திருப்பம்-92
திருப்பம்-92
நாட்கள் சில ஓடி, மாதங்களுக்கு வழிவகை செய்திருந்தது. மூன்று மாதங்கள் ஓடியிருந்த நிலையில் அன்று மருத்துவமனையில் மருத்துவர் முன் அமர்ந்திருந்தனர் சங்கமித்ரா மற்றும் வளவன்.
அவளது அறிக்கைகளைப் பார்வையிட்ட மருத்துவர், “சங்கமித்ரா.. இப்ப எப்படி ஃபீல் பண்றீங்க? நடக்கும்போது பேலென்ஸ் இல்லாத போலவோ, வலிக்குற போலவோ இருக்கா?” என்று அவர் கேட்க,
இல்லையென்று தலையசைத்தவள், ‘வலி இல்லை. ஆனா வேகமா நடக்கவரலை' என்று அவள் சைகை செய்தாள்.
“ம்ம்... உங்களுக்கு ஏற்பட்டிருந்தது மைனர் பிராக்சர்தான். மூன்றுலருந்து நான்கு மாதங்கள்லயே அது கம்ப்ளீட்டா குணமாயிடும். இருந்தும் டிஸ்கம்ஃபோர்ட்ஸ் இருக்கத்தான் செய்யும். இப்ப கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் மேல ஆயிடுச்சு. அதனால பிராக்சர் கம்ப்ளீட்டாவே குணமாயிடுச்சு. இருந்தாலும் சில டிஸ்கம்ஃபோர்ட்ஸ் இருக்கத்தான் செய்யும். சட்டுனு எழுந்துக்கும்போதோ இல்ல வேகமா நடக்க முயற்சி செய்யும் போதோ இப்படி ஃபீல் இருக்கும். இது நார்மல் தான். இதுக்கும் சேர்த்து ஒரு ரெண்டு மாசம் மெடிகேஷன்ஸ் ஃபாலோ பண்ணுங்க. எல்லாம் சரியாயிடும்” என்று மருத்துவர் கூற,
'படி ஏறலாமா?’ என்று சைகை செய்து கேட்டாள்.
வளவன் அவளைப் பார்த்து சிரிக்க,
“ஓ தாராளமா ஏறலாம். ஆனா கொஞ்சம் காஷனோட ஏறி இறங்கிக்கோங்க. ஏறும்போதுவிட இறங்கும்போது கவனம் அதிகம் வேணும். அதுக்குனு ஓரேடியா நிறையா படியெதும் ஏறிட வேண்டாம்” என்று கூறினார்.
சிறு தலையசைப்புடன் அடுத்தக் கேள்வியைக் கேட்கத் தயங்கியவள், வளவனை நோக்க, அவன் ‘கேளு’ எனும் விதமாய் கண் காட்டினான்.
மருத்துவரைப் பார்த்தவளுக்கு இதை எப்படி சைகை செய்து கேட்பெதென்று புரியாதுபோக,
“அவளுக்கு பீரியெட்ஸ் தள்ளித் தள்ளி வருது டாக்டர்” என்று கூறினான்.
மருத்துவரும் அவர்கள் அந்தரங்கம் சார்ந்த கேள்விகளைக் கேட்க, “இல்ல டாக்டர். அவளோக்கு அடிப்பட்டதுலருந்தே இல்ல” என்றான்.
சங்கடப்படுக்கொண்டு அவள் அமர்ந்திருக்க,
“மருந்து காம்பினேஷன்ஸ் நிறையா எடுக்குறது, ஃபிஸிகல் ஆக்டிவிடி இல்லாம இருந்தது, ஸ்டிரஸ் இப்படி நிறையா இருக்கு சார். அதனாலகூட இப்படித் தள்ளிப் போகலாம். அல்ரெடி நிறைய மருந்து எடுக்குறதால இதுக்கு எதும் இப்போதிக்கு எடுக்க வேண்டாம். எதாவது கை மருந்து செய்து பாருங்க. இந்த மெடிசன்ஸ் முடிஞ்சதும் ரெகுலர் செய்ய மருந்து எடுக்கலாம். அன்ட் நீங்க ரெண்டு பேரும் விருப்பப்பட்டா, அன்ட் அவங்களுக்கு கம்ஃபோர்டா இருந்தா உங்க பிசிகல் ரிலேஷன்ஷிப்ப கன்டினியூ பண்ணலாம். அவங்களோட மனநிலைக்கும் அது கொஞ்சம் பெட்டரா ஃபீல் ஆகும்” என்று கூறினார்.
தன் தொண்டையை வருடியவள், ‘இதுக்கு எப்ப ட்ரீட்மெண்ட் எடுக்க ஆரம்பிக்கலாம்?’ என்று கேட்க,
“ரெண்டு மாசம் கழிச்சு இந்த மெடிகேஷன்ஸ் எல்லாம் முடிஞ்சதும், நரம்புகளோட கன்டீஷனப் பார்த்துட்டு ஆரம்பிக்கலாம்மா” என்றார்.
பெண்ணவள் முகம் முற்றுமாய் வாடிவிட, அவள் கரம் பற்றி அழுத்தம் கொடுத்து விடுவித்த வளவன், அவளது மருத்துவ அறிக்கைகளை வாங்கிக் கொண்டு நன்றி கூறி வெளியேறினான்.
மகிழுந்தை கிளப்பி மெல்லிய பாடல்களை ஒலிக்கவிட்டவன், “மேல ரூமுக்கு மாற அப்புடி என்னடி வேகம் ஒனக்கு?” என்று சிரித்தபடி கேட்க,
அவனைத் திரும்பிப் பார்த்தாள்.
“சரி சரி கேக்கல.. வுடு” என்றவன், “ரொம்ப வெக்கமா போச்சோ?” என்க,
அவன் புஜத்திலேயே நான்கு அடி போட்டவள் முறைத்தபடி திரும்பிக் கொண்டாள்.
அதில் அட்டகாசமாய் சிரித்தவன், “டாக்டருதானடி?” என்க,
மீண்டும் முறைத்துப் பார்த்தாள்.
“சரி கேக்கல வுடு. அவிநாஷ் அண்ணே வாரேன்னு சொல்லிருக்காவ வீட்டுக்கு” என்று கூற,
தெரியும் என்பதைப் போல் தலையசைத்தாள்.
பின் அமைதியாய் நேரத்தைக் கடத்தி இருவரும் வீட்டை அடைய,
அவிநாஷ், சங்கீதா, அவர்களது குழந்தை சங்கவியுடன் கூடத்தில் அமர்ந்திருக்க, சங்கவியை வாங்கித் தன் மடியில் வைத்துக் கொஞ்சியபடி தனலட்சுமியும், வடிவேலும் அமர்ந்திருந்தனர்.
“வாங்க வாங்க” என்றபடி தன்னவளுடன் உள்ளே நுழைந்த வளவன்,
“எப்பம்ணே வந்தீய? நேரமாச்சுதோ?” என்று கேட்க,
“இல்லடா இப்ப கொஞ்ச நேரம்தான்” என்றான்.
“நல்லாருக்கீயளா மைணி?” என்று சங்கீதாவிடம் அவன் கேட்க,
“நல்லாயிருக்கேன்” என்று புன்னகையாய் கூறினாள்.
தன் தங்கையிடமிருந்து சங்கவியை வாங்கிக் கொஞ்சியவன், “நீ எப்போத்தா வந்த?” என்று கேட்க,
“அண்ணே வரும்போதுதேம் வந்தோமாக்கும். ஒனக்குத்தேம் காத்துருந்தோம்” என்றாள்.
மாடியிலிருந்து தனது மகள் சுடருடன் விக்ரமனும், அறையிலிருந்து சுயம்புலிங்கமும் வர, கார்த்திகா மற்றும் தெய்வா அனைவருக்குமான பானத்துடன் வந்தனர்.
“ஆஸ்பத்ரில என்ன சொன்னாவ கொழுந்தரே?” என்று கார்த்திகா கேட்க,
“முறிவெல்லாம் கொணமாயிடுச்சாம். ஆனா வெரசா நடக்க கொள்ள இன்னும் நாளாவுமுனு சொன்னாவ. மருந்து தந்திருக்காவ மைணி. இன்னும் ரெண்டு மாசம் எடுக்கச் சொல்லிருக்காவ” என்று கூறினார்.
“கொரலுக்கு எதும் சொன்னாவளாய்யா?” என்று தெய்வா கேட்க,
“ரெண்டு மாசம் கழிச்சு பாப்போம்னு சொல்லிருக்காவம்மா” என்றான்.
தன்னைக் குறித்துப் பேச்சுதான் என்றாலும் கூட அவற்றில் கவனம் இல்லாத நிலையிலேயே இருந்தாள் பெண்.
அவள் புடவையைப் பிடித்திழுந்த சங்கவி தன் சொப்பு வாய் திறந்து சிரிக்க, குழந்தையைக் கண்டு மெல்ல புன்னகைத்தவள் வாங்கித் தன் மடியில் வைத்துக் கொண்டு கொஞ்சினாள்.
ஒரு நிமிட அமைதிக்குப் பின், “அம்மோய்.. போயி எனக்கு ஒரு மாதுள ஜூஸு போட்டு கொண்டாயேம்” என்க,
“எட்டி திடுதிப்புனு மாதுள ஜூஸு கேட்டா எங்க போவேம்? வீட்டு பின்னுக்க என்ன மரமா வச்சுருக்கியேம்?” என்று தெய்வா கேட்டார்.
“வச்சுருக்கனும் ம்மா. இனிமே என்னமாது கண்டது கழுதையே கேட்டுகிட்டேதேம் இருப்பியேன். போட்டுக்குடுக்க வேண்டியது ஓங்கடம” என்று தனம் கூற,
வடிவேல், ‘ராங்கி ராங்கி' என்று அவளைப் பார்த்து புன்னகைத்து விட்டு, குழப்பமாய் பார்க்கும் தெய்வாவைப் பார்த்தான்.
கண்கள் பளீரிட “தனம்?!” என்றபடி கார்த்திகா அழைக்க,
“பாத்தீயளா? இதேம் பாசங்குறது. ஏம்மைணிதேம் சரியா புடிச்சாப்புடி” என்று தனம் கூறினாள்.
“அனக்கத்தக்கூட்டாதடி” என்று சிரித்த வடிவேல் மற்றவர்களைப் பார்த்து, சிறு வெட்கத்துடன், “புள்ள உண்டாயிருக்கா” என்று கூற,
“லேய் மாப்ள” என்று வளவன் எழுந்து நண்பனை அணைத்துக் கொண்டான்.
“லேய்.. வாழ்த்துக்கள்டா” என்று விக்ரமனும்,
“வாழ்த்துக்கள்டா” “வாழ்த்துக்கள்மா” என்று அவிநாஷ் மற்றும் சங்கீதாவும் வாழ்த்தினர்.
“ஆத்தே மவராசி” என்று மகளை அணைத்து திருஷ்டி எடுத்த தெய்வா, “ஏம் வைத்துல பால வாத்த தாயி.. நல்லாருப்ப. ஐயன்ட ஆசிர்வாதம் வாங்கிக்க” என்று கூற,
“ஏட்டி முழுவாம இருக்கப் புள்ளய போய் விழச் சொல்லுத?” என்ற லிங்கம் சென்று விபூதி எடுத்து வந்து அவளுக்கும் வடிவேலுக்கும் பூசிவிட்டு வாழ்த்தினார்.
சங்கமித்ரா பெரும் சந்தோஷத்துடன் அவளைப் பார்த்திருக்க,
அவள் பார்வை உணர்ந்து திரும்பிய தனம், அவளை நெருங்கினாள்.
வாழ்த்துக்கூற வாய் திறந்தவள், தன்னிலை உணர்ந்து எச்சிலைக் கூட்டி விழுங்கிக் கொண்டு, அவளை அணைத்துக் கொள்ள,
“வாயிட்ட சொல்லனுமாடி மைணி? நீ நெறஞ்ச மனசா வாழ்த்திபுட்டனு ஓங்கண்ணு சொல்லும்” என்று அவள் காதோரமாய் கூறினாள்.
கண்கள் கலங்கத் துடிக்க, அழுந்த மூடி அதைக் கட்டுப்படுத்தியவள், அவள் கன்னம் வழித்து திருஷ்டி எடுத்து புன்னகைக்க,
தானும் புன்னகைத்துக் கொண்டாள்.
மாறி மாறி அனைவரும் தங்கள் சந்தோஷத்தை பகிர்ந்துகொள்ள, திரிபுரா மற்றும் தீபிகாவிற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவர்களும் தங்கள் வாழ்த்தைக் கூறி, நாளைப் பார்க்க வருவதாய் கூறிவிட்டு வைத்தனர்.
மதியம் அனைவருக்குமே உணவு அங்கேயே தடபுடலாய் சமைக்கப்பட,
சங்கமித்ராவுடன் திண்ணைக்கு வந்த அவிநாஷ், “வலியெல்லாம் பரவாயில்லயாடா பாப்பா?” என்று கேட்க,
சிறு புன்னகையுடன் தலையசைத்தாள்.
அவள் முகத்தை கூர்ந்து கவனித்தவன், “எதும் சரியில்லயாடா பாப்பா?” என்று கேட்க,
அவனை சட்டென நிமிர்ந்து பார்த்தாள்.
“என்னாச்சுடாமா?” என்று அவிநாஷ் கேட்க,
'அப்படிலாம் இல்ல அத்தான்' என்று சைகை செய்தாள்.
அவளைக் கூர்ந்து பார்த்த அவிநாஷ், “நிஜமா தானாடா? எல்லாம் ஓகே தானே?” என்று கேட்க,
'ஓகேதான்' என்று தலையசைத்தாள்.
மெல்ல புன்னகைத்துக் கொண்ட அவிநாஷ், “உங்க ஆனிவர்ஸரி வரப்போகுதுல்ல? எதும் ப்ளான் பண்ணிருக்கியா உன் அவருக்கு?’ என்று கேலியாய் அவிநாஷ் கேட்க,
'யோசிக்கனும் அத்தான். பிறந்தநாளுக்கு பெருசா எதும் செய்ய முடியலை. இதுக்கு எதாவது கிஃப்ட் பண்ணனும்’ என்று சைகை செய்தாள்.
“சரிடாமா. எதாவது ஹெல்ப் வேணும்னா சொல்லு” என்று அவன் கூற,
“ம்ம்.. அதானப்பாத்தேன். எம்புருஷன் ஆளைக் காணும்னாலே உன்கூடத்தானே இருப்பார்” என்றபடி அங்கு வந்த சங்கீதா, “நலமெல்லாம் விசாரிச்சாச்சா?” என்று கேட்டாள்.
முகவாயைத் தோளில் இடித்துக் கொண்ட சங்கமித்ரா தன் அத்தான் புஜத்தைக் கட்டிக் கொள்ள,
அவளை முறைத்த சங்கீதா, “ஹலோ என்னங்க? அவதான் பிடிச்சுக்குறானா நீங்களும் சிரிச்சுட்டே நிக்குறீங்க? இதுலாம் எனக்கு பிடிக்கல ஆமா” என்று கூறினாள்.
சங்கமித்ரா அவிநாஷை நோக்க,
“அவ சும்மா சொல்வாடா பாப்பா” என்றான்.
“சும்மாவா? ஏங்க” என்று சங்கீதா கோபம் போல் அழைக்க,
“கீதுமா.. பாப்பா பாவம். விளையாடாத” என்றான்.
“ஹ்ம்.. உங்களுக்கு உங்க மூத்தப் பொண்ணுதான் எப்பவும் ஃபர்ஸ்ட் ப்ரியாரிடி” என்று கூற,
சங்கமித்ரா தன் இல்லாத காலரைத் தூங்கி விட்டுக் கொண்டாள்.
இவற்றை வாசலிலிருந்து வேடிக்கைப் பார்த்த வளவன் மெல்ல புன்னகைத்துக் கொண்டு அவ்விடம் வர,
“வாங்க வாங்க கொழுந்தரே. உங்க பொண்டாட்டிகிட்ட சொல்லி வைங்க. எப்பப்பாரு இவளுக்கேதான் சப்போர்ட் பண்றாரு இவரு” என்று கேலி செய்தாள், சங்கீதா.
“வுடுங்க மைணி. அதேம் நாயிருக்கேம்ல? நா ஒங்களுக்கு சப்போர்ட் பண்றேம்” என்று அவன் கூற,
“அட இது நல்லாருக்கே” என்றாள்.
தன்னவனை மிதப்பாய் பார்த்தவள் இதழ் சுழித்துக் கொண்டு தன் அத்தான் கரத்தைக் கட்டிக் கொண்டு, ‘போங்க போங்க' என்பதைப் போல் தலையாட்டினாள்.
அங்கு வந்த கார்த்திகா, “எல்லாம் பசியாற வாங்க” என்று அழைக்க,
“இதோ வரோம் மைணி” என்று வளவன் கூறினான்.
“போய் சாப்பிடுடா பாப்பா. கீதா.. பாப்பாவக் கூட்டிட்டுப்போ. நாங்க வரோம்” என்று அவிநாஷ் கூற,
'நீங்க அத்தான்?’ என்று மித்ரா சைகையில் கேட்டாள்.
“இந்தோ நானும் வரேன்டா. ஒரு கால் பேசனும். பேசிட்டு வரேன். நீங்க போங்க” என்று அவிநாஷ் கூற,
சரியென்று தலையசைத்தவள் தன் அக்காவுடன் சென்றாள்.
“சொல்லுங்க அண்ணே. எங்கிட்ட என்ன ரகசியம் பேசனுமுனு அவியள அனுப்புனீய?” என்று வளவன் கேட்க,
தன் செயலைப் புரிந்து கொண்டவனைப் பார்த்து புன்னகைத்தபடி அவன் தோள் தட்டிய அவிநாஷ், “பாப்பா ஓகேவாடா?” என்று கேட்டான்.
“டாக்டருட்ட நல்லா விசாரிச்சுட்டேம் அண்ணே. எல்லாஞ்சரியாருக்குனு சொல்லிட்டாவ” என்று கூறினான்.
“உடல் ரீதியா கேட்கலைடா” என்ற அவிநாஷ், “என்னமோ அவ ரொம்ப அமைதியாருக்குற போல இருக்கு. பேச்சுங்குறதைத் தாண்டி அவகிட்ட என்னமோ சரியில்லாத போல இருக்கு” என்று அவிநாஷ் கூற,
வளவனிடம் பெரும் அமைதி.
“என்னடா?” என்று அவிநாஷ் கேட்க,
“ரெண்டு மாசமாவே இப்புடித்தேம் இருக்கா அண்ணே. நானும் எப்புடி எப்புடியோ கேட்டு பாத்துட்டேம். என்னமோ போட்டு உருட்டுதா உள்ளுக்குள்ளார. என்னனுதேம் தெரியில. டாக்டருட்டயும் இதுபத்திப் பேசினேம். அவங்க கன்டீஷன நினைச்சு திங்க் பண்றதால இப்புடியிருக்கும். என்னமாது செஞ்சு டைவர்ட் பண்ணுவ, சந்தோசமா வச்சுகிடுவனுலாம் சொல்றாவ. எல்லாஞ் செய்யுறேம். தனியாருந்தா எதும் ரோசிப்பானு பொழுதுக்கும் சுடர இவட்டத்தேம் விடுறது. அது என்னமாது பேசி இவோள கவனிக்கச் சொல்லிட்டே இருப்பா. அதுல மித்தது யோசிக்காம புள்ளய பாப்பானு அதையுஞ் செஞ்சு பாத்துட்டேம். ஒன்னும் ஆவல. எனக்கும் பயமாத்தேம் இருக்குது அண்ணே” கலக்கமாய் கூறினான்.
அவன் தோள் தட்டிக் கொடுத்து, “சரிடா.. பாப்போம். நீ எதும் யோசிக்காத. எல்லாம் சரியாப்போகும்” என்று கூறிய அவிநாஷும், வளவனும் அறிந்திருக்கவில்லை, நடக்கவிருப்பவையெல்லாம்…
Comments
Post a Comment