திருப்பம்-91
திருப்பம்-91
அந்த காவல் நிலையத்தில் இருபக்க ஆட்களும் கூடியிருந்தனர்.
வளவன், வடிவேல், மகா, விக்ரமன், சிவபாதசேகரன், மற்றும் சுயம்புலிங்கம் ஒரு பக்கம் நிற்க,
தங்கப்பாண்டி, அவனது அடியாட்கள் ஒரு பக்கம் நின்றிருந்தனர்.
“லேய் யாருமேல பொய் கேசு தார? இஞ்சாரு.. ஓம் பொண்டாட்டிய அடிச்ச வண்டிய நா எப்பதயோ வித்துபுட்டேம். ஓம்மாட்டுக்கு ஊசி போட்டது, சரக்கு லாரிய அடிச்சதுனு நீயு சொல்ற எதுமே நாம்பண்ணதில்ல” என்று தங்கப்பாண்டி உச்சக்கட்ட கோபத்தில் கூற,
“ஆமா ஆமா.. அதெல்லாம் தோரசார் பண்ணல. ஆளுவிட்டு பண்ணாவ” என்று வடிவேல் நக்கலாய் கூறினான்.
“ஏய்..” என்று தங்கப்பாண்டி கத்த,
“லேய்.. சவட்டிப்புடுவேம். அனக்கத்தக்கூட்டாத. அம்புட்டும் நீதேம் பண்ணனு எங்கட்ட ஆதாரமெல்லாம் இருக்குது” என்று மகா கூறினான்.
“ஆளுவ அம்புட்டுப்பேரயும் கூட்டிகிட்டு வந்துட்டா நீங்களெல்லாம் பெரிய மனுஷவியளோ? இல்லாத குத்தத்தச் சொல்லி என்னைய ஓய்க்கப் பாக்குறீயளாக்கும்?” என்று அவன் கத்த,
தன் பக்கமிருந்த பேசவிருந்தோரைத் தடுத்த வளவன், மித்ரனை நோக்கினான்.
சிறு தலையசைப்புடன் ஒரு கோப்பை எடுத்த மித்ரன், “இது உன் ஃபோன் கால் ஹிஸ்ட்ரி. இது உன் பேங்க் பேலென்ஸ். லாரிய இடிக்க நீ அனுப்பின ஆளுக்கு நீ கால் பண்ண டீடைல்ஸ், அவன் அக்கொன்ட்கு நீ பணம் அனுப்பின பேங்க் டீடைல்ஸ், அப்றம் உன் கால் ரெகார்டிங்” என்று ஒவ்வொரு குறிப்பாகக் காட்டிக் கொண்டே, தனது அலைபேசியில் ஓர் குரல் பதிவை ஓட விட்டான்.
'லாரிய அடிச்சுத் தள்ளிடு. உள்ளருக்க சரக்கு அம்புட்டு சேதமாவோனும். அந்த வளவேன இந்த மொற சும்மாவுடக்கூடாது. இத பாக்க அவிய ஓடுற நேரத்துல அந்த போலீஸ்காரேன் பொஞ்சாதிய தூக்கிடு' என்று தங்கப்பாண்டி பேசியது அக்குரல் பதிவில் ஒலிக்க, அவன் அரண்டுபோய் விழித்தான்.
“அப்றம் இது வளவன் வீட்டு மாட்டுக்கு செழுத்த நீ அனுப்பினியே ஊசி, அதுல இருக்குறது என்ன நோய்க்கான கிரிமிங்குற ரசீது. அப்றம் இது, நீ எந்த இடத்துலருந்து அதை வாங்கினியோ, அதுக்கான ரசீது. அப்புறம் இது..” என்றவன் ஒரு காணொளியை ஓடவிட,
அதில் அவன் அனுப்பிய அடியாள் உண்மையை ஒப்புக்கொண்டதற்கான காணொளி பதிவு இருந்தது.
“அப்றம் இதோ இது.. நீ வளவன் மனைவிய ஆக்ஸிடென்ட் பண்ண வண்டியை வித்துட்டதா சொன்னியே? அது ஆக்ஸிடென்ட் பண்ண அன்னிக்கு ஈவ்னிங் உன் வீட்டுக்குள்ள நுழையுற வீடியோ ரெகார்ட். உன் வீட்டுக்கு எதிர்புறம் இருக்குற சூப்பர் மார்கெட்ல பொறுத்தியிருக்கும் கேமெராலருந்து எடுத்த வீடியோ. அப்றம் நீ அந்த கேமராவில் உள்ள வீடியோவ டெலிட் பண்ண சொல்லி அந்த கடை ஓனருக்கு மிரட்டல் விடுத்தியே, அதுக்கான வாக்குமூலம்” என்று அனைத்தையும் மித்ரன் காட்சிப்படுத்த,
ஒரே இரவில் இத்தனை ஆதாரங்களை அவன் திரட்டியிருப்பதில் வளவனே அதிர்ந்துபோனான் எனில், தங்கப்பாண்டியையும்தான் சொல்ல வேண்டுமா?
“இஞ்சாருங்க… அந்த புள்ளய அடிச்சது எங்கூட்டு வண்டிதேம். ஆனா சத்தியத்துக்கு அது நாஞ்சொல்லி ஒன்னும் அடிக்கல” என்று தங்கப்பாண்டி கூற,
வளவனை அழுத்தமாய் பார்த்து தலையசைத்த மித்ரன், “இருக்கட்டும். ஆனா அந்த உண்மையை மறைக்க முயற்சி செய்துருக்கீங்க. அந்த வழக்கை விட்டுடலாம்னாலும் மித்ததையெல்லாம் நீ தான் செய்தனு ஆதாரங்கள் எங்கப்பக்கம் இருக்கு” என்று கூறினான்.
தங்கப்பாண்டிக்கு அந்த சூழலை எப்படி சரிகட்டவென்று தெரியவில்லை.
வியர்த்து வழியத் துவங்கவும், அடுத்து என்ன செய்வதென்று புரியாது அவன் விழிக்க, வெளியூரிலிருந்து அவனது தந்தை தனிகை செல்வம் வந்து சேர்ந்தார்.
ஆத்திரத்துடன் உள்ளே நுழைந்தவர், தங்கப்பாண்டியின் கன்னத்தில் ஓங்கி அறைந்து, “எம்மானத்த வாங்கண்ணே வந்தீயாளே? என்ன காரியம் செஞ்சு வச்சுருக்க? இதேம் நீயு தொழிலுல முன்னேனுற லச்சனமா?” எனக் கேட்டு மீண்டும் அடித்தார்.
ஆத்திரமும் கோபமும் ஆற்றாமையும் ஒருசேர அவன் தந்தையை முறைத்துப் பார்க்க,
“என்னம்லே மொறைக்க? அகமோ? ஓங்கூட வளந்தவேம் தாம்லே அவேனும். அவேனப் பாருலே. அவங்கப்பன் மருவாதிய என்னமா தூக்கி நிறுத்துறியாம்?” எனக் கத்தி அடிக்கக் கை ஓங்கினார்.
பின்னிருந்து அவர் கரம் தடுத்துப் பிடிக்கப்பட, அவரும் தங்கப்பாண்டியும் மெல்ல திரும்பிப் பார்த்தனர்.
அவர் கையை தடுத்துப் பிடித்திருந்த வளவன், மெல்ல கரமெடுத்து, “இன்னிக்கு ஒங்க மோனே இங்கன நிக்குறதுக்கு காரணமே நீங்கதேம். அறஞ்சு பேசுறதால ஒங்க புள்ளதேம் அம்புட்டுக்கும் காரணமினு ஆவிப்போவாது” என்று அழுத்தமாய் கூற,
“என்னம்லே சொல்லுத?” என்று உறுமலாய் கேட்டார்.
“அனக்கத்தக்கூட்டாதீய ஐயா. ஒங்க புள்ள இப்புடி வந்து நிக்க நீங்கதேம் காரணம். நீங்க என்ன ஒழுங்குல வாழ்ந்துட்டீயனு ஒங்க புள்ள ஒங்க மருவாதிய கெடுத்துடியாம்னு கத்துறீய?” என்று வளவன் கேட்க,
“லேய்.. என்ன அகமோ?” என்று கர்ஜித்தார்.
“மிண்டாதிருமய்யா. கத்துறதால ஒன்னும் மாறிப்போவாது. புள்ளய ஒழுங்கா வழிபடுத்துறேம்னு சும்மா அடுத்தவியளோட ஒப்பிட்டுச் சொன்னா எங்கிருந்து வளரத்தோனும்? ஒங்க மோனேய சின்ன வயசுலருந்து எங்கூட சேத்து ஒப்பிட்டு நீங்க வஞ்சதுதேம் இன்னிக்கு அவேம் மனசுல வஞ்சகமா நிக்கி” என்று வளவன் கத்த,
தணிகை வாயடைத்துப் போனார்.
“ஒரு நா ஒரு பொழுது எங்கைய்யன போல நீங்க பண்பா இல்லனு அவேம் ஒங்கள எங்கைய்யன் கூட ஒப்பிட்டுச் சொல்லிருந்தா ஒங்களுக்கு ஒப்புமா?” என்று வளவன் கேட்க,
அதிர்ந்து போய் விழித்தார்.
தங்கப்பாண்டிக்கே ஆச்சரியமாய் இருந்தது. தான் இத்தனை நாள் பழி தீர்க்கத் துடித்த ஒருவன்தான் இத்தனைக்குப் பிறகு, தன்னை எதிர்க்கும் தன்னைப் பெற்றவரிடமே தனக்காக வாதாடுகிறான் என்று நினைக்க அவனுக்கு உள்ளுக்குள் என்னவோ போல் இருந்தது. அவனே அறியாமல் அவன் ஆழ்மனக் குற்ற உணர்ச்சி கண்ணீராய் திரண்டது.
“புள்ளய நீரு ஒழுங்கா வழக்காம வுட்டுபுட்டு இப்பத வந்து மாணம் போச்சு மருவாதி போச்சுனு கத்தினா ஆச்சா? அவேம் செஞ்சது தப்புனா அவேன இப்புடிச் செய்ய தூண்டின ஒங்க பேச்சும் தப்பு, ஒங்க வளப்பும் தப்புதேம்” என்று அவன் அழுத்தம் திருத்தமாய் கூற,
தணிகைக்கு உள்ளே சுருக்கென்று குத்தியது.
அவர் தன் மகனைப் பார்க்க, முகம் கருத்து சிவந்து கண்கள் தளும்பி, கூனிக் குறுகி வளவனை வெறித்து நின்று கொண்டிருந்தான், தங்கப்பாண்டி.
“கத்துறதுலயும் கூவுரதுலயும் ஒன்னும் ஆவ இல்ல” என்று கூறியவன் தங்கப்பாண்டியைப் பார்த்தான்.
அவன் அறியாத வண்ணம் தழும்பி நிற்கும் அவன் கண்களே, அவன் தப்பை உணர்ந்து விட்டான் என்பதை உணர்த்தியது.
அவன் முன்னே சென்று நின்ற வளவன், “எங்கய்யன் என்னைய எரக்கத்தோடதேம் வளத்தாவ. இல்லேங்கல. ஆனா இம்புட்டுக்குப் பொறவுங்கூட போனா போனு ஒன்னய விட எனக்கு மனசு இல்லலே. எம்புட்டு ஆடிபுட்ட நீயு? எங்கூட்டு மாட்டக்கூட எங்கூட்டு புள்ளயலாதேம் வளக்கோம். அவேன படுக்கப்போட பாத்துப்புட்ட. சரக்கு போனாகூட மீட்டுப்பேம். அத ஓட்டிட்டுப்போன அண்ணேனுக்கு என்னமும் ஆவியிருந்தா எங்குத்த உணர்ச்சியே என்னய கொன்னுபோட்டுருக்கும். கொஞ்சனா உள்ளார போயி மனுசனா மாறிவா” எனக் கூறி மித்ரனை நோக்க,
மெல்லிய புன்னகையுடன், ‘இனி நான் பார்த்துக்குறேன்' எனும் விதமாய் தலையசைத்தான்.
“என்னால மைணிக்கும் பிரச்சினையாவிப்போச்சு. அவோ பாத்துகிட்டாவனாலும் பிரச்சினை என்னாலதேம். அதுக்கு மன்னிச்சுருங்க அண்ணே. எனக்காவ இம்புட்டுத்தூரம் பாத்து முடிச்சுக்குடுக்குறதுக்கும் நன்றி” என்று வளவன் கை கூப்ப,
“டேய்..” என்று அவன் கரம் இறக்கிய மித்ரன், உரிமையாய் முறைத்தான்.
தற்போது இங்கு வைத்து மேலும் ஏதும் பேச வேண்டாம் என்று எண்ணிய மித்ரன், “கான்ஸ்டபில் இவன செல்லுல வைங்க. நாளைக்கு ஹியரிங் கூட்டிட்டுப் போகனும்” என்று கூற,
அதன்படி காவலாளி தங்கப்பாண்டியை அழைத்தார்.
வளவனை ஆழ்ந்த பார்வை பார்த்தவன், ஒரு நிமிட மௌனத்திற்குப் பின் கையெடுத்துக் கும்பிட்டுவிட்டு தான் செய்த பிழைக்கான தண்டனையை ஏற்றவனாய் சென்றான்.
மகனின் நிலைக்குத் தான் தான் காரணம் என்று புரியப்பெற்ற தணிகையும் தன் மடத்தனத்தை நொந்தவராய் சென்றார்.
வளவன் தன் மொத்தக் குடும்பத்துடன் வீடு வந்து சேர, அவன் தோள் தட்டிய சிவபாத சேகரன், “அம்புட்டயும் ரெண்டேரும் கமுக்கமாவே கொண்டோயி முடிச்சிருக்கீய என்னம்லே?” என்று கேட்டான்.
“அத சொல்லுவ அத்தான். எங்கிட்டக்கூட மூச்சுவிடலயே இவேனுவ” என்று விக்ரமன் கூற,
“அம்புட்டுப்பேரயும் வெறயலாக்க வேணாமுனு நெனச்சிருப்பானுவ. விடும்லே. அதேம் எல்லாம் சுளுவா முடிஞ்சுதுல்ல?” என்று மகா கேட்டான்.
அத்தனை நேரம் காவல் நிலையத்தில் என்ன நடந்ததோ என்ற பயத்தில் இருந்த வீட்டுப் பெண்மணிகள், மகாவின் வாக்கியத்தில் சற்றே நிம்மதி கொண்டனர்.
“ஐய்யா மக்களே.. ஒன்னும் ஒடக்கில்லத்தான?” என்று திரிபுரா கேட்க,
“எல்லாஞ் சுளுவாயிடுச்சுத்தா. வெசனப்பட ஒன்னுமில்ல” என்று சிவா கூறினான்.
சில நிமிடங்கள் பெரும் அமைதி தான் அக்கூடத்தில்…
கீழே வளவனின் அறையில் எதுவோ விழும் சப்தம் கேட்க,
பதறி நிமிர்ந்தவன், “மித்ரா” என்று கத்தியபடி உள்ளே சென்றான்.
கேட்ட சப்தத்தை விட, வளவன் கத்தியதில் தான் அனைவருமே பதறிப் போயினர்.
உள்ளே கட்டிலில் அமர்ந்து கொண்டு ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்டவள், உள்ளே வந்தவனைப் பார்த்து கலக்கமாய் ஏறிட, கட்டில் அருகே உள்ள மேஜையிலிருந்து சொம்பு என்று கீழே விழுந்திருந்தது.
அவளிடம் பதறி வந்தவன், “என்னம்லே? காலுல விழுந்துடுச்சா? என்னாச்சுது?” என்று கேட்க,
மற்றவர்களும் என்னவோ ஏதோவென்று அறைக்குள் நுழைந்தனர்.
அவள் காலைப் பார்த்தவன், “வலிக்குதா மித்ரா? எழுந்திக்கப் பாத்தியாக்கும்? ஏன்டி முழிக்குறவ? சொல்லு” என்று அவன் பதட்டமாய் கேட்க,
“சொல்லு சொல்லுன்னா அவ எங்கம்லே சொல்லுவா?” என்று திரிபுரா கேட்டாள்.
சட்டென சங்கமித்ரா அவளை நோக்க,
சிவபாதன் தன் மனைவியை முறைத்துப் பார்த்தான்.
“சாமி சத்தியமா நாந்தப்பாச் சொல்லல.. சொல்லு சொல்லுங்கியாம். இவேம் தான என்னனு பாக்கனும்?” என்று அவள் கூற,
“அவேம் பாத்துகிடுவியாம். எல்லாம் வெளியப் போவ” என்று விக்ரமன் கூறினான்.
முகவாயைத் தோளில் இடித்த திரிபுரா, “நல்லது சொன்னாகூட என்னய என்னமாதுதாம்லே சொல்லுவீய நீங்க” எற்றுவிட்டு வெளியேற,
பெருமூச்சு விட்ட வடிவேல், “தங்கபுள்ளக்கு என்னனு பாரும்லே” எனக்கூறி மற்றவர்களுடன் வெளியே சென்றான்.
அனைவரும் வெளியேற தழும்பி நின்ற அவள் கண்களைப் பார்த்தவன், “என்னட்டிப் பண்ணுது?” என்று பதட்டமாய் கேட்டான்.
மிகுந்த கலக்கத்துடன் அவள் சுண்டுவிரலைத் தூக்கிக் காட்ட,
அவள் தேவை புரிந்தது.
சட்டென அவளைத் தாங்கிக் கொண்டு அவன் கூட்டிச் சென்று கூட்டிவர,
கண்கள் கலங்கி கைகள் நடுநடுங்க, ‘தூங்கி எழுந்தேன். ரெஸ்ட்ரூம் போனும்போல இருந்தது. கு..குச்சி டோர் பக்கத்துல இருந்தது. சட்டுனு எழுந்துக்க முடியலை. மெல்ல உக்காந்து எழ ட்ரை பண்ணேன். பேலென்ஸ் பண்ண கஷ்டமாருந்தது. யாரையும் கூப்பிடவும் முடியலையே' என்று தன் தொண்டையை வருடியவள், ‘ஃபோனும் சார்ஞ் இல்லாம ஆஃப் ஆயிடுச்சு. ரொம்ப.. அவசரம். டேபில பிடிச்சு எழப்பாத்தேன் சொம்பு விழுந்துடுச்சு' கூற,
அவள் கண்களிலிருந்து கண்ணீர் கன்னம் தாண்டியது.
அவளை அணைத்துக் கொண்டவன், “சாரிடி.. ஓம் ஃபோன சார்ஜ் போட்டு வெக்க நெனவில்லாம போச்சுதுடி மித்ரா. மறந்துட்டேம்.. சாரிமா” என்று கூற,
அவளுக்கு என்னவோ போலிருந்தது.
குரல் இருந்திருந்தால் கூட யாரையும் அழைத்திருக்கலாமே? என்ற எண்ணம் அவளை என்னவோ செய்தது.
நாட்கள் செல்லச் செல்ல, குரல் பரிபோனது அவளை மெல்ல மெல்ல தாழ்வாய் உணர வைப்பதை, எங்கே வெளிக்காட்டிக் கொண்டால், வளவன் வருந்துவானோ என்று தனக்குள்ளேயே புதைத்துப் புதைத்து இன்னும் பிரச்சினைகளைத் தனக்குள் விதைத்துக் கொண்டிருந்தாள் பெண்…
இதில் அவ்வப்போது திரிபுரா பேசும் பேச்சுக்கள், அவளை இன்னும் ரணப்படுத்த, அவற்றையும் வளவனிடம் கூறாமல் தனக்குள்ளேயே வருந்திக் கொண்டிருந்தாள். மனதில் தேவையில்லாமல் தோன்றும் அற்ப்பமான எண்ணங்களை என்ன முயன்றும் தடுக்க இயலாமல், தானே அறியாத வகையில் வளர்த்துக் கொண்டு வருபவளுக்கு, அச்சூழலில் தன்னிடம் மன்னிப்பு வேண்டி நிற்பவனைப் பார்த்து, இன்னும் தன்மீதே கழிவிரக்கம் தோன்றியது. இது அவளையும், அவர்கள் வாழ்வையும் பிரச்சினைக்கு உள்ளாக்கும் என்பதைத்தான் அவள் அறிந்தேயிருக்கவில்லை…
Comments
Post a Comment