திருப்பம்-89

 திருப்பம்-89



அந்த மாட்டுக்கொட்டகையில் பெரும் சீற்றத்துடன் அமர்ந்திருந்தான் வளவன். அவனால் தன் கோபத்தைக் கட்டுப்படுத்த இயலாத நிலையில், பெருமூச்சு விட்டுத் தன்னை சமன் செய்ய முயற்சித்துக் கொண்டிருந்தவனுக்கு, உள்ளம் கனன்று கொண்டிருந்தது.


அவன் காலடியில் அமர்ந்திருந்த நந்தி, மெல்ல அவன் தொடையில் தன் தலை வைத்து வருட, கீழே குனிந்துப் பார்த்தான்.


நந்தியைப் பார்த்ததும், கோபத்தை மீறி கண்களில் நீர் கோர்க்க, கைகள் நடுநடுங்க, அவன் தலைகோதியவன், “என்னால ஒனக்கும் பிரச்செனயாவப் பாத்துச்சுல?” என்று கேட்டான்.


அவன் கூற்றில் அம்மாட்டிற்கே கோவம் வந்ததுபோல்.


“ம்மா..” என்று சத்தம் எழுப்பி, அவன் தொடையில் அது முட்ட,


அதன் நெற்றியோடு தன் நொற்றி முட்டி அமர்ந்தான்.


நந்தியின் சப்தத்தில் கருப்பன், முனியன், சுடலையும் வெளியே வந்து அவர்களை சுற்றி அமர, அம்சா திலகா, லச்சுவும் வந்து எட்டிப் பார்த்தனர்.


மருது துள்ளிக் கொண்டு வந்து அவன் மடியிலேயே தலை வைக்க, நந்தி மருதை தள்ளி அமர்த்தும்படி முட்டி நகர்த்தினான்.


கண்கள் கலங்கி இதழ் புன்னகைக்கப் பார்த்த வளவன், “ஓம் புள்ள தானம்லே? செத்த படுத்துட்டுப் போவட்டுமே?” என்க,


நந்திக்கும் அவன் பேசியது புரிந்தது போலும்.


அமைதியாய் தலை சாய்த்துப் படுத்துக் கொண்டான்.


முந்தைய நாள் காலை நடந்த சம்பவம் அவன் மனக்கண்ணில் ஓடி மறைந்தது.


வடிவேலை பூந்தோட்டம் பார்த்துவர அனுப்பிய வளவன், வேலைக்கு செல்ல மனமில்லாமல் வீட்டிலேயே படுத்திருக்க, மனம் எதையோ வழியுறித்தியதில் நந்தியைச் சந்தித்து வரலாம் என்று எழுந்தான்.


அறைக்குள் நுழைந்தவன், கட்டிலைப் பிடித்து அவள் மெல்ல எழுந்து நின்று, சில நிமிட இடைவெளிக்குப் பின் அமர்வதைப் பார்த்து, “மித்ரா” என அழைக்க,


அவனைப் பார்த்து புன்னகைத்தவள், ‘டாக்டர் அப்ப அப்ப எழுந்து நிற்குறது, நடக்க ட்ரை பண்ணுறதுனு செய்ய சொன்னாங்க’ என்பதை சைகை செய்ய, மெல்ல தலையசைத்தான்.


கடந்த நாள் மருத்துவமனை சென்றபோது, கட்டை முழுமையாய் பிரித்திருந்தனர். முற்றிலும் குணமாகவில்லை தான் எனினும் சக்கர நாற்காலி இல்லாமல் நடக்கப் பழகத் துவங்கும்படி மருத்துவர் கூறியிருக்க, சீக்கிரம் தனது கால் சரியாகிவிடும் என்று உற்சாகம் கொண்டாள் பெண்.


தன் கைகளைத் தட்டி அவன் கவனத்தைத் தன் புறம் திருப்பியவள், ‘கால் சரியாகிட்டா மாடிக்கு போயிடலாம்ல?’ என்று ஆர்வமாய் கேட்க,


“இப்பத்தேம் எழுந்து நிக்குறவ. இன்னும் நடக்கோனுஞ் செய்யனுமில்ல? போவம் போவம்” என்றவன், “நாம்போயி நந்திய பாத்துட்டு வாரேம் மித்ரா. என்னமாது வேணுமின்னா மெசேஜ் போடு” என்றுவிட்டு சென்றான்.


ஏனோ மனம் சரியில்லாமல் உணர்ந்தவன், வயலில் இறங்கி மெல்ல நடக்க,


நந்தி அலறலாய் கத்தும் சப்தம் கேட்டது. கூடவே மற்ற மாடுகளின் சலசலப்பு ஓசையும் கேட்க, ‘நந்தி’ என்று மனதோடு பதறியவனாய் விரைந்து ஓடினான்.


அவன் கொட்டகையை நெருங்கும் நேரம், நந்தி யாரோ ஒரு ஆடவனை முட்டி வெளியே தள்ளிவிட, 


வாசலில் வந்து விழுந்தவனைப் பார்த்து, “லே யாருலே நீயு” என்று கத்தியபடி ஓடி வந்தான்.


அதற்குள் பதறியெழுந்தவன், வேகமாய் ஓடிவிட, “வேய்.. யாருன்னு கேக்கேம்..” என்று அவனைத் துறத்தியவனால் அவனை பிடிக்க இயலவில்லை.


மூச்சுவாங்க முட்டுகளில் கரம் ஊன்றி குனிந்து நின்றவன், நந்தியின் சப்தம் கேட்கவும் மீண்டும் பதறி கொட்டகைக்கு வர, மாடுகள் சற்றே மிரண்டிருந்தனர்.


சுற்றி முற்றிப் பார்த்தவன், கன்றுகளைத் தடவிக் கொடுத்து, “ஒன்னுமில்லலே.. எவனோ களவாணிப்பய போலாருக்கு” என்க,


அவனை வந்து முட்டி அழைத்தான் முனியவன்.


முனியவன் அழைப்பிற்குத் திரும்பியவன் காலடியில், எதையோ முனியவன் தள்ளிவிட, அதை புருவம் சுருங்க எடுத்துப் பார்த்தவன், “ஊசியா?” என்று புருவம் சுருக்கினான்.


நொடியில் நடக்கவிருந்த விபரீதம் புரிந்தவன், ‘முருகா’ என்று எண்ணிக் கொண்டு வேகவேகமாய் மற்ற மாடுகளை பார்வையிட்டு தாங்கள் வாடிக்கையாய் அழைக்கும் மாட்டு மருத்தவரை வரவழைத்தான்.


“இந்த ஊசில இருக்குறது என்னனு பாத்து சொல்லுவண்ணே. அப்புடியே நம்ம மாடுவளுக்குலாம் இது போடலைலங்குறதயும் பாத்து சொல்லுவ” என்க,


“சரிம்லே. பாக்கேம்” என்ற மருத்துவரும், வேண்டிய மாதிரிகளை எடுத்துக் கொண்டு சென்றார்.


அனைத்து பரிசோதனையும் முடித்து இதோ சற்றுமுன் தான் அவர் அழைப்பு விடுத்தது.


“இந்த ஊசில இருந்தது பேசிலஸ் ஆந்திராக்ஸ்னு ஒரு பாக்டீரியா வளவா. மாட்டுக்கு வர்ற நோய் ஆந்திராக்ஸ உருவாக்கக்கூடியது. மோசமான‌ நோய்லே. நல்லவேள நம்மூட்டு மாடுகளுக்குலேம் போடல. நல்ல நேரமுனு சாமிய கும்பிட்டுக்க.‌ ஆரு என்னனு பாத்து விசாரி” என்று கூற,


வளவனுக்கு நெஞ்சம் பதறித் துடித்தது.


தங்கள் வீட்டு உறுப்பினர்களுள் ஒருவராய், உறவாய் பாவித்துவரும் மாடுகளை சோதிக்கக் கிருமியைச் செழுத்த வந்திருக்கின்றான் என்று நினைக்கவே கோபத்தில் உள்ளம் கனன்றது அவனுக்கு.


மாடுகளைத் தடவிக் கொடுத்த வளவன், “இதுக்குமேலயும் அவேன சும்மா வுடுறதா இல்லலே. ஏந்தம்பிய மேல கைய வப்பானாக்கும்? இந்த வளவேம் யாருனு காட்டுதேம்” என்று கோபமாய் உறுமியபடி அவன் எழ, அவன் அலைபேசி ஒலித்தது.


அழைப்பது வடிவேல் என்பதைக் கண்டு உடனே ஏற்றவன், “சொல்லுலே” என்க,


“லேய்.. காலயில ஏத்தத்துக்கு சரக்கு அனுப்பிவிட்டம்ல? லாரிய மோத ஆளு வுட்டுருக்கானுவ. நம்ம லாரி அண்ணே வண்டிய ஒடிச்சு திருப்பப் போயி தப்பிச்சிட்டாவ. ஆனா லேசா அடி பட்டிருக்கு. ஆஸ்பத்ரீலதேம் இருக்கேம் நானு. நீ வா” என்று படபடப்பாய் கூறினான்.


“என்னம்லே சொல்ற?” என்ற அதிர்ந்த வளவன், “இரும்லே நான் வாரேம்” எனக்கூறி விரைந்து புறப்பட்டான்.


வடிவேல் கூறிய மருத்துவமனையை அவன் அடைய, சரக்கு வண்டியை ஓட்டிச் சென்ற அவர்கள் வேலையாள், கையிலும் நெற்றியிலும் சின்னக் கட்டுடன் அமர்ந்திருந்தான்.


மருத்துவரிடம் பேசி மருந்துகளையும் வாங்கிக் கொண்டு வடிவேல் அவ்விடம் வர, “அண்ணே..” என்று பதறி நெருங்கிய வளவன், “என்னனே அடி பலமா? லேய் வேலா என்னம்லே ஆச்சு?” என்று கேட்டான்.


“எல்லாம் இந்த தங்கப்பாண்டி ஆளுவதாம்லே.. சரக்கு வண்டிய ஓய்க்க அடிக்கப் பாத்துருக்கானுவ. அண்ணே ஒடிச்சு சடாருனு வண்டிய இழுக்கவும், தப்பிட்டாவ. சத்தத்துல முன்ன பின்ன போன வண்டியெல்லாம் நிக்கவும் பயந்து போயிட்டியாம். கையிலயும் நெத்திலயும் சின்ன அடி. மருந்து வச்சு கட்டிருக்காவ” என்று வடிவேல் கூற,


“அண்ணே.. மன்னிச்சுடுங்க அண்ணே” என்று வளவன் அவரிடம் மன்னிப்பு வேண்டினான்.


“அய்ய மக்கா.. நீங்க என்னம்லே பண்ணுவீய? எனக்கு ஒன்னுமில்ல நல்லாத்தேம் இருக்கேம். சின்ன அடிதேம். சுளுவா சரியாப்போவும்” என்று அவர்களுக்கு அவர் ஆறுதல் கூற, அவரைத் தாங்களே வீட்டில் கொண்டு சென்று விட்டவர்கள், நேரே மித்ரன் வீட்டிற்கு சென்றுவிட்டனர்.


வடிவேல் வளவன் மற்றும் மித்ரன் அமர்ந்து தீவிரமாக உரையாடிக் கொண்டிருந்தனர்.


"பயங்கர லாஸ்ல போயிருக்கும் அண்ணே. ஆளு விட்டு நம்ம சரக்கு வண்டிய அடிக்கப் பாத்துருக்கானுவ. சாமான் செட்டுப் போனாகூட சரிங்கலாம் அண்ணே. வண்டி ஓட்டினவியலுக்குலாம் என்னமாது ஆயிருந்தா என்னச் செய்ய? அவேம் ஆட்டந்தாங்கல அண்ணே. என்னமாது செய்யனும்" என்று வடிவேல் கூற,


"பாவம் அந்த அண்ணே வண்டிய ஒடிச்சுத் திருப்பப்போயி தப்பிச்சுட்டாவ. இல்லாட்டி என்னவாயிருக்கும்?" என்ற வளவன், “நேத்து எந்தம்பியள வேற கொல்லப்பாத்திருக்கியாம் அண்ணே” என்று கூறினான்.


வளவனை அதிர்ந்து பார்த்த வடிவேல், “இது எப்பம்லே?” என்று கேட்க,


“நேத்துதாம்லே” என்றவன் நடந்த கதைகளைக் கூறி முடித்தான்.


"இவன இதுக்கும் மேல விட்டு வைக்குறது பிரச்சினை தான் போல. நாம டெரேக்டாவே இறங்கிடுவோம்டா. ஒரு கம்பிலைன்ட் லெட்டர் எழுதி குடுங்க. சட்டம் யார் யாருக்கோ வலையுது. உங்களப்போல ஆளுங்களுக்காக வலைஞ்சா குத்தமாயிட்பபோகுதா? நான் பாத்துக்குறேன். நாளைக்கு மார்னிங் ப்ரொசீட் பண்ணிடலாம். இப்ப ஒரு ஆஃபீஷியல் மீட்டிங் இருக்கு. வர நைட் ஆகும். நீங்க ஸ்டேஷன் போய் கம்பிலைன் லெட்டர் மட்டும் குடுத்துட்டுப் போங்க" என்று மித்ரன் கூற,


சரியென்று இருவரும் தலையசைத்தனர்.


சரியாய் அப்போதென்று பார்த்து மித்ரன் அலைபேசி ஒலிக்க, புது எண் என்பதை புருவம் சுருங்கப் பார்த்தபடி ஏற்று காதில் வைத்தான்.


எதிர்முனையில் கேட்ட குரலில், அவன் முகம் இறுக்கம் பெற, நண்பர்கள் இருவரும் ஏதோ சரியில்லை என்று புரிந்தவர்களாய் அவனை நோக்கினர்.


தனது அலைபேசியைக் காதிலிருத்து எடுத்த மித்ரன் ஒலிபெருக்கியில் போட, "நல்லா கேட்டுக்கப் போலீசு.. ஓம் பொண்டாட்டி எங்க கஸ்டடில.. ஒழுங்கு மரியாதையா எங்க அண்ணே வழியிலருந்து பின்னுக்குப் போயிடு. என்னமாது சலம்பின, ஒரே போடு போட்டு வீசிட்டுப் போயிட்டே இருப்பம். மாசமா வேற இருக்குது" என்ற பேச்சைக் கேட்டு நண்பர்கள் இருவரும் அதிர்ந்து எழுந்தனர்.


"ஒழுங்கா நீயே ஒனக்கு டிரான்ஸ்பர எழுதிட்டு மூட்ட முடிச்ச கட்டிகிடு. அப்பத்தேம் ஒனக்கும் ஓங்குடும்பத்துக்கும் நல்லது" என்றவன் அழைப்பைத் துண்டிக்க,


"அய்யோ அண்ணே.. மைணியத் தூக்கிட்டானுவளா?" என்று வடிவேல் பதட்டமாய் கேட்டான்.


"அண்ணே.. மைணிக்குக் கூப்டுப்பாருவ?" என்று பதறிய வளவன், "அண்ணே.. ம..மைணி முழுகாம வேற இருக்காவ. எதும் ரிஸ்க் எடுக்காதீய" என்க,


தனது அலைபேசியை எடுத்து 'தூரன்' என்ற பெயர் கொண்ட எண்ணிற்கு அழைப்பு விடுத்தான்.


அழைப்பை ஏற்றதும், "ஹாய் அண்ணா.. எப்படியிருக்கீங்க? ஃபோன் போட்டே ரொம்ப நாள் ஆச்சு?" என்ற பெண்ணின் குரல் கேட்க,


"ஹாய்டா மீனு.. எப்படியிருக்க? குட்டி சேம்ப் என்ன சொல்றான்?" என்று சாவகாசமாய் மித்ரன் நலம் விசாரித்தான்.


"வெளிய சுத்துர சேம்ப் அவங்க அப்பா, அன்ட் மாமா போல போலீஸ் ஆகப்போறேன்னு சொல்றான். உள்ள இருக்குற சேம்ப் ஃபுட் பால் பிளேயர்தான் போல. பயங்கர உதைதான்" என்று சிரித்த மீனாட்சி, "அங்க மேடம் வைத்துக்குள்ள உள்ள குட்டிகள் என்ன சொல்றாங்க?" என்று கேட்க,


"அதேகதைதான் இங்க. ஃபிரெண்ட்ஸோட புள்ளைக ப்ரெண்ட்ஸ் ஆகப்போறதால இப்பயே ஃபிரெண்ட்ஷூப் கோல் கிரியேட் பண்ணி உதைக்குறாங்க போல" என்று சிரித்த மித்ரன், "செந்தூரன் எங்கடா?" என்று கேட்டான்.


"தம்பியோட தோட்டத்துல இருக்காங்க அண்ணா. இருங்க தரேன்" என்ற மீனாட்சி, அலைபேசியை அவளது கணவன், மற்றும் ரசிகப்ரியாவின் உற்றத் தோழனான செந்தூரன் ஐ.பீ.எஸ்-இடம் தந்தாள்.


"ஹலோ சார்.. எப்படி இருக்கீங்க?" என்று தூரன் உற்சாகமாய் வினவ,


"நல்லா இருக்கேன் தூரன். எனக்கு ஹெல்ப் வேணுமே" என்று கூறினான்.


"என்னாச்சு சார்? என்ன ஹெல்ப்?" என்று தூரன் கேட்க,


"இங்க ஒரு அடாவடி கும்பல் ஒரு பொண்ண கடத்திட்டாங்க. நான் ஒரு மீட்டிங் விஷயமா போறேன். நீ கொஞ்சம் ட்ரேஸ் பண்ணி என்னனு பார்க்க முடியுமா? நெல்லைலதானே இருக்க?" என்றான்.


"வாட்?" என்று எழுந்தவன், "பொண்ணு டீடைல்ஸ் அனுப்புங்க சார். கடத்தினது யாரு என்னனு தெரியுமா?" என்று கேட்க,


"கடத்தினது கடத்தப்பட்டதுலாம் யாருனு தெரியும். நீ பதட்டப்படாத" என்ற மித்ரன், தகவல்களை அவனுக்கு அனுப்பினான்.


கடத்தப்பட்ட பெண்ணின் புகைப்படத்தைப் பார்த்த தூரன், "இந்தப் பொண்ணதானா சார்?" என்று கேட்க,


"இந்த பொண்ணேதான். எனக்கு அவசரமான மீட்டிங் இருக்கு. அதான் எதுக்கும் ஒரு சேஃப்டிக்கு நீயே ஹான்டில் பண்ணுனு உனக்குக் கூப்டேன்" என்றான்.


இவர்கள் சம்பாஷனைகளை அதிர்வும் குழப்பமுமாய் வளவனும் வடிவேலும் நோக்க,


"டைம் வேஸ்ட் சார். பத்து நிமிஷம் போனா அவனுங்களே அனுப்பி வைக்கப் போறானுங்க" என்று தூரன் கூறினான்.


"உண்மைதான்.. இருந்தாலும் உள்ள என் ஜூனியர்ஸ் வேற இருக்காங்களே.. அதான்" என்று மித்ரன் கூற,


"ஓகே ஆஃபிசர். நான் போய் என்னனு பாக்குறேன்" என்ற தூரன் அழைப்பைத் துண்டித்தான்.


"அண்ணே என்ன அண்ணே நடக்குது இங்கன? மைணிய கடத்திருக்கானுவ, ஒரு பதட்டமில்ல, பயமில்ல, மீட்டிங் போவப்போறேமுங்கீய?" என்று வளவன் கேட்க,


"அவனுங்கட்ட உன் அண்ணி மாட்டலைடா. உன் அண்ணிகிட்டத்தான் அவனுங்க மாட்டீருக்கானுங்க. அவ யாருனு தெரியாம தூக்கிட்டானுங்க. நீங்க போய் கம்பிலைன்ட் லெட்டர் எழுதிகுடுத்துட்டு வீட்டுக்குப் போங்க. நான் நாளைக்குக் கூப்பிடுறேன்" என்ற மித்ரன், புன்னகையாய் கண்ணடித்துவிட்டு எழுந்தான்.


“அண்ணே அண்ணே.. அந்த இன்னொரு போலீஸு நம்பராது தாங்க. எங்க மன ஆறுதலுக்காது நாங்க போயி பாக்கோம்” என்று வடிவேல் கூற,


“ஏன்டா கேட்க மாட்றீங்க? அதெல்லாம் அவள..” என்று முடிக்கும் முன், “எல்லாம் இருக்கட்டும். மிண்டாம நம்பரத்தாங்க” என்றனர்.


அதில் சிரித்துக் கொண்டவனும் செந்தூரனின் எண்ணைக் கொடுத்துவிட்டுச் சென்றான்.


Comments

Popular posts from this blog

திருப்பம் -01

திருப்பம்-03

திருப்பம் -02