனு தெரியுதில்ல. இந்தப்பொண்ணும் ஏம்மா மேல மேல பேச்சுக்குடுக்குறா?” என்று திரிபுரா அன்னையிடம் மெல்லமாய் கேட்க,
அவரும் அதிருப்தியாய் முகம் சுருக்கித் தோள்களை குலுக்கிக் கொண்டார்.
“ஏ.. உங்க காலேஜ்ல நான் ஒரு ஆறுமாசம் வர்க் பண்ணேன். அங்கதான் பார்த்திருப்பேன்பா அப்ப” என்று ப்ரியா கூற,
'ஓ' என்று தலையசைத்தவள், ‘சாரி எனக்குத் தெரியலைங்க' என சைகை செய்தாள்.
“இருக்கட்டும்டா” என்று ரசிகா கூற,
“எத்தன மாசந்தாயி?” என்று தெய்வா அவள் மணிவயிற்றைப் பார்த்துக் கேட்டாள்.
மெல்லிய புன்னகையுடன், “எட்டுமா” என்று அவள் கூற,
சிலநிமிடம் அவர்களின் பேச்சு அங்கு ஓடியது.
உணவு உண்ண மறுத்த இருவருக்கும் சிற்றுண்டி கொடுத்து உண்ணவைத்தே அவ்வீட்டார் அனுப்ப, செல்லும் முன் வளவனை அணைத்துக் கொண்ட மித்ரன், “ஈவ்னிங் கால் பண்றேன்” என்று கூறினான்.
சரியென்ற தலையசைப்புடன் அவன் உள்ளே வர, விருந்து ஏற்பாடுகள் துவங்கியது.
சமையலறை சென்றவன், “மைணி மித்ராக்கு சாப்பாடு?” என்க,
“பசிக்கலைங்குறா கொழுந்தரே. இப்பதேம் கேட்டேம்” என்று கூறினாள்.
“ஒழுங்கா உங்காம கொள்ளாம இன்னுங்கூடக் கொஞ்சம் இழுத்துகிடச்சொல்லு” என்று தெய்வா வெடுக்கெனக் கூறி அழுத்துக் கொள்ள, “நாலு இல்ல நாப்பது இழுத்துக்கிட்டாலும் நாந்தேம் தாங்கப்போறேம். ஒங்களுக்கு என்னமா பிரச்சென இப்பத?” என்று கேட்டான்.
ஏற்கனவே கடுப்பில் இருந்தவனுக்கு அன்னையின் பேச்சில் கோபம் வரவும் சட்டெனப் பேசிவிட,
தெய்வா அதிர்ந்துபோய் மகனைப் பார்த்தார்.
“ஏம்லே.. அம்மா ஒருவார்த்த சொல்லிபுடக்கூடாதா? அவோ நல்லதுக்குத்தான சொன்னாவ? என்னத்துக்கு இப்பத ஒனக்கு இம்புட்டு கோவம் வருது?” என்று திரிபுரா கத்த,
“இப்பம் என்னக்கா பிரச்சென?” என்று எரிச்சலாய் கேட்டான்.
“லே வுடு.. நீயு போ” என்று அவனை அமைதி படுத்திய விக்ரமன், “விருந்துக்கு வந்தவியள வச்சுட்டு என்னத்த ஒடக்கிழுக்கீய? போயி சோத்த போடுங்க அவியளுக்கு” என்று கூற,
“ஒருத்தி வந்தாலுந்தாம் வந்தா.. எம்புள்ள எனக்கே இல்லனு ஆச்சுது.. எல்லாம் ஏம் நேரம்லே” என்று கோபமும் ஆற்றாமையுமாய் அழுத்துக் கொண்டு தெய்வா சொன்றார்.
கோபம் கொண்டு ஏதோ பேசச் சென்ற வளவனைத் தடுத்த விக்ரமன், “லே.. வுடு.. வேணுமின்னே ஓம் வாயக் கெளருறாவ. நீயி போ. நாங்கார்த்திட்டக் குடுத்துவிடச் சொல்லுதேம்” என்று கூற,
கண்கள் சிவந்துத் தன் இரட்டையனைப் பார்த்தவன், விடுவிடுவேன படியேறி மேலே சென்றுவிட்டான்.
“ப்ச்.. அந்த புள்ளக்கூட இருடானா மேல போறியாம் பாரு” என்று அழுத்துக் கொண்ட விக்ரமன், “கார்த்தி.. நா வெளம்புதேம் (பரிமாறுறேன்). நீயி போயி அவேனக்கூட்டியா” என்று கூற,
கார்த்திகாவும் மேலே சென்றாள்.
உப்பரிகையில் கோபமும் ஆற்றாமையுமாய் கண்கள் சிவக்க கைப்பிடி கம்பிகளைப் பிடித்துக் கொண்டு இறுகி நின்றிருக்கும் கொழுந்தரின் அருகே வந்த கார்த்திகா, அவன் அருகே கம்பியில் சாய்ந்து நின்றாள்.
அண்ணி வந்திருப்பதை உணர்ந்தவன், அவளுக்குக் காட்டாத வண்ணம் தன் முகம் திருப்பிக் கொள்ள,
“கொழுந்தரே.. என்னாச்சு? ஏம் இம்புட்டு வெசனம்?” என்று கேட்டாள்.
அவன் சிவந்த விழிகளிலிருந்து நீர் வந்துவிட, “ஏம்மைணி இந்த அம்மாவுக்கு அவோள பிடிக்குதில்ல? அக்காவும் அவள என்னமாது சொல்லிட்டே இருக்காவ?” என்று கேட்டான்.
அவளிடம் பதிலில்லை.
“ப்ச்.. அவள வேற பட்டுனு பேசிபுட்டேம். எனக்குதேம் மைணி கெடந்து அடிச்சுகுது. நான் அவள பாப்பேனா, இவியகூட ஒடக்கிழுத்து வச்சுட்டு இருப்பேனா? இப்புடி என்னமும் பேச்சு வரக்கூடாதுனுதேம் அவளுக்கு ஒருவா சோறுகூட நானே ஊட்டிகிடுதேம்னு அவியள வேணாமுங்கேம். நேத்து கல்யாணத்துல எ.. எனக்காவத்தேம் மைணி அவோ அம்புட்டயும் மறச்சுட்டு வந்து சிரிச்சுட்டுருந்தது” என்று ஆற்றாமையாய் அவன் பொறிய, அவன் நிலை கார்த்திகாவிற்கு நன்கு புரிந்தது.
‘மூட்ஸ்விங்ஸ்’ எல்லாம் பெண்களுக்கு மட்டுமானதா என்ன? பலவகையான எண்ணங்களும், குழப்பங்களும், உணர்வுகளும் ஒன்றாய் தாக்கி, அதை தாங்க முடியாமல், தாங்க வேண்டிய அவசியத்தைப் புறக்கணிக்க இயலாமல் தவிக்கும் ஆடவர்களின் நிலையும்தான் எத்தனை பரிதாபத்திற்கு உரியவை?!
குழந்தை போல் கலங்கி நிற்பவனைத் தன் புறம் திருப்பிய கார்த்திகா, “ஒன்னுமில்ல கொழுந்தரே.. எல்லாம் இன்னும் கொஞ்ச மாசந்தேம்.. சுளுவா சரியாப்போவும். நீங்க எதுவும் யோசிக்காம நிம்மதியா விடுங்க” எனக் கூறி, “நாங்க இம்புட்டுப்பேரு இருக்கோம்ல? ஒங்களுக்கு ஒன்னுனா விட்டுபுடவமா? நெறயா மனசுல போட்டு தவிக்காதீய கொழுந்தரே.. மனச லேசா வச்சுகிடுவ. அதுதேம் ஒங்களுக்கும் நல்லது” என்று ஆறுதலாய் பேசினாள்.
ஒரு பெருமூச்சு அவன் இழுத்துவிட, “ஏங்கொழுந்தரு இப்புடி அழுதா நல்லாவே இல்ல. எம்புள்ள இப்புடி ஒங்கள பாத்தா, சித்தா கரிச்சு சித்தா கரிச்சுனு ஊரயே கூட்டிபுடுவா ஆமா” என்க,
லேசாய் புன்னகைத்தான்.
தான் துவழும் நேரம் தன்னைத் தேற்ற, இவ்வீட்டில் பலர் உள்ளனர் என்ற நிறைவோடு புன்னகைத்தவன், “தேங்ஸ் மைணி” என்றவனாய் கீழே அறைக்கு செல்ல,
அவனை முறைத்துப் பார்த்த சங்கமித்ரா, ‘உங்க மேல எனக்கு ஒன்னும் கோவமெல்லாம் இல்ல. எனக்காகத்தான் நீங்க கோபப்பட்டுப் பேசினீங்கனு புரியாதவளும் நான் இல்ல. எதுக்கு என்னையத் திட்டினதுலருந்து நீங்க முகத்தைத் தொங்கப்போட்டுகிட்டு இருக்கீங்க? நான் வந்து சமாதானம் செய்யனுமா? அடிதான் விழும்' என்று படபடப்பாய் சைகை செய்ய,
அவளை இழுத்து அணைத்துக் கொண்டவன், கண்ணீருடன், “லவ் யூடி மித்ரா” என்று உளமாரக் கூறினான்.
Comments
Post a Comment