திருப்பம்-93

 திருப்பம்-93



அழகிய மாலை வேளை, அவ்வீட்டில் மிகுந்த சந்தோஷம் நிறைந்திருக்க, வேந்தன், முகிழினி, யாழ் மித்ரன், அவன் மடியில், பிறந்து இரண்டு மாதமான ஒரு பெண் குழந்தையும், அக்குழந்தையின் இரட்டை சகோதரன் ரசிகப்ரியாவின் மடியிலும் உறங்கிக் கொண்டிருந்தனர்.


ஆரோஹனும் செந்தூரனின் மகனான அமரனும் சுற்றிச் சுற்றி விளையாடிக் கொண்டிருக்க, செந்தூரன் தனது மனைவி மீனாட்சி, மடியில் அவர்களது ஒன்றரை மாத ஆண் குழந்தை கார்த்திகேயனுடன் அமர்ந்திருந்தான். அவர்களுடன் வளவன், சங்கமித்ரா, வடிவேல் மற்றும் மூன்று மாத கற்பவதி தனலட்சுமியும் இருந்தனர்.


“இவரு இருக்காரே.. இவருக்கு பையன் பிறந்துடனும் மேடமுக்கு பொண்ணு பிறந்துடனும்னு ஒரு நாளைக்கு மூனு முறையாது சொல்லிடுவாங்க. ஃபோட்டோ எடுத்து நெக்ஸ்ட் ஜெனரேஷன்னு போட்டு ஃப்ரேம் பண்ணி வீட்ல மாட்டனும் மீனா மாட்டனும் மீனானு தினம் தினம் அதே பேச்சுதான். கஷ்டப்பட்டு பிள்ளை பெத்துக்கிட்டவ நானு. இவளுக்கு என்னாச்சோனுலாம் இல்லை. பையன் பிறந்துட்டானானு தான் கேட்குறாரு” என் மீனாட்சி கோபமாய் கூற,


“ஆமா என்னமோ அதுக்கு என்னை மன்னிச்சு விட்டுட்டப்போலதான்டி பேசுற. டெலிவரி வார்ட்ல படுத்துகிடக்குறோம்னு கூட பார்க்காம நீ என் தோள்ல அடி அடினு அடிச்சதை அங்கருக்க எல்லாம் பார்த்து சிரிச்சு என் மானமே போச்சு” என்று செந்தூரன் கூறினான்.


அதில் அனைவரும் கலகலவென்று சிரிக்க,


“மேம்.. ஆனாலும் உங்க ஃப்ரெண்ட் பண்ணது தப்புதானே? நீங்களே சொல்லுங்க” என்று மீனா ப்ரியாவை உள்ளே இழுக்க,


செந்தூரன் ப்ரியாவை பாவம் போல் நோக்கினான்.


இதைக் கண்டு வாய்விட்டு சிரித்த மித்ரன், “அப்பாவி மாதிரியே வச்சுக்காதடா முகத்தை” என்க,


“சார் யூ டூ?” என்றான்.


“நீங்க ஏம் அத்தான சாருங்கீய? அதேபோல அவியளும் அக்காவ மேடமுங்காவ” என்று தனம் கேட்க,


“ஏன்னா எனக்கு அவங்க மேடமாதான் அறிமுகம் ஆனாங்க, அவருக்கு அண்ணா சாராதான் அறிமுகம் ஆனாங்க. அதாவது நான் இவங்களோட ஸ்டூடென்ட். ஸ்டூடென்ட்லருந்து இவங்ககூட க்ளோஸாகி, அப்டியே இவர சைட் அடிச்சு, இவருக்கு ப்ரபோஸ் பண்ணி, இல்ல மாட்டேன் முடியாதுனு ஓடினவர துறத்தி புடிச்சு லவ் பண்ண வச்சு.. ஹப்பா.. ஒருவழியா கல்யாணமும் பண்ணி ரெண்டு பிள்ளையும் பெத்துட்டேன்” என்று ஆயாசமாய் கூறினாள்.


“அய்யோ ரொம்பத்தான் அழுத்துக்குற” என்று செந்தூரன் கூற,


“இல்லையா பின்ன? உங்கள கன்வின்ஸ் பண்ணி காதலிக்க நான் பட்டப்பாடு எனக்குத்தான் தெரியும்” என்று கூறினாள்.


“ஏன்? சார் உங்க லவ்வ அக்செப்ட் பண்ணிக்கலையா?” என்று வளவன் கேட்க,


“அவன் அப்ப லவ் ஃபெய்லியர்ல இருந்தான்” என்று மித்ரன் கூறினான்.


“சார் ஏன் சார்?” என்ற செந்தூரன் சங்கோஜமாய் தன் தலைகோத, அதில் பக்கென்று சிரித்த மீனாட்சி அவன் தாடை பற்றி ஆட்டி, “விடுங்க விடுங்க. ஊரறிந்த கதைதான?” என்றாள்.


“ஏன் சார்? எப்படி ஆச்சு? வேணாம்னு சொல்லிட்டாங்களா?” என்று வடிவேல் கேட்க,


“என் நண்பன் ப்ரபோஸ் பண்ணி ஒரு பொண்ணு வேணாம்னு சொல்லிடுவாளா?” என்று ப்ரியா கேட்டாள்.


“சரிதான் மேம். அதுக்கு முதல்ல உங்க நண்பன் ப்ரபோஸ் பண்ணனும்” என்ற மீனாட்சி, “மேடமோட ட்வின் சிஸ்டரத்தான் சார் லவ் பண்ணாங்க. பப்பி லவ். ஆனா மேடம் டென்த் படிக்கும்போதே ஃபேமிலி ஆக்ஸிடென்ட்ல எல்லாரும் இறந்துட்டாங்க” என்று கூற,


“அச்சுச்சோ” என்றனர்.


“ஹ்ம்.. அதான் நான் வந்து வாழ்க்கை குடுத்துட்டேனே” என்று மீனாட்சி கூற,


“நியாயமா இதுக்குத்தான் அவங்க அச்சச்சோ சொல்லனும்” என்ற செந்தூரன் இன்னும் நான்கு அடிகளை அவளிடம் வாங்கிக் கொண்டான்.


“பிள்ளயளுக்கு பேருவெக்கக்கூட பிரெண்டு வாரனும் ஒன்னுபோல வப்பம்னு மைணி சொன்னதா அண்ணேஞ் சொல்லயில ஆச்சரியமாதேம் இருந்துச்சு. இப்பத்தேம் புரியுது சின்ன புள்ளையிலருந்தே இம்புட்டு க்ளோஸுனு” என்று வடிவேல் கூற,


ப்ரியாவும் தூரனும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்துக் கொண்டனர்.


சங்கமித்ரா அனைத்தையும் அமைதியான புன்னகையுடன் வேடிக்கைப் பார்க்க, அவள் காலடியில் பந்து ஒன்று வந்து விழுந்தது.


அங்கு ஓடி வந்த ஆரோஹன், “சாரி” என்று பாலை எடுக்க, 


அவன் தலையைக் கோதியவள் தன் நெஞ்சில் கரம் வைத்து கண்கள் மூடித் திறந்து புன்னகையாய் தலையசைத்தாள்.


அதைக் கண்டு புன்னகைத்த ஆரோஹன் தானும் அப்படி செய்ய, அங்கே வந்த அமரனும் அதேபோல் செய்து புன்னகைத்தான்.


மற்றவர்கள் அனைவரும் அதை கண்டு புன்னகைக்க அவர்கள் புறம் திரும்பிய சங்கமித்ரா, இரண்டு பேரையும் கைகாட்டி பெயர் என்ன என்று சைகை செய்தாள்.


“சித்தி பெயர் கேக்குறாங்க பாருங்க. ரெண்டு பேரும் பெயர் சொல்லுங்க” என்று ப்ரியா கூற,


“என் பெயர் ஆரோஹன்”


“என் பெயர் அமரன்” என்று இரண்டு குழந்தைகளும் கூறினர்.


புன்னகைத்தவள் குழந்தைகளைக் கொஞ்ச, அவர்களும் பதிலுக்குக் கொஞ்சிவிட்டுச் சென்றனர்.


குழந்தைகளும் அவளுடன் சுற்றிச் சுற்றி வந்து அவளையும் தனத்தையும் விளையாட்டு தோழிகளாய் சேர்த்துக் கொள்வதாய் கூறி அழைத்துச் செல்ல, பெண்கள் இருவரும் புன்னகையுடன் சென்றனர்.


“ஷீ சீம்ஸ் வெரி சைலென்ட்” என்று மித்ரன் கூற,


வளவன் முகம் முற்றுமாய் வாடி போனது.


வடிவேல் அவன் முட்டியில் கரம் வைத்து அழுத்தம் கொடுக்க,


“இப்பப் போன வாரந்தேம் டாக்டர் பாத்துட்டு வந்தோம் அண்ணே. ரெண்டு மாசமாவே இப்படித்தேம் இருக்கா. வீட்டுலயிருக்கவியலும் இதக் கேக்க ஆரமிச்சுட்டாவ. எங்கம்மாவே கேட்டுட்டாவ என்ன ரொம்ப அமைதியாருக்கானு” என்று பெருமூச்சு விட்டான்.


“உங்க அம்மாவேனா? உங்களுக்கு லவ் மேரேஜா? உங்க அம்மா ஒத்துக்கலையா” என்று மீனாட்சி கேட்க,


வடிவேல் சிரித்தபடி, “லவ்வுதேம்.. உங்க வூட்டு லவ்வு எங்க வூட்டு லவ்வு இல்ல தாயி.. அப்புடியொரு லவ்வு. இவிய லெட்டர் போட்டதென்ன? அவிய லெட்டர் போட்டதென்ன? கோவிலுல பின்ன சுத்தி சுத்தி வந்ததென்ன? ஆருக்கும் தெரியாம சோறாக்கிக் கொடுத்தது என்ன? கிப்டு வாங்கித் தந்தது என்ன? அய்யோ பெரிய லவ்வுதேம்” என்று கூறினான்.


“லெட்டர் காதலா? அடடா? பயங்கர காதல் போலயே?” என்று ப்ரியாவும் கூற,


லேசாய் புன்னகைத்த வளவன், “காதலுதேம் மைணி. பொண்ணு பாக்க போன பொறவாட்டியிருந்து” என்றான்.


“அரேஞ்ச் மேரேஜ் தானா? லவ் மேரேஜ் இல்லையா?” என்று செந்தூரன் கேட்க,


“அரேஞ்ச் கம் லவ். அதான மாப்ள?” என்று வடிவேல் கேலி செய்தான்.


அதில் இன்னும் புன்னகைத்தவன், “சும்மாருலே” என்க,


“ஓஹோ..” என்று அனைவரும் கோரஸ் போட்டனர்.


சிலநிமிட பேச்சுகள் ஓய, அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டு, நண்பர்கள் இருவரும் தத்தமது மனைவிமார்களுடன் புறப்பட்டனர்.


“வீட்டுக்கு வாரியாலே?” என்று வளவன் கேட்க,


“இல்லம்லே. பொறவு வாரேம். நீயு தங்கப்புள்ளய பாத்து கூட்டிக்கிட்டுப்போ” என்று கூறி தன்னவளுடன் வடிவேல் அவன் வீட்டிற்குச் சென்றான்.


தங்கள் வீட்டை வந்தடைந்த வளவன், “மித்ரா.. தனியா படியேறாத. நா வாரேம்” என்க,


சிறு தலையசைப்புடன் சென்றாள்.


“ஏ சங்கு வா வா. டீயாத்தவா?” என்று கார்த்திகா கேட்க,


“டீயாட்டவா?” என்று ஒளிசுடரும் கேட்டாள்.


அதில் சங்கமித்ரா புன்னகைக்க,


“இஞ்சாருடி.. என்ன நாம்பேசுறதயெல்லாம் பேசுறியாக்கும்?” என்று மகளை அதட்டிய கார்த்திகா, “அவியள நா ஏங்கனு கூப்பிடுதேம்ல சங்கு? இவளும் ஏங்கனு கூப்பிடுதா. அவியளும் சிரிக்காவ” என்று கூறினாள்.


அதில் சிரித்த சங்கமித்ராவைப் பார்த்தபடி உள் நுழைந்த வளவன், “என்ன இங்கன சிரிப்பு?” என்க,


“சிச்சா” என்று ஓடி வந்து அவனைக் கட்டிக் கொண்டாள் குழந்தை.


குழந்தையை அவன் தூக்கிக் கொள்ள, “சிச்சி” என்று கைநீட்டினான்.


“ஓஞ்சித்தியால தூக்க முடியாதுடி ராசாத்தி” என்று அவன் கூற,


அருகே அழைத்து அவள் கழுத்தைக் கட்டிக் கொண்டு முத்தம் வைத்தாள்.


தானும் குழந்தைக்கு முத்தங்கள் கொடுத்தவள், ‘மேல போனும்' என்று கைகாட்ட,


“பாத்ரூம் போனுமா?” என்று கேட்டான்.


இடவலமாய் தலையசைத்து அவள் மேலே கைகாட்ட,


“செத்த இங்கனயே இரு மித்ரா. நைட்டு படுக்கயில போவம்” என்றான்.


அறைக்குள் சென்று அவள் அடைந்தே கிடந்து தேவையில்லாமல் யோசிப்பதைத் தடுக்கவே அவ்வாறு அவன் கூற,


சிறு முக சுனக்கத்துடன் சென்று அமர்ந்து கொண்டாள்.


கார்த்திகாவிடம் இரவு உணவைப் பற்றி விசாரித்தவள் காய்கள் நறுக்க உதவ,


அங்கே வந்த சுயம்புலிங்கம், “ஆத்தா.. போயி வந்தாச்சா?” என்று பரிவாய் அவள் தலைகோதியபடி கேட்டார்.


மெல்லிய புன்னகையுடன் தலையசைத்தவள், ‘அங்கயே சாப்டுட்டு வந்துட்டோம்' என்க,


“சரித்தா தாயி. எங்க ஓம்புருஷன்?” என்று கேட்டார்.


'பாப்பாவோட தோட்டத்துல இருக்காங்க' என்று அவள் சைகை காட்டா, சரியெனச் சென்றார்.


“சங்கு.. நாளதான கல்யாண நாளு?” என்று கார்த்திகா கேட்க,


'ஆமாக்கா' என்று தலையசைத்தாள்.


அத்தனை நேரம் இல்லாத ஒரு பொலிவு அவளிடம்.


“என்ன கிப்டு தரப்போற?” என்று கார்த்திகா கேட்க,


'சட்டை, காப்பு' என்று அபிநயம் பிடித்துக் காட்டினாள்.


“போடு.. வெள்ளியா புள்ள?” என்று கார்த்தி கேட்க,


ஆமென்று புன்னகையாய் தலையசைத்தவள், ‘எங்க பெயர் போட்டு' என்று சைகை செய்து புரியவைக்க முயற்சித்தாள்.


“ஒங்க பேரு விட்டுருக்குமாக்கும் அதுல?” என்று கார்த்தி உற்சாகமாய் கேட்க,


அவள் வாய் பொத்தியவள், ‘ஷ்’ என்று வாயில் விரல் வைத்தாள்.


“சரிசரி கத்தலை. கொழுந்தருக்குக் கேட்டிருக்காது” என்று கார்த்தி கூற,


சிறு தலையசைப்புடன் புன்னகைத்தாள்.


சில நிமிடங்களில் விக்ரம் வந்துவிட, மேலே செல்லவிருந்தவனைக் கைதட்டி அழைத்து நிறுத்தினாள்.


“என்னப்பா?” என்றபடி விக்ரமன் அங்கே வர, 


'நானும் மேல போனும் அத்தான். அவர் வெளிய இருக்காரு. நானே போயிப்பேன். ஆனா தனியா ஏறாது சொல்றாங்க' என்று அவள் சைகை செய்ய,


“வாத்தா நாங்கூட்டிப் போறேம்” என்று அழைத்தான்.


'நா மேல போறேன் அக்கா. அவங்கட்ட சொல்லிடுங்க. குட் நைட்' என்று அவள் சைகை செய்ய,


“சரி சங்கு. நாஞ்சொல்லிடுதேம். நீ போயி ஒறங்கு” என்று கார்த்திகா கூறினாள்.


விக்ரமன் உதவியுடன் அவள் மேலே சென்றுவிட,


நன்றியாய் ஒரு பார்வை பார்த்து புன்னகைத்தவள் அறைக்குள் சென்றாள்.


இரண்டு நாட்கள் முன்புதான் மீண்டும் இவ்வறைக்கு மாறியிருந்தனர்.


பெரும்பாலும் ஒரு நாளுக்கு ஒருமுறை மட்டுமே படிகள் ஏற, இறங்க அவன் அனுமதிப்பதால் அறைவிட்டு வெளிய வருவதையும், அப்படியே வெளிய வந்தாள், மீண்டும் உள் செல்வதையும் தாமதப்படுத்தும்படியாகத்தான் வைத்துக் கொண்டாள் பெண்.


சென்று மேஜையருகே உள்ள நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்தவள், அதனை மெல்ல வருடிவிட்டு காகிதம் மற்றும் பேனாவை எடுத்தாள்.


பல மாதங்களுக்குப் பிறகான கடிதம்… வாய் மொழிகள் இருந்தபோது கடிதம் வழி பேசுவது அற்புதமாய் தெரிந்தது தான்.. ஆனால் இன்று இதுதான் தன்னுடைய மொழி பரிமாற்றமே என்று உணர்கையில் அவளுக்குக் கொஞ்சம் வருத்தமாக இருந்தது.


அதை புறம் தள்ளியவள், தன் வாழ்த்தினை அதில் பதிக்கத் துவங்கினாள்.



Comments

Popular posts from this blog

திருப்பம் -01

திருப்பம்-03

திருப்பம் -02