திருப்பம்-90
திருப்பம்-90
வளவனும் வடிவேலும் பதட்டத்துடன் தங்கள் வண்டியில் அமர்ந்தபடி செந்தூரனுக்கு அழைப்பு விடுத்துக் காத்திருக்க, அழைப்பை ஏற்ற செந்தூரன், “ஹலோ யாரு?” என்று கம்பீரமாய் கேட்டான்.
“ஹலோ சார். நாங்க மித்ரா அண்ணே கூட்டுக்காரவோ” என்று வளவன் கூற,
“ஆங் நீங்க தானா? சார் இப்பத்தான் சொன்னாங்க. நான் பக்கத்துல வந்துட்டேன். லோகேஷன் அனுப்புறேன் வாங்க” என்று சிரிப்போடு கூறினான்.
ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்துக் கொண்ட நண்பர்கள் சரியென்று அழைப்பைத் துண்டிக்க, செந்தூரன் வரவேண்டிய இடத்தினை அனுப்பி வைத்தான்.
“ஏம்லே.. இது காட்டுக்குள்ளார இருக்க அவேனோட வீடுதானம்லே?” என்று வடிவேல் கேட்க,
“அதேதேம்..” என்ற வளவன் வண்டியைத் திருகினான்.
சில நிமிடங்களில் காட்டை அடைந்த இருவரும் செந்தூரனுக்கு அழைப்பு விடுத்தனர்.
“ஐய்யய்யே.. இவனுங்க ரொம்ப பதறுறானுங்களே” என்று எண்ணிய செந்தூரன், “வந்துட்டேன் வந்துட்டேன்பா. பக்கத்துல வந்துட்டேன்” என்று கூற,
“நாங்க காட்டுக்கு வந்துட்டோம் சார். உள்ள போவல. நீங்க வாரீயலானு கேக்கத்தேம் கூப்டேம்” என்று வடிவேல் கூற,
“நீங்க தனியா போக வேணாம். நான் வரேன்” என்று கூறினான்.
சில நிமிடங்களில் செந்தூரன் அவ்விடம் வந்துசேர, அவன் தோற்றம் கொண்டு அனுமானித்தபடி கையசைத்தனர்.
அவர்கள் அருகே நெருங்கிய செந்தூரன் தன் கரம் நீட்டி, “ஹாய்.. நான் செந்தூரன்” என்க,
'இப்ப இதெல்லாம் தேவையாயா?’ என்று மனதோடு பதறிய வடிவேல், “வணக்கமுங்க சார். உள்ள போவமா?” என்று கேட்டான்.
அதில் சிரித்துக் கொண்ட செந்தூரன் தலையசைக்க, இருவரும் காட்டிற்குள் நுழைந்தனர்.
வளவனுக்கும் வடிவேலுக்கும் அவ்விடம் தெரிந்த இடம் தான் என்பதால் வேகமாகவே நடந்தனர்.
அவ்வீட்டை அவர்கள் நெருங்கிய நேரம் “ஆ….” என்று ஒரு ஆடவன் அலரும் சப்தம் கேட்கவும்,
வளவனும் வடிவேலும் அதில் அதிர்ந்துபோக,
'ரைட்டு சுபம் போட்டுட்டா போல' என்று செந்தூரன் நினைத்துக் கொண்டான்.
மூவருமாக அவ்வீட்டை அடைய,
“ஆ ஆ.. ஆ.. அய்யோ ஏ.. என்னடி பண்ண?” என்று அவன் கத்த,
“ ஏ.. ஏம்லே அனகத்தக்கூட்டுற? கத்தாதிருலே.. ஆரும் வந்துடப்போறாவ” என்று இன்னொருவனின் குரல் கேட்டது.
“ஆ.. லேய் வலிக்கிடா” என்று அவன் கதற,
“என்னம்லே பண்ண அவேன?” என்று கத்தியவனும் அடுத்த ஐந்தாம் நிமிடம் கத்தத் துவங்கினான்.
“சார் வாங்க உள்ள போலாம்” என்று வளவன் அழைக்க,
“அட இருப்பா கதவ திறக்கட்டும்” என்று செந்தூரன் கூறினான்.
“அவியளா கதவ தெறப்பாவளா சார்? உள்ள என்ன நடக்கோ தெரியலியே” என்று வடிவேல் கூற,
வீட்டுக்கதவைத் திறந்துக் கொண்டு வெளியே வந்தாள், ரசிகப்ரியா.
அவளைக் கண்டு புன்னகைத்த செந்தூரன், “இதோ திறந்துடுச்சுல?” என்றபடி செல்ல,
அவனைக் கண்டு, “ஏ செந்தூரா..” என்று உற்சாகமாய் அழைத்தவள் வந்து அணைத்துக் கொண்டாள்.
“ ஏ ஏ பாத்துடி” என்றவன், அவளை விடுத்து, “எப்படியிருக்க?” என்று கேட்க,
“எனக்கென்னடா குறை?” என்றவள் அவன் வயிற்றில் குத்தி, “நீதான் ஃபோனே பண்ணலை ரெண்டு நாளா. மீனுக்கு கால் பண்ண, அய்யோ மேம் அவர் வீட்டு பக்கம் வந்தே ரெண்டு நாள் ஆகுது. மாசமாருக்குற பொண்டாட்டி வீட்ல இருக்கானு அக்கறையே இல்லை. ஏதோ என் மாமனார் என் துணைக்கு இருந்தார் பாவம்னு என்கிட்ட புலம்புறா” என்று வேகமாய் பேசினாள்.
“ஏ ஏ மெல்ல பேசுடி” என்றபடி உள்ளே எட்டிப் பார்த்தவன், ‘முடிச்சுட்டியா?’ என்று சைகை செய்ய,
“அவருக்குத்தான்டா ஃபோன் போடலாம்னு வந்தேன். எந்திரிக்க முடியாது. அவர்வந்தா எழுப்பலாம்னு பாத்தேன். உன்னை அனுப்பி விட்டிருக்காரா? இருக்கட்டும் இருக்கட்டும். என் மேலயும் அக்கறையில்லை, வைத்துளருக்குற புள்ளைக மேலயும் அக்கறையில்லை. பாத்துக்குறேன்” என்று கோபம் போல் பேசினாள்.
“அதைவிடு.. உள்ள இருக்குறவங்க மேலயும் அக்கறையில்ல பாரு” என்று அவன் சிரிக்க, அவன் புஜத்தில் அடித்தபடி திரும்பியவள், “ஏ என்ன இவங்களையும் கூட்டிட்டு வந்திருக்க?” என்று கேட்டாள்.
“நான் கூட்டிட்டு வரலை. உன்னைப் பற்றித் தெரியாம இவங்கதான் பயந்துட்டு வந்தாங்க” என்று ஏதோ நகைச்சுவை கூறியதைப் போல் அவன் இன்னும் சிரிக்க,
அவன் தலையில் குட்டியவள், “அவங்களுக்காது அக்கறை இருக்கே. புருஷனுக்கும் அக்கறையில்லை, சின்ன புள்ளையிலருந்து வளர்த்த நண்பனுக்கும் அக்கறையில்லை” என்றாள்.
அவர்கள் இருவரையும் கையசைத்து அழைத்த செந்தூரன், “இதுக்குத்தான் சொன்னேன். உங்களுக்குத்தான் வீண் டென்ஷனும் அழைச்சலும்னு” எனக்கூறி, “உள்ள எத்தனைப் பேரு ப்ரீ?” என்று கேட்க,
“ரெண்டு தான்டா. பொண்ணு, ப்ளஸ் பிரெக்னென்ட் வேறனு பலத்தப் பாதுகாப்பு வைக்கலை போல” என்று கூறினாள்.
உள்ளே எட்டிப் பார்த்த வடிவேல், “மைணி.. என்னாச்சு அவனுவளுக்கு?” என்று கேட்க,
லேசாய் சிரித்தவள், “நரம்பு புடிச்சுக்குச்சு” என்றாள்.
“நரம்பு புடிச்சுகுச்சா?” என்று வளவன் கேட்க,
“மேடம் கராத்தே கிட். அதுவுமில்லாம வர்மகலையும் தெரியும். உங்களுக்குத் தெரியாதே.. எங்க சார் இவங்கமேல லவ்ஸ்ல விழுந்ததே இவங்க ஆக்ஷன் சீன் பார்த்துதான்” என்று செந்தூரன் கூறினான்.
நண்பர்கள் இருவருமே அவளை வியந்து பார்த்தனர்.
“சாருக்கு எப்பவுமே இவள அனுப்ப பயமே இருக்காது. நைட்டு பன்னிரண்டு மணிக்குக்கூட தைரியமா அனுப்பலாம்னு சொல்வாங்க. இந்த மங்கியோட கலை அப்படி” என்று செந்தூரன் சிரிக்க,
“பக்கி நான் மங்கியாடா?” என்று அவனை அடித்தாள்.
“ஆ.. அடியே.. உன் திரமைய என்கிட்ட இறக்காதடி. அல்ரெடி என் பொண்டாட்டி மிதிச்சு ஒருபக்கமா வாங்கிகிச்சு” என்று அவன் கூற,
பக்கென்று சிரித்தவள், “இவன் என்னோட சைல்ட்வுட் பிரெண்ட் செந்தூரன்” என்று நண்பர்களிடம் கூறினாள்.
“இப்ப உள்ள இருக்குறவியள என்னச் செய்ய?” என்று வடிவேல் கேட்க,
“அவனுங்க வலிவிட்டு எழுந்திரிக்க அரைமணி நேரமாது ஆகும். நீங்க எதும் பண்ணப் போறீங்களா?” என்று ரசிகா கேட்டாள்.
“கஸ்டடில எடுக்கனும்லமா? கடத்திட்டு வந்திருக்கானுங்கள்ல? இந்த ஏரியா போலீஸ வரச்சொல்லனும்” என்று கூறிய செந்தூரன், “சார் சொன்னாங்க. நீங்களும் அப்படியே கம்பிலைன் லெட்டர் எழுதி குடுத்துட்டு வீட்டுக்குப் போங்க. நான் இவளை வீட்ல விட்டுட்டு கிளம்பிடுறேன். நைஸ் மீட்டிங் யூ போத். சார் இருக்கும்போது என் உதவித் தேவையாருக்காது. பட் தேவைப்பட்டா தயங்காம கூப்பிடுங்க” என்று கூற,
“ரொம்ப நன்றிங் சார்” என்றனர்.
அதன்படி அப்பகுதி காவலர்களை வரவழைத்து, ரசிகப்ரியாவிடமிருந்து ஒரு புகாரும், வளவன் மற்றும் வடிவேல் பக்கமிருந்து ஒரு புகாரும் கொடுக்கப்பட்டது.
நன்றி கூறி, ப்ரியாவுக்கு பத்திரம் கூறிய நண்பர்கள் புறப்பட,
“மனிதம் பாரு ப்ரீ.. ரொம்ப மாசம் கழிச்சு இப்படி நல்ல மனசெல்லாம் பாக்குறேன். ரொம்பவே பதறிட்டாங்க” என்ற செந்தூரன் அவளை வீட்டில் கொண்டு சேர்த்துவிட்டு, புறப்பட்டான்.
வடிவேல் வீட்டை வந்தடைந்த வளவன், “உசுரே போச்சுதுலே” என்க,
“ம்ம்.. ரொம்ப வெறயலா போச்சுலே” என்றான்.
“ஒரு நாளுல எம்புட்டு பாரு” என்று பெருமூச்சு விட்டவன், “லேய் கொட்டாக்கு ஆளு போடுவமா?” என்க,
“அதேம் நம்ம நந்தி இருக்கியாம்ல? அவேன மீறி ஒருத்தவ வந்துபுட முடியுமா? குத்தி கிழிச்சுப்புட மாட்டியானா? நீயு போவாமருந்திருந்தா தொங்கவிட்டிருப்பியான்” என்று வடிவேல் கூறினான்.
“சரிதாம்லே.. ஊசிய தெரியாது மத்தவிய மிதிச்சு காச்ச கீச்ச வந்து படுத்துறுந்தா தாங்க முடியுமா சொல்லு. அந்த டாக்டரு சொல்லி கேட்டதுல நெஞ்செல்லாம் அடச்சுடுச்சுலே. பதட்டமாவே வருது.. பேசாட்டு நாம்போயி நைட்டு கொட்டாலயே படுத்துகிடவா?” என்று வளவன் கேட்க,
“ஏம்லே தங்கபுள்ளய தனியா விட்டுப்போறியாக்கும்? முடியாத புள்ளைய இட்டுகிட்டுப் போனனு தெரிஞ்சுது சவட்டிபுடுவேம். என்னமாது சலம்பாம போயி படு. அதேம் கம்பிலைன் கொடுத்தாச்சுல? இதுக்கு மேல அவேம் ஒன்னுத்தயும் ஆக்க முடியாது” என்று வடிவேல் கூறினான்.
வாசலுக்கு வந்த தனலட்சுமி, “அண்ணே.. என்ன வாசலோட நின்னுப்புட்டீய ரெண்டேரும்?” என்று கேட்க,
“சும்மாதேம் சோலி வெசயமா பேசிட்டிருந்தோம் தனம்” என்றான்.
“சரிசரி உள்ளவாங்க” என்று அவள் அழைக்க,
“இஞ்சாருடா.. இது ஏம் கூட்டுக்காரேம் வூடு. அதெல்லாம் ஒங்க அழப்பில்லாது வருவம்” என்று வளவன் நக்கல் போல் கூற,
“ம்க்கும்” என்று முகவாயைத் தோளில் இடித்துக் கொண்டவள், “ரொம்பத்தேம்.. பாத்திடுவண்ணே.. ஒங்க கூட்டுக்காரவ மேல உரிம எனக்குத்தேம் கூடயாக்கும். சும்மா சும்மாலாம் இப்புடி ஒட்டிகிட்டு நிக்குறது, எகன மொகனயா பேசுறதுலாம் வேணாம்” என்றபடி வடிவேலைத் தன் புறம் இழுத்துக் கொண்டாள்.
“ஏட்டி என்னட்டி பண்ணுது?” என்று வடிவேல் சங்கடமாய் நெளிய, வளவன் வாய்விட்டு சிரித்தான்.
‘அய்யோ.. இவியள வச்சுட்டு’ என்று மனதோடு நினைத்தவள், “எங்கண்ணே புரிஞ்சுக்கனுமில்ல?” என்று கேட்க,
“அதெல்லாம் அவேனுக்குப் புரியும். இடுப்புலருந்து கையெடுடி” என்று பல்லைக் கடித்துக் கொண்டு கூறினான்.
அதில் வளவன் இன்னும் இன்னும் சிரிக்க, “ஆனாலும்யா.. ஒங்க அலும்பலு இருக்கே” என்றவள், “அண்ணே காபி தண்ணி குடிக்கியா?” என்று கேட்டாள்.
“இல்லத்தா.. நேரமாச்சு. அவோ காத்துட்டுருப்பான்ன? நாம்போய் வாரேம்” என்று வளவன் கூற,
“சரிண்ணே” என்றாள்.
'எதும் யோசிக்காம போ' என்று நண்பனுக்குக் கண்ணால் அறிவுரைகள் கூறிய வடிவேல், “பாத்து போலே” என்க,
சிறு தலையசைப்புடன் புறப்பட்டான்.
வீட்டை வந்தடைந்தவன், “மைணி அவ சாப்டாளா?” என்று கேட்க,
“எல்லாம் பசியாறியாச்சு சாமி. நீயு ஏம் ஓஞ்சு தெரியுற? வந்து உக்காரு. அவேனுக்குத் தட்டெடுத்து வையுட்டி” என்று தெய்வா கூறினார்.
“இல்லமா பசியில்ல” என்று அவன் கூற,
“என்ன கொழுந்தரே காலயிலருந்து என்னவோ போல இருக்கீய?” என்று கார்த்திகா கேட்டாள்.
“ஐயா எங்கருக்காவ?” என்று அவன் எதிர்கேள்வி கேட்க,
“உள்ளக்க ரூமுலதேம் மக்கா” என்று தெய்வா கூறினான்.
சிறு தலையசைப்புடன் அறைக்கதவைத் தட்டிவிட்டு, அனுமதியுடன் உள் நுழைந்தவன், “ஐயா கொஞ்சம் பேசனும்” என்க,
கட்டிலில் சாய்ந்து அமர்ந்தவர், அவனையும் அமரும்படி கூறி, “என்னம்லே?” என்றார்.
“இந்த தங்கப்பாண்டி இருக்கியாம்ல?” என்று அவன் கேட்க,
“ஆமா அவனுக்கென்ன?” என்று கேட்டார்.
“அவேம்மேல கேசு குடுத்துட்டு வந்துருக்கோம்” என்று அவன் கூற,
“எதுக்குலே மக்கா?” என்று ஆச்சரியமாய் கேட்டார்.
அவன் செய்த, மற்றும் செய்யும் வேலைகளை சுறுக்கமாய் கூறியவன், “இதுக்குமேல போட்டும்னு விடத்தோனல ஐயா. மித்ராவ ஏத்தினது அவிய வண்டிதேம்.. ஆனா வேணுமின்னு பண்ணாப்ல இல்லேனுதேம் அண்ணே சொல்றாவ. இப்ப நம்ம நந்நிக்கு ஊசி போட வந்தது, லாரிய அடிக்கப் பாத்தது, மைணிய கடத்திவச்சதுனு ரொம்ப சலம்புறானுவ. இதுக்குமேல போனா பிடிபடாதுங்க” என்று கூற,
“ஒனக்கு செரினு படுறத செய்யு மக்ளே. ஐயன் கூட இருக்கேம்” என்றார்.
“தெரியும் ஐயா..” என்றவன், வலி கலந்த புன்னகையுடன் எழ,
தானும் எழுந்து அவன் தோளில் அழுத்தமாய் கரம் ஊன்றியவர், “எல்லாம் சரியாபோவும்லே.. கஸ்டகாலமுனு நெனச்சு கடந்துபுடு. எல்லாஞ்சரியாவும்” என்று கூறி அனுப்பினார்.
வெளிய வந்தவனை, “கொழுந்தரே” என்று கார்த்தி உணவுண்ண அழைக்க,
“மைணி ப்ளீஸ்” என்றவன் அறைக்குள் சென்றிருந்தான்.
அறைக்குள் அமர்ந்து கதை படித்துக் கொண்டிருந்த சங்கமித்ரா அவனை நிமிர்ந்து பார்க்க,
அமைதியாய் சென்று உடைமாற்றிவிட்டு வந்து அவளருகே படுத்தான்.
அவன் தோள் தொட்டவள், ‘காலைலருந்து முகம் சரியில்ல. மதியம் என்னனு கேட்டதுக்கும் சொல்ஐலை. சாயிந்தரம் நந்திய பாக்கப்போறேன்னு போயாச்சு. இப்ப இவ்ளோ லேட்டா வரீங்க. சாப்டீங்களா இல்லையா?’ என்று சைகை செய்ய,
“பசிக்கலடி” என்றான்.
அவனைத் தீயாய் முறைத்தவள், ‘போய் பாலாது குடிச்சுட்டு வாங்க' என்று சைகை செய்ய,
“வேண்டாம்டா” என்றான்.
கோபமாய் புத்தகத்தை மூடி வைத்தவள், அருகிருந்த குச்சியின் உபயத்தோடு எழ முறப்பட, “எட்டி என்ன பண்ணுத?” என்றான்.
'உங்களுக்கு பால் கொண்டு வரேன். மதியமும் சரியா சாப்பிடலை நீங்க' என்று முறைத்தபடி அவள் சைகை செய்ய,
“முருகா நீயு ஒக்காரு தாயி. நாம்போயி குடிச்சுட்டு வாரேம்” என்றான்.
அவள் கண்களை உருட்டி மிரட்டலாய் நோக்க,
“ஆத்தா சத்தியமா குடிச்சுட்டுத்தேம் வருவேம் தாயி. ஒக்காரு” என்றவன் வெளியே வந்தான்.
அவன் அரவத்தில் கார்த்திகா நிமிர்ந்து பார்க்க, தன் தலையைக் கோதிக் கொண்டு, “பால் மட்டும் தாங்க மைணி” என்று தரையைப் பார்த்தபடி கேட்டான்.
அவன் உடல் பாவத்தில் பக்கென்று சிரித்தவள், “சொல்றவியச் சொன்னாத்தேம் கேப்பீய” என்று கூறிவிட்டு எழுந்து செல்ல,
'ம்க்கும்.. பெத்தவ நாஞ்சோல்றேம் கேக்கத்தோனல.. அவோ கையசைக்கவும் வந்துட்டியானாம்' என்று மனதோடு தெய்வா பொறிந்து தள்ளினார்.
கார்த்திகா பாலும் ஒரு வாழைப்பழும் கொண்டுவர, இரண்டையும் உண்டு முடித்தவன் அறைக்குச் சென்றான்.
'சாப்டாச்சா?’ என்று அவள் சைகை செய்ய,
“ஆத்தா தாயி.. பாலோட சேத்து ஒரு பழமும் உங்கிட்டேம்” என்று அமர்ந்தான்.
லேசாய் சிரித்தவள், அவன் தலைகோதி, ‘என்னாச்சு?’ என்க,
“சோலில ஒரு ஒடக்கு மித்ரா. அதேம்.. ஒன்னுமில்ல” என்று கூறினான்.
சிறு தலையசைப்புடன் அவன் கன்னத்தில் கரம் வைத்தவள், அவன் மூக்குடன் தன் மூக்குரிக் கொள்ள,
அவள் கன்னங்களைத் தன் கரத்தில் பொத்திக் கொண்டான்.
அவன் செயல் புரிந்தவள் விழிகள் தாமாய் மூடிக்கொள்ள,
மூடிய அவள் விழிகளைப் பார்த்தபடி, தன் மன அமைதியை அவள் இதழில் தேடத் துவங்கினான்.
இதழ் தேடல் கொடுத்தத் தித்திப்பு, இன்னும் தேடத் தூண்டியதாய் உணர்ந்தவன் உணர்வுகளும் பல நாட்கள் கழித்து அவளை நாடியது…
உடல் தேவைக்காக மட்டுமல்லாது மனத்தேவைக்காக அவளை நாடினான்… மனம் கவர்ந்தவன், இதழ் கவர்ந்திருக்க, அவளும் தன் சுயம் இழந்து மோகத்தில் மயங்கியிருந்தாள்…
இருவருக்குமே அந்தத் தருணத்தின் இதம் கொடுக்கும் உணர்வு மனதை மற்றது மறந்து நிம்மதியாய் உணர்த்தியதில், அவர்களையும் மீறி அடுத்த அடிக்குச் சென்றனர்.
அவள் கழுத்தடியில் முகம் புதைத்து அவள் வாசம் உணர்ந்தவன், தன் பிடறி முடியை அவள் பற்றிக் கொண்ட நொடி தான், சுயம் உணர்ந்து திடுக்கிட்டு நகர்ந்தான்.
அவன் விலகலில் அதிர்ந்து கண் விழித்தவளைப் பார்த்தவன் படபடப்பாய், “சாரிடி” என்க,
அவளுக்கு சட்டென ஏதும் புரியவில்லை.
“ஓங் கா.. காலுடி.. மறந்தே போனேம் பாரு” என்று கூறியவன் அவளிடமிருந்து விலகி அமர,
அப்போதுதான் அவளுக்குமே அவள் நிலை புரிந்தது.
பிடிபட்டிருந்த உணர்விலிருந்து மீழ இருவருக்குமே நேரம் தேவைப்பட்டது. நொடிகள் நிமிடங்களாகி, அவர்களை அமைதியில் ஆழ்ந்த,
“சாரி மித்ரா..” என்றான்.
அவன் வாய் பொத்தியவள் இடவலமாய் தலையசைத்து, ‘படுங்க’ என்று சைகை செய்துவிட்டுப் படுத்தாள்.
அவள் உணர்வுகளையும் கலைத்துவிட்ட குற்ற உணர்வில் அவனும், அவன் உணர்வுகளுக்கும், தன் உணர்வுக்கும் மதிப்பழிக்க இயலா நிலையை நொந்த சோகத்தில் அவளுமென அவ்விரவு கணமாய் கணக்கும்படியே விதிக்கப்பட்டது…
Comments
Post a Comment